புதன், 4 டிசம்பர், 2019

ராகவேந்திரர் பகுதி மூன்று

பிராமன்ய தீர்த்தர் சொன்னபடியே அந்தத்தாய் கர்ப்பமானார். 1447, ஏப்ரல் 22 ஒரு புண்ணிய தினமாக இந்த உலகத்துக்கு அமைந்தது. ஆம்... அன்று தான் அந்த அற்புதக்குழந்தை பூமியில் அவதரித்தது. தீர்த்தர் சொன்னபடி பிறந்த அன்றே குழந்தையை ஆஸ்ரமத்தில் ஒப்படைத்து விட்டனர் பெற்றோர். குழந்தைக்கு எத்திராஜன் என்று பெயர் வைத்தார் தீர்த்தர். குழந்தையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார் தீர்த்தர். எத்திராஜனுக்கு ஆறு வயதானது. அவருக்கு உபநயனம் (பூணூல் அணிவிக்கும் சடங்கு) நடத்தப்பட்டது. அதன் பின் இரண்டே ஆண்டுகள். எட்டே வயதில் சன்னியாசமும் வழங்கப்பட்டு விட்டது. சன்னியாசம் பெற்ற எத்திராஜனின் பெயர் வியாசராயர் என மாற்றப்பட்டது. வியாசராயருக்கு மத்வாச்சாரியாரின் துவைத கருத்துக்கள் போதிக்கப்பட்டன. வியாசராயரும் அதை அக்கறையுடன் படித்தார். பின்னர் மேல் படிப்புக்காக மூலபஹல் என்ற ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவ்வூரில் ஸ்ரீ பாதராஜர் என்ற மகான் இருந்தார். அவர் சிறந்த கல்விமான். அந்தக் கல்விமானிடம் படித்த வியாசராயரும் பெரும் கல்வியாளர் ஆனார். அது மட்டுமல்ல! துவைதக் கருத்துக்களை மிகத்துல்லியமாக மற்றவர்களுக்கும் கற்பிக்கும் ஆற்றலைப் பெற்றார். இந்த நேரத்தில் வியாசராயரை வளர்த்து ஆளாக்கிய பிரமான்ய தீர்த்தர் முக்தி பெற்றார். அவருக்குப் பின் ஆஸ்ரமத்தை சிறந்த முறையில் நடத்த கல்விமானான வியாசராயரே தகுதியானவர் என அங்கிருந்தோர் கருதினர். மடத்தின் தலைவராக வியாசராயர் நியமிக்கப் பட்டார். பின்னர் அவர் நாடு முழுவதும் பயணம் செய்து துவைதக் கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் சொன்னார். அவரது கருத்துக்களை ஏற்ற பெரியவர்கள் எல்லாம் தங்கள் சொத்தையே ஆஸ்ரமத்துக்கு எழுதி வைத்தனர். அந்த மடம் வியாசராய மடம் என்று பெயர் பெற்றது. வியாசராயர் அந்தப் பணத்தைக் கொண்டு ஏராளமான ஆன்மிகப்பணிகளைச் செய்தார். நாடெங்கும் 700க்கும் மேற்பட்ட இடங்களில் ராமதூதனான ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்ய விக்ரகம் வடித்துக் கொடுத்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திக் கொடுத்தார். 12 நூல்களை அவர் எழுதினார். வியாசராயரின் அரும்பணிகளும் ஒரு நாள் முடிவுக்கு வந்தன. துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள நவபிருந்தாவனத்தில் அவர் சமாதியடைந்தார். ஆக பிரம்மாவின் ஆணைப்படி மூன்று பிறவிகளையும் நிறைவு செய்து விட்டான் சங்குகர்ணன். இனி அவன் பிரம்மலோகம் சென்று விடலாம் என்று நினைத்திருந்தான். சங்குகர்ணன் அளவுக்கதிகமான புண்ணியம் செய்திருந்ததால் அதன் பலன் இன்னும் 700 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்து அனுபவிக்கும் அளவுக்கு மிஞ்சியிருந்தது. அதையும் இந்த பூமியில் பிறந்து மக்களுக்கு அருள் வழங்கிக் கழிக்கலாம் என முடிவெடுத்தான் சங்குகர்ணன். மாசில்லாத வானத்தில் வரும் வட்டநிலா போல பூமிக்கு வரத் தயாரானது அந்தச் செல்வம். 1519ல் கர்நாடக மாநிலத்தில் வேதசாஸ்திரங்களை அறிந்த கிருஷ்ணபட்டர் குடும்பத்தினர் வசித்து வந்தனர். பட்டர் சிறந்த இசைமேதையும் கூட. விஜயநகரப் பேரரசை நிறுவிய கிருஷ்ணதேவராயரே இவரிடம் தான் வீணை கற்றுக்கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அத்துடன் விஜயநகரப் பேரரசின் ஆஸ்தான கவியாகவும் விளங்கினார். கிருஷ்ணபட்டரின் மகன் கனகசாலபட்டரும் தந்தைக்கு சற்றும் குறையாத அறிஞராக விளங்கினார். கனகசால பட்டரின் வாரிசாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு திம்மண்ணா பட்டர் என்று பெயர் சூட்டினர். திம்மண்ணா துவைத சித்தாந்தத்தில் பெரும் மேதையாகத் திகழ்ந்தார். புலிக்கு பிறந்தது புலி என்பதை நிரூபிக்கும் வகையில், வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். அது மட்டுமல்ல! வீணை இசை பெரிதா! இவர் குரலழகு பெரிதா என்று மற்றவர்கள் விவாதிக்கும் வகையில், பாடும் திறமையையும் பெற்றிருந்தார். ஆனால் என்ன துரதிர்ஷ்டமோ... தனது முன்னோரைப் போல திம்மண்ணா பட்டருக்கு அரசவைப்பதவி கிடைக்கவில்லை.

திம்மண்ணா பட்டருக்கு கோப்பம்மா என்ற பெண்மணியைத் திருமணம் செய்து வைத்தனர். இந்த சமயத்தில் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில் மதக்கலவரம் ஏற்பட்டதால் அங்கு இந்துக்களால் வாழ முடியாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. சிறுமிகளுக்கும் வயதான பெண்களுக்கும் கூட பாதுகாப்பில்லாமல் போனது. எனவே இந்துக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயினர். திம்மண்ணா பட்டருக்கு குருராஜ் என்ற மகனும், வெங்கம்மா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். பெண்ணைப் பெற்றவர் என்பதாலும் மனைவிக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதாலும் திம்மண்ணா பட்டரும் தன் இருப்பிடத்தை மாற்ற முடிவெடுத்தார். தன் பாட்டனாரும், தந்தையும் சேர்த்து வைத்த நவரத்தினங்களையும், தங்கம், விலை உயர்ந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் இந்துக்களின் புனித பூமியாகத் திகழ்ந்த தஞ்சாவூர் வந்து சேர்ந்தனர். தஞ்சாவூர் அருகே புவனகிரி என்ற கிராமம் இருந்தார். அங்கே திம்மண்ணா பட்டர் குடியேறினார். அங்கே பாதுகாப்பு கிடைத்ததே தவிர அன்றாடச் செலவுக்கு திண்டாட வேண்டியிருந்தது. விஜயநகரத்தில் இருந்து கொண்டு வந்த பொருட்களை விற்று செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கித் தின்றால் எத்தனை நாளைக்கு வரும் என்பது நம்மவர் சொல்லியிருக்கும் பொன்மொழி. திம்மண்ணா பட்டர் வீட்டில் இருந்த கஜானா காலியாகத் தொடங்கியது.

தொடரும்
ராகவேந்திரர் பகுதி இரண்டு

பாலிகனாகப் பிறந்த சங்குகர்ணன் கவுரவர்களுடன் இணைந்திருந்தாலும் கூட அப்போதும் சில புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டான். மனிதர்கள் பாவம் செய்தாலும் சரி புண்ணியம் செய்தாலும் சரி! கன்மம் எனப்படும் இந்த இரு வினைகளால் ஏற்படும் பலன்களை அனுபவிப்பதற்காக பூலோகத்தில் மீண்டும் பிறக்க நேரிடும். அதனால் தான் பாவ, புண்ணியம் இரண்டும் கலந்த இந்த பிறவிச்சுழலில் இருந்து காப்பாற்றும் படி  இறைவனிடம் மகான்கள் வேண்டிக் கொள்வார்கள். பாலிகன் செய்த புண்ணியத்தின் விளைவை அனுபவிக்க அவன் பூலோகத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல நூறு ஆண்டுகள் கடந்தன. கலியுகம் பிறந்தும் பல ஆண்டுகள் ஓடி விட்டன. மைசூர் மாநிலத்தில் (இப்போதைய கர்நாடகம்) அப்பூர் என்ற கிராமத்தை ஒட்டிய குக்கிராமத்தில் ராமாச்சாரியார் என்பவர் வசித்தார். இவருக்கு குழந்தை இல்லை. ராமாச்சாரியாரும் அவரது மனைவியும் மனம் நொந்து போய் இருந்தனர். ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் ஊரார் அவர்களைப் பற்றி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார்கள். குறிப்பாக உறவுக்காரர்கள் அந்தப் பெண்ணை மலடி என ஏசுவார்கள். அந்த ஆண்மகனை குடும்ப வாழ்வுக்கு லாயக்கற்றவன் என்பர். ராமாச்சாரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. கணவனும், மனைவியும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அந்த தம்பதியர் கண்ணீர் வடிக்காத நாளில்லை. அவர்கள் தங்கள் பிரச்னைக்கு தீர்வு வேண்டி பிரமான்ய தீர்த்தர் என்ற வைணவத்துறவியை அணுகினர். தீர்த்தர் சுவாமிகளுக்கு எங்கள் நமஸ்காரம். இவள் என் மனைவி நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகிறோம். ஊராரும் உற்றாரும் எங்களைப் பற்றி பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனம் நொந்து போயிருக்கிறோம். குழந்தை இல்லாதவர்கள் வாழ்வதை விட சாவதே மேல். மேலும் குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு சிரார்த்தம் முதலியன செய்ய ஆள் இல்லாததால் நரகத்திற்கு செல்வார்கள் என்கிறது சாஸ்திரம். நாங்கள் ஏன் வாழ வேண்டுமென நினைக்கிறோம். எங்களுக்கு குழந்தை பிறக்க வழியிருக்கிறதா? நீங்கள் தான் ஒரு யோசனை சொல்ல வேண்டும் என்றார்.

தீர்த்தர் ராமாச்சாரியரிடம் அன்பனே! கவலைப்படாதே. உனக்கு குழந்தை பிறக்கும் காலம் கனிந்து விட்டது. ஒரு ஆண் குழந்தை உனக்குப் பிறக்கும் என்றதும் தம்பதியர் உணர்ச்சிப்பிழம்பாகி விட்டனர். தீர்த்தரை சேவித்த அவர்கள் சுவாமி! இதென்ன அதிசயம்! நிஜமாகவா இது நிகழப்போகிறது! எங்களுக்கு குழந்தையா! அதிலும் ஆண் குழந்தையா! என்னே நாங்கள் செய்த பாக்கியம் என்று புன்னகையும் கண்ணீருமாகக் கேட்டவர்களுக்கு அடுத்து வார்த்தைகள் வர மறுத்தன. நா தழுதழுத்தது. மனிதர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சரி அல்லது சோகம் நிகழ்ந்தாலும் சரி! ஏனோ வார்த்தைகள் வர மறுக்கின்றன. பிரமான்ய தீர்த்தரே அவர்களது இந்த உணர்ச்சிவசப்படும் தன்மையைக் கண்டித்தார். ராமாச்சாரி! நீ ரொம்பவும் சந்தோஷப்படாதே. மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும் போதும் வேண்டாத நிகழ்ச்சிகள் நடக்கும் போதும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவனே சிறந்த மனிதன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிலையற்ற உலகில் நாம் வசிக்கிறோம் என்பதை மறந்து விடாதே. நல்லது நடக்கப் போகிறது என்பதற்காக மகிழாமலும், துன்பம் வரப்போகிறது என்பதற்காக கலங்காமலும் இருக்க வேண்டும் என சொல்லி விட்டு ராமாச்சாரி! இந்த அறிவுரையை நான் எதற்காக உன்னிடம் சொன்னேன் என்று உனக்குத் தெரியுமா? என்றதும் கேள்விக்குறியோடு தீர்த்தரின் முகத்தை அந்த தம்பதியர் ஒரு வித பயத்தோடு நோக்கினர். அத்துடன் தீர்த்தர் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்து தங்கள் மகிழ்ச்சியை ஒரு குட்டையைப் போல் சுருக்கிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்க தயாராயினர். ராமாச்சாரி! உங்களுக்கு குழந்தை பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை எனக்குரியது. குழந்தை பிறந்தவுடன் அவனை எனக்கு தத்துக் கொடுத்து விட வேண்டும் என்றார். இந்த நிபந்தனையைக் கேட்டதும் தம்பதிகள் விக்கித்துப் போனார்கள். சற்று முன் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி நதியில் கரைந்த சர்க்கரை போல் ஆயிற்று. குழந்தை பிறந்தவுடன் சீராட்டி, பாலூட்டி வளர்க்க வேண்டும்.

குருகுலத்துக்கு அனுப்பி அவனுக்கு பெரிய படிப்பெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் இளைஞன் ஆனதும் சிறந்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்த திருமணத்தை ஊரே வியக்கும் வகையில் பெரிய அளவில் நடத்த வேண்டும். பேரன், பேத்திகளுடன் மகிழ்ந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்வது எல்லாப் பெற்றோர்களுக்கும் வாடிக்கை தானே! ஆனால் தீர்த்தர் தங்களுக்கு இப்படி ஒரு நிபந்தனை விதிக்க என்ன காரணம் என்று யோசித்தனர். சுவாமி! எங்களுக்கு குழந்தை பிறக்குமென தங்கள் திருவாக்கு மலர்ந்ததும் நாங்கள் மகிழ்ந்தோம். இப்போது இப்படி ஒரு நிபந்தனை விதிக்க காரணமென்ன? என அவர்கள் கவலையுடன் கேட்டனர். ராமாச்சாரி! கவலைப்படாதே! உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை சாதாரண குழந்தையல்ல. அவன் உலக இச்சைகளில் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை. மிகப்பெரிய புண்ணிய ஆத்மாவான அந்தக் குழந்தை சன்னியாச நிலை பெற்றுய்வதற்காக பிறக்கிறது. நீங்கள் அந்தக் குழந்தையை என்னிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லா விட்டால் இதுவும் சிரமமே! என்றார். உலகம் உய்வதற்காக ஒரு மகானைப் பெற்றுத் தரப்போகிறோம். அத்துடன் மலடி என்று ஊரார் சூட்டிய கொடுமையான பட்டத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். துறவியின் நிபந்தனைக்கு சம்மதித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்த அந்தத்தாய் சுவாமி! எனக்கு குழந்தை பிறந்தால் போதும் பிறந்தவுடன் தங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

தொடரும்
ராகவேந்திரர் பகுதி ஒன்று

பிரம்மலோகத்தில் பெரும் பிரளயமே நிகழ்ந்து கொண்டிருந்தது சங்குகர்ணா எனது படைப்புக்கலன்களில் இந்த மண் கலயம் உடைந்து கிடக்கிறதே ஏன் இதை என்னிடம் சொல்ல வில்லை! நீ வேலை செய்யும் லட்சணம் இது தானா பிரம்மன் கத்தினார். சங்குகர்ணன் நடுநடுங்கிக் கொண்டிருந்தான். மன்னிக்கவேண்டும் பிரபோ! தாங்கள் சத்திய லோகத்தில் அன்னை சரஸ்வதி யுடன் அளவளாவிக் கொண்டிருந்த வேளையில் தங்கள் படைப்புக்கலன்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். இந்த மண் கலயத்தை மேல் தட்டில் அடுக்கி வைக்க முயன்ற போது கைதவறி விழுந்து உடைந்து விட்டது. தங்களிடம் இதை எப்படி சொல்வதென தெரியாமல் தவித்தேன். இதை உடைத்த தற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றவனாய் காலில் விழுந்தான். பிரம்மனின் சீற்றம் தணிய வில்லை. ஏனடா! பணியில் இருப்பவன் எதிலும் கவனமாக இருக்க வேண்டாமா! மண் கலயத்தை தரையில் வைப்பது மற்ற உலோகக் கலன்களை மேலடுக்கில் வைப்பது என்ற பாலபாடத்தை கூட நீ அறியவில்லையாயின் எனது ஏவலாளாக இருக்கும் தகுதியை இழந்து விட்டாய். குறிப்பாக பக்தி மார்க்கத்தில் இருப்பவன் தன் கடமைகளை ஒழுங்காகச் செய்யத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். சோதனைகளைத் தாண்டும் வல்லமையுள்ளவனாக இருக்க வேண்டும். எனவே நீ பூலோகத்தில் கடவுள் என்றால் நான் தான் என தன்னைத் தானே பெருமை பாராட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாத்திகனின் மகனாகப் பிற. அவனோடு சேர்ந்திருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள் என்று சாபமிட்டார். பிரபோ! எனக்கு தாங்கள் தரும் தண்டனை கொடுமையானது. என்னை இங்கேயே அழித்து விடுங்கள். நான் சாம்பலாகவேனும் இந்த பிரம்மலோகத்தில் கிடக்கிறேன் எனக் கதறினான். அவனது கதறல் கேட்டு பிரம்மன் மனம் இரங்கினார்.

சங்குகர்ணா! காரணகாரியங்கள் இல்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. உலகவுயிர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பவன் நானே! இத்தனை நாளும் எனது வேலையாளாக இருக்க வேண்டும் என்பது உன்விதி. இனி நீ பூலோகத்தில் இருக்க வேண்டும் என்ற எழுத்தை என்னாலோ மற்ற தேவர்களாலோ மாற்ற இயலாது. தலையெழுத்தை அனுபவித்தே தீரவேண்டும். நான் சொன்னபடி பூலோக சோதனையில் வெற்றி பெற்ற பின் என்னை மீண்டும் வந்தடைவாய் என்று ஆசி வழங்கினார். சங்குகர்ணன் அவருக்கு நன்றி தெரிவித்து நமஸ்கரித்தான். இந்நிலையில் பூலோகத்தில் இரண்யகசிபு என்ற மன்னன் ஆட்சி செலுத்தி வந்தான். வைகுண்டத்தைக் காவல் காத்த இவன் விஷ்ணுவை வழிபட வந்த முனிவர்களை அவமதித்ததால் அவரது சாபம் பெற்று பூமியில் மன்னனாகப் பிறந்தவன். அவன் செய்த தவறுக்கு நூறு பிறவி நல்லது செய்தோ அல்லது மூன்று பிறவிகள் நாராயணனுக்கு எதிராக தீமை செய்தோ மீண்டும் வைகுண்டத்தை அடையலாம் என்பது சாபம். காலம் குறைவாக இருந்ததால், கெட்டதை தேர்ந்தெடுத்தான் அந்த காவலன். அதன் பலனாக இரண்யனாக பிறந்து நாராயணனுக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டிருந்தான். தானே கடவுள் என்று கூறி ஓம் இரண்யாய நமஹ என்றே நாட்டு மக்கள் சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான். அவ்வாறு சொல்லாதவர்களின் சிரம் துண்டிக்கப்படும் என்று கட்டளை போட்டான். இந்த கொடுமைக்கார மன்னனின் மகனாகப் பிறந்தான் சங்குகர்ணன். இப்பிறவியில் சங்குகர்ணனுக்கு பிரகலாதன் என்று பெயர் சூட்டப்பட்டது. பிரகலாதன் பிறவியில் இருந்தே நாராயண பக்தனாகத் திகழ்ந்