வியாழன், 5 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 27 ॐ

நிருத்த சபை என்பது வெளிப் பிரகாரம். இங்கே நாம் இப்போது தரிசிக்கப் போவது பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப் பட்ட சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும். இந்த சோமாஸ்கந்தர் இங்கே வந்ததுக்கும் ஒரு கதை இருக்கிறது. வனவாசம் செய்து வந்த பஞ்ச பாண்டவர்கள் தருமபுத்திரரின் பிறப்புக்குக் காரணம் ஆன தர்மராஜனின் உபதேசத்தின் பேரில் சிவனைத் துதிக்க நல்ல இடம் தேடினார்கள். அதற்கு அவர்கள் தென்பகுதி தான் உகந்தது என முடிவெடுத்து வந்தபோது சிதம்பரம் பற்றிக் கேள்விப் பட்டு சிதம்பரம் வர கால முனிவரின் உபதேசத்தின் பேரில் தாங்கள் இழந்த ராஜ்யத்தைப் பெறுவதற்கும் வாழ்வின் மேன்மைக்கும் சிவபூஜை செய்ய சிவன் சோமாஸ்கந்தரின் வடிவில் நடனக் கோலத்துடன் அவர்கள் எதிரே தோன்றி அனுக்கிரகம் செய்ததோடு அல்லாமல் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜ ரூபத்தையும் காட்டி அருளினார். அப்போது முதல் இந்த மூர்த்தம் "பஞ்ச பாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்தி" என்ற பெயருடன் விளங்குகிறார். இவர் நிருத்த சபையின் வடபாகத்தில் இவரும் வடக்கே பார்த்துக் கொண்டே காட்சி அளிக்கிறார்.

காலசம்ஹார மூர்த்தி : இவர் பஞ்சபாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்திக்கு அருகேயே மேற்கே பார்த்துக் கொண்டு காணப் படுகிறார். பொதுவாக காலசம்ஹார மூர்த்தி, மார்கண்டேயருடனும், திருக்கடையூருடனுமே தொடர்பு கொண்டிருந்தாலும் இங்கேயும் காணப் படுகிறார்.

அடுத்தது ரொம்ப முக்கியமானவர் சரபர் : இவரைப் பற்றி ஏற்கெனவேயே திவாகர் கேட்டிருந்தார். இவருக்கு இங்கே தனிச் சன்னிதியே உள்ளது. தனியான பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேஹங்கள் எல்லாம் உண்டு. இவரும் அந்த சிவபெருமானின் ஒரு ஸ்வரூபம் தான் என்றாலும் இவரின் தோற்றம் விசித்திரமாய் இருக்கும். இவர் மனித ரூபத்திலும் பறவைகள் போல் இறக்கைகளுடனும் மிருகங்கள் போன்ற உடல் அமைப்பிலும் காணப் படுவார். இவரின் தோற்றம் பற்றிப் பல புராண்ங்கள், உபனிஷதங்கள் ஆகமங்கள் பலவிதமாய்க் கூறினாலும் காளிகாபுராணம் கூறுவது என்ன வென்று  பார்ப்போம். ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல் இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுவதாய்ச் சொல்கின்றனர். இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும் மேலே தூக்கிய இரண்டு இறக்கைகளும், நான்கு கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், நான்கு கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும் அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். தோற்றத்தின் காரணம் தெரிந்து விட்டது. இனி உடலின் ஒவ்வொரு பாகமும் எந்த அமைப்பில் ஏற்பட்டது எனப் பார்ப்போம். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும் கூர்மையான நகங்களோடும் நாலு புறமும் சுழலும் நாக்கோடும் காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் பட்சிகளின் அரசன் என்றும் சாலுவேஸ்வரன் என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும் இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும் நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும் அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும் உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம் திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலில் நாம் பார்த்ததும் தனிச் சன்னதி தான். ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப் படுகிறது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
நற் சிந்தனைகள் கடவுளின் பக்தர்களுக்குப் பணிபுரிவதால் தான் கடவுளை அடைய முடியும் என்பதை உங்கள் இருதயத்தில் நிருத்திக் கொள்ளவேண்டும். ஸ்ரீ ஜகத் குரு பதரி சங்கராசார்ய ஸ்வாமிகள்
-------------------------
நற் சிந்தனைகள்: எல்லையற்ற பொறுமையும்,விடாமுயற்சியும் உள்ளவர்களால் மட்டும் ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும்.
ஜபித்ததோடு,ராமபிரான் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்.
ஸ்ரீ ஸ்ரீ பெரியவா மல்லிகார்ஜுன ஸ்வாமிகள்
-------------------------
நற் சிந்தனைகள்: இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டது தெய்வீக அருளைப் பெறுவதற்காகவே.அதனால் இந்த உடல் நன்கு பராமரிக்கப் படவேண்டும்.சுத்தமாகவும்,தூய்மையாகவும்,அழுக்கு, வியாதி, வருத்தம், தோல்வி மனப்பான்மை இவற்றால் பாதிக்கப்படாமலும் உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.

நீங்கள் உடலல்ல.உடல் என்பது ஒன்பது துவாரங்களடங்கிய அழியும் பொருளாகும்.ஆகவே இந்திரிய சுகத்தை புலனின்ப நுகர்ச்சியை நாடிச்செல்லாதீர்கள்.

கடவுளை நோக்கி மணதை திருப்புங்கள்.அப்போது மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டு விடும்.பிறகு உங்கள் மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.
ஸ்ரீ ஸ்ரீ பெரியவா மல்லிகார்ஜுன ஸ்வாமிகள்
-------------------------
பசி தீர்த்த காளி!

சிவன் கோயிலின் காவல் தெய்வம் க்ஷேத்திர பாலகர். கோவிலைக் காப்பவர் என்பது இதன் பொருள். இவர் காளியின் கோபம் தணிக்க குழந்தை வடிவில் வந்தார். சாகா வரம் பெற்ற தானகாசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழித்து தேவர்களைக் காக்கும் பொறுப்பை சிவன் காளியிடம் ஒப்படைத்தார். காளியும் அசுரனைக் கொன்றாள். அதன் பிறகும் அவளது ஆவேசம் தீரவில்லை. உயிர்கள் அனைத்தும் காளியைக் கண்டு அஞ்சின. அப்போது சிவனின் கட்டளைப்படி மாய பாலகன் ஒருவன் காளியின் முன் குழந்தை வடிவில் பசியால் அழத் தொடங்கினான். அதைக் கேட்ட காளிக்கு தாய்மை குணம் மலர்ந்தது. மார்போடு அணைத்துப் பாலூட்டினாள். பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்துக் குடித்தது அக்குழந்தை. அதன் பின் காளி சாந்தமானாள். அக்குழந்தையே க்ஷேத்திர பாலகர் என்னும் பெயர் பெற்றது. இவரே பிற்காலத்தில் பைரவராக மாறியதாக செய்தி உண்டு. லிங்கபுராணத்தில் இந்தத் தகவல் இருக்கிறது.
--------------------------------------------------
ஸ்மரணாத் அருணாசலம்

ஒரு கிராமத்தில் முகாமை முடித்து கொண்டு அடுத்த முகாமுக்கு போய் கொண்டிருந்தார்கள் பெரியவா. வழியில் ஒரு பிச்சைகாரர் வந்தான். தொலைவில் இருந்து பார்த்த போதே இவர் ஒரு சாமியார் ரொம்ப பேர் கூட வருகிறார்கள். நல்ல சில்லறை தேறும் என்று எண்ணியிருப்பான்.
அருகில் வந்ததும் அண்ணாமலைக்கு அரோஹரா' என்று கூவிக்கொண்டே பெரியவா பாதங்களில் விழுந்தான்.
பெரியவாள் உடன் வந்தவர்களை திரும்பி பார்த்தார்கள். இவன் நமக்கு ரொம்ப உபகாரம் செய்து இருக்கிறான்.

இவனென்ன உபகாரம் செய்தான்?

'ஸ்மரணாத் அருணாசலம் என்று சொல்லுவார்கள். அருணாச்சலேஸ்வரரை நினைத்தாலே போதுமாம் ரொம்ப புண்ணியம் இவன் நமக்கெல்லாம் அருணாச்சலேஸ்வரரை ஞாபகபடுத்தி உபகாரம் செய்திருக்கிறான். பிச்சைகாரன் இன்னும் நின்று கொண்டு இருந்தான். பத்து பைசா கூட தேறவில்லை. பெரியவா அவனை பார்த்து புன்னகை செய்தார்கள்.
இன்னிக்கு எங்கேயும் பிச்சைக்கு போக வேண்டாம். அப்போ சாப்பாட்டுக்கு இன்னிக்கு வழி?

மடத்திலேயே சாப்பிடலாம் அப்புறம் வெளியூர் போ பெரியவாள் பக்தர்களை பார்த்து சொன்னார்கள். எந்தரோ மகானுபாவுலு எங்கெங்கெல்லாமோ எத்தனையோ மகான்கள், சித்தர்கள், பக்தர்கள் இருக்கிறார்கள். இந்த பண்டாரத்தை பாருங்கள் நாளை பற்றி கவலை படுவதில்லை. அன்றன்று கிடைக்கும் பிக்ஷையில் காலம் தள்ளுகிறான். இவனுக்கு உள்ள ஞானம் கூட நமக்கு வருவதில்லை. ஒரு பண்டார  பிச்சைக்காரனிடம் கூட ஈஸ்வரனை பார்த்தார்கள் பெரியவா. உடன் வந்து கொண்டிருந்த ஒரு வித்வான் சொன்னார், ஈஸ்வரனே அவதாரம் செய்துவந்தால் கூட நாம் அவரை வெறும் மனுஷனாய் பார்க்கிறோம்.

பெரியவாளை தான் குறிப்பிட்டாரோ? தெய்வம் தெய்வ வடிவிலேயே வந்தாலும் நம்பாத பாமர மக்கள் நாம் என்னத்தை சொல்ல?
சில தானங்கள் பற்றி விபரம்...

யமதர்மருக்கும் ப்ராமணணுக்கும் நடந்த உரையாடல் ;

ஆதியில் யமுனை உற்பத்தியாகும் களிந்த மலையின் கீழுள்ள மத்தியதேசத்தில் பர்ணசாலை என்ற பெயர் பெற்ற பெரிய பிராம்மண கிராமம் இருந்தது. வித்வான்கள் நிரம்பி இருந்தனர்.

அப்போது யமன் சிவந்த கண்களும் நெறித்த ரோமங்களும் காக்கை போன்ற கணுக்கால் கண் மூக்குள்ளவனுமான் ஒரு கிங்கரனை பார்த்து ,நீ! பர்ணசாலை ப்ராமண கிராமத்திற்க்கு போ; அங்கு சாந்தியுள்ளவனும் வித்துவானும் அகஸ்திய கோத்திரத்தானுமாகிய சர்மி என்ற பெயருள்ள ஒரு ப்ராமணனை அழைத்து வா; அவன் பக்கத்தில் அவன் கோத்திரமாகவே இருக்கும் மற்றொரு ப்ராமணனை அழைத்து வராதே. அவனும் இவனை போன்ற குணவான் தான். ஆனாலும் புத்திர ஸ்ந்தானத்திலும் ஒழுக்கத்தில் இவன் மேலானவனாததால் நான் குறிப்பிட்டவனையே அழைத்து வா ! அவனுக்கு நான் பூஜை செய்யவேண்டும்' என்று சொன்னார்.

ஆனால்,கிங்கரன் யாரை யமன் வேண்டாமென்றரோ அவனையே பிடித்து அழைத்து வந்துவிட்டான்.  யமன் மிகுந்த சக்தியுள்ளவனாததால் அவரையே இருத்தி பூஜை செய்து அவரை கொண்டுபோய் விட சொன்னபோது , அந்த ப்ராமணன் தர்மராஜனை பார்த்து ,ஓ! தர்மந்தவறாதவனே, நான் என் ஆயுள் காலத்தில் மிச்சமுள்ள காலத்தை இங்கேயே கழிப்பேன் என்றான்.

அதற்கு யமன், நான் இங்கே காலவிதியை எவ்வகையிலும் அறிய மாட்டேன்.எவன் தர்மத்தை செய்கிறானோ அவனை மட்டுமே அறிவேன் .ஆதலால் நீ இருப்பிடம் செல்வாயாக ,அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவாயாக என கேட்க, அதற்க்கு ப்ராமணன் , பரிசுத்தமான தானந்தான் மிக சிறந்த புண்ணியமாகும், அதை எனக்கு சொல் என்றான்.

யமன் , ப்ரம்மரிஷியே! தானத்தை பற்றி உயர்ந்த விதியை சொல்கிறேன் ; கேள். இவ்வுலகத்தில் திலதானம் மிகச்சிறந்தது. அழிவில்லாத புண்ணியம்.எள்ளானது வேண்டியவற்றை நிறைவேற்றுகிறது. அதனாலேயே ஸ்ராத்ததிற்க்கு எள் சிலாக்கியமானதாகும். அதுதான் தனக்குயர்வில்லாத தானம். ப்ராமணனுக்கு சாஸ்திர முறையோடு வைகாசி பவுர்ணமியில் தில தானம் செய் என்றார்.

கிருகத்தில் எப்போதும் நன்மையை வேண்டுகிறவர்கள் எள்ளை உண்பிக்க வேண்டும்.உடம்பில் தடவிகொள்ள வேண்டும் அப்படியே தண்ணீரும் கொடுக்கவேணும் . ஆசமனமும் செய்யவேண்டும் என்பதும் நிச்சயம். ஓடைகளையும் கிணறுகளையும் வெட்டுவிக்க வேண்டும். ஜலம் எப்போதும் கொடுக்க வேண்டும்.

ப்ராமணோத்தமரே! நித்தியமாக தண்ணீர் கொடுப்பதற்க்காக தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும். உண்டவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது முக்கியமான காரியம்.வஸ்திர தானம் செய்பவன் அதில் உள்ள நூலளவு வருச காலமும் தீபதானம் செய்பவன் அது எரியும் நிமிஷங்களளவு வருஷகாலமும் கோதானம் செய்பவன் அதன் ரோமங்கள் உள்ள வருஷகாலமும் தண்ணீர் கொடுப்பவன் அந்த தண்ணீர் துளிகள் வருஷ காலமும் ஸ்வர்க ஸுகத்தை அனுபவிப்பர். ஆதலால் நீயும் இந்த தானங்களை செய்ய கடவாய் என்று கூறி அவனை கொண்டு போய் விட்டு முதலில் சொன்ன சர்மி எந்த ப்ராமணனை கூட்டி வரச்செய்தார்.

சர்மி என்ற ப்ராமணனுக்கும் அதே போல பூஜை செய்து அதே போல தான விபரங்களை கூறி அனுப்பி வைத்தார்.

ஆதலால் பித்ருக்களுக்கு ப்ரீதி உண்டாக்க கண்ணுக்கினிய தீபதானம் செய்யவேண்டும். ரத்ன தானமும் மிகச்சிறந்த புண்ணியம் என்று சொல்லப்படுகிறது. ரத்ன தானமானது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் அதுவே அழியாத புண்ணியமாக நிலைக்கிறது. அதே போல இந்த தானங்களை செய்வதற்க்காக திருமணம் செய்து புத்திர லாபத்தை பெற வேண்டும். புத்திர லாபமானது எல்லா லாபங்களிலும் சிறந்தது.

ஆக ,தான் சம்பாரிக்கும் பொருளில் முடிந்த அளவு (யதா சக்தி) தானம் கொடுத்து நன்மை அடையுங்கள். குடுக்காத தானம் அவரவர்களுக்கு பெரும் தீமையை செய்யும் .

ராம ராம ராம

#மஹாபாரதம்
#தானம்
#யமன்
#ப்ராமணன்
#தான_சிறப்பு
#திலதானம்
#எள்தானம்
#தீபதானம்
#தண்ணீர்_தானம்
#கோதானம்
#ரத்னதானம்
சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி மஹா பெரியவா அருமையான விளக்கம். இத படிங்க மொதல்ல

கல்யாணம் மத்த விசேஷம் சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்? என்று பெரியவா கேட்டார். வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்" ''ஓ அதை கேக்கறேளா பெரியவா.  மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம், பட்சணம், கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?" மஹா பெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மௌனமாக இருந்தார்கள். தெரியும் அவரே பதில் சொல்வார் என்று. இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையா இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணிய தெளிக்கிறா அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா பாயசத்தால பிறந்த ஸ்ரீ ராமனையும் தயிர் வெண்ணைப்பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும் போது நிணைக்கனும் என்பதற்காகத்தான் என்றார் பெரியவா...

"மொதல்ல குழம்பு. இதுல, 'தான்' இருக்கு. தான்  என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா ஏதோ ஏதோ இருக்குமே அது தான் '' தான் '' என்பது இல்லையா. நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் ''  என்கிற  அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம். அந்தத் ''தானை''  கொஞ்சமா தீர்த்துட்டு அடுத்த  கட்டத்துக்குப் போறோம்.

அப்போ ''தான்'' இல்லாததால் ஒரு தெளிவு வந்துடறது இல்லையா. அதாவது ''ரச'' மான மன நிலை. அது தான் ரசம். ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது.

அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது...

கடைசியா மோர். மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது? 

பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய் வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது.

அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.

இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது?

நாமளும் அகங்காரத்தை விட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு, யாருக்கும் எந்த உபத்ரவமும் பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம் பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப் பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துல தான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம  வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரி தான்  அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சா ஸ்ரீ மஹா பெரியவா...
------------------------
ஒரு நாள் “வபன பௌர்ணமி“! பகுதி ( 2)

அன்று பெரியவாளுக்கு பயங்கர காய்ச்சல் ! இந்தக் காய்ச்சலோடு 73 {72+1} தடவை ஸ்நானம் செய்வது அவருக்கு ஸாத்யமாக இருக்கலாம். ஆனால் அதைப் பார்க்க பாரிஷதர்களுடைய ஹ்ருதயங்களுக்கு அஸாத்ய பலம் இல்லை ! அதனால் அவர்களுடைய கண்ணீர் அஸ்த்ரத்துக்கு செவி மடுத்து பெரியவா வபனம் செய்து கொள்ள வில்லை. எனவே ரெண்டு மாஸம் அதாவது மறுபடி அடுத்த வபன பௌர்ணமி வரை காத்திருக்க வேண்டியிருந்தது. விளைவு ? வேறென்ன? பெரியவாளின் தாடியும் தலை முடியும் ஜாஸ்தியாக நீளமாக வளர்ந்து விட்டது ! இந்த தாடி மீசையோடு பெரியவா ஏதோ ஒரு கிராமத்தில் ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். ஓரிரண்டு பாரிஷதர்களைத் தவிர ஒருவருமே இல்லை. பெரியவா தாடி பறக்க ஒரு மரத்தடியில் உட்கார்ந்து ஜபம் பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு தம்பதிகள் பெரியவாளை தர்ஷனம் பண்ண வந்தனர். ஏராளமான முடியும் தாடி மீசையோடும் இருந்த பெரியவாளை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. யாரோ வழிப்போக்கர் ஸந்யாஸி என்று நினைத்துக் கொண்டார்கள். நேராக பெரியவாளிடமே போனார்கள்… இங்க... சங்கராச்சார்யார் வந்திருக்காராமே! ஸ்வாமி எங்க இருக்கார்ன்னு சொல்ல முடியுமா? பெரியவா அமைதியாக நானும் ஸ்வாமியைத்தான் தேடிண்டு இருக்கேன் இருக்கற எடம் தெரியல தனக்கே உரிய ஸ்லேடையில் சிரிக்காமல் படு ஸீரியஸாக் கூறினார். வந்தவர்களுக்கோ ஏமாற்றம்! ஸ்வாமிகள் இந்தப் பக்கந்தான எங்கியோ இருக்கறதா சொன்னா! அவர் இருக்கற எடம் தெரியலியாமே! அவர்கள் திரும்பி நடந்து சென்ற போது எதிரே ஒரு பாரிஷதர் வந்தார். சங்கராச்சார்ய ஸ்வாமி இங்க எங்கியோ வந்திருக்காராமே! ஆமா அதோ அங்க இருக்காளே! அவர் காட்டியது மரத்தடியில் உட்கார்ந்திருந்த பெரியவாளைத்தான்! தம்பதிகளுக்கு வெலவெலத்து விட்டது! எவ்வளவு பெரிய அபசாரம்! கொஞ்சங்கூட அடையாளமே தெரியாமல் பெரியவாகிட்டயே போயி பெரியவாளைப் பத்தி விஜாரிச்சிருக்கோமே! ”பெரியவா சிரித்துக் கொண்டே அவர்களை கூப்பிட்டார். அது தாடி ரொம்ப வளந்து போச்சு ! அதுனால தான் என்னை அடையாளம் கண்டுக்க முடியல! வாஸ்தவத்ல நாந்தான் ஒங்களை பயமுறுத்தி இருக்கேன் ! பரவாயில்ல! ஸமாதானப்படுத்தும் விதத்தில் அவர்களிடம் அவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்பது போலெல்லாம் பேசி ப்ரஸாதம் கொடுத்தார்.
மஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்!—ரா.கணபதி

எனக்குள் ஒரு கேள்வி:விநாயகர் முருகன் சிவன்,விஷ்ணு---ஒரே கடவுளின் பல வடிவங்களுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர மூலமான ஒரே கடவுளுக்கென ஏன் அந்த மந்திரம் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் சாஸ்திரக் கருத்தை மட்டுமே கொண்டு சிலர் ப்ரணவ ஜபம் செய்யலாம் முதலில்‘ஓம்’என்று கூறிவிட்டு அதோடு அந்தந்த தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர (ஓம் கணேசாய நம:)தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்கிறார்கள்.ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி;எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே‘ஓம்’ என்பது ஒலிக்கும்.அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து.இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும்என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன்.

நேரம்: மாலை ஐந்து மணி:முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டியபகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின்மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.அன்றும் அப்படியே நடந்தது.நாங்கள் 40-50 பேர் இருந்தோம்.வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும் பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம்.ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர்.தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது"நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்;ஆனால் என் துரதிர்ஷ்டம்.இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது!பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும்.எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?”என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி:"மடியும்வேண்டாம்;அந்தரங்கமும் வேண்டாம்"அம்பகவ”: அம் பகவ”:அம் பகவ”:எனமும்முறை உபதேசித்தார்கள்.இப்படியும்மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும்‘அம்  பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம்.இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும் எந்த நேரமும் ஜபிக்கலாம் என்று மஹா பெரியவா கூறினார்கள்.

மந்திரத்தின் உச்சரிப்பு:AMBHAGAVAHA(AMBRELLA என்பதிலுள்ள AM ஒலி)‘பகவ’என்பதன் முடிவான‘வ’:என்பதை ‘வஹ’என்று கூறவேண்டும்.

ஒலியியலின்படி‘வ’என்பதற்கும்‘வஹ’என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.அன்று பெரியவாளும்‘வஹ’என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள்.ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’:என்றமகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது! ‘பகவ’: என்பதற்கு‘பகவானே!’என்று பொருள்.‘அம்’என்பது ஒரு மங்கல அக்ஷரம்.நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!எந்ததெய்வத்தைஇஷ்டமூர்த்தியாகக்கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும்,‘பகவ;’என்பது ஆண்பாலில்  இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்று பெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.

ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை–அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!  எல்லோருக்குமான இத்த தங்கப் புதையலை36ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்!சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன்.அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக ஜபத்தால் உவகையுடன் கூறுகிறார்கள்.
------------------------
திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன பெரியவா

சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய்த்தான், அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான் இந்த இடம் தான் என்று இல்லை, எங்கும் போகக் கூடியவராயிற்றே…

ஒரு சமயம் அங்குதான் பரமாச்சார்யார் தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார். படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை. தெய்வத்தின் தரிசனத்திற்கு எங்கு வேண்டுமானாலும் போகலாமே — மனதில் மட்டும் பக்தி என்று ஒன்று இருந்தால்.

அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார்.

சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார் திருநாவுக்கரசு. எல்லாவற்றையும் கேட்ட பின், மகான், தங்கை மீனாளைப் பார்த்தார். பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது. மகானின் கண்களின் ஒளி விசேஷமே எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா ?

மகான் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு பேசினார் –

“அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும். “ என்றார்.

“அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே” என்று மெதுவாக மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார். அதனாலென்ன ? தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே ! திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்” என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.

அவர்கள் எல்லாரும் வணங்கி, மகானிடம் விடை பெற்றுக் கொண்டு, திரும்ப முயன்றார்கள். சற்று தூரம் வந்தவுடன், மடத்தின் ஆட்கள் அவர்களை அழைத்தார்கள்.

“உங்கள் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பணும்னு பெரியவா உத்தரவு’ என்று சொன்னபோது திருநாவுக்கரசு வியந்துதான் போனார்.

அந்த மாதிரி ஒரு தீவில் எதுவுமே சாப்பிடக் கிடைக்காது. இவர்களும் ஊர்ருக்குத் திரும்பி தான் சாப்பிட வேண்டும். இது அந்த மனித தெய்வத்துக்குத் தெரியாதா? தன் பக்தர்களை எப்போது அவர் பட்டினியோடு அனுப்பியிருக்கிறார்? மகானின் கருணையை வியந்து வியந்து போற்றி விட்டு, திருநாவுக்கரசு தன் குடும்பத்துடன், வடை பாயசத்துடன் விருந்து சாப்பிட்டு விட்டு ஊர் திரும்பினார்.

மகான் சொன்னவாறே மீனாளிடம், ‘திருமுருகாற்றுப்படை‘ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். ஒரே மாதம்தான்… மீனாள் பூரண குணமடைந்தாள். மனக் கோளாறு முழுமையாக விலகி, இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மகானின் பேரருள்தான் என்கிறார், பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு. மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.
--------------------------
நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் படிப்பவரின் கண் கலங்க வைக்கும் சம்பவம் என்றால் அது மிகையில்ல.

பத்தாவது வயதில்… சிறுவனாக இருக்கும்போதே மஹா பெரியவாளிடம் சேர்ந்து அவருடனேயே இருக்கின்ற பாக்கியத்தைப் பெற்ற ஸ்ரீபட்டு சாஸ்திரிகள். ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி பக்த ஜன டிரஸ்ட்டை நிறுவி வருடந்தோறும் காஞ்சிப் பெரியவருக்கு உத்ஸவ விழா எடுத்து வருகிறார். சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் வைகாசி மாத அனுஷ நட்சத்திர நன்னாளில் துவங்கி 15 நாள் நடைபெறும் இந்த உத்ஸவத்தைக் காண தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர்.

லக்ஷ்மி நாராயணனைத் தொடர்ந்து… காஞ்சி மகான் பற்றிய சில அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் ஸ்ரீபட்டு சாஸ்திரிகள்:

”மஹா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது.

ஒரு மாலை நேரம்… அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார். ‘என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மஹா பெரியவாளோட பாதுகை யையும் திருவுருவப் படத்தையும் வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்கிரகம் பண்ணி அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு ஜயந்தி விழாவை நடத்தலாமே?’ன்னு என்னைக் கேட்டார்.அதோட நிக்காம ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ‘மஹா பெரியவாளின் பஞ்சலோக விக்கிரகம் செய்யறதுக்கு முயற்சி பண்ணுங்க. நிச்சயம் அது கைகூடும். மாம்பலத்துலயே அவர் கோயில்ல குடியிருந்த படி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார் பாருங்க’ என்று சொல்லி ஒரு ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.

பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள் கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும் பஞ்சலோகத் திரு மேனி பண்றதுக்கு எல்லாரும் ரொம்ப ஆர்வத்தோட உதவி பண்ணிணார்கள் பக்தர்கள்.அப்புறம் மஹா பெரியவாளோட திருவுருவத்தை பஞ்சலோக விக்கிரகமா வடிக்க சுவாமி மலைக்குப் போனோம். அங்கே… கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற தேவ சேனாபதி ஸ்தபதியைப் பாத்தோம். மஹா பெரியவாள் மேல் ரொம்ப பக்தி கொண்டவர் அவர். வயசானவர். ‘இத்தனை வயசுக்குப் பிறகும் மஹா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகம் பண்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே’ன்னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார். ஒரு நல்ல நாள் பார்த்து விக்கிரகம் பண்ற வேலையை ஆரம்பிச்சு பிரமாதமா தயாரிச்சு முடிச்சார் (பெரியவாள் விக்கிரகம்தான் அவர் பண்ணின கடைசி விக்கிரகம்).

இந்த நேரத்துல கையில பணம் குறைச்சலா இருந்துது. விக்கிரகத்தை வாங்கிண்டு வரணும்னா சுமார் 5,000 ரூபா வரைக்கும் தேவையா இருந்துது. ‘எல்லாம் பெரியவா பார்த்துப்பா’னு தைரியமா இருந்தேன். திடீர்னு ஒருநாள் கடம் விநாயக்ராமோட தம்பி சுபாஷ் சந்திரனோட வீட்டுக்கு அவரோட மாப்பிள்ளை கஞ்சிரா வித்வான் கணேஷ் குமார் அமெரிக்காலேருந்து போன் பண்ணியிருக்கார்.

‘மாம்பலத்துல மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்னு ஒருத்தர் காஞ்சி மஹா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத்தைச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்காராம். ‘அவருக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணு’ன்னு அதிகாலை மஹா  பெரியவா என் சொப்பனத்துல வந்து சொன்னார்’னு கணேஷ் குமார் சொல்லிருக்கார். சுபாஷ் சந்திரனோட மனைவி கீதா நேர்ல வந்து ‘இந்த 6,000 ரூபாயை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்’னு முழு விவரமும் சொல் லிக் கொடுத்தப்ப ஆச்சரியத்துல அசந்து போயிட்டோம் நாங்க!

பணத்துக்கு என்ன பண்றதுன்னு தவிச்ச கொஞ்ச நேரத்துலயே 6,000 ரூபாய் கைக்கு வந்தா எப்படி இருக்கும் எனக்கு? அப்படியே உருகிப் போயிட்டேன். இத்தனைக்கும் எனக்குப் பணம் தேவைப்படறதுன்னு யார் கிட்டயும் நான் ஒரு வார்த்தை கூடச் சொல்லலை. ஆனா எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து மஹா பெரியவாளே சொல்லிருக்கார்னா பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது! சுமார் பத்து வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது!பணம் கைக்கு வந்ததும் வைகாசி அனுஷ ஜயந்தி நடத்தறதுக்கு முன்னேயே ஜூன் மாசம் 3-ம் தேதி ராத்திரி சுவாமி மலையில ஸ்ரீஸ்வாமி நாத ஸ்வாமியை கண் குளிரத் தரிசனம் பண்ணிண்டு வடவாம்பலம் வழியா வந்து அங்கே ஸ்ரீஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத் திருமேனியை ஒரு வாகனத்துல வெச்சு தீபாராதனை காட்டினோம்.பூஜையெல்லாம் முடிச்சுட்டு வண்டியைக் கிளப்பினா… ம்ஹூம்.. வண்டி ஒரு அடிகூட நகரலை. அங்கேயே நின்னுடுத்து. டிராக்டரைக் கொண்டு வந்து இழுத்துப் பார்த்தோம்; லாரியைக் கொண்டு வந்து கட்டி இழுத்தோம்; ம்ஹூம்… வண்டி அசை வேனாங்கறது! கிட்டத்தட்ட விடியற்காலை நேரமும் வந்தாச்சு. அந்த நேரத்துல விவசாயி ஒருத்தர் ரெண்டு சிநேகிதர்களோடு அங்கே வந்தார். அவர் தினமும் ஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல பிரார்த்தனை செஞ்சுட்டு தான் கூலி வேலைக்குப் போவாராம்.

எங்க கிட்ட வந்த அந்தக் அவர் ‘என்ன நடந்துது?’ன்னு கேட்டார். ‘ஏனோ தெரியலை; வாகனம் நகரவே இல்லை’ன்னு சொன்னோம். அப்ப அவர் சொன்ன வார்த்தைகள் எங்களை மெய்சிலிர்க்க வெச்சுடுச்சு!

‘மஹா பெரியவாளும் அவரோட குருவும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப… அவங்க சம்பாஷணையை நிறுத்திட்டாங்க. இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க நல்லாவே நகரும்னார். அதோட நிக்காம எங்களோட அவரும் சேர்ந்து ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர‘ன்னு சொல்லிண்டே வாகனத்தை நகர்த்தறதுக்கு உதவி பண்ணினார். வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாம நகர்ந்தது. வழியிலயும் எந்தவித அசௌகரியமும் இல்லாம விக்கிரகத்தை நல்லபடியா சென்னைக்குக் கொண்டு வந்தோம்.

மஹா பெரியவா சாதாரணமானவரா என்ன? அவர் மகான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்கிரகத் திரு உருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார். இப்ப… பாதுகையோடு பஞ்சலோக விக்கிரகமும் தரிசனத்துக்கு இருக்கு. அடுத்து பெரியவாளுக்குக் கோயில் கட்டுற வேலைதான் பாக்கி. மஹா பெரியவாளுக்கு கோயில்ங்கறது பக்தர்களோட கோரிக்கை தான். இதையும் அவரே நடத்திக் கொடுத்துடுவார் பாருங்கோ!

ஒண்ணு மட்டும் சத்தியம்! ‘இன்னது நடக்கணும்’னு நாம சங்கல்பம் பண்ணிண்டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார். அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மஹா பெரியவா கருணா மூர்த்தியாச்சே!” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி பஞ்சலோக விக்கிரகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மகானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள் அப்படியே வணங்கித் தொழுதார்.
பிக்ஷை எடுத்த குடும்பத்தை மிகப் பெரிய பணக்காரக் குடும்பமாக மாற்றிய மஹா பெரியவா

ஒரு முறை ஸ்ரீ மஹா பெரியவா திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் முகாமிட்டிருந்தார். மஹா பெரியவர் பாபநாசத்தில் முகாமிட்டிருக்கும் செய்தியைக் கேட்டு சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஸ்ரீ மஹா பெரியவாளை தரிசித்து அனுக்ரஹம் பெற்றுச் சென்றனர். மஹா பெரியவா முகாமிட்டிருந்த இடத்திற்கருகே ஒரு பார்வையற்ற தம்பதியர் கையில் பார்வையில்லா கை குழந்தையுடன் பிக்ஷை எடுத்துக் கொண்டிருந்தனர். சென்னையில் ஒரு மிகப்பெரிய செல்வந்தர் ஸ்ரீ மஹா பெரியவா முகாமிட்டிருக்கும் இடத்திற்கெல்லாம் சென்று ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹம் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்! பெரியவா பாபநாசத்தில் முகாமிட்டிருப்பதை அறிந்து அந்த செல்வந்தர் பாபநாசத்திற்கு வந்து மஹா பெரியவாளின் அனுக்ரஹம் பெற்றுச்செல்ல வந்தார்! அந்த பிக்ஷையெடுக்கும் தம்பதி இந்த செல்வந்தரிடமும் பிக்ஷை கேட்டிருக்கிறது! அவ்வளவு தான்.ஆத்திரம் வந்தது அந்த மிகப்பெரிய தனவந்தருக்கு! கோபத்தில் அந்த தம்பதியை வாய்க்கு வந்தபடி திட்டி விட்டு அவர்களை எட்டி உதைத்துத் தள்ளி விட்டு முகாமுக்குள் நுழைந்தார் அந்த செல்வந்தர்! ஸர்வமும் அறிந்த சர்வேஸ்வரனுக்கு இவர் செய்த காரியம் தெரியாதா என்ன? முகாமுக்குள் ஸ்ரீ மஹா பெரியவர் நிறைய பக்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்! இவரைக் கண்டுக்கவே இல்லை. கடைசியில் எல்லா பக்தர்களிடம் பேசிமுடிந்த பிறகு இவர் கையில் வைத்திருந்த தட்டில் புஷ்பங்கள், பழ வகைகள், மஞ்சள் குங்குமம் முதலிய பொருட்களுடன் ஸ்ரீ மஹா பெரியவாளிடம் சென்றார். மஹா பெரியவாள் முன்பு எல்லாவற்றையும் சமர்பித்துவிட்டு பெரியவா நான் சென்னையில் இருந்து உங்கள் தரிசனத்துக்கு வந்திருக்கேன்! நீங்க தான் என்னை ஆசீர்வாதம் பண்ணனும் என்றார்! அடுத்து என்ன நடக்கப்போகிறதென முகாமில் இருக்கும் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஸ்ரீ மஹா பெரியவாள் சற்றே அதி பயங்கரமான கோபத்துடன் முகாமுக்கு வெளியே பிக்ஷை எடுத்துக்கொண்டிருந்த தம்பதியை என்ன பண்ணே? அவ்வளவு தான்! ஆடிப்போய்விட்டார் அந்த செல்வந்தர். அடுத்து மஹா பெரியவா என்ன சொல்லப்போகிறாரென ஆவலுடன் பக்தர்கள் கூட்டம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது! சாஷ்டாங்கமாக ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளில் வீழ்ந்து நமஸ்கரித்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டார் அந்த செல்வந்தார்! ஸ்ரீ மஹா பெரியவா கடுமையான கோபத்துடன் திருவாய் மலர்ந்தார்! ஏன்டா உன்னால அந்த பிக்ஷை எடுக்குற தம்பதிக்கு எதுவும் கொடுக்க முடியல்லைன்னா என்னால ஒன்னும் கொடுக்க முடியாதுனு சொல்லிட்டு போக வேண்டியது தானே முறை? அத விட்டுட்டு பாவம் அவாளை கண்டபடி திட்டுனது மட்டுமில்லாம அவாள அடிச்சு உதச்சிருக்கே! நீ செஞ்ச பாவத்துக்கு ப்ராயஸ்சித்தம் இல்லைனு சொன்னார் மஹா பெரியவர்! அவ்வளவுதான் அரண்டு போய்விட்டார் அந்த செல்வந்தர்! நா பெரிய பாவம் பண்ணிட்டேன் பெரியவா! செஞ்ச பாவத்துக்கு பரிகாரமே இல்லையா பெரியவானு அழ ஆரம்பித்து விட்டார்! மஹா பெரியவர் மனமிரங்கினார்! இந்த பாப நாசத்துல இருக்குற பாப விநாசேஷ்வர ஸ்வாமிய இப்போவே போய் வணங்கு! அங்க உன் பாவத்துக்கு பரிகாரம் தேடிக்கோன்னு சொல்லிட்டார்! அடுத்த நொடியே பாப விநாசேஷ்வர ஸ்வாமி கோவிலுக்குப் பறந்தார்! அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ பாப விநாசேஷ்வர ஸ்வாமியிடம் தான் செய்த பாவம் தீருவதற்கான பரிகாரத்தை வேண்டி தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்! அன்று இரவில் அந்த செல்வந்தரின் கனவில் ஸ்ரீ பாப விநாசேஷ்வர ஸ்வாமியின் உருவத்தில் ஸ்ரீ மஹா பெரியவாளே தரிசனம் தந்தார்! நீ உன் காலால் எட்டி உதைத்து அடித்த அந்த பார்வற்யற்ற பிக்ஷையெடுக்கும் தம்பதிக்கு எந்த விதத்திலாவது உபகாரம் செய்! அதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாகும் எனக் கூறிவிட்டு மறைந்தார்! அடுத்த நாள் காலையில் அந்த தம்பதியர் பிக்ஷையெடுக்கும் இடத்திற்கு அந்த செல்வந்தர் வந்தார்!  பார்வையற்ற தம்பதியரை பார்த்தார்! தேம்பித் தேம்பி அழுதுகொண்டே அந்த பார்வையற்ற நபரின் கையைப் பிடித்துக்கொண்டே நான் மிகப்பெரிய பாவம் செய்து விட்டேன்! நான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக உங்களுக்கு கண் பார்வை கிடைக்கும் பொருட்டு நானே உங்கள் மூவரின் கண் சிகிச்சைக்குச் செலவு செய்வேன்! நான் உங்களுக்கு தொழில் ரீதியிலாக உதவி செய்யும் பாக்கியத்தை சாக்ஷாத் பாப விநாசேஷ்வர ஸ்வாமியே எனக்கு அருளியிருக்கிறார். இதை நீங்கள் தயவு செய்து நிராகரித்து விட வேண்டாம் எனக்கூறிக்கொண்டே தன்பையில் வைத்திருந்த 20லட்சம் ரூபாய்கான காசோலையைக் கொடுத்து விட்டார்! ஒரு மாதம் தன்னுடைய சென்னை வீட்டில் தங்க வைத்து அவர்களுக்குப் பார்வை கிடைப்பதற்கு உண்டான முழு செலவையும் அந்த தனவந்தரே ஏற்றுக்கொண்டார்! தற்போது அந்தத் தம்பதி ஸ்ரீ மஹா பெரியவாளின் அருட்கடாக்ஷத்துடன் எந்தவிதமான குறையுமின்றி சகலவிதமான செல்வங்களுடன் எகிப்து நாட்டில் வசித்து கொண்டிருக்கிறார்.
பிக்ஷையெடுத்த தம்பதியை பெரும் செல்வந்தராக மாற்றிய மகாபெரியவாளின் அற்புதங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதென்பதே நிதர்சனமான உண்மை!

பெரியவா கடாக்க்ஷம் பரிபூர்ணம்
மஹா பெரியவரின் ஞாபக சக்தியும் நகைச்சுவையும்.

ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!… ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!

ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்.

இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்துதே!..

இன்னும் இருக்கோ? ஆமா… இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்… இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு நெறைய காயக்கறது தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை எடுத்து  திங்கறா.

கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!…

அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..ப்ல ஆயிருந்துதே!.. ஆமா… அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுல தான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்…

“ஒரு சே… ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…

அது ஆறு கன்னு போட்டுது பெரியவா…. இப்போ சமீபத்ல தான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு…நல்ல வம்சம்…

ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?…

சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி வைகுண்டம் போய்ட்டார் பெரியவா…

எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…

பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..

வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?…

எல்லாப் புஸ்தகமும் இருக்கு… ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா….

ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?

கண் செரியாத் தெரியறதில்லே அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…

கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! பாட்டி சொன்னாள்… எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க க்ராமத்துக்கு வந்தப்போ எங்காத்துக்கு வந்து கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் … ஆனா எப்படி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!… பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள் அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!…

பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……

ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!… ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!

குறை என்று வரும் போது பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். நம்மை மாதிரி அல்பங்களோ குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.
முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்: முதலாம் பாகம்

நாரம் என்றால் தீர்த்தம் என்று சொல்லப் போக தீர்த்தம் கொண்டு தர்ப்பணம் செய்த நாரதரின் கதையைச் சொன்னேன். தீர்த்தத்தை எவனொருவன் படுக்கையாக - தன் இருப்பிடமாக கொண்டானோ அவனுக்கு நாராயணன் என்று பெயர்.

ஒருவர் சமத்காரமாக பகவானை ஸ்தோத்திரம் பண்ணியிருக்கிறார் - சிலேடை என்று அதைச் சொல்வது.

பூர்வ காலத்திலே பழையது சாப்பிடுவது என்றொரு வழக்கம். சாதம் சேர்ந்து போயிருந்தால் அதை எடுத்து ஜலத்திலே போட்டுடறது, விடியற்காலையிலே அந்த சாதத்தை எடுத்துப் பிழிந்து போட்டுவிட்டு, அந்த ஜலத்திலே உப்பு சேர்த்து ஒருவர் சாப்பிட்டாரானால் காலை வெயிலைத் தாங்கக்கூடிய சக்தி உண்டாகிறது. குறிப்பா விவசாயிகள் வயல் வேலைக்குப் போகிறவர்கள் இப்படிச் செய்வதுண்டு. (இந்த விவசாயிகளுக்கு போக பாக்யங்களைத் தரச்சொல்லி கேட்கிற ஒரு பிரார்த்தனை கூட பிராதஹ்கால சந்தியாவந்தனத்திலே உண்டு.)

சாதத்துத் தீர்தத்தைச் சாப்பிட்டால் வெயிலைத் தாங்கற சக்தி வரும். இது பழையது சாப்பிட்ட உடம்பு. ஒண்ணும் பண்ணிக்க முடியாது என்று கூடச் சொல்வார்கள்.

இந்த பழையதும் பகவானும் ஒண்ணு என்றார் ஒருத்தர்.

இது பழையது; அவனும் புராண புருஷன்.

இது எங்கே படுத்திருக்கிறது? ராத்திரி முழுதும் சாதம் ஜலட்திலே படுத்திருக்கிறது. அவனும் ஜலத்திலே தானே படுத்துக் கொண்டிருக்கிறான்! அதனாலே "ஜலே சயானம்'

'என்னை உள்ளபடி உணர்கிறவர்கள் ஒரு சிலரே' என்றான் பரமாத்மா கீதையிலே. பழையதின் பெருமையும் அதை அனுபவித்துணர்ந்த சிலருக்கே தெரியும்.

பழையதை எப்போ சாப்பிட வேண்டும்? அதிகாலையிலே, எம்பெருமானையும் அதி காலையிலேயே தியானம் பண்ண வேண்டும்.

பழைய சாதத்தைப் போல பரமாத்மாவும் நாரங்கன் சூழ இருக்கிறான்! எனவே அவன் நாராயணன்.
அருள் மிகு மருந்தீசர் திருக்கோயில்

மூலவர் : மருந்தீசர் (கிருபாபுரீஸ்வரர்)
அம்மன் : ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி
தல விருட்சம் : மருதமரம்
தீர்த்தம் : சிற்றிடை தீர்த்தம். இது அம்மன் சன்னதியில் கிணறாக உள்ளது.
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருஇடையாறு, திருவிடையாறு
ஊர் : இடையாறு
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சுந்தரர், திருநாவுக்கரசர்

தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர் பாசனூர் பரமேட்டி பவித்திரபாவ நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த ஈசனூர் எய்தமான் இடையாறு இடைமருதே.  சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டு ஸ்தலங்களில் இது பதிமூன்றாவது ஸ்தலம்.

விழா : தைமாதம் ஆற்றுத் திருவிழா இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகும்.  
      
