சனி, 24 ஆகஸ்ட், 2019

முருகனின் அருள்பெற்றவர்கள்!

அகத்தியர்: முருகன் அருள்பெற்ற அடியார்களின் முதன்மையானவராகப் போற்றப்படுபவர் அகத்தியர். செந்தமிழ் நாடான இப்பகுதியை அகத்திய முனிவரே முருகப்பெருமானிடம் பெற்று பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில் முருகனிடம் உபதேசம் பெற்று அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதியதாகக் கூறுவர்.

நக்கீரர்: கடைச்சங்கப்புலவராய் மதுரைநகரில் இருந்து தமிழை வளர்த்த புலவர் நக்கீரர். முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கிக்குகையில் கிடந்தபோது, முருகனே காப்பாற்றி அருள்செய்தார். முருகனின் ஆறுபடைவீடுகளையும் சிறப்பித்துப் போற்றும் திருமுருகாற்றுப்படையை எழுதினார்.

அவ்வையார்: முருகனை வழிபட்ட பெண் அடியவர்களில் அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகப்பெருமான் இவரிடம், பாட்டி, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு ஞானத்தை அருளினார் என்பர். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் தம் சிந்தைக்கு விருந்தளிப்பவையாகும்.

குமர குருபரர்: திருச்செந்தூர் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், ஐந்து வயதுவரை பேசும் திறனற்றவராய் இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்றார். கந்தர் கலிவெண்பா என்னும் பாடலைப் பாடி அனைவரையும் வியப்பில்ஆழ்த்தினார். முருகனின் மீது இவர் பாடிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் புகழ்பெற்றதாகும். காசியில் மடம் ஒன்றை நிறுவி தெய்வத் தொண்டில் ஈடுபட்டார்.

தேவராய சுவாமிகள்:  பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்குரிய பாராயண நூலாகத் திகழும் கந்தசஷ்டிக் கவசத்தைப் பாடிய அருளாளர் தேவராயசுவாமிகள் ஆவார். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நூல் இதுவாகும். சென்னிமலை முருகனின் மீது பாடப்பட்ட இந்நுõல், கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டது.

ராமலிங்க வள்ளலார்:  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று கடவுளை கருணை வடிவில் கண்டு போற்றிய அருளாளர் வள்ளலார். சிறுவனாக இருக்கும்போது கண்ணாடியின் முன் தியானம் செய்யும்போது மயில்வாகனத்தில் முருகப்பெருமான் இவருக்கு காட்சியளித்தார் என்பர். கந்த கோட்டத்தில் வளர்ந்தோங்கும் கந்தவேளிடம் இவர் கேட்கும் வரங்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.

பாம்பன் சுவாமிகள்:  யாழ்ப்பாணத்தில் சைவமரபில் தோன்றியவர் பாம்பன் சுவாமிகள். குமரகுருதாச சுவாமிகள் என்னும் பெயர் கொண்டிருந்த இவர், ராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பனில் வாழ்ந்ததால், பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். முருகனின் மீது 6666 பாடல்கள் பாடியுள்ளார். பல அற்புதங்களை முருகனருளால் செய்த இவர், அண்மைக்காலத்தில் வாழ்ந்தவராவார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயண நூலாகத்திகழ்கிறது. தமிழ் உயிர்,மெய் எழுத்துக்கள் முப்பதையும் முதல் எழுத்தாககக் கொண்டு அமைந்த நூல் இது. பஞ்சாமிர்தவண்ணம் என்னும் பாடலால் முருகனுக்குஅபிஷேகம் செய்தவர் இவர்.

கருத்துகள் இல்லை: