சனி, 24 ஆகஸ்ட், 2019

10.தேரையர்

தலையைப் பிளந்து  அறுவைச்சிகிச்சை செய்வது என்பது இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் கூட கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர். வைத்தியரே குழம்பிப்போய் நின்ற வேளையில், துணிச்சலும் சமயோசிதமும் கலந்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார். தேரையர் சித்தர் மலையாள தேசத்தில், திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். அவரது வரலாற்றின் போக்கைக் கொண்டு இவ்வாறு கணிக்க வேண்டியுள்ளது. அவர் சமாதியானது மலையாள தேசத்திலுள்ள தோரண மலை என கணிக்கப்பட்டுள்ளது. தோரணமலை, குற்றாலம் அருகில் உள்ளது. முற்காலத்தில், குற்றாலத்தைச் சார்ந்த பகுதிகள் மலையாள தேசத்தில் தான் இருந்தன. மேலும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தார். அகத்தியரும், பொதிகை மலையில் தங்கியிருந்தார். இதையெல்லாம் கணக்கில் கொண்டால், இது உண்மையாக இருக்கலாம் என்றே நம்பலாம். தமிழ் மூதாட்டி அவ்வையார், தேரையரின் திறமையைப் பற்றித் தெரிந்து, அவரை அகத்தியரிடம் அறிமுகப்படுத்தியதாகவும், அவரை அகத்தியர் சீடராக ஏற்றுக்கொண்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அப்போது தேரையருக்கு என்ன பெயர் இருந்ததோ? ஆனால், அவர் தேரையர் என்ற பெயர் பெற ஒரு நிகழ்ச்சியே காரணமானது. எப்படியிருப்பினும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தது நிஜமே.ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே! மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார்.

அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார். சீடனே! உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள் பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.சுவாமி! தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே! இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார். சீடனே! ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும். மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார். குருவின் இந்த அற்புதமான விளக்கத்தைக் கேட்ட தேரையர், அவரிடம் மிகுந்த நேசம் கொண்டார். அந்நேரத்தில் அகத்தியர், காடுகளில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு பலவித ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். தேரையர் அவர் கேட்கும் மூலிகை வகைகளைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவினார். இந்த சமயத்தில், காசிவர்மன் என்ற அரசனுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. நாளாக நாளாக வலி அதிகரித்தது. அவன், அகத்தியரைத் தேடி அவரது குடிலுக்கு வந்தான்.பெருமானே! என்னை தாங்க முடியாத தலைவலி ஆட்டிப்படைக்கிறது.

ராஜாங்க விஷயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தாங்கள் நினைத்தால், இதை நொடியில் குணப்படுத்தி விடுவீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காப்பாற்ற வேண்டும், என வேண்டி அவரது பாதத்தில் விழுந்தான்.அரசன் மீது அகத்தியர் மிகுந்த கருணை கொண்டார். அவனை பரிசோதித்தார். தலைவலிக்கான காரணம் தெரிந்து விட்டது. அவனிடம் சொல்ல யோசித்தார். மன்னா! நீ அரண்மனைக்குச் செல். நாளை இந்த வியாதியை தீர்த்து விட ஏற்பாடு செய்கிறேன், என்றார்.

கருத்துகள் இல்லை: