புதன், 15 டிசம்பர், 2021

தில்லை தீட்சிதர்கள் வரலாறு

தில்லை தீட்சிதர்கள் வரலாறு

கோயில் என்ற சொல்லுக்கு இறைவன் வாழும் இல்லம் என்று பொருள். வைஷ்ணவர்களுக்கு கோயில் என்றாலே அது திருவரங்கம் தான்! எனில், சைவர்களுக்கு? ஆனந்தக் கூத்தன் ஸ்ரீநடராஜ பெருமான் கோலோச்சும் சிதம்பரம் ஆலயத்தை தான் அவர்கள் ‘கோயில்’ என்று சொல்வார்கள்.

இங்கே நடராஜ பெருமான் மட்டுமல்ல, அவரை அனுதினமும் பூஜித்து வரும் தீட்சிதர்களும் கவனிக்கத்தக்கவர்கள். சிதம்பரத்துக்குத் தில்லை, தில்லையம்பதி என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. இங்கே உள்ள தீட்சிதர்களை, தில்லைவாழ் அந்தணர்கள் என்று குறிப்பிடாத புராணங்களோ, சரித்திரங்களோ, இலக்கியங்களோ இல்லை எனலாம்.

‘தில்லை மூவாயிரம்’ என்றொரு வாசகம் மிகப் புராதனமானது. அதாவது, தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் மூவாயிரம் பேரைக் குறிப்பிடும் வாசகம் அது.

பாற்கடலில் ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டிருக்கும் திருமாலின் எடை திடீரெனக் கூடியது. சதாசர்வ காலமும் அவரைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனுக்கு, ‘அட… என்ன இப்படி எடை கூடியிருக்கிறது!’ என ஆச்சரியம். திருமாலிடமே கேட்டார். ‘சிவனாரின் திருநடனத்தில் களிப்புற்றேன். அந்தப் பூரிப்பில், உடல் எடை கூடிப்போயிருக்கும்’ என்றார் மாலவன். அதைக் கேட்டு ஏதோ முணுமுணுத்தார் ஆதிசேஷன். அந்த முணுமுணுப்பைத் திருமால் அறியாமல் இருப்பாரா? ‘என்ன முணுமுணுக்கிறாய் ஆதிசேஷா? தயங்காமல் சொல்!’ என்றார். ‘ஈசனின் திருநடனத்தைத் தரிசிக்கும் ஆசை பரந்தாமனான உங்களுக்கே இருக்கும்போது, நானெல்லாம் எம்மாத்திரம்? எனக்கு மட்டும் விருப்பம் இருக்காதா?’ என்று கேட்டார் ஆதிசேஷன்.

‘அவ்வளவுதானே… இப்போதே பூலோகத்தில் பிறப்பெடுத்து, சிவபெருமானின் நடனத்தைத் தரிசிப்பாயாக!’ என்று அருளினார் திருமால். அதையடுத்து, சிவனாரே ஆதிசேஷனிடம், ‘தில்லை வனத்தில் தவத்திலும் பூஜையிலும் ஈடுபட்டிருக்கும் வியாக்ரபாதர் எனும் முனிவருடன் சேர்ந்து செயல்படுவாயாக!’ என அசரீரியாகச் சொல்ல… பூலோகத்தில் பிறப்பெடுத்து, பதஞ்சலி முனிவர் என எல்லோராலும் வணங்கப்பட்ட அந்த முனிவர், தில்லை வனம் வந்தார். வியாக்ரபாத முனிவருடன் நட்பானார். சிவபூஜையில் ஈடுபட்டார்.

தை மாதத்தில், வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நன்னாளில், ஆனந்த நடனக் காட்சியை வியாக்ரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும், தேவர்பெருமக்களுக்கும் காட்டி அருளினார் ஆனந்தக் கூத்தன். அந்த வேளையில், திருக்கயிலாயத்தில் இருந்து சிவனாருடன் மூவாயிரம் வேத விற்பன்னர் களும் வந்தார்கள். அவர்களுக்கு குருவாக இருந்து நடராஜ பெருமானே வேதங்களைத் தந்தருளினாராம். ஈசனிடமே தீட்சை பெற்றவர்கள் எனும் பெருமைக்கு உரியவர்கள் ஆனதால், அந்த மூவாயிரம் பேரும் தீட்சிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

”திருக்கயிலாயத்தில் இருந்து சிவபெருமா னோடு மொத்தம் எழுபத்து எட்டாயிரம் முனிவர்கள் வந்தார்களாம். அதுல சிவபெருமானை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்ற மூவாயிரம் அந்தணர்களை தீட்சிதர்கள்னு சொல்லுவாங்க. தீட்சை பெற்றவர்கள், தீட்சிதர்கள்!

#தில்லைப் பெண் எல்லை தாண்டாள்’னு ஒரு சொல்வழக்கு உண்டு. அதாவது, தீட்சிதர் கள் குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வார்கள்; வெளியே பெண் எடுப்பதில்லை. வெளியூருக்கும் செல்வதில்லை. ஸ்ரீவத்ஸ கோத்திரம், கௌண்டின்ய கோத்திரம், ரிஷிக்யான்யர் கோத்திரம், விஸ்வாமித்திர கோத்திரம்னு நாலு கோத்திரங்கள் தீட்சிதர்களுள் உண்டு. இந்த நான்கு கோத்திரங்களுக்குள்தான் பெண் எடுத்து, பெண் கொடுத்து (அவரவர் கோத்திரத்தைத் தவிர, மற்ற கோத்திரங்களில்) கொள்வோம்” என்கிறார் சிவசங்கர தீட்சிதர்.

#தீட்சிதர் குடும்பத்தில் பிறந்த ஆண் குழந்தை, பிறந்த உடனேயோ அல்லது வளர்ந்ததுமோ, தீட்சிதர் எனும் பட்டத்துக்கு, கௌரவத்துக்கு வந்துவிடமுடியாது. உபநயனம் எனப்படும் பூணூல் வைபவம் முடிந்த பின்னரும் தீட்சிதர் ஆகிவிட முடியாது.திருமணமாகி, மாங்கல்யதாரணம் எனப்படும் தாலி கட்டுகிற வைபவம் நடந்து முடிந்த அந்த நிமிடத்திலிருந்துதான் அவர் தீட்சிதர் எனும் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்” என்கிறார் சிவசங்கர தீட்சிதர். தன் 18 வயதில் இருந்து பூஜையில் ஈடுபட்டு வரும் இவர், திருமணமான ஐந்தாம் நாளிலிருந்து கோயிலில் பூஜை செய்து வருவதாகச் சொல்கிறார். இவரின் வயது 75.

”கிழக்கு வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதினு கோயில் மதிலைச் சுற்றி உள்ள நான்கு வீதிகள்தான் தீட்சிதர்களின் உலகம். இந்தத் தெருக்களையும் ஆடல்வல்லானையும் தவிர, எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது” என நா தழுதழுக்கச் சொல்கிறார் இவர்.

#திருஞானசம்பந்தர், ஸ்ரீநடராஜ பெருமானைத் தரிசிக்கும் ஆவலில் தில்லையம்பதிக்கு வந்தார். அங்கே தீட்சிதர்களையும், அவர்கள் செய்து வரும் பூஜைகளையும் அறிந்து, ”நான் இங்கு தங்கமாட்டேன். கடவுளுக்குத் தொண்டு செய்யும் அடியவர்களை, கடவுளே விரும்பி அமர வைத்துள்ள பூமி இது. இங்கே படுத்து உறங்குவதும், மல ஜலம் கழிப்பதும் தகாத செயல்” என்று சொல்லிவிட்டு, அருகில் உள்ள #கொற்றவன்குடி எனும் கிராமத்துக்குச் சென்று தங்கினார்.

#கற்றாங்கு எரியோம்பி கலியை வாராமே
செற்றார் வாழ்த்தில்லை சிற்றம்பலமேய
உற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே!’

 என்று ஞானசம்பந்தர் பெருமான்,

 மனமுருகிப் பாடுகிறார். அதுமட்டுமா? ‘தில்லைவாழ் அந்தணர்களைப் பார்த்தபோது, அந்த சிவகணங்களே சிவனாருக்கு அரணாக வந்து கொண்டிருப்பதுபோல் எனக்குக் காட்சி கிடைத்தது’ என்று சொல்லிச் சிலிர்க்கிறார்.

மிகப் பிரமாண்டமான யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தார் பிரம்மா. தில்லை மூவாயிரத்தாரை அழைத்து, ‘யாகத்தில் கலந்துகொண்டு, அதற்கு இன்னும் வலுவும் பெருமையும் சேருங்கள்’ என்றார். ‘தினமும் நடராஜருக்கு பூஜை செய்யவேண்டுமே! அது தடைப்படுமே..!’ எனத் தயங்கினார்கள் அவர்கள். உடனே பதஞ்சலி முனிவர், ‘நீங்கள் வரும்வரை நான் பூஜை செய்கிறேன். போய் வாருங்கள்’ என்றார்.

அதன்படி,  பிரம்ம லோகத்துக்குச் சென்ற தில்லை அந்தணர்கள், யாகத்தில் கலந்து கொண்டார்கள். யாகம் முடிந்தபின்பு,  சிதம்பரம் வந்தார்கள். வந்தவர்கள், ஒருவரைக் காணாது திடுக்கிட்டார்கள். ‘மூவாயிரம் பேர் இருக்க வேண்டுமே… 2,999 பேர்தானே இருக்கிறோம்’ என்று பதறினார்கள். அப்போது, ‘மூவாயிரத்தில் நானும் ஒருவன். உங்களில் ஒருவன் நான். மறந்துவிட்டீர்களா?’ என்று சிவனாரே கேட்க, பொன்னம்பலத்தானின் பெருங்கருணையை வியந்து, ஆனந்தக்கண்ணீர் வடித்தார்கள் தீட்சிதர்கள். அதனால்தான் சிவனாருக்கு ‘சபாநாயகர்’ எனும் பெருமையும் பேரும் கிடைத்தது என்பார்கள்.

#எத்தனையோ சிவாச்சார்யர்களுக்கும், பட்டாச்சார்யர்களுக்கும், குருக்கள்மார்களுக் கும் கிடைக்காத ஒரு தனிப் பெருமை, தில்லை வாழ் தீட்சிதர்களுக்குக் கிடைத்திருக்கிறது. தஞ்சைப் பெரியகோயிலில், கோபுரத்தின் உட்பகுதிகளில் நிறைய ஓவியங்கள் உள்ளன. அதில், பொன்னம்பலத்தானை ராஜராஜசோழன் வணங்குவது போலவும், அருகில் தில்லைவாழ் அந்தணர்கள் நிற்பது போலவும் ஓர் ஓவியம் உள்ளது. சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்த தஞ்சை பெரிய கோயிலில் தீட்சிதர்களின் ஓவியங்களும் இருக்கின்றன என்றால், அவர்களின் பாரம்பரியத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்” என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

#கும்பகோணம் தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன.அதில் ஒன்றில், அம்பலவாணனான நடராஜ பெருமான், அழகு கொஞ்சக் காட்சி தருகிறார். அருகில், தில்லை மூவாயிரத்தாரின் இருப்பை உணர்த்தும்விதமாக, ஆயிரத்துக்கு ஒருவர் வீதம், மூன்று பேர் நிற்கிறார்கள். ஒருவர் ஸ்ரீநடராஜருக்குக் குடை பிடிக்க, இன்னொருவர் இறைவனுக்கு சாமரம் வீச, மூன்றாமவர் நைவேத்தியத் தட்டினை ஏந்தியபடி நிற்கிறார். ஆக, தஞ்சையில் ஓவியமாகவும், தாராசுரத்தில் சிற்பமாகவும் இருக்கிறார்கள் தீட்சிதர்கள். ஏழாம்- எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தர், அப்பர் பெருமான் முதலானோர் தரிசித்த சிதம்பரம் கோயிலில், தீட்சிதர்களும் அப்போதிருந்தே இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது” என்று விவரிக்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

முற்காலப் பல்லவர்கள் காலத்துக் கோயில் என்றும் இதைச் சொல்கிறார்கள். ஹிரண்யவர்மன் எனும் வங்க தேசத்து அரசன்,  சிற்சபைக்கு பொன்வேய்ந்ததாகச் சொல்லும் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. அதேபோல், பராந்தக சோழன், கொங்கு தேசத்தைக் கைப்பற்றிய வெற்றிக் களிப்பின் அடையாளமாக, அங்கிருந்து கொண்டு வந்த பொன் பொருளைக் கொண்டு, சிதம்பரம் சபைக்குப் பொன் வேய்ந்ததாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது.  தவிர, ஒவ்வொரு மன்னரும்  இந்த தீட்சிதர்களுக்கு நிலங்களும் வீடுகளும் தானம் அளித்துள்ளனர்.

#தீட்சிதர்கள், நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்வதையே தொண்டாகக் கருதி வாழ்ந்துவருபவர்கள். எப்போதும் மனத்தில் ஈசனையும், மடியில் விபூதிப் பையையும் வைத்திருப்பவர்கள். அர்ப்பணிப்பு மனோபாவத்தில், சிவனாரிடம் முழுவதுமாகச் சரணடைந்தவர்கள் என்று பெரியபுராணத்தில், தில்லைவாழ் அந்தணர் சருக்கம் எனும் பகுதியில், தீட்சிதர்களைப் போற்றி விவரித்துள்ளார் சேக்கிழார் பெருமான்” என்கிறார் சம்பந்த தீட்சிதர்.

”வேதமே முக்கியம் எனக் கொண்டு பதஞ்சலி முனிவர் அருளிச் சென்ற பூஜா சூத்திரத்தின்படிதான் இந்தக் கோயிலில் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இங்குள்ள தீட்சிதர்களில் தலைவர், தொண்டர் என்றெல்லாம் இல்லை. ஒன்பது பேர் கொண்ட குழுவை வருடந்தோறும் அமைப்போம். அந்தக் குழுவினரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை பிரித்து வழங்கப்படும்.

யஜன, யாஜன, அத்யயன, அத்யாபக, தான, ப்ரதிக்ரக… என ஆறு கர்மாக்கள் தீட்சிதர்களுக்கு உண்டு.

யஜனம்- யாகம் செய்தல்; யாஜன- யாகம் செய்வதற்கு உதவி செய்தல்; அத்யயன- வேதம் கற்றல், ஓதுதல்; அத்யாபன- கற்றுக்கொண்ட வேதத்தைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தல்; தானம்- பிறருக்கு வழங்குதல்; ப்ரதிக்ரக- பிறர் தருவதை மறுக்காமல் வாங்கிக்கொள்ளுதல்.

இந்த ஆறு கர்மாக்களையும், அதாவது ஆறு கடமைகளையும் செவ்வனே செய்பவனே தில்லை வாழ் அந்தணன்; தீட்சிதன்” என்று விவரிக்கிறார் உமாநாத் தீட்சிதர்.

ஒவ்வொரு கோபுரமும் ஏழு நிலைகள் கொண்டதான நான்கு கோபுரங்கள், ஐந்து பிராகாரங்கள் என, சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ஆலயத்தில், ஸ்ரீமூலநாதர்தான் மூலவர். ஆதிமூலவர். அம்பாள்- ஸ்ரீஉமைய பார்வதி. கோயிலுக்குள் ‘நால்வர் கோயில்’ என்று ஒன்று உள்ளது. தேவார மூவர் தங்கள் பதிகங்களின் ஓலைச் சுவடிகளை, தில்லைவாழ் அந்தணர்களிடம் கொடுத்துச் சென்றார்கள். ராஜராஜசோழன், நம்பியாண்டார்நம்பியின் உதவியுடன் இங்கே உள்ள அறைக் கதவைத் திறந்து தேவாரப் பதிகங்களை, திருமுறைகளை உலகுக்குக் கொண்டு வந்தார் என்கிறது சரித்திரம்.

நாயன்மார்கள், சமயக்குரவர்கள், சந்தானச்சார்யர்கள், அருணகிரிநாதர் எனப் பலரும் தரிசித்துப் போற்றி வணங்கிய தலம் இது. காஞ்சி மகா பெரியவா இங்கு வந்து, ஸ்ரீநடராஜ பெருமானைத் தரிசித்து, வைர குஞ்சிதபாதம், வைர அபய ஹஸ்தம், வைரத் திருமுடி என வழங்கியுள்ளார்.

சோழ மன்னர்கள் காலத்தில், அவர்களுக்குத் தில்லைவாழ் அந்தணர்களே முடிசூட்டுவது மரபு. அப்படி ஒரு பெருமையை சோழ மன்னர்கள், தீட்சிதர்களுக்குத் தந்திருந்தார்கள். சோழர்களின் பின்னடைவுக்குப் பிறகு, களப் பிரர்கள் இங்கே ஆட்சி செய்தார்கள். அச்சுதக் களப்பிர மன்னன் என்பவன், தில்லையம்பதிக்கு வந்தான். கோயிலுக்கு வந்தவன், ‘எனக்கும் முடிசூட்டுங்கள்’ என்றான். ஆனால், தீட்சிதர் கள் மறுத்துவிட்டார்கள். ‘சிவமே கதியென்று இருந்த சோழ மன்னர்களைத் தவிர, வேறு எவருக்கும் முடிசூட்டி மரியாதை செய்ய மாட்டோம்’ என்று உறுதியாக இருந்தார்கள். ‘உயிரை விடத் தயாரா?’ என்று அவர்களை அச்சுறுத்தினான். அதில் ஏராளமான தீட்சி தர்கள் சேர தேசமான கேரளத்தை நோக்கி ஓடி, அங்கே சிவபூஜையில் ஈடுபட்டார்கள்.

பிறகு, மன்னனின் கனவில் வந்த சிவனார், அவன் சிரசில் தனது திருவடியை வைத்தார். அகம் குளிர்ந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்தான். தீட்சிதர்களை மீண்டும் சிதம்பரத் துக்கு அழைத்து வந்து, மன்னிப்புக் கேட்டான்.

”அதையடுத்து, மராட்டியர்களின் காலம் வந்தது. அந்நியர்களின் படைகள் உள்ளே நுழைந்து, பல கோயில்களை இடித்தன. இறை விக்கிரகங்களைச் சிதைத்தன. அப்போது தில்லை நடராஜப் பெருமானின் விக்கிரகத்தைக் காப்பாற்றுவதற்காக அதைத் திருவாரூர், குடுமியான்மலை, மதுரை எனப் பல ஊர்களுக்கு மறைவாக, பத்திரமாக எடுத்துச் சென்றார்கள் தீட்சிதர்கள். இப்படிக் கட்டிக் காபந்து செய்ததில், குலகுரு முத்தைய தீட்சிதர் என்பவருக்குப் பெரும் பங்கு உண்டு. இந்தத் தகவல்களை திருவாரூர் கோயிலில் உள்ள மராட்டியர்களின் செப்பேட்டில் பார்க்கலாம்” என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

அதேபோல், கோயிலைப் புனர் நிர்மாணம் செய்யும் பணியையும் எடுத்துச் செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள். கோயில் திருப்பணிக்குக் கேரளாவில் இருந்து சிற்பிகளை வரச் செய்திருக்கிறார்கள். இதைத் தெரிவிக்கும் செப்பேடுகளும் திருவாரூரில் உள்ளன.

#திருநீலகண்டர் கதை தெரியும் தானே! இளமையில் தவறு செய்ய, அதை அறிந்த மனைவி, #என்னைத் தீண்டாதே’ என்று ஆவேசமாகச் சொல்ல, சிவனார் சிவனடியாராக வந்து, திருநீலகண்டரிடம் திருவோடு தந்து, ‘இதைப் பத்திரமாக வைத்திரு. நீராடிவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுச் செல்ல, அந்தத் திருவோடு மறைந்துவிட, ‘நீதான் திருடிவிட்டாய்’ என்று சிவனடியாராக வந்த சிவனார் சண்டை இழுக்க, விஷயம் நீதிபதிகளிடம் வருகிறது. ‘நீலகண்டன் அப்படிச் செய்யமாட்டானே’ என்கிறார்கள் நீதிபதிகள். பிறகு, கணவன், மனைவி இருவரும் திருக்குளத்தில் முங்கி எழ, இளமையுடன் வெளிவந்தார்கள் (சிதம்பரத்தில் இளமையாக்கினார் திருக்குளமும் கோயிலும் இன்றைக்கும் இருக்கிறது); சிவனருள் பெற் றார்கள் என்பதெல்லாம் தெரியும்தானே! அந்த நீதிபதிகள் வேறு யாருமல்ல… தில்லைவாழ் அந்தணர்கள்தான்.

‘அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளிதானே!

என்று சிலாகித்துப் பாடுகிறார் திருமூலர்.

#சிதம்பரத்தில் ஆடல்வல்லான் சிவனார் இருக்கிற கோயிலில், ஸ்ரீதிருமாலுக்கும் சந்நிதி உண்டு. குலசேகர ஆழ்வார், நாலாயிர திவ்விய பிரபந்தத்தில், பெருமாள்திருமொழியில், 742-வது பாசுரத்தில்,

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி
வரு குருதி பொழிதரவன் கணையொன் றேவி
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்விகாத்து
வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர் திருச்சித்திரக் கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்றானே!  – என மங்களாசாசனம் செய்தருள்கிறார்” என்கிறார் சுப்பராயலு. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு வயது 71. ‘தில்லைவாழ் அந்தணர்’ என்பது உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

#தில்லையில், நடராஜர் கோயிலில் உள்ள திருமால் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு தில்லை மூவாயிரத்தார் எனப்படும் தீட்சிதர்கள் பூஜை செய்து, வழிபட்டிருக்கிறார்கள் என்பதை திருமங்கை ஆழ்வாரும் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘மாவாயின் அங்கம் மதியாது கீறி
மழைமா முதுகுன் றெடுத்து ஆயர் தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன்
குரைமா கழல் கூடும் குறிப்புடையீர்
மூவாயிர நான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காய சோதி
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்திரக் கூடம் சென்று சேர் மின்களே!’

– என்று நான்கு வேதங்களும் தெரிந்த, தில்லை மூவாயிரத்தார் நாள்தோறும் பெருமாளுக்குப் பூஜை செய்ததைச் சொல்லி, மங்களாசாசனம் செய்துள்ளார்.

தினமும் ஆறு கால பூஜைகள் இங்கே நடைபெறுகின்றன. ஆனாலும் முன்னதாக, தினமும் காலையில் பால் நைவேத்தியத்துடன் சிறப்பு பூஜை ஒன்று நடைபெறுகிறது. இரவு சாப்பிட்ட சிவனார் பசியுடன் இருப்பார் என்பதால், பால், வாழைப்பழம், பொரி, வெல்லச் சர்க்கரை, வெற்றிலைப் பாக்கு என வைத்து பூஜை செய்வது வேறெங்கும் காணப்படாத ஒன்று.

அதேபோல், தமிழக ஆலயங்களில் 8 மணியில் இருந்து 9 மணிக்குள் அர்த்த ஜாம பூஜை நடைபெற்றுவிடும். பிறகு, நடை சாத்திவிடுவார்கள். ஆனால், சிதம்பரம் கோயிலில் தினமும் இரவு 10 மணிக்குதான் அர்த்த ஜாம பூஜை நடைபெறுகிறது. அதாவது, சிவனாரின் ஆனந்த நடனத்தைத் தரிசிக்க, எல்லாக் கோயில்களில் இருந்தும் கடவுளர்கள் இங்கு வந்துவிடுவதாக ஐதீகம்!

பஞ்ச பூத தலங்களில் இந்த சிதம்பரம் கோயில், ஆகாசத் தலம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! ஆகாசம் என்பது வெளி; வெற்றிடம். அதாவது, ஒன்றுமில்லாதது! இங்கே, ஆகாச ரூபமாக, அதாவது அரூபமாக இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார்.

”ஸ்ரீநடராஜரின் வலது பக்கத்தில் திரை ஒன்று இருக்கும். அந்தத் திரைக்குப் பின்னே உள்ள கற்சுவரில், தங்கத்தாலான வில்வ மாலை சார்த்தப்பட்டிருக்கும். ஸ்ரீ, சிவா என்கிற இரண்டு சம்மேளனச் சக்கரங்கள் அங்கே அமைந்திருப்பதைத் தரிசிக்கலாம் (ஸ்ரீ- அம்பாள்; அதாவது சக்தி. சிவா என்பது இறைவன்). அதன் மேலே புனுகு, ஜவ்வாது ஆகியவை எப்போதோ சார்த்தப்பட்ட நிலையில், இன்றைக்கும் அப்படியே இருப்பதைப் பார்க்கலாம்” என்கிறார் வெங்கடேச தீட்சிதர்.

ஞானம் எனும் சக்தியை மாயை எனும் திரை மூடியிருக்கிறது. மனம் ஒருமுகப்பட்டு, மாயையை விலக்கிப் பார்த்தால், ஞானம் எனும் தெளிவைப் பெறலாம் என்பதே இதன் தத்துவம். இதுவே சிதம்பர ரகசியம்!

”மனிதரின் உடல் அமைப்பில் இந்தச் சிதம்பரம் கோயில் கட்டப் பட்டிருக்கிறது. மனித உடலில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என ஐந்து நிலைகள் உள்ளன. இந்த ஐந்தும் சேர்ந்ததுதான் சரீரம் இயங்கும் நிலை. இந்த உலகின் மையப்புள்ளியாக அமைந்திருப்பதுதான் ஆடல்வல்லான் தில்லை அம்பலத்தானின் திருச்சந்நிதி. ஐந்து கோசங்களும் ஐந்து பிராகாரங்களாக இங்கே அமைந்துள்ளன.

சித்சபை, அதன் எதிரில் கனகசபை, அதையடுத்து நேரெதிர் வரிசையில் நடன சபை, அடுத்து உத்ஸவ மூர்த்தங்கள் காட்சி தரும் தேவ சபை, ஆயிரங்கால் மண்டபத்தில் ராஜசபை என ஐந்து சபைகள் உள்ளன.

இந்தக் கோயில் மட்டுமல்லாது, மற்ற தலங்களையும் கணக்கிட்டுப் பார்த்தாலும் ஐந்து சபை உண்டு. அதாவது திருவாலங்காடு – ரத்னசபை, சிதம்பரம் – கனகசபை, மதுரை – ரஜத (வெள்ளி) சபை, திருநெல்வேலி – தாமிர சபை, திருக்குற்றாலம் – சித்திர சபை.

இங்கே, தில்லையில் உள்ள கனக சபையில், 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் வேயப்பட்டுள்ளன. அதென்ன கணக்கு என்கிறீர்களா? நாம் ஒருநாளில், 21 ஆயிரத்து 600 முறை மூச்சை இழுத்து வெளியேவிடுகிறோம். அதைக் குறிக்கவே இத்தனை தங்க ஓடுகள்!

நம் உடலில், மொத்தம் #72 ஆயிரம் நாடிகள் (நரம்புகள்) உள்ளன. இவைதான் இணைந்தும் பிணைந்தும் நம்மை இயக்குகின்றன. நம் உடலில் பித்தம், வாதம், சிலேத்துமம் (கபம்) சீராக இருப்பதற்கு, தலைமுடியில் இருந்து குதிகால் வரை சீராக இயங்குவதற்கு நாடி நரம்புகள் அவசியம். அதைக் குறிக்கும்வகையில் இங்கே, பொன்னம்பலத்தானின் சபையில் 72 ஆயிரம் தங்க ஆணிகளைக் கொண்டு இணைக்கப்பட்டுள்ளன.

நம் உடம்பில் நடுநாயகமாக இருப்பது இதயம். அதாவது சபாநாயகம்; இறை சக்தி. நான்கு வேதங்களும், ஆறு சாஸ்திரங்களும் இதயத்தைச் சுற்றியிருக்கும் உபகரணங்கள் போல, ஸ்வாமி சந்நிதியைச் சுற்றிலும் பத்து தூண்களாகத் திகழ்கின்றன.

அதன்பிறகு உள்ள ஐந்து தூண்கள் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன. 18 புராணங்கள் 18 தூண்களாகவும், 28 ஆகமங்கள் மேலே உள்ள உத்தரங்களாகவும், 36 தத்துவங்கள் மேலே நடுநடுவே வருகிற சட்டங்களாகவும், 64 கலைகள் மேலே அனைத்தையும் தாங்கு கிற மரங்களாகவும், 96 தாத்வீகங்கள் ஜன்னல்களில் உள்ள 96 துளைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

சதா சர்வ காலமும் ஆனந்த நடனம் புரிந்து கொண்டிருக்கிறார் சிவனார். ஒவ்வொரு முறையும் பஞ்சாட்சர நாமத்தைச் (நமசிவாய) சொல்லிக்கொண்டே, மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுகிற தியானம் அல்லது தவத்தில் ஈடுபட ஈடுபட… அந்த ஆனந்த நடனத்தைத் தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். பதஞ்சலி முனிவர் அருளிய யோகா சூத்திரம், இந்த ஆனந்த நடனத்தைத்தான் வலியுறுத்துகிறது!”

#வெங்கடேச தீட்சிதர் சொல்லச் சொல்ல, கோயிலும் அதன் பிரமாண்டமும் மனத்துள் விரிகிறது. அந்த பிரமாண்டத்தின் உள்ளே அணுவெனப் பொதிந்திருக்கும் விஷயங்களும் முக்கியமாக, சிதம்பர ரகசியமும் ஒன்றே ஒன்றைத்தான் வலியுறுத்துகின்றன.

‘இங்கே எதுவுமில்லை! கர்வம், காமம், அலட்டல், அகங்காரம் என எதற்கும் இங்கே இடம் கிடையாது. ஒன்றுமில்லை. அமைதியாக, ஆனந்தமாக வாழ… இதுவே சிறந்த வழி!’

தில்லை மூவாயிரம்பேர் என்று பெருங் கூட்டமாக இருந்த நிலை இப்போது இல்லை. தற்போதைய நிலவரப்படி, சுமார் 299 தீட்சிதக் குடும்பங்களே உள்ளன.

நமக்கு போன்கால் வந்தால் எடுத்து ‘ஹலோ’ என்போம். ‘வணக்கம்’ என்று சிலர் சொல்வார் கள். தில்லைவாழ் அந்தணர்களும் தில்லைவாழ் பெருமக்களும் போனை எடுக்கும்போதும், பேச்சை முடிக்கும்போதும் ‘திருச்சிற்றம்பலம்’ என்கிறார்கள். ‘

சிவசிதம்பரம்… சிவசிதம்பரம்’ என்கிறார்கள்.

தில்லைவாழ் அந்தணர்களோ ‘நடராஜர் இஷ்டம்… நடராஜர் இஷ்டம்’ என்று சகலத்தையும் அவன் பாதத்தில் சேர்த்து விடுகிறார்கள்.