திங்கள், 2 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 24 ॐ

இந்திரன் ஒருமுறை மிகவும் கொடுமை நிறைந்த ஒரு ராட்சசனை வதம் செய்ய முடியாமல் மகா விஷ்ணுவின் உதவியை நாடினார். மகாவிஷ்ணு அவனைச் சிதம்பரம் கோயிலுக்குப் போய் அங்கே ஆனந்த தாண்டவத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நடராஜரை ஆராதனை செய்து விட்டு அவர் உதவியை நாடும் படி சொல்ல அவன் தான் தனியாகப் போகாமல் மகா விஷ்ணுவையும் கூட வரும் படி வேண்டினான். அவ்வாறே சிதம்பரம் வந்த விஷ்ணு அவனுடைய ஆராதனைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு அல்லாமல் சிவனிடமும் இந்திரனுக்கு உதவும்படிக் கேட்டுக் கொள்ள அவரும் இந்திரனின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்து அவனுக்கு அந்த ராட்சசனைக் கொல்ல சக்தி கொடுத்து அருளுகிறார். அப்போதில் இருந்தே மகா விஷ்ணு சிதம்பரத்தில் தங்கி விட்டதாய் ஒரு புராணம் சொல்லுகிறது. இதற்கு உதாரணமாகத் தற்சமயம் கீழரதவீதியில் கிழக்குச் சன்னதிக்கு எதிரில் இருக்கும் "இந்திர புவனேஸ்வரர்" என்னும் லிங்கம் இருப்பதாயும் இந்த லிங்கத்தை இந்திரன் வழிபாட்டை ஆரம்பிக்கும் போது ஸ்தாபிக்கப் பட்டதாய்ச் சொல்கிறார்கள். (அடியேன் இன்னும் அந்த லிங்கத்தை பார்க்கவில்லை!)

மற்றொரு கதை : ஒரு சமயம் மகா விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம் திடீரென அவரின் உடல் எடை அதிகம் ஆகி ஆதிசேஷன் திணற ஆரம்பித்தான். ஸ்ரீ எனப்படும் மகா லட்சுமியும், விஷ்ணுவின் வாகனம் ஆன கருடனும் இந்த எடை அதிகரிப்பை உணர்ந்தனர். மகா விஷ்ணுவின் உடலில் வியர்வையும் அதிகம் ஆனது. வியந்த அவர்கள் பகவானிடம் காரணம் கேட்க அவர் சொல்கிறார் தாருகாவனத்தில் ரிஷிகளின் கர்வத்தை அடக்கத் தான் மோகினி அவதாரம் எடுத்ததையும் சிவன் பிட்சாடனராக மாறியதையும் இருவரும் ஆடிய நடனத்தையும் தான் நினைவு கூர்ந்ததாய்ச் சொல்கிறார். உடனேயே மகா லட்சுமியும், கருடனும் தாங்களும் அந்த அற்புத நடனத்தைப் பார்க்கவேண்டும் எனச் சொல்லவே விஷ்ணு தன் பரிவாரங்களுடன் வியாக்ரபுரம் என்று  அழைக்கப்பட்ட சிதம்பரம் வந்தடைகிறார்கள். அங்கே அவர் சிவனிடம் தன் வேண்டுகோளை வைக்க சிவன் அவரை முதலில் காஞ்சி சென்று அங்கே ஏகாம்பரநாதர் கோவிலில் ஒரு லிங்கத்தை ஸ்தாபிதம் செய்து பூஜித்து விட்டு வரும் படி சொல்கிறார். அவ்விதமே விஷ்ணுவும் காஞ்சி சென்று ஏகாம்பரநாதர் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஸ்தாபிதம் செய்து விட்டுத் திரும்புகிறார். சிவனுடன் தன்னுடைய ஆட்டத்தை ஆடி விட்டு இங்கேயே கோயில் கொள்ளுகிறார் விஷ்ணு. விஷ்ணு இங்கே கோயில் கொண்டதின் நோக்கம் சிவனின் தாண்டவத்தை எந்நாளும் தரிசிப்பதோடு அல்லாமல் சபாநாயகன் ஆன அவனுக்குத் துணையாக இருக்கவும் காவலுக்கும் தான் என்றும் தோன்றுகிறது. எவ்வாறிருப்பினும் பல்லவர்கள் காலத்தில் இருந்து இந்த கோவிந்தராஜர் தில்லையில் கோயில் கொண்டதற்குச் சரித்திரச் சான்றுகள் இருப்பதாய்க் கூறுகின்றனர். அதுபற்றிப்பாப்போம் நாளை பார்ப்போம்.

ॐ மீண்டும்நாளை சந்திக்கலாம் ॐ