திங்கள், 23 டிசம்பர், 2019

சம்மட்டி அடி - ஸந்த்யா வந்தனமும் காயத்ரியும்!!!

மனு ஸ்ம்ருதியில் 'ரிஷயோ தீர்க்க ஸந்த்யாவாத் தீர்க்கமாயுர் அவாப்நுயு ப்ரக்ஞாம் | யசச்ச கீர்த்திம் ச பிரஹ்ம வர்ச்சஸமேவ்ச' என்று இருக்கிறது.

இதன் அர்த்தம் என்ன என்றால், ரிஷிகள் தீர்க்காயுள், ஞானம், தேஜஸ் அடைந்ததற்குக் காரணம் அவர்கள் விடாமல் செய்து வந்த ஸந்த்யா வந்தனத்தின் பலன்தான். ஸந்த்யா வந்தனத்தின் பலனைத் தெரிந்து கொள்ள இது ஒன்றே போதும். ஏராளமான பொருட் செலவு செய்து உபநயனம் செய்து வைத்தால் பலன் பூஜ்யமாகி விடாமல் பார்த்து கொள்வது இன்றைக்கு இருக்கிற பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் பொறுப்பாகும். அவர்கள் தான் இதைக் கண்காணிக்க வேண்டும்.

நம்முடைய பெரியோர்கள் ஸந்த்யா வந்தனத்தை ஒவ்வொரு காலத்திலும் தவறாமல் அதன் விதிப்படி செய்து வந்தார்கள். அதனால், அவர்கள் சகல வளங்களோடு வாழ்ந்தார்கள். ஆனால், இப்போதோ, ஆங்கில படிப்பு படித்த அநேகம் பேர், ஸந்த்யா வந்தனத்தை முறையாகச் செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வேளை இதைச் செய்வது, நாகரீகக் குறைபாடு என்று கூட சிலர் நினைக்கிறார்கள்.

ஸந்த்யா வந்தனம் போன்ற கர்மாக்கள் முறையான படி ஒழுங்காக நடைபெறாததன் காரணமாக இப்போது லோக க்ஷேமத்தில் குறைவு ஏற்பட்டிருக்கின்ற காரியங்கள் தோன்றி இருக்கின்றன. ஒருவர் ஸந்த்யா வந்தனத்தை ஒழுங்காகச் செய்வதால் அவருக்கு மட்டுமே அந்த நற்பலன் போய்ச் சேருவதில்லை. உலகில் இருக்கின்ற அனைவருக்குமே அந்தப் பலன் போய்ச் சேருகிறது. இதனால் தான், ராஜாக்கள் தங்கள் ராஜ்யத்தில் வசித்து வந்த அந்தணர்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்களது நித்ய கர்மாக்களைக் குறைவில்லாமல் செய்தால், நாட்டில் வளம் பெருகும் என்று அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.

தற்போதைய நிலையில் அக்னி மறையும் தருவாயில் இருக்கிறது. இனி மேலாவது எல்லோரும் ஸந்த்யா வந்தனத்தை ஒழுங்காகச் செய்ய ஆரம்பித்தால், மறைந்திருக்கும் அக்னி, பூர்ண ஜ்யோதியை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.இதன் மூலம் உலக நலன் விருத்தி ஆகும். எல்லா ஜீவராசிகளும் சந்தோஷத்தை அடையும்.

சைக்கிள் வேகமாகச் செலுத்தப்படும் போது, பெடல் பண்ணாது இருந்தாலும், கொஞ்சம் தூரத்திற்குத் தானாகவே சென்று கொண்டிருக்கும். அது போல ஸந்த்யா வந்தனம் போன்ற கர்மாக்கள் செய்யப்பட்டுத் திடீரென்று நின்று விட்டாலும், முன்னோர்கள் செய்த கர்ம பலத்தைக் கொண்டு இப்போது நன்றாக இருப்பது போலத் தோற்றம் அளிக்கும். ஆனால், அது நிலையானதல்ல.

தாமதமாகக் கிளம்பும் ஒருவன், தான் பிடிக்க வேண்டிய ரயிலைத் தவற விட நேர்ந்தால், போக வேண்டிய காரியம் நஷ்டம் ஆகிவிட்டதே என்பதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறான். ஆனால், உலக நலனுக்காகத் தான் செய்ய வேண்டிய ஸந்த்யா வந்தனக் கடமையை விட்டு விட்டால், அதற்காகக் கொஞ்சமும் வருத்தப்படாமல் இருக்கிறான்.

காயத்ரி மந்திரத்தைத் தினமும் குறைவுபடாமலும், வசதிப்பட்டால் சொல்ல வேண்டிய அளவுக்கு அதிகமாகவும் ஒருவன் ஜபிக்க வேண்டும். இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. எவன் ஒருவன் ச்ரத்தையுடனும், பக்தியுடனும் காயத்ரி மந்திரத்தைத் தினமும் த்யான பூர்வமாக ஜபித்து வருகிறானோ, அவன் பக்தி ச்ரத்தையை அனுசரித்து, அதே ஜன்மாவிலோ அல்லது தொடர்ந்து வரும் ஜன்மாக்கள் ஒன்றிலோ மிகப் பெரிய பதவியை அடைகிறான்.
வான்மீகர்

வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 நாள் ஆகும்.

பதஞ்சலி முனிவர்

இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப்பவருமான அத்திரிமகரிஷிக்கும், மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிஷேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கவுட பாதர் என்னும் சீடர் மட்டும், பதஞ்சலி முனிவர் ஏவிய பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.

இத்தனைகாலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக் கொண்டார், திரையின் பின் அமர்ந்து ஆதிஷேட உருவில் கடும் விஷ மூச்சுக்காற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம் இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்கத்திலேயே கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்குண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.

வெண்கல மணியோசை முனிவரின் குரல் பதிலாக வந்தது. குரு நாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றான் ஒரு சீடன்.  உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம் மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்க(வசப்படுத்த) செய்யப்படும் சடங்கே தவம் என்றார் முனிவர். இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா குருதேவா என்று கேட்டான் ஆவலோடு சீடன் ஒருவன். பஞ்சபூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையாளம் சித்தர்களுக்கு இது சாத்தியமே என்று பதஞ்சலி கூறினார்.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்கு முக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரமான குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தை ஒரு கணம் திரைநீக்கிப் பார்த்து விடவேண்டுமென்ற ஆவலால் திரையைப் பிடித்திழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிஷேடனின் கடும் விஷக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த முனிவர் அவர்மீது மூச்சுக்காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்திறந்த கவுடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பாலகி விட்டார்களே என்று கதறிக் கண்ணீர் விட்டார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள்  பொறுமை காத்தவர்கள் இன்று அவரசப்பட்டு விட்டார்கள். கவுடபாதரே, நீர் மட்டும் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக் கொள் என்று ஆறுதல் கூறினார் பதஞ்சலி. உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் உன்னுடைய இப்போதைய மனநிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார்.

படிப்படியாக கவுடபாதருக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதர்  பதஞ்சலி ஆதிஷேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தார். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சமாதியடைந்ததாக கூறப்படுகிறது.

பதஞ்சலி முனிவர் தியானச்செய்யுள்

ஆயசித்தி அனைத்தும் பெற் சத்திய சித்தரே
சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே
பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரே

பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல்  பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும். படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும், பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்
1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!
2. ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!
3. ஒளிமயமானவரே போற்றி!
4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!
5. கருணாமூர்தியே போற்றி!
6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!
7. பூலோகச் சூரியனே போற்றி!
8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!
9. பேரும் புகழும் உடையவரே போற்றி!
10. இன்மொழி பேசுபவரே போற்றி!
11. இகபரசுகம் தருபவரே போற்றி!
12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!
13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!
14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!
15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!
16. யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றி சொல்லி அர்ச்சனை செய்தவுடன் ஓம் க்லம்  பதஞ்சலி சித்த பெருமானே போற்றி என்று 108 முறை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும்.

நிவேதனம்: இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் போன்றவை நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்.

பதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்:
1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்
2. குடும்ப ஒற்றுமை உண்டாகும்
3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்
4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்
5. நன் மக்கட்பேறு உண்டாகும்
6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்
7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும்
8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்
9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள்.

இவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த தினமாகும்.

பதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 5 யுகம் 7 நாள் ஆகும்.
உரோமரிஷி

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார்.  புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோயிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.

உரோமரிஷி இயற்றிய நூல்கள்
உரோமரிஷி வைத்தியம்  1000
உரோமரிஷி சூத்திரம்  1000
உரோமரிஷி ஞானம்  50
உரோமரிஷி பெருநூல்  500
உரோமரிஷி குறுநூல்  50
உரோமரிஷி காவியம்  500
உரோமரிஷி முப்பு சூத்திரம்  30
உரோமரிஷி இரண்டடி  500
உரோமரிஷி ஜோதிட விளக்கம்

நாகாரூடம், பகார சூத்தரம், சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

தியானச் செய்யுள்
கனிந்த இதயம், மெலிந்த உருவம்
சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ?
அலையும் மனதை அடக்கி,
அருள் அள்ளியே தருவாய்
தாடியில் தங்கம் தந்த தெய்வமே
தங்கள் திருவடி சரணம்

ரோமசித்தரின் பூஜைமுறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் ரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி!
2. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி!
4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி!
5. நந்தி தேவரால் காப்பாற்றப்படுபவரே போற்றி!
6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி!
7. சங்கீதப் பிரியரே போற்றி!
8. தடைகளை நீக்குபவரே போற்றி!
9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி!
11. முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி!
12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி!
14. காலத்தைக் கடந்தவரே போற்றி!
15. தெய்வீகச் சித்தரே போற்றி!
16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள் தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

உரோமரிஷி சித்தரின் பூஜை பலன்கள்:

இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர், மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும். என்றால் மனோன்மணி சதக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்...

1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்,
2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது, நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்
4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.
5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

இவரை திங்கள் கிழமை வழிபட்டால் விசேட பலன்கள் கிடைக்கும்.
நரசிம்மர் தோன்றுதல்

சுரேஷ்வாச்சாரியாரும், மற்ற சீடர்களும் பின் தொடர, ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் வந்து மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்தார். அங்கு ஒரு நாள் ஒரு காபாலிகன் வந்தான். சங்கரர் துர்மதங்களைக் கண்டித்து அத்வைதத்தை நிலைநாட்டி, வருவதைப் பார்த்து , தன் மதமும் போய்விடுமோ என்று பயந்து, எப்படியாவது அவரை ஒழித்துவிடவேண்டும் என்று நினைத்தான். அவன் சங்கரரிடம், நான் பல ஆண்டுகளாக இவ்வுடலுடன் கைலாயம் செல்ல எண்ணி பரமசிவனைக் குறித்து தவம் செய்து வருகிறேன். அவர் என் முன் தோன்றி, எல்லாம் அறிந்த ஒருவன் ஞானி அல்லது  சக்கரவர்த்தி இவர்களில் ஒருவருடைய தலையை எடுத்து அக்னியில் போட்டு ஹோமம் செய்தால் உன் எண்ணம் ஈடேறும் என்று அருளினார். ஆனால் இக்காலத்தில் சக்ரவர்த்தி தலை கிடைப்பதரிது. தாங்கள் ஒரு ஞானி. எல்லாமறிந்தவர். உங்கள் தலையை நான் வெட்டினால் உங்களுக்கு துக்கமேற்படாது. எனக்கும் காரியம் கைகூடும் என்று வேண்டினான். அவன் சொன்னதை புரிந்து கொண்ட சங்கரர், சிரித்துக் கொண்டே, தன் தலையை பலியாகக் கொடுக்க தமக்கு ஆட்சேபணை இல்லையென்று சொன்னார். தம் சீடர்களுக்குத் தெரியாமல் பைரவர் கோயிலுக்குத் தாம் வருவதாக கூறி, நள்ளிரவில் கோயில் இருந்த குகைக்குப் புறப்பட்டார். தன் குருவுக்கு ஏதோ ஆபத்து என்று பத்மபாதர் உணர்ந்தார். ஆகவே குருவைக் காப்பாற்றும்படி பகவான் நரசிம்மரை மனமுருக வேண்டிக் கொண்டார். நரசிம்ம மந்திரத்தில் சித்தி பெற்றிருந்த பத்மபாதர் தானே நரசிம்மமாகி சங்கரர் இருக்குமிடத்திற்கு குதித்து ஓடிவந்து காபாலிகன் மேல் பாய்ந்து அவன் மார்பை பிளந்து அவனைக் கொன்றார். நரசிம்மன் செய்த அட்டகாசத்தால் தியானம் கலைந்த சங்கரர் கண்ணைத்திறந்து பார்த்து நடந்ததை அறிந்து கொண்டார். இதன்பின் சங்கரர் கோகர்ணம், ஹரிபுரம் முதலிய இடங்களில் யாத்திரை செய்து பின், கொல்லூர் மூகாம்பிகை தலத்திற்கு வந்தார். அங்கு தமது ஒரே புதல்வன் இறந்து போய் அச்சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு வருந்தும்  தம்பதிகளைக் கண்டு சங்கரர் மனம் உருகி, கடவுளை பிரார்த்திக்க இறந்த புதல்வன் உயிர்பெற்று எழுந்தான். அதன்பின் சங்கரர்  மூகாம்பிகையின் ஆலயத்துள் சென்று  அம்பிகையைத் துதித்து, தன் சிஷ்யர்களுடன் சில தினங்கள் இங்கு தங்கி இருந்தார். சங்கரர் கொல்லூரில்  தங்கியிருந்த போது, அவருக்கு கடுமையான காய்சச்சல் ஏ ற்பட்டது. அவருடைய காய்ச்சலை குணப்படுத்த, மூகாம்பிகையே கசாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்து குணப்படுத்தியதாகவும், அதன் அடிப்படையில் இன்றும் கூட மூகாம்பிகைக்கு இரவு நைவேத்தியத்தியன் போது கசாயம் வைக்கப்படுவதாக கூறுவர்.

சங்கரரின் மற்றொரு சீடர் ஹஸ்தாமலகர்: சங்கரர் கர்நாடகாவில் பல புண்ணிய தலங்களுக்கு சென்றார். அப்போது ஸ்ரீவாடியில் கடவுள் பக்தியுள்ள ஒரு அந்தணர் தனது ஊமை மகனை அழைத்துக் கொண்டு சங்கரரிடம் வந்தார். அவரை நமஸ்கரித்து, ஐயா! என் மகன் ஊமையாக மட்டுமல்லாமல் மூளை வளர்ச்சியின்றி காணப்படுகிறான். தாங்கள் தான் அவனை குணப்படுத்த வேண்டும் என்று சொன்னார். சங்கரர் சிறுவனைப் பார்த்து, நீ யார்! ஏன் இப்படி ஜடம் போல் இருக்கிறாய் என்று கேட்டார். அதுவரை ஊமையாக இருந்த சிறுவன் பேச ஆரம்பித்தான். நான் ஜடமில்லை, சித்ஸ்வரூபி என்று பதிலளித்து 12 ஸ்லோகங்களால் ஆத்ம தத்துவத்தை விளக்கினார். இதுவே ஹஸ்தாமலகீயம் என்று சொல்லப்படுவது. சங்கரர் இதற்கு உரை இயற்றியுள்ளார். சங்கரர் அச்சிறுவனை ஆசிர்வதித்து, அவனுக்கு ஹஸ்தமாலகா (உள்ளங்கை நெல்லிக்கனி) என பெயரிட்டு தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.

ஹஸ்தாமலகருக்கு எப்படி பிறவியிலேயே, பாடம் கற்காமலே ஞானம் வந்தது என்று சீடர்கள் வினவ, சங்கரர் கூறினார். யமுனா நதிக்கரையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு மாது தனது இரண்டு வயது பாலனை அவரிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு நதியில் ஸ்நானம் செய்யச் சென்றாள். தற்செயலாக குழந்தை நதியில் விழுந்து இறக்க மக்கள், அந்தக் குழந்தையின் சடலத்தை அந்த முனிவர் முன் இட்டு புலம்பினார்கள். கருணை மிகுந்த முனிவர் நடந்ததை அறிந்து, தன் யோகசக்தியால் குழந்தையின் உடலில் புகுந்தார். அவரே ஹஸ்தாமலகர் என்று சங்கரர் உரைத்தார்.

சிருங்கேரி சாரதா: சங்கரர் கர்நாடகா துங்கபத்திரை நதிக்கரையில் இருந்த சிருங்கேரிக்கு வந்து சேர்ந்தார். தசரதர் புத்ரபாக்யம் வேண்டி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தை நடத்தி வைத்த ரிஷ்யசிருங்க மாமுனிவரின் ஆசிரமம் இங்கு  இருந்தது.  இங்கு நிறைமாத கர்ப்பிணியான ஒரு தவளை வெயிலில் உஷ்ணம் தாங்காமல் தவிக்கும்போது ஒரு நாகப்பாம்பு படமெடுத்து தன் தலையால் குடைபிடித்து அத்தவளையைக் காப்பாற்றிய அற்புத காட்சியை சங்கரர் கண்டார். இயல்பாகவே, விரோதிகளான இவை இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்ட சங்கரர் இந்த இடம் மிகவும் சக்திவாய்ந்த இடம் என கருதினார். முன்பு உபயபாரதியை வனதுர்கா மந்திரத்தால் கட்டுப்படுத்தி தான் விரும்பும் இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று செய்த வேண்டுகோள் நினைவுக்கு வர, அதன்படியே அவளுக்கு ஓர் ஆலயத்தை ஏற்படுத்தி பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார்.

இன்னுமொரு சீடர் தோடகாச்சாரியார்: சிருங்கேரியில் சங்கரர் தங்கியிருக்கும் இடத்திற்கு அநேக சீடர்கள் வந்தார்கள். அவர்களில் கிரி என்ற சீடரும் ஒருவர். இவர் சற்று மந்த புத்தி உடையவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் குரு சங்கரர் மீது மிக்க பக்தி கொண்டிருந்தார். எப்போதும் குரு சேவையிலேயே ஈடுபட்டிருப்பார். பாடங்களை கிரஹிக்கத் திறமையற்றவர். இதனால் மற்ற சீடர்கள் அவரை அலட்சியப்படுத்தினர். ஒருநாள் வகுப்பு ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆனால் கிரி வரவில்லை. அவர் குருவின் துணிகளைத் துவைப்பதற்காக துங்கபத்திரா நதிக்குச் சென்றிருந்தார். கிரி வந்தவுடன் பாடம் ஆரம்பிக்கலாம் என்று சங்கரர் கூறினார். கிரியோ  மந்தமாக இருக்கிறார். அவருக்காக நாம் காத்திருப்பானேன்! என்று மற்ற சீடர்கள் கூறினர். தம் சீடர்களுக்கு பாடம் கற்பிக்க விரும்பிய சங்கரர், மனதினாலேயே தியானம் செய்து கிரிக்கு எல்லா வித்யைகளும் தோன்றட்டும் என்று அருள்புரிந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் கிரி உள்ளே நுழைந்தார். தம் குருவைப் பாராட்டி தோடகா என்னும் பண்ணில் எட்டு ஸ்லோகங்கள் கொண்ட ஒரு பாட்டைப் பாடிக்கொண்டு வந்தார். இந்த துதியே தோடகாஷ்டகம் ஆனது. இதனாலேயே கிரி, தோடகாச்சாரியார் என்று அழைக்கப்பட்டார். அன்றிலிருந்து மற்ற சீடர்கள் தோடகாச்சாரியார் மீது மிக்க மதிப்பு வைக்க ஆரம்பித்தனர்.

குருவின் உத்தரவுப்படி எல்லா சீடர்களும் பல நூல்களை இயற்றினார்கள். சங்கரர் அருளியுள்ள தைத்திரீய உபநிஷத் உரைக்கும், பிருஹதாரண்யக உபநிஷத் உரைக்கும், சுரேஸ்வரர் மறு விளக்க உரை இயற்றியுள்ளார். இது தவிர நைஷ்கர்ம்ய ஸித்தி என்ற தனி நூலும் செய்திருக்கிறார். அதுபோல சங்கரரது தட்சிணாமூர்த்தி அஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்திற்கு மானஸோல்லாசம் என்ற பெயரில் ஒரு உரை இவரால் செய்யப்பட்டது. பஞ்சபாதிகா என்ற பெயரில் பிரம்மசூத்திரங்களுக்கு பொருள் கூறும் ஒரு விரிவான நூலையும், சங்கரருடைய பிரபஞ்சஸாரம் என்ற மந்திர சாஸ்திர நூலுக்கு ஒரு உரையும் பத்மபாதரால் செய்யப்பட்டது. தோடகாச்சாரியார் சங்கரர் பெயரில் தோடகாஷ்டகம் என்ற துதியையும், ச்ருதி ஸாரஸமுத்தரணம் என்ற நூலையும் இயற்றியிருக்கிறார். ஹஸ்தாமலகருடைய ஸ்லோகங்கள் ஹஸ்தாமலகீயம் எனப்படும். இவ்வாறு சங்கரர் சீடர்களுடன் 12 ஆண்டுகள் சிருங்கேரியில் தங்கியிருந்தார்.

தாய் ஆர்யாம்பாளின் பிரிவு

சிருங்கேரியில் இருக்கும் போது, திடீரென்று ஒருநாள் சங்கரருக்கு தம் தாயின் உடல்நிலை சரியில்லை என்பதையும், அவளுடைய இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் யோகசக்தியால் உணர்ந்தார். தம் சீடர்களிடம் தாயின் நிலையைக் கூறிவிட்டு, ஆகாயமார்கமாக காலடி வந்தடைந்தார். தாயாரைத் தேற்றினார். மகனைக் கண்டதில் தாயாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தாயாரைப் பார்த்து சங்கரர் மிக்க அன்புடன், அம்மா! கவலைப்படாதே. உனக்கு என்ன ஆசை என்று கூறு என்றார். தன்னை சிவலோகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று தாயார் கேட்க, சங்கரரும் உடனே சிவபுஜங்கம் என்ற ஸ்தோத்திரத்தால் பரமசிவனைத் துதித்தார். சிவகணங்கள் உடனே அங்கு தோன்றினர். அவர்கள் சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தி இருந்தனர். இவைகளினால் பயந்த தன் தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க மகாவிஷ்ணுவை வேண்டி ஒரு பாடல் பாடினார். மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைத்தது. உடனே விஷ்ணு தூதர்கள் தாயாரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தாயாருக்கு இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கினார் சங்கரர். உறவினர்களும், ஊர்க்காரர்களும் சன்னியாசியான சங்கரர் நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளில் ஈடுபடக்கூடாது என்றனர். சங்கரர் மனம் தளரவில்லை. தான் தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தைப் பற்றிக் கூறினார். அதை அவர்கள் கேட்பதாக இல்லை. உடனே சங்கரர் உலக சம்பிரதாயத்தையும் மீறாமல், அதே சமயத்தில் தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில், தன் வீட்டுக்கருகில் கட்டைகளை அடுக்கி தன் யோகசக்தியால் வலது கையிலிருந்து அக்னியை உண்டு பண்ணி அதனால் தாயாரின் தகனக்கிரியைகளை செய்து முடித்தார்.

பத்மபாதரது தீர்த்தயாத்திரை: ஒரு நாள் பத்மபாதர் குருவிடம், தீர்த்தயாத்திரை செல்ல அனுமதி கேட்டார். சங்கரர் யாத்திரையின் சிரமங்களைக் கூறி யாத்திரையினால் சன்னியாசியின் நெறிமுறைகளைக் கடைபிடிப்பது இயலாது என்றும் உபதேசித்தார். பத்மபாதர் நிர்பந்தம் செய்யவே சங்கரர் அனுமதி கொடுத்தார். குருவினிடம் அனுமதி பெற்று பத்மபாதரும் தீர்த்தயாத்திரைக்கு புறப்பட்டார். சிருங்கேரியிலிருந்து கிளம்பிய பத்மபாதர் காளஹஸ்தி, காஞ்சி முதலிய தலங்களில் தரிசனம் செய்து கொண்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். அங்கு அவருடைய தாய்மாமன் வீட்டில் தங்கினார். அந்த தாய்மாமன் பிரபாகர் என்பவருடைய கொள்கைகளைப் பின்பற்றுபவர். அதைக் கண்டித்து சங்கரரால் எழுதப்பட்ட நூலுக்கு பத்மபாதர் அழகான உரை எழுதியிருந்ததைக் கண்டு தாய்மாமன் வருந்தினார். ஆனால் அதை தாய்மாமன் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு முறை பத்மபாதர், தன் மாமனிடம் தான் ராமேஸ்வரம் போய்வர உத்தேசித்திருப்பதாகவும், அதுவரை தன்னால் இயற்றப்பட்ட நூலைப் பாதுகாக்கும்படியும் சொல்லிவிட்டு புறப்பட்டார். தன் கொள்கைக்கு விரோதமாக இருந்த நூலை ஒழிக்க எண்ணிய மாமன், அவர் வீட்டிற்கே தீ வைத்து எறித்து விட்டார். ராமேஸ்வர யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய பத்மபாதர் தனது நூலைத் தரும்படி மாமனிடம் கேட்டார். தற்செயலாக வீட்டில் நெருப்புப் பிடித்து எரிந்ததில் அந்த நூலும் போய்விட்டது என்று மிகவும் வருத்தப்பட்டவற்போல் கூறினார். இதைக் கேட்டு முதலில் வருத்தமுற்றாலும் மறுபடியும் அந்த நூலை எழுதப்போவதாக பத்மபாதர் கூறினார். இதைக்கேட்டு பயந்த மாமன், பத்மபாதர் மறுபடியும் எழுதாமலிருப்பதற்காக உணவில் விஷத்தை சேர்த்துக் கொடுத்துவிட்டார். புத்திக் கலக்கம் அடைந்த பத்மபாதருக்கு மறுபடியும் எழுதமுடியாமல் போய்விட்டது. இதனால் மிகவும் வருந்தினார்.

சங்கரர் தாயாரின் இறுதி சடங்குக்காக கேரளத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார் பத்மபாதர் . எல்லா விவரங்களையும் குருவிடம் தெரிவித்து, புத்தகம் எரிந்து போனதையும் மறுபடியும் எழுதமுடியாமல் புத்தி கலங்கியிருப்பதையும் கூறி கதறினார். இதைக் கேட்ட சங்கரர், கர்மாவின் போக்கு விசித்திரமாய் இருக்கிறது. ஆனாலும் புத்தகம் எழுதியவுடன் நீ என்னிடம் வாசித்து காட்டிய பகுதி மாத்திரம் என் ஞாபகத்தில் இருக்கிறது. அதைச் சொல்கிறேன் எழுதிக்கொள் என்று கூறி சமாதானப்படுத்தினார். இவ்வாறு சங்கரர் கூறி பத்மபாதர் எழுதி வெளிவந்தது தான் பஞ்சபாதிகை என்ற நூல்.

திக் விஜயம்

காலடியை விட்டு கிளம்பிய சங்கரர் சிருங்கேரியை அடைந்தார். பின் தன் சீடர்கள் புடைசூழ திக்விஜயம் செய்ய ஆரம்பித்தார். முதலில் ராமேஸ்வரம் சென்றார். ராமநாதரைப் பூஜித்துப் பின் பாண்டிய சோழ நாட்டு வழியாக காஞ்சிபுரம் வந்தடைந்தார். அங்கு பழக்கத்திலிருந்த தந்திர வழிமுறைகளை மாற்ற விரும்பி, சாக்தர்களை வென்றார். காமாட்சி அம்மனுக்கு ஒரு ஆலயத்தை நிறுவச் செய்து அங்கு ஸ்ரீசக்கரத்தை ஸ்தாபித்து, அம்பாளின் உக்ர கலையை சாந்த கலையாக மாற்றினார். அங்கு நடந்து கொண்டிருந்த தாந்திரீக பூஜை முறையை மாற்றி வைதீக பூஜை நடந்துவரும்படி ஏற்பாடு செய்தார். காஞ்சியில் ஒரு மாதகாலம் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்தார். கர்நாடகம் சென்று அங்கு காபாலிகர்களையும், பாஷாண்டர்களையும் வாதில் வென்று, கோகர்ணம் சென்று சமுத்திர ஸ்நானம் செய்து பரமேஸ்வரனை பூஜித்தார். அங்கிருந்த சைவ ஆச்சாரியாரான நீலகண்டரை வென்று அத்வைதத்தை ஏற்கச் செய்து யாத்திரா மார்க்கமாக சௌராஷ்டிரம் வழியாக துவாரகையை வந்தடைந்தார். அங்கிருந்த வைஷ்ணவர்களை திருத்திவிட்டு உஜ்ஜைனி சென்றார். அங்கு பட்டபாஸ்கரர் என்பவரை வாதில் வென்று, ஜைனர்களால் எதிர்க்கப்பட்டார். ஆனால் அவர்களுடைய வாதங்கள் சங்கரர் முன் எடுபடவில்லை. இதுபோல் நவகுப்தர் என்ற சாக்கரும், சங்கரரிடம் தோற்றார். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் சங்கரர் மேல் பகந்தரம் என்ற வியாதி உண்டாகும்படி செய்தார். இந்நிலையில் தோடகர் சங்கரருக்கு நல்ல பணிவிடை செய்தார். பத்மபாதரின் மந்திர சக்தியால் அந்த நோய் சங்கரரை விட்டு நீங்கி நவகுப்தரை தாக்கிற்று.

பிறகு தனது யாத்திரையைத் தொடர்ந்து இமயமலையை அடைந்தார். அங்கு தனது குருவின் குருவான கௌடபாதரை தரிசித்து அவரிடம் தான் செய்துவரும் அத்வைத மதம் பிரசாரத்தைத் தெரிவித்தார். அதைக் கேட்டு சந்தோஷமடைந்த கௌடபாதர், நான் எழுதிய மாண்டூக்ய உபநிஷத் உரைக்கு நீ ஒரு விளக்கம் எழுதியிருப்பதாக உனது குருவும், எனது சீடருமாகிய கோவிந்தபகவத்பாதர் மூலம் கேள்விப்பட்டேன். அதற்காக உன்னை அனுக்ரஹிப்பதற்காகவே இங்கு வந்தேன் என்று சொல்லி சங்கரரை ஆசிர்வதித்துவிட்டு மறைந்தார்.

சர்வக்ஞபீடம் அமர்தல்: சங்கரர் இமயமலையில் கங்கை கரையில் தன் சீடர்களுடன் தங்கிவந்தார். அப்போது காஷ்மீரத்தில் அன்னை சாரதா தேவியின் ஆலயம் உள்ளது. அங்கு ஒரு சர்வக்ஞபீடம் இருக்கிறது. இதில் எல்லாம் அறிந்த சர்வக்ஞன் மட்டுமே அமர முடியும். அதன் நான்கு பக்கங்களிலும் நான்கு வாசல்கள் உண்டு. வடக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளிலிருந்து அறிஞர்கள் வந்த அந்தந்த கதவுகள் திறந்தபடி உள்ளன. ஆனால் தெற்குப் பக்கத்திலிருந்து ஒருவரும் வராததால் தெற்குவாசல் மட்டும் மூடப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டார். உடனே சங்கரர் தென்திசை கதவு வழியாக அக்கோயிலுக்குள் நுழைய வேண்டுமென்று, அக்கோயிலை நோக்கிச் சென்றார். அவர் தெற்கு வாயிலை அடைந்தார். அங்கு பல மதங்களைச் சேர்ந்த அறிஞர்களை தம்முடைய வாதத்திறமையால் வென்றார். தென்திசைக் கதவு திறக்கப்பட்டது. சங்கரர் பத்மபாதருடன் உள்ளே நுழைந்தார். சங்கரர் அங்கிருந்த சிம்மாசனத்தில் உட்காரப் போனார். அப்பொழுது சரஸ்வதி தேவியின் குரல் கேட்டது. இந்த சிம்மாசனத்தில் உட்கார சர்வஞ்ஞராக இருந்தால் மட்டும் போதாது, சர்வசுத்தி உடையவராகவும் இருக்க வேண்டும் என்றாள் சரஸ்வதி. அதற்கு சங்கரர், பிறந்ததிலிருந்து நான் ஒரு பாவத்தையும் அறியேன். நான் சர்வசுத்தன் என்றார். இதைக் கேட்டு சரஸ்வதி மகிழ, சங்கரர் சர்வஞ்ஞ பீடத்தில் ஏறி அமர்ந்தார். அதிலிருந்து அவர் ஜகத்குரு என அழைக்கப்பட்டார்.

சங்கரர் நிறுவிய மடங்கள்: அத்வைத தத்துவத்தைப் பிரசாரம் செய்வதற்காக சங்கரர் இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்கள் நிறுவினார். அவருடைய நான்கு முக்கிய சீடர்களே இந்த நான்கு மடங்களின் முதல் பீடாதிபதி ஆனார்கள். கிழக்கே பூரி ஜெகந்நாத்தில் ரிக்வேத ப்ரதானமாக கோவர்த்தன மடத்தை நிறுவி அதன் பீடாதிபதியாக பத்மபாதரை நியமித்தார். தெற்கே சிருங்கேரியில் யஜுர் வேத ப்ரதானமாக சாரதா மடத்தை நிறுவி சுரேஷ்வராச்சாரியாரை பீடாதிபதியாக்கினார். மேற்கே துவாரகையில் சாமவேத ப்ரதானமாக ஒரு மடத்தை நிறுவி ஹஸ்தமாலாகாவை பீடாதிபதியாக நியமித்தார். வடக்கே பத்ரியில் அதர்வண வேத ப்ரதானமாக ஜோதிர் மடத்தை நிறுவி தோடகாச்சாரியாரை பீடாதிபதியாக நியமித்தார். கயிலாயத்தில் இருந்து தான் கொண்டு வந்திருந்த சந்திரமவுலீஸ்வர ஸ்படிக லிங்கத்தையும், ரத்னகர்ப கணபதி விக்ரகத்தையும் சுரேச்வரரிடம் கொடுத்து பூஜித்து வரும்படியும், துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகளுக்கும் மேலான சாரதாபரமேஸ்வரியை ஆராதித்து வரும்படியும் ஏற்பாடு செய்தார். சுரேச்வரரைத் தொடர்ந்து இந்தப் பணியை சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த மடாதிபதிகள் பூஜித்து வருகின்றனர். சங்கரரால் ஏற்றிவைக்கப்பட்ட ஜோதி சிருங்கேரியில் இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

சங்கரரின் கயிலைப் பயணம்

சங்கரர் சில சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு பத்ரி சென்றார். அங்கு சிலகாலம் தங்கியிருந்து அத்வைத தத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார். சிலகாலம் பத்ரியில் வசித்துவிட்டு கேதாரம் அடைந்தார். அங்குள்ள கடும் குளிரை அவரது சீடர்களால் தாங்கமுடியவில்லை. மிகவும் சிரமப்பட்டனர். சங்கரர் சிவபெருமானைப் பிரார்த்தனை செய்ததால், அங்கு ஒரு வெந்நீர் ஊற்று தோன்றியது. இன்றும் அந்த ஊற்றை நாம் காணலாம். சிவபெருமானின் அவதாரமாகிய சங்கரர் தமது 32வது(கி.பி.788-820) வயதை அடைந்தார். தமது அவதார நோக்கம் பூர்த்தியாகிவிட்டதையும், தமது ஆயுள் முடிந்துவிட்டதையும் உணர்ந்து சங்கரர் தனது உடலை தியாகம் செய்ய எண்ணினார். அப்போது தேவர்கள் பூமாரி பொழிந்து சிவபெருமானின் பெருமைகளைப் பாடினார்கள். சிவனது வாகனமாகிய காளையும் வந்தது. சங்கரர் காளையில் அமர்ந்து கைலாயம் சென்றார். இமயமலையில் சுமார் 11, 750 அடி உயரத்தில் கேதாரநாத்தில் ஆதிசங்கரர் பூவுலகில் இருந்து மறைந்த இடத்தில் ஸ்ரீசங்கராச்சாரியகைவல்யதாமா என்ற பெயரில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

அத்துவைதத் தத்துவங்கள்: வேதங்களை நன்கு ஓதியவர், பாவமற்றவர், ஆசையற்றவர், பிரம்மத்தை அறிந்தவர் இவர் தான் உண்மையான ஆசாரியன். இத்தகைய ஆசாரியனைப் பக்தியுடன் வணங்கி, அவருக்குத் தொடர்ந்து தொண்டு செய்து கொண்டு வந்தால், சீடன் ஆத்ம ஞானத்தை அடைவான். கண்ணாடி போன்று மனது சுத்தமானால், அதில் ஞானம் பிரகாசிக்கும். ஆகையால் சித்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்.
நல்ல அறிவொளி பெற்ற யோகி ஞானக்கண் கொண்டு, புவனம் அனைத்தையும் தன்னுள்ளே பார்க்கிறான். எதையும் ஆத்மாவாகக் காண்கிறான். அமைதியான மனநிலையிலிருந்து அறிவு பிறக்கிறது. அறிவின் காரணமாக இந்திரிய போகங்களிலிருந்து விடுதலை பெறுகிறோம். இதன் காரணமாக ஆத்மஞானம் உண்டாகிறது. இதன் காரணமாக சாந்தி பிறக்கிறது. நாமும் பிரம்மமும் வேறில்லை என்கிற சரியான ஞானத்தின் காரணமாக நாம் ஜனன, மரண பிடியிலிருந்து விடுபடுகிறோம். சத், சித், ஆனந்தமாக உள்ள ஆத்மாவை, தொடர்ந்து சாதகத்தின் மூலமாகத்தான் அடைய முடியும். ஆகவே ஞானம் வேண்டுவோர் பிரம்மத்தையோ, ஆத்மாவையோ நீண்ட நேரம் தியானம் செய்ய வேண்டும்.

எப்படி ஒரு விளக்கு ஒரு ஜாடிக்கோ, சட்டிக்கோ பிரகாசம் கொடுக்கிறதோ, அதே போன்று ஆத்மா ஒன்றுதான் நம் மனது, இந்திரியங்கள் முதலியவற்றுக்கு பிரகாசம் கொடுக்கிறது. ஒரு எரியும் விளக்கைப் பார்க்க இன்னொரு விளக்கு தேவையில்லை. அதே போன்று, ஆத்மாவே சுயம் பிரகாசமானதால் அது தெரிய இன்னொரு பிரகாசம் தேவையில்லை. சங்கரர் சொல்கிறார், எத்தனையோ சாத்திரங்களில் சொல்லப்படும் உண்மையை நான் அரை சுலோகத்தில் சொல்லி உங்களுக்கு விளக்க வைக்கிறேன் என்று. அந்த ஸ்லோகம் என்ன தெரியுமா! பிரம்மம் தான் சத்தியம். ஜகத் மித்யை. ஜீவன் பிரம்மத்தைத் தவிர வேறில்லை.
பால லீலை-3

தினந்தோறும் சங்கரரின் தாய்  ஆர்யாம்பாள் குளிப்பதற்கு வெகுதொலைவில் உள்ள பூர்ணா நதி சென்று நீராட வேண்டியிருந்தது.  இதனால் மிகவும் சிரமப்படுவதாக எண்ணிய சங்கரர் நதி தேவதையைப் பிரார்த்தித்தார். உடனே அந்த நதி பராசக்தியின் உத்தரவின் பேரில் தன் திசையை மாற்றிக் கொண்டு சங்கரரின் வீட்டிற்குப் பக்கத்தில் ஓட ஆரம்பித்தது. (இந்த நதி தான் தற்போது காலடியருகில் ஓடும் பூர்ணா நதி). இதைக் கண்ட மக்கள் அனைவரும் வியப்புற்று தங்களுக்கு ஒரு மகான் கிடைத்துவிட்டதாக எண்ணி ஆனந்தம் அடைந்தனர். சங்கரரின் பெருமையை கேள்விப்பட்ட கேரள தேசத்து அரசன் ஒரு சமயம் யானை முதலிய காணிக்கைகளுடன் தன் மந்திரியை சங்கரரிடம் அனுப்பினார். இது கண்ட சங்கரர் பிரம்மச்சாரியான தனக்கு இது ஒன்றும் தேவையில்லை என்று கூறி காணிக்கைகளைத் திருப்பி அனுப்பிவிட்டார். இதைக் கேட்ட அரசன் தானே சங்கரரின் இருப்பிடத்திற்கு வந்து அவரை வணங்கி சந்தோஷம் அடைந்தான். பதினாராயிரம் பொன்களையும், தான் இயற்றிய மூன்று நாடகங்களையும் சங்கரருக்கு சமர்ப்பித்தார். நூல்களின் பெருமையைப் பாராட்டிய சங்கரர் அரசனைப் பார்த்து இந்த பொன் எனக்கு அவசியமில்லை. உன் ராஜ்யத்தில் உள்ளவர்க்கே கொடுப்பாய் என்று சொன்னார். தனக்கு நற்குணங்கள் நிறைந்த புதல்வன் பிறக்க வேண்டும் என்று அரசன் வரம் கேட்க, புத்திரகாமேஷ்டி யாகம் செய்து புத்திரனை பெறுவாய் என்று சங்கரர் அனுக்ரஹித்தார். ஏழுவயதுக்குள்ளாகவே இவ்வளவு ஞானமும், வைராக்கியமும், தவமும் பெற்ற சங்கரர், உலகத்தை ரக்ஷிக்க அவதரித்த பரமேஸ்வரரின் அவதாரம் தான் என்பதை நாம் அறியலாம்.

துறவறம்: ஒருநாள் உபமன்யு, ததீசி, கௌதமர், அகஸ்தியர் முதலிய மாமுனிவர்கள் சங்கரரின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களை தகுந்த மரியாதையுடன் உபசரித்த ஆரியாம்பாள், எனது குழந்தை மிகச்சிறுவயதிலேயே மிகப்பெரிய வித்வானாகவும் செயற்கரிய செய்கை உடையவனாகவும் திகழக் காரணம் என்ன என்று அம்முனிவர்களிடம் கேட்டாள். அகத்தியர் சிவபெருமானே இந்த திருக்குழந்தையாக அவதாரம் செய்திருப்பதாகவும், பதினாறு வயதே இவன் ஆயுள். ஆனால் சில காரணங்களுக்காக வியாசரின் அருளால் மீண்டும் 16 ஆண்டு கிடைக்கும் என்று கூறி மறைந்தனர். இதைக்கேட்ட ஆர்யாம்பாள் மிக்க வருத்தமுற்றாள். சிறுவயதிலிருந்தே சங்கரருக்கு, உலகைத் துறந்து சன்னியாசி ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்குத் தம் அன்னையின் அனுமதியைக் கேட்டார். ஆனால் அதற்கு ஆர்யாம்பாள் அனுமதி தர மறுத்துவிட்டாள்.

ஒருநாள் குளிப்பதற்காக தாயுடன், சங்கரர் பூர்ணா நதிக்குச் சென்றார். அப்பொழுது ஒரு முதலை சங்கரரின் காலைப் பற்றிக் கொண்டது. சங்கரர் உரத்த குரலில், அம்மா! முதலை என்னை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. சன்னியாசி ஆக எனக்கு அனுமதி கொடு. அப்பொழுது தான் முதலை என் காலைவிடும் என்று சொன்னார். செய்வதறியாது தவித்த ஆர்யாம்பாள் சங்கரர் சன்னியாசியாகலாம் என்று அனுமதி கொடுத்தாள். உடனே சங்கரர் அதற்குரிய மந்திரங்களை சொல்லி துறவறம் மேற்கொண்டார். இதனால் முதலை சங்கரரின் காலை விட்டு விட்டது. பிரம்மாவின் சாபத்திற்கு உட்பட்ட ஒரு கந்தர்வன் தான் அந்த முதலையாக மாறியிருந்தான். சங்கரரின் கால்பட்டதும் சாபவிமோசனம் பெற்ற கந்தர்வன் சங்கரரை வணங்கி வாழ்த்தி விட்டு தன் இருப்பிடம் சென்றான். கரைக்கு வந்த சங்கரர் வீட்டிற்கு வராமல், துறவியாய் உலக சஞ்சாரம் செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் உன்னை கவனித்துக் கொள்வார்கள் என்றும் தாயிடம் கூறினான். அதற்கு தாய், என் கடைசிக்காலத்தில் நீயே வந்து எனக்கு இறுதிக்கடன்களை செய்ய வேண்டும் என்று கேட்க, அதற்கு சங்கரர் ஒப்புக் கொண்டு சன்னியாசம் புறப்பட்டார். அதற்கு முன் தாயார் வழிபாடு செய்வதற்காக பூர்ணாநதியின்  கரையில், தன் கைகளால் ஒரு கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். இதுவே தற்போது காலடியில் உள்ள திருக்காலடியப்பன் கோயிலாகும். இந்த சிலை குருவாயூர் கிருஷ்ணர் சிலையைப் போலவே "அஞ்சனா என்ற உலேகாத்தால் ஆனது.

குரு கோவிந்தபாதர்

காலடியிலிருந்து சன்னியாசிகளுக்கு உரித்தான காவி உடையில் இருந்த சங்கரர் ஒரு குருவைத் தேடிப் பாதயாத்திரை சென்றார். பல மாதங்களுக்குப் பின்னர் சங்கரர் நர்மதைக் நதிக் கரைக்கு வந்தார். அங்கிருந்த ஒரு குகையில் மிகப்பெரிய ஞானியான கோவிந்தபாதர் வசித்து வந்தார். ஆதிசேஷனின் அவதாரமாகிய அவரை சங்கரர் வணங்கி, தம்மை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். கற்று உணர்ந்ததை எல்லாம், அனைவரும் ஏற்கும் அளவுக்கு, எளிமையாக எடுத்துக் கூறும் திறனைப் பெற்றதோடு, மாற்றுக் கருத்துக்களுக்கும், முழுமையடையாத சித்தாந்தங்களுக்கும், முதிர்ச்சி பெறாத போதகர்களுக்கும் எதிராக வாதமிட்டு அத்வைத தத்துவத்தை நிலைப்பிக்கும் திறமையையும், குருவருளால் ஆதிசங்கரர் விரைவிலேயே பெற்றார்.

முதல் சீடர் பத்மபாதர்: குருவின் விருப்பபப்படி சங்கரர் காசிக்குச் சென்று கங்கையின் புனித நதிக்கரையில் தங்கினார். வேதங்களையும், உபநிடதங்களையும் கற்க எத்தனையோ சீடர்கள் இவரை வந்தடைந்தனர். சில காலம் காசியில்  தங்கியிருந்து விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதும், சீடர்களுக்கு வேதபாடம் சொல்லிக் கொடுப்பதுமாக இருந்தார். இவரை அடைந்த சீடர்களில் சனந்தனன் என்ற ஒரு சீடரும் இருந்தார். மிகச் சிறந்த அறிவாளி. ஒருநாள் இவர் கங்கையின் எதிர்க்கரையில் இருந்தார். வகுப்பு நேரம் நெருங்கி விட்டது, ஆற்றைக் கடக்க எண்ணிக்கொண்டிருக்கையில் கங்கையில் திடீரென்று வெள்ளம் ஏற்பட்டது. வகுப்பைத் தவறவிட்டு விடுவோமோ என்று கவலைப்பட்ட அவர், தன் குருவை மனதில் நினைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கினார். இவரின் குருபக்தியைப் பார்த்த கங்காதேவி, இவரின் பாதஅடிகளை தாமரை மலரால்(பத்மத்தால்) தாங்கிக் கொள்கிறது. அன்று முதல் இவர் பத்மபாதர் ஆனார். இவர் தான் சங்கரரின் முதல் சீடர். காசியில் இருந்தபோது சங்கரர் முக்கிய இறைநூல்களான பகவத்கீதை, பிரம்மசூத்ரம், உபநிடதங்கள் போன்றவற்றுக்கு பாஷ்யங்கள் (விளக்கவுரை) எழுதினார்.

விஸ்வநாதரின் திருவிளையாடல்

ஒருநாள் கங்கையில் நீராடி விட்டு, காசிவிஸ்வநாதரையும் தரிசித்து விட்டு, சங்கரர் தம் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சிவபெருமான், சங்கரரிடம் திருவிளையாடல் புரியத் தொடங்கினார். நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக அழைத்துக் கொண்டு ஒரு சண்டாளன்  (தீண்டத்தகாதவன்) உருவில் அவர் முன் தோன்றினார். அவனைப் பார்த்து சங்கரர், சண்டாளனே! விலகிப் போ என்றார். அதற்குச் சண்டாளன் சிரித்துக் கொண்டே, எதை விலகிப்போகச் சொல்கிறீர், இந்த சரீரத்தையா அல்லது அதன் உள்ளிருக்கும் ஆன்மாவையா. தாங்களோ எல்லோருக்கும் இரண்டும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை போதித்து வருகிறீர்களே! வேற்றுமை இல்லாத உங்களுக்கு இப்போது எப்படி இந்த வித்தியாசம் தோன்றியது? என்று வினவினார். இதைக் கேட்ட சங்கரர் எவன் இப்படி ஆத்மநிலையை அடைந்திருக்கிறானோ அவன் சண்டாளனாயிருந்தாலும் சரி, பிராமணனாக இருந்தாலும் சரி, அவனே என் குரு என்ற பொருள்பட மனீஷா பஞ்சகம் என்று போற்றப்படும் 5 ஸ்லோகங்களைப் பாடி சாஷ்டாங்கமாக சண்டாளன் காலில் விழுந்தார். உடனே சண்டாளன் மறைந்துபோய், ஜடை, மகுடம், சந்திரன் முதலியவைகளை அணிந்திருந்த காசி விஸ்வநாதர் நான்கு வேதங்களுடன் அவருக்கு தரிசனம் கொடுத்தார். வியாசமுனிவரின் பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதுக என்று கூறி விட்டு மறைந்தார்.

வேதவியாசரை சந்தித்தல்

சங்கரர் எழுதியிருந்த பிரம்மசூத்ர பாஷ்யத்தைப் பற்றி வாதிடுவதற்காக அதன் மூலநூலான பிரம்ம சூத்ரத்தை எழுதிய வியாசரே வயதான அந்தணர் வடிவில் சங்கரரைக் காண வந்தார். சங்கரர் தன் சீடர்களுக்கு பிரம்மசூத்ர விளக்கவுரையை கற்பித்துக் கொண்டிருந்தார். தம்மோடு விவாதிக்கும்படி கூறிய முதியவர், மூன்றாவது பிரிவின் முதலாவது சூத்திரமான ததனந்தரப்ரதிபத்தைள என்ற சூத்திரத்திற்கு என்ன உரை எழுதியிருக்கிறாய் என்று கேட்டார். சங்கரர் கூறிய விளக்கத்தைக் கேட்டு திருப்தியடைந்தார் முதியவர். இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சங்கரரின் சீடரான பத்மபாதர், பிரம்ம சூத்திரம் எழுதிய வேதவியாசர் தான் வந்துள்ளது என்பதை உணர்ந்தார். உடனே பத்மபாதர் இருவரின் காலிலும் விழுந்து, சங்கரரோ சிவபெருமானின் அவதாரம். வேதவியாசரோ சாட்சாத் நாராயணனே ஆகும். இந்த இருவரும் இப்படி விவாதித்தால் என்னைப் போன்ற வேலைக்காரன் என்ன செய்ய முடியும் என்று கேட்டார். வந்தவர் வியாசர் என்று தெரிந்ததும், சங்கரர் தம் விவாதத்தை நிறுத்தி, மிக்க மரியாதையுடன் அவர் காலில் விழுந்தார். வியாசர் அவரை மனம் குளிர ஆசிர்வதித்தார். என்னுடைய சூத்திரங்களுக்கு தகுந்த முறையில் அவைகளின் உட்கருத்தை நன்கு வெளிக்கொண்டு வரும் முறையில் உரை எழுதியிருக்கிறாய். எனவே நீ இந்த விளக்க உரையை உலகில் பிரசாரம் செய்வாயாக என்றும் கூறினார். அதுகேட்ட சங்கரர், தனக்கு ஏற்பட்ட ஆயுள் 16ம் முடிந்துவிட்டபடியால் கங்கையில் உள்ள மணிகர்ணிகா படித்துறையில் தம் உடலைத் தியாகம் செய்யப் போவதாக கூறினார். அதற்கு வியாசர் உலக நன்மைக்காக இன்னும் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது எனவே மேலும் 16 ஆண்டுகள் நீ பூமியில் வாழ்வாயாக! என்று வரம் கொடுத்து மறைந்தார். வியாசரின் அருளால் சங்கரரின் வாழ்காலம் இரட்டிப்பாக்கப்படுகிறது. பிறப்பில் விதிக்கப்பட்ட வெறும் 16 வயதுடன், பரம்பொருளை உலகிற்கு உணர்த்துவிப்பதற்காக இன்னும் 16 வயது சேர்த்து சங்கரரின் வயது 32 வயதானது.

குமரில பட்டரும், மண்டன மிஸ்ரரும்: வியாசரின் அறிவுரைப்படி இமயம் முதல் குமரி வரை பல ஊர்களுக்கும் சென்று அத்துவைத தத்துவத்தை பிரசாரம் செய்தார். பிரயாகை என்னும் ஊரில் குமரிலபட்டர் என்னும் பெரிய அறிஞர் இருந்தார். இவர் வேதங்களை முழுவதும் கற்றறிந்தவர். யாகங்கள் செய்வதிலும் வல்லவர் என்பதை அறிந்த சங்கரர் இவர் இருக்குமிடம் வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஒரு பௌத்தரைப் போல வேஷம் போட்டுக் கொண்டு, ஒரு பௌத்த மடத்தில் சேர்ந்தார் குமரிலபட்டர். அங்கு பாடம் கற்றுக்கொண்டிருக்கும் போது, ஒரு பௌத்த குரு வேதங்களை கண்டனம் செய்வதைக் கேட்டு மனம் தாங்காமல் அழுதார். இதைக் கண்ட  பௌத்த குரு, இவன் உண்மையான பௌத்தர் அல்லர் என்று அவரை ஓர் உயர்ந்த கட்டிடத்தின் மேல்மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார். வேதம் உண்மையாகில் என் உயிர் காப்பாற்றப்படட்டும் என்று கூறி கீழே விழுந்தும் ஒரு கண்ணை மட்டும் இழந்து உயிர் பிழைத்துக் கொண்டார். பௌத்த மதத்தை கண்டித்து நூல்களை இயற்றி, பௌத்த குருவிற்கு துரோகம் செய்ததற்கு பிராயச்சித்தமாக உமித்தீயில் தன் உடலை தியாகம் செய்ய எண்ணி தீயில் இறங்கிக் கொண்டிருந்தார். இதை அறிந்த சங்கரர், வேதத்தை பழிப்பவர்களை கண்டிக்க அவதாரம் செய்த முருகப்பெருமானே நீர் என்று அறிந்து கொண்டேன். எனது நூல்களுக்கு நீ தான் உரை எழுத வேண்டும் என்றார். தனக்கு அதில் விருப்பமில்லை என்பதை உணர்த்திய குமரிலபட்டர், நர்மதை நதிக்கரையில் உள்ள மகிஷ்மதி நகரில் மண்டனமிஸ்ரர் என்னும் வேதவிற்பன்னர் வசிப்பதாகவும், அவரோடு வாதிக்கும்படியும் கூறினார். குமரில பட்டருக்கு பிரம்ம தத்துவத்தை உபதேசம் செய்து விட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு சங்கரர் மகிஷ்மதி நோக்கிச் சென்றார்.

சரஸ்வதி முன்னிலையில் வாதம் செய்தல்

சங்கரரும், அவருடைய சீடர்களும் நர்மதை நதியில் நீராடிவிட்டு, மண்டன மிஸ்ரரின் வீட்டை அடைந்தார். அவரது வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. சங்கரர் தம் யோக சக்தியைக் கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே அவரது தந்தையாருக்கு திதி நடந்து கொண்டிருந்தது. திதி முடியும் வரை காத்திருந்த சங்கரர், மண்டன மிஸ்ரரை வாதத்திற்கு அழைத்தார். மண்டன மிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் மிகச்சிறந்த பண்டிதை. உபயபாரதியை நடுவராக நியமித்து இருவர் கழுத்திலும் மாலை இடப்படுகிறது. யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவர் போட்டியில் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. சங்கரர் தோற்றால் இல்லற வாழ்க்கையும், மண்டனமிஸ்ரர் தோற்றால் சன்னியாச வாழ்க்கையும் ஏற்க வேண்டும் என கூறப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாதம் நடைபெற்றபின் மண்டனமிஸ்ரரின் மாலை வாடத் தொடங்கியது. உபயபாரதி, தன் கணவராகிலும் மண்டனமிஸ்ரரே தோல்வியுற்றார் என அறிவித்தார். தான் தோல்வியுற்றதாக மிஸ்ரரும் ஒப்புக்கொண்டார். சங்கரர், அவருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சுரேஷ்வராச்சாரியார் என்ற பட்டத்தையும் கொடுத்தார். மண்டன மிஸ்ரர் பிரம்மாவின் அவதாரம், அவரது மனைவி உபயபாரதி சரஸ்வதியின் அவதாரம். சங்கரர் மிஸ்ரரை வென்ற பிறகு உபயபாரதி தான் சத்யலோகத்திற்குச் செல்வதாகக் கூறினாள். அதற்கு சங்கரர் வனதுர்கா மந்திரத்தால் அதை தடுத்து, தாங்கள் சித்ரூபிணியான பரதேவதை பக்தர்களின் நன்மைக்காக லக்ஷ்மி முதலான தேவதைகளாகவும் நீங்கள் விளங்குகிறீர்கள். நான் விரும்பும் சமயம் நீங்கள் போகலாம் என்று வேண்டவே அம்பிகையும் அதற்கு சம்மதித்தாள். சங்கரர் மீண்டும் சீடர்களுடன் யாத்திரையாகப் புறப்பட்டு மஹாராஷ்டிரம் சென்று அத்வைத தத்தவத்தை பிரசாரம் செய்தார்.
கனகதாரா ஸ்தோத்திரம்-2

குருகுலவாசம் செய்யும் காலத்தில் தினந்தோறும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்பணித்துவிட்டு பிறகு உண்பது சங்கரரது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஒரு ஏழை அந்தணர் அயாசகன் வீட்டு வாசலில் நின்று கொண்டு சங்கரர், பவதி பிக்ஷõம் தேஹி என்றார். ஒளிவீசும் முகத்துடன் திகழும் இந்த சிறுவனுக்கு கொடுக்கக் கூடியதாக தன்னிடம் ஏதுமில்லையே என்று  அந்த ஏழையின் மனைவி வருந்தினாள். பின் வீடு முழுவதும் தேடி, உலர்ந்து போன நெல்லிக்கனி ஒன்றை சங்கரருக்கு தானமாக அளித்தாள்.  இந்த கருணைச் செயல் சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது.  வறுமையில் வாடும் போதே தானம் கொடுக்கும் எண்ணம் கொண்ட இவளிடம் செல்வம் இருந்தால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த சங்கரர், அக்குடும்பத்தின் வறுமை நீங்க லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடித்துதித்தார். 19வது ஸ்லோகம் பாடி முடித்த போது அந்த ஏழையின் வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனியை நிரப்பி மகாலட்சுமி  பொன்மழை பொழிந்தாள். இந்த நிகழ்ச்சி ஒரு அட்சய திரிதியை நாளில் நடந்தது. (இதன் அடிப்படையில் தான் இப்போதும் கூட அட்சய திரிதியை நாளில் காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம் நடைபெறுகிறது) சங்கரர் ஏழு வயதிற்குள் எல்லா வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுமுடித்து குருகுலத்திலிருந்து தன் இல்லம் வந்து தன் தாய்க்கு பணிவிடை செய்து வந்தார்.

ஆதிசங்கரர் - 1

ஆதிசங்கரர் அவதாரம்-1

கி.பி. 4ம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர் வடக்குநாதரை வேண்டி கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். ஒருநாள் சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும் ஞானமும் கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு சிவகுரு, புத்திசாலி குழந்தைதான் வேண்டும் என்றார். சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து ஒரு ஞானக்குழந்தை தன் மகனாகப் பிறப்பான் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தாள். வைகாசி மாதம் பஞ்சமியன்று சூரியன், செவ்வாய், சனி, குரு ஆகிய நான்கு கிரஹங்கள் உச்சத்தில் இருக்கும் சுபவேளையில் இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தை இந்த பூமியில் அவதரித்தது. பிள்ளையில்லா தசரதனுக்கு மகாவிஷ்ணுவே ராமராக அவதரித்தது போல, சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு ஈசுவரனே குழந்தையாகப் பிறந்தது பெரும் பாக்கியமே. பிள்ளை பிறந்த மகிழ்ச்சியில் சிவகுரு தான தருமங்கள் செய்து சான்றோர்களுக்கு விருந்தளித்து கொண்டாடினார். சோதிடர்கள் இவன் ஒரு பெரிய ஞானியாவான் என்று கூறினார்கள்.

இளம் குழந்தையைச் சுற்றி நாகமொன்று சிறிது நேரம் விளையாடிய பின், விபூதியாகவும் ருத்ராட்சமாகவும் மாறியதாலும், உடலில் சிவச்சின்னங்கள் இருந்ததாலும் குழந்தைக்கு சங்கரர் என்று பெயர் சூட்டப்பட்டது. குறும்புக் கண்ணனைப் போலவே, குட்டிச் சங்கரரும் குழந்தை பருவத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம், ஏராளம். இரண்டு வயதிலேயே சங்கரர் எழுத்துக்களை வாசிக்க வல்லவரானார். படிக்காமலேயே காவியம் முதலியவற்றை அறிந்தார். குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போதே தந்தை சிவகுரு காலமானார். மிகவும் துக்கமடைந்த தாய் ஆர்யாம்பாள் உறவினர்களின் உதவியுடன் அவருக்கு பூணூல் போட்டு, தகுந்த குருவிடம் வேதம், சாஸ்திரம் முதலியவைகளை பயில சேர்த்து விட்டார். இவர் சிவனின் அவதாரமானதால் குருவால் கூறப்பட்டதையெல்லாம் ஒரு தடவையிலேயே புரிந்து கொண்டார். அத்துடன், அறிய வேண்டிய சகல முக்கிய சாஸ்திரங்களையும், இரு வருடங்களுக்குள்ளேயே கற்றுக் கொண்டார்.