வியாழன், 19 டிசம்பர், 2019

பண்டரீபுரம் ராமதாஸர்

ராமதாஸர் ஒரு சிறந்த ராமபக்தர். இவர் அனுமாரின் அம்சமாகவே இந்த உலகத்தில் அவதரித்தார். அவர் பிறக்கும்போது சிறியதாக ஒரு வால்கூட இருந்தது. நாள் ஆக ஆக அது தானே மறைந்துவிட்டதாம். எப்போதும் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் என்றே ஜபம் செய்து கொண்டிருப்பார். இந்த மந்திரத்தில் பதின்மூன்று எழுத்துக்கள் இருப்பதால், பதின்மூன்று கோடி கணக்கு வைத்து ஜபம் செய்வார். இவர் ஒருமுறை ஜபம் செய்து விட்டால், ராமருடைய வில்லில் உள்ள மணி ஒரு தரம் அடிக்குமாம். இப்படி பலமுறை பதின்மூன்று கோடிகள் ஜபம் செய்தவர். இடையில் ஒரு கௌபீனம், கையில் ஜபமாலை, நீண்ட முடி, தாடி, கால்களில் பாதுகை, இதுதான் அவருடைய உருவம். கண்கள் எப்போதும் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். சத்ரபதி சிவாஜியின் குரு இவர். ராமதாஸர் கோதாவரி நதிக்கரையில் உள்ள கஞ்சன்காட் என்ற இடத்தில் ஒரு குகையில் தங்கி ஜபத்தில் ஈடுபட்டவராக இருப்பார். பண்டரீபுரம், அருகிலுள்ள மகா÷க்ஷத்திரம். ஒரு தாயாருக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் அம்மா, அம்மா என்று தாயாரைச் சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கும். தன்னைச் சுற்றி வரும் குழந்தையைக் காட்டிலும், தன்னை விட்டு விலகியிருக்கும் குழந்தையையே தாய் உள்ளம் அதிகமாக நினைக்கும். அதுபோல் தான் பகவானும்.

பாண்டுரங்கனை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருந்தாலும், பாண்டுரங்கனோ ராமதாஸர் வருகின்றாரா? எப்போது என்னைப் பார்க்க வருவார்? இவ்வளவு பக்கத்தில் இருந்துகொண்டு என்னைப் பார்க்க ஏன் வரவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார். ராமதாஸர் ஏன் பாண்டுரங்கனை பார்க்க வரவில்லை? அதற்கு ஒரு காரணம் உண்டு. சிவ பக்தர்கள் பாண்டுரங்கனை சிவனே என்கிறார்கள். பண்டரீபுரத்தில் சிவராத்திரி விமரிசையாக இருக்கும். திகம்பரராக இருப்பதால், ஜைனர்கள் எல்லாம் மஹாவீரர் என்கிறார்கள். வைஷ்ணவர்கள் எல்லாம் கையில் சங்குடன் ருக்மணியுடன் இருப்பதால் இவன் கிருஷ்ணனே என்கிறார்கள். ராமதாஸருக்கு ஒரு பிடிவாதம். ராமரைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை. ராம நாமத்தைத் தவிர வேறு நாமத்தை ஜபம் செய்வதில்லை. ராமாயணத்தைத் தவிர வேறு எதையும் பாராயணம் செய்வதில்லை. இப்படியிருக்க எந்த மூர்த்தி என்றே நிர்ணயம் ஆகாத பாண்டுரங்களை எப்படித் தரிசனம் செய்வது? அதனால் தான் போகவில்லை. ஒரு நாள் சிவாஜி, ராமதாஸரை வணங்கி விட்டு, அவர்முன் கைகூப்பி பணிவுடன் நின்றார். ராமதாஸரும் வந்த விஷயத்தைக் கேட்டார். நாளை ஏகாதசி, பாண்டுரங்கனுக்கு ஒரு பெரிய திருமஞ்சனம், பூஜை எல்லாம் ஏற்பாடு செய்துள்ளேன், தாங்கள் தான் அதை முன்னின்று நடத்திக் கொடுக்க வேண்டும் என சிவாஜி வேண்டினார். நீ பூஜையை நல்ல முறையில் நடத்து, ஆனால் என்னால் வரஇயலாது என்று ராமதாஸர் கூறினார். அதற்கு சிவாஜி, தங்களால் நாளை வரமுடியாது என்றால், வேறு ஒருநாளில் பூஜை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

ராமதாஸரோ, நீ எப்போது ஏற்பாடு செய்தாலும் நான் வருவதற்கில்லை, திட்டமிட்டபடி நாளையே நடக்கட்டும் என்று கூறினார். சிவாஜியோ, தாங்கள் ஏன் வருவதற்கில்லை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வினவினார். வேறு ஒன்றும் இல்லை. நான் ராமபிரானைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை என்ற நியமத்தில் இருப்பவன். அதனால் தான் நான் வருவதிற்கில்லை என்று கூறினேன். குருவானவர், சீடர்கள் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்காமல் ஊக்குவிக்க வேண்டும், அதனால் தான் பூஜையை உன்னை நடத்தச் சொன்னேன் என்றார். சிவாஜியோ, நீங்கள் வரவில்லையென்றால் அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தி விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தான். சரி! உன் ஆசைக்காக காலையில் வந்து ஐந்து நிமிடங்கள் இருந்துவிட்டு வந்துவிடுவேன் என்று கூறி சிவாஜியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு, ஜபமாலையை கையில் உருட்டிக்கொண்டு ஜபம் செய்து கொண்டே பண்டரீ வந்துவிட்டார். பண்டரீ வந்தால், அங்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சிவாஜி வருவதாகவோ, திருமஞ்சனம் ஏற்பாடாகி இருப்பதாகவோ ஒரு தகவலும் இல்லை. ஜபம் செய்து கொண்டு வந்தவர் தன்னை அறியாமல் கோயிலுக்குள் வந்து விட்டார். கோயிலுக்குள் வந்து தெய்வத்தை வணங்காமல் அலட்சியம் செய்யக்கூடாது என்பதால் உள்ளே சென்று தரிசனம் செய்தார். பாண்டுரங்கனே தன்னை தரிசிக்க இப்படி ஒரு லீலை புரிந்துள்ளார் என அப்போது தான், ராமதாஸரின் மனதில் தோன்றியது. உடனே ராமதாஸர், ஹே பாண்டுரங்கா! நீ ராமனா அல்லது பாண்டுரங்கனா! ராமனாக இருந்தால் சரயு நதிக்கரையை விட்டு ஏன் இங்கு வந்தாய்? சீதாவை விட்டு விட்டு ருக்மணி தேவியுடன் இங்கு காட்சி தருகிறாய்? என புலம்பினார். அடுத்தவிநாடி அங்கு பாண்டு ரங்கனைக்காணவில்லை. அந்த இடத்தில் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதமான ராமச்சந்திர மூர்த்தி தனது விஸ்வரூபதரிசனம் காட்டி, ராமனும் நானே, பாண்டு ரங்கனும் நானே என்பதை உணர்த்தினார்.
ஸ்ரீஹர்ஷர்

நளமகராஜாவின் சரித்திரத்தை வடமொழியில் எழுதியவர் ஸ்ரீஹர்ஷர். இவருடைய தந்தை பெயர் ஸ்ரீஹிரர். ஸ்ரீஹிரரின் பெரும் புலமை அவரை மன்னர்பால் ஈர்த்தது. மன்னர் அவரைத் தனது ஆஸ்தான புலவராக்கிப் பொன்னும் பொருளும் கொடுத்து ஆதரித்தார். ஸ்ரீஹிரரின் மனைவி மாமல்ல தேவி.

ஒரு சமயம் அயல்நாட்டுப் புலவர் ஒருவர் இந்த மன்னனின் அரசவைக்கு வந்தார். அவர் மன்னனிடம், என் புலமையோடு போட்டி போட உம்மிடம் யாராவது புலவர் இருந்தால் வரச்சொல்லும். இல்லையென்றால் ஒரு கோடிப் பொற்காசுகளைக் கொடுத்து, எனது புலமைக்கு ஈடான புலமை உமது நாட்டில் இல்லையென்று எழுதிக்கொடுங்கள் என்றார். மன்னன் சிரித்தான். புலவரே, கர்வம் வேண்டாம். எனது சபையில் உள்ள என் ஆஸ்தான புலவர் ஸ்ரீஹிரர் ஒருவரே போதும், உமது சவாலை எதிர்கொள்ள என்றார். நாளை உங்களுடன் அவர் போட்டியிவார் என்றார் மன்னர். ஸ்ரீஹிரரும் தேச கௌரவத்தைக் காக்க அவருடன் போட்டியிட்டார். ஆனால் அவருடைய புலமை வெளிநாட்டுப் புலவரின் புலமை முன் எடுபடாமல் தோற்றுப் போனார். மன்னன் குனிந்த தலையுடன் ஒரு கோடி பொற்காசுகளையும் கொடுத்து, தன் தேசப்புலமையைத் தாழ்மைப்படுத்தி ஓலையும் எழுதிக் கொடுக்க வேண்டியதாயிற்றே என்று வருத்தமுற்றார். வெட்கமடைந்த ஸ்ரீஹிரர் வீட்டுக்குப் போய் தன்மானத்துடன் நாட்டின் கௌரவமும் தன்னால் தாழ்ந்ததே என்று வருத்தமடைந்தார். அந்த வருத்தத்தில் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் என்பதற்கேற்ப தனது வாழ்நாளை முடித்துக் கொண்டார். அவர் மனைவி மாமல்ல தேவி அழுதாள், புரண்டாள். என்ன செய்வது? விதி சதி செய்துவிட்டது. கணவனில்லாத கைம்பெண்ணாக வாழ்வதை விட மானம் பெரிதென உயிர்விடுவதையே அவள் விரும்பினாள். ஆனால், தனது மகனை என்ன செய்வது என்ற கவலையும் கூடவே எழுந்தது. அவளது தந்தை அவளுக்குச் சிறிய வயதில் சிந்தாமணி என்ற மந்திரத்தை உபதேசம் செய்திருந்தார். மகளே! அந்த மந்திரத்தை 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஜெபித்தாலோ அல்லது ஒருநாள் ஒரு இரவு முழுவதும் ஒரு உயிரற்ற சடலத்தின் மீது அமர்ந்து எந்த பயமும் இல்லாமல் உச்சரித்தாலோ சரஸ்வதி மாதா உன் முன் தோன்றுவாள், நீ விரும்பும் வரத்தை அவளிடமிருந்து பெறலாம் என்று கூறியிருந்தார். தனது கணவனால் தேசத்துக்கு ஏற்பட்ட களங்கம் மகன் ஸ்ரீஹர்ஷனால் நீங்க வேண்டுமென விரும்பிய அவள், தனக்குத் தெரிந்த அந்த மந்திரத்தை மகனுக்குச் சொல்லிக் கொடுத்து, தொடர்ந்து பயிற்சியளித்தாள். சில நாட்களில் பயிற்சி முடிந்தது.

ஒருநாள் இரவு தன் மார்பின்மீது அமர்ந்து மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லும்படி மகனை வற்புறுத்தினாள். அப்படி அவன் சொல்லிக்கொண்டிருந்த போது தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு மாண்டு போனாள். இதையறியாத சிறுவன் தாயின் அரவணைப்பில் தானே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மந்திரத்தை விடிய விடிய உச்சரித்துக் கொண்டிருந்தான். அவன் முன்பு சரஸ்வதி பேரழகுடன் தோன்றினாள். சிறுவனின் நாக்கில் ஓம் என்று எழுதினாள். அவன் மிகச் சிறந்த கவிஞனாவான் என்று வாக்களித்தாள். பிறகுதான் தாய் இறந்து கிடப்பதை அறிந்தான் சிறுவன், அவளுக்கு மீண்டும் உயிரளிக்க வேண்டினான். சரஸ்வதி அவளை உயிருடன் எழுப்பினாள். இந்த மகானே நள சரிதம் எழுதிய  ஸ்ரீஹர்ஷர். மனிதனாகப் பிறந்தவன் எந்தவிதமான கஷ்ட சூழ்நிலையிலும் மனம் கலங்கக் கூடாது என்று அறிவுறுத்தியவர். நைஷதம் என்ற வடமொழி நூலையும் இவரேதான் எழுதினார். ஒழுக்கம், நேர்மை, நிதானம், கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்வியலை இவர் தனது நூலில் வற்புறுத்தியுள்ளார். இந்த வடமொழி நூல் அதிவீரராம பாண்டியனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
சிரஞ்ஜீவி அஸ்வத்தாமா!

பூதவுடல் அகன்றாலும் புகழுடன் நிரந்தரமாக இருப்பவர்களை சிரஞ்ஜீவீ என்பார்கள் அப்படி, ஏழு சிரஞ்ஜீவிகளில் முதலாமவன் அஸ்வத்தாமா ! 60-ஆம் கல்யாண வைபவத்தில், அஸ்வத்தாமானை வணங்குவது உண்டு. தனது தவத்தால் ஈசனை மகிழ்வித்த துரோணாச்சார்யர், இறையருள் அம்சத்துடன் இணைந்த மகனைப் பெற்றார். அவன் தான் அஸ்வத்தாமா. இவன் பிறந்ததும், உச்சை : ஸ்ரீ அவஸ்ஸீ என்ற தேவலோக குதிரையின் சத்தம் போன்ற ஒலியை எழுப்பியதால், அஸ்வத்தாமா எனப் பெயர் அமைந்ததாம் ! சக்தியின் அளவை, குதிரை வேகத்துக்கு ஒப்பிடுவார்கள், அல்லவா ?! போர்க்களத்தில் குதிரைபோல் செயல்படும் தகுதி கொண்டவன், இவன். வேதம் ஓதும் பரம்பரை, ஆயுதம் ஏந்தாது. அரசாணை காரணமாக அஸ்திரத்தை ஏந்தினான் அஸ்வத்தாமா. ஸ்ரீமந் நாராயணரின் அருளால், நாராயண அஸ்திரத்தை அஸ்வத்தாமாவுக்கு வழங்கினார் துரோணர். அத்துடன், இதனை தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அதுவும், தருணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார், அஸ்திர பலத்துடன் அவனது பலமும் சேர்ந்தது. தனுர் வேதம் கற்றதால், அஸ்திரத்தின் முழு அறிவும் அவனிடம் இருந்தது. மந்திரத்தின் மூலம் தேவதைகளின் அம்சம் அஸ்திரத்தில் இணைவதால், எதிரியை அழிப்பதிலான நம்பிக்கை உறுதிப்பட்டுவிடும். மகாபாரத யுத்தத்துக்காகவே பிறந்தவன்போல், போரில் பெரும் பங்காற்றினான் அஸ்வத்தாமா; பீமனின் புதல்வன் கடோத்கஜனையும், அவனுடைய மகன் அற்ஜனபர்வாவையும் அழித்தான்; இதனால், பீமனின் பரம்பரையே நிர்மூலமானது. அதுமட்டுமா ? துருபத ராஜகுமாரன், சத்ரும்ஜயன், பலாநீகன், ஜயாநீகன், ஜயாச்வான், அரசன் சிருதாஹு போன்றவர்களை அழித்து, வெற்றிக்கு உரமூட்டினான், துரியோதனனுக்கு ! குந்திபோஜனின் பத்து மகன்களையும் அழித்து, எதிரிகளுக்கு தனது வீரத்தை உணர்த்தினான். கோழைகள், ஏமாற்று வழியில் தன்னுடைய தந்தையை அழித்த சேதி கேட்டு, கொதித்தெழுந்தான்.

நாராயண அஸ்திரத்தைப் பயன்படுத்தி, த்ருஷ்டத்யும்னனை அழிக்க முற்பட்டான். இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தினால், போரின் போக்கினை திசைதிருப்பிவிடும் என அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், அனைத்து வீரர்களையும் தேரில் இருந்து இறங்கி, ஆயுதங்களைக் களைந்து, அஸ்திரத்துக்கு அடிபணியும்படி உத்தரவிட்டார். அப்படிச் செய்தால் தான், அஸ்திரத்துக்கு இரையாகாமல் தப்பிக்க முடியும் ! ஆனால், ஸ்ரீகிருஷ்ணரின் வார்த்தையை பீமன் கேட்கவில்லை. நாராயணாஸ்திரம், அவனைத்  தாக்க முயன்றது. அப்போது, அவனை வலுக்கட்டாயமாக தேரிலிருந்து இறக்கிக் காப்பாற்றினார். கிருஷ்ண பகவான் ! நாராயணாஸ்திரம் வலுவிழந்தும்கூட, பதறவில்லை அஸ்வத்தாமா. முழு நம்பிக்கையுடன் ஆக்னேயாஸ்திரத்தை ஏவினான். நெருப்பை உமிழும் அந்த அஸ்திரத்தால், திக்குமுக்காடிப் போனார்கள் எதிரிகள், பகவான் கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் நெருங்கவில்லை அஸ்திரம். அதுமட்டுமின்றி, த்ருஷ்டத்யும்னனையும் அழிக்க இயலவில்லை. இதைக் கண்டு அதிர்ந்தான் அஸ்வத்தாமா. அப்போது வியாசர் தோன்றி, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமந் நாராயணன் ஆவார். அர்ஜுனன், அவரது அம்சத்துடன் விளங்கும் நரன். நர நாராயணரை வெல்வது சுலபமல்ல என அறிவுறுத்தினார். எனவே, நர நாராயணர்களை மனதில் வேண்டி, படைகளுடன் வெளியேறினான் அஸ்வத்தாமா, பிறகு, கர்ணனின் தலைமையில் போரில் இணைந்தவன், த்ருஷ்டத்யும்னனை அழிக்காமல் அஸ்திரத்தைக் களையமாட்டேன் என சூளுரைத்தான். 18-ஆம் நாள் யுத்தம். பீமனும் துரியோதனனும் கதாயுதத்தால் சண்டையிட்டனர். இதில் அடிபட்டு தரையில் வீழ்ந்தான் துரியோதனன். அவனை அங்கேயே விட்டுவிட்டு, பாண்டவர்கள் வெளியேறினர். வேதனையுடன் இருந்த துரியோதனனுக்கு அருகில் ஸஞ்சயன் வந்தார். அஸ்வத்தாமா, கிருபாசார்யர், கிருதவர்மா ஆகியோரை அழைத்தான் துரியோதனன்; நடந்தவற்றை விளக்கினான். அறத்துக்குப் புறம்பான வழியில் துரியோதனனை பீமன் வீழ்த்தியதை அறிந்து, கோபமுற்றான்; பாண்டவர்களைப் கூண்டோடு அழிப்பேன் எனக் கொக்கரித்தான் அஸ்வத்தாமா. இதையடுத்து, கௌரவப் படையின் சேனாதிபதியானான்.

பதவியேற்ற அன்றைய இரவு, அஸ்வத்தாமா தூங்கவே இல்லை. கொடுத்த வாக்குறுதியால் தூக்கம் வரவில்லை. தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு, அருகில் இருக்கும் காட்டுக்குச் சென்றான். உடன் இருந்த இருவரும் உறங்கிவிட, இவன் மட்டும் மரத்தடியில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடுமென ஆந்தையின் ஒலி கேட்டு, மரக்கிளையை கவனித்தான். ஆந்தை ஒன்று, கூட்டினில் உறங்கிக்கொண்டிருந்த காக்கைக் குஞ்சுகளை அழித்துவிட்டு வெளியேறியது. சட்டென்று அவனுக்குள், பாண்டவர்களின் வாரிசுகளையும் அப்படித்தான் அழிக்கவேண்டும் எனச் சிந்தித்தான். இது தெய்வம் காட்டிய வழி எனச் சிலிர்த்தான். தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி, தனது திட்டத்தை எடுத்துரைத்தான். ஆனால் கிருபாசார்யர், தவறான வழியில் பழிவாங்குவது தவறு; கௌரவ அழிவுக்குக் காரணமாகிவிடும். வேண்டாம். எதையும் போர்க்களத்தில் சந்திப்போம்; சாதிப்போம் என்றார். அவற்றைக் கேட்கும் மனநிலையில் அஸ்வத்தாமா இல்லை. வேறுவழியின்றி, மூவரும் அன்றிரவே பாண்டவர்களின் கூடாரத்தை நெருங்கினர். இருவரையும் காவலுக்கு வைத்துவிட்டு, தனியே உள்ளே நுழைந்தான் அஸ்வத்தாமா. அங்கே இருந்த காவலன் ஒருவன் தடுத்து நிறுத்த, அஸ்வத்தாமாவிடம் இருந்த அஸ்திரங்கள் யாவும் மறைந்தன. அந்தக் காவலாளி, ஈசனே என அடையாளம் கண்டு கொண்டான் அஸ்வத்தாமா ! அவரைப் பணிந்து வணங்கி, எனது செயலில் வெற்றி பெற ஒரு வாள் தந்து உதவுங்கள் என வேண்டினான். அதன்படி உடைவாள் ஒன்றைத் தந்து மறைந்தார் ஈசன். அந்த வாளுடன் உள்ளே நுழைந்தான் அஸ்வத்தாமா. ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த த்ருஷ்டத்யும்னன், உத்தமோஜா, யுதாமன்யு, சிகண்டி மற்று திரௌபதியின் ஐந்து புதல்வர்கள் ஆகியோரைக் கண்டதுண்டமாக வெட்டி வீழ்த்தினான். அதையடுத்து, துரியோதனனிடம் சென்று, வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகச் சொன்னான். அந்த நிம்மதியுடன் செத்துப் போனான் துரியோதனன். மகன்கள் இறந்த சேதி கேட்டுக் கலங்கித் தவித்தாள் திரௌபதி. அஸ்வத்தாமாவின் சிரசைக் கொய்து உன்னிடம் தருகிறேன் என சூளுரைத்தான் அர்ஜுனன். ஸ்ரீகிருஷ்ணருடன் தேரில் ஏறிச் சென்று, அஸ்வத்தாமாவுடன் போரிட ஆயத்தமானான்.

அஸ்வத்தாமாவுக்கு பிரம்மாஸ்திரத்தை ஏவத் தெரியும். ஆனால் அதனைத் திரும்பப் பெறத் தெரியாது, நேருக்குநேர் போர் புரியும் வேளையில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும். அர்ஜுனனை வீழ்த்தவும் வேறு வழியின்றி பிரம்மாஸ்திரத்தை ஏவினான் அஸ்வத்தாமா. அதேவேளையில், அர்ஜுனனும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அப்போது வியாசரும் நாரதரும் வந்து, உலகை அழிவிலிருந்து காப்பாற்ற, இருவரிடமும் பிரம்மாஸ்திரத்தை திரும்பப் பெறும்படி வேண்டினர். அதற்கு இணங்க, அர்ஜுனன் அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றான். ஆனால், அஸ்வத்தாமாவால் அஸ்திரத்தைத் திரும்பப் பெற இயலவில்லை. முழு அழிவிலிருந்து திசை திருப்பும் வகையில், உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை நோக்கித் திருப்பினான். அப்போது, பகவான் கிருஷ்ணர், அந்த சிசுவைக் காத்தார்; பரீக்ஷித்து உதயமாவதற்கு உதவினார். பிறகு அஸ்வத்தாமாவைச் சிறைப்பிடித்து, திரௌபதியிடம் நிறுத்தினான் அர்ஜுனன். இரக்க சுபாவம் கொண்ட திரௌபதி, அவனை மன்னிக்கும்படி கூறினாள். அவனது சிரசில் உள்ள ரத்தினத்தை எடுத்து,திரௌபதியிடம் வழங்கினான் அர்ஜுனன். பின்னர், பாண்டவர்களுடனான பகையை மறந்தான் அஸ்வத்தாமா என்கிறது புராணம்! அரசனாகப் பிறக்கவில்லை; அரசனாகவும் ஆசைப்படவில்லை. காலத்தின் தூண்டுதலால் களம் இறங்கினான். அரசாணையை மதித்தான். எடுத்த காரியத்தை முடிப்பதில் வெற்றி கண்டான். பாண்டவர்களின் தலைமுறையை வேரோடு அழித்தான். உத்தரையின் கர்ப்பத்தை அழிக்க முனைந்தான். அதில் அவனுக்குத் தோல்வி இல்லை. பகவான் கிருஷ்ணரின் தலையீட்டால், இறந்த குழந்தை உயிர் பெற்றது. மரணப் படுக்கையில் இருந்த துரியோதனனுக்கு பாண்டவர்களின் இந்த அழிவு சொல்லப்பட.... நிம்மதியுடன் இறந்தான் துரியோதனன். ஆக, இறக்கும் தருணத்தில் அவனுக்கு நிம்மதியைத் தந்தான் அஸ்வத்தாமா. போரில் கலந்து கொள்ளமாட்டேன் என்ற ஸ்ரீகிருஷ்ணரை, திரைமறைவில் அவர்களுக்கு உதவி செய்யத் தூண்டியது, அஸ்வத்தாமாவின் வீரம். தனது அழிவை பொருட்படுத்தாமல், திரும்பப் பெற முடியாது என்று தெரிந்தும் அஸ்திரத்தைத் திசை திருப்பிவிட்ட அவனது நெஞ்சுரம், வாக்குறுதியைச் செயல்படுத்துவதில் இருந்த உறுதி ஆகிய இரண்டுமே வெளிப்பட்டது !

தகாத வழியில் தந்தையைக் கொன்றவர்களை, அதே வழியில் அழிப்பதில் தவறொன்றுமில்லை. உள்நோக்குடன் செயல்படுபவனை அதே வழியில் எதிர்கொள்ளலாம் என்கிறார் சாணக்யன் (சடே சாட்யம் ஸமாசரேத்). தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் மோதலை ஏற்படுத்தி, கடைசியில் தர்மம் வெல்லும் எனும் தத்துவத்தை உணர்த்த மகாபாரதத்தைப் பயன்படுத்தினார் கிருஷ்ணர்.  பாண்டவர்களைக்கொண்டு, கௌரவர்களை அழிக்க முடிந்தது. ஆனால், பாண்டவர்களை கிருஷ்ண பரமாத்மா அழிப்பது பொருந்தாது. அன்பைச் செலுத்திய பாண்டவர்களை அன்பு செலுத்தியவன் அழிப்பது முரணல்லவா ?! விஷச் செடியாக இருந்தாலும், அதை வளர்த்தவன் அழிக்கத் தயங்குவான் (விஷ விரு÷ஷாபிஸம்வர்...). இரு சாராரும் அழிவைச் சந்திக்க வேண்டும் என்பதே கிருஷ்ணரின் எண்ணம். அதை நிறைவேற்ற கிருஷ்ணருக்கு மறைமுகமாக உதவினான் அஸ்வத்தாமா. தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில், அவன் துயரத்தைச் சந்தித்தது அவனது பெருந்தன்மை, வீரத்தின் மறுஉருவமும் அவனே ! அவனது மனஉறுதியை எவராலும் குலைக்க முடியவில்லை. செயல்படுத்துவதில் சுயமாக இறுதி முடிவெடுக்கு திறன்ம் அவனிடம் உண்டு. அதர்மத்தின் மூலம் தந்தையையும் துரியோதனனையும் கொன்றனர். இது, ஆறாத காயத்தை உண்டு பண்ணியது; இலக்கினை அடைவதற்கான வழியை ஆராய முற்படவில்லை அவன். மாற்று வழியில் சென்றால், இலக்கை அடையமுடியாது. அஸ்வத்தாமாவின் சரித்திரம், நாம் சிந்தித்துச் செயல்படுவதற்கான திறவுகோல்; வழிகாட்டி  ! மனோவலிமையும் செயல்படுவதில் தீவிரமும் கொண்டு தன்மானத்துடன் வாழ வேண்டும்; உலக நன்மைக்கு பங்கம் வராதபடி செயலாற்ற வேண்டும். அஸ்வத்தாமா நிலைத்த புகழுடன் இருப்பதற்குக் காரணங்கள், இவைதான் !
சாது சிதம்பர சுவாமிகள்!

சாது சிதம்பர சுவாமிகள். இவரது பெற்றோர் சண்முக சுவாமிகள் - உலகம்மை. இவர்  20.10.1922 வெள்ளிக்கிழமை, தீபாவளி தினத்தன்று சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தார்.  இவரது ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியிலுள்ள  வல்ல நாடாகும்.  இவர்தான்  பின்னாளில் அனைவராலும் போற்றப்பட்ட சாது சிதம்பர சுவாமிகள் ! இவர் வள்ளலார் வழி வந்தவர் என்பதை அருட்பெருஞ்ஜோதி அணிந்துரை பாடலில் காணலாம்.

அருட்பெரும் ஜோதி அருட்பிரகாசர்
அகத்தும் புறத்தும் அணிந்தெழுந்து
பொருட்பெரும் உலகில் புதுயுகம் தோன்றப்
போந்த நாள் தருமச் சாலை நாளாம்
மருட்டவிர்த் தன்பர் மகிழ்வினில் வாழ
வல்ல நாட்டடிகள் வழி திறந்தார்
அருட் சுடர் உள்ளே அகவற் பொருளை
அருட்குரு வாய்க்கண்டு போற்றுதுமே

என்பதே அப்பாடல். வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வகுத்தருளிய பாதையிலேயே தன் ஆன்மிகப் பணியைச் செய்துவந்தார். கருணை, அடக்கம் போன்ற உயர் பண்புகளின் உறைவிடமாக - மிகவும் எளிமையாக - மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்தவர் சாது சிதம்பர சுவாமிகள். இவர் தினமும் தம் தாய் - தந்தையரை வணங்கி விட்டு - அதுவும் 108 முறை தாயாருக்கு தோப்புக்கரணம் போட்டு வணங்கிய பின்புதான் தனது அன்றாட வாழ்க்கை முறையைத் தொடங்குவார். அவரது பெற்றோர்கள் லட்சுமி என்னும் உத்தமியை அவருக்குத் திருமணம் செய்வித்தனர். இல்லற இன்பத்தில் நாட்டமில்லாத சுவாமிகள் பேரின்ப நாட்டமுடையவராகவே வாழ்ந்து வந்தார். வள்ளலார் வழங்கிய சன்மார்க்க நெறியை பாமர மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வாழ்ந்து காட்டினார். மனிதனுக்கு அருளும் ஆறுதலும் கிடைக்க ஒரே வழி மனிதன் மனித குலத்துக்கு தொண்டு செய்வது ஒன்றே. நாமெல்லாம் தொண்டர் குலம்; தொண்டு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று வாழ்க்கையின் ஒரு விநாடியைக்கூட வீணாக்காமல் தொண்டு செய்து கொண்டேயிருந்தார்.

திருக்கோயில் குடமுழுக்கு, திருமணம், மஞ்சள் நன்னீராட்டு, நீத்தார் நினைவு, புதுமனை புகுதல் போன்ற அனைத்து விழாக்களையும் சன்மார்க்க வழியில் நடத்தி வைத்தார். கோபூஜை. கணபதி ஓமம், 108, 1008 தீபஜோதி வழிபாட்டு முறையில் விநாயகர் அகவல், அருட்பெருஞ்ஜோதி அகவல், சிவபுராணம், தேவார - திருவாசக - திவ்யபிரபந்த பக்திப் பாடல்களைப் பாடச் செய்து, சமபந்தி போஜனம் நடத்தி விழாக்களை நிறைவு பெறச் செய்வார். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல், தீப தரிசனமே பாவ விமோசனம் என்னும் அருள்வாக்கை தான் செல்லும் இடங்களில் எல்லாம் செயற்படுத்திக் காட்டினார். எண்ணற்ற சித்துகள் செய்தவர் சிதம்பர சுவாமிகள். தீர்க்க முடியாத வியாதிகளைத் தனது ஆத்மசக்தியாலும் மூலிகை மருந்துகளாலும் தீர்த்து வைத்துள்ளார். சுவாமிகள் பாதம்பட்ட வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சுவாமிகளின் அருள் பெற்று, தம் கர்மவினை நீங்கி ஆத்மானந்தமும் அமைதியும் அடைந்தனர். வல்லநாட்டு சுவாமிகள் பல இடங்களில் 1008 தீபங்கள், லட்ச தீபங்கள் ஏற்றி, அருட்பெருஞ் ஜோதி அகவலைப் பாராயணம் செய்து, அன்னதானம் சிறப்பாக நடத்தி உலகில் அமைதியை ஏற்படுத்த பணிபுரிந்துள்ளார். இறந்தவர்களை எரிப்பது தவறு; சமாதி செய்வதே சாலச் சிறந்தது என்பது சுவாமிகளின் கொள்கையாகும். சமாதி நிலை கூடிய முன்னோர்களுக்கு, அவர்களின் குரு பூஜை நாளன்று மகேசுவர பூஜை நடத்தி நன்மைகள் பெற வழிகாட்டினார். தம்மை நாடி வந்த மங்கையர்க்கரசி அம்மையாருக்கு காசியில் முக்தி கொடுத்தார்.

குறுக்குத்துறை அமாவாசை பரதேசி என்பவருக்கு, ஒரு அமாவாசை நாளன்று முக்தி நிலைக்கு உதவினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் போன்ற அறவோர்க்கும் சமாதி நிலை அமைத்து உதவினார். ஞானி மாதவானந்தா, ஐந்நூறு வயதுக்குமேல் வாழ்ந்த யோகி சடைநஞ்சப்ப சுவாமிகள் போன்ற மகான்களுக்கு நிர்விகல்ப சமாதி அடைய துணை புரிந்து, மண்டல பூஜையையும் இயற்றி அருளினார். பொதிகை மலையில் வாழ்ந்த தெய்வீக வெள்ளை யானையோடும், சதுரகிரி மலையில் வாழ்ந்த ஒற்றைக் கொம்பன் என்ற தெய்வீக யானையோடும் சுவாமிகளுக்கு நட்பு இருந்தது. வள்ளலார் தண்ணீர்விட்டு விளக்கெரித்த தன்மைபோல், வல்லநாட்டு சுவாமிகளும் தீபஜோதி வழிபாட்டில் அவசியம் நேரும் பொழுது தண்ணீர் விட்டு விளக்கெரித்துள்ளார். பிறர் தம் காலில் விழுந்து வணங்குவதை சுவாமிகள் ஒப்புக்கொள்வதில்லை. அறியாமல் விழுந்தால், தாமும் அவரடியில் வீழ்ந்து வணங்குவது சுவாமியின் வழக்கம். நவகிரக நூதன ஸ்தாபனம் இவர் செய்த புதுமையாகும். நடுவில் தீபத்தண்டும், அதைச் சுற்றி நவகிரக மூர்த்திகள் வெளிப்பார்வையாகவும் அமைத்தலே அந்த முறை. இந்த மூர்த்திகள் யாவும் அனுக்கிரக மூர்த்திகளாகச் காட்சியளிக்கும். இத்தகைய நூதன நவகிரகங்களை வல்லநாடு, வீரசிகாமணி, ஐவர் மலை, பூண்டி போன்ற திருத்தல கோயில்களில் இன்றும் காணலாம். இத்தகைய மகிமை வாய்ந்த வல்லநாட்டுச் சுவாமிகள் 1981-ஆம் ஆண்டு, வைகாசி பூசத்தில் அருட்ஜோதியில் கலந்து அருள்பாலித்து வருகிறார்.

குரு பூஜை: மார்கழி மாத அவிட்டத்தில் சுவாமியின் தந்தைக்கும், ஆனி மாத மகத்தில் தாயாருக்கும், வைகாசி பூசம், மாதப் பூசம் போன்ற நாட்களில் வல்லநாட்டு சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் (லட்சம் பேருக்கு) நடைபெற்று வருகின்றது. பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும் என்பது வல்லநாட்டாரின் அருள்மொழியாகும். ஏழைகளின் பசியாற்றினால் இறைவன் அருள் தானாகக் கிட்டும் என்பது அவரின் வேதவாக்கு. வல்லநாட்டு சுவாமிகளின் தாய் - தந்தை சமாதி, வல்லநாட்டு சுவாமிகளின் ஜீவசமாதி, சுவாமிகள் அன்புடன் பழகி வளர்த்த மணிகண்டன் என்ற யானை சமாதி அனைத்தும் வல்லநாட்டு சித்தர் பீடத்தில் உள்ளன. அணையா விளக்கு எப்பொழுதும் அங்கு எரிந்து கொண்டிருக்கும். இன்றும் தினசரி வயது முதிர்ந்தவர்களுக்கு அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. எண்ணற்ற பக்தர்கள் சுவாமிகளின் சமாதிக்குச் சென்று வழிபட்டு, தம் கர்மவினை நீங்கி செல்வச் செழிப்புடன் பிணியில்லாத வாழ்வு வாழ்கின்றனர்.
புத்தர்

கபிலவஸ்து என்னும் நாட்டின் மன்னனான சுத்தோதனருக்கும் மகாமயாவுக்கும் மகனாகப் புத்தர் பிறந்தார். இவரது இயற்பெயர் சித்தார்த்தர். லட்சியத்தை அடைந்தவர் என்பது இதன் பொருள். இவர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். சித்தார்த்தர் பிறந்த சில நாட்களிலேயே அவரது தாய் இறந்துவிட்டார். ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக தந்தையால் வளர்க்கப்பட்டார். அரசர்களுக்கே உரிய கல்வி, போர்ப்பயிற்சி போன்ற அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். யசோதரா என்ற பெண்ணை மணந்து ஓர் அழகான மகனையும் பெற்றார். புத்தரின் அரசபோக வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. வாழ்வில் எந்தக் குறையும் இல்லை.

ஒரு நாள் வெளியில் பவனி வந்தபோது, ஒரு வயோதிகர், ஒரு நோயாளி, இறந்த ஒருவரின் இறுதி யாத்திரை ஆகியவற்றைக் கண்ட சித்தார்த்தர் மிகவும் சிந்தித்தார்! மூப்பு, பிணி, சாக்காடு இவற்றுக்குக் காரணம் என்ன? இவற்றைத் தவிர்க்க முடியாதா? என்று ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார் சித்தார்த்தர். ஒரு துறவியிடம் அவற்றைக் குறித்து விளக்கம் பெற்றார். துறவு மேற்கொள்ளும் உறுதியுடன் புறப்பட்டுவிட்டார் புத்தர். இளவரசர் புறப்பட்டதைக் கண்டு துணுக்குற்ற தேரோட்டி, இளவரசே! தங்களுக்கு வாழ்வில் என்ன குறை? அரச பதவி, அரண்மனை சுகம், அன்பு மனைவி, ஆண் மகன் என அனைத்தும் உள்ளன. இவற்றையெல்லாம் பிரிந்து சென்று என்ன சுகத்தைக் காணப் போகிறீர்கள்? என்று வினவினார். சித்தார்த்தர் பதிலேதும் கூறாமல் புன்னகைத்தார். உண்மை ஞானத்தைத் தேடி கயாவில் ஆறு ஆண்டு காலம் ஆழ்ந்த தியானத்தில் தவமியற்றினார். முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞானஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். அதுமுதல் அவர் கவுதம புத்தர் என அழைக்கப்பட்டார். இடைவிடாத முயற்சியும் தவமும் ஞானத்தை அளிக்கும் என்பர். ஞானத்தை அடைய கடும் முயற்சி செய்யவேண்டும். அல்லது கடுந்தவம் செய்ய வேண்டும். சித்தார்த்தர் தாம் பெற்ற ஞானத்தை உலகின் நன்மைக்காக உபதேசித்தார். வாராணசிக்கு அருகில் உள்ள ஸாரநாத்தில் புத்தர்பிரான் தமது அருளுரைகளை வழங்கினார். அந்த நந்தவனத்துக்கு வடக்கில் ஒரு மடாலயத்தில் புத்தர் சில காலம் தங்கினார். பிற்காலத்தில், அங்கு அசோகச் சக்கரவர்த்தி ஒரு ஒரு சலவைக்கல் தூணை எழுப்பினார். அதன் உச்சியில் நான்கு கிரகங்களின் உருவம் செதுக்கப்பட்டது. இந்தச் சின்னமே நம் நாட்டின் தேசியச் சின்னமானது. பல இடங்களிலும் தாம் சந்தித்த மக்களின் குறைகளைத் தீர்த்த புத்தர், நாற்பது ஆண்டுகள் தமது உபதேசங்களை அருளினார். அவை ஆசியாவெங்கும் வேகமாகப் பரவின. கி.மு, மூன்றாம் நூற்றாண்டில் மாமன்னர் அசோகர், புத்தரின் கொள்கைகளைப் பரப்பியதில் முன்னணியில் நின்றார். கயாவிலிருந்த போதிமரக் கன்றுகளுடன் தமது பிரதிநிதிகளை அசோகர் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். புத்தர் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வலியுறுத்தினார். அன்பை நான்கு வகைகளாகக் குறிப்பிட்டார் புத்தர். பகைவனுக்கும் அருளும் பரந்து விரிந்த அன்பு கொள்ளுதல் மைத்ரி. உயிர்களிடம் இரக்கம் கொள்ளுதல் கருணா. சமத்துவ மனத்துடன் அனைவரிடத்திலும் அன்பு கொள்ளுதல் உபேக்ஷõ. உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் தொண்டு செய்தல் முதிதா எனப்படும்.

பிற நாடுகளில் வழக்கத்திலுள்ள மதக் கருத்துக்களுக்கு மாறுபட்ட புதிய கருத்துக்களைக் கூறிய சிந்தனையாளர்களும், சீர்திருத்தவாதிகளும், பெரிதும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பதை அவர்களின் வரலாற்றிலிருந்து அறியலாம். பின் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கும் பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார். இறுதியில் கி.மு. 483 ல் தனது 80  வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று சம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்தபூர்ணிமா எனப்படுகிறது. புத்தபூர்ணிமா அன்று புத்தமதத்தினர் வெள்ளை நிற உடைகளை மட்டுமே அணிவர். அன்று மடாலயங்களிலும், வழிபாட்டிடங்களிலும், வீடுகளிலும் வழிபாடுகளையும் விழாக்களையும் நடத்தி மகிழ்வர். கீர் எனப்படும் பானம் அன்றைய தினம் அவர்களது உணவில் முக்கிய அங்கமாக இருக்கும். இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அத்தகைய சிறப்புடைய புத்தபூர்ணிமாவில், புத்தர் போதித்த உயர் நெறிகளைப் பின்பற்ற நாம் உறுதிகொள்ள வேண்டும்.
ஞானேஸ்வரர்

கோதாவரி நதிக்கரையில் ஆபேகாம் எனும் சிற்றூரில் வாழ்ந்த அந்தண குலத்தவரான
கோவிந்த பண்டிதர் நிருபமாதேவி தம்பதிக்கு 13-ம் நூற்றாண்டில் மகனாகப் பிறந்தான் விடோபா.சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் லயித்த விடோபா புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டான்.அப்படி ஆலந்தி நகருக்கு வந்தபோது அவரின் முகத்தில் படர்ந்த தேஜஸ் மற்றும் அவரது இறை சிந்தனை ஆகியவற்றால் அதிசயித்த சித்தோபந்த் எனும் அந்தணர் தன் மகள் ருக்மிணியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.நாட்கள் நகர்ந்தன.ஒருநாள் மனைவியின் சம்மதத்துடன் காசிக்குச் சென்றார் விடோபா.அங்கே சுவாமி ராமானந்தரைச் சந்தித்தவருக்குத் துறவறம் மேற்கொள்ளும் எண்ணம் எழுந்தது.தான் திருமணமானவன் என்பதை மறைத்து ராமானந்தரிடம் தீட்சை பெற்று துறவறம் பூண்டார்.பிறகு காசியிலேயே துறவு வாழ்க்கையைத் தொடர்ந்தார்.அவரின் மனைவி ருக்மிணி கணவரைக் காணோமே எனப் பரிதவிப்புடன் காத்திருந்தாள். இந்த நிலையில் சுவாமி ராமானந்தர் யாத்திரை புறப்பட்டார்.வழியில் ஆலந்தியை அடைந்தார்.அவரைச் சந்தித்து தனது குறையைச் சொன்னாள் ருக்மிணி.அதைக் கேட்ட சுவாமி விடோபா தான் இவளின் கணவன் என அறிந்து வேதனைப்பட்டார்.பிறகு காசிக்குத் திரும்பியவர் விடோபாவைக் கடிந்து கொண்டதுடன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வாயாக!என்றார்.அவரின் கட்டளைப்படி ஆலந்திக்கு திரும்பிய விடோபாவை அன்புடன் வரவேற்றாள் ருக்மிணி.காலங்கள் ஓடின.அந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.அவர்களின் இரண்டாவது மகனாக அவதரித்தவரே ஞானேஸ்வரர் (கி.பி. 1275ம் வருடம்).

அவரை விஷ்ணுவின் அம்சம் எனப் போற்றுவர்.வேதங்களையும் உபநிடதங்களையும் இளமையிலேயே கற்றுத் தேர்ந்த ஞானேஸ்வர் அவற்றை மிக எளிமையாகப் போதித்து வந்தார். தான் செய்த தவற்றால் சமூகத்தால் தள்ளி வைக்கப்பட்டு தான் அடைந்த துன்பத்தை குழந்தைகள் அனுபவிக்கக் கூடாது எனக் கருதிய விடோபா தவற்றுக்குப் பிராயச் சித்தமாக மனைவியை அழைத்துக்கொண்டு கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மூழ்கி உயிர்த் தியாகம் செய்தார்.ஆதரவற்ற நிலையில் தவித்த குழந்தைகளைக் கண்டு ஆலந்தி அந்தணர்கள் மனமிரங்கினர்.குல வழக்கப்படி அவர்களுக்கு உபநயனம் செய்யவும் முடிவு செய்தனர்.இருப்பினும் பைதன் நகர பண்டிதர்களின் அனுமதியைப் பெற்று வரும்படி அவர்களை அனுப்பி வைத்தனர்.வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர்கள் அந்த அந்தணர்கள்.அவர்களின் முன் இளம் சகோதரர்கள் மூவர் பணிவுடன் நின்றனர்.அந்தணர்களின் புனிதக் கடமை உபநயனம் செய்து கொள்வது ! எங்களது ஆலந்தி கிராமத்து அந்தணர்கள் எங்களுக்கு உபநயனம் செய்துவைக்கத் தயாராக உள்ளனர்.ஆனாலும் உங்களின் அனுமதிக்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர்.எங்களுக்கு அனுமதி வழங்கி உதவுங்கள்!என்றனர்.அதைக் கேட்டதும் அந்தப் பண்டிதர்கள் உபநயனம் செய்துகொள்ள உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?எனப் பரிகசித்தனர்.அதில் ஆவேசமான மூவரும் மடமடவென வேதத்தை ஓதத் துவங்கினர்.உடனே பண்டிதர்கள் முறையற்று வாழ்ந்த அந்தணன் பெற்றெடுத்த மக்கள் நீங்கள்.எனவே உங்களுக்கு வேதம் ஓதுகிற உரிமையில்லை.அது எங்களைப் போன்ற உயர் மக்களுக்கே உரித்தானது!என்று கர்வத்துடன் சொன்னார்கள்.இதைக் கேட்டு மூன்று சகோதரர்களில் ஒரு சிறுவன் கொதித்து எழுந்தான் அவனுக்கு வயது எட்டு.

அருகில் தண்ணீர்ப் பானைகளைச் சுமந்தபடி வந்த எருமைக் கிடாவைச் சுட்டிக் காட்டி வேதம் ஓதும் தகுதி உங்களுக்கு மட்டுமே உரியதல்ல!இதோ...இந்த எருமைக்கும் தகுதி உண்டு என்று சொல்லிவிட்டு அந்த எருமையின் முதுகில் கைவைக்க...அப்போது நிகழ்ந்தது அந்த அதிசயம்!மூவரும் வேதம் ஓதி நிறுத்தினார்கள் அல்லவா...அந்த இடத்தில் இருந்து வரி பிசகாமல் வேதம் ஓதத் துவங்கியது எருமை.இறுதியில் பிறப்பால் தாழ்ந்த குலத்தவனாக இருப்பினும் கர்மானுஷ்டானங்களான செயல்களாலும் நடத்தையாலும் ஒருவன் உயர்ந்த குலத்தவனாகிறான் எனப் பொருள்படும்படி நான்கு கவிதைகளை அழகாகச் சொல்லிற்று.எருமை வேதம் ஓதியதைக் கேட்டு வாயடைத்துப் போனது பண்டிதர் கூட்டம்.அனைவரும் ஓடோடி வந்து சிறுவனை நமஸ்கரித்தனர்.தனது மூத்த சகோதரரான நிவ்ருத்திநாத்தையே குருவாக ஏற்று குண்டலினி யோகம் முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.குருநாதர் அறிவுரைப்படி தனது 15-வது வயதில் மராட்டிய மொழியில் பாமரர்க்கும் புரியும் வகையில் 18 அத்தியாயங்களில் அற்புதமான விளக்கவுரை எழுதினார் ஞானேஸ்வர்.பாவார்த்த தீபிகா தீகா எனும் பெயரில் அறியப்பட்ட அந்த உரை பிறகு அவரது திருநாமத்துடன் ஞானேஸ்வரி எனப் போற்றப்படுகிறது. அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் அம்ருதானுபவ எனும் நூல் அவரின் மற்றொரு படைப்பு.அவர் நிகழ்த்திய அற்புதங்களும் ஏராளம்!இறை நம்பிக்கையற்ற ஒருவனைத் திருத்துவதற்காகத் தனது முதுகையே அடுப்பாக்கி கொதிக்கச் செய்து தனது சகோதரி முக்தாபாயை தன் முதுகின் மீது ரொட்டி சுடச் செய்திருக்கிறார் ஞானேஸ்வர்.தனது யோக சக்தியின் மீது கர்வம் கொண்டு புலியின் மீது அமர்ந்து பாம்பைக் கையில் பிடித்தபடி வாதம் செய்ய வந்த சித்த புருஷர் சாங்கதேவரை தாம் அமர்ந்திருந்த குட்டிச் சுவரை அப்படியே நகர்த்தி தடுத்து நிறுத்தி அவருக்கு உபதேசித்து ஆட்கொண்டருளினார் ஞானேஸ்வர்.சகோதர  சகோதரிகள் மற்றும் நாமதேவருடன் இணைந்து பண்டரிபுரம் துவாரகை, அயோத்தி,மதுரா,காசி,மதுரை, ராமேஸ்வரம் முதலான தலங்களுக்குச் சென்று உபதேசங்கள் செய்து பக்தர்களை நெறிப்படுத்தியுள்ளார்.பிறகு 1296-ஆம் வருடம் தனது 22-வது வயதில் பிறவியெடுத்ததன் நோக்கம் நிறைவேறியதாக உணர்ந்த ஞானேஸ்வர் கார்த்திகை மாதம் ஆலந்தி நகரில் தியான நிலையில் இருந்தபடி மகாசமாதியானார்.தனது ஞானம் மற்றும் உபதேசத்தால் மக்களுக்கு இறையுணர்வூட்டி மராட்டிய மண்ணில் பக்தி சம்பிரதாயத்துக்கு வித்திட்ட ஞானேஸ்வர் இன்றளவும் போற்றி வணங்கப்படுகிறார்.