சனி, 24 ஆகஸ்ட், 2019

மலர் வேண்டாம் மனம் போதும்!

சிவபெருமானுக்கு பூஜை செய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், பாதிரி, அரளி, செந்தாமரை ஆகிய எட்டு வகையான மலர்களை பயன்படுத்தலாம். இம்மலர்கள் அஷ்ட புஷ்பங்கள் எனப்படுகின்றன. இவற்றில் சில இப்போது கிடைப்பதில்லை. இம்மலர்களை படைத்து மட்டும்தான் சிவனை வழிபட வேண்டுமென்பதில்லை. நமசிவாய என அவர் திருநாமத்தை உச்சரித்து, மனம் என்னும் பூவால் வழிபட்டாலே போதும். மலர்களால் அர்ச்சித்து வணங்கிய பலன் கிடைத்து விடும்.
----------------‐----------
இடதுகை எதற்கு!

இடது கை என்றாலே வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறோம். ஆனால், எதையும் ஆண்டவன் நன்மைக்கே கொடுக்கிறான். தினமும் வீட்டில் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி  இஷ்ட தெய்வத்தை ஸ்தோத்திரம் சொல்லி வழி படுகிறோம். பூஜையின் நிறைவில், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, பூக்களை அள்ளி, சுவாமியின் திருவடியில் தூவ வேண்டும்.
 இதற்கு புஷ்பாஞ்சலி என்று பெயர். தெய்வ கைங்கர்யங்களை வலது கையால் தான் செய்ய வேண்டும் என்றாலும், புஷ்பாஞ்சலியின் போது மட்டும், இடக்கையையும் சேர்த்து செய்வது தவறில்லை என்கிறது சாஸ்திரம்.
----------------‐----------
சுயம்புவை வணங்கலாம்!

கோயிலில் கருவறையில் மூலவரும், அதன் அருகில் உற்சவரும் எழுந்தருளியிருப்பர். திருவிழா காலத்தில் உற்ஸவர் மட்டும் திருவீதி எழுந்தருள்வது வழக்கம். சுவாமி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு அருள்புரிவதற்காக வீதியுலா நடக்கிறது. அப்போது உற்ஸவர், மூலவரின் அனைத்து சக்தியையும் தன்னோடு எடுத்து வருவதாக ஐதீகம். அந்த சமயத்தில் மூலவரை தரிசித்தல், அர்ச்சித்தல், வலம் வருதல் போன்ற எந்த வழிபாட்டையும் மேற்கொள்வது கூடாது என்கிறது சிவயோகி ஸம்வாதம். ஆனால், சுவாமி சுயம்பு மூர்த்தியாக (தானாக தோன்றியது) எழுந்தருளியுள்ள கோயில்களில் மட்டும் மூலவரைத் தரிசிக்கலாம். ஆனால், அர்ச்சனை செய்யவோ, வலம் வரவோ கூடாது.
----------------‐----------
நீரின் நிழலே ஆகாயம்!

நீருக்கு நிழல் இருக்கிறதா? என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்வர். ஆனால், நீருக்கு நிழல் இருக்கிறது. நிழல் இல்லை என்றால் ஆகாயமே இல்லை என்றாகி விடும். நீரின் நிழல் அதனுள்ளேயே அடங்கி விடுவதால், வெளியில் தெரிவதில்லை. சிவனும் நீரைப் போல அருள் செய்கிறார். அவரை வணங்கும்போது, ஆன்மாவிற்கு முக்தி கிடைக்கிறது. அது அவருக்குள்ளேயே ஒடுங்குகிறது. இதனை உணர்த்தும் விதமாக சைவ சித்தாந்தத்தில், நீரார் நிழல் என்று சிவனை வேண்டி பாடப்பட்டுள்ளது.
----------------‐----------
அக்கா தம்பி சந்நிதி!

அட்டவீரட்டத் தலங்களில் (சிவன் வீரச்செயல்கள் நிகழ்த்திய இடங்கள்) ஒன்று, கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள திருவதிகை. நாவுக்கரசரின் கொடிய சூலைநோயினைப் போக்கிய வீரட்டானேஸ்வரர் இங்குள்ள கோயிலில் உள்ளார். இக்கோயிலில் நாவுக்கரசருக்கும், அவரது சகோதரி திலகவதியாருக்கும் சந்நிதி உண்டு. தேவாரத்தில், தான் பாடிய முதல் பாடலில் இத்தல சிவனைப் பற்றியே நாவுக்கரசர் பாடியிருக்கிறார். வீரட்டானேஸ்வரரை வழிபட்டே திலகவதியார், சமணமதத்தை தழுவிய தன் தம்பியை சைவ சமயத்திற்கு மாற்றினார்.
----------------‐----------
மணி அடிக்க வேண்டிய நேரம்!

பூஜைப்பொருளில் ஒன்றான மணியை இஷ்டம் போல நினைத்த நேரமெல்லாம் அடிக்கக் கூடாது. அதற்குரிய நேரத்தில் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்கிறது பரசுராம கல்ப சூத்திரம்.ஸ்நாநே தூபே ததா தீபே நைவேத்யே பூஷணே ததாகண்டா நாதம் ப்ரகுர்வீத ததா நீராஜநேபிச என்கிறது அதற்கான ஸ்லோகம். அபிஷேகத்தின் போதும், சாம்பிராணி காட்டும் போதும், தீபாராதனை வேளையிலும், நைவேத்யம் செய்யும்போதும், ஆபரணம் அணிவித்து அலங்கரிக்கும் போதும், நீராஞ்ஜனம்  என்னும் கற்பூர ஆரத்தியின் போதும் மணியோசை  எழுப்ப வேண்டும்.  வீட்டில் கற்பூர ஆரத்தி காட்டும் போது மணியடிப்பது நல்லது.
----------------‐----------
பூஜைக்குரிய திசை!

விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய தெய்வங்களை வணங்கும்போது சுவாமியை கிழக்கு நோக்கி வைத்து, நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்வதே சிறந்தது. பெண் தெய்வங்களான காளி, மாரி, லட்சுமி, பிற அம்மன்களை வழிபடும்போது நேருக்கு நேராக அமர்ந்து பூஜை செய்யலாம். அதாவது, அம்மன் கிழக்கு நோக்கி இருக்க, நாம் மேற்கு நோக்கியோ அல்லது அம்மன் வடக்கு நோக்கி இருக்க, நாம் தெற்கு நோக்கியோ பூஜை செய்யலாம்.
----------------‐----------
விநாயகர் பிரம்மச்சாரியா அல்லது திருமணம் ஆனவரா?

முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராக இருக்கும் போது பிரம்மச்சாரியாக உள்ளார். வள்ளி, தேவசேனாவுடன் இருக்கும் போது திருமணமானவர் என்கிறோம். அது போலத்தான். பால கணபதி பிரம்மச்சாரி, திருமணமான பிறகு சித்தி, புத்தி சமேத கணபதி என்று போற்றப்படுகிறார். இன்னொரு விஷயம் உலகியல் திருமணங்களோடு இவற்றை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. தம்மை வழிபடுபவர்களுக்கு வெற்றியைத் தருபவர் என்பதை சித்தி தேவியும், நல்லறிவைத் தருபவர் என்பதை புத்தி தேவியும் குறிக்கிறார்கள்.
----------------‐----------

கருத்துகள் இல்லை: