புதன், 23 செப்டம்பர், 2020

ஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் அற்புத பலன்கள்

ஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் அற்புத பலன்கள் பற்றிய பகிர்வுகள் :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ஆஞ்சநேயர் பிறந்தநாள் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர். "ராமா" என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரத புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும் மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்.

அனுமன் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சார்த்தி ஆராதிக்க வேண்டும்.

சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். விரதமிருக்கும் நாட்களில் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை உணவு மட்டும் உண்டால், உன்னத பலன் கிடைக்கும்.

அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவத்து வழிபட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலையை அணிவிப்பவர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, தாராபலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம்.  அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம் போன்றவை அனுமனுக்குரிய நைவேத்தியங்களாக அமைகின்றன....

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

ராமானுஜர் பகுதி பத்து

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு பத்து

இன்றைய பதிவில் திருக்கச்சி நம்பிகள் பற்றிப் பார்க்கலாம்.

🌻🌺 திருக்கச்சி நம்பிகள்

சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில், 1009ம் ஆண்டு வீரராகவர்-கமலாயர் தம்பதிகள் வாழ்ந்தனர். திருமால் பக்தர்களான இவர்களுக்கு நான்காவதாக பிறந்தவர் 'கஜேந்திர தாசர்'. இவர் தான் பிற்காலத்தில் 'திருக்கச்சி நம்பிகள்' என்று பெயர் பெற்றார். கஜேந்திரதாசர் திருமாலின் மீது பக்தி கொண்டவராய் வளர்ந்து வந்தார்.

முதுமையை எய்தியதும் வீரராகவர், தன் பிள்ளைகள் நால்வருக்கும் சொத்தினை சமமாகப் பிரித்துக் கொடுத்தார். வைசியர்கள் என்பதால் செல்வத்தை மேலும் பெருக்கிக் கொண்டு செல்வந்தர்களாக வாழவேண்டும் என்று வீரராகவர் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை தந்தார். முதல் பிள்ளைகள் மூவரும் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்ந்தனர்.

கஜேந்திரதாசர் மட்டும் பணத்தைப் பற்றி எண்ணாமல் திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே காலத்தைக் கழித்தார். ஒரு நாள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகளின் கனவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வந்தார். "கஜேந்திர தாசரே! நந்தவனம் அமைத்து, பூக்களைப் பறித்து மாலையாக்கி நாளும் புஷ்ப கைங்கர்யம் செய்வாயாக! உனக்கு எம் அருளைப் பூரணமாகத் தந்தோம்!" என்று ஆணையிட்டார்.

பூவிருந்தவல்லியில் தந்தை கொடுத்த நிலத்தில் நந்தவனம் அமைத்தார் திருக்கச்சி நம்பிகள். பூக்களைப் பறித்து மாலையாக்கி, நடந்தே பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரம் சென்று வரதராஜருக்கு மாலை அணிவித்து அழகு பார்த்தார். பிறகு சில காலங்கள் கழித்து ஆலவட்டம் கைங்கரியம் செய்து வந்தார். திருக்கச்சி நம்பிகளின் மேலான தூய பக்தியை கண்டு பெருமாளே நேருக்கு நேர் அவருடன் பேசத் தொடங்கி விட்டார்

 இளையாழ்வானும் திருக்கச்சி நம்பியும் :-

அப்படி பூவிருந்தவல்லியில் இருந்து திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரம் நடந்து செல்கையில் இளையாழ்வான் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரிடம் பேசுவார். திருக்கச்சி நம்பிகள் பிராமணன் அல்லாதவர். அதனால் இளையாழ்வானுடன் ஓரளவுடன் மட்டுமே பழகுவார். இளையாழ்வானுக்கோ திருக்கச்சி நம்பிகள் மீது அதிக ஆர்வம். ஏனெனில், இறைவனுக்கே ஆலவட்டம் கைங்கரியம் செய்கிறார் அல்லவா?! அதுவும் இல்லாமல் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுடன் பேசுவார். அதனால் இளையாழ்வானுக்கு திருக்கச்சி நம்பிகளைக் கண்டாலே மரியாதை தானாக வந்துவிடும். சில காலங்கள் திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரத்திற்கு நடந்து வரும் பொழுது அவரைச் சந்திப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் இளையாழ்வான்.

 மோட்சம் உண்டா?

சில காலம் கழித்து, பூவிருந்தவல்லிக்கு வராமல், காஞ்சிபுரத்திலேயே தங்கி ஆலவட்டம் என்னும் விசிறி சேவை செய்யவும் செய்தார் திருக்கச்சி நம்பிகள். பெருமாளுடனேயே பேசும் சக்தி மிக்க திருக்கச்சி நம்பியின் பாதத்தூளியை (கால் தூசு) வணங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ஒரு அன்பர். அவர் ஒரு முறை நம்பிகளிடம், "சுவாமி! அடியேனுக்கு மோட்சம் உண்டா?" என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றார். பெருமாளும், "அவருக்கு மோட்சம் உறுதி"  என்று பதில் தந்தார். திருக்கச்சி நம்பிகள் பெருமாளிடம், "பெருமாளே! அடியேனுக்கும் மோட்சம் உண்டுதானே?"  என்று கேட்டார். பெருமாளோ அவரிடம், "அதெப்படி முடியும்! குரு பக்தியோடு சேவை செய்து, பாகவத அபிமானம் பெற்றால் தான் வைகுண்டம் போக முடியும்"  என்று பதில் தந்தார். மறுநாளே குரு ஒருவருக்கு சேவை செய்யும் எண்ணத்தில் ஸ்ரீரங்கம் கிளம்பினார் திருக்கச்சி நம்பி. அங்கு குருவாக இருந்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மாடுமேய்க்கும் வேலையாளாக சேர்ந்து விட்டார்.

 திருக்கோஷ்டியூர் நம்பிகள் உணர்தல்

ஒரு நாள் மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்த மாட்டிற்கு தன் ஆடையைப் போர்த்தி விட்டு தான் அதன் கீழ் படுத்துக் கொண்டிருந்தார். பசுக்கொட்டிலில் நடந்த இந்த நிகழ்வைக் கண்ட கோஷ்டியூர் நம்பிக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது. "தம்பி, ஏன் உன் ஆடையை பசுவுக்கு கொடுத்தாய்?" என்று கேட்டார்." மழையில் நனைந்தால் பசுவுக்கு சீதளம் உண்டாகும். அதன் பாலைப் பருகும் உங்களுக்கும் சீதளம் உண்டாகுமே. அதனால் தான் இப்படி செய்தேன்" என்றார்.

திருக்கோஷ்டியூர் நம்பி, இவர் மாடுமேய்ப்பவர் அல்ல, பரம ஞானி என்று உணர்ந்து கொண்டார். பிறகு ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியாரிடமும் சிஷ்யனாக சேர வேண்டும் என்று நினைத்தார் திருக்கச்சி நம்பிகள். அதுவும் நிறைவேறி விட்டது.

ஆளவந்தருடன் ஸ்ரீரங்கத்தில் தங்கி ஸ்ரீரங்கத்திலும் பெருமாளுக்கு விசிறி வீசும் தொண்டு செய்து வந்தார் திருக்கச்சி நம்பி. ரங்கநாதர் அவரிடம், "எனக்கு இங்கே காவிரிக்கரையோர காற்று சுகமாக வீசுகிறது. திருமலை (திருப்பதி) செல். அங்கு எனக்கு ஆலவட்டம் வீசு" என்று ஆணையிட்டார். எனவே திருக்கச்சி நம்பி, திருமலை சென்று வெங்கடேச பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தார். அங்கே பெருமாள், "எனக்கு எதற்கு விசிறி? இங்கே, மலைக்காற்று சுகமாக இருக்கிறது. காஞ்சிபுரம் செல், வரதராஜப் பெருமாளுக்கு இந்த சேவையைச் செய்" என்று அனுப்பி வைத்தார். அன்றிலிருந்து காஞ்சிபுரத்தில் ஆலவட்டம் வீசுவதையே கைங்கர்யமாகக் கொண்டிருந்தார் திருக்கச்சி நம்பிகள்.

அவரிடம் தான் இளையாழ்வானின் அன்னை காந்திமதி, பிரச்சினைகளைச் சொல்லி தீர்வு கேட்க இளையாழ்வானை அனுப்பி வைக்கிறார். இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகள் சந்திப்பு பற்றி நாளைய பதிவில் அறியலாம்.

மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே
வரதரின் அன்புத்தொல்லை பல வருடங்களுக்கு முன் காஞ்சி மாநகரம். அனைவரும் நெற்றி நிறைய திருமண் இட்டுக் கொண்டு வாய் நிறைய வரதனின் நாமங்களைப் பாடியபடிவரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரை சேவித்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள் நடுவே கஜேந்திரதாசர் என்ற திருக்கச்சிநம்பிகளும் ஞான ஜோதியாகபிரகாசித்தபடி இருந்தார் அவரது கைகளில்  அழகான  வேலைப்பாடுடன் கூடிய ஒரு  விசிறி இருந்தது ஆம் அந்த  வைணவப் பெரியவர் காஞ்சி  வரதனுக்கு ஆலவட்டக்கைங்கரியம்(பெருமானுக்கு  விசிறி  விடும்சேவை)செய்யவே கோயிலுக்குச் சென்று  கொண்டிருந்தார் உலகமே வரதனின் திருமுன்பு தன் மனதில் இருக்கும் பாரத்தைக் கொட்டுவார்கள். ஆனால்  அந்த  வரதன் ஆசை தீர பேசி மகிழ்வது இந்த மகானுடன்தான் அந்த அளவு பக்தியையும் புண்ணியத்தையும் உடைய உத்தமர் அவர்.இராமாயணத்தின் சபரியே கலியுகத்தில் தனது எளிய பக்தி நெறியை உலகிற்கு போதிக்க நம்பிகளாக அவதரித்தார் சென்ற ஜென்மத்தில் சபரியின் பக்திக்கு மயங்கி அவள் தந்த எச்சில் பழத்தைஉண்டபகவான், இந்த ஜென்மத்தில்அவரோடு பேசி மகிழ்வதில்வியப்பொன்றும் இல்லையே அன்பு என்ற ஓன்றை அவர் மேல் வைத்தால் தன்னையேதரும் தயாபரன் அல்லவா அந்த மாயவன் அன்பே உருவான நம்பிகள் கோயிலுக்குள் நுழைந்தார் எதேச்சையாக வலது பக்கம் அவரது பார்வை சென்றது அங்கு அவர் என்ன கண்டாரோ தெரியாது தன்னை மறந்து வலது பக்கமாக விழுந்து விழுந்து வணங்கத் தொடங்கினார் நம்பிகள் அவரது கண்களில் அருவியைப்போல நீர் வழிந்தபடீ இருந்தது நாராயணா வரதா என்று அவர் நா உச்சரித்து அருகில் இருந்தவர்கள் இதைக் கண்டு மலைத்துப் போனார்கள நம்பிகளிடம் சென்று சுவாமி இப்படி நீங்கள் ஆனந்தப் பரவசநிலையை அடையக் காரணம் என்ன எதைக் கண்டு இப்படி திக்குமுக்காடிப்போய் இருக்கிறீர்கள்  என்று கேட்டார்கள் அவர் தனது விரலை நீட்டி எதையோ காண்பித்தார் அங்கிருந்தவர்களுக்கு எதுவும் தெரியவில்லை புரியவுமில்லை அங்கே ஒன்றுமில்லையே சுவாமி உங்களுக்குத் தெரியவில்லையா அங்கு சங்கு சக்கரங்களைக் கையில் எந்திக் கொண்டு திருமகளாம் பெருந்தேவி தாயாரின் வலது கையைப் பற்றிக்கொண்டு தேவர்களும் முனிவர்களும் தொழ நமது தேவாதி தேவன் வரதன் உல்லாசமாக வலம் வந்து கொணடீருக்கிறார் பாருங்கள் பாருங்கள் அந்த திசையை வணங்கியபடியே சொன்னார் நம்பிகள் சுவாமி எங்களால் வரதனைக்காணமுடியவில்லை ஆனால் வரதனைக்கண்டு பேசி மகிழும் தங்களைக் கண்டதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம் என்றபடிஅனைவரும் அவர்பாதத்தில் விழுந்தார்கள் புரியதா கண்ணா இந்த திருக்கச்சிநம்பிகள் எம்பெருமான் வரதருடன் பேசி அவரைப் பார்த்துப் பழகிமகிழ்தவர் கடவுளோட பேசினவங்க இருக்காங்களானு தொடர்ந்து காலம்காலமா மக்கள் கேட்டுட்டுஇருக்காங்க இல்லையா ஒவ்வொரு காலத்துலயும் அதுக்கான வாழும் உதாரணங்களை அந்தப் பெருமாளே மக்களுக்கு காட்டிட்டு இருக்கார் இல்லையா மின்டும் தரிசிக்கலாம்
இன்னும் அனுபவிப்போம்...

திருக்கச்சி நம்பிகள் தனக்கு ஆச்சாரியாராக இசையாததால், அவரிடம் சில கேள்விகள் கொடுத்து அவற்றுக்கு பேரருளாளனிடமே பதில்கள் பெற்றுத் தருமாறு வேண்டி, அவர் மூலமாக பேரருளாளன் பணித்ததாக ஆறு வார்த்தைகள் பெற்றார் அவையாவன,

1. பரத்துவம் நாமே - நாமே சகலத்துக்கும் உயர்ந்த சத்தியமான மூலப்பொருள்.

2.. பேதமே தர்சனம். - ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் அவசியமான பேதம் உண்டு என்பதே உண்மையான தத்துவம்.

3. உபாயமும் பிரபத்தியே. - என்னை அடைய ஒரே நேரான வழி நம்மிடம் அடைக்கலம்.

4. அந்திஸ்மிருதியம் வேண்டா - இப்படி வாழ்பவன் உடல் உயிரை விட்டு பிரியும் காலத்தில் நம்மை துதி செய்ய அவசியம் இல்லை.

5. சரீர அவஸானத்திலே மோக்ஷம் - உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் அவன் என்னிடம் வந்து சேர்வான்.

6.பெரிய நம்பி திருவடிகளிலே ஆஸ்ரயி - பெரிய நம்பிகளை ஆச்சாரியராகக் கொள்

என்பவை இவ்வார்த்தைகள். பின் திருவரஙகம் பெரிய கோவிலில் உள்ள ஆளவந்தாரின் சீடர்களின் விருப்பத்தற்கிணங்க மதத்தலைவராக திருவரங்கம் செல்லும் வழியில் மதுராந்தகத்தில் ஏரி காத்த இராமர் திருக்கோவிலில் பெரிய நம்பியைக் சந்தித்தார். அந்த திருக்கோவிலிலேயே மகிழ மரத்தடியில் பெரிய நம்பி இராமானுஜருக்கு திருவிலச்சினை செய்து தன்னைவிட ஆளவந்தாரை ஆச்சாரியனாக கொண்டிருக்க வேண்டினார். பின் பெரிய நம்பியிடம் காஞ்சியில் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும், ஆளவந்தாரின் கருத்துகளையும் கேட்டறிந்து வந்தார். தனது மனைவியின் குணத்தினால் பெரிதும் துன்பமுற்ற இராமானுஜர், இல்லற வாழ்க்கையை விடுத்து திரிதண்ட சந்நியாசியாக தீட்சை பெற்றார். கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் இவரது பிரதம சீடர்களானார்கள். துறவிகளில் சிறந்தவராக விளங்கியதால் இவர் யதிராஜர் என்னும் திருநாமம் பெற்றார்.

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐


ராமானுஜர் பகுதி ஒன்பது

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஒன்பது




கங்கை யாத்திரை சென்றபோது கோவிந்தன் சொன்னதைக்கேட்டு தப்பித்துச் செல்கிறார்  இளையாழ்வான்.

🐚🐚 வேடுவன் வேடுவச்சி

இளையாழ்வான் வழி தெரியாமல், கால் சென்ற பாதையில் ஸ்ரீமந்நாராயணனை மனதில் தியானித்துக் கொண்டு செல்கிறார். இரவுப் பொழுதாகிவிட்டது. அப்போது ஒரு வேடுவ தம்பதியரைக் காண்கிறார். அவர்கள் பயங்கரமான தோற்றம் உடையவர்களாக இருந்தார்கள். இருந்தாலும் கண்களில் கருணை வெள்ளம் ததும்பி இருந்தது.

அவர்கள் யார் தெரியுமா?

இளையாழ்வான் யாருடைய மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே, யாரை நினைத்துக்கொண்டே சென்றாரோ அவர்கள் தான். உலகத்துக்கே படியளக்கும் காஞ்சி வரதராஜப் பெருமாளும், பெருந்தேவி தாயாரும் தான். இளையாழ்வான் வழி தெரியாமல் ஸ்ரீமந்நாராயணனை அழைத்துக் கொண்டே இருந்தார் அல்லவா?! தன்னை நம்பி தன்னுடைய திருநாமத்தை அழைத்த இளையாழ்வானுக்கு அருள் செய்ய வேண்டும் என்று நினைத்தார் பெருமாள். பெருந்தேவி தாயாருடன் தானும் அருள் செய்ய வந்துவிட்டார்.

"அவர்களிடம் சென்று காஞ்சிபுரம் போக வேண்டும். வழி தெரிந்தால் சொல்லுங்கள்" என்று கேட்கிறார். வேடுவனும் வேடுவச்சியும் "நாங்கள் அங்கே தான் செல்கிறோம். நீங்கள் எங்களுடன் சேர்ந்து வாருங்கள்" என்று சொல்ல, இளையாழ்வானும் அவர்களோடு நடந்து சென்றார். இருட்டு அதிகமாக இருந்ததால், பாதை தெரியவில்லை. இதனால் அனைவரும் இரவு தங்கிவிட்டு காலை எழுந்ததும் புறப்படலாம் என்று அங்கேயே படுத்து விட்டார்கள்.

அப்பொழுது வேடுவச்சி குடிக்க தண்ணீர் வேண்டும் என்று தன் கணவனிடம் கேட்கிறாள். உலக உயிர்களை எல்லாம் காக்கும் ஜகந்மாதா, தன் கணவனிடம் குடிக்க நீர் கேட்கிறாள். காஞ்சி வரதராஜரான வேடுவனோ தன் மனைவியிடம் "இங்கே ஒரு கிணறு இருக்கிறது. காலை எழுந்ததும் உனக்கு நீர் கொண்டுவந்து தருகிறேன்" என்று சொன்னார். இதைக்கேட்ட இளையாழ்வானோ, 'காலை விடிந்ததும் முதலில் இந்த பெண்ணிற்குக் குடிக்க நீர் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்' என்று மனதில் எண்ணிக் கொண்டு உறங்கிவிட்டார்.

காலை விடிந்ததும் இளையாழ்வான் அருகில் இருக்கும் கிணற்றில் நீர் கொண்டு வந்து, இரவு உறங்கிய இடத்தினைப் பார்த்தார். வேடுவன் வேடுவச்சியைக் காணவில்லை. அருகில் இருப்பவர்களிடம், "இது எந்த ஊர்?" என்று கேட்க, அவர்களோ "நீர் பிறந்த ஊரையே நீர் மறந்துவிட்டீரா? அதோபாரும், புண்ணிய கோடி விமானம் தெரிகிறது. அருகே கிணறு ஒன்று இருக்கிறது. இது சாலக்கிணறு. இங்கே காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாள் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார். நீர் அவரை உள்ளே சென்று சேவித்துவிட்டு வாரும்" என்றார்கள்.

இதைக்கேட்ட இளையாழ்வானுக்கு ஒரே திகைப்பு. வந்தவர்கள் வரதராஜரும், பெருந்தேவி தாயாரும் என்று உணர்ந்து கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். தரிசனம் செய்த பின் தன் அன்னை காந்திமதியிடம் சென்று யாத்திரையில் நடந்தவற்றையெல்லாம் கூறினார். காந்திமதியோ திருக்கச்சி நம்பிகளிடம் இதைப்பற்றி சொல்லி, அவர் சொல்லும் வழியைப் பின்பற்றுமாறு உரைத்தார். இந்த திருக்கச்சி நம்பிகள் யார் என்பதை நாளைய பதிவில் அறியலாம்
இன்னும் அனுபவிப்போம்...
🌷எதிராசர் வடிவழகு 🌷

பற்பமெனத் திகழ் பைங்கழல்
  உந்தன் பல்லவமே விரலும்

பாவனமாகிய பைந்துவராட
  பதிந்த மருங்கழகும்

முப்புரி நூலொடு முன்கையில்
  ஏந்திய முக்கோல் தன்னழகும்

முன்னவர் தந்திடு மொழிகள்
   நிறைந்திடு முறுவல் நிலாவழகும்

எப்போதும் கற்பகமே விழி கருணை
   பொருந்திடு கமலக் கண்ணழகும்

காரிசுதன் கழல் சூடிய முடியும்
   கனநற்சிகை முடியும்

எப்பொழுதும் எதிராசர் வடிவழகு
   என் இதயத்துளதால்

இல்லை எனக்கெதிர்
இல்லை எனக்கெதிர்
இல்லை எனக்கெதிரே!

🌸 ஸ்ரீ எம்பார் இயற்றிய எம்பெருமானார் வடிவழகு

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி.

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

ராமானுஜர் பகுதி எட்டு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு எட்டு

 இளையாழ்வானின் திருமண வாழ்க்கை

இளையாழ்வாருக்கு தஞ்சம்மாள் என்ற பெண்மணியுடன் அவரது 16வது வயதில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற ஒரு மாதத்திலேயே அவரது தந்தை அசூரிகேசவாச்சாரியார் இறந்துவிட்டார். இதனால், அவரது அன்னை காந்திமதி கவலையில் மூழ்கினார்.

🌻🌻 யாத்திரை புறப்படுதல்

இளையாழ்வானைக் கொல்ல வேண்டும் என்று அத்வைத ஆச்சாரியார் யாதவப் பிரகாசர் சதித்திட்டம் தீட்டியிருந்தார். அதை தன் சிஷ்யர்களுடன் கலந்து ஆலோசித்தார். வட நாட்டிற்கு கங்கை யாத்திரை போகலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

யாதவப் பிரகாசர் இளையாழ்வானை யாத்திரைக்கு வருமாறு அழைக்க இளையாழ்வானும் தன் அன்னையிடம் யாத்திரைக்குச் செல்ல அனுமதி வாங்கினார். இளையாழ்வானின் அன்னையோ "தந்தையை இழந்துவிட்டோம் என்று கலங்கிக் கொண்டிருக்கிறேன். இந்நேரத்தில் நீயும் என்னவிட்டு பிரிந்து செல்கிறாயா?" என்று கவலையுடன் கூறினார். இளையாழ்வான் தன் அன்னையை சமாதானப் படுத்திவிட்டு வடநாட்டிற்கு யாதவப் பிரகாசருடன் குழுவாக கங்கை யாத்திரை சென்றார். யாத்திரைக்கு இளையாழ்வானின் மருமகனான கோவிந்தனும் சென்றார்.

🌻🌻 கோவிந்தன் இளையாழ்வான் சம்பாஷணை

கங்கை யாத்திரை செல்லும் வழியில், யாதவப் பிரகாசரின் சில சீடர்கள் ஒன்றாக கூடி கூடி இளையாழ்வானை கங்கையில் தள்ளி விட்டு கொல்வது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இதனைக் கோவிந்தன் கேட்டுவிட்டார். உடனே, பதற்றத்துடன் இளையாழ்வானிடம் ஓடிச்சென்று "உங்களை இங்கே கங்கையில் தள்ளி விட்டுக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்கள். நீங்கள் உடனே வேறு எங்காவது புறப்பட்டுச் செல்லுங்கள். வேறு எங்கேயாவது சென்று உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்" என்று கூற, இளையாழ்வானும் புறப்படுகிறார்.

இளையாழ்வான் காடு, மலைகள் என எல்லாவற்றையும் கடந்து, பாதை எங்கே செல்கிறது என்று கூட தெரியாமல் நடந்தார். இரவுப் பொழுது வந்தது. இளையாழ்வானுக்கு வழி தெரியவில்லை.

அப்போது இளையாழ்வான் ஒரு வேடுவன், வேடுவச்சியைக் கண்டார். இளையாழ்வான் கண்டவர்கள் யார்? என்பதை நாளைய பதிவில் அறியலாம்.

நாளை மகாளய பட்சம் அமாவாசை 17.09.2020

இளையாழ்வார் என்றிருந்த கற்பகத்தை அற்புதன் செம்மை இராமானுசனாக ஆக்கி நாரயணனை காட்டிய வேதங்கள் களிப்புற செய்த நன்நாள் இன்று

மதுராந்தகத்திலே அன்றொருநாள் கிழக்கில் உதிக்கும் திவாகரனைவிடவும் மேலும் ஒளிபொருந்தியதாய் ஒரு ராமாநுஜ திவாகரன் அவதரித்த நன்நாள்
தெற்கே திருவரங்கத்திலிருந்து வந்த குணபூரணரான ஸ்ரீ பெரியநம்பிகளும் வடக்கே காஞ்சியிருந்து வந்த இளையாழ்வாரும் சக்ரவர்த்தி திருமகன் திருமுற்றத்திலே சேர
மந்திரம்கொண்டு மாமறை வேள்வி காத்தவன் திருமுன்பே வேள்வி வளர்த்து
பண்டைமாவலிதன் பெருவேள்வியில் அண்டமும் நிலமும் அடியொன்றினால் கொண்டவன் எம்பெருமான்.
இராமாநுஜன் என்னும் திருப்பெயர்பெற்று உடையவராய் இருநிலத்திற்கும் உடையவராய் திகழும்  எம்மிராமானுசன் உதித்த நன்நாள் இன்று..

ஆண்டுகள் நாள்திங்களாய் காத்துக்கிடந்தார்  இளையாழ்வார் தன்குருவை அடைய, அதேபோல இளையாழ்வாருக்கு உபதேசிக்க பலகாலம் காத்துக்கிந்த பெரியநம்பிகளும் ஆவணி மாத சுக்லபக்ஷத்திலே மதுராந்தகத்தில் சந்திக்க அங்கேயே இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் வைபவம் நடைபெற அடியேற்கு இன்று தித்திக்குமே என்னும்படியான நன்நாள் இன்று..

கே.13:−  இளையாழ்வார் என்னும் இராமானுஜரின் உடன் பிறந்தோர் எத்தனைப் பேர்? அவர்களின் பெயர்கள் என்ன?.

விடை:− இராமானுஜருக்கு இரண்டு இளைய சகோதரிகள் இருந்தார்கள்.
அவர்களது பெயர் பூமிநாச்சியார், கமலாம்பாள் என்பதாகும்.

கே.14:− இராமானுஜரின் சிற்றன்னையாகிய பெரிய பிராட்டியின் முதல் குழந்தைக்குப் பெயர் சூட்டியது யார்? என்ன பெயர் சூட்டினார்?

விடை:− பெரியபிராட்டியின் முதல் குழந்தைக்கு, "கோவிந்தன்" என்ற திருநாமத்தை,  தாய்மாமன் ஆகிய பெரிய திருமலை நம்பிகளே சூட்டியருளினார்.

கே.15:− குழந்தைக்கு அந்தப் பெயரிடக் காரணம் என்ன?

விடை:− சத் ஆத்ம குணங்களை உடைய அக்குழந்தை, சர்வ வித்தைகளிலும் தேர்ந்தவனாய், வைதிக பட்சத்தில் நிலை நிற்பான் என்கிற தீர்க்க த்ருஷ்டியால், இப்பெயர் இடப்பட்டது.

கே.16:− குழந்தை "கோவிந்தன்" யாருடைய அம்சம்? அவர் எப்போது அவதரித்தார்?

விடை:− குழந்தை "கோவிந்தன்" கருடனின் அம்சமாகும்.
அவர் இராமானுஜர் அவதரித்து எட்டு,ஆண்டுகளுக்குப் பின்னர், கலியுகம் 4127,  குரோதன ஆண்டு (1025ம் ஆண்டு), தைத்திங்கள், பௌர்ணமி திதி, திங்கட்கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.

கே.17:− இராமானுஜரின் சிற்றன்னையின் இரண்டாவது குழந்தையின் பெயர் என்ன? அவரது திருநட்சத்திரம் என்ன?

விடை:− இரண்டாவது குழந்தையின் பெயர் சிறிய கோவிந்தன் என்னும் சிறிய கோவிந்தப் பெருமாள் ஆகும்.
அவர் மாசிமாதம் அச்வினி நட்சத்திரத்தில் அவதரித்தார்

கே.18:− இளையாழ்வார் இராமானுஜர் இளமையில் யாரிடம் வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றார்? எந்த வயது வரை?

விடை:− இராமானுஜர், தமது தந்தை கேசவ சோமாயாஜியிடம், தமது பதினைந்தாவது வயது வரையிலும் வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்தார்.

கே.19:− இராமானுஜரின் கைங்கர்யங்களால் ப்ரீதி அடைந்த ஶ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள், இராமானுஜருக்கு இட்ட திருநாமம் என்ன?

விடை:−  "ஶ்ரீபூதபுரீசர்"

கே.20:− இராமானுஜரின் தங்கைகள் யாருக்கு வாழ்க்கைப் பட்டனர்?

விடை:− முதல் தங்கை பூமிநாச்சியார், புருஷமங்கலம் என்று கொண்டாடப்படுகின்ற மதுரமங்கலம் வாதூல கோத்ரம் அனந்த தீட்சிதருக்கும்,
இரண்டாவது தங்கை கமலாம்பாள், திருக்கச்சி நடாதூர் அக்ரஹாரம் ஶ்ரீவத்ஸ கோத்ரம், குருகைக் காவலப்பரின் திருக்குமாரர் மஹாதயாதீசருக்கும் வாழ்க்கைப்பட்டனர்.

கே.21:− இளையாழ்வார் இராமானுஜருக்கு எந்த வயதில் திருமணமானது?

விடை:− இராமானுஜருக்கு, அவரது 16வது வயதில், தஞ்சாம்பாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தேறியது.

கே.22:− இராமானுஜரின் திருத்தகப்பனார் எப்போது திருநாடு அலங்கரித்தார்? (பரமபதித்தார்?)

விடை:− இராமானுஜருக்குத் திருமணமான மறுமாதமே, அவரது திருத்தகப்பனார் பரமபதித்தார்.

கே.23:− திருத்தகப்பனாரின் மறைவுக்குப் பிறகு, இராமானுஜரையும், அவரது தாயையும் தேற்றிய இரு நம்பிகள் யார்?

விடை:− பெரிய திருமலை நம்பிகளும், திருக்கச்சி நம்பிகளும் இராமானுஜரையும், அவரது தாயையும் தேற்றினர்.

கே.24:− தந்தை மறைந்த சோகத்திலிருந்து விடுபட, இராமானுஜரும், அவரது தாயாரும் செய்தது என்ன?

விடை:− ஶ்ரீபெரும்புதூரை விட்டு, திருக்கச்சி என்னும் காஞ்சீபுரம் வந்து குடியேறினார்கள்.

கே.25:− இராமானுஜர் யாரிடம் தமது வேதாந்தக் கல்வியைத் தொடர்ந்தார்?

விடை:− "வேத விருட்சம்"  "வேத சாகரம்" என்றெல்லாம் தொண்டை மண்டலத்திலும், அண்டை மண்டலங்களிலும் புகழ் பெற்றவரான, காஞ்சிக்கு மேற்கே சுமார்
9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருப்புட்குழியின் "யாதவப்ரகாசர்" என்னும் அத்வைத வேதாந்தியிடம், தமது கல்வியை இராமானுஜர் தொடர்ந்தார்.

கே.26:− இராமானுஜர் கூடவே தங்கியிருந்து, உடன்சென்று, யாதவப்ரகாசரிடம், வேதாந்தக் கல்வியைப் பயின்றவர் யார்?.

விடை:− இராமானுஜரின் சிற்றன்னையின் முதல் புதல்வரான கோவிந்தன்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இன்னும் அனுபவிப்போம்.

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐


ராமானுஜர் பகுதி ஏழு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஏழு

🌺🌺 குருவை மிஞ்சிய சிஷ்யன்

சீடர்களுக்கு காலை நேரப் பாடங்களை போதித்த பின் எண்ணெய்க் குளியல் எடுக்க எண்ணினார். அந்தக் கால குருகுல வாசத்தில் சீடர்களே குருவுக்குத் தேவையான சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். குரு ஆணையிடுவார். சீடர்கள் மறுக்காமல் சிரம் மேற்கொண்டு செய்வர். எண்ணெய்க் குளியலுக்கு ஆச்சாரியாரின் பாதாதி கேசம் இளையாழ்வான் எண்ணெய் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு மாணவரும் உடனிருந்தார்.

மாணவன்: தேவரீர்! இன்று காலையில் தாங்கள் நடத்திய பாடத்தில் பொருள் விளங்கிக்கொள்ள சற்றுக் கடினமாக உள்ளது.

யாதவ பிரகாசர்: எந்தப் பாடம்?

மாணவன்: சந்தோக்ய உபநிடத்தில் ஆறாவது பகுதியில் வரும் ஏழாவது மந்திரம்.

யாதவ பிரகாசர்: எங்கே அந்த மந்திரத்தை ஒருமுறை கூறு.

மாணவன்: தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக -மேவமக்ஷிணி

யாதவ பிரகாசர்: இதில் உனக்கு என்ன சந்தேகம்?

மாணவன்: இதில் வரும் கப்யாசம் என்ற பதத்தின் பொருள் என்ன?

யாதவ பிரகாசர்: கப்யாசம் என்ற சொல்லை கபி + ஆசாம் என்று பிரி. கபி என்றால் குரங்கு என்று பொருள். ஆசாம் என்றால் பிருட்ட பாகம். அதாவது குரங்கின் ஆசனவாயானது தாமரையைப் போல மலர்ந்திருக்கும். அப்படிப்பட்ட சிவந்த கண்களையுடைய மகாவிஷ்ணு என்று பொருள்.

இந்த விளக்கத்தை இளையாழ்வான் கேட்கிறார். அவருக்கு ஒரே அழுகை. எம்பெருமானுடைய கண்களை குரங்கின் பிருட்டபாகத்துடன் ஆச்சாரியார் உவமை கூறியவுடன் தாங்க முடியாத துக்கம் இளையாழ்வானுக்கு. அந்தத் துக்கம் கண்களில் கண்ணீராக உடைத்துக் கொண்டு வந்தது. அப்படிப் பீறிட்டுக் கொண்டு வந்த கண்ணீர் சூடாக ஆச்சாரியாரின் தொடையில் பட்டது. ஆச்சாரியார் நிமிர்ந்து பார்க்கிறார். எம்பெருமானின் மீது இருந்த மாளாத காதல் காரணமாக இளையாழ்வான் அழுது கொண்டிருந்தார்.

யாதவ பிரகாசர்: இளையாழ்வானே, நான் அப்படி என்ன சொல்லி விட்டேன் என்று நீ அழுகிறாய்?

இளையாழ்வான்: மன்னிக்க வேண்டும் குருவே. எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நித்ய கல்யாண குணங்களைக் கொண்டவன். எனவே அவனுடைய கண்களைக் குரங்கின் பிருட்ட பாகத்துடன் தாங்கள் ஒப்பிட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

யாதவ பிரகாசர்: இது நான் கூறிய விளக்கமில்லை. வழி வழியாக பல ஆச்சாரியர்கள் கூறி வரும் விளக்கம். ஆதிசங்கரர் கூட இதற்கு இப்படித் தான் விளக்கமளிக்கிறார்.

இளையாழ்வான்: மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் விளக்கம் கூறட்டும். என் பிரபுவை நான் குறைத்து ஒப்பிட மாட்டேன்.

யாதவபிரகாசர்: அப்படி என்றால் இந்த செய்யுளுக்கு நீயே விளக்கம் கொடு.

இளையாழ்வான்: கப்யாசம் என்ற சொல்லை இப்படியும் பிரிக்கலாம். கம் + பீபதி + ஆசம். இதில் கப் என்றால் தண்ணீர் என்று பொருள். பிபதீ என்றால் குடித்தல் என்று பொருள். எனவே, இதனை "கம் ஜாலம் பிபதீ கபி: ஸுர்ய:" என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால் சூரியனால் மலர்ந்தது என்ற பொருள் வரும். எனவே, சூரியனால் மலரும் தாமரையைப் போன்ற கண்களை உடையவன் எம்பெருமான் என்ற அருமையான விளக்கம் கிடைக்கும்.

யாதவ பிரகாசர்: உன் இலக்கண அறிவு பளிச்சிடுகிறது. என்றாலும் நீ அத்வைதத்தை மறுக்கிறாயோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

இளையாழ்வான்: நான் அத்வைதத்தை மறுக்கவில்லை. சாஸ்திரத்திலுள்ள, வேதத்திலுள்ள உண்மையான ஒன்றைத்தான் சொன்னேன். மற்றவர்கள் வாய்க்கு வந்தபடி எல்லாவற்றையும் மறை பொருளாகக் கூறுகிறார்கள். நான் வேதத்தில் சொல்லப்படட்டுள்ளதையே இங்கு சொன்னேன்.

அவ்வளவுதான். யாதவப்பிரகாசருக்கு கோவம் தலைக்கேறிவிட்டது. அவரை தீர்த்துக்கட்டி முடித்துவிட வேண்டும் என்று எண்ணினார். அதற்கு ஒரு திட்டம் தீட்ட முடிவு செய்தார்.

இளையாழ்வானின் திருமண வைபவத்தைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

 வாழியெதிராசன் வாழியெதிராசன்

திருக்கோட்டியூர் நம்பி உடையவருக்கு அருளிய 18 வார்த்தைகள்

1, மோக்ஷத்தில் ஆசை உடைய ஜீவன், வாழ்க்கையில் ஆசையை துறக்க வேண்டும்.
2, வாழ்க்கையில் ஆசையை துறந்தால், அஹங்காரம் மமகாரம் நீங்கும்.
3, அஹங்காரம் மமகாரம் நீங்கினால் தேஹ அபிமானம் நீங்கும்.
4, தேஹ அபிமானம் நீங்கினால் ஆத்ம ஞானம் பிறக்கும்.
5, ஆத்ம ஞானம் பிறந்தால்
ஐஸ்வர்ய போகத்தில் வெறுப்பு ஏற்படும்.
6, ஐஸ்வர்ய போகத்தில் வெறுப்பு ஏற்பட்டால் எம்பெருமானிடம்  பற்று ஏற்படும்.
7, எம்பெருமானிடம் பற்று ஏற்பட்டால் மற்ற விஷய ஆசை நீங்கும்.
8, மற்ற விஷய ஆசை நீங்கினால்
பாரதந்த்ரிய ஞானம் உண்டாகும்.
9, பாரதந்த்ரிய ஞானம் உண்டானால் அர்த்த, காம , ராக துவேஷங்கள் நீங்கும்,
10, அர்த்த, காம , ராக துவேஷங்கள் நீங்கினால் ஸ்ரீ வைஷ்ணத்வம் கைகூடும்.
11, ஸ்ரீ வைஷ்ணத்வம் கைகூடினால்
சத்சங்கம் ஏற்படும்.
12, சத்சங்கம் ஏற்பட்டால்  பாகவத சம்பந்தம் ஏற்படும்.
13, பாகவத சம்பந்தம் ஏற்பட்டால் பகவத் சம்பந்தம் ஏற்படும்.
14, பகவத் சம்பந்தம் ஏற்பட்டால் மற்ற பலன்களில் வெறுப்பு ஏற்படும்.
15,  மற்ற பலன்களில் வெறுப்பு ஏற்பட்ட ஜீவன்  எம்பெருமானுக்கு அடிமை ஆவான்
16,  எம்பெருமானுக்கு அடிமையாகும் ஜீவன் , எம்பெருமான் ஒருவனை மட்டுமே சரணமடைவான்.
17, எம்பெருமான் ஒருவனை மட்டுமே
சரணமடைந்த ஜீவன், திருமந்திரத்தையும் அதன் பொருளையும் ஏற்க  தகுதி பெறுகின்றான்
18,  அவ்வாறு தகுதி பெற்ற அதிகாரிக்கே திருமந்திரம் கை புகுரும்.

ஆச்சார்யான் திருவடிகளில் சரணம் !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!


ராமானுஜர் பகுதி ஆறு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஆறு

இளையாழ்வானுக்கும் யாதகப்பிரகாசருக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை இன்று பார்க்கலாம்.

🌺🌺 குருகுலம்

யாதவப் பிரகாசர்: தைத்திரிய உபநிஷத்தில் "ஸத்யம், ஞானம், அனந்தம், பிரஹ்ம" என்ற முக்கியமான வாக்கியத்திற்கு அதிலுள்ள சொற்கள் பிரம்மம் ஒன்றையே பொருளாகக் கொண்டவை. பிரம்மம் ஒன்று தான். அதற்கு சொரூபம் இல்லை. அதனைப் பார்க்க முடியாது.

இளையாழ்வான்: பிரஹ்மத்தின் ஸ்வரூப குணங்களைச் சொல்கிறேன்.

யாதவப் பிரகாசர்: சொல்வீர்!

இளையாழ்வான்: ஒரே மலருக்கு செம்மை, மென்மை, மணம், வடிவழகு, நிறை என்ற பல குணங்கள் இருக்கலாம். குணங்களின் இப்பன்மை அவற்றையுடைய மலரின் ஒருமைக்கு முரண் அல்ல. அதேபோல் பிரஹ்மம் ஒன்றே என்பதில் யாதொரு தட்டும் இல்லை என்பது என் விளக்கம்.

விளக்கம்:

அதாவது யாதவப்பிரகாசர் சொல்வது, "பிரஹ்மம் ஒன்று தான்" அதைப்பார்க்க முடியாது என்பது. இது அத்வைதத்தில் உள்ளவை. ஏன் என்றால் இராமானுஜர் அவதரிக்கும் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். அவர் ஒரு சமயம் பூ பறிக்கச் செல்லும் பொழுது, ஒன்று, ஒன்று, ஒன்று என்று வரிசையாகச் சொல்லி பூ பறித்தார்.

ஒன்று, இரண்டு என்று தானே சொல்ல வேண்டும்? ஏன் ஒன்று ஒன்று என்கிறாய் என்று ஆதிசங்கரரின் அன்னை கேட்க தனக்கு அனைத்தும் ஒன்றாகவே தெரிகிறது என்றார். இதன் அடிப்படையில் தான் அத்வைதம் உண்டானது.

இங்கே 'இளையாழ்வான்' சொல்வது, ஏன் இராமானுஜர் பெயரைச் சொல்லாமல் இளையாழ்வான் என்று சொல்கிறேன் என்கிறீர்களா? இராமானுஜருக்கு இன்னும் அந்தப் பேர் வரவில்லை. அது வரும்போது சொல்கிறேன் எப்படி வந்தது என்று.

இப்போ இளையாழ்வான் சொல்கிறார், பிரஹ்மத்திற்கு சொரூபம் உண்டு. அதைப் பார்க்கலாம். விக்கிரங்களாகப் பார்க்கலாம். அதற்கு வடிவழகு உண்டு. அதற்கு கல்யாண குணங்கள் உண்டு என்று பெருமாளின் கல்யாண குணங்களையும், விக்கிரக சொரூபங்களையும் விரிவாக எடுத்துக் கூறினார். வசிஷ்டாத்வைதம் - வசிஷ்டு என்றால் உள்ளது என்று பொருள். பிரம்மத்திற்கு சொரூபம் உண்டு என்பதை இங்கே நிரூபித்தார் இளையாழ்வான்.

இளையாழ்வானின் அறிவுக்கூர்மை, ரஸிக உள்ளம், நாவனமை கண்ட யாதவப்பிரகாசரின் மனதில் புயலைக் கிளப்பியது. முன்னோர் பலரது வரட்டுத் தத்துவ வாதங்கள் இவரது வனப்பு வேதாந்த விளக்கங்களால் தவிடுபொடியாகிவிடும் என்று யோசித்தார் யாதவப்பிரகாசர்.

ஆனாலும் அமைதியாகிவிட்டார் யாதவப் பிரகாசர். நாளைய பதிவில் மற்றொரு சம்பவத்தைக் காணலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

 ஸ்ரீமதே இராமாநுஜாய நம|

நலம் தரும் சொல்லை நான் அறிந்தேன்
அந்த நல்லது நடந்திட அருள் புரிந்தாய்!!

இராமானுஜனே உன் தயவாளே நாராயணனை சரணடைந்தேன்!!

நான் நாராயணனை சரண் புகுந்தேன்!!

எட்டு எழுத்தின் பொருளோ எட்டா இருக்கையில் எத்தனை தடவைகள் நீ நடந்தாய்!!

எத்தனை இடர் கடந்தாய்!
எத்தனை தடை கடந்தாய்!

எங்களை உய்விக்க பொருள் உரைத்தாய்!!

மூவாறு முறை நடந்த முனியரசே!
ஒரு நோவாற மருந்து அளித்த தனியரசே!

நாவாற நான் உன்னை பாடுவது
ஸ்ரீமன் நாராயணன் மந்திரம் ஓதுவதே!!

நரகம் நீ புகுந்தால் வைகுண்டமாகும்!
அந்த நாராயணனையே இடம் பெயர்க்கும்!!

அரங்கனின் அருளாளே பொருள் அறிந்தாய் உந்தன் அருகினில் எதிரி என்று எது நிலைக்கும்!!

கோட்டியூர் கோபுரத்தில் மேலே ஏறி நின்று கோடி உயிர் வாழ வழி உரைத்தாய்!!

ஈட்டிய பொருள் உரைக்க வகை சொல்ல
அந்த நம்பியின் பெருமானா ஆகி நின்றாய்!!

 வாழியெதிராசன் வாழியெதிராசன்

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!


ராமானுஜர் பகுதி ஐந்து

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஐந்து

🌺🌺 ராமானுஜர் அவதாரம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலுக்குச் சென்று வந்தபின், ஓராண்டு கழிந்தது. காந்திமதி கருவுற்றார். கலியுகம் 4118, ஆங்கில ஆண்டு 1017, (கி.பி. 04/04/1017) சித்திரை மாதம் 12ம் தேதி, வியாழக்கிழமை, திருவாதிரை நட்சத்திரம், வளர்பிறை பஞ்சமியன்று அவதரித்தது அந்தத் தெய்வக்குழந்தை. காந்திமதியின் தங்கையான தீப்திமதியும் தன்னுடைய குழந்தையுடன் அக்காவைப் பார்க்க வந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது பரம சந்தோசம் என்று, பெரிய திருமலைநம்பிகள் ஸ்ரீ பெரும்புத்தூர் வந்தார்.

பெரிய திருமலைநம்பிகள் காந்திமதியின் குழந்தையைப் பார்த்தார். அவருக்கு எளிதில் புரிந்து விட்டது. குழந்தை பிறந்து பன்னிரெண்டாவது நாள் பெயர் சூட்டும் விழா நடத்தினார்கள். காந்திமதியின் குழந்தை 'லட்சுமணனின் அவதாரம்' என்பது புரிந்தது. பிறந்த குழந்தையின் தெய்வீகப் பொழிவு கண்டு வாழ்த்தி "லக்ஷ்மணோ லக்ஷ்மீ ஸம்பந்த!!" (திருநிறைச்செல்வன் தெய்வ மகன் இலட்சுமணன்) என்ற பெயருக்கு ஏற்ப, 'இளையாழ்வான்' என்று பெயர் வைத்தார். இளையாழ்வான் என்றால் இராமனுக்கு இளையவன் என்று பொருள்.

"அனந்த: பிரதமம் ரூபம் லக்ஷ்மணச்ச அத:பரம்
பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கச்சித் பவஷ்யதி"

என்பது ஆன்றோர் வாக்கு. திருமாலின் ஐம்படைகளின் (பஞ்ச ஆயுதங்களின்) அவதாரம் தான் இளையாழ்வான் என்றும் சொல்வார்கள்.

திருமலையிலிருந்து வந்து மருமகனுக்குப் பெயர் வைத்தவரோ சாமானியரான மனிதர் அல்ல. அக்காலத்திலேயே ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ வைஷ்ணவ பரமாச்சாரியாருள் அருமைச் சிஷ்யர்களுள் ஒருவர்.

தீப்திமதியின் குழந்தைக்கு கோவிந்தன் என்று பெயரிட்டார். தீப்திமதி சில காலம் கழித்து மற்றொரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த குழந்தைக்கு சிறிய கோவிந்தப் பெருமாள் என்று பெயரிட்டார் பெரிய திருமலைநம்பிகள்.

குழந்தைகள் பிறந்து நான்கு மாதம் கழித்து சூரியனைப் பார்த்தல் என்னும் சடங்கு செய்தார்கள். இராமானுனுக்கும், கோவிந்தனுக்கும் இந்த சடங்கு நடந்தது. பிறகு முதல் சோறு ஊட்டுதல், மொட்டை அடித்தல், காது குத்துதல், உபநயனம் என்று வரிசையாகச் சடங்குகள் நடத்தப்பட்டன.

நெடுநாள் பிள்ளைப் பேறின்றி இருந்த அசூரிகேசவாச்சாரியார், தன் பிள்ளைக்கு உரிய காலத்தில் உபநயாதிகளைச் செய்து அந்தணன் சிறுவன் பெற வேண்டிய தகுதிகளை இளையாழ்வானுக்கு செய்தார்.

இளையாழ்வானுக்கு இளம் வயதிலேயே கல்வியின் மீது ஆர்வம். நன்றாகப் பயின்றார், இறைவன் மீது கொண்ட அன்பும் தானாகவே வளர்ந்தது. வேதம் ஓதி முடித்த இளையாழ்வான், தத்துவ நாட்டத்துடன், காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள திருப்புட்குழி எனும் ஊரில் புகழ்பெற்ற ஆசிரியர் யாதவப் பிரகாசரிடம் வேதாந்தம் பயிலச் சென்றார். கோவிந்தனும் பயிலச் சென்றார்.

யாதவப் பிரகாசரோ அத்வைதம் கற்பிப்பவர். இளையாழ்வானுக்கு இறைவனுக்கு திருமுகம் உண்டு, அனைத்து கல்யாண குணங்களும் உண்டு என்பவர். இவரிடம் ஏன் அசூரி கேசவாச்சாரியார் வேதம் பயில அனுப்பி வைத்தார் என்றால், அப்பொழுது தான் உண்மையான பரம்பொருள் யார் என்பதையும், பிரம்மம் எப்படிப்பட்டது என்பதையும் நன்றாக உணர முடியும்.

எந்த ஒரு நல்ல விசயம் தெரிந்து கொள்ளும் போதும், அதற்கு மாற்றுக்கருத்து யாரேனும் சொன்னால் அது உண்மையாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம். தவறாகக் கூறினால் வாதம் புரிந்தாவது உண்மையை நிலை நாட்ட முயற்சிப்போம் அல்லவா.

குருவான யாதவப்பிரகாசர், சிஷ்யனான இளையாழ்வான் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நாளை அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

 ஸ்ரீ மதே பாஷ்யககாரர் நம :
ஸ்ரீ ஸ்வாமி திருவாதிரை
ஸ்ரீபெரும்பூதூர்

இந்த உடல் சிறைவிட்டு எப்பொதுழும் யான் ஏகி
அந்தமில் பேரிபத்துள் ஆகுவேன் - அந்தோ
இரங்காய் எதிராசா என்னை இனி உய்க்கை
பரங்காண் உனக்கு உணர்ந்து பார்.

இந்த உடல் என்பது கடுமையாக சிறை போன்று உள்ளது, இதனை
விடுத்து, எல்லையில்லாத இன்பம் அளிக்கவல்ல பரமபதத்திற்கு, அர்ச்சிராதி மார்க்கமாக
நான் எப்போது செல்வேன்? யதிகளின் தலைவரான எம்பெருமானாரே, என் மீது கருணை கொள்ள வேண்டும்,
என்னைக் காப்பது என்ற பாரம் உமக்கு உள்ளது என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்,
கீதையில் கண்ணனும் - க்ஷிபாமி - என்று கைவிட்ட என்னைப்
போன்றவர்களை கரை ஏற்றதல் என்பது, பல்லுயிர்க்கும் வீடு அளிப்பானாய் அவதரித்த உனக்கே பொறுப்பு அல்லவா.

அடியேன் சுகுமாரா ராமாநுஜாய தாஸன்
 ஸ்ரீ மதே பாஷ்யககாரர் நம :
ஸ்ரீ ஸ்வாமி திருவாதிரை

வாழ் யெதிராசன் வாழி யெதிராசன்
வாழி யெதிராசன் வாழி என வாழ்த்துவார் - வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணைகள்
தாழ்த்துவார் விண்ணோர்தலை.

எம்பெருமானார் பல்லாண்டு வாழ்க எம்பெருமானார் பல்லாண்டு வாழ்க எம்பெருமானார் பல்லாண்டு
வாழ்க என்று வாழ்த்துபவர்கள் இவ்விதமான வாழ்த்துபவர்களை
வாழ்த்துபவர்களின் திருவடிகளில் பணிபவர்கள் நித்யஸூரிகளுக்கும் மேலானவர்கள் ஆவர்.

உய்ய ஒரே வழி! உடையவரின் திருவடி!!


ராமானுஜர் பகுதி நான்கு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு நான்கு

🌺🍁 அவதாரத்தருணம்:

குருபரம்பரை ஹாரத்தில் எட்டாவதாக இருப்பவர் ஸ்ரீ இராமானுஜர் என்று பார்த்தோம் அல்லவா? முதலில் ஸ்ரீமந்நாராயணன் பல அவதாரங்கள் எடுத்து நமக்கு நாம் நம் கர்மவினைகள், பாவங்கள் இவற்றை அனுபவித்து முடிவில் மோட்சம் அடைவது வரை கீதைகள் மூலம் உபதேசித்தார்.

இரண்டாவது நம் வாழ்க்கைக்கு ரிக், யஜுர், சாமம், அதர்வணம் வேதங்களைப் படைத்தார். மூன்றாவதாக அந்த வேதங்களை நல்ல முறையில் நாம் பயில சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். நான்காவதாக ஆழ்வார்கள் மூலம் நம் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களைக் கொடுத்தார். ஆனால், ஆழ்வார்கள் அவனது கல்யாண குணங்களை மட்டுமே அனுபவித்து அனுபவித்து அவனிடம் வைகுண்ட பிராப்தி கேட்டு சென்று விட்டார்கள்.

ஐந்தாவது, அந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களையும், மனிதர்களின் அறியாமையை போக்கி, புண்ணிய பாவங்களை அகற்றி, முக்தியடைய ஆச்சார்யார்கள் மூலம் விளக்கினால் தான் சரியாக வரும் என்று நித்ய சூரிகளை பூலோகத்தில் ஆச்சார்யார்களாக அவதரிக்க அனுப்பி வைத்தார் பரந்தாமன்.

இப்போது அந்த ஆச்சார்யார்களுக்கு சரியான சீடன், அவர்கள் வகுத்துக் கொடுத்த சட்ட, திட்டங்களை பூலோகத்தில் பரப்புதல், வைஷ்ணவக் கொள்கைகளை எளிய முறையில் பரப்புதல், பக்திக்கு இலக்கணமாக வாழ்தல், சரணாகதி தத்துவமே போதும், கைங்கரியம் ஒன்றே போதும் நம் கர்மவினைகள் அனைத்தும் ஒழிந்து முடிவில் மோட்சம் கிடைக்கும் என்று, கைங்கரியம் ஒன்றையே குறிக்கோளாக வாழ ஒரு மனிதரைப் படைக்க வேண்டும் என்று ஸ்ரீமந்நாராயணனான பரம்பொருள் எண்ணினார்.

வைகுண்டத்தில் இருக்கும் ஆதிசேஷனிடம், "நான் நின்றால், நடந்தால், அமர்ந்தால், குடையாக, சிம்மாசனமாக இருக்கும் தாம் தான் இப்பூலோகத்தில் அவதரித்து கைங்கரியத்தின் சிறப்பை உணர்த்தி, மக்கள் தாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை, கர்மவினை பலன்களை அனைத்திலிருந்தும் விடுபட்டு, புனரபி ஜனனம் - புனரபி மரணம் இதிலிருந்து மீள அவர்களுக்கு மறுபிறவி இல்லாத நிலை, மோட்சம் பற்றி எடுத்துக்கூறி நல்வழிப்படுத்த அவதரிக்கும் நேரம் வந்துவிட்டது" என்று கூறினார்.

ஆதிசேஷனும் இறைவனிடம் "தாங்கள் கூறுவதையே செய்கிறேன்" என்கிறார்.

🌺🌺 பார்த்தசாரதி திருக்கோவிலில் வழிபாடு:

சற்றேறக்குறைய ஆயிரத்தோரு ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீ பெரும்புத்தூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக் கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோவில்... சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப் பெருமாள், அந்த ஊரில் வசித்தவர் அசூரிகேசவாச்சாரியார். இவர் வேள்வி செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். இவருக்கு 'ஸர்வக்ரது' என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர்.

இந்த 'ஸர்வக்ரது' என்ற சொல்லுக்கு எல்லா வேள்விகளும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால் இவரை 'ஸ்ரீமத் அசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர்' என்று மக்கள் அழைத்தனர். இந்த சமயத்தில் தான் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியார் தான் ஆட்சி செய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் வந்து துறவியாக மாறிவிட்டார்.

அவரது சீடர் பெரியநம்பி. நாத்திகர் கூட அவரது பாடல்களைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்குச் சென்று விடுவார்கள் என்றால் இந்த இனிமையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆளவந்தாரிடம் பெரிய திருமலை நம்பி என்பவரும் சீடராக இருந்தார். ஆளவந்தாரை விட பெரிய திருமலைநம்பிக்கு வயது அதிகம். ஆனாலும், பெரிய திருமலைநம்பி ஆளவந்தாரை குருவாக ஏற்றுக் கொண்டார்.

பெரிய திருமலைநம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஸர்வசக்ரது பட்டம் பெற்ற அசூரி கேசவாச்சாரியாருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தீப்திமதியை அகரம் என்ற கிராமத்தில் வசித்த கலைநயனப்பட்டர் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். இவர்கள் இருவரின் திருமணத்தையும் சிறப்பாக நடத்திய பெரிய திருமலைநம்பி, எந்நேரமும் ஸ்ரீமந்நாராயணனின் திருவடியை மனதில் நினைத்துக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்து இருந்தார்.

அசூர் கேசவாச்சாரியாரும், காந்திமதியும் இல்லற வாழ்க்கையை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்ற செல்வம் இல்லாது போயிற்று. எந்தக் குறையாக இருந்தாலும் தெய்வத்திடம் போனால் மனக்குறைகள் தீரும். இவர்கள் இருவரும் எந்தத் திருக்கோவில் போகலாம், அதிலும் இவர் வேள்விகள் சிறப்பாகச் செய்பவர் அல்லவா?! இவர் "விருந்தாரண்யம் என்று அழைக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரமான அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலுக்குச் சென்றனர். திருஅல்லிக்கேணி குளத்தின் பெயரே ஊருக்கும் வந்துவிட்டது. அங்கு சென்ற அவர்கள் மகப்பேறு குறித்து வேள்வியை நடத்தினார்கள்.

யாகம் முடிந்தபின், அசூரி கேசவாச்சாரியாருக்கு தூக்கம் வர கோவிலிலேயே தூங்கி விட்டார். அப்போது அவரது கனவில் வந்த பார்த்தசாரதி பெருமாள், "கேசவா! நீர் ஒழுக்கசீலர், வேள்விகள் இயற்றி என்னைத் திருப்தி செய்பவர், உமது பக்தி ஆழமானது. இனி குழந்தை இல்லை என்ற கவலை உமக்கு இல்லை. நானே உனக்கு குழந்தையாகப் பிறப்பேன். இவ்வுலக மக்கள் பூர்வாச்சாரியார்கள் அருளிய உபதேசங்களின் மகிமைகளைப் புரியாமல், தங்களையே உயர்வாக எண்ணிக் கொண்டுள்ளனர். அகந்தை கொண்டு பல தீமைகள் புரிகிறார்கள். எனவே, அவர்களைக் கடைத்தேற்ற நான் அவதாரம் எடுப்பேன். இனி நீர் ஊர் திரும்பலாம்" என்றார் அந்த பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணன். இதைக்கண்டு விழித்த அசூரி கேசவாச்சார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காந்திமதியும் இதைக்கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். இருவரும் தங்கள் ஊரான ஸ்ரீ பெரும்புத்தூருக்குச் சென்றார்கள்.

(ராமானுஜர் நூற்றந்தாதி)

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானைக் கலைபரவும்
தனி யானையைத் தண்டமிழ்செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை  வந்தெய்தினரே.(3909)
*பொருள்* : சாத்திரங்கள் துதிக்கும் ஒப்பற்ற மதம் கொண்ட யானை போன்றவனை , திருக்கண்ண மங்கையில் நின்று அருளுபவனை , குளிர்ச்சியான தமிழ்ப் பாசுரங்களால் பாடி மகிழ்வித்த நீலன் என்ற திருமங்கை ஆழ்வாரை உலகில் தனக்கு இன்பமாக எண்ணிய ராமானுஜனைத் தஞ்சமென்று வந்து அடைந்தவர்கள் எத்தகைய துயரங்கள் வந்தாலும் வெறுப்படைய மாட்டார்கள். இன்பங்கள் வந்தாலும் மனம் நெகிழாமல் இருப்பார்கள் .

*விளக்கம்* :
*முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம்* - முனிவர்கள் துன்பத்தையும் இன்பத்தையும் சமமாகவே எண்ணுவார்கள். ராமானுஜரைப்  பற்றியவர்களும் இவ்வாறே இருப்பார்கள் என்கிறார் .

*கண்ணமங்கை நின்றானை* -  இது  சோழ  நாட்டு திவ்ய  தேசமாகும். விமானம் , மண்டபம்,ஆரண்யம், சரசு , க்ஷேத்திரம் நதி  மற்றும்  நகரம் ஆகிய அனைத்தும் அமுத மயமானதால் இந்த தலம்  *சப்தஅம்ருத  தலம்*  என்று அழைக்கப்படுகிறது.

*கலைபரவும் தனியானையை* திருக்கண்ண மங்கையில் அனைத்து  சாஸ்திரங்களும் (கலைகள்) பெருமாளின் குணங்களைப் பற்றி பரவுகின்றன (துதிக்கின்றன).  எல்லா வேதங்களிலும்  நானே அறியப்படுகிறேன் என்றபடி இங்குள்ள பக்தசவத்சல  பெருமாள் ஒப்பற்ற மதம்  கொண்ட யானை போல திருமங்கை ஆழ்வாருக்குத் தெரிகிறானாம்.

*தனியானையைத் தண்டமிழ்செய்த நீலன்*-  திருமங்கை ஆழ்வார் வெஞ்சினக் களிற்றே  என்கிறார் பெரிய திருமொழியில்.  இதன் பொருள் அவனை அடைய முடியாது என்றாலும் யானை போல் அவனைக் கண்டு களிக்கலாம் என்பதாகும்.. நீலன் என்பது திருமங்கை ஆழ்வாரின் ஒரு பெயராகும்.
=============

எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு   உலகில்  வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற்கு  உதவும் இராமானுசன் எம் உறுதுணையே.(3910)
*பொருள்* : அறிவதற்கு அரியதான வேதங்களை ஆயிரக்கணக்கான இனிய பாசுரங்களால் அறிமுகப்படுத்த உலகில் அவதரித்த சடகோபரை சிந்தையுள் பொருத்திக்கொண்ட மதுரகவி ஆழ்வாருடைய சிறப்பான குணங்களை உயிர்களெல்லாம் பாவம் செய்யாமல் இருக்க எடுத்துரைத்த ராமானுஜரே  எனக்கு உற்ற துணையாவார் .

*விளக்கம்* :
*எய்தற் கரிய மறைகளை* - எய்தல் என்றால் அடைதல் . வேதங்கள் அளவில் அடங்காதவைகள் எனவே இவைகளை முழுதும் அறிந்தவர் எவரும் இலர் . மேலும் இவைகளின் உண்மையான பொருளைத் தானே மறைத்துக்கொண்டிருப்பதாலும் வேதங்கள் மறைகள் எனப்படுகின்றன.

*ஆயிரம் இன்தமிழால் செய்தற்கு*- வேதம் அளவற்றது ; இன்தமிழ்  ஆயிரம் என்னும் அளவுடையது .
*தெரியச்  சொன்ன ஆயிரம்* என்று நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கூறுவார்கள். வேதத்தை குறிப்பிட்டவர்கள் மட்டுமே ஓத  முடியும். ஆனால்  நம்மாழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை அனைவரும் இனிது படிக்கலாம் .

*உலகில்  வரும் சடகோபனை* - மற்றவர்கள் முன்வினையின் காரணமாக உலகில் வந்து பிறந்தனர் . நம்மாழ்வாரோ உலகோர் உய்வதற்கென்றே அவதரித்தவர். திருவாய் மொழி என்ற ஆயிரம் பாசுரங்களை இயற்றியவர் . நான்கு  வேதங்களின் சுருக்கமாக திருவாய்மொழி அமைந்துள்ளது என நாம் அறிவோம்.

*சிந்தையுள்ளே பெய்தற் கிசையும் பெரியவர்* - நம்மாழ்வாரைக்  குருவாக கொண்ட மதுரகவி ஆழ்வார் புகழ் பாடும் பாசுரம் இது. இவர் சடகோபனை (நம்மாழ்வாரை ) தனது சிந்தையில் வைத்துப் போற்றியவர் . இத்தனைக்கும் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை விடப் பெரியவர். இருப்பினும் குருவின் மேல் அளவிலாத பக்தி கொண்டு குருவை தவிர எம்பெருமானைக் கூடப் பாட  மாட்டேன் என்று " கண்ணி  நுண் சிறுத்தாம்பு " என்ற ஒப்பற்ற பாசுரங்களை குருவின் மேல் இயற்றி, புகழ் பெற்றவர் .  

*உயிர்களெல்லாம் உய்தற்கு  உதவும் இராமானுசன்* -மதுர கவி ஆழ்வாரின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைத்த ராமானுஜர்
=============

நாளை அவதாரத்தை அனுபவிக்கலாம்...

உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!


ராமானுஜர் பகுதி மூன்று

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு மூன்று




இராமானுஜர் என்பவர் கடலைப் போன்றவர். அந்த கடலின் முழு சரித்திரத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அப்படி முயன்றால் மிக்க மகிழ்ச்சி. கடலுக்குள் போனால் நீந்தி கரை சேர முடியாது. ஆனால், அந்த கடலையும், கடல் அலைகளையும் நாம் ரசிக்கலாம் அல்லவா?! அந்த கருணைக் கடலின் அவதார நோக்கத்தையும், அவர் செய்த கைங்கர்யங்கள் பற்றியும், கடல் அலைகளைப் போல் அடியேனுக்குத் தெரிந்தவரை பதிவிடுகிறேன். நீங்களும் அந்த பெருங் கருணைக் கடலை ரசித்திடுங்கள்.

இராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம். பஞ்ச ஆயுதங்களின் அம்சமாகவே பிறந்தவர்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திலே குருபரம்பரை என்று சொல்வார்கள். முதலில் குருபரம்பரை பற்றி பார்ப்போம்.

🌻🌹 குருபரம்பரை:

நாமெல்லாம் பூமியில் பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புண்ணியங்களையும், பாவங்களையும் மாற்றி மாற்றி அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். புண்ணியம் அதிகமானால் அதைப் போக்க மறுபிறவி எடுக்கிறோம். பாவங்கள் அதிகமானாலும் மறுபிறவி எடுக்கிறோம். இப்படியே மாற்றி மாற்றி புனரபி ஜனனம், புனரபி மரணம் என மாற்றி மாற்றி பிறவி எடுத்துக்கொண்டே போகிறோம். இதையடுத்து அடுத்த பிறவியே வேண்டாம் என்று சொல்லிக் கொள்கிறோம். நாம் செய்த கர்மாக்களை இப்பிறவிலேயே அனுபவித்து விட்டால் அடுத்து நமக்கு வைகுண்டம் தான்.

அப்பேர்ப்பட்ட கர்மாக்களை அழிக்க, நித்ய அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி நித்ய அனுஷ்டாங்களைக் கடைப்பிடித்தால், பாவங்கள் அனைத்தும் தொலைந்துவிடும்.

வேதங்கள் தான் சட்ட திட்டங்கள். ரிக், யஜுர், சாமம், அதர்வண வேதங்களால் சாஸ்திரங்களை வகுத்துக் கொடுத்தார் இறைவன். நமக்கு சரீரம், சாஸ்திரங்கள், ஞானங்கள் கொடுத்தார். ஆழமான கிணற்றில் நாம் விழுந்துவிட்டால், நம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்று எதிர்பார்க்கிறோம் அல்லவா? அப்படி சம்சார சாகரத்தில் விழுந்து, தத்தளித்துக் கொண்டிருக்கும் நம்மைக் காப்பாற்ற இறைவனே வைகுண்டத்திலிருந்து முதலில் கீழிறங்கி வருகிறார். ஆனால், அப்படி அவர் கீழிறங்கி வந்தாலும் அவரால் நம்மைக் கரை சேர்க்க முடிவதில்லை.

ஏனெனில், கண்ணனாக இராமனாக தசாவதார பிறவிகள் எடுத்தார். இரண்டாவதாக நம்மை பகவத் பக்தியிலே ஆழ்த்த பன்னிரண்டு ஆழ்வார்கள் அவதாரம் செய்தார்கள். பெருமானிடத்திலே பக்தியைத் தூண்டி, பெருமானையே அடைய வேண்டிய வழியை, நாலாயிரம் பாசுரங்கள் மூலம் நமக்கு உரைத்தார்கள் ஆழ்வார்கள்.

ஆழ்வார்கள் பிறவி முடிந்தபின், மூன்றாவதாக நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தையே புத்தகமாகக் கொண்டு அதை உபதேசிக்க நித்யசூரிகளை ஆச்சார்யாரார்களாக அனுபவித்து வைத்தார் ஸ்ரீமந்நாராயணன்.

முதல் ஆச்சாரியனாக நாதமுனிகள் திருஅவதாரம் பண்ணினார். அவருக்கு குமாரர் ஈஸ்வர முனிகள் திருஅவதாரம் பண்ணினார். அவருடைய திருக்குமாரராக யமுனாச்சாரியார் திருஅவதாரம் பண்ணினார்.

நாதமுனிகள், யமுனாச்சாரியார் என்ற இந்த திருநாமத்தை வைத்துதான் குருபரம்பரை ஸ்லோகம் உண்டாக்கப்பட்டது. இதை பாடியவர் கூரத்தாழ்வார். குருபரம்பரையை வணங்குகிறேன் என்பது தான் அந்த ஸ்லோகம். ஆச்சார்யார்களையே முத்தாக, இரத்தினமாக செதுக்கப்பட்ட ஹாரம் தான் "குருபரம்பரா ஹாரம்" என்று சொல்வார்கள்.

குருபரம்பரையில் முதல் ஆச்சாரியன் ஸ்ரீமந்நாராயணனான பெரிய பெருமாள். நர நாராயணரில் நரனுக்கு தன்னுடைய திருமந்திரத்தை உபதேசித்தார் அல்லவா? அர்ஜுனனுக்கு ஆச்சார்யனாக இருந்து கீதையைக் கொடுத்த கீதாச்சாரியன் அல்லவா அவன்? அதனால் அவனே முதல் ஆச்சார்யன்.

இரண்டாவது மகாலக்ஷ்மியான பெரிய பிராட்டி - அந்த லக்ஷ்மிக்கு பெருமாள் ஸ்வயம் மகாமந்திரத்தை உபதேசித்தார். அவரிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டதால் மகாலக்ஷ்மி இரண்டாவது ஆச்சாரியன்.

மூன்றாவதாக லக்ஷ்மியிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டது விஷ்வக்ஷேனர். அதனால் விக்வக்ஷேனர் மூன்றாவது ஆச்சாரியன். விஷ்வக்ஷேனரிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டது நம்மாழ்வார். அதனால் அவர் நான்காவது ஆச்சாரியன். நம்மாழ்வாரிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டவர் நாதமுனிகள். அதனால் அவர் ஐந்தாவது ஆச்சாரியன்.

நாதமுனிகளின் சிஷ்யர்கள் - உய்யக்கொண்டார் மற்றும் மணக்கால் நம்பிகள்; மணக்கால் நம்பிகளின் சிஷ்யர் ஆளவந்தார்; அவரது சிஷ்யர் பெரிய நம்பிகள். ஆறாவது ஆச்சாரியராக நாதமுனிகளின் சிஷ்யர் உய்யக்கொண்டார். ஏழாவதாக பெரிய நம்பிகள்.

முதல் தலைவராக/ஆச்சாரியராக நாதமுனிகள். அதன் பின் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள். ஆளவந்தாரின் சீடர்கள் ஐந்து பேர் - 1. பெரிய நம்பிகள், 2. பெரிய திருமலை நம்பிகள், 3. திருக்கோட்டியூர் நம்பிகள், 4. திருக்கச்சி நம்பிகள், 5. திருமலையாண்டான்.

எட்டாவதாக இந்த ஹாரத்தில் இருப்பவர் தான் உலகமே போற்றும் ஸ்ரீ இராமானுஜர்.

இன்னும் அனுபவிப்போம்...

எங்கள் கதியே !
இராமானுச முனியே !

நாட்டியநீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம்களிப்புற்றது, தென்குருகைவள்ளல்
வாட்டமிலா வண்டமிழ்மறை வாழ்ந்தது, மண்ணுலகில்
ஈட்டியசீலத்து, இராமானுசன்றன் இயல்வுகண்டே

விளக்கவுரை :-

அறியாமையின் இடமாக உள்ள இந்தப் பூமியில்,
தான் பெற்றிருந்த பரமபதத்தை விடுத்து, இந்த உலகினரின் சிறுமையைக் பாராமல் எம்பெருமானார் அவதரித்தார். இவரது ஸ்வபாவம் மற்றும் உயர்ந்த குணங்களைக் கண்டு, சூரியனைக் கண்ட இருள் விலகுவது போன்று,
வைதிகம் அற்ற மதங்கள் அனைத்தும் நிர்மூலமாகச் சென்றன. இவரது அவதாரம் ஏற்பட்ட பின்னர் ஸர்வேச்வரனாகிய நாராயணனப் போற்றும் வேதங்கள் அனைத்தும், “நமக்கு இனி குறையில்லை”, என்று கர்வம் அடைந்தன.

மிகவும் உயர்ந்த இடமும், நம்மாழ்வாரின் அவதார இடமும் ஆகிய ஆழ்வார்திருநகரியில் உதித்த நம்மாழ்வார் அருளிச் செய்ததும், அனைத்து புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும், தமிழ் வேதமும் ஆகிய திருவாய்மொழி எந்தக் குறையும் இன்றி வளர்ந்தது.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்

திருவரங்கத்தமுதனார்  திருவடிகளே சரணம்

உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!

ராமானுஜர் பகுதி இரண்டு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு இரண்டு....

நம்மாழ்வார் 32 வருடங்கள் வாழ்ந்தார். அவர் குழந்தையாகப் பிறந்த 16வது நாளில் குழந்தையை ஆழ்வார் திருநகரியிலுள்ள பொலிந்து நின்ற பிரானின் திருக்கோவிலில் ஆலமரத்தின் அருகில் பெற்றோர் இருந்தனர். குழந்தை தவழ்ந்து மெல்ல மரம் ஏறி புளிய மரத்தில் தவம் செய்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அப்போதிலிருந்து 16 வயது வரை தவத்தில் இருந்தார். அதன் பின் 16 ஆண்டுகள் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களில் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி பாசுரங்களைப் பாடினார்.

அவரது சீடர் தான் மதுரகவி ஆழ்வார். அவர் தன் குருவையே இறைவனாகக் கொண்டு பாசுரங்கள் பாடி அனுபவித்தார். அவர் கண்ணிநுண் சிறுதாம்பு பாசுரங்கள் பாடினார்.

குருவான நம்மாழ்வாருக்கு சேவை செய்து வரும் பொழுது, ஒரு நாள் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாரிடம் "நான் வைகுண்டத்திற்குப் புறப்படும் வேலை வந்துவிட்டது" என்றார். இதைக்கேட்ட மதுரகவி ஆழ்வாருக்கு பயங்கர மனவருத்தம். "சுவாமி தாங்கள் இங்கே எங்களுக்காக இருக்கக்கூடாதா?" என்றார். நம்மாழ்வாரோ மதுரகவி ஆழ்வாரிடம், "தாமிரபரணி ஆற்றில் நீர் எடுத்து வாரும்" என்றார்.

மதுரகவி ஆழ்வாரும் நீர் எடுத்து வந்தார். அந்த நீரை காய்ச்சுமாறு நம்மாழ்வார் கூற, மதுரகவி ஆழ்வாரும் காய்ச்சினார். நீரிலிருந்து ஒரு விக்கிரகம் வெளிவந்தது. அதைக்கண்ட மதுரகவி ஆழ்வார், "நான் உங்களுடைய சிலையைக் கேட்டால் நீங்கள் வேறு யாருடைய சிலையைக் கொடுக்கிறீர்கள்" என்றார். நம்மாழ்வாரோ அந்த சிலையைப் பெற்று மறைத்து வைத்துக் கொண்டு, இந்த சிலை உனக்கல்ல என்று கூறி, மறுபடியும் தாமிரபரணி நீர் எடுத்து காய்ச்சச் சொன்னார். மதுரகவி ஆழ்வார் தாமிரபரணி நீர் எடுத்து காய்ச்சினார், அப்போது நம்மாழ்வார் விக்கிரகம் வெளிவந்தது. மதுரகவி ஆழ்வாருக்குச் சந்தோசம். நம்மாழ்வார் வைகுண்டம் சென்றபின் இந்த சிலையையே தொடர்ந்து பூஜித்தார். இந்த சிலை இன்னும் ஆழ்வார் திருநகரியில் புளிய மரத்தின் அருகில் நம்மாழ்வார் சன்னிதியில் உள்ளது.

ஒரு சிலையை மறைத்தார் அல்லவா நம்மாழ்வார். அந்த சிலை தான் இராமானுஜர். நாதமுனிகள் வந்து பாசுரங்கள் கேட்கும் பொழுது, அவர் பாடிய பாசுரங்களையும் கொடுத்து, மற்ற ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களையும் கொடுத்து, "பொலிக! பொலிக!" என்று கூறி இந்த விக்கிரகத்தையும் நாதமுனிகளிடம் கொடுத்தார் நம்மாழ்வார்.

நாதமுனிகள் பூஜித்து, அவர்களுக்குப்பின் பின் பல சீடர்கள் தொடர்ந்து அந்த விக்கிரகத்தை பூஜித்து வந்தார்கள்.

தான் அவதரிக்கும் முன்பே பூஜிக்கப்பட்ட ஒரே குரு இராமானுஜர் தான். இதுவரையில் யாருக்கும் இப்படி பாக்கியம் கிடைக்கவேயில்லை. அந்த சிறப்பு இராமானுஜர் அவதரிக்கும் முன்னமே கிட்டியதால் தான் இராமானுஜரை தெய்வாம்சம் பொருந்தியவர், அந்த இறைவனே இராமானுஜர் என்றெல்லாம் சொல்லலாம். நாளை குரு பரம்பரை பற்றி அறியலாம்.
"
ஶ்ரீமதே சடகோபாய நம
ஸ்ரீமதே ராமாநுஜாய நம

"நம்மாழ்வாரும்.... மதுரகவியாழ்வாரும்..."

நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியை .... பட்டோலை கொண்டு பாவின் இன்னிசை பாடித் திரிபவர்.... மதுரகவி ஆழ்வார்...
நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள கருத்துக்களை.... தாம் பாடிய "கண்ணிநுண் சிறுத்தாம்பு" பிரபந்தத்தில் அருளிச்செய்தவைகளைக் காண்போம்.....

நம்மாழ்வார் பாடிய ...." நலங்கொள் நான் மறைவாணர்கள்" என்பதை....

"நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்"

என்று பாடியுள்ளார்....

2. நம்மாழ்வார் பாடிய....." அப்பொழுதைக்கப் பொழுது என் ஆராவமுதமே" என்றதை....

"அண்ணிக்கும் அமுதூறும் " என்றும்...

3. "அடிக்கீழ் புகுந்தேனே" என்பதை

"மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே.... "என்றும்....

4. "பாடி இளைப்பிலும் " என்பதை

"பாடித் திரிவனே" என்றும்....

5. " உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் " என்பதை

"நம்பிக்கு ஆள் உரியன்" என்றும்...

6. "இங்கே திரிந்தேற்கு " என்பதை...

"திரி தந்தாகிலும் " என்றும்....

7. "தாயாய்த் தந்தையாய் " என்பதை...

"அன்னையாய் அத்தனாய்.. " என்றும்.....

8. "ஆள்கின்றான் ஆழியான் " என்பதை....

"என்னை ஆண்டிடும் தன்மையான் " என்றும்....

9. "எமர் கீழ்மேல் எழுபிறப்பும்" என்பதை....

"இன்று தொட்டு எழுமையும்.... " என்றும்....

10." பேரேனென்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்..." என்பதை....

"நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினார்..." என்றும்...

11." வழுவிலா அடிமை செய்ய வேண்டும்" என்பதை....

"ஆட்புக்க காதல் அடிமைப் பயனன்றே " என்றும்....

12."பொருளல்லாத என்னை அடிமை கொண்டான் " என்பதை....

" பயன் அன்றாகிலும், பாங்கு அல்லாராகிலும்.... செயல் நன்றாகத் , திருத்திப் பணிகொள்வான்" என்றும்...

13. "மலர் பாவைக்கன் என் அன்பேயோ..." என்பதை....

" தென்குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய்.. " என்றும்....

14." வைகுந்தமாகும் தம்முரெல்லாம்..." என்பதை....

"நம்புவார்பதி வைகுந்தம் காண்மினே..." என்றும் பாடியுள்ளார்....

இவ்வாறு நம்மாழ்வார் பகவத் விஷயத்தை அனுபவித்த முறையிலேயே... ஆழ்வாரின் சீடர் மதுரகவியாழ்வாரும் அடியொற்றி.... அனுபவித்து இருப்பதை அடியோங்களும் படித்து இன்புறுவோம்.....

"நம்மாழ்வார் திருவடிகளே சரணம்"

"மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்"

"ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"

காரிமான் உடையநங்கை தம்பதிகளுக்கு புத்திரப்பேறுக்காக ஸ்ரீ அழகிய நம்பியிடம் பிரார்த்திக்கும் சமயம் தாமே ஆழ்வார்திருநகரியில் அவதரிப்போம் என்று சாதித்து அங்ஙனமே அவதரித்தார்.  அவரே திருக்குறுங்குடியில் நம்மாழ்வார் திருக்கோலத்தில் சேவைசாதிக்கும் அற்புதக்காட்சி பல்லக்கு சேர்வையில் சேவிக்கலாம்.
இன்னும்
தொடர்வோம்...

*ஓங்கி உலகளந்த உத்தமன்!*

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்கிறாள் என் தாயார். திருவிக்கிரம அவதாரத்தின் போது தனது திருக்கால்களை எவ்வளவு வேகமாக ஓங்கியிருப்பார் திருவிக்கிரமன் என்று உணர்ந்து ஓங்கி சப்தத்தால் வியக்கவைக்கிறாள்! பின்பு அடுத்தடுத்த நாட்களில் பாஸுரங்களை பாடிக்கொண்டிருந்தாலும், இந்த வியப்பு ஆண்டாளின் திருவுள்ளம் விட்டு அகலவில்லை. அதனால்தான் மீண்டும் 17 வது பாஸுரத்தில், ஓங்கி உலகளக்கும்போது, இந்த அண்டத்தின் மேல் உள்ள ஆவரண ஜலத்தை திருவிக்கிரமன் தன் திருப்பாதத்தால் அறுத்த வைபவத்தை வியந்து *"அம்பரமூடறுத்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே"* என்று மீண்டும் வியக்கிறாள்!

24 ஆம் பாஸுரத்திலும் "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!!!" என்று வியப்பு நீங்காத ஆண்டாள் உலகளந்த திருவடிகளின் மேன்மையைப் போற்றிப் பாடுகிறார்! இந்தப் "போற்றி"
களிலும் உலகளந்த திருவடிகளுக்குத் தான் முதல் வந்தனம்!!

நாச்சியார் திருமொழியிலும் 2 ஆம் பாஸுரம், 5 ஆம் பாஸுரம், 8 மற்றும் 9 ஆம் பாஸுரங்களில் உலகளந்தானை பாடி வியக்கிறாள்!

நம்மாழ்வார் திருவிக்கிரம ப்ரபாவத்தை 6 ஆம் பத்து 6 ஆம் திருவாய்மொழியில், திருவேங்கடவனிடம் சரணாகதி அனுஷ்டிக்கும் போது, *"எந்நாளே நாம் மண் ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று"* என்கிறார்! திருவிக்கிரம விபவத்தின் போது, எம்பெருமான்தான் ஓங்கி உலகளந்து விட்டாரே! ஆக, இந்த லோகத்திலாகட்டும், அந்த லோகத்திலாகட்டும்.. எவரும் இரண்டு திருப்பாதங்களையும் ஒன்றாக தரிசிக்கவில்லையன்றோ? அதை எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பது? என்கிறார்! நம்மாழ்வாரின் திருவுள்ளம், திருவேங்கடவனை திருவிக்கிரமனாக பற்றியதால், திருவேங்கடவனின் திருக்கமல பாதங்களை தரிசித்தால் போதும்.. திருவிக்கிரம இணைத்தாமரைகளை தரிசித்ததிற்கு ஈடாகுமாம் போலே....குறையும் தீருமாப்போலே!
🙇‍♀🙇‍♀🙏🙏
உய்ய ஒரே வழி! உடையவரின் திருவடி!!
ஓம் ராமானுஜாய :


ராமானுஜர் பகுதி ஒன்று


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 1

"பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னுமாற னடிபணிந்துய்ந்தவன் பல்கலையோர்
தாம்மன்னவந்த விராமானுசன் சரணாரவிந்தம்
நாமன்னிவாழ நெஞ்சே!
சொல்லுவோம் அவன் நாமங்களே!"

- இராமானுஜ நூற்றந்தாதி 1

நாம் அன்னி வாழ நெஞ்சே சொல்லு என் உடையவரின் நாமங்களை. ஏனெனில், ஆழ்வார்கள் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வைணவம் மங்கிய காலம். நாதமுனிகள் நம்மாழ்வார் பாசுரங்களை திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோவிலில் ஆராவமுதன் முன் பாடினார். நம்மாழ்வார் பாசுரங்களை பாடி முடிக்கும் பொழுது, ஆராஅமுதன் கூட்டத்தோடு கூட்டமாக பக்தன் போல் வந்து, இவ்வளவு பாசுரங்களே இப்படி அழகாக இருக்கிறது என்றால் மீதமுள்ள மற்ற பாசுரங்கள் கேட்கும் பொழுது எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று கூறிக்கொண்டிருந்தார்.

நாதமுனிகள் பிரமித்து போய்விட்டார். ஏனெனில் அவருக்குத் தெரிந்தது நம்மாழ்வார் பாசுரங்கள் தான். அதுவும் 100 பாடல்கள் வரைதான். இவ்வாறு கூட்டத்தில் ஒருவர் மற்ற பாசுரங்கள் பற்றி கூறியதும், உடனே விசாரிக்கத் தொடங்கிவிட்டார் நாதமுனிகள். மற்ற பாசுரங்கள் பற்றி எங்கே சென்று அறிந்து கொள்வது என்று கேட்டுக் கொண்டிருக்க, கூட்டத்தில் ஒருவரோ ஆழ்வார் திருநகரி சென்றால் அனைத்து பாசுரங்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்.

நாதமுனிகளோ ஆராவமுதனை வணங்கி உடனே ஆழ்வார் திருநகரி புறப்பட்டு, நம்மாழ்வாரை வணங்கினார். நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார் காலத்துக்குப் பின், வரிசையாக பல சீடர்கள் தொடர்ந்து ஆழ்வார் திருநகரியில் வழிபட்டனர். அவர்களிடம் நாதமுனிகள் நம்மாழ்வாரின் மற்ற பாசுரங்கள் பற்றி கேட்டார். அவர்களோ நம்மாழ்வார் விக்கிரகம் முன் பாசுரங்கள் பாடினால் நம்மாழ்வாரே நேரில் தோன்றி அளிக்கலாம்.. எங்களிடம் அவரது சில பாசுரங்கள் தவிர இல்லை என்று சொன்னார்கள்.

பிறகு நம்மாழ்வார் விக்கிரகம் முன் அமர்ந்து நம்மாழ்வாரின் பாசுரங்களை 12000 முறை பாடினார். அவர் பாடி முடிக்கையில், நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் காட்சி கொடுத்தார். அவருக்கு 4000 திவ்விய பிரபந்தங்களையும் அருளினார். இதைக்கண்ட நாதமுனிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நம்மாழ்வார் தன் மடியிலிருந்த ஒரு அழகான சிறிய சிலையைக் கொடுத்து நாதமுனிகளிடம் இதை தினமும் பூஜிக்கச் சொன்னார். நாதமுனிகளிடம் இந்தச் சிலையைக் கொடுக்கும் பொழுது "பொலிக! பொலிக!" என்று சொல்லிக் கொடுத்தார். கி.பி.1017ல் பிறக்கப்போகிற இராமானுஜருக்குக் கலியுகம் தொடங்கிய போதே கட்டியம் கூறியவர் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் கொடுத்த விக்கிரகம் தான் இன்றும் உலகைக் காத்துவரும் ஸ்ரீ இராமானுஜர். நாதமுனிகள் தான் அறிந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களை உலகறிய வெளியிட்டார். நாதமுனிகள் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களைத் தொகுத்தார்.

அந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களையும் உயிர் மூச்சாக மதித்து, அதை நம்மிடையே எளிய முறையில் பரப்பியவர் இராமானுஜர்.

நம்மாழ்வாருக்கு இராமானுஜரின் சிலை எப்படி கிடைத்தது? அதை நாளைய பதிவில் அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!

ஸ்ரீ இராமானுஜர் சரணம்

திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த
ப்ரபந்த காயத்ரி
என்னும்
ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி

பாசுரம் 2
கள்ளார் பொழில் தென் அரங்கன் * கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக்* குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு* ஒன்றறியேன் எனக்கு உற்ற பேரியல்வே.

...........தேன் வழியும் சோலைகளால் சூழப்பட்ட
அழகான திருவரங்கத்தில், அந்த உயர்ந்த
திவ்யதேசம் மூலம் மட்டுமே தனது பெருமைகள்
அனைத்தும் வெளிப்படும்படியாக அழகியமணவாளன்
சயனித்துள்ளான்.  தாமரைமலர் போன்ற
அழகும் செம்மையும் கொண்ட அவனது
திருவடிகளைத் தங்கள் மனதில் நிலை நிறுத்தாமல்
உள்ளவர்களும் இந்த உலகில் உண்டு.  
கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கிட்டியும்,
அதற்கு ஏற்ற பாக்கியம் பெறாத இந்த மனிதர்களை
[பெரியபெருமாளின் திருவடிகளைத் தங்கள்
நெஞ்சத்தில் எண்ணாதவர்களை], நான் விலக்க வேண்டும்.  திருக்குறையலூர் என்னும் திவ்யதேசத்தில்
அவதரித்த திருமங்கையாழ்வாரின் திருவடிகளின்
கீழே, எப்போதும் அகலாதபடி பக்தியுடன் இருப்பவர்
எம்பெருமானார் ஆவார்.  அவருடைய மிகவும்
உயர்ந்த குணங்கள் தவிர வேறு எதனையும்
என் மனம் சிந்திப்பதில்லை.  மிகவும் தாழ்ந்தவனாகிய
என் போன்றவனுக்கு இத்தகைய உயர்ந்த நிலை
ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று அறியமுடியவில்லை.......

ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு பகுதி அறிமுகம்

ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு பகுதி அறிமுகம்
 


இன்று முதல் வரலாறு சுருக்கம் ஆரம்பம் :
 

புரட்சித்துறவி என்று போற்றப்படும் ராமானுஜர் கி.பி. 1017-ல் சக ஆண்டு 939, கலி ஆண்டு 4118, வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது பெற்றோர் அசூரிகேசவசோமாயாஜுலு - காந்திமதி. குழந்தையைப் பார்க்க திருப்பதியிலிருந்து வந்த தாய்மாமன் திருமலைநம்பி, லட்சுமணன் அம்சமாக குழந்தை இருந்ததால் அதற்கு இளையப் பெருமாள் என்று பெயர் சூட்டினார். இளைய நம்பிக்கு எட்டு வயதான போது உபநயனம் செய்து வைக்கப்பட்டது. அவரது தந்தையே முதலில் கல்வி கற்பித்தார். அவரது பதினாறாவது வயதில் குஞ்சம்மாள் எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். அதன் பின் கொஞ்சநாட்களிலேயே அவரின் தந்தை காலமானார். தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார் இளைய பெருமாள்.
 

இந்த நிலையில், இளைய பெருமாளை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்தார் பெரிய நம்பி. அதே சமயம் பெரிய நம்பியிடம் கல்வி பயில திருவரங்கம் சென்று கொண்டிருந்தார் இளைய பெருமாள். இருவரும் மதுராந்தகம் பெருமாள் கோயிலில் சந்தித்துக் கொண்டார்கள். பெரிய நம்பி, இளைய பெருமாளை அங்கேயே மாணவனாக ஏற்று பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்தார். அப்போது அடியோடு திருப்பெயராக ராமானுஜர் என்று பெயரிட்டார். அன்று முதல் இன்று வரை அந்தப் பெயரே நிலைத்து விட்டது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், ராமானுஜர் துறவறம் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. அவரது துறவிக் கோலத்தைப் பார்த்த திருக்கச்சிநம்பி, யதிராஜா என்றழைத்தார். அதாவது துறவிகளின் அரசன் என்று பொருள். துறவிக்கோலத்தில் காஞ்சி கோயிலுக்குச் சென்றார் யதிராஜர். அவரைப் பார்த்த கோயில் அர்ச்சகர் ராமானுஜமுனி என்றழைத்தார். 

ராமானுஜர் பிட்சைக்குப் போகும் போது ஆண்டாளின் பாசுரங்களைப் பாடிச் செல்வது வழக்கம். இதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்று திருவரங்கத்து மக்களால் அழைக்கப்பட்டார். வில்லிப்புத்தூர் கோயிலுக்கு ராமானுஜர் சென்ற போது நம் கோயிலில் அண்ணார் என்று பக்தர்கள் அழைத்தார்கள். ஆளவந்தாரின் ஆதீனத்தை ஏற்றுக் கொண்ட பின் ஸ்ரீரங்கம் சென்ற ராமானுஜரை உடையவர் என்று போற்றினார்கள். ஐந்து ஆசிரியர்களின் பாதங்களில் அமர்ந்து பாடம் கேட்டதால் பஞ்சாசார்ய சீடர் என்று சொல்லப்பட்டார். பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்கியானங்களை எழுதி பாஷ்யம் அருளியதால் பாஸ்யக்காரர் ஆனார். ராமானுஜரை பெருமாளாகவே மக்கள் பார்த்தார்கள். அதனால் பயபக்தியுடன் எம்பெருமானார் என்றழைத்தார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் வழங்கியதால் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த பெருமான் என்று ராமானுஜர் பெயர் பெற்றார்.
 

ஸ்ரீபெரும்புதூரில் வாழும் வைணவர்கள் சுவாமி என்றே இவரை அழைத்தனர். ராமானுஜர் சில ஆண்டுகள் கர்நாடக மாநிலம் திருநாராயணபுரத்தில் வசித்தார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்படும்போது அங்கு வாழ்ந்த மக்கள் அவரைப் பிரிய மனமின்றித் தவித்தார்கள். அவர்கள் விருப்பப்படி தன்னைப்போல ஒரு விக்ரகத்தை உருவாக்கச் சொன்னார். கைகூப்பி விடைபெறும் கோலத்தில் சிலை வடிக்கப்பட்டது. அந்தச் சிலையைக் கட்டித் தழுவி தன் ஆற்றலை அதில் செலுத்திய ராமானுஜர், நான் இந்த விக்ரக உருவில் உங்களுடன் இருப்பேன். இந்தச் சிலையை என்னைப்போல் பாவித்து வருவீர்களாக என்று அருளாசி வழங்கினார். இத்திருமேனியை தாம் உகந்த திருமேனி என்று போற்றுவார்கள்.
 

இதே போல் அவர் அவதரித்த திருப்பெரும்புதூரில் அந்த ஊர்மக்கள் ராமானுஜருக்கு சிலைவைக்க விரும்பினார்கள். சிலை உருவானது .அந்தச் சிலையை அரவணைத்து தன் தெய்வீக ஆற்றலை சிலைக்குள் செலுத்தினார். அந்த விக்ரகத்தை தமர் உகந்த திருமேனி என்று போற்றுவர். ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் கோயில் வழிபாட்டு முறைகளை ஒழுங்குப்படுத்தி, அங்கு பூஜை முறைகள் செவ்வனே நடைபெறுவதைக் கண்ட வண்ணம் அங்கேயே தங்கியிருந்தார் ராமானுஜர். அப்போது சீடர்கள் அவரது உருவச் சிலை இருந்தால் வழிபடலாமே என்ற எண்ணத்தில் அவரிடம் அனுமதி வேண்டினார்கள்.
 

நூற்றிருபது வயதை எட்டியிருந்த ராமானுஜரின் உடல் நிலை சற்று மோசமாக இருந்தது. கல்லில் சிலை வடிக்குமளவு அவகாசம் இல்லை. எனவே சுண்ணாம்பு மற்றும் அரிய மூலிகைச்சாறுகள் கலந்த சுதை உருவம் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் அமைந்த சிலை மீது ஸ்ரீ ராமானுஜரின் காவி உடையைப் போர்த்தினார்கள். இதனால் ஸ்ரீராமானுஜர் உயிருடன் அமர்ந்திருப்பது போல் காட்சித்தந்தது. ஸ்ரீராமானுஜர், பிரம்ம மந்திரத்தின் வாயிலாக மூச்சைப் பிடித்துக் கொண்டு தமது சக்திகளை அந்தச் சிலையில் நிலை நிறுத்தினார். அருகிலிருந்த சீடர்களைப் பார்த்து இது என் இரண்டாவது ஆத்மா. எனக்கும் இந்த வடிவத்திற்கும் வேறுபாடு எதுவுமில்லை. இந்த பூதவுடலை விட்டு இந்தப் புதிய திருமேனியில் நான் குடி கொள்ளப் போகிறேன் என்று சொல்லி அருகிலிருந்த எம்பாரின் மடியில் திருமுடியையும், வடுகநம்பியின் மடியில்  தம் இரண்டு திருவடிகளையும் வைத்துக் கொண்டு, எதிரில் வீற்றிருந்த தம் பரமாச்சாரியாரான ஆளவந்தாரின் இரண்டு பாதுகைகளையும் தியானித்துக் கொண்டு பரமபதத்திற்குச் சென்றார் என்று கூறப்படுகிறது. அன்று சனிக்கிழமை, சக ஆண்டு 1059 (கிபி 1137), மாக மாதம், சுக்லபட்ச தசமி என்று வரலாறு கூறுகிறது. இதனை திருநாட்டுக்கு எழுந்தருளல் என்று வைணவர்கள் கூறுவர். அவரது பூதவுடலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த மண்டபம் அருகே தென்கிழக்கு மூலையில் அமர்ந்த நிலையில் பதப்படுத்தி தனிச்சந்நிதியில் எழுந்தருளச் செய்து வழிபடலாயினர். இத்திருமேனியை தாமான திருமேனி என்பர். பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, மற்றும்  அரிய மூலிகைகளினால் அன்று அவரது திருமேனி பதப்படுத்தப் பட்டதால், இன்றும் அவர் உயிருடன் அமர்ந்திருப்பது போல் காட்சி தருகிறார். இது குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும், இன்று தனிச்சந்நிதியில் ஸ்ரீராமானுஜரின் திருமேனியை தரிசிக்கும் போது நிஜ உருவத்தைக் காண்பது போல் தெரிகிறது. தற்பொழுதும் வருடத்திற்கு இரண்டு முறை சித்திரை திருவாதிரை மற்றும் ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று பச்சைக்கற்பூரம், குங்கமப்பூ, ஆகியவற்றின் தைலம் கொண்டு அத்திருமேனிக்கு காப்பிடுகிறார்கள். ஸ்ரீராமானுஜருக்கு பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். பெரும்பாலும் கைகளைக் கூப்பிய நிலையிலேயே அவரது வடிவம் இருக்கும். ஆனால், ஓரிடத்தில் மட்டும் சின் முத்திரையுடன் காணப்படுகிறார். அந்த இடம் தான் திருவேங்கடம். இங்கு திரிதண்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சின்முத்திரை என்றால் அத்வைதிகள் சொல்லும் பொருள் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது. சுட்டு விரல் பரமாத்மா; கட்டைவிரல் ஜீவாத்மா. ஆனால் அத்வைதக் கொள்கையை ஒப்புக் கொள்ளாத ஜீவாத்மா வேறு; பரமாத்மா வேறு என்று சொல்லும் ராமானுஜர் எப்படி சின்முத்திரை காட்டியிருக்க முடியும்? இதற்கு அவரே ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். என்ன முயற்சி செய்தாலும் சுட்டு விரல் நிமிர்ந்திருக்கும் போது கட்டை விரலால் சுட்டு விரலின் நுனியைத் தொட முடியாது. சுட்டு விரல் வளைந்து கொடுத்தால் தான் முடியும். அதாவது, பகவான் நம்மீது அருள் பாலித்தால் நாம் அவரை அடைய முடியும் என்று கூறியுள்ளார்.
 

வைணவத்தில் உயர்ந்தவன்  தாழ்ந்தவன் என்ற இன வேறு பாடில்லை. வைணவன் என்றாலே பெருமாள் பக்தன். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்று தான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜர் தான் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வாகித்து வருவதாக நம்புகிறார்கள். கோவில் வரவு - செலவு கணக்குகள் இப்பொழுதும் அவர் சன்னிதியில் வாசிக்கப்படுகிறது. இன்றும் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடத்திய பிறகு தான் பெருமாளுக்கு நடைபெறுகிறது.
 

உய்ய ஒரு வழி உடையவர் திருவடி
பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந்தவன் பல்கலையோர் தாம்மன்ன வந்த இராமா நுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.
(இராமானுச நூற்றந்தாதி - 1)

மலர்ந்த தாமரைப் பூவில் வாசம் செய்யும் திருமகளை தன் மார்பில் கொண்டிருக்கும் திருமால்; அந்தத் திருமாலின் புகழையே பாடு பொருளாக அமைத்து திருவாய் மொழி முதலிய பாசுரங்களை அருளிய நம்மாழ்வார்; அந்த நம்மாழ்வாரின் திருவடிகளைப் பணிந்து உய்ந்த இராமானுஜர். நெஞ்சமே ! பலவிதமான கலைகளையும் கற்ற மேன்மக்கள் அனைவருக்கும் சிறப்பான வழிகாட்டியாக, அவர்கள் அனைவருக்கும் அடைக்கலமாக விளங்கிய இந்த இராமானுசருடைய நாமங்களையே நாம் சொல்லி மகிழ்ந்து, இவர் திருவடித் தாமரைகளையே நிலையாகப் பற்றி வாழ்வோம்.

🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

காசி யாத்திரை

வாரணாசி தனிகுடும்பமாக  காசி  செல்பவர்களுக்கு சிறு தகவல்

காசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?*

*இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!*

*அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?*

*கீழே கொடுத்துள்ளேன்.*

*அனைவரும் தங்கலாமா?*

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi - 221 001 (U.P)
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404
(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stanad
Behind Sushil Cinema
Varanasi

கட்டணம் உண்டா?

உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்
அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.

மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள்.

இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்
டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்

குளியல் அறைகளில் Water Heater உண்டு
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு

சரி உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.

1
காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

2.
மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்

ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3. மாலை 4 மணி டீ உண்டு

4. இரவு 7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு.
AWB
ஓம் நமசிவாய சிவாய
மகாபெரியவா சரணம் 🙏🙏🙏


பவழமல்லி


பவழமல்லி

பவழமல்லிகை தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. ஆம் தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவழமல்லிமரமும் ஒன்று என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும். இது சவுகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

🌹பவழமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது. புட்ப விதி என்னும் நூலில் பவழ மல்லிகை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது.

🌹அதாவது நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவழமல்லியும் ஒன்று. இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும். பொதுவாக இந்த மரம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூத்துக் குலுங்கும். இறைவனின் பூஜைக்குரிய மலர்கள் அனைத்தும் செடிகளில் இருந்து தான் பறிக்கப்படும். ஆனால் பொதுவாக மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்கு பயன் படுத்த மாட்டார்கள். ஆனால் இதற்கு பவழ மல்லி விதிவிலக்காக உள்ளது. இது இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பவழமல்லிப் பூக்களை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்கு பயன் படுத்துவார்கள்.

🌹பவழமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.

🌹பவழமல்லி சிறுமரமாகக் காணப்படும். இந்தியா முழுவதும் பரவலாக பவளமல்லியை பார்க்கலாம். 1500 அடி உயரம் வரையுள்ள இடங்களில் வளரக்கூடியது. சுமார் 15 அடி உயரம்வரை வளரும். தண்டுபாகம் நான்கு பட்டைகளை உடையது. இலைகள் சற்று நீண்டு முட்டை வடிவில் சொரசொரப்புடன் இருக்கும்.

🌹பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும். கனிகள் வட்டவடிவில் உறை அமைப்பில் இருக்கும். செடியில் இருந்து உதிரும் போது இருபகுதியாக பிரிந்து விழும். அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறிய விதை இருக்கும். அந்த விதையை எடுத்து தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.

🌹இந்த அற்புதச் செடியைப்பற்றி வாயு புராணம் இவ்வாறு தெரிவிக்கிறது. பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால் சூரியன் இளவரசியை ஏற்கவில்லை. இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள். இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்து தான் பாரிஜாதம் என்ற செடி உருவானது.

🌹சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. இதனால் தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள். தன்னைக் கை விட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து. கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் என்று விளக்குவார்கள்.

🌹பாரிஜாதம் என்ற இந்த பவழமல்லி, திருமாலுக்கு உகந்தது. பவழமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாக நம்புகிறார்கள். தேவலோகத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ணபகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவழமல்லிமரத்தை கொண்டு வந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம். ஆனால் மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்றுகூறப்படுகிறது.

🌹இத்தகைய பவழமல்லியில் இருந்து நம் முன்னோர்கள் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான மருந்துகளையும் கண்டு பிடித்து நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். பவழமல்லி மரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவழமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து.

🌹கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. பவழமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. பவழமல்லி மரத்தின் வேரை மென்று தின்றால் பல்லீறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும். விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது. பவழ மல்லிவிதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்!

🌹தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திரு வைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவழமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

🌹திருக்களரில் இறைவன் பாரிஜாதவனேஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இவருக்கு களர் முலை நாதேஸ்வரர் என்றும் பெயருண்டு. இறைவியை, இளம் கொம்பன்னாள், அமுதவல்லி என்று பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். இத்தலம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 21 கி.மீ. தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழியில் அமையப்பெற்றுள்ளது.

🌹தில்லையில் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தானும் அந்த பாக்கியத்தைப் பெற நினைத்தார். இத்தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாத செடியை இங்கே கொண்டு வந்து வளர்த்து வந்தார். அந்தச் செடியால், நாளடைவில் வளர்ந்து சில நாட்களில் அந்தப் பகுதி முழுவதுமே பாரிஜாத வனமாக மாறியது. அதன் பிறகு ஒரு சிவலிங்கத்தை பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து தேவதச்சன் மூலமாக கோயிலை எழுப்பி வழிபட்டு தவம் செய்து வந்ததாக கோயில் ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.

🌹துர்வாசருக்கு இறைவன் நடராஜர் பிரம்ம தாண்டவ தரிசனம் தந்து அருளினார். திருக்களர் திருத்தலத்தில் வழிபாடு செய்யும் பக்தர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம். இத்தலத்தில் பாரிஜாதகராக அருள்
பாலிக்கும் இறைவனைப்பற்றி திரு ஞானசம்பந்தர் பாடியிருப்பதாவது:

🌹“பாக்கியம் பல செய்தபத்தர்கள் பாட்டொ டும்பலபணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள் வாக்கின் நான்மறை யோதினாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய் ஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே.”

திருவண்ணாமலை மாவட்டத்தில்
ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் திருத்தலத்தில் பவழமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. இத்தலத்தில் குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திரகாமேட்டீஸ்வரராக ஈசன் அருள்பாலித்து வருகிறார்.

🌹வீட்டில் வளரக்க கூடிய இந்த பவழமல்லி மரத்தில் பட்டு வீசும் காற்று ஆரோக்யமானது நம் உடல் நலத்தை பாதுகாக்கக் கூடியது.