வெள்ளி, 8 நவம்பர், 2019

பெரும்பாலான நதிகளுக்கு பெண் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது ஏன்?

நமது சாஸ்திரங்கள் கடலை ஆணாகவும் நதிகளை பெண்ணாகவும் போற்றுகின்றன.பெண் மென்மையானவள்.அனைவரையும் அரவணைத்து அந்தக் குடும்பத்தார் அனைவரின் நலனுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பவள்.சூரியனால் கடல் நீரானது நீராவியாகி மேகங்களின் வாயிலாக மழையாகப் பெய்து அவை நதிகளின் மூலம் ஊர்மக்கள் பயனடைய வளைந்து மெலிந்து ஓடி கடைசியில் கடலிலேயே நதிகள் சங்கமிக்கின்றன.இது போன்று பெண்ணானவள் ஒரு குடும்பம் நன்றாக இருக்க விட்டுக்கொடுத்து புரிந்துகொண்டு தியாகம் செய்து வாழ்கிறாள்.அவள் எவ்வளவு தியாகம் செய்திடினும் முடிவில் தனது கணவன் இன்னார் இன்னாரின் மனைவியே தான் என்பதிலேயே பெருமை கொள்கிறாள்.வளர்ச்சிக்கு வித்தாக பெண்களும் நதிகளும் விளங்குவதினால்.நதிகள் கங்கா காவிரி யமுனா என்று பெண்பால் சொற்களாலேயே சிறப்பிக்கப்படுகின்றன.உலகம் இன்று இருப்பது பெண்களால்தான்! அதுபோன்று நதிகளே ஒரு தேசத்தை உயர்ந்ததாக ஆக்குகின்றன.பெண்கள் இணைந்திருந்தால் அந்தக் குடும்பத்துக்கு வளர்ச்சி என்பது போன்று.நதிகள் அனைத்தும் இணைந்தால் நமது நாடும் வளம்பெறும்.
ஆழ்வார்களும் அவதாரமும்
        5. பெரியாழ்வார்

பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : முகுந்தர்
தாய் : பதுமவல்லி
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்
நட்சத்திரம் : ஆனி சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)
கிழமை : திங்கள்
எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
பாடிய பாடல் : 473
சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்
பிற பெயர்கள் : பட்டநாதன், பட்டர்பிரான், விஷ்ணுசித்தன், ஸ்ரீவில்லிபுத்தூரார், ஸ்ரீரங்கநாதஸ்வஸுரர்

பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர். ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயிக்கு தினமும் மாலை தொடுத்து சூட்டுவதை தன் முக்கிய பணியாக கொண்டிருந்தார் இவர். அக்காலத்தில் மதுரையில் அரசனான வல்லபதேவ பாண்டியன் நகர சோதனை வரும் போது ஒரு வேதியர் திண்ணையில் படுத்திருப்பதை கண்டு ஒரு நல்ல வார்த்தை சொல்லும்படி கேட்டார். அந்த வேதியரும் மழைக்காலத்துக்காக மற்ற எட்டு மாதங்களிலும் இரவுக்காகப் பகலிலும். கிழப்பருவத்திற்காக வாலிபத்திலும், மறுமைக்காக இம்மையிலும் முயற்சிக்க வேண்டும் என்ற சுலோகத்தை சொன்னார். மன்னனும் தம் அரசவையிலுள்ள செல்வ நம்பி என்ற அந்தணரிடம் இது பற்றி கூறினார். அதற்கு செல்வ நம்பி பரத்வ நிர்ணயம் பண்ணி அதனடியாகப் பேறு பெற வேண்டும் என்று கூறினார். ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெருமாள் விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி மதுரையில் நடந்த சம்பவத்தை கூறி உனக்குத்தான் பொற்கிழி சென்று வாரும் என்றார். அதற்கு விஷ்ணு சித்தர் கல்லாதவனான என்னால் முடியுமா ? என்று கேட்க, பெருமாளும் இதற்கு நானே பொறுப்பு என்றார். விஷ்ணு சித்தர் மதுரை சென்று பாண்டியன் அரசவையில் வேதங்கள் பாடி ஸ்ரீமன் நாராயணனே பரன் (முதல்வன்) என்று நிலை நாட்டினார். பொற்கிழி தோரணம் தாழ அதனை எடுத்துக்கொண்டார். எல்லோரும் பாராட்டி ஆழ்வாரை யானை மீது ஏற்றி வீதி வலம் வந்த போது இக்கோலத்தை ரசிக்க பெருமாள் பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து ஆகாயத்தில் தோன்றி ஆழ்வாருக்கு காட்சியளித்தார். ஆழ்வார் மருண்டார். நல்ல காலத்திலேயே இம் மண்ணுலகில் தீங்கு செய்வர். இக்கலியிலே முகம் காட்டுகிறானே, இதனால் கண்திருஷ்டி பட்டு விடுமோ என்று பொங்கும் பரிவால். யானை மீதுள்ள மணிகளை ஒலித்து கொண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாசனம் பண்ணினார். எனவே தான் ஆழ்வார்களிலே பெரியாழ்வார் எனப்பட்டார். பொற்கிழியை கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் பெருங்கோயிலுக்கு சமர்ப்பித்து மீண்டும் தொண்டு செய்தார். கண்ணன் லீலையை முற்றும் அனுபவித்து அதன் விளைவாக பெரியாழ்வார் திருமொழி என்ற பிரபந்தத்தை வெளியிட்டார். பெரியாழ்வாரின் வம்சத் தோன்றல்கள்  வேதப்பிரான் பட்டர்கள் என்ற திருநாமத்துடன் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகிறார்கள். பெருமாளின் 108 திருப்பதிகளில் பெரியாழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 17 கோயில்களையும் என மொத்தம் 19 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
4. திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : தை மகம் (தேய்பிறை பிரதமை திதி)
கிழமை : ஞாயிறு
தந்தை : பார்க்கவ முனிவர்
தாய் : கனகாங்கி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
பாடல்கள் : 216
சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்,
பிற பெயர்கள் : மழிசைப்பிரான், மஹீஸாபுரீஸ்வரர், பக்திஸாரர், பார்க்கவர்.

சக்கரத்தாழ்வாரின் அம்சமான திருமழிசை ஆழ்வார் பார்க்கவ மகரிஷியின் மகனாக திருமழிசை என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர். பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை எடுத்துச்சென்று வளர்த்தார். ஆனால் ஆழ்வார் பிறந்தது முதல் பால் கூட குடிக்கவில்லை. இதைக்கேள்விப்பட்ட வேளாளர் ஒருவர் தன் மனைவியுடன் பசும்பாலை காய்ச்சி எடுத்து வந்து இவருக்கு கொடுத்து அருந்தக் கூறினார். இப்படியே தினமும் வேளாளர் கொடுத்த பாலை குடித்து வந்த ஆழ்வார். ஒரு நாள் சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அவர்களிடமே அருந்தக் கூறினார். மனைவியுடன் அந்த பாலை அருந்திய வேளாளர் தன் முதுமை நீங்கி இளமை பெற்றார். பாலின் மகிமையால் இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கனிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். களிக்கண்ணனும் திருமழிசை சீடர் ஆனார். பல சமயங்களில் உள்ள குறைபாடுகளை அறிந்த ஆழ்வார் கடைசியில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார். ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை வைணவ சமயத்தை ஏற்கச் செய்ததுடன் திருமந்திர உபதேசம் செய்தார். ஒருமுறை காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார் அங்குள்ள திருவெங்குடி திருத்தல பெருமாளுக்கு பல ஆண்டுகள் தொண்டாற்றி வந்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டியின் விருப்பப்படி அவளுக்கு இளமை வரம் கொடுத்தார். இவளின் அழகில் மயங்கிய பல்லவ மன்னன் இவளை தன் மனைவியாக்கினான். தனக்கும் இளமை வரம் வேண்டும் என்று விருப்பப்பட்ட மன்னன். ஆழ்வாரின் சீடனான களிகண்ணனிடம் தனக்கும் இளமை வரம் கேட்டான். ஆனால் எல்லோருக்கும் ஆழ்வார் வரம் தர மாட்டார் என களிக்கண்ணன் கூறியதால் அவனை நாடு கடத்த மன்னன் உத்தரவிட்டார். இதையறிந்த ஆழ்வார் சீடனுடன் தானும் வெளிறே முடிவு செய்து காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை எனவே நீயும் எங்களுடன் வந்து விடு என அழைத்தார். பெருமாளும் தன் பாம்பணையை சுருட்டிகொண்டு ஆழ்வாருடன் சென்றார். இதனால் இந்த பெருமாளுக்கு சொல் வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அதன் பின் கும்பகோணம் வந்த ஆழ்வார் நீண்ட காலம் அங்கிருந்து பெருமாளுக்கு சேவை செய்து திருவடியை அடைந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 13 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்