ஞாயிறு, 7 ஜூன், 2020

ஆதிசங்கரர் பல முறை லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ர நாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும், சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம்.

2-3 முறை இவ்வாறு நடக்க, ஏன் இப்படி என்று சிஷ்யரிடம் கேட்கையில், சிஷ்யர் தாம் சுவடிகளை எடுக்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளை தந்ததாகவும், அதனைச் சரிபார்க்காது தாம் கொண்டுவந்து தந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு 2-3 முறை விஷ்ணு சஹஸ்ர நாமச் சுவடிகளை அன்னையே தந்ததாக அறிந்த சங்கரரும், அது அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தாராம்.

செளந்தர்ய லஹரி, பவானி ஸ்தோத்ரம், என்று பலவிதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண இயலவில்லை. அதையே பிற்காலத்தில் வந்த ஒருவர் மூலமாக அன்னை செய்து வைத்தாள் என்றால் அது பிற்காலத்தில் வந்தவரது பக்தியை, அனுஷ்ட்டான சாதகத்தை, பாண்டித்யத்தை அன்னையே விரும்பிச் செயல்படுத்தினாள் என்றுதானே பொருள்?. இவ்வாறு லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணியவர்தான் பாஸ்கர ராயர். தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.

இவர் பிறந்தது மாகாராஷ்டிரத்தில், பாகா என்னும் நகரத்தில். இவரது பிறப்பு கி.பி 1690 என்று தெரிகிறது. தந்தை பெயர் கம்பீர ராயர், தாயார் கோனாம்பா. கம்பீர ராயர் விஜயநகர அரசவையில் பெளராணிகராக இருந்தவர், மகாபாரதப் பிரவசனம் செய்து அதன் மூலமாக பாரதீ என்னும் பட்டப் பெயரை பரம்பரை உரிமையுடன் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

கம்பீர ராயர் தமது மகனான பாஸ்கர ராயருக்கு காசியில் உபநயனமும், அத்யயனமும் செய்து வைத்திருக்கிறார். அக்காலத்திலேயே வாக்தேவி மந்திர தீக்ஷையும் நடந்து அம்மந்திரத்தை ஜபித்து வந்திருக்கிறார்.

சிறிது காலத்திலேயே வேத அத்யயனம் முடித்து ஊர் திரும்புகையில் குஜராத்தில் ப்ரகாசாநந்த நாதர் என்பவரை கண்டு அவரிடம் ஸ்ரீ வித்யை உபதேசமும், பூர்ணாபிஷேகமும் செய்து கொள்கிறார். பூர்ணாபிஷேக நாமம் ஸ்ரீ சிதானந்த பாதரேணு என்பதாகும். பின்னர் ஸ்ரீ கங்காதர வாஜபேயி என்பவரிடம் தர்க்க சாஸ்த்திரத்தையும் படிக்கிறார். அதர்வண வேதம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக தானே அதனை அத்யயனம் செய்து அதனை பலருக்கும் கற்பித்து அவ்வேதத்தை உத்தாரணம் செய்கிறார்

இவரது மனைவி பெயர் ஆனந்தி என்பதாகும். அவருக்கும் மந்திர உபதேசம் செய்வித்து பத்மாவதம்மாள் என்று தீக்ஷா நாமம் வழங்கியிருக்கிறார். பிறகு ஒரு சமயம் வல்லப ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஒரு வித்வானை வாதில் வென்று அவரது மகளையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த மனைவி பெயர் பார்வதி என்பதாம். இரு மனைவிகளுடன் காசியாத்திரை கிளம்பிச் செல்லும் வழியில் ஒர் மாத்வ மஹானையும் வாதில் வென்றதாகச் சொல்லப்படுகிறது.

காசியில் ஸோம யாகம் செய்திருக்கிறார். அக்காலத்தில் காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும், குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் சமயாசாரத்தின் படியாக உபாசனை செய்து வந்தாலும், அவரை வாமாசாரத்தைச் சார்ந்தவர் என்று திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர், தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார்.

பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அப்போது அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து, அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக, சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும், மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் "சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா" (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர், வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து, அந்தந்த யோகினிகளுக்கான பெயர், மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது தமது தலைவரான குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று வினவ, அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்லர். நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து, அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுகிறார். தமது சிஷ்யர்கள் அந்தக் காக்ஷியைக் காணத்தக்க விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து, பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் நில்லாது பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றதாகச் சொல்லப்பட்டுகிறது.

கல்வியில் சிறந்து விளங்க
ஸ்ரீ.லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும்

ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா
ஸ்ரீ.க்ஷோ சாக்ஷரீ - வித்யா த்ரிகூடா காமகோடிகா

தசமுத்ரா - ஸமாராத்யா த்ரிபுரா ஸ்ரீவசங்கரீ
ஜ்ஞானமுத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணி

என்ற ஸ்லோகங்களை விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு 48 நாட்கள் சொல்லி வர சரஸ்வதியின் அருள்கிட்டும்.
இதுவா ஆலயம் தொழும் வழிமுறை?

இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன்,
சனிக்கிழமைகளில், சிவாலயங்களில் கூட்டம்
நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா
என்று, நம் மனதுக்குள் உற்சாகம்
தொற்றிக்கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால் ...

என்னடா இது? நமக்கு முன்னே இங்கே
நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே
இறைவன் திருமுன்பில் (சந்நிதி) யாரையுமே
காணவில்லையே? வந்த கூட்டம் எங்கே? மாயமாய் மறைந்து போனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போது தான் கூட்டமே தென்படுகிறது. அடடா, என்னே அதிசயம்!

இராகுகால துர்க்கை, தெற்குக் கோட்டத்து
தட்சிணாமூர்த்தி, நவக்கிரகத் திருமுன்பில்
எள்விழ இடமில்லை!

ஆகா…..நவக்கிரக திருமுன்பில் தான் எத்தனை கூட்டம்! கடலை மாலைகளென்ன? நல்லெண்ணெய் தீபமென்ன? ஒன்பது முறை பிரதட்சிணமென்ன? இத்யாதி... இத்யாதி...

நிமிடத்திற்கு ஓர் அலங்காரம், விநாடிக்கு ஓர்
அர்ச்சனை! குரு பகவான், சனி பகவான்கள்
எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள், அவரவர் கிழமைகளில்!

ஆனால், இங்கே, மூலமூர்த்தி திருமுன்போ?
சுத்தம்! ஒரு ஈ, காக்கை கூட இல்லை!

என்ன தானய்யா  நடக்கிறது இங்கெல்லாம்?

நீங்கள் வழிபடும் சிவனை விட  சக்தி
வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள்? எதற்காக இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள்?

"நாமார்க்கும் குடியல்லோம்" என்று முழங்கிய
நாவுக்கரசர் பரம்பரையில் வந்தவர்கள்;
“ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே” என்று
உரத்துச்சொன்ன சம்பந்தர் மரபில்
வந்தவர்கள் சில்லாண்டிற் சிதையும் சில சிறு தேவர்களை நாடிப்போய் வீழ்ந்து கிடப்பது நியாயந்தானா?

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை!

நவக்கிரகங்களை ஏதோ அஞ்சத்தக்க
தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி, உங்களுக்கு மிகுந்த சோதனைக்காலம் இது; தக்க தோஷபரிகாரம் செய்தேயாகவேண்டும்,
இல்லையேல், அவ்வளவு தான் என்றுகூறி அவர்களைத் தவறாக வழிநடத்தும் சில பிரபல ஆன்மீக வியாபாரப் பத்திரிகைகள், ஆன்மீக வியாபாரப் பேச்சாளர்களைத்தான் சொல்லவேண்டும்!

சோதிடம் ஒரு அருங்கலை! மறுப்பேயில்லை!

நல்லதோ, கெட்டதோ, நடக்கப்போவதை
அறிந்துகொள்ளும் ஆவலில், சோதிடர்களை
நாடுவதையோ, சுப காரியங்களுக்கு நல்ல
நாள் பார்க்க, அவர்களைத்
துணைக்கழைப்பதையோ, தவறென்று
கூறவில்லை. ஆனால், திருக்கோயில்
வழிபாடுகளிலேயே சோதிட நம்பிக்கை
மூக்கை நுழைப்பதை எந்த வகையிலும்
ஏற்றுக்கொள்ளவே முடியாது!

ஆயிரத்துமுன்னூறு வருடங்களுக்கு முன்பே
சம்பந்தர் பாடிவிட்டார் ஐயா!

இறைநம்பிக்கை கொண்ட அடியாரை, நாளும் கோளும் எதுவுமே செய்யாது என்று; பிறகேன் இத்தனை அச்சம்?

ஆழ்ந்துபார்த்தால் ஒன்று மட்டும்
தெளிவாகிறது. இப்படி தோஷ பரிகாரம்,
கிரகப்பெயர்ச்சி, என்று ஆயுளைக் கழிக்கும்
எல்லோருமே, தன்னம்பிக்கை அற்றவர்கள்!

எடுத்ததற்கெல்லாம் அஞ்சி நடுங்குபவர்கள்!

யாரையும் ஏளனம் செய்வதற்காக இதைக் கூறவில்லை!

தயவு செய்து உண்மையை உணர்ந்து
கொள்ளுங்கள்.

இறைவழிபாட்டைப் பொறுத்தவரை, நம்
சமயத்தில் முழு எழுவரல் (சுதந்திரம்)
இருப்பது உண்மை தான். அதைத் தவறாகப்
புரிந்து கொள்ளாதீர்கள்! தவறாகச் செயல் படுத்தாதீர்கள்! இது தான் இதன் உட்பொருள்.

மிகப்பழைய ஆலயங்களுக்குச்
சென்றீர்களானால், அங்கே நவக்கிரகத்
திருமுன்புகளே இராது! அப்படி இருந்தால் அது பிற்சேர்க்கையாகத்தான் இருக்கும்! 500
வருடங்கட்கு முன்பு எந்தச் சிவாலயத்திலுமே நவக்கிரக சந்நிதிகள் இருந்ததில்லை என விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்தந்த சிவாலயத்தில் அந்தந்த  மூர்த்தியும் உடனாய அம்பிகையும்  மட்டுமே  பிரதிஷ்டை  செய்யப்படிருந்தன. கோஷ்டங்களில், ஆகம விதிப்படி அமையவேண்டிய தெய்வங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. தேவர்கள் யாராவது அந்த ஆலய இறைவனை வழிபட்டு நன்மை பெற்றதாகத் தலவரலாறு இருந்தால் அந்த மூர்த்திக்குத் தனி சந்நிதி அமைக்கப் ப்படலாம் : திருவாஞ்சியத்தில் யமன்; திட்டை,  குருபகவான்; கஞ்சனூர், சுக்ரன் இத்யாதி. இத்தனித் திருமுன்பு அந்தந்த தெய்வத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவம் என்று மட்டுமே கருத வேண்டுமேயன்றி, மூலவருக்கு ஈடாக அவரை ஒருபோதும் கருதலாகாது. சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான திருநள்ளாறு -  இன்று சிவன்கோயில் இல்லை! அது சனிபகவானின் பரிகார ஸ்தலம்! திங்களூர் சந்திரன் கோயில்! வைத்தீசுவரன் கோவில், செவ்வாய் கோயில்! இப்படித்தான் இன்று அவை பிரபலம்பெற்று விளங்குகின்றன.

நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக்
கட்டுப்பட்டவை! இறைவனின் பரிவாரம் என்ற
வகையில், அவையும் நம் வணக்கத்திற்குரி
யவை! அவை ஒரு மானிடனின் பிறப்பு முதல்
இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை!

உண்மைதான்!

ஆனால், ஆணை செலுத்துபவனிடமே
அடைக்கலம் புகுந்தால், அவை நம்மை என்ன
தான் செய்யமுடியும்? அதை விடுத்து,
கிரகங்களை மட்டுமே ஆராதிப்பது, நமக்கு அருளக் காத்திருக்கும் இறைவனை அவமதிக்கும் செயல் ஆகும் அல்லவா? இன்று தேனுபுரீஸ்வரம் என்னும் பட்டீஸ்வரத்திற்குச் செல்வோர் பலர் அங்குள்ள துர்க்கையை மட்டுமே வழிபட்டுவிட்டு, பட்டீஸ்வரரைக் கண்டுகொள்ளாமலே வருவது கண்கூடு. இத் தலத்தில்தான் இறைவன் ஞானசம்பந்தருக்கு முத்துச்சிவிகை அளித்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

கோளறு பதிகம், திருநீலகண்டப் பதிகம் போன்ற பனுவல்கள்  நமக்குற்ற எத்தகைய ஆபத்துக்களையும் நீக்கக் கூடியவை.  அவற்றைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டால் நாளென் செயும்? கோளென் செயும்? வினை தான் என்செயும்? நல்லதே நடக்கும். நால்வர்
நூல்களை நாளும் ஓதி, மூலவரான
சிவபெருமானை வழிபடுவதை விட நம் இடர்
களைவதற்கான உபாயம் வேறு ஏதுமில்லை
என்பதை நன்றாக நினைவில் வைக்கவும்.
மூலமூர்த்தியை வழிபட்ட பின் தான்
நவகிரகங்களை வழிபட வேண்டும். இதில் மாற்றம் இல்லை. சிவபெருமானை விடுத்துச் செய்யும் நவக்கிரக வழிபாட்டால் யாதொரு பலனும் இல்லை.

தோஷநிவர்த்தி, பரிகாரம், அது, இது என்று
கொட்டும் பணத்தில் ஒரு பங்கையாவது வசதிகுறைந்த சிவாலயங்களின் பராமரிப்பு நிமித்தமும், சிவனடியார் பொருட்டும் செலவழித்தால் சிவபுண்யம் பல்கிப்பெருகி,
இம்மையிலும், மறுமையிலும் நமக்குற்ற நல் இன்பம் தருமல்லவா? வரியோர்க்கு உதவுதல் எத்தனை பெரிய தர்மம்? அன்ன தானம், வஸ்திர தானம் என, அடியார்க்குச் செய்யும் தொண்டுகள் ஆண்டவனையே சென்றடைவதாக அல்லவா திருமூலர் கூறுகிறார்? "நடமாடக்கோயில் நம்பர்க்கு ஒன்றீயின் / படமாடக்கோயில் பகவற்கதாமே"
இறைவன் நம்பக்கம் இருந்தால் நம்மை எந்த சக்தியால் தான் எதிர்க்க இயலும்? சிந்திப்பீர்!

(முகநூல் நண்பர்களுக்காக : ய. விஷ்வநாத் தாஸ்)
இது என்னுடைய பழைய கட்டுரை. மறுபடியும் புதிய நண்பர்களுக்கு வேண்டி மறு பதிவிடுகின்றேன்.

ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும் :-

ஹிந்து தர்மத்தில் மிக நீண்டகாலமாகப் போற்றப்படும் பழம்பெரும் வழிபாடுகளுள் ஸ்ரீருத்ரவழிபாடும் முதன்மையானது. வேதங்களிலும், மஹாபாரதம், இராமாயணம் முதலாய இதிஹாசங்களிலும் சிவபெருமானே ஸ்ரீருத்திரர் என்று கூறப்படுகிறார். ருத்திரசேனைக்கு அவர் தலைவராக இருப்பதால், மஹாருத்திரர் என்றும் குறிப்பிடப்படுகிறார். பொதுவாகவே, ருத்ரர் என்ற சொல் சிவப்பரம்பொருளையே குறிப்பதாயினும், அது பலருக்கும், பல குழுக்களுக்கும் பெயராக இருந்துள்ளமையையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

சைவாகமங்களிலும் சைவசித்தாந்தமரபிலும், பரசிவத்திலிருந்து தோன்றியவர்களே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐம்பெரும் மூர்த்திகள் இவர்களே முறையே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களையும் ஆற்றுவதாயும் சித்தாந்தவிளக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும், சைவதந்த்ரங்கள் இந்த உலகம் காலாக்னி ருத்ரரினின்று தோன்றியதாயும், இறுதியில் அவரிலேயே ஒடுங்கும் என்றும் குறிப்பிடுவதாயும் தெரிகின்றது.

ஒருவரா..? பதினொருவரா..? பலரா..?

சிவபுராணங்களில், பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு பிரம்மனுக்கு உதவியாக இருப்பதற்காக சிவபெருமான் பிரம்மாவின் நெற்றியிலிருந்து ருத்திரர்களைப் படைத்ததாக கூறுகின்றன. இவ்வாறு தோன்றியவர்கள் “ஏகாதசருத்ரர்கள்” என்ற
பதினொரு பேராவர். சாக்ததந்திரங்களில் இந்த ருத்ரர்கள் மஹாசக்தியின் காவல் தேவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இந்த வகையில் ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுர சுந்தரியின் ஸ்ரீசிந்தாமணி கிரகத்தைக் காவல் புரியும் எண்ணில்லாத ருத்ரர்கள் பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது.

வேதத்தில் ருத்திரர்களைப் போற்றும் பகுதி ருத்ரீயம் என்று அழைக்கப்படுகின்றது. இது தவிர, மானிடர்களும் தம் தவவலிமையால், உருத்திரகணத்தவராயினர் என்றும் அறிய முடிகின்றது. இவர்களிடையே பலகுழுக்கள் காணப்பட்டதால், அவர்கள் “உருத்திரபல்கணத்தர்” எனப்பட்டனர்.

உருத்திரர் என்பது தமிழா? சம்ஸ்கிருதச்சொல்லா..? என்பதே பேராய்விற்குரிய ஒன்றாகும். தமிழில் ‘உரு’ என்றால் மேலான என்றும், திரம் என்றால் வழி என்றும் பொருள்கொண்டு உருத்திரர் என்றால், மேலானவழிச்செல்ல முயல்பவர்கள் என்று காட்டுகின்றனர்.

இச்சாதனையாளர்களுக்கு மூன்றாவதான ஞானக்கண் திறக்கும் என்று நம்பப்பட்டது. இந்த மூன்றாவது கண்ணை ‘உருத்திரக்கண்’ என்பர். இதனால், இவர்களுக்கும் ‘உருத்திரக்கண்ணர்’ என்ற நாமம் உண்டானது. முன்பு இருந்து மறைந்ததாக கருதப்படும் ‘லெமூரியா’ என்ற கடல் கொண்ட தமிழ்மண்ணில் வாழ்ந்த பலருக்கும் நெற்றிக்கண் இருந்தது என்றும் அவர்களே ‘உருத்திரர்’ எனப்பட்டனர் என்றும் கூட, சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வடமொழியில் ருத்ரன் என்றால், ‘அழச்செய்பவன்’ என்பது பொருளாகும். யாரை..? என்ற வினா எழும்புகிற போது, தீயவர்களை என்று குறிப்பிடுவர். இதைவிட, ருத்ரன் என்பவன் துன்பத்தை ஓட்டுபவன் என்றும் குறிப்பிடுவர்.

இதனைக் கந்தபுராணம்

இன்னலங்கடலுள் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன்னரும் பரமமூர்த்தி உருத்திரனெனும் பேர் பெற்றான்
என்கிறது.

பதினொரு ருத்ரர்

ஒரு சமயம் பிரமனால், படைப்புத் தொழிலைச் செய்ய இயலாது போயிற்று. அவன் சோர்ந்து விழுந்து இறந்த போது, அவனது உடல், பரசிவனருளால் பதினொரு கூறாகி எழுந்ததென்றும் அப்பதினொரு கூறுமே ஏகாதச ருத்ரர்கள் என்று மத்ஸயபுராணம் குறிப்பிடுகின்றது.

வேறு நூல்களில் இந்த வரலாறு சிறிது வித்தியாசமாக சொல்லப்படுகிறது. பிரமனின் வேண்டுகோளின் படி சிவனால் பிரமனது நெற்றியிலிருந்து பதினொரு ருத்ரர் உருவாக்கப்பட்டனர். அவர்களினைக் கண்ட பிரமன் மயக்கமுற அவர்களே  தாமே படைப்புத்தொழிலைச் செய்யத்தொடங்கினராம். ஓவ்வொரு ருத்திரரும் கோடி ருத்ரரைப் படைக்க, பிரமன் சோர்வு நீங்கி எழுந்த போது, அங்கே பதினொரு கோடி ருத்திரர்கள் காணப்பட்டனராம்.. இதனால், வெகுண்ட பிரமன் சிவனிடம் அழுது விண்ணப்பம் செய்தான்.

எனவே, சிவபெருமான் ருத்ரர்களை அழைத்து படைப்புத்தொழிலைத் தொடர வேண்டாம் என்று கட்டளையிட்டு, அவர்களுக்கென்று, புதிய உலகம் ஒன்றைப்படைத்து அங்கே சென்று வாழக்கட்டளையிட்டருளினார்.. இந்த ருத்ரர்கள் வழிபாடு செய்த லிங்கங்களை “ருத்ரகோடீஸ்வரர் என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த ருத்திரர்கள் தம் உலகிற்கு அப்பாலும் போர்த்தொழில் செய்யும் வீரர்களிடமும் அவர்களின் ஆயுதங்களிலும், அவர்களின் கோபத்திலும் வந்து தங்குவதாயும் குறிப்பிடப்படுகின்றது.

இவர்களுக்கு உருவம் வைத்து வழிபடும் வழக்கம் இல்லை. இவர்களை குறிக்க பதினொரு லிங்கங்களை அமைத்துப் பூஜிக்கும் வழக்கமே காணப்பட்டது. என்றாலும், காஞ்சி கைலாசநாதர் கோவிலில் “ஏகாதசருத்ரரின்” சிற்பங்கள்
காணப்படுகின்றன.

இவர்களின் பெயர்கள் முறையே மஹாதேவன், ஹரன், ருத்ரன், சங்கரன், நீலலோஹிதன், ஈசானன், விஜயன், பீமதேவன், பவோத்பவன், கபாலி, சௌம்யன் என்பனவாகும்.

இவர்கள் வழிபட்ட லிங்கங்களில் முறையே தோமரம், கொடி, வாள், வஜ்ரம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டு, வில், மழு ஆகிய ஆயுதங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிகின்றது.

ஸ்ரீமத் பாகவதத்திலும் ருத்ரர்களின் வரலாறு சிறிது வித்தியாசமாகப் பேசப்பட்டிருக்கிறது. அவர்களின் பெயர்கள் அஜர், ஏகபாதர், அக்னிபுத்திரர், விரூபாட்சர், ரைவதர், ஹரர், பகுரூபர், த்ரியம்பகர், அசுரேசர், சாவித்ரர்,சயந்தர் என்பனவாகும்.

திருக்கச்சி ஏகம்பரைப் போற்றிய திருநாவுக்கரசர்

“விரைகொள் மலரவன் வசுக்கள் “ஏகாதசர்கள்” வேறுடைய
இரைக்கும் அமிர்தக்கரிய ஒண்ணா எங்கள் ஏகம்பனே”

என்று பாடுவதால், ஏகம்பரை ஏகாதசருத்திரர்கள் போற்றி வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகின்றது

சதம் என்றால் நூறு. இந்தவகையில் எண்திசையிலும், ஆகாயத்திலும், பாதாளத்திலுமாக திசைக்குப் பத்துப்பேராக விரிந்து நிற்கும் நூறு ருத்திரர்களை “சதருத்ரர்கள்” என்று குறிப்பிடுகின்றனர். இந்த நூற்றுவரின் பெயர்களும் பல நூல்களில் காணப்படுகின்றன. வேதங்களும் இவர்களைப் போற்றுகின்றன. இவர்கள் கடல் மீதும் ஆகாயத்திலும் பயணம் செய்ய வல்லவர்கள். மான், மழு தரித்தவர்கள், சிவனைப் போன்ற உருவத்தினர் என்று பலவாறாக கருதப்படுகின்றது.

வேதங்களில் இந்திரன் முதலியவர்களைப் பற்றிக்குறிப்பிடும் போது, நம: என்ற சொல் பெயருக்குப் பின்னே குறிப்பிடப்படுகின்றது. ஆனால், அதே வேதங்கள் ருத்ரரைக் குறிப்பிடும் போது முதலில் வணக்கமாகிய “நம:” என்று சொல்லி அதன் பின் நாமத்தைச் சொல்வதையும் அவதானிக்கலாம். ஆனால், இந்த வேதப்பகுதிகள் யாவும் மூலருத்ராகவும் ஸ்ரீருத்ரராகவும் விளங்கும் மஹாருத்ரரான சிவப்பரம்பொருளையே சுட்டும் என்பதே வைதீகசைவர்களின் நம்பிக்கை.

சிவனால், அர்ச்சுனனுக்கு வழங்கப்பட்டது பாசுபதாஸ்திரம், ஆனால், சிவனால் முருகனுக்கு வழங்கப்பெற்றது “ருத்ரபாசுபதாஸ்திரம்” என்ற மஹாஸ்திரம் என்று கந்தபுராணம் சொல்வதும் இங்கு சிந்திக்கத்தக்கது.

ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரஜெபமும்

திரயீவித்யா என்ற ரிக்,யஜூர், சாமம் என்ற மூன்று வேதங்களுக்கும் நடுவில் இருப்பது யஜூர்வேதம். அது சுக்லயஜூர்வேதம், கிருஷ்ணயஜூர்வேதம் என்று இரண்டு பிரிவாகிறது. அதில் கிருஷ்ண யஜூர்வேதத்தின் நடுவில் ஏழு
காண்டங்கள் கொண்ட தைத்திரீய சம்ஹிதையில் நடுவிலுள்ள நான்காவது காண்டத்தில் ஐந்தாவது ப்ரச்சனமாக இருக்கிறது ஸ்ரீருத்ரம்.

இந்த ஸ்ரீருத்திரத்தில் 11 அனுவாகங்கள் உள்ளன. இது ஸ்ரீ ருத்ரம், மஹாருத்ரம், சதருத்ரீயம், நமகம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. ஸ்ரீ ருத்ரத்தின் நடுவில் சிவ நாமம் பதிந்திருப்பது அற்புதத்திலும் அற்புதமாகும்.

நீரில் நின்று கொண்டு ஸ்ரீ ருத்ரம் சொன்னால் மழை வர்ஷிக்கும் என்பது நம்பிக்கை. இதனை சிவலிங்க அபிஷேகத்திலும், சிவபூஜையிலும் தவறாமல் பயன்படுத்தி வருவார்கள்.

பலரும் இதனை தமிழில் மொழிபெயர்க்கவும், அதே போல, கவிநடையிலேயே தமிழ் வடிவம் பெறச்செய்யவும் முயன்று வந்திருக்கிறார்கள். சைவர்களின் முக்கியமான ஒரு பிரமாணமாகவே ஸ்ரீ ருத்ரத்தை நாம் தரிசிக்கலாம்.
திருநாவுக்கரசு நாயனார் பாடிய நின்ற திருத்தாண்டகமும் தமிழில் அமைந்த ஸ்ரீ ருத்ரம் என்று போற்றப்பட்டு வருகின்றது.

ருத்ர பாராயண கிரமத்தில், ஸ்ரீ ஏகாதசருத்ரீயம், ருத்ரஏகாதசீ, மஹாருத்ரம், அதிருத்ரம் என்கிற விசேடமான விரிவான பலர் கூடி பாராயணம் செய்யும் மரபுகளும் வைதீக சைவர்களின் வழக்கில் விரவிக்காணப்படுகின்றன.
இப்போதெல்லாம் சிதம்பரம் முதலிய திருக்கோவில்களில் ஏகாதசருத்ரஹோமம் போன்றவை மிகவும் பிரபலமடைந்துள்ளன. இதற்கு காரணமாக உடனடியாக பலனும், சிவனருளும் கிடைப்பதாகச் சொல்லப்படுகின்றது.

பெரிய புராணத்தில் ‘உருத்திரபசுபதி நாயனார்’ என்பவரும் 63ல் ஒருவர். இவர் ருத்ரம் ஓதியே நாயனார்களில் ஒருவரானவர். அதைத் தவிர ஆலய வழிபாடுகளோ, அடியார் வழிபாடுகளோ கூட இவர் செய்ததாகச் சொல்லப்படவில்லை. ஆக, இவர் வரலாறு ருத்ரம் ஓதுதலில் சிறப்பை உணர்த்தவே பெரிய புராணத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ருத்ரவீணை, ருத்ரபிரியாகை, ருத்ரபர்வதம், ருத்ரரிஷி துர்வாஷர், சதுர்த்தசீ ருத்ரவிரதம் , ருத்ரபட்டம், ருத்ராக்னி, ருத்ரதீபம், போன்றவையும் ருத்ரம் சார்ந்து சிந்திக்க வேண்டியனவே.

ருத்ரர் வழிபாடு

ருத்ரமூர்த்திக்கு ஆலயங்கள் , சந்நதிகள் அமைந்திருப்பது மிகவும் குறைவு. என்றாலும் திருமாணிக்குளி பீமருத்ரர் ஆலயம் ருத்ரருக்கான ஆலயங்களில் பிரபலமானது. கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியில் அம்புஜாட்சி உடனாய வாமனபுரீஸ்வரராலயம் அமைந்துள்ளது.

இங்கு கருவறையின் முன்பு திரையிடப்பட்டு நீலவண்ணத்தாலான அத்திரையில் சிவப்பு வண்ண நூலால் ‘பீமசங்கரர்’ என்ற பீமருத்ரரின் திருவடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். சிறப்பான கலைநுணுக்க வேலைப்பாடுகளுடைய இந்த ருத்ரரின் திருவடிவம் அக்னிஜ்வாலையுடன் எட்டுக்கரங்களுடன் காணப்படுகின்றது. இக்கோவிலில் நடத்தப்படும் நான்கு கால பூஜைகளும் இந்த திரையிலுள்ள பீமருத்ரருக்கே நடத்தப்படுகின்றன. பூஜை முடிந்ததும் உள்ளே உள்ள சிவலிங்கத்திருமேனிக்கு தீபாராதனை மட்டுமே செய்யப்படுகிறது. இத்தகு புதுமையான வழிபாட்டிற்கு பல புராணக்கதைகளை அத்தலபுராணம் பேசுகிறது.

இதே போல, திருக்குடந்தை என்ற கும்பகோணத்தில் நாகநாதசுவாமி கோவிலில் பிரளயகாலருத்ரருக்கு திருவடிவம் அமைத்து வழிபாடு நடந்து வருகிறது. திருவெண்காட்டில் அகோரருத்ரருக்கு அழகான பெரிய வடிவம் உள்ளது. அதே போல, திருவண்ணாமலையில் காலாக்னிருத்ரர் சந்நதி இருக்கிறது. ஆனால், அம்மூர்த்தியை பைரவர் என்றே அழைத்து வழிபாடாற்றுவதாயும் தெரியவருகின்றது.

இதே போல, பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹாதேவன் என்ற அஷ்டருத்ரருக்கும் திருக்கடவூரில் திருமாளிகைச்சுற்றில் திருவுருவங்கள் உள்ளதாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமல் அத்திருவடிவங்களின் மேல் அஷ்டவசுக்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பதாயும் தெரியவருகிறது. ஆனால், சிலர் அஷ்டபைரவர்களையும் வேறு சிலர் சிவனுடைய ஆஷ்டு வித்யேஸ்வரரையுமே அஷ்ட
ருத்ரராக கருதுகின்றனர். எனவே, இது தொடர்பில் ஆய்வுகள் நடைபெற வேண்டிய தேவையுள்ளது.

மயானத்தில் சிவபெருமான் ருத்ரதாண்டவம் செய்வதாக குறிப்பிடப்படுகிறது. இங்கே காட்டப்படும் மய என்பதற்கு உருவாக்குதல் என்றும், அயனம் என்பதற்கு தொடர்ந்து செல்லுதல் என்றும் பொருள். இதனை ஸ்மசானம் என்ற சொல்லால் குறிப்பது தவறு என்றும் பெரியவர்கள் காட்டுவர். இதனால், உருத்திரசமயிகளும் பாசுபதர்களும் தம் வழிபாட்டிடங்களை மாயானம் என்று சொன்னார்கள் என்றும் தெரிய வருகின்றது. கச்சிமயானம், திருக்கடவூர்மயானம்,
வீழிமயானம், காழிமயானம், நாலூர் மயானம் என்ற ஐந்து மயானங்கள் சிவவழிபாட்டாளர்களுக்கு முக்கியமானவையாக காட்டப்படுகின்றன.

இதே போல, ருத்ரவழிபாடுகள் ஈழத்தில் நடைபெற்றமைக்கான ஆதாரங்கள் இப்போது இல்லாதவிடத்தும், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஸ்தலங்களை அடுத்து ருத்ரமயானங்கள் அருகில் காணப்படுவதும், அருகிலேயே ஆலய தீர்த்தம் உள்ளதும், அங்கெல்லாம் ருத்ரவழிபாடு நடந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆவரங்கால் என்ற ஊரில் மயானத்திற்கு மிக அண்மையாக, மயானத்தை நோக்கிய வண்ணம் பெரியதொரு சிவாலயம் இராஜகோபுரத்துடன் காணப்படுவதும், ருத்ரவழிபாட்டுடன் இணைத்து சிந்திக்க வைக்கிறது. இதனை
விட, பிற்காலத்தில் இங்கிருந்த ருத்ரவழிபாடு பைரவ வழிபாட்டுடன் கலந்திருக்கலாம் என்றும் எண்ண முடிகின்றது.

ஆக, ருத்ரர் பற்றிய விளக்கங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அது பற்றிய பல்வேறு சர்ச்சைகளும் குழப்பங்களும் ருத்ரரை சிவனுடன் இணைத்தும், கலந்தும், பேதப்படுத்தியும் மாறுபட்டும் சிந்திக்கும் நிலைமைகளும் விரவிக்கிடக்கின்றன. எனவே, ருத்ரர் பற்றியும் ஸ்ரீ ருத்ரம் பற்றியும் ஆய்வுகள் மேம்படவேண்டும். இது வரை ஆய்வுகள் நடைபெற்றிருந்தால் அவை பிரபலப்படுத்தப்பட வேண்டும். அதன் வாயிலாக, சைவத்தமிழ்ச்சான்றோர்கள் ருத்ரர் பற்றிய தெளிவு உண்டாக வழி செய்ய வேண்டும்.

தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையார போற்றி போற்றி.
திருச்சிற்றம்பலம்