ஞாயிறு, 23 ஜனவரி, 2022

காஞ்சி மஹா பெரியவா....

காஞ்சி மஹா பெரியவா...

காஞ்சிப் பெரியவர் 1894, மே மாதம் 20ஆம் தேதி விழுப்புரம் நகரில் அவதரித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள், தாயார் லட்சுமி அம்மையார். இவர்களுக்கு சுவாமிகளைத் தவிர நான்கு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இதில் ஸ்வாமிகள் அவர்களின் இரண்டாவதாகப் பிறந்தவர். சுவாமிநாதன் என்ற பெயரே சுவாமிகளுக்கு பெற்றோர் சூட்டியதாகும். இவர்களது குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாதன். அவரது பெயரே சுவாமிகளின் பெயராக அமைந்தது. சுவாமிநாதன் எட்டு வயது வரை தந்தையிடமே கல்வி கற்றார். பின் திண்டிவனம் ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தார். இப்பள்ளியில் கண்டிப்பும், ஒழுங்கும் நல்ல முறையில் இருந்தன. அறிவுக்கூர்மையுடன் நன்கு ஆர்வத்துடன் படித்து வந்தார். ஆண்டு தோறும் பைபிள் ஒப்புவித்தல் போட்டி நடப்பது வழக்கம். இப்போட்டியில் எப்படியும் பரிசு பெற்று விடுவது என்ற உறுதியுடன் சுவாமிநாதன் படித்து முதல் பரிசும் பெற்றார். இவர் வெற்றி பெற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது. எல்லா ஆசிரியர்களும் சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தனர். ஒரு சமயம் அப்பள்ளியை ஆய்வு செய்ய உதவிக்கல்வி அதிகாரி மஞ்சக்குப்பம் சிங்காரவேலு முதலியார் வந்திருந்தார். கண்டிப்பு மிக்க அவர், மாணவர்களின் கல்வித்திறனை அறிய சிக்கலான பல கேள்விகளைக் கேட்டார். சுவாமிநாதனின் தெளிவான பேச்சு அதிகாரியின் கவனத்தை ஈர்த்தது. நிச்சயம் இந்த மாணவர் எதிர் காலத்தில் உயர்ந்த நிலையை அடைவார் என்று பாராட்டிச் சென்றார். சுவாமிநாதன் அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியின் ஆண்டு விழாவில் ஷேக்ஸ்பியர் எழுதிய ஜான் மன்னர் என்ற நாடகத்தை நடத்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆர்தர் இளவரசர் வேடத்தில் நடிப்பதற்கு சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார் தலைமையாசிரியர். நாடகத்தில் நடிப்பதற்கு தன்னைத் தேர்ந்தெடுத்ததை அறிந்து சுவாமி நாதன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சுவாமிநாதனின் பெற்றோருக்கோ இதில் உடன் பாடில்லை. ஆனாலும், தன் பெற்றோரைச் சம்மதிக்க வைத்தார் சுவாமிநாதன். அவரது விருப்பப்படியே பெற்றோர் நாடக உடைகளை தைக்க ஏற்பாடு செய்தனர். இரண்டே நாட்களில் ஜான் மன்னருக்குரிய வசனங்களை மனப்பாடம் செய்து, அருமையாக நடித்தார். நாடகத்தைக் கண்ட தலைமை விருந்தினர் பிஷப், சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தார். இன்று ஜான் மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் என்று சொல்லி முதல் பரிசை வழங்கினார்.

அந்த சுவாமிநாதனே காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸ்வாமிகளாகி நமக்கு அருள் பாலித்தார். காஞ்சி பெரியவர் 1914 முதல் 1918 வரை கும்பகோணத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். ஒரு சமயம், கலைமேதைகளை வர வழைத்து பாராட்டு விழா நடத்தினார். அங்கு வந்த அஷ்டாவதானிகள், சதாவதானிகள் ஆகிய பல்கலை நிபுணர்கள் ஸ்வாமிகளிடம் ஆசி பெற எண்ணினர். சதாவதானி என்பவர் நூறு விஷயங்களுக்குரிய கேள்விகளை மனதில் வாங்கிக் கொண்டு பின்னர் அவற்றுக்கு ஒன்று விடாமலும், தவறு இல்லாமலும் விடை கூறுபவர். அஷ்டாவதானி என்பவர் ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களை வாங்கிக் கொண்டு பதில் கூறுபவர். இவர்கள் பலமொழிகளிலும் கவிதை இயற்றும் திறன் படைத்தவர்களாக இருப்பர். ஸ்வாமிகள் தலைமையில் இத்தகைய சிறப்பு போட்டி ஒன்று ஏற்பாடாகி இருந்தது. அப்போட்டியில் கலந்து கொள்ள மூத்த சதாவதானி ஒருவர் வந்திருந்தார். அவர் தன்னுடைய செயல் திறமையினை ஸ்வாமிகளிடம் எடுத்துச் சொன்னதோடு யாரும் தன்னோடு போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்று கர்வத்துடன் கூறிக் கொண்டார். போட்டி துவங்கும் முன், ஸ்வாமிகள் ஒருவரை அழைத்து, சதாவதானியிடம் கேட்கும் போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வைக்கும் படி கூறினார். பதில்களை சதாவதானி கூறும் போதே ஸ்வாமிகளின் பதில்களும் வாசிக்கப்பட்டு வந்தது. இருவர் சொன்ன விடைகளும் ஒன்றாக இருப்பதை கண்டு சதாவதானி ஆச்சரியப்பட்டார். சுவாமிகளின் பாதங்களில் விழுந்து தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அதன் பின் ஸ்வாமிகள் அவருக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி வழங்கினார். அக்காலத்தில் சர்க்கஸ் கம்பெனி நடத்திய பேராசியர் ராமமூர்த்தி யோகக்கலையில் நிபுணராக இருந்து வந்தார். இவர் சுவாமிகளைத் தரிசிக்க வந்திருந்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பேசிவிட்டு வெளியே வந்த பேராசிரியரின் கண்களில் நீர் பெருகியது. பிரம்மச்சர்யத்தின் தெய்வீக சக்தியை ஸ்வாமிகளிடத்தில் உணர்ந்ததாகவும், இதை விட வேறு பாக்கியம் வாழ்வில் தேவையில்லை என்று மகிழ்ச்சி அடைந்தார். கும்பகோணம் அரசு கல்லூரியில் பணியாற்றிய இயற்பியல் பேராசிரியர் ராஜகோபால் ஐயரும், இன்ஜினியர் பி.வி. மாணிக்கநாயக்கரும் ஸ்வாமிகளிடம் பக்தி கொண்டவர்கள். இருவரும் ஸ்வாமிகளிடம் வானசாஸ்திரத்தைப் பற்றிப் பேசினர். அவர்களிடம், ஒரு டெலஸ்கோப் மூலமாக, இக்கலையில் நம் நாட்டு வழிமுறைக்கும், வெளி நாட்டவர் வழி முறைக்கும் உள்ள ஒற்றுமைகளை எடுத்துச் சொல்லி, ஸ்வாமிகள் விளக்கம் அளித்தார். அவரது நுணுக்கமான வானவியல் அறிவு கண்டு இருநிபுணர்களும் பெருமிதமும் ஆச்சரியமும் கொண்டனர். காஞ்சி பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார்.

அந்த மடத்தில் இருந்த யானை மஹா பெரியவரைக் கண்டகால் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும். பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார். ஒரு நாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி விட்டது. மறு நாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சில நாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ.,தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித்தான். அது வர மறுத்து அடம் பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று  யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது. பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார். இதே போல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. சிதம்பரத்தில் ஆடிட்டராக இருந்தவர் பாலசுப்ரமண்யம். இவர் தமிழ் தாத்தா உ.வே.சா. பரம்பரையில் வந்தவர். அவர் மஹா பெரியவரின் தீவிர பக்தர். எப்போதும் சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர். ஒரு நாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார். அது அவரை கோபத்துடன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார். ஆனால் வாய் மட்டும் சந்திரசேகரா, ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டு விட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது. பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப்பட்டனர். ஸ்வாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு. 1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடைகளையும் பாதுகாத்து வந்தது. ஸ்வாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார். அவரைக் கண்டவுடன் அது சுற்றிச் சுற்றி வரும். ஒரு முறை சிறுவன் ஒருவன் அந்த நாயைக் கல்லால் அடித்துத் துன் புறுத்தினான். அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கி.மீ., தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டு விட்டு வந்தனர். மஸா பெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது. மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர். நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள் பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர். மடத்து நாய்க்கு இருந்த பக்தி உணர்வு மனிதர்களான நமக்கு இருக்கட்டும். ஒரு ஆங்கில எழுத்தாளர் பால்பிரண்டன் 1921ல் இந்தியா வந்தார். எழுத்தாளர் கே.எஸ். வெங்கடரமணியோடு சேர்ந்து ஆன்மிக ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார்.

இந்திய மகான்களைத் தரிசிக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது. வெங்கடரமணி பால் பிரண்டனிடம் காஞ்சி பெரியவர் ஒரு உண்மையான துறவி. பாதயாத்திரையாக இந்தியா முழுவதும் சென்று ஆன்மிக கருத்துக்களைப் பரப்பி வருபவர். யோக மார்க்க உண்மைகளை நன்கு அறிந்தவர். நீங்கள் அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்தார். அப்போது பெரியவர் செங்கல்பட்டில் முகாமிட்டிருந்தார். அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பால் பிரண்டன் பெரியவரை சந்தித்த நிகழ்ச்சி, பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் உபதேசம் பெற்றதைப் போல அமைந்தது. பிரண்டன் தனக்கு ஏற்பட்ட ஆன்மிக சந்தேகங்களுக்குரிய விடைகளை பெரியவரிடம் இருந்து பெற்றார். அவரிடம் பெரியவர், திருவண்ணாமலையில் இருக்கும் ரமணமகரிஷியையும் சந்தியுங்கள், என்றார். ரமணரையும் சந்தித்து பால்பிரண்டன் ஆசி பெற்றார். பால் பிரண்டன் காஞ்சி பெரியவரிடம் தான் பெற்ற அனுபவத்தை தன் நூலில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். குழந்தைப் பருவம் முதற் கொண்டே இறைப்பணியில் ஈடுபட்டிருக்கும் இப்பெரியவரை விட்டுப்பிரிய எனக்கு மனம் வரவே இல்லை. இம்மகான் பீடாதிபதியாக இருந்தாலும், அவரது மனம் அதிகாரத்தை நாடவில்லை. அவர் எல்லாவற்றையும் துறந்தவர். அவருக்கு அளிக்கும் காணிக்கைகளை எல்லாம் தகுதியுடையவர்களுக்கே பங்கிட்டு அளிக்கிறார். அவரது அழகிய உருவத்தை நான் ஒரு போதும் மறக்க முடியாது. நான் செங்கல்பட்டில் தங்கியிருந்த நாளில் அந்த ஊரையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஸ்வாமிகளை மறுபடியும் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் உதித்தது. அவர் ஒரு பெரிய கூட்டத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை கண்டு பெருமை கொண்டேன். கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் அந்த மக்களின் உள்ளத்தில் ஆழமாக இருந்தது. அவர்கள் வேறு எந்த சிந்தனையிலும் நாட்டம் செலுத்தவில்லை. அன்று இரவில் தூங்கிக் கொண்டிருந்தேன். படுத்திருந்த போது என்னுடைய உடம்பிலுள்ள நரம்புகள் அனைத்தும் முறுக்கேறி இருந்தது. யாரோ என்னை இழுப்பது போல ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. என்னைச் சுற்றி மின்சாரம் பாய்வது போல உணர்ந்தேன். எனது பக்கத்தில் வெளிச்சம் தோன்றியது. மிகுந்த பரபரப்பான நான் எழுந்த போது, மஹா ஸ்வாமிகளின் உருவத்தைக் கண்டேன். அதில் எந்தவித ஐயமும் இல்லை. கருணையை வெளிப்படுத்தவே அவர் வந்திருந்திருப்பதை உணர்ந்தேன். தாழ்மையுடன் இரு; நீ கோருவதை எல்லாம் அடைவாய் என்று அவர் கூறுவதை என் காதுகள் உணர்ந்தன. அதன் பின் அந்த உருவம் மறைந்து விட்டது. மறக்க முடியாத இந்த நிகழ்ச்சியை எப்போதும் என் மனம் நினைத்துக் கொண்டே இருந்தது  என்று எழுதியிருக்கிறார். பால் பிரண்டனுக்கு கிடைத்த மஹா பெரியவரின் அருள் பார்வை நமக்கும் கிடைக்கட்டும். காஞ்சி மஹா  பெரியவர், 1935ல், மிட்னாபூரில் உள்ள மடத்தில் முகாமிட்டிருந்தார். இவ்வூர் கோல்கட்டாவிலிருந்து 100 கி.மீ., தூரத்தில் உள்ளது. நாடு முழுவதும் சுதந்திரப்போராட்டம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது. டாக்டர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதிகளாக மிட்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பெரியவரின் வருகையைக் கேள்விப்பட்ட சிறைக்கைதிகள் எப்படியும் அவரைத் தரிசிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டனர். சிறை அதிகாரியாக இருந்த ஆங்கிலேயரிடம் அனுமதி கேட்டனர். கண்டிப்பு மிக்கவராக அந்த அதிகாரி இருந்தாலும், கைதிகளின் பக்தியுணர்வைக் கண்டு இரக்கப்பட்டு, தானும் அவர்களோடு பெரியவர் தங்கியிருந்த இடத்திற்குப் புறப்பட்டார். கூண்டிற்குள் அடைபட்ட பறவைகள் சுதந்திரமாகப் பறப்பது போல, கைதிகளும் மகிழ்ச்சியுடன் பெரியவரைத் தரிசிக்கக் கிளம்பினர். மாலை ஐந்து மணிக்கு கிளம்பிய அவர்கள், ஆறுமணிக்குள் தரிசனத்தை முடித்து விட்டு, சிறைச்சாலைக்குத் திரும்பி விட வேண்டும் என்பது அந்த அதிகாரியின் நிபந்தனை. சிறைக்கைதிகள் வந்த நேரத்தில் பெரியவர் வழக்கமான மாலை நேர பூஜையில் இருந்தார். பூஜை முடிய ஆறு மணிக்கு மேலாகும் என்று சீடர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவர் வெளியே வந்தால் மட்டுமே தரிசிக்க முடியும் என்ற நிலையில் என்ன செய்வதென தெரியாமல் கலங்கினர். மாலை 5.45 மணி ஆகி விட்டது. இன்னும் 15 நிமிடத்திற்குள் சிறைக்குள் சென்றாக வேண்டும். நேரம் சென்று கொண்டிருந்தது. பெரியவர் வருவதாகத் தெரியவில்லை. இனி அவரைக் காண்பதற்கு இயலாது என்ற நிலையில் ஏமாற்றமான மனதுடன் கைதிகள் அதிகாரியுடன் கிளம்ப ஆயத்தமாயினர். ஆனால் திடீரென தன் பூஜையை முடித்துக் கொண்ட ஸ்வாமிகள் வெளியே வந்தார். சிறைக்கைதிகள் தன்னைப் பார்ப்பதற்கு அனுமதித்தார். சற்றும் இதனை எதிர்பார்க்காத கைதிகள் ஆர்வத்துடன் அவரைக் காண ஓடினர். அப்போது கைதிகள் ஸ்வாமிகளிடம் ஒருமித்த குரலில் நாடு சுதந்திரமடைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். ஸ்வாமிகளும், நாடு விடுதலை அடைந்து மக்கள் யாவரும் சுதந்திர வாழ்வு வாழ வேண்டும், என்று பிரார்த்தித்தார். தேசிய உணர்வு கொண்ட கைதிகளுக்கு பெரியவரின் சந்திப்பு உற்சாகத்தைத் தந்தது. அவர்களை ஆசிர்வதித்து பிரசாதமும் வழங்கி மகிழ்ந்தார். இந்நிகழ்வைப் பற்றி, அந்த ஆங்கிலேய அதிகாரி தன் டைரியில் துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படாமல், அதை எதிர் நோக்க மார்பைத் திறந்து காட்டும் சுதந்திரப் போராட்ட கைதிகள், அந்த மஹா பெரியவரின் முன்னால், சாந்தமாக அடங்கி ஒடுங்கி நிற்பதை நான் இன்று கண்டேன். இந்த ஆன்மிகப்பணிவினை இந்தியாவில் மட்டும் தான் பார்க்க முடியும். எனக்குமே அப்பெரியவரைப் பார்த்த பிறகு நான் ஒரு சிறை அதிகாரி என்ற எண்ணமே மறந்து போனது. என் மனம் அதிகாரத்தில் இருந்து விலகி அன்பு மார்க்கத்திலும், பக்தி நெறியிலும் சென்றது. இனி அன்பு வழியே என் வழி, என்று குறிப்பிட்டுள்ளார்.