சிறப்பு : இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 224 வது தேவாரத்தலம் ஆகும்.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு மருந்தீசர் (கிருபாபுரீஸ்வரர்) திருக்கோயில், டி. இடையாறு : 607 209, திருக்கோயிலூர் தாலுகா, விழுப்புரம் மாவட்டம். போன்:+91 4146 216 045, 206 515, 94424 23919, 98847 77078 
     
தகவல் : அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களை சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

பெருமை : பலாச்சுளை பாலகணபதி சில சிவாலயங்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் சோமாஸ்கந்த அமைப்பில் முருகன் தான் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் சிவன், பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் குழந்தைகளுக்கு பிரியமான லட்டு மற்றும் பலாச்சுளையுடனும் கீழிரு கரத்தில் அபய முத்திரையும் கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார்.
சுந்தரர் இத்தலத்திற்கு வந்து பாடியுள்ளார். முப்பத்தி ஒன்பது திருத்தலங்களை வைப்புத்தலமாக வைத்து இத்தகைய தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார். திருநாவுக்கரசரும், ராமலிங்க அடிகளாரும் இத்தலத்தை பாடியுள்ளார்கள். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.
சந்தனாச்சாரியருள் மறைஞானசம்பந்தரின் அவதாரத்தலமும் இதுவே. இடையாறில் பிறந்த இவர்  பெண்ணாடத்தில் வாழ்ந்தார். இவரை மருதமறை ஞானசம்பந்தர் என்றும், கடந்தை மறைஞான சம்பந்தர் என்றும் போற்றுவர். (கடந்தை என்பது பெண்ணாடத்தின் புராணபெயர்) "சுகம்' என்ற சொல்லுக்கு "கிளி' என்று பெயர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். இங்குள்ள சுப்பிரமணியரின் பெயர் கலியகராமப்பிள்ளையார் என்பதாகும்.

திருமணத்தடை நீக்கும் ஸ்தலம் : சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்மன் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்களுக்கு கல்யாண கோலத்தில் மாலை மாற்றும் அமைப்பு என்பர். நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது நம்பிக்கை.

ஸ்தல வரலாறு : கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணைநதியின் தென்பகுதியில் அமைந்துள்ள தலமான திருமருதந்துறை என்ற இடையாற்றில் எம்மை பூஜித்து, மருத மரத்தின் கீழ் தவமிருந்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். ஒட்டுக்கேட்ட முனிவருக்கே மானிடப்பிறவி என்றால், ஒட்டுக்கேட்கும் மானிடர்களுக்கு எத்தகைய பிறவி கிடைக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.


கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும் ... Ganesha's 32 Forms with Slokas

ஸக்தி கணபதி .. शक्ति गणाधि .. Sakthi Ganpati - 3

आलिंग्य देवीं हरितां निषण्णं परस्परस्पृष्ट कटीनिवेशम् ।
संध्यारुणं पाशसृणी वहन्तं भयापहं शक्तिगणेशमीडे ॥

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய
ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே

பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்துடன், மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவரும், திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவரும் (பக்தர்களின்) அச்சத்தைப் போக்குபவருமான ஸக்தி கணபதியை வணங்குகிறேன்.

The powerful Ganesa

AAlinghya devim harithaam nishannam parasparaslishta katou
SAndhyarunaam pasa sruneem vahantham bhayapaham Shakthi Ganapathi meede.

I salute the Ganapathi with Shakthi, who is seen embracing HIS wife ,
Who holds a green lemon, who and HIS wife seated on HIS knee embrace each other, Who is of the orange colour of the dusk, who holds the tusk and goad and shows sign of protection.
வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்! நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜை சிறப்பாக செய்து விடுவோம். அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி கலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம். ஆனால், ருது என்ன வென்று சரியாகத் தெரிந்து இருக்காது. பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும். அவற்றின் நிவேதனப் பெயர்கள் தெரிந்து இருக்காது. இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.

1. கதலீபலம் – வாழைப்பழம்
2. பீஜாபூரபலம் – கொய்யாப்பழம்
3. வேத்ர பலம் – பெரப்பம் பழம்
4. பதரி பலம் – எலந்தைப் பழம்
5. கர்ஜுர பலம் – பேரிச்சம் பழம்
6. ஜம்பூ பலம் – நாவல் பழம்
7. கபித்த பலம் – விளாம் பழம்
8. த்ராஷா பலம் – திராக்ஷா பழம்
9. ஆம்ரபலா பழம் – மாம்பழம்
10. மாதுஸங்கபழம் – மாதுளம் பழம்
11. நாரங்கபலம் – நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
12. பனஸ பலம் – பலாப் பழம்
13. உர்வாருகம் – வெள்ளரிக்காய்
14. ஜம்பீர பலம் – எலுமிச்சம் பழம்
15. இக்ஷாகண்டம் – கரும்பு
16. சணகம் – கடலை
17. ப்ருதுகம் – அவல்
18. ஸர்க்கரா – சர்க்கரை
19. ததி – தயிர்
20. குடோபஹாரம் – வெல்லம்
21. காஷ்மீர பலம் – ஆப்பிள்
22. அமிருதம் – தீர்த்தம்
23. நாரிகேளம் – தேங்காய்
24. ஸால்யன்னம் – சம்பா அன்னம்
25. குளா பூபம் – அதிரசம், அப்பம்
26. தத்யன்னம் – தயிர் சாதம்
27. திந்திரியன்னம் – புளியோதரை
28. ஸர்கரான்னம் – சர்க்கரை பொங்கல்
29. மாஷா பூபம் – வடை
30. ரஸகண்டம் – கற்கண்டு
31. மோதகம் – கொழுக்கட்டை
32. திலான்னம் – எள்ளு சாதம்
33. ஆஜ்யோபகாரம் – நெய்
34. லட்டூகம் – லட்டு
35. சித்ரான்னம் – பலவகை கலந்த சாதம்
36. நாரிகேளகண்டத்வயம் – இரண்டாக உடைத்த தேங்காய்
37. க்ருதகுள பாயஸம் – வெல்லம் போட்ட பாயஸம்
38. கோக்ஷீரம் – பசும் பால்

ருதுக்கள்
சித்திரை, வைகாசி – வஸந்த ருது
ஆனி, ஆடி – க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி – வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை – சரத் ருது
மார்கழி, தை – ஹேமந்த ருது
மாசி, பங்குனி – சிசிர ருது
கிழமைகளைச் சொல்லும் முறை
ஞாயிறு – பானு வாஸர
திங்கள் – இந்து வாஸர
செவ்வாய் – பவும வாஸர
புதன் – சவும்ய வாஸர
வியாழன் – குரு வாஸர
வெள்ளி – ப்ருகு வாஸர
சனி – ஸ்திர வாஸர
பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை
சித்திரை – மேஷ மாஸே
வைகாசி – ரிஷப மாஸே
ஆனி – மிதுன மாஸே
ஆடி – கடக மாஸே
ஆவணி – ஸிம்ம மாஸே
புரட்டாசி – கன்யா மாஸே
ஐப்பசி – துலா மாஸே
கார்த்திகை – வ்ருச்சிக மாஸே
மார்கழி – தனுர் மாஸே
தை – மகர மாஸே
மாசி – கும்ப மாஸே
பங்குனி – மீன மாஸே.