சனி, 16 நவம்பர், 2024

வள்ளல்கள் இருவர்...

வள்ளல்கள் இருவர்...

கொடை வள்ளல் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கர்ணன்தான். ஆனால், அவன் வள்ளல் தன்மைக்கே சவால் விடும்படியாக செயற்கரிய செயல்புரிந்த இரு அடியவர்களைப் பற்றி அறியும்போது வியப்பாகத்தான் உள்ளது. யாருமே  செய்வதற்கு அஞ்சுகின்ற அச்செயலை, இறைவன் மீதும் இறை அடியார்கள் மீதும் கொண்ட தூய பக்தியின் நிமித்தம் செய்த அருளாளர்கள் இயற்பகை நாயனார் மற்றும் ஜலராம் பாபா.

இயற்பகை நாயனார்: சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில், வணிகர் குலத்தில் இயற்பகையார் அவதரித்தார். சிவபெருமானுக்கு அடிமை செய்தும், சிவனடியார்களுக்கு இல்லை என்னாது இனிது வழங்கியும், அடியார்கள் பணியை நிறைவேற்றுவதையே கொள்கையாகக் கொண்டு சிவப்பணி செய்து, இல்லாளோடு இனிதே இல்லறம் நடத்தி வந்தார். இயற்பகையாரின் கொடைச்சிறப்பை உலகிற்குக் காட்ட திருவுள்ளம் கொண்டான். திருச்சிற்றம்பலக் கூத்தன், பால் வெண்ணீறணிந்து, அந்தனர் வேடந்தாங்கி, பார்வதி மணாளன் இயற்பகையார் இல்லத்துக்கு வருகை புரிந்தான். அகமும், முகமும் மலர அவரை ஓடிச்சென்று வரவேற்றார் இயற்பகையார். அந்தணராக வந்த அரனார், சிவனடியார் வேண்டிய பொருள் எதுவாயினும் இல்லை என்னாது நீ கொடுப்பதை அறிந்து நாம் இங்கு வந்துள்ளோம். நாம் ஒரு பொருளை விரும்புகிறோம். நீ கொடுக்க உடன் பட்டால் நான் சொல்கிறேன் என்று கூறினார். என்னிடம் இருப்பவை அனைத்தும் இறைவனின் உடைமையே. அடியவர் பெருமானே! நீங்கள் கேட்கும் பொருள் என்னிடம் இருக்குமானால், உங்களுக்கு உடனே கொடுப்பேன். இது உறுதி என்று இயற்பகையார் கூற, வந்திருந்த வேதியர், அப்படியானால் உன் மனைவியை எனக்குக் கொடு என்று கேட்டார். இதைக் கேட்டதும் சீறி எழுந்தாரா நமது தொண்டர்? இல்லை. மாறாக, சிரித்த முகத்துடன், நீர் கேட்ட பொருள் என்னிடம் இருக்கிறது. இது இறைவன் தந்த பேறு. என்று மகிழ்ந்து, மனைவியிடம் சென்று நடந்ததைக் கூறினார். அம்மையாரும் முதலில் கலங்கினாலும், பின்பு தெளிவு பெற்றார். இயற்பகையாரின் சுற்றத்தாரால் தனக்குத் துன்பம் நேராவண்ணம் வழித்துணையாய் வரவும் தொண்டருக்கு ஆணையிட்டார் அந்õணர். என்ன விபரீதம்? மனைவியுடன் மாற்றான் செல்ல, பாதுகாப்பிற்குச் சென்றார் இந்த விநோத சிவத் தொண்டர். கேட்கக் கூடாததை வாய்கூசாமல் கேட்டு வேதியர் வேடம் தரித்த இறைவன் பெற்றுக்கொண்டது வேடிக்கையாய் உள்ளதென்றால், துறவி வேடம் பூண்டு மற்றொரு தொண்டனிடமும் இதையே யாசகமாய்  கேட்டுப் பெற்றான் இறைவன் என்று அறியும்போது வியப்பு இரட்டிப்பாகிறது.      

ஜலராம் பாபா: குஜராத்திலுள்ள வீர்பூர் கிராமத்தில் பிரதான் தாக்கர் என்ற வணிகருக்கு ராஜ்பாய் என்ற அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக அவதரித்தார் ஜலராம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஜலராமுக்கு தெய்வபக்தி அதிகம். அவருக்குப் பத்து வயது ஆனபோது அவர்கள் இல்லத்துக்கு ஒரு துறவி வந்தார். இரண்டாவது மகனைப் பார்க்க வேண்டும் என்று கூறினார். வீட்டுக் குள்ளிலிருந்து வெளியே வந்த ஜலராம், துறவியைக் கண்டான். உள்ளத்தில் ஒளிவெள்ளம் பாய, பரவச நிலையை அடைந்தான். புன்னகையுடன் துறவி, அவனை ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து சீதாராம், சீதாராம் என்று இடைவிடாமல் உச்சரிக்கத் தொடங்கினான் ஜலராம். என்னைப் பார்க்க வந்தவர் ராமதூதனான ஆஞ்சநேயர்தான் என்று பின்னாளில் ஜலாராம் குறிப்பிட்டுள்ளார். இல்லறத்தில் அவருக்கு விருப்பமில்லா விட்டாலும், பதினாறு வயதிலேயே அவருக்குத் திருமணம் செய்து வைத்து, வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ள கடைசியில் உட்கார வைத்தார்கள். ஆனால், அவர் மனம் வியாபாரத்தில் ஈடுபடவில்லை. எந்நேரமும் எதையோ பறிகொடுத்தவர் போல் காணப்பட்டார். சித்தப்பாவின் அறிவுரைப்படி பல புனிதத் தலங்களுக்கு மனைவியுடன் சென்று வந்ந்தார். ஃபதேபூர் என்ற இடத்தில் போஜலராம் என்ற மகானிடம் உபதேசம் பெற்றார். இருபது வயதில், அன்னதானத்தை ஏற்றுக்கொள்ள வந்த ஒரு துறவி, ஜலராமுக்கு தன்னிடமிருந்த ஒரு விக்ரகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். சிரத்தையாக அந்த விக்ரகத்தைப் பூஜை செய்து வந்த ஜலராம், அந்த விக்ரகத்தில் ஆஞ்சநேயர் பிரதிஷ்டை ஆன காட்சியைக் காணும் பேறு பெற்றார். ஒரு மாலை நேரம். ஜலாராமும் அவர் மனைவியும் ஆஞ்சநேயர் ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர். வாசலில் அம்மா என்ற குரல் ஒலித்தது. கணவனும் மனைவியும் வெளியே வந்து பார்த்ததுபோது, திண்ணையில் ஒரு துறவி, தோளில் துணிப்பை, கையில் தண்டத்துடன் இருந்தார்; மூச்சுவிடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். பசியாற உள்ளே அழைத்தனர் தம்பதியர். மறுத்த துறவி ஜலாராமைப் பார்த்து,
வயதானதால் என் வேலைகளைச் செய்துகொள்ள எனக்குச் சிரமமாக உள்ளது. உன் மனைவியை எனக்கு சேவை செய்ய என்னுடன் அனுப்புவாயா? என்று கேட்டார். ஜலராம் அதிர்ச்சியுறவில்லை. அவரது மனைவியோ, கணவனிடம் அனுமதிகூட கேட்காமல் அவருடன் புறப்பட்டாள். துறவி தோள் பை, தண்டம் சகிதம் அந்த இளம்பெண்ணுடன் புறப்பட்டுச் சென்றார். ஜலாராம் சோகம் சற்றுமின்றி ஆஞ்சநேய பூஜையைத் தொடர்ந்தார். மாதவருக்கு மனைவியை தாரை வார்த்துக் கொடுத்த மகிழ்ச்சி ஒருபுறம்; தம்மைப் பாதுகாப்பாக உடன்வர ஆணையிட்ட சந்தோஷம் மறுபுறம்.

இயற்பகையார் களிப்புடன் இல்லத்துக்குள் சென்று பொன்னாடை தரித்து, ஆயுதம் தாங்கினார். அக்னி சாட்சியாய் மணமுடித்த அன்பு மனைவி அன்னிய ஆடவனுடன் முன்செல்ல, அவர்களுக்குப் பாதுகாவலனாய் அருமைக் கணவன் பின்செல்ல, பயணம் தொடர்ந்தது. ஊர் முழுவதும் செய்தி பரவியது. தன் மனைவியை மாற்றனுடன் அனுப்பி வைக்கும் இயற்பகையாரை பித்தன் என்று ஏசியும், பிறன்மனை விழைந்த வேதியர் மீது ஆயுதங்கள் வீசியும் சுற்றத்தார்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அஞ்சி நின்ற அந்தணருக்கு அபயம் அளித்து, சுற்றி நின்று எதிர்த்தவர்களைத் தாக்கினார் இயற்பகையார். அந்தத் தாக்குதலில் பலர் மாண்டனர்.திருச்சாய்க்காடு என்னும் ஊருக்கு அருகில் வந்தவுடன் சிவனடியார் இயற்பகையாரை நோக்கி, இனி நீ திரும்பிச் செல்லலாம்! என்று கூறி விடை கொடுத்தார். விடைகொடுத்துச் செல்வது விடையேறும் பரமன் என்று அறியவில்லை அந்த பரமபக்தர். மிக்க மகிழ்ச்சியுடன் திரும்பிக்கூட பார்க்காமல் தனது இல்லம் திரும்பினார். அவரது அச்செயலைக் கண்டு நெகிழ்ந்த இறைவன், இயற்பகையானே! என்னை எப்போதும் மறவாதவனே! அன்புடையவனே! செயற்கரிய செயல் செய்தவனே! ஓலம்! என்று பலமுறை ஓலமிட்டு அழைத்தார். மறுக்கறு மறைஓலிட்டு மாலயன் தேட நின்றான் குரல் கேட்டு ஓடோடியும் வந்தார் இயற்பகையார். இறையடியார்க்கு இன்னல் ஏதேனும் வந்துவிட்டதோ என்றெண்ணி விரைந்து வந்தார். தொண்டரை மேலும் சோதிக்க எண்ணாத தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி, அவ்விடத்திலிருந்து மறைந்தருளினார். தம் மனைவியார் மட்டும் அங்கு நிற்பதை நாயனார் கண்டார். அப்போது, வானத்தின் மீது உமையம்மையுடன் சிவபெருமான் காளையூர்தியின் மீதமர்ந்து காட்சியளித்தார். இயற்பகையார் உணர்ச்சி மேலிட தரையில் வீழ்ந்து வணங்கினார். இவ்வுலகில் நீ செலுத்திய அன்புகண்டு மகிழ்ந்தோம். நீரும் உம் மனைவியும் நம்மிடம் வருக! என்று அருள் செய்ததோடு, இறந்த இயற்பகையாரின் சுற்றத்தார்க்கு வீரசுவர்க்கமும் அளித்தார் மறைபோற்றும் இறைவன்.

கணவனின் கட்டளைப்படி முனிவர் பின் சென்றார் இயற்பகையாரின் மனைவி என்றால், ஜலாராமின் துணைவியோ வந்திருந்த துறவியுடன்பதியின் ஆணைக்குக்கூட காத்திராமல் புறப்பட்டாள். இருவரும் ஊரைக்கடந்து அருகில் இருந்த ஒரு வனத்தை அடைந்தனர். ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் துறவி, வீர்பாயிடம் தனது தோளில் தொங்கிய பையையும் தண்டத்தையும் கொடுத்து விட்டு, இதை பாதுகாப்பாக வைத்திரு. நான் வரும் வரை இந்த இடத்தைவிட்டு நகரக் கூடாது என்று கூறிச் சென்றார். இரவு வந்தது. இருள் சூழ்ந்தது. ஆனால், துறவி வரவில்லை. வீர்பாய் பொறுமையாய் அமர்ந்திருந்தாள். அப்போது வானிலிருந்து, மகளே!  தணடத்தையும் பையையும் எடுத்துக்கொண்டு போய் உன் கணவனுடன் சேர்ந்து வாழ்வாயாக! உங்களைச் சோதிக்கவே இவ்வாறு செய்தேன் என்று அசரீரி ஒலித்தது. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள் வீர்பாய். அன்று முதல் ஜலாராமும் வீர்பாயும் இறைவனின் பரிசான அந்தப் பையையும் தண்டத்தையும் ஆராதித்து வந்ததோடு, அவர்கள் இல்லத்துக்கு வந்தவர்க்கெல்லாம் வயிறாற அன்னமிட்டு, நிறைவாழ்வு வாழ்ந்து இறைவனடி சேர்ந்தனர். இன்றும் ராஜ்கோட் மாவட்டத்திலிருக்கும் வீர்பூர் கிராமத்து ஆசிரமத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் ஜலராம் வணங்கிய ஆஞ்சநேயரையும், இறைவன் வீர்பாய்க்கு அளித்த தோள்பை மற்றும் தண்டத்தையும் தரிசித்துச் செல்கின்றனர். பூஜ்யத்துக்குள்ளிலிருந்து ராஜ்யம் நடத்துபவனைப் புரிந்து கொள்வது கடினம். புரிந்துகொண்டால்? அவன்தான் இறைவன்!

கருத்துகள் இல்லை: