திங்கள், 14 அக்டோபர், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 63 ॐ

{சில தகவல்களும் பதில்களும்}

பல புத்தகங்களும் வாங்கிப் படிக்க முடிய வில்லை தான் இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் அதற்காகச் சான்றுகள் ஏதும் இல்லாமலும் எதுவும் எழுதவில்லை. என்னிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே எழுதுகின்றேன். இதில் காய்தல் உவத்தல் பார்ப்பது அவரவர் கண்ணோட்டமே அன்றி என் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. காதில் காலிப்ளவர் வைக்க முடியாட்டாலும் குறைந்த அளவுக்கு ஒரு கனகாம்பரமாவது வைக்கலாம் என்று எண்ணம். மற்றபடி இங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மேலே தொடருகின்றேன்.

இரண்டாம் குலோத்துங்கன் மகாவிஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியது பற்றிப் பார்த்தோம். இது பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை இருப்பது பற்றி நண்பர் கொடுத்த தகவல்களிலேயே இருக்கின்றது. என்னுடைய வேலைப் பளுவினால் என்னால் முடிந்த அளவுக்கு பதிவிடுகிறேன். மேற்கண்ட தகவல்கள் இருப்பது இவற்றால் சிற்றம்பலமான சிவாலயவழிபாட்டையும் தெற்றியம்பலமான சித்திர கூட வழிபாட்டையும் முறைப்படி புரிந்து வந்தவர்கள் தில்லை மூவாயிரவர் என்பது விளக்கமாம் (சென்னைப் பல்கலைக் கீழ்த்திசை மொழி ஆராய்ச்சித்துணர் தொகுதி III (1938-39) பகுதி I) என்று ஆராய்ச்சியாளரும் வைணவரும் ஆன திரு மு.ராகவ ஐயங்கார் அவர்கள் எழுதி இருப்பதாய்த் தெரிய வருகின்றது. குலோத்துங்கன் விஷ்ணு சிலையை அப்புறப்படுத்தியதை வைத்து அவன் வைணவத்துக்கு எதிரி எனச் சித்திரிக்கப்பட்டதும் தவறு என்று (பிற்காலச் சோழர் சரித்திரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு பக்கம் 95,96 பார்க்க).சொல்லுவதாய்த் தெரிய வருகின்றது. கிருஷ்ணதேவராயர் காலத்திற்குப் பின்னர் அச்சுதராயர் காலத்தில் மறு பிரதிஷ்டை செய்யப்பட்டதும் அரசனால் நியமிக்கப்பட்ட வைணவர்களே விஷ்ணுவுக்குப் பூஜை வழிபாடுகளை நடத்த ஆரம்பித்தனர். அப்போதில் இருந்து இங்கே வைகானசமுறையில் வழிபாடுகள் நடை பெறுகின்றன. பின்னர் கொண்டம நாயக்கன் காலத்தில் இந்த சந்நிதித் தனிக்கோயிலாக மாறும் பெருமையப் பெற்றது. தில்லை வாழ் அந்தணர்களான தீட்சிதர்கள் இதை ஆட்சேபித்து நடராஜருக்கே என உரிய கோயிலில் விஷ்ணுவிற்குத் தனிக் கோயில் வேண்டாம் எனச் சொல்லியும் போராட்டங்கள் நடத்தியும் கொண்டம நாயக்கன் கோயிலைக் கட்டினான் என்றும் தீட்சிதர்கள் சிலர் அப்போது நடந்த போராட்டத்தில் கொண்டமநாயக்கனின் வீரர்களால் சுடப்பட்டு இறக்க நேரிட்டது எனவும் அதை நேரில் பார்த்த ( Jesuit Father N. Pimenta) என்னும் பாதிரியார் கொண்டம நாயக்கன் செய்த இக்கொடுங்கோன்மையை நேரில் கண்டு வருந்தியதுடன் இக்கொடுஞ் செயலைத் தம்முடைய யாத்திரைக் குறிப்பிலும் குறித்துள்ளார்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 62 ॐ

{பெருமாள் கோயில் சில தகவல்கள்}

சிதம்பரம் கோயில் எப்போது எனக் காலம் நிர்ணயிக்க முடியாத கால கட்டத்தில் இருந்தே ஈசன் கோயிலாகவே இருந்து வந்தது. சிவனடியார்கள் போற்றிப் பாடும் இடமாகவும் சிவனடியார்களால் கோயில் எனக் குறிப்பிடப்படும் இடமாகவுமே இருந்து வந்தது. தேவார மூவர் காலத்திலேயும் மாணிக்கவாசகர் காலத்திலேயும் இங்கே ஈசன் மட்டுமே அன்னையோடு குடி இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. பல தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் இந்தக் கோயிலையே தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லியும் இருக்கின்றன. திரு ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத் திருப்பதிகங்களும் மாணிக்கவாசகர் அருளிய திரு வாசகம் திருச்சிற்றம்பலக் கோவையாகிய அருள் நூல்களும் திரு மூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் போன்றவைகளும் சிதம்பரம் கோயில் சைவத்தின் தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றன. பல கல்வெட்டுக்களும் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றன. இந்நிலையில் தில்லைக் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் வந்த வரலாறு என்ன? நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும் சமீபத்தில் சிதம்பரத்தில் தீட்சிதரிடம் பேசி உறுதி செய்து கொண்டதும் ஆன அந்தத் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதன் முதல் நந்திவர்ம பல்லவன் காலத்திலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக ஒரு சன்னதி ஏற்படுத்தப்பட்டது என்று தெரியவருகின்றது. கி.பி726-775 வரை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவன் தன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலே சைவ வைணவ மதங்களை ஒன்றாகக் கருதி வந்தாலும் பின்னர் திருமங்கை ஆழ்வாரால் பரம வைணவன் ஆகிவிட்டான் என வரலாறு கூறுகின்றது. அவன் வேண்டுகோள் பேரிலும் மன்னனுக்கே இயல்பாக எழுந்த ஆசையினாலுமே தில்லையில் கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக சன்னதி எழுப்பப்பட்டு அங்கே பிரதிஷ்டையும் செய்யப் பட்டிருக்கின்றார். இதைத் திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில் இவ்வாறு கூறுகின்றார்.

"பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன்பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச் சித்திரகூடம் சென்று சேர்மின்களே"
(பெரிய திருமொழி 3-2-3)

இதிலே சித்திரகூடம் என்பதற்குத் தெற்றியம்பலம் என அர்த்தம் வருவதாயும் தெற்றி=திண்ணை எனப் பொருள் கொள்ள வேண்டும் எனவும் தமிழறிஞர்கள் சொல்கின்றனர். தெற்றியம்பலம் என்பது சிறிய திண்ணை எனப் பொருள் எனவும் சிறிய திண்ணை போன்ற இடத்திலேயே பெருமாள் கோவில் கொண்டிருந்திருக்கின்றார் எனவும் சொல்லப்படுகின்றது. இந்த அரசன் பற்றிய பட்டயச் செய்திகளில் இறைவன் திருவடிகளைத் தவிர வேறொன்றுக்கும் இவன் தலை வணங்கியதில்லை என்று இருப்பதில் இருந்தே இவன் வைணவனாக மாறியது புலனாகின்றது. தவிர இங்கே பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டதில் இருந்தே தில்லையம்பல நடராஜரைச் சுற்றி இருக்கும் பரிவார தேவதைகளில் ஒருவராகவே இருந்து வந்திருக்கின்றார். ஆகவே இந்த கோவிந்தராஜரின் வழிபாடுகளையும் தில்லை மூவாயிரவர் எனப்படும் தீட்சிதர்களே செய்து வந்திருக்கின்றார்கள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இன்றியே! இது போலவே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலும் பரிவார தெய்வமாகவே பெருமாள் எழுந்தருளி இருக்கின்றார் என்பதும் "நிலாத்திங்கள் துண்டத்தான்" என அதே திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டிருப்பதும் அங்கே இன்றளவும் சிவாச்சாரியார்களாலேயே பெருமாள் பூஜிக்கப் படுகின்றார் என்பதும் கவனிக்கத் தக்கது.

"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்" (பெ.தி. 3.2-8)

"தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்" (குல.தி. 10.2)

என்று பெரிய திருமொழியிலும் குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது. பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும் அப்போது நடந்தவை பற்றியும் இனி வரும் நாட்களில்  பார்ப்போம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 61 ॐ
அரியும், சிவனும் ஒண்ணுதாங்க!!!!

தனக்கென ஒரு மகன் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணுவானவர் இறைவனைக் குறித்துத் துதிக்க தன்னை ஒதுக்கிவிட்டாரோ என நினைத்த தேவியானவள் மனம் வருந்த விஷ்ணுவுக்குப் பிள்ளைப் பேறும் கூடவே சிவனையும் தேவியையும் வணங்கித் துதிக்கும்படியான கட்டளையும் கிடைக்கின்றது. அப்போது தனக்குப் பிள்ளைப் பேறு அளித்த சிவனையும் குடும்பத்தோடு பார்க்க விரும்பிய விஷ்ணு அவ்விதமே இறைவனை வேண்ட இறைவன் காட்சி அளித்த கோலமே சோமாஸ்கந்த கோலம். நடுவிலே ஸ்கந்தன் அமர்ந்திருக்க இரு பக்கமும் தாய் தந்தையர்கள் இருக்கக் காட்சி கொடுத்த அந்த விக்ரகத்தைப் பூஜித்து விஷ்ணு பெற்ற பிள்ளையே மன்மதன் ஆவான். இந்த மகாவிஷ்ணு எந்நேரமும் இறைவனைத் தன் மூச்சிலேயே நிலை நிறுத்தி இதயத்திலே வைத்து மானசீகப் பூஜை செய்ய இறைவன் மகாவிஷ்ணுவின் இதயத்திலே ஆனந்த நடனம் ஆடினார். அப்போது அதற்குத் தாளம் விஷ்ணுவின் மூச்சுக் காற்றே சற்றும் சத்தமே இல்லாத இந்த மூச்சுக்காற்றின் தாளத்திற்கு ஏற்ப இறைவன் ஆடிய நடனமே "அஜபா நடனம்" என்று சொல்லப் படுகின்றது.
பின்னர் மகாவிஷ்ணு இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவிரும்ப இறைவன் தான் சிதம்பரம் க்ஷேத்திரத்திலே ஆடப்போவதாயும் ஆகவே அங்கே வந்து காணுமாறும் சொல்லத் தன் பரிவாரங்களோடு சிதம்பரத்திலே எழுந்தருளினார் மகாவிஷ்ணு. இவரே இன்றளவும் கோவிந்தராஜர் என்ற பெயரோடு சிதம்பரம் என்று சைவர்களாலும் திருச்சித்திர கூடம் என்று வைஷ்ணவர்களாலும் அழைக்கப் படும் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளார். இருவரும் ஒருவரே என்பதே பெரும்பாலான பக்தர்களின் கூற்றும் கூட. இதை மெய்ப்படுத்துவதே போல் பல பக்திமான்களும் பாடியுள்ளனர், போற்றித் துதித்துள்ளனர் இருவரையும் பற்றி. முதலாழ்வார்களின் பாசுரத்தில் காணப்பட்டபடி அரன் நாரணன் நாமம் ஆன் விடை யுன்னூர்தி உரைநூல் மறை உறையும் கோயில் வரை நீர் கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி உருவமெரி கார்மேனி ஒன்று எனப் பொய்கை ஆழ்வாரும்,

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே!"
என்று நம்மாழ்வாரும் சொன்னபடிக்குக் காட்சி அளிக்கின்றனர், சிதம்பரத்தில் நடராஜரும், கோவிந்தராஜரும். சில கேள்விகளுக்குப் பதிலுக்காகக் காத்திருத்தலில் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே பதில் வரும் போது வரட்டும் என இதை முடிக்க எண்ணி உள்ளேன். பல மன்னர்களின் திருப்பணிகளாலும் பல பக்தர்களின் பெரும் முயற்சியாலும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்போது ஆரம்பித்தது, எப்போது கட்டப்பட்டது என்று நிர்ணயம் செய்யமுடியாத காலத்தில் இருந்தே இருப்பதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள், நாளடைவில் ஒவ்வொரு பாகமாய்ச் சேர்க்கப் பட்டு ஒவ்வொரு பாகமும் ஒவ்வொருவரால் கட்டப் பட்டு இன்று முழுப் பூர்த்தி அடைந்த கோயிலாகக் காட்சி அளிக்கின்றது. மாணிக்க வாசகரின் திரு அகவல் ஒன்றிலே அவர் பாடிய வண்ணம்.

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய்த் திகழ்ந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!
என்னும்படிக்கு, இந்தப் பூமியானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களையும், நீரானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்ற நான்கு குணங்களையும், தீயானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களையும், வளியென்று சொல்லப் படும் காற்றானது சப்தம், ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும் அண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன. இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க் காணப்படுகின்றார். இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் இங்கே நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம் தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார். திருவீழிமிழலைப் பதிகம் ஒன்றிலே சொன்னாற்போலே அரியும் சிவனும் ஒன்றே என்னும் கருத்தைப் பக்தர்களுக்கு நிலைநாட்டவே இவ்விதம் கோயில் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாமோ????

"மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும்பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே!

(இது அப்பர் தேவாரம், குறிப்பிட மறந்திருக்கின்றேன், சுட்டிக் காட்டிய ஜீவாவுக்கு நன்றி)

ஓருருவம் மூவுருவம் ஆன நாளோ
நாரணனை இடப்பாகத்து அடைந்தார் போலும்."
என்றும்,
"அரியாகிக் காப்பான், அயனாய்ப் படைப்பான்,
அரனாயழிப்பவனுந்தானே!"

என்று அனைத்துமே அவன் ஒருவனே எனச் சொல்கின்றனர். அரியின் இதயத்தில், அரனும், அரனின் இதயத்தில் அரியும் குடி இருக்கின்றார்கள். இருவரும் ஒருவரே என்பதைச் சொல்லும் வண்ணம், "அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு" என்றும் சொல்லுவதுண்டு. சிவன் எந்தவிதமான அடையாளமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம் "அலிங்கம்" எனவும், விஷ்ணு எந்தவிதமான ரூபமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம், "அமூர்த்தி" எனவும் சொல்லப் படுகின்றனர்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.

அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்

வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

தங்கம் தானம் தர தோஷம் விலகும்

பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்

தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்

நெய் தானம் தர நோயைப் போக்கும்

பால் தானம் தர துக்கநிலை மாறும்

தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்

நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்

தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்

தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்

கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்

ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்

அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
குளிகன் கொடுப்பான்..!! குளிகன் கெடுப்பான்..!!!எப்போது..!  அறிவோமா..!!

குளிகை நேரம் கிடைக்க கொடுத்து வைத்திருத்திருக்க வேண்டும்.

தினமும் ராசி பலன் பார்த்து இன்றைய நாள் எப்படி இருக்கும் என தெரிய அனைவரும் ஆசை படுகிறோம்.

தினசரி பத்திரிக்கையில் ராசி பலன் பகுதியிலோ அல்லது காலண்டரிலோ குளிகை என்ற பகுதி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

ராகு காலம்., எமகண்டம் தெரிந்த அளவு குளிகை பற்றி பலருக்கு தெரிவதில்லை.

வார நாட்கள் 7

நவகிரகம் 9

7 கிரகங்களுக்கு 7 நாட்கள்.

ஆனால் ராகு, கேதுவிற்கு தினசரி 1½ மணி நேரம் ராகு காலம்., எமகண்டமாக பிரித்து கொடுக்கப்படுகிறது. அதனால் ராகு., கேதுவிற்கு கிழமை கிடையாது.

ஆனால் குளிகை யார்.?

குளிகன் சனி—ஜேஷ்டா தேவியின் புதல்வன்.

ராகு., கேதுவை போல் தினமும் பகலும்., இரவும் 1½., 1½ மணி நேரம் இவருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த காலத்தில் செய்யும் செயல்கள் பெரும் வளர்ச்சி பெறும் என்பதால் #அசுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.

ஆனால்., எந்த நல்ல செயல் செய்தாலும் நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.

குறிப்பாக கடன் கழுத்தை நெரிப்பவர்கள் குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும்.

*"சுப செயலான நகை வாங்குவது., தொழில் தொடங்குவது., நடவு செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகள் தாராளமாக செய்யலாம்."*

*"அது போல் கடன் வாங்குவது., பிரேதத்தை தூக்குவது போன்ற அசுப நிகழ்ச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்."*

கிழமைகள் ~~
பகல் பொழுது
மற்றும்
இரவுப் பொழுது

ஞாயிறு ~~
பகல் ~ 03:00 — 04:30
மற்றும்
இரவு ~ 09:00 — 10:30

திங்கள் ~~
பகல் ~ 01:30 — 03:00
மற்றும்
இரவு ~ 07:30 — 09:00

செவ்வாய் ~~
பகல் ~ 12:00 — 01:30
மற்றும்
இரவு ~12:00 — 01:30

புதன் ~~
பகல் ~ 10.30 — 12.00
மற்றும்
இரவு ~ 03.00 — 04.30

வியாழன் ~~
பகல் ~ 09.00 — 10.30
மற்றும்
இரவு ~ 01.30 — 03.00

வெள்ளி  ~~
 பகல் ~ 07.30 — 09.00
மற்றும்
இரவு ~12.00 — 01.30

சனி ~~
பகல் ~ 06:00 — 07:30
மற்றும்
இரவு ~ 10:30 — 12:00

மேலே குறிப்பிட்டுள்ள தினசரி குளிகை கால காலத்தை பயன்படுத்தி முன்னேற்றம் பெறுங்கள்.

கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் செவ்வாய்கிழமை பகல் 12:00 — 01:30குள் கடனில் சிறுபகுதியை கொடுங்கள்.

நீங்களே ஆச்சிரியபடும் அளவிற்கு கடன் அடைபடுவதை கண் முன் காணலாம்.

பலரும் பயன் பெற்ற மிக எளிய பரிகாரம்.

முதலில் கொடுத்திருக்கும் நேரம் பகல் பொழுது இரண்டாவது இரவு பொழுது குளிகன் நேரம் .

மொத்தம் நவ கிரஹங்கள் அதாவது நவ என்றல் ஒன்பது. ஆனால் ஏழு கிரஹங்களுக்கும் அதன் பெயரிலேயே ஒரு நாள் இறைவனால் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது .

ராகுவுக்கு கேதுவுக்கும் நாள் கொடுக்கப்படவில்லை என்றாலும் வாரத்தின் ஏழு நாளிலும் ஒரு முகூர்த்த நேரம் ( 1½ ஒன்றரை மணி நேரம் ஒரு முகூர்த்த நேரம் ) கொடுக்க பட்டுள்ளது.

அதேபோன்று குளிகனுக்கும் வாரத்தில் ஏழு நாட்களிலும் காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளையும் ஒரு முகூர்த்த நேரம் கொடுக்கப் பட்டுள்ளது.

எல்லா நாட்களும் இரண்டு வேளையும் ஒரு முகூர்த்த நேரம் பரிசாக பெற்றுள்ள குளிகன் மிகவும் சக்தி வாய்ந்தவன் என்பது இதிலிருந்து புலனாகிறது..!

ஓம் ஸ்ரீ மஹா பைரவாய நமஹ..! என்று எவனொருவன் பைரவர் சன்னதி முன் ஜபிப்பதற்கு முன் விளக்கேற்றி செவ்வரளி மலர் சாற்றி அவர் முன் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் மாலை 3 முதல் 4.30 வரை குளிகன் காலத்தில் ஜபித்தால் கோடி மடங்கு பலன்.

ஏனென்றால் குளிகனுக்கு ஒன்றை., பல மடங்காக ஆக்கும் சக்தி உண்டு. அது அந்த நேரத்தில் நல்ல காரியங்கள் செய்தாலும் சரி., கெட்ட காரியங்கள் செய்தாலும் சரி., அது பல்கி பன் மடங்காக பெருகும் என்பது நிதர்சனமான உண்மை .

அனால் இந்த குளிகன் சூட்சும நேர மகிமை பலருக்கும் தெரியவில்லை.