சனி, 24 ஆகஸ்ட், 2019

நென்மேலி

பிண்டம் வைத்த  நல்லூர்- ஸ்ராத்த ஸம்ரட்சண  நாராயணன்
பெற்றேர்களை உயிரோடு இருக்கும் வரை காப்பதற்க்குப்பெயர் கடமை அவர்கள் காலமானவுடன் அவர்களுக்கு செய்வதற்கு பெயர் கடன் கடனை அடைக்கவில்லையென்றால் வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து நம் குட்டிகள் தலையில் தான் விழும் அப்படி விழாமல் இருக்க பித்ரு கர்மக்களை விடாமல் செய்யவேண்டும். ஷேத்திரங்களுக்கும் சென்று  பித்ரு பரிகாரங்கள் செய்யலாம்

முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா  மற்றும் புனித தலங்களுக்கு செல்லும்போது மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும். அவற்றை செய்ய எல்லோருக்கும் வசதிகள் அமையாது.

செங்கல்பட்டு அருகில் நென்மேலி  என்ற திருத்தலம் அமைந்துள்ளது.

இது எளியவர்களின் கயா என்று கூறப்படுகிறது.
இதைப் பற்றி சிறு குறிப்பு.

செங்கல்பட்டு அருகே நென்மேலி  என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள 
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப் படுகிறது. மேலும் இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி " ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் " என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்கிய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய  கயா என்றும் வழங்கப்படுகிறது.

இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணி புரிந்தஸ்ரீ யாக்ஞவல்கியரைக்  குருவாகக் கொண்ட சுக்ல யஜுர்  வேதத்தை  சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதிகள் இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர்.

மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும்  தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க  விரும்பாமல்  திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

அவர்களுக்கு தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள்.

அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமானே செய்ததாக பெருமாள் சாட்சியம் சொன்னார்.
அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள்  இல்லாருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் ( 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார்.

எனவே இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம் ஆகும்.

இந்த ஸ்வாமிக்கு நிவேதிக்கப்படும் வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்த்த துவையலும் நிவேதனமாகும்.

ஸ்வாமி  இதனை மட்டும் ஏற்று பித்ருக்களை திருப்தி செய்கிறார்.

தினமும் நடை பெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ , அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று கலந்து கொள்வது கயை  ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும் .

அர்ச்சகரின் முகவரி;
ஸ்ரீ சம்பத் பட்டாச்சாரியார் ,
பிராமணர் வீதி,
நென்மேலி  போஸ்ட், நத்தம் வழி ,
செங்கல்பட்டு -603002,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன் : 044 - 27420053.

இந்த தலம்  செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து  ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது.

பித்ரு பூஜை பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே நடை பெறும், இதில் கலந்து கொள்பவர்கள் 10 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும். அர்ச்சகரிடம் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
-----------------------------------------------------------

கருத்துகள் இல்லை: