வியாழன், 12 நவம்பர், 2020

அஞ்சுவட்டத்துக் காளி அம்மன்


சுற்றிலும் மேற்புறமும் எனக் கவசமாய் நின்றுக் காத்தருளும் அஞ்சு''''கீழ்வேளூர் (கீவளூர்) வனமுலை நாயகி உடனுறை கேடிலியப்பர் (அட்சய லிங்கசுவாமி) திருக்கோயில் ''நாகப்பட்டினம்
மாவட்டம் சிக்கல் திருத்தலத்தில் இருந்து எட்டாவது கிலோ மீட்டரில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதர் திருப்புகழ் வைப்புத்தலம்.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில்களுள் இத்தலம் ஒன்றாகும். இத்தலத்தில் தான் அகத்தியருக்கு நடராஜப்பெருமான் தமது வலது பாத தரிசனம் தந்தருளினார். குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சன்னிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
திருச்செந்தூரில் சூரபத்மனை அழித்து அவனை ஆட்கொண்டு தேவர்களை காத்து அபயம் அளித்தான் முருகப்பெருமான். சூரபத்மனை அழித்ததால் முருகப்பெருமானை வீரகத்தி தோஷம் (கொலைபாவம்) சூழ்ந்தது. இதனால் முருகப்பெருமானின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருந்து வந்தது. இதனை விலக்க முருகப் பெருமான் சிவாலயங்களில் சிவபூஜை செய்து வழிபட்டு வந்தார். அங்கெல்லாம் அவருடைய சிவபூஜை நிறைவுறாத வண்ணம் முருகப் பெருமானின் மனதை வாட்டி வந்தது வீரகத்தி தோஷம். அதுமட்டுமல்ல முருகப்பெருமான் சிவபூஜை செய்யும் இடங்களில் எல்லாம் மாயமாய் இருந்து வீரகத்தி துர்சக்திகள் சிவபூஜையை நிறைவேற விடமால் தடுத்தன. முருகனைச் சுற்றி பல பயங்கர முகங்கள் தாண்டவமாடின. எல்லாம் பார்க்க முடியாத படி கோர உருவங்கள். இதனால் பொறுத்துப் பார்த்த முருகப் பெருமான் சிவபெருமானிடம் அய்யனே! சிவபூஜை நிறைவேற்றிட துணை புரிய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். உடனே சிவபெருமான் தோன்றி ''முருகா! உந்தனுக்கு அம்மை அருளிய நமது சிவசக்தி வேல் பெற்ற சிக்கல் திருத்தலம் அருகில் உள்ள இலந்தை வனத்திற்கு வந்து சிவபூஜை செய்திடுக! அங்கே உந்தன் சிவபூஜை நிறைவேற சிக்கலில் சிவசக்திவேல் அளித்து சூரபத்மனை அழிக்க உந்தனுக்கு துணை புரிந்த அம்மை இலந்தைவனத்தில் சிவபூஜை செய்யும் போது உந்தனுக்கு துணை புரிவாள்'' என அருளி மறைந்தார். அதற்கேற்ப முருகப்பெருமானும் தாம் சூரனை வதைக்க சிவசக்தி வேல் பெற்ற சிக்கல் திருத்தலத்திற்கு வந்து அதன் அருகில் உள்ள இலந்தைவனம் வந்து அங்கு சுயம்புவாய் அரும்பியிருந்த சிவலிங்கத்திற்கு சிவபூஜை செய்தார். அபிஷேகத்துக்கு தீர்த்தம் வேண்டி அருகில் பூமியில் தன் வேலை ஊன்ற அதிலிருந்து தீர்த்த நீர் பீச்சி வந்து அதுவே இத்தல சரவணப்பொய்கை தீர்த்தமானது. முருகப் பெருமான் ஈசன் கூறியபடி தமக்கு சூரனை வதைக்க சிவசக்திவேல் கொடுத்த அன்னையை தம் சிவபூஜை இலந்தைவனத்தில் சிறப்புடன் நிறைவேறிடத் துணைக்கு அழைத்தார். சிவபூஜை செய்யத் துவங்கினார். அப்போது அவரை சுற்றி மாயமாய் வீரகத்தி துர்சக்திகள் தோன்றி சிவபூஜைக்கு இடையூறு செய்தன. இதனைக்கண்ட  அன்னை உமையவள் மனம் கொதித்தாள். தாம் கொடுத்த சிவசக்தி வேல் கொண்டு சூரபத்மனை அழித்து தேவரைக் காத்த முருகனை இந்த துர்சக்திகள் சுற்றி நின்று சிவபூஜை நிறைவேற விடாமல் ஆர்பரிக்கின்றனவே எனக் கொதித்து அக்கொடிய வீரகத்தி துர்சக்திகளை அழித்து ஒழிக்க தம்மிலிருந்து மிகப்பெரிய தோற்றத்தில் காளியை உதிர்த்தாள். சிவபூஜைக்கு இடையூறு செய்யும் வீரகத்தி துர்சக்திகளை நோக்கி தம் கண்களை சுழற்றினாள் காளி. நான்கு புறமும் முருகனைச் சுற்றி இடைஞ்சல் கொடுத்த துர்சக்திகளை அகற்ற காளியானவள் சிவபூஜை செய்யும் முருகனை அந்த வீரகத்திகள் அண்டாமல் இருக்க நான்கு புறமும் ஒரு கவசம் ஏற்படுத்தினாள் காளி. அப்போது வீரகத்தி துர்சக்திகள் நான்கு பக்கமும் அன்னையின் கவசத்தால் புகமுடியாமல் நிற்க ஆகாயம் வழி வந்து இடைஞ்சல் கொடுத்தன. இதனைக் கண்ட காளி நான்கு  பக்கமும் மற்றும் ஆகாயம் என ஐந்து கோணத்திலும் முருகப்பெருமானைச் சுற்றிலும் வட்டமாய் ஒரு கவசம் ஏற்படுத்தினாள். காளியின் அதிகோர உருவையும் உக்கிரத்தையும் கண்ட வீரகத்தி தோஷ துர்சக்திகள் ஓட்டமெடுத்தன. முருகப்பெருமானின் சிவபூஜையும் சிறப்புற நிறைவேறியது. தம்மை சுற்றி நான்கு புறமும் மற்றும் ஆகாயம் என ஐந்து கோணத்திலும் வட்டமாய் கவசம் ஏற்படுத்தி அருளிய தமது அன்னையை ''அஞ்சுவட்டத்தம்மா'' எனப்போற்றித் துதித்தார் முருகப்பெருமான். முருகப்பெருமானை வீரஹத்திதோஷங்களில் இருந்து காத்த காளிஅன்னை இத்தலத்தில் ''அஞ்சு வட்டத்தம்மன்'' என்னும் திருநாமத்திலேயே அருள் பாலிக்கிறார். அஞ்சு வட்டத்தம்மன் இங்கு சுதைவடிவில் பெரிய திரு உருவுடன் பத்து திருக்கரங்களுடன் வடக்கு திசை நோக்கி அருள் பாலிக்கிறார். இங்கு அமாவாசை மற்றும் ராகு காலங்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி கருவறை தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து ஒன்பது உதிரி எலுமிச்சை பழங்களை சமர்ப்பித்து குங்குமார்ச்சனை செய்து அஞ்சுவட்டத்துக் காளி அம்மனை வழிபட்டு வர நம்மை பிடித்த நோய்கள் தீராத நோய்கள், தரித்திரம், வறுமை, ஏவல், பில்லி, சூன்யம், மாந்திரீகம் என அத்தனை பீடைகளும், தீவினைகளும், தோஷங்களும் விலகி ஓடும். கருக்கலைப்பு செய்ததால் வந்த கொடிய பாவம் மற்றும் பிறரது சாபங்கள் பிற தோஷங்கள் யாவும் அஞ்சு வட்டத்துக் காளியம்மனை தொடர்ந்து நாம் வழிபட்டு வர விலகும். தொடுவதால், காற்று மூலம் பரவுவதால் என பரவும் தொற்றுக்கிருமிகளையும், தொட்டு தொடரும் பற்றிப்படரும் தொற்று நோய்களையும் அடியோடு துடைத்தெறியும் வல்லமை படைத்தவள் அஞ்சுவட்டத்து அம்மன். ஆம்! காற்றின் மூலம் பரவும் தொற்றுக் கிருமிகளானாலும் எந்தவிதத்திலும் எந்தப்பக்கமிருந்தும் அண்டாமல் காத்திடும் அதியற்புத வல்லமைபடைத்த அன்னையே அஞ்சு வட்டத்து அம்மன். 

அது போல சில நேரங்களில் பலருக்கு தங்கள் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செய்திட நினைத்து பரிகாரம் செய்திட எண்ணும் பொழுது அப்பரிகாரத்தை நாம் செய்து நிறைவேற்றிட முடியாமல் நிறைய தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இத்தலம் வந்து முறைப்படி விநாயகர், நந்தி, சுவாமி அம்பாள், முருகப் பெருமான் வழிபட்டு அஞ்சுவட்டத்துக் காளியம்மனை வழிபட்டு வந்தால் அந்த தடங்கல்கள் விலகும். இதனால் வாழ்வின் சகல தோஷங்களும் அகலும். பித்ரு தோஷம், குலதெய்வ சாபம் உள்ளவர்களும் இத்தல அஞ்சுவட்டத்துக் காளியம்மனை கெட்டியாகப் பிடித்து கொண்டால் சகல சாபங்கள், தோஷங்களையும் விலக்கி கொள்ளலாம். அது போல இன்றைய நாளில் நிறைய பேருக்கு அவர்களின் குலதெய்வம் சரியாகத் தெரியாமல் உள்ளது. இப்படிப் பட்டவர்கள் தங்கள் குலதெய்வமாக அஞ்சு வட்டத்துக் காளியம்மனை குலதெய்வமாக கருதி வழிபடலாம். அதற்கு முன்பு இத்தலம் வந்து அஞ்சு வட்டத்துக் காளியம்மனை முறைப்படி வழிபட்டு, இத்தல ஈசன் கேடிலியப்பரையும் வழிபட்டு அஞ்சு வட்டத்தம்மனை தங்கள் குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம். இத்தல முருகப் பெருமான் சிலையையும் திருச்செந்தூர் முருகப் பெருமான் சிலையையும் ஒரே சிற்பி செய்ததாகக் கூறுகிறார்கள். மூலவர் கேடிலியப்பர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவருக்கு புனுகு சட்டம், சாம்பிராணித் தைலமுமே சார்த்தப்படுகிறது. இவர் தம்மை அண்டியவர்களின் தீவினைகள், கெடுதல்கள், கிரக தோஷங்கள், கர்ம வினைகள், கேடுகள் அகற்றி இன்பம் அருள் வதால் கேடிலியப்பர் ஆனார். ''கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடும்
அவர்கேடு இலாரே'' என்கிறார் அப்பர் திருநாவுக்கரசர். ஆம்! இத்தல கேடிலியப்பரை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் எந்தஒரு கேடும் அண்டாது என தமது பதிகம் மூலம் உறுதிபட கூறுகிறார் அப்பர். இத்தல வழிபாடு செய்யும் முன் அருகில் உள்ள சிக்கல் வேல் நெடுங்கண்ணி உடனுறை வெண்ணை நாதர் திருக்கோயில் வழிபாடு செய்து, இத்தலம் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகக் கூறுகிறார்கள். தொற்று நோய்களையும், கொள்ளை நோய்களையும், தீராத நோய்களையும் விரட்டும் அதிசக்தி படைத்தவளாக கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் அருள் பாலிக்கிறார். இன்று உலகினையே மிரட்டும் கோரோனோ நான்கு திசைகள் ஆகாயம் என எந்தவழியிலும் வந்து அண்டாமல் இருக்கவும் அண்டிய கொரோனாவை விரட்டி அகற்றவும் சரணடைய வேண்டிய பத்ரகாளி தான் கீழ்வேளூர் அஞ்சு வட்டத்தம்மன். உண்மை தான் சமயபுரம் மாரியம்மன் போல தக்கச்சமயத்தில் வந்துகாக்கும் அஞ்சு வட்டத்தம்மன் திருப்பாதம் பணிவோம். தம்மை பணிந்தோர்களை தாமதிக்காமல் கவசமாய் காத்துநிற்கும் அஞ்சு வட்டத்தம்மனை அனுதினமும் மனத்திற்குள்ளிருத்தி வழிபட்டு கீழ்வேளூர் சென்று அன்னையையும் அம்மையப்பனையும் பணிந்தெழுவோம்.
திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் இத்தல அம்மையப்பனை வழிபட்டால் துன்பங்களும் வினைகளும் பிணிகளும் அகன்றோடும் என்கிறார். நிலைத்த இன்பவாழ்வு கிட்டுவது மட்டுமின்றி, திருஞானசம்பந்தரின் இத்தலத் திருப்பதிகத்தைத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் சிவகதி கிட்டுவது உறுதி என்கிறார். ஆம்! 'வினை ஓடிட வீடு ஆமே பிணியொடு வினை போமே,வினை தேய்வது திணம் ஆமே முடுகிய இடர்போமே வினை போமே வல்வினை போமே' என தமது 'மின் உலாவிய சடையினர் விடையினர்' பதிகத்தில் உறுதியளிக்கும் திருஞானசம்பந்தர் முத்தாய்ப்பாக 'சிவகதி பெறுவது திடம் ஆமே' என திண்ணம், உறுதி என்கிறார். எனவே நல்லருள் கிட்டி நல்வாழ்வு வாழ கீழ்வேளூர் செல்வோம். அனுதினமும் இத்தல திருஞானசம்பந்தர், அப்பர் திருப்பதிகத்தை பாராயணம் செய்வோம். கீழ்வேளூர் திருத்தலம் வந்து அஞ்சு வட்டத்து அம்மனை சரணடைந்து சிவசக்தியை வழிபட்டால் துன்பங்கள், வினைகள், பிணிகள் அடியோடு அகன்று விடும். இதனைத்தான்'' நடலைகள் நணுகாவே'' அதாவது துன்பங்கள் அடையாது என்றும்,''முடுகிய இடர்போமே'' அதாவது வலிந்து வரும் இடர் போகும் என்றும்''பிணியொடு வினைபோமே'' அதாவது பிணிகளும் வினைகளும் போகும் என்றும் திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் உறுதிபடக் கூறியுள்ளார். அஞ்சு வட்டத்து அம்மனை கந்தர் சஷ்டி, நவராத்திரி நாட்களில் வழிபடுவது பாவங்கள், தோஷங்களை அகற்றி நல்வாழ்வு வாழவைக்கும். "நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம' எனப் பெற்றேன்?"."நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம் வரும் காற்றில் அணையாச் சுடர்போலும், அருள் கந்தன் தருவான் எதிர்காலம், எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகன் மலரடிநிழலில்"