திங்கள், 12 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 28

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 28





இராமானுஜர் திருவரங்கம் அரங்கநாதப் பெருமாளின் திருக்கோவிலிலுள்ள பிரகாரங்களைத் தரிசிக்கும் நிகழ்வு பற்றி இன்றைய பதிவில் அறியலாம்.

வாழி எதிராஜன்!..
வாழி எம்பெருமானார்!..

சொல்லுவோம் அவன் நாமங்களே..

🌺🍁 திருவரங்கம் வருகை

இராமானுஜர் திருவரங்கம் நோக்கி காவிரியாற்றின் அருகில் வந்து கொண்டிருக்கிறார். அவர் வரும் செய்தி திருவரங்கத்தில் இருக்கும் பெரிய நம்பிகள் மற்றும் பல அடியார்களுக்கு தெரியவருகிறது.

அவர்கள் அனைவரும் பெரிய பெருமாளின் மூலஸ்தானத்திற்குள் போனார்கள். பெரிய பெருமாளிடம் அனைவரும் பிரார்த்தனை செய்தார்கள். "ஆளவந்தாரின் எண்ணம் ஈடேறப்போகிறது. இராமானுஜர் திருவரங்கத்திற்கு வருகிறார். ஊருக்காக, ஸ்ரீ வைஷ்ணவத்திற்காக ஜகத் ஆச்சாரியனைப் பெறப் போகிறோம்" என்று ஆசையோடு பெரிய பெருமாளிடம் விண்ணப்பம் வைத்தார்கள்.

உடனே, பெரிய பெருமாள் தன் திருக்கண் மலர்ந்து பார்த்தார். சேனை முதலியாருக்கு (விஷ்வக்சேனர்) அருள்பாலித்து "நீர் போய் இராமானுஜரை எதிர்கொண்டு அழைத்து வாரும்" என்று பெருமாள் சொல்ல, விஷ்வக்சேனரும் புறப்பட்டுச் சென்றார்.

இராமானுஜரும் முதல் முதலில் திருவரங்கம் வருகிறார் அல்லவா? ஆகாயத்தைப் பார்த்து, அங்கங்கு வளர்ந்திருக்கும் கோபுரங்கள், மாட மாளிகைகள் அனைத்தையும் பார்த்து பிரதட்சிணமாக வலம் வந்தார். அடுத்து உள்ளே இருக்கும் சித்திரைத் திருவீதி (ஏழாவது பிரகாரம்) அது தான் கடைசி பிரகாரம். திருவரங்கத்தில் மொத்தம் ஏழு பிரகாரங்கள். அந்த ஏழாவது பிரகாரத்திலுள்ள மாட மாளிகைகள், கோபுரங்களை சுவாமி இராமானுஜர் சேவித்துக் கொண்டார்.

திருமாலை கண்ட பெருமாளான தொண்டரடிப் பொடியாழ்வாரை தரிசித்து பிரதட்சணம் செய்து, ஒவ்வொரு சன்னிதியிலும் பிரதட்சிணம் செய்து வருகிறார் இராமானுஜர்.

இரண்டு பலிபீடம் திருவரங்கத்தில் சேவிக்கலாம். ஒன்று ரங்கவிலாஸ் மண்டபத்தில் இருக்கும் பலிபீடம். மற்றொன்று ஆரியபடால் வாசலுக்குள்ளே ஆஞ்சநேயர் சன்னதிக்கு கீழ் இருக்கும் பலிபீடம். அவற்றை எல்லாம் சேவித்துக் கொண்டார்.

மேட்டழகிய சிங்கப்பெருமாளை சேவித்துக் கொண்டு, ஸ்ரீரங்க நாச்சியாரைச் சேவித்துக் கொண்டு, ஸ்ரீ சந்திர புஷ்கரணியிலே தீர்த்த சுவீகரணம் பண்ணி, 'இங்கன்றோ பெரிய பெருமாளும், பிராட்டியும் பல நாட்களில் நீர் விளையாட்டு விளையாடியிருப்பார்கள்' என்று நினைத்து அதை சேவித்துக் கொண்டு, நம்மாழ்வார் முதலான ஆழ்வார்களை சேவித்துக் கொண்டு (சந்திர புஷ்கரணி அருகில் தான் ஆழ்வார்களின் மொத்தப் பிரதிஷ்டையும் உண்டு), அடுத்தாற்போலே கோதண்டராமர் சன்னிதி, அதற்கடுத்தாற்போலே ஆண்டாள், பரமபதநாதன், ஆழ்வார்கள் பதின்மர் அனைவரையும் சேவித்தார்.

அதன் பின் பிரணவாகாரமான திவ்ய விமானத்தையும் சேவித்தார்.

பிரணவாகார விமானம்தான் ஸ்ரீரங்கத்திற்கே உண்டான தனிச்சிறப்பு. பராசரபட்டர் இந்த பிரணவாகர விமானத்தைப் பற்றி சொல்கிறார், 'இந்த விமானத்திலிருந்து வரக்கூடிய ஒளி நம் கண்களில் இருக்கும் அழுக்கு அத்தனையும் போக்கிவிடும்'. இதிலுள்ளே தான் பெரிய பெருமாள் சயனித்திருக்கிறார். இந்த மண்டபத்திற்கே காயத்ரி மண்டபம் என்று பெயர். இந்த விமானத்திற்கு 'பிரணவாகார விமானம்' என்று பெயர்.

அதுவே ஸ்ரீ வைகுண்டம். இது ஸ்ரீரங்கம். வைகுண்டத்தில் ஓடுவது விரஜா நதி. இங்கே ஓடுவது காவிரி. வைகுண்டத்தில் இருப்பது பரவாசுதேவன். இங்கே ஸ்ரீரங்கத்தில் இருப்பது பெரிய பெருமாள். வைகுண்டத்தில் இருப்பது ஆயிரங்கால் மண்டபம். ஸ்ரீரங்கத்தில் இருப்பதும் ஆயிரங்கால் மண்டபம். இது எல்லாமே பூலோகத்திலும் இருப்பதால் ஸ்ரீரங்கம் ஸ்ரீ வைகுண்டமாக இருக்கிறது.

பிரணவத்தின் அர்த்தத்தை எல்லாருக்கும் தெரியும்படியாக பெரிய பெருமாள் உள்ளுக்குள்ளே எழுந்தருளியிருக்கிறார். பிரணவாகார விமானம் மேலே இருக்கிறது. ஓம் என்கிற அட்ஷர வடிவத்திலே இருக்கிற விமானம், அந்த விமானத்தை சேவித்துக் கொண்டார்  இராமானுஜர். சேனை முதலியார், உற்சவர் அழகியமணவாளனையும் சேவித்துக் கொண்டார்.

திருக்கைத்தல சேவையுடன் பெரிய பெருமாள்  இராமானுஜரை எதிர்கொள்வதும், இராமானுஜர் பெரிய பெருமாளைக் கண்டு தரிசிக்கும் நிகழ்வையும் நாளை அறியலாம்.

கே.355:− நம் உடையவருக்குப் பெரிய பெருமாளின் சேவையைப் பண்ணி வைத்தது யார்?

விடை:− நம்பெருமாள் என்னும் அழகிய மணவாளன்.

கே.356:− உடையவர் பெரிய பெருமாளை எவ்வாறு சேவித்தார்?

விடை:− நம்பெருமாள் பரிவுடன் அழைத்துச் சென்று சேவை பண்ணி வைக்க, நம்பெருமாளுடன் சென்று, கருவறையின் முன்புள்ள "ஆமோத ஸ்தம்பம்" என்னும் திருமணத் தூண்களின் அருகில் நின்று,

"தெண்ணீர்ப் பொன்னி தனது அலைக்கரங்களால் அடிவருட,
வன்பெரு வானகமுய்ய, அமரர் உய்ய, மண்ணுய்ய, மண்ணுலகில் மனிசருய்ய, துன்பமிகு துயரகல, அயர்வொன்றிலாத சுகம் வளர, அகமகிழும் தொண்டர் வாழ, அன்பொடு தென்திசையை நோக்கி அரவரசாம் ஆதிசேஷன் மீது ஆயுதமின்றித் திருப்பள்ளி கொண்டு, அறிதுயிலில் இருக்கும்" பெரிய பெருமாளாம், அணி அரங்கனாம், திருவரங்கனின்,
"திருக்கமல பாதம், அரைச் சிவந்த ஆடை, அயனைப் படைத்ததோர் எழில் உந்தி, திருவயிற்று உதரபந்தம், திருவார மார்பு, திருக்கண்டம், செய்யவாய், நீண்ட அப்பெரியவாய கண்கள், திருநீல மேனி" என்று திருவரங்கனைத் திருவடி முதல் திருமுடிவரை கண்குளிரத் திருப்பாணாழ்வாரைப் போலவே, "அமலனாதிபிரான்" படி சேவித்துப் பருகி,
"கடல் விளங்கு கருமேனியம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டுகந்து" கண்களில் நீர் பெருக்கினார்.
"என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என ஆழ்வார் சொன்னது எத்தனை உண்மை என உணர்ந்து அரங்கனை அணுஅணுவாகப் பருகினார்.

அணியார் பொழில்சூழ் அரங்கநகரப்பா
துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு
மணியே! மணிமா ணிக்கமே!மதுசூதா!
பணியா யெனக்குய் யும்வகை பரஞ்சோதீ!

...போன்ற ஆழ்வார்களின் தீந்தமிழ்ப் பாசுரங்களையும், ஶ்ரீஆளவந்தாரின் திவ்ய ஸ்லோகங்களையும் சொல்லி நெகிழ்ந்துருகினார்.
பெரிய பெருமாளின் தீர்த்தம், திருப்பரிவட்டம், திருமாலை, சந்தனம், ஶ்ரீசடகோபம் எனப் பிரஸாதங்கள் பெற்று மகிழ்ந்தார்.

கே.357:− அதன்பின் பெரிய நம்பிகளிடம் உடையவர் இராமானுஜர் விண்ணப்பித்ததென்ன? அதற்குப் பெரிய நம்பிகள் கூறியதென்ன?

விடை:− அதன்பின் பெரிய நம்பிகளிடம் உடையவர் இராமானுஜர், "தேவரீரின் திருவடிகளே பொருளில்லா அடியேனையும் ஒரு பொருளாக்கி, இந்த ஐஸ்வர்யங்களைத் தந்தன" என வினயத்துடன் விண்ணப்பித்தார்.

அதற்குப் பெரிய நம்பிகள், "கலியும் கெடும் கண்டு கொண்மின்" என்று நம்மாழ்வாரால் "பவிஷ்யதாசார்ய"ராக அடையாளம் காட்டப் பெற்றவர் நீரே என்பது உறுதியாயிற்று.

"வித்தாகும் காய் பிஞ்சிலே தெரியும்" என்பர். அதுபோலவே உலகை உய்விக்க வந்தவர் நீரே என அறிந்து கொண்டோம்" என்று கூறி மகிழ்ந்தார்.

கே.358:− திருவரங்கனின் நியமனப்படியும், வைணவ முதலிகள் அனைவரின் விருப்பப்படியும், ஶ்ரீஆளவந்தாருக்குப் பின்னர் உடையவர் இராமானுஜர் வைணவ பீடத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டபோது, அவருக்கு வயது என்ன?

விடை:− 33 வயது. (1050ம் ஆண்டு).

கே.359:− உடையவர் இராமானுஜர் திருவரங்கத் திருக்கோயில் நிர்வாகத்தை எங்கிருந்து மேற்கொண்டார்?

விடை:− திருவரங்கனின் நியமனப்படி, திருவிக்கிரமன் திருவீதியில் (உள்துறை வீதி என்னும் உத்திர வீதியில்) வடக்குப் பகுதியில், வடக்குக் கோபுரத்திற்கு எதிரே உள்ள சாலையை ஒட்டிக் கிழக்குப் பக்கம் உள்ள முதல் மனையான குலசேகராழ்வாரால் கட்டப்பெற்ற சேரன் மடத்திலிருந்து, திருவரங்கத் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொண்டார்.

கே.360:− உடையவர் திருவரங்கம் திருக்கோயிலை எவ்வாறு நிர்வாகம் செய்தார்?

விடை:− திருமாலை, சாத்துப்படி, அமுதுபடி, திருவிளக்கு, திருமதிள் திருப்பணி, திருநந்தவனம் போன்ற திருக்கோயில் பணிகளை எல்லாம் ஆராய்ந்து, உரிய திருத்தங்கள் செய்தார். உரிய பணிகளுக்கு, உரியவர்களை நியமித்தார்.
நிர்வாகிகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். திட்டமிட்டுச் செயலாற்றினார்.

ஆகமங்களில் உத்ஸவங்கள் பற்றிய குறிப்புகள் இல்லாவிடினும், அவற்றை ஏற்படுத்தித் திருவரங்கனின் நித்ய, பட்ச, மாத, பிரம்ம, வஸந்த, பவித்ரோத்ஸவங்களைக் குறைவின்றி நடத்தி மகிழ்ந்தார்.

அன்று முதல் இன்று வரை, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக, உடையவர் நியமித்தபடியே, திருவரங்கத்தில் அனைத்து வழிபாட்டு முறைகளும் நடைபெற்று வருகின்றன என்பதே நம் உடையவரின் ஏற்றத்தைப் பறைசாற்றும்.

கே.361:− கோவிந்தனைத் திருத்திப் பணிகொள்ளுமாறு எதிராசர் காஞ்சியிலிருந்து தமக்கு அனுப்பிய திருமுகம் (ஓலை) பெற்ற பெரிய திருமலை நம்பி என்ன செய்தார்?

விடை:− தாமே அக்காரியத்தைச் செய்ய எண்ணியிருந்த அவர், கோவிந்தனைத் திருத்திப் பணிகொள்ளல் அவ்வளவு எளிதான காரியமல்ல என அறிவார்.
ஆயினும், இராமானுஜர் திருவுள்ளம் பற்றிய செயல்கள் சித்திக்காது போகாது என்ற நம்பிக்கையோடு, திருமலையிலிருந்து காளஹஸ்தி வந்தார்.

கே.362:− அப்போது கோவிந்தன் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்?

விடை:− காளஹஸ்தியில் சிவபூஜைகள் செய்து அகமகிழ்ந்து கொண்டிருந்த கோவிந்தன், நீறு துலங்கும் நெற்றியோடு, கழுத்தில் ருத்ராட்ச மாலை தரித்து, சிவப்பழமாக, அதிகாலைப் பொழுதில் சில சிவனடியார்களோடு சிவ பூஜைக்கு வேண்டிய மலர்களைக் கொய்யும் பொருட்டு, பூக்குடலையுடன் ஸ்வர்ணமுகி நதிக்கரைக்கு வந்து கொண்டிருந்தார்.

கே.363:− அவர் வரும் வழியினை அறிந்த தாய்மாமன் பெரிய திருமலை நம்பிகள் செய்ததென்ன?

விடை:− அவர் வரும் வழியினை அறிந்த பெரிய திருமலை நம்பிகள், ஶ்ரீஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தின ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு ஓலைச் சுவடியை கோவிந்தனின் கண்களில் படுமாறு நழுவ விட்டு, சற்றே ஒதுங்கிச் சென்றுவிட்டார்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🌹🙏

கருத்துகள் இல்லை: