சனி, 24 ஆகஸ்ட், 2019

நடனகோபாலநாயகி சுவாமிகள்

நடனகோபாலநாயகி சுவாமிகள், மதுரையில் 1843, ஜனவரி 9 (மார்கழி மிருகசீரிட நட்சத்திரம்) வியாழக்கிழமை அவதரித்தார். இவரது தந்தையார் ரங்கார்யர், தாய் லட்சுமிபாய். பெற்றோர் பிள்ளைக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். பள்ளியில் படித்த காலத்தில் ஓம் என்ற மந்திரத்தின் பொருளைக் கேட்டு ஆசிரியர்களையே திகைக்கச் செய்தார். அவரது மனம் எப்போதும் இறைச் சிந்னையிலேயே இருந்தது. இளமையில் வணிகர் ஒருவரிடம் கணக்கெழுதும் பணியில் சேர்ந்தார். ஆனால், வணிகர் ராமபத்ரனின் இறைச்சிந்தனையைக் கண்டு வேலையை விட்டு வெளியேற்றினார். பின்னர் தன் வீட்டுத் தொழிலான நெசவுத்தொழிலைச் செய்தார். திடீரென்று ஒருநாள் வீட்டைவிட்டு கிளம்பி, திருப்பரங்குன்றத்தில் துறவியைப் போல யோகத்தில் ஆழ்ந்தார். 12 ஆண்டுகால தவத்திற்கு  பின், பரமக்குடி நாகலிங்க அடிகளாரிடம் சதாநந்தர் என்று தீட்சாநாமம் பெற்றார். சித்தரைப் போல பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களிடம் பிரபலமானார்.ஒருமுறை மதுரை அருகில் உள்ள அழகர்கோவில் சுந்தராஜப்பெருமாளை தரிசித்தார். அன்றுமுதல் ஆழ்வார்களின் மீதும், நாலாயிரதிவ்ய பிரபந்தங்களின் மீதும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அங்குள்ள ஆதிநாதசுவாமியை தரிசித்தார். அங்கே, நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடல்களை வடபத்ராரீயர் என்ற பக்தர் பாடிக் கொண்டிருந்தார். அந்த வரிகள் சதாநந்தரின் மனதை கொள்ளை கொண்டது. அவர் அந்த பக்தரை சாஷ்டாங்கமாக பணிந்து தமக்கு வழிகாட்டும்படி கேட்டுக் கொண்டார். அந்த பக்தர், அவரைத் தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். விஷ்ணுவின் அம்சம் நிறைந்த சதா நந்தருக்கு, நடன கோபால் என்று பெயரிட்டார்.

ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், கீதாபாஷ்யம், பிரம்மசூத்திர பாஷ்யம், பகவத்கீதை, விஷ்ணு புராணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் ஆகியவற்றை அவரிடம் கற்று முடித்தார். தன்னை ஒரு பெண்ணாகவும், திருமாலை ஆணாகவும் கருதி ஹரிபக்தியில் ஆழ்ந்தார். பின், பல திவ்யதேசங்களுக்கு தீர்த்தயாத்திரை புறப்பட்டார். ஸ்ரீரங்க ரங்க நாதர் மீது பாடல்கள் பாடினார். அங்கிருந்த ஸ்ரீரங்கநாராயண ஜீயர் நடனகோபாலை நடனகோபால நாயகி என்று அழைத்தார்.  தம்முடைய வாழ்நாள் முடிய இருப்பதை முன்கூட்டியே உணர்ந்து, அழகர்கோவில் அருகிலுள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் தமக்கான பிருந்தா வனத்தை(சமாதி) அமைக்குமாறு கூறினார். 1914 ஜனவரி 8, வைகுண்ட ஏகாதசி நாளில்பகவான் ஹரி வந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே மகாவிஷ்ணுவின் திருவடிகளில் இணைந்தார். நடனகோபால நாயகி சுவாமிகள் என்று பக்தர்களால் இன்று போற்றப்படுகிறார். இவர் பிரபந்தப்பாடல்கள், பக்திரச கீர்த்தனைகள், நாமாவளிகள், தமிழ் கீதகோவிந்தம் ஆகியவற்றை இயற்றியுள்ளார். ஸ்ரீமதே ராமானுஜா என்ற மந்திரம் ஜெபித்தால் மனத்தூய்மை உண்டாகும் என்கிறார் சுவாமிகள். ராமானுஜரின் உரைகளையும்,உபதேசங்களையும் படிக்கவேண்டும் என்று நம்மை வேண்டுகிறார். பிருந்தாவனக்கோயிலில் இவர் வழிபட்ட ருக்மணி, சத்யபாமா சமேத நடனகோபால கிருஷ்ணர் விக்ரகம் உள்ளது. இவர் பயன்படுத்திய ஆண்டாள் கொண்டை, துளசிமணிமாலை, பாதுகையை (காலணி) ஆகியவற்றை இங்கு தரிசிக்கலாம். இவரது அவதார தினம் டிசம்பர் 21, மார்கழி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிருந்தாவனத்தில் கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை: