திங்கள், 5 ஆகஸ்ட், 2019

திவ்ய தேசங்கள் அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்

மூலவர் : சாரநாதன்
தீர்த்தம் : சார புஷ்கரிணி
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருச்சேறை
மாவட்டம் :  தஞ்சாவூர்

பாடியவர்கள் : பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே.திருமங்கையாழ்வார்
 
விழா : தைப்பூச விழா பத்து நாள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்விழா. காவிரித்தாய்க்கு காட்சியளித்த தைமாதம், பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இந்த சாரபுஷ்கரணியில் நீராடுவது என்பது மகாமகத்திற்கு ஈடானது என்பதால் இதை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.  
      
ஸ்தல சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்)நிறைந்தது. எனவே தான் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி "திருச்சேறை' ஆனது.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். விலாசம் : அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை- 612605 தஞ்சாவூர் மாவட்டம்

தகவல் : இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. காவிரித்தாய் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.கோயில் நீளம் 380 அடி. அகலம் 234 அடி. கிழக்கு நோக்கிய 90 அடி உயர பிரமாண்டமான ராஜ கோபுரம். கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலிக் கின்றனர். கோயில் உள்பிர காரத்தில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் சன்னதிகள் உள்ளன.
 
ஸ்தலபெருமை : பூதேவியின் தந்தை மார்க்கண்டேயர் மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக் கிறார் மார்க்கண்டேயர் இத்தலத்தில் தான் முக்தியடைந்தார். உப்பிலி யப்பன் கோயிலில் தனது மகள் பூதேவியை சிறுவயதிலேயே பெருமாள் விரும்புகிறார். அதற்கு மார்க்கண்டேயர் சுவாமி! இவள் சிறு பெண். இவளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்க தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வாறு இவளை திருமணம் செய்து கொள்ள முடியும்,''என்கிறார். அதற்கு பெருமாள்,""இவள் உப்பே போடாமல் சமைத்தாலும், அதை நான் திருப்தியாக ஏற்று கொள்வேன்''என்று கூறி பூதேவியை திருமணம் செய்து கொள்கிறார். அன்றிலிருந்து பெருமாள் உப்பிலியப்பன் என்ற திருநாமத்துடன் உப்பில்லாத நைவேத்தியத்தை ஏற்றுகொள்கிறார்.மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி சன்னதியின் திருப்பணிக்காக அழகிய மணவாள நாயக்கர் மன்னன் ஆணைப்படி இவ்வூர் வழியாக வண்டிகள் சென்றன. வண்டிக்கு ஒரு கல்வீதம் இக்கோயில் திருப்பணிக்கு நரசபூபாலன் என்பவன் மன்னனுக்கு தெரியாமல் இறக்கி வைத்தான். இதைக்கேள்விப்பட்ட மன்னன் விசாரிக்க இங்கு வந்தான். இதனால் பயந்த நரசபூபாலன் இத்தல பெருமாளை வேண்டினான். பெருமாள் மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்கும் சிறப்பாக திருப்பணிகள் செய்தான்.
 
ஸ்தல வரலாறு : பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித்தாய் பெருமாளிடம் அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும் என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என காவிரி கூறியவுடன் கருட வாகனத்தில் சங்கு சக்கர தாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து வேண்டும் வரம் கேள்' என்றார். அதற்கு காவிரி தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும் என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.