வெள்ளி, 18 டிசம்பர், 2020

அனைவராலும் மதிக்கப்படுபவர் யார்?

அனைவராலும் மதிக்கப்படுபவர் யார்?

பிறர் பகைத்தாலும் நேசித்தாலும் நம்பினாலும் புகழ்ந்தாலும் வஞ்சித்தாலும் எவன் கவலைப்படுவதில்லையோ அவன் உயர்ந்தவன், புற அழகையும் சிறப்பையும் நாடும் உள்ளத்தில் புலன்கள் அடங்கா, ஐம்புலன்களை அடக்கி ஆளத் தெரியாதவன் தூய்மையற்ற உணவை உண்பவன், சோம்பேறி, கடமையில் ஊக்கமில்லாதவன் இத்தகையோர் வேரற்ற மரம் பெருங்காற்றில் முறிந்து விழுவது போல் அறியாமையாலும் துயரத்தாலும் சாய்க்கப்பெற்று வீழ்ந்து அழிவார்கள்.

எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்ற மேலும் அது கொழுந்துவிட்டு எரிவது போல் ஒருவன் உள்ளத்தில் பாவச் சிந்தனைகள் இடம்பெற்று விட்டால் அவன் மீண்டும் மீண்டும் தீமைக்கே ஆளாகிறான். தீய எண்ணத்துடன் சிந்தித்தாலும் செய்தாலும் தீமை அவனைத் தொடர்கிறது. எரியும் விளக்கில் விழுந்து மடியும் விட்டிலைப் போன்று தீமையிலேயே அவனும் மடிகிறான். அறியாமையில மூழ்கிக் கிடக்கும் ஒருவன் தன் அறியாமையை உணர்ந்தகணத்திலேயே அறிவாளியாகிறான். ஆனால் அறியாமையில் கிடந்து கொண்டே தன்னைப் புத்திசாலி என நினைக்கும் அறிவிலி உண்மையிலேயே மூடனாவான்.

பிறர் குற்றத்தைக் கூறுபவர்கள் தம் குற்றத்தை அறிவதில்லை. ஆகையால் தம்முடைய சொந்தக் குற்றம் மறைந்துவிடுகிறது. தம் குற்றத்தையும் பிறர் குற்றத்தையும் எடை போட்டுப் பார்க்க வேண்டும். அறியாமை ஒருவனை பந்தப்படுத்தும். நீதிமானாகிய ஞானியை நிந்திக்கச் செய்யும். தீயவன் வானத்தை நோக்கி எச்சில் துப்புவனுக்கு ஈடாவான். அவன் உமிழ்ந்த எச்சில் வானத்தை அசுத்தப்படுத்துவது இல்லை. மாறாக, அவன் முகத்திலேயே விழுந்து அவனை அசுத்தமாக்கும்.

காமத்தினின்றும், அகந்தையினின்றும் விடுபட்டவன் அடக்கமுடையவனாய் பேரின்பமுற்றவனாய் உறுதியாய் இருப்பான். நம்பிக்கையும் நல்லொழுக்கமும் ஒருவனிடம் இருந்தால் அவனை எல்லோரும் மதிப்பார்கள்.


பவுர்ணமியின் தனிச்சிறப்பு!


பவுர்ணமியின் தனிச்சிறப்பு!

சந்திரன் படிப்படியாக, ஒளி குறைந்து, முற்றுமாக, நம் கண்ணுக்குத் தென்படாத தினத்தை அமாவாசை என்றும், அதன் பிறகு, படிப்படியாக ஒளி கூடி, முழு இரவும் முழுமையாகத் தென்படும் நாளை பவுர்ணமி என்றும் கூறுகிறோம். பகலில் சூரியனும்; இரவில் சந்திரனுமாக, ஒரு நாளில் 24 மணி நேரமும், விண் ஒளிகள், நம்மீது, இயற்கையாகவே படர்வது பவுர்ணமி அன்று மட்டுமே. இதனால் தான் பரம்பொருள் வழிபாட்டில் மற்ற நாட்களில் செய்யப்படும் வழிபாடுகளை விட பவுர்ணமி பூசையை மிகச் சிறந்ததாகப் போற்றி வந்திருக்கின்றனர். பொதுவாக, ஒவ்வொரு திதியையும், குறிப்பிட்ட ஒரு தெய்வ வழிபாட்டுக்கே மிக உகந்ததாக கருதப்படுவதை அறிவோம்.  உதாரணமாக, சதுர்த்தி வினாயகருக்கும், சஷ்டி முருகனுக்கும், அஷ்டமி, நவமி அம்மனுக்கும், ஏகாதசி விஷ்ணுவுக்கும், திரயோதசி, சதுர்த்தசி சிவபெருமானுக்கும் ஏற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, பவுர்ணமியை மட்டும், சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், முருகனுக்கும் அன்னை பராசக்திக்கும், லக்ஷ்மிக்கும் என்று பல தெய்வ வழிபாடுகளுக்கும் மிக மேன்மையாகக் கருதுவது குறிப்பிடத்தக்கது. பவுர்ணமியில் பூசை பண்ணியதும் பலன் என்று கூறுமளவுக்கு முழுநிலவன்று வழிபடுவது மிக்க சிறப்புடையது.

காலத்தைக் கணக்கிடும் பல முறைகளில், சூர்யமானம், சந்திரமானம் என்பவை மிக முக்கியமானவை. பொதுவாக, வடபாரத மாநிலங்களில் தான், சந்திரனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டாலு<ம், சூரியனின் நகர்வைப் பின்பற்றும் தழிகத்திலும் பலமுக்கிய செயல்பாடுகளுக்கு நிலவின் நிலையும் கருதப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இறைவழிபாட்டில், அதுவும், ஆலய வழிபாட்டில் பவுர்ணமியும் அதை ஒட்டிய நக்ஷத்திரமுமே மிகவும் மேன்மையாகக் கருதப்பட்டிருக்கின்றன. சித்திரைத் தேர் முதல், பங்குனிக் காவடி வரை, லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய திருவிழாக்கள் அநேகமாக முழுநிலவு நாளன்றே நடைபெறுகின்றன. இத்தகு முக்கிய திருவிழாக்களில் ஒன்று தான் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையன்று நடைபெறும் தீபவிழாவும் ஆகும். அண்மையில் பிரபலமாகியுள்ள கிரி வலம் வரும் வழிபாடும் பவுர்ணமியின் மேன்மை கருதியே.

சிவ பக்திக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?


சிவ பக்திக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?

ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர். ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர். அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது. அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி. அதற்கு அவள் கணவன், அப்படி செய்யக் கூடாது. கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர். நாம், கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம். கரையிலிருந்த படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி ஸ்நானம் செய்து விடலாம். இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி, சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம். கொஞ்ச தூரம் சென்றால், மூங்கில் பாலம் வரும். அதன் வழியாக அக்கரை சேரலாம்... என்றான்.

அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால், அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார். உடன் அவன் பதறிப் போய், சுவாமிகளே... நீங்கள், என்னை வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால், எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்... என்றான். அதற்கு ஹரதத்தர், அய்யனே... உன்னை போல சிவபக்தியும், ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை. காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல் ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை. வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம் இருந்ததில்லை. நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்... என்று புகழ்ந்து பாராட்டினர். இது, சிவலிங்கம்; இது கல்; இது மண்; என்ற பேதமின்றி, சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த சிவபக்திக்கு அடையாளம். இப்படிப்பட்ட எண்ணம் எல்லாருக்கும் வந்து விடுமா? இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும். பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது. எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால், நாளடைவில், மனம் பக்குவப்படும்.

பண்டரீபுரம் ராமதாஸர்


பண்டரீபுரம் ராமதாஸர்

ராமதாஸர் ஒரு சிறந்த ராமபக்தர். இவர் அனுமாரின் அம்சமாகவே இந்த உலகத்தில் அவதரித்தார். அவர் பிறக்கும்போது சிறியதாக ஒரு வால்கூட இருந்தது. நாள் ஆக ஆக அது தானே மறைந்துவிட்டதாம். எப்போதும் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் என்றே ஜபம் செய்து கொண்டிருப்பார். இந்த மந்திரத்தில் பதின்மூன்று எழுத்துக்கள் இருப்பதால், பதின்மூன்று கோடி கணக்கு வைத்து ஜபம் செய்வார். இவர் ஒருமுறை ஜபம் செய்து விட்டால், ராமருடைய வில்லில் உள்ள மணி ஒரு தரம் அடிக்குமாம். இப்படி பலமுறை பதின்மூன்று கோடிகள் ஜபம் செய்தவர். இடையில் ஒரு கௌபீனம், கையில் ஜபமாலை, நீண்ட முடி, தாடி, கால்களில் பாதுகை, இதுதான் அவருடைய உருவம். கண்கள் எப்போதும் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். சத்ரபதி சிவாஜியின் குரு இவர். ராமதாஸர் கோதாவரி நதிக்கரையில் உள்ள கஞ்சன்காட் என்ற இடத்தில் ஒரு குகையில் தங்கி ஜபத்தில் ஈடுபட்டவராக இருப்பார். பண்டரீபுரம், அருகிலுள்ள மகா÷க்ஷத்திரம். ஒரு தாயாருக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் அம்மா, அம்மா என்று தாயாரைச் சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கும். தன்னைச் சுற்றி வரும் குழந்தையைக் காட்டிலும், தன்னை விட்டு விலகியிருக்கும் குழந்தையையே தாய் உள்ளம் அதிகமாக நினைக்கும். அதுபோல் தான் பகவானும்.

பாண்டுரங்கனை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருந்தாலும், பாண்டுரங்கனோ ராமதாஸர் வருகின்றாரா? எப்போது என்னைப் பார்க்க வருவார்? இவ்வளவு பக்கத்தில் இருந்துகொண்டு என்னைப் பார்க்க ஏன் வரவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார். ராமதாஸர் ஏன் பாண்டுரங்கனை பார்க்க வரவில்லை? அதற்கு ஒரு காரணம் உண்டு. சிவ பக்தர்கள் பாண்டுரங்கனை சிவனே என்கிறார்கள். பண்டரீபுரத்தில் சிவராத்திரி விமரிசையாக இருக்கும். திகம்பரராக இருப்பதால், ஜைனர்கள் எல்லாம் மஹாவீரர் என்கிறார்கள். வைஷ்ணவர்கள் எல்லாம் கையில் சங்குடன் ருக்மணியுடன் இருப்பதால் இவன் கிருஷ்ணனே என்கிறார்கள். ராமதாஸருக்கு ஒரு பிடிவாதம். ராமரைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை. ராம நாமத்தைத் தவிர வேறு நாமத்தை ஜபம் செய்வதில்லை. ராமாயணத்தைத் தவிர வேறு எதையும் பாராயணம் செய்வதில்லை. இப்படியிருக்க எந்த மூர்த்தி என்றே நிர்ணயம் ஆகாத பாண்டுரங்களை எப்படித் தரிசனம் செய்வது? அதனால் தான் போகவில்லை. ஒரு நாள் சிவாஜி, ராமதாஸரை வணங்கி விட்டு, அவர்முன் கைகூப்பி பணிவுடன் நின்றார். ராமதாஸரும் வந்த விஷயத்தைக் கேட்டார். நாளை ஏகாதசி, பாண்டுரங்கனுக்கு ஒரு பெரிய திருமஞ்சனம், பூஜை எல்லாம் ஏற்பாடு செய்துள்ளேன், தாங்கள் தான் அதை முன்னின்று நடத்திக் கொடுக்க வேண்டும் என சிவாஜி வேண்டினார். நீ பூஜையை நல்ல முறையில் நடத்து, ஆனால் என்னால் வரஇயலாது என்று ராமதாஸர் கூறினார். அதற்கு சிவாஜி, தங்களால் நாளை வரமுடியாது என்றால், வேறு ஒருநாளில் பூஜை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

ராமதாஸரோ, நீ எப்போது ஏற்பாடு செய்தாலும் நான் வருவதற்கில்லை, திட்டமிட்டபடி நாளையே நடக்கட்டும் என்று கூறினார். சிவாஜியோ, தாங்கள் ஏன் வருவதற்கில்லை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வினவினார். வேறு ஒன்றும் இல்லை. நான் ராமபிரானைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை என்ற நியமத்தில் இருப்பவன். அதனால் தான் நான் வருவதிற்கில்லை என்று கூறினேன். குருவானவர், சீடர்கள் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்காமல் ஊக்குவிக்க வேண்டும், அதனால் தான் பூஜையை உன்னை நடத்தச் சொன்னேன் என்றார். சிவாஜியோ, நீங்கள் வரவில்லையென்றால் அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தி விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தான். சரி! உன் ஆசைக்காக காலையில் வந்து ஐந்து நிமிடங்கள் இருந்துவிட்டு வந்துவிடுவேன் என்று கூறி சிவாஜியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு, ஜபமாலையை கையில் உருட்டிக்கொண்டு ஜபம் செய்து கொண்டே பண்டரீ வந்துவிட்டார். பண்டரீ வந்தால், அங்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சிவாஜி வருவதாகவோ, திருமஞ்சனம் ஏற்பாடாகி இருப்பதாகவோ ஒரு தகவலும் இல்லை. ஜபம் செய்து கொண்டு வந்தவர் தன்னை அறியாமல் கோயிலுக்குள் வந்து விட்டார். கோயிலுக்குள் வந்து தெய்வத்தை வணங்காமல் அலட்சியம் செய்யக்கூடாது என்பதால் உள்ளே சென்று தரிசனம் செய்தார். பாண்டுரங்கனே தன்னை தரிசிக்க இப்படி ஒரு லீலை புரிந்துள்ளார் என அப்போது தான், ராமதாஸரின் மனதில் தோன்றியது. உடனே ராமதாஸர், ஹே பாண்டுரங்கா! நீ ராமனா அல்லது பாண்டுரங்கனா! ராமனாக இருந்தால் சரயு நதிக்கரையை விட்டு ஏன் இங்கு வந்தாய்? சீதாவை விட்டு விட்டு ருக்மணி தேவியுடன் இங்கு காட்சி தருகிறாய்? என புலம்பினார். அடுத்தவிநாடி அங்கு பாண்டு ரங்கனைக்காணவில்லை. அந்த இடத்தில் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதமான ராமச்சந்திர மூர்த்தி தனது விஸ்வரூபதரிசனம் காட்டி, ராமனும் நானே, பாண்டு ரங்கனும் நானே என்பதை உணர்த்தினார்.

துளசி ராமாயணம் தந்த துளசிதாசர்


துளசி ராமாயணம் தந்த துளசிதாசர்

தென்னிந்தியாவில் வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம் பிரசித்தி பெற்றது போலவே, வட இந்தியாவில், குறிப்பாக கங்கை நதி பாயும் பிரதேசங்களில், ராமசரித் மானஸ் (துளசி ராமாயணம்) பிரசித்தி பெற்றது. இதை எழுதியவர் சந்த துளசி தாசர். இவர் உத்திரப் பிரதேசத்தில் அலஹாபாத்துக்குக் கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள ராஜ்பூர் என்ற ஊரில் 1532-ஆம் ஆண்டு ஆத்மாராம் தாபே, ஹுலசீபாய் என்கிற பிராமணத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் - ராம்போலோ.  இவர் மூல நட்சத்திரத்தில் (அபுக்த மூலம்) பிறந்ததால், தாய் தந்தைக்கு மரணம் நிச்சயம் என்று அந்த நாளில் நம்பப்பட்டது. பிறக்கும்போதே குழந்தை ராம்போலாவுக்குப் பற்கள் வேறு முளைத்திருந்தன ! இதற்குப் பரிகாரமாக, குழந்தையைக் கைவிட்டுவிட வேண்டும்; குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகளாவது குழந்தையின் முகத்தைப் பார்க்கக் கூடாது என்றது சாஸ்திரம். பரம ஏழையான ஆத்மாராமும் நாமகரணம் போன்ற சடங்குகள் செய்து மகிழும் நிலையில் இருக்கவுமில்லை. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஹுலசீபாய் மரணமடைந்தாள். அதன்பிறகு குழந்தை ராம்போலாவுக்குச் செவிலித்தாயாக இருந்து வளர்த்தவரும் சிறுவனுக்கு ஐந்து வயது முடியும் முன்பே காலமானாள். இதன்பின், ராம்போலா ஒரு கவளம் சோற்றுக்காகத் தெருவில் அலைந்தான். உள்ளூர் அனுமார் கோயில் அவனுக்கு அடைக்கலம் தந்தது. இந்த ராம்போலாவே பிற்காலத்தில் துளசிதாசர் என்று புகழ்பெற்றார். ராமானுஜரின் சிஷ்ய பரம்பரையில் ஐந்தாவது தலைமுறையினரான ஸ்வாமி ராமானந்தரின் வழித்தோன்றலான நரஹரி தாசர் கனவில் ஓர் அநாதைச் சிறுவன் வந்தான். அவனைக் கண்டுபிடித்து, அமரகாவியமான ராமாயணத்தை அவனுக்குக் கற்பிக்கும்படி உத்தரவாயிற்று.

அவர் ராம்போலாவை அயோத்திக்கு அழைத்துப் போய் உபநயனம் செய்வித்தார். வடு வான ராம்போலா, ஸ்ரீராமனை நமஸ்கரித்தபோது, துளசிச் செடியிலிருந்த ஓர் இலை அவன் தலைமேல் விழுந்தது! அன்றுமுதல் ராம்போலா துளசிதாசர் ஆனார். சரயூ மற்றும் காக்ரா நதிகளின் சங்கமத்தில் உள்ள கிராமமாகிய சுகர் ÷க்ஷத்திரத்தில் துளசிதாசர் தங்கிய காலகட்டத்தில் ஸேஷநாதர் என்னும் சாது, துளசிதாசரை காசிக்கு அழைத்து வந்தார். அவருடைய குருகுலத்தில் 15 வருடம் தங்கி, சமஸ்கிருதம், வேத வேதாங்கம் மற்றும் ஏனைய பாடங்களைக் கற்றார் துளசிதாசர். இதன்பின்னர், தான் பிறந்த ஊரான ராஜ்பூருக்கே திரும்பினார். பிரபல ஜோதிடர் தீனபந்து பாடகரின் மகளான ரத்னாவளி இவர் மனைவியானாள். இளம் தம்பதியர், கிராமத்தில் எளிய வாழ்க்கை நடத்தினர். ரத்னாவளி படிப்பு, அறிவு, பண்பு இவற்றுடன் நல்ல அழகியும்கூட ! தன் மனைவியை அளவுக்கதிகமாக நேசித்தார் துளசிதாசர். இதனால், சுமார் 12 ஆண்டுகளுக்குத் தன் பிறந்த வீட்டுக்கே போகவில்லை ரத்னாவளி. அவர்களுக்குப் பிறந்த தாரகன் என்ற ஆண்குழந்தை, குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டது. ஒருமுறை தன் தந்தை இறந்ததற்காக ரத்னாவளி, துளசிதாசர் வெளியூர் போயிருந்த சமயம் பிறந்த வீட்டுக்குப் போனாள். அந்த நேரம் பார்த்து ஊர் திரும்பிய துளசிதாசர், மனைவியை உடனே காண விழைந்தார். வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்த யமுனையாற்றைக் கடந்து, மாமனார் வீட்டை அடைந்தார். நள்ளிரவில் தன் கணவரைக் கண்ட ரத்னாவளிக்கோ ஆச்சரியம், பயம், வெட்கம் எல்லாம் ஒருங்கே தாக்கின. அவள் துளசிதாசரிடம், எலும்பு, மாமிசம், மஜ்ஜைகளாலான மனிதப் பிறவி நான். என்மேல் தாங்கள் வைத்துள்ள ப்ரேமையை பகவான் ஸ்ரீராமன்பால் செலுத்தினால், அவர் உங்களைப் பிறவிக்கடலிலிருந்து கரை சேர்ப்பார் என்றாள். இந்தச் சின்ன சம்பவம், துளசிதாசரின் அகக்கண்ணைத் திறந்தது. அவர் மனதில் ஆன்மிக விளக்கு சுடர்விட்டு எரியலாயிற்று. அதன் பின் வீடு வாசல்களைத் துறந்து, ப்ரயாகைக்கு வந்து சந்நியாசி ஆனார் துளசிதாசர். ராமாயண உபன்யாசம் செய்தார். துளசிதாசர் தினமும் கங்கையில் காலைக்கடன்களை முடித்துத் திரும்பும்போது, சொம்பில் இருந்த நீரை வழியில் இருந்த ஆலமரத்துக்கு ஊற்றிவிட்டு வருவாராம். இவ்விதம் பல காலம் புனித கங்கையினால் ஜல தர்ப்பணம் பெற்று, அந்த மரத்தில் வசித்துவந்த பிரம்மராக்ஷஸன் முக்தியடைந்தான்.

தன் நன்றியைத் தெரிவிக்க, துளசிதாசரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்தான். துளசிதாசர், ஸ்ரீராமனின் தரிசனம் செய்து வைக்கும்படி கோரினார். அது தன்னால் ஆகாத காரியம் என்று சொன்ன பிரம்மராக்ஷஸன் ஆஞ்சனேயரை அணுகும்படி சொன்னான். ஹனுமான் ராம கதை கேட்க வருவார் என்றும், அவரை அடையாளம் காண்பது எப்படி என்பதையும் விளக்கினான். அவ்வாறே மாருதியை அணுகி, ராம தரிசனம் வேண்டினார். ஹனுமார் சொல்படி, சித்ரகூடத்துக்குப் போய் அங்கு ராம்காட்டில் வசிக்கலானார். வரும் பக்தர்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தார். ஒருமுறை மௌனீ அமாவாசையன்று ராமன் சிறுவனாக வந்து, துளசிதாசரிடம் சந்தனம் கேட்டாராம் ! ராம தரிசனத்தால் மெய்மறந்துபோன துளசிதாசர் சமாதி நிலையில் இருந்ததால், ஸ்ரீராமனே அவர் நெற்றியில் திலகமிட்டுவிட்டு மறைந்து போனார் ! ஸ்ரீராம தரிசனத்தினால் புனிதரான துளசிதாசர் அம்மையப்பரான சிவ பார்வதியரின் ஆணையை ஏற்று, அயோத்திக்கு வந்து கி.பி. 1575-ஆம் ஆண்டு ராமநவமியன்று, ராம சரித மானஸம் எழுதத் தொடங்கினார். ஹிந்தியின் கிளையான அவதி மொழியில் எழுதப்பட்ட இந்தக் காவியம் இரண்டு வருஷம், ஏழு மாதம், இருபத்தாறு நாட்களில் ஸீதா ஸ்வயம்வரத்தின் ஆண்டுவிழா நாளன்று முடிவடைந்தது ! துளசி ராமாயணம் என்று அழைக்கப்படும் ராமசரித மானஸம், ஆத்யாத்ம ராமாயணத்தின் மாதிரியில் அமைந்துள்ளது. மற்ற ராமாயணங்கள் போலவே காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமனுடைய மானுட லீலைகளைச் சொல்லவும், தன் ஆத்ம சந்தோஷத்துக்காகாவுமே இதை எழுதினார் துளசிதாசர். இதில் ராமன், பரதன், அகல்யை, சபரி போன்றவர்கள் ஆதர்ஸத்தின் சிகரம் என்றால், ஹனுமான் பக்தியின் ஹிமாலயம். இதனாலேயே இந்த க்ரந்தம் எல்லா மனிதர்களையும் கவர்ந்திழுக்கிறது. முக்குணங்களையும் கடந்து நில்லும் ப்ரம்ம தத்துவத்தை, பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் இயற்றப்பட்டுள்ள ராமசரித மானஸம் ஒரு ஞானப் பொக்கிஷம். கிரியர்சன் என்ற ஆங்கிலேயக் கலைஞர், இங்கிலாந்தில் பைபிள்கூட மக்களிடையே இத்தனை அங்கீகாரம் பெறவில்லை என்று வியக்கிறார். 16-ஆம் நூற்றாண்டில் நம் நாடு முகம்மதியர்கள் ஆட்சியில் இருந்தது. அப்போது ஹிந்துக்களுக்கு சனாதன தர்மம், சடங்குகளில் சிரத்தை குறையத் தொடங்கி இருந்த வேளையில் ராமசரித மானஸம், அவர்களை ஒன்றுகூட்டி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது ! தனது 91-வது வயதில் கி.பி.1623-ல் பூதவுடலைத் துறந்தார் துளசிதாசர்.