கைலாசம் போக என்ன செய்ய வேண்டும்?
மனித வாழ்க்கை எப்படி எல்லாமோ முடிவுக்கு வந்து விடுகிறது. இப்படி,
எப்படியாவது வாழ்க்கை நடத்தி விட்டால் போதுமா! நமக்கு நற்கதி ஏற்பட, ஏதாவது
செய்ய வேண்டாமா... வீட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தாகி விட்டது.
இதெல்லாம், பிறருக்கு தான் உதவும். நமக்கு உதவுவது, நாம் செய்யும்
புண்ணியம் மட்டும் தான். இதை சுலபமாக சம்பாதித்து விடலாம் என்கின்றனர்
முன்னோர். ஆலயத்தை பிரதட்சணம் செய்வது ஒரு புண்ணியம். வாக்கிங் போகிற
மாதிரி, சாயந்திரம் கிளம்பி, ஒரு ஆலயத்தை சுற்றி விட்டு வந்தாலே, ஆலயப்
பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைத்து விடும். ஒரு சின்ன கதை! சோழ மகாராஜா
ஒருவர் இருந்தார். அவர் ஒரு சமயம், ஹரதத்தர் என்ற மகானை தரிசிக்க வந்தார்.
மகானை சந்தித்த ராஜா, அவரை வணங்கி, நான் கைலாசம் போக என்ன செய்ய வேண்டும்?
என்று கேட்டார். அதற்கு ஹரதத்தர், நீர் கஞ்சனூர் முதலான ஏழு சிவ ஸ்தலங்களை,
அரை யாம நேரத்தில் தரிசித்து வந்தால், உன் ஆசை நிறைவேறும்... என்றார்.
உடனே ராஜா, இதென்ன பிரமாதம்... என்று சொல்லி, பஞ்ச கல்யாணி குதிரை மீது
ஏறி, குடைபிடித்து ஒருவன் ஓடிவர, ஏழு சிவஸ்தலங்களையும் அரை யாமத்தில்
தரிசித்தார்.
அதே சமயம், குதிரையும், குடைபிடித்து ஓடிவந்தவனும் மயங்கி விழுந்து, இறந்து
போயினர். அந்த நிமிடமே, வானிலிருந்து ஒரு விமானம் வந்து, குதிரையையும்,
குடைபிடித்தவனையும் ஏற்றிக் கொண்டு, கைலாசம் சென்றது. அந்த அதிசயத்தை கண்டு
ஆச்சரியப்பட்ட சோழ ராஜன், தானும், ஆலயத்தை சுற்றி வந்திருக்கும் போது,
குதிரைக்கும், குடை பிடித்தவனுக்கு மட்டும், கைலாயம் போகும் பாக்கியம்
கிடைத்திருக்கிறதே... நமக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்று எண்ணினார்.
நேராக ஹரதத்தரிடம் சென்று, நடந்த விபரத்தை சொன்னார். அதற்கு ஹரதத்தர்,
குதிரையும், குடை பிடித்தவனும் காலால் நடந்தே, ஆலயத்தை வலம் வந்தனர். அந்த
புண்ணியத்தால், அவர்களுக்கு கைலாசம் போகும் பாக்கியம் கிடைத்தது. நீ,
குதிரை மேல் ஏறி வந்ததால் சரீர சுகம் தான் கிடைத்தது. கைலாயம் போகும்
பாக்கியம் கிடைக்கவில்லை... என்றார். அரசன் மறுபடியும் அவரை வணங்கி, நான்
இப்போது என்ன செய்ய வேண்டும்... என்று கேட்க, நீ பாதசாரியாகவே அந்த ஏழு
சிவாலயங்களையும் பிரதட்சணம் செய்... என்றார். அரசனும், ஆசார சீலனாக
பக்தியுடன், நடந்தே ஏழு சிவாலயங்களையும் வலம் வந்து, அவர் முன் வணங்கி
நின்றார். அடுத்த வினாடி, விமானம் வந்து அரசனை, கைலாசத்துக்கு சகல
மரியாதைகளுடன், அழைத்துச் சென்றது. இதன் மூலம் அறிந்து கொள்வது
என்னவென்றால், ஆலயம் வலம் வருவது என்பது, காலால் நடந்து வலம் வர வேண்டும்.
ஏதாவது ஒரு வாகனத்தில் ஏறி பவனி வந்து, நான் நூறு சுற்று சுற்றி
விட்டேன்... என்றால், அது பயன்படாது. புண்ணியம் என்பது சிரமப்பட்டு
சம்பாதிக்க வேண்டியது; விலைக்கு வாங்குவதல்ல.