ஞாயிறு, 3 நவம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 85 ॐ

                  {முடிவுரை}

சிதம்பரம் கோயில் பற்றிய பல விஷயங்களையும் பல்வேறு விதமான தகவல்களையும் பரிமாறிக் கொண்டோம் சுமார் மூன்று மாதங்களாய். இங்கே பூஜை முறைகள் வைதீக முறைப்படியே நடைபெறுகின்றன என்பதையும் பார்த்தோம். ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறும் கோயில்களில் வழிபடுபவர் திருமணம் ஆகாதவராய் இருந்தாலும் வழிபாடுகளைத் தொடர்ந்து செய்ய முடியும். ஆனால் சிதம்பரம் கோயிலில் வழிபாடுகள் செய்யவும் நடராஜரின் கருவறைக்குள் நுழையவும் திருமணம் ஆனால் மட்டுமே தகுதி பெறுகின்றனர். மனைவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. மேலும் சில ஹோமங்கள் யக்ஞங்கள் முறைப்படி செய்து அதன் மூலம் குருவின் அனுமதி பெற்றே கருவறையில் வழிபாடுகள் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஹோமங்களும் யக்ஞங்களும் மனைவி அருகில் இல்லாமல் செய்ய முடியாது. ஆகவே அநேகமாய் தீட்சிதர்கள் அனைவருமே சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ளுகின்றனர். அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டாலும் கோத்திரம் பார்ப்பது பொருத்தங்கள் பார்ப்பது என்ற சம்பிரதாயங்களும் உள்ளன. திருமணத்தில் மணமகனுக்குச் சாதாரணமாய்க் கொடுக்கப் படும் வரதட்சணையோ இல்லை நகைகளோ அல்லது விலை உயர்ந்த பாத்திர பண்டங்களோ பெரியதாய்க் கருதிக் கொடுப்பதில்லை. அவர்கள் சக்திக்கு உட்பட்டுக் கொடுக்கவும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம். இதை ஒரு பெரிய விஷயமாய்க் கருதுவதில்லை. பெண் எடுப்பதும் பெண் கொடுப்பதுமே முக்கியமாய்க் கருதப்படுவதோடு வைதீக சம்பிரதாயங்களுமே முக்கியமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றது. திருமணம் முடிந்ததுமே பெண் மணமகன் வீட்டிற்கு வாழ வந்து விடுவதில்லை. தற்காலங்களில் பள்ளிப் படிப்பு முடிந்ததுமே பெரும்பாலான திருமணங்கள் நடந்தாலும் பின்னர் மேலே படிக்க விரும்பினாலும் அங்கேயே உள்ளூர் கல்லூரிகளிலேயோ பல்கலைக் கழகத்திலேயோ படிக்க அனுமதிக்கப் படுகின்றனர். பல தீட்சிதர்களின் பையன்களும் பெண்களும் பல்கலைக் கழகப்பட்டப் படிப்பு பட்ட மேற்படிப்பு முனைவர் பட்டங்கள் என்று சர்வ சாதாரணமாய்ப் பெற்று இருக்கின்றதையும் கண்கூடாய்க் காணமுடியும். சிதம்பரம் கோயில் சிவனுக்கு என்று இருக்கும் கோயில்கள் அனைத்திலும் மிகவும் முக்கியமானதாய்ச் சொல்லப்படுவதன் காரணமே அது இதயப் பகுதியில் இருப்பதால் தான். ஈசனே அங்கே ஆடும் நடனம் ப்ராணாயாம நடனம் என்று தஹரவித்யா கூறுகின்றது. நடராஜரின் ஊன்றிய பாதம் ப்ராணப்ரதிஷ்டையைக் குறிப்பதாயும் சொல்லுகின்றனர். ப்ரணவ சொரூபத்தில் ஆடும் நடராஜரின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு குறிப்பும் இந்த உலகத்தின் ஒவ்வொரு இயக்கத்தைக் குறிப்பதாய்ச் சொல்லுகின்றனர். ஏற்கெனவே ஐந்தொழில்களையும் புரிகின்றார் என பார்த்தோம். டமருகம் பொருந்திய கரம் சிருஷ்டியையும், அபயம் அமைந்த கரம் ஸ்திதியையும், அக்னி ஏந்திய கை ஸ்ம்ஹாரத்தையும், முயலகன் முதுகில் ஊன்றிய வலத்திருப்பாதம் திரேதானம் என்னும் மறைத்தலையும் குஞ்சித பாதம் என்னும் இடத்திருப்பாதம் அனுக்ரஹத்ட்தையும் செய்கின்றது என்பதையும் பார்த்தோம். அவரின் டமருகத்தின் ஓசையில் இருந்து ப்ராணிகளின் அழைப்பும் அபயஹஸ்தம் காத்தலையும் அக்னி ஹஸ்தம் ஸத்யப்ரமாணத்தையும் தொங்கவிட்டிருக்கும் மற்றொரு கரம் சுட்டிக் காட்டுதலையும் குஞ்சிதபாதம் அபேதானந்த முக்தியையும் சுட்டிக் காட்டுகின்றது. அபயஹஸ்தம் ஆசார்ய பாவம் ஸ்வரூபத்தையும், டமருக் ஒலி மஹா வாக்ய உபதேசத்தையும் அக்னி ஹஸ்தம் அஞ்ஞான நிவர்த்தியையும் குஞ்சிதபாதம் நித்யானந்தப்ராப்தியையும் கொடுப்பதாய் ஆனந்த தாண்ட உண்மை கூறுகின்றது. ஈசனின் சர்வ அவய ஸ்வரூபம் ஓங்காரத்தைச் சுட்டிக் காட்டுகின்றது என்பதையும் கண்டோம். அக்னி ஹஸ்தம் "ந" காரத்தையும் பாதாம் புஜங்கள் "ம" காரத்தையும் லம்ப ஹஸ்தம்(தொங்கவிடப்பட்டிருக்கும் கரம்) "சி" காரத்தையும், டமருக ஹஸ்தம் "வா" காரத்தையும் அபய ஹஸ்தம் "ய" காரத்தையும் தோற்றுவிக்கின்றது. இவ்வாறு ஈசன் பல்வேறு தொழில்களையும் புரிந்து கொண்டு இடை விடாது சந்திரனின் சம்பந்தம் பெற்ற இடாநாடியின் உதவியைக் கொண்டு இடது நாசியில் மூச்சுக் காற்றை உள்ளிழுத்துக் கொண்டும் சூர்ய சம்பந்தம் பெற்ற வலது நாசியால் மூச்சை வெளிவிட்டுக் கொண்டும் அந்த மூச்சை உள்ளிழுத்து கும்பகம் செய்து ப்ராணப்ரதிஷ்டா காலத்தில் வலக்கால் கட்டை விரலால் ப்ராணபிரதிஷ்டை செய்து கொண்டும் தன் ஆனந்தத் தாண்டவத்தை ஆடி வருகின்றார். இந்த உலகம் இயங்குகின்றது. நாமும் இயங்குகின்றோம். அனைத்தும் அவனே. எல்லா உயிர்களிலும் நிறைந்து நின்று மூச்சுக் காற்றாக நின்றும் வெளி வந்தும் உள்ளிழுத்தும் அனைவரையும் இயக்கும் அந்த ஆட வல்லான் திருவடிப் பாதங்களுக்குச் சரணம் செய்து இதை முடிக்கின்றேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி!      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

இந்தத் தொடரை எழுத எனக்குப் பெருமளவு துணையாக இருந்து அவ்வப்போது வேண்டிய தகவல்களையும், சிதம்பரம் பற்றிய நினைவுகளையும், கோயில் பற்றிய தகவல்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட என் நண்பர்களுக்கு தான் இது சொந்தம். மற்றும் எனக்கு வேண்டிய தகவல்களை நான் தேடி எடுத்துக் கொள்ள சிதம்பரம் கோயிலின் தீட்சிதர்களுக்கும் அவர்களுக்கும் என் பணிவார்ந்த வணக்கங்களைச் சமர்ப்பித்துக் கொண்டு இந்த எழுத்தை அவர்களுக்கே காணிக்கை ஆக்குகின்றேன். இவற்றைத் தவிர முக்கியமாய் பேராசிரியரும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான திரு நாகசாமியின் சில குறிப்புகளைக் கொடுத்து உதவினார்கள். திரு திவா தி.வாசுதேவன் அவர்கள் சிதம்பரம் பற்றிய இரு புத்தகங்கள் கொடுத்து உதவினார். சரித்திரத் தகவல்களும் அவ்வப்போது நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து பார்க்கப்பட்டது. நெய்வேலி நடராஜ ஸ்வாமி தீட்சிதர், தொலைபேசி உரையாடல் Sambanatesan Umanathan  மூலமும் ராஜா தீட்சிதர் அவர்கள் எழுதிய திருவாதிரை பற்றிய குறிப்புகள் அனைத்தின் உதவியாலுமே இதை எழுத முடிந்தது. அனைவருக்கும் நன்றி சொல்லி வணங்குகின்றேன்.
  
            {சிதம்பர ரகசியம் முடிவுற்றது}

பொறுமையாய்ப் படித்த அனைவருக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.

பெரியவா கடாக்க்ஷம் பரிபூர்ணம்
             ॐ பெரியவா சரணம் ॐ
பதஞ்சலி முனிவர் {போனஸ்}

இவர் பிரம்ம தேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப்பவருமான அத்திரிமகரிஷிக்கும் மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிஷேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கவுட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி முனிவர் ஏவிய பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.இத்தனைகாலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்குநேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார் திரையின் பின் அமர்ந்து ஆதிஷேட உருவில் கடும் விஷ மூச்சுக்காற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம் இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்கத்திலேயே கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்குண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை முனிவரின் குரல் பதிலாக வந்தது. குரு நாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றான் ஒரு சீடன். உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம் மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்க(வசப்படுத்த) செய்யப்படும் சடங்கே தவம்என்றார் முனிவர். இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா குருதேவா என்று கேட்டான் ஆவலோடு சீடன் ஒருவன்.பஞ்சபூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி,வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையாளம் சித்தர்களுக்கு இது சாத்தியமே என்றுபதஞ்சலி கூறினார்.பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்கு முக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரமான குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தை ஒரு கணம் திரைநீக்கிப் பார்த்து விடவேண்டுமென்ற ஆவலால் திரையைப் பிடித்திழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிஷேடனின் கடும் விஷக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும்எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த முனிவர் அவர்மீது மூச்சுக்காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்திறந்த கவுடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பாலகி விட்டார்களே என்று கதறிக் கண்ணீர் விட்டார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவரசப்பட்டு விட்டார்கள். கவுடபாதரே, நீர் மட்டும் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக் கொள் என்று ஆறுதல் கூறினார் பதஞ்சலி. உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் உன்னுடைய இப்போதைய மனநிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார்.படிப்படியாக கவுடபாதருக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதர் பதஞ்சலி ஆதிஷேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தார். பதஞ்சலி முனிவர்சிதம்பரத்தில் சமாதியடைந்ததாக கூறப்படுகிறது.பதஞ்சலி முனிவர் தியானச்செய்யுள்ஆயசித்தி அனைத்தும் பெற் சத்திய சித்தரேசப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரேபக்தியுடன் வணங்கும் எமக்குநல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரேபதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல் பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும். படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும் பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்
1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!
2. ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!
3. ஒளிமயமானவரே போற்றி!
4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!
5. கருணாமூர்தியே போற்றி!
6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!
7. பூலோகச் சூரியனே போற்றி!
8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!
9. பேரும் புகழும் உடையவரே போற்றி!
10. இன்மொழி பேசுபவரே போற்றி!
11. இகபரசுகம் தருபவரே போற்றி!
12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!
13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!
14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!
15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!
16. யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றி சொல்லி அர்ச்சனை செய்தவுடன் ஓம் க்லம் பதஞ்சலி சித்த பெருமானே போற்றி என்று 108 முறை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும்.நிவேதனம்: இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் போன்றவை நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்.பதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்:
1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்
2. குடும்ப ஒற்றுமை உண்டாகும்
3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்
4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்
5. நன் மக்கட்பேறு உண்டாகும்
6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்
7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும்
8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்
9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள்.

இவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த தினமாகும். பதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 5 யுகம் 7 நாள் ஆகும்.
4. திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : தை மகம் (தேய்பிறை பிரதமை திதி)
கிழமை : ஞாயிறு
தந்தை : பார்க்கவ முனிவர்
தாய் : கனகாங்கி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
பாடல்கள் : 216
சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்,
பிற பெயர்கள் : மழிசைப்பிரான், மஹீஸாபுரீஸ்வரர், பக்திஸாரர், பார்க்கவர்

சக்கரத்தாழ்வாரின் அம்சமான திருமழிசை ஆழ்வார் பார்க்கவ மகரிஷியின் மகனாக திருமழிசை என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர். பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை எடுத்துச்சென்று வளர்த்தார். ஆனால் ஆழ்வார் பிறந்தது முதல் பால் கூட குடிக்கவில்லை. இதைக்கேள்விப்பட்ட வேளாளர் ஒருவர் தன் மனைவியுடன் பசும்பாலை காய்ச்சி எடுத்து வந்து இவருக்கு கொடுத்து அருந்தக் கூறினார். இப்படியே தினமும் வேளாளர் கொடுத்த பாலை குடித்து வந்த ஆழ்வார். ஒரு நாள் சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அவர்களிடமே அருந்தக் கூறினார். மனைவியுடன் அந்த பாலை அருந்திய வேளாளர் தன் முதுமை நீங்கி இளமை பெற்றார். பாலின் மகிமையால் இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கனிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். களிக்கண்ணனும் திருமழிசை சீடர் ஆனார். பல சமயங்களில் உள்ள குறைபாடுகளை அறிந்த ஆழ்வார் கடைசியில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார். ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை வைணவ சமயத்தை ஏற்கச் செய்ததுடன் திருமந்திர உபதேசம் செய்தார். ஒரு முறை காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார் அங்குள்ள திருவெங்குடி திருத்தல பெருமாளுக்கு பல ஆண்டுகள் தொண்டாற்றி வந்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டியின் விருப்பப்படி அவளுக்கு இளமை வரம் கொடுத்தார். இவளின் அழகில் மயங்கிய பல்லவ மன்னன் இவளை தன் மனைவியாக்கினான். தனக்கும் இளமை வரம் வேண்டும் என்று விருப்பப்பட்ட மன்னன். ஆழ்வாரின் சீடனான களிகண்ணனிடம் தனக்கும் இளமை வரம் கேட்டான். ஆனால் எல்லோருக்கும் ஆழ்வார் வரம் தர மாட்டார் என களிக்கண்ணன் கூறியதால் அவனை நாடு கடத்த மன்னன் உத்தரவிட்டார். இதையறிந்த ஆழ்வார் சீடனுடன் தானும் வெளிறே முடிவு செய்து காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை எனவே நீயும் எங்களுடன் வந்து விடு என அழைத்தார். பெருமாளும் தன் பாம்பணையை சுருட்டி கொண்டு ஆழ்வாருடன் சென்றார். இதனால் இந்த பெருமாளுக்கு சொல் வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அதன் பின் கும்பகோணம் வந்த ஆழ்வார் நீண்ட காலம் அங்கிருந்து பெருமாளுக்கு சேவை செய்து திருவடியை அடைந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 13 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
___________________________________________________________________________________________
பஞ்சகல்யாணிக் குதிரை பற்றி சரித்ர நாவல்களில் படித்திருப்போம்...

இரண்டாம் ஸரபேந்த்ர மஹாராஜா காலத்தில் கோனேரி பாபு  என்பாரால் சாலிஹோத்ர ரிஷியின் நூலை அடியொற்றி... மராட்டி மொழியில் காவ்ய நடையில் இயற்றப்பட்டது துரங்கரத்னமாலா  என்னும் நூல். பஞ்சகல்யாணி ஜாதிக்குரிய லட்சணங்களை இந்த நூலில் தெளிவாகச் சொல்கிறார் ஆசிரியர். மணிவாசகர் சரித்ரத்தையும் அதனூடாகப் பல்வகைக் குதிரைகளின் லட்சணங்களையும் அழகுறச் சொல்லியிருப்பது இந்நூலின் சிறப்பு... சரி... பஞ்சகல்யாணி விஷயத்திற்கு வருவோம்... நான்கு கால்களுமே பளிச்சென்ற வெள்ளை நிறத்துடன் நல்ல கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும் ஜாதிக்குதிரைக்குப் பஞ்சகல்யாணி என்று பெயர். இரண்டாம் ஸரபோஜி மஹாராஜாவின் " சம்பு ப்ரஸாத்" என்னும் ஐந்தரை அடி உயரமுள்ள Bor (சிகப்பு) ஜாதி பட்டத்து குதிரையும், அவர் புதல்வர் இரண்டாம் சிவாஜிமஹாராஜாவின் " விஜய ப்ரஸாத்" என்னும் ப்ரஸித்தி பெற்ற ஸாரங்க(கருப்பு) ஜாதிப் பட்டத்துக் குதிரையும் விலை மதிப்பிட முடியாத பஞ்சகல்யாணி ஸவாரிக் குதிரைகள். பாரத தேசத்தில் இந்தக் குதிரைக்கு மதிப்பு அதிகம். சந்தைகளில் தேடிப்பிடித்தே வாங்க வேண்டும். ஒரு நல்ல பஞ்ச கல்யாணியின் விலை பத்துலக்ஷ ரூபாய்க்கும் அதிகம். அதுவே கருப்பு அல்லது சிகப்புக் குதிரையானால் இன்னும் பல மடங்கு விலை சொல்வார்கள். ஆனால் பஞ்ச கல்யாணியின் மதிப்பை அறியாத மேற்கத்திய நாட்டவர்கள் நான்கு கால்களிலும் வெள்ளை நிறம் இருந்தால் அந்தக் குதிரைகளைப் பலம் சற்றுக் குறைந்தவைகள்... சண்டைக்கும்... நெடுந்தூரம் ஸவாரி செய்வதற்கும் அவ்வளவாக ஏற்றவையல்ல என்று குறைத்தே மதிப்பிடுகிறார்கள்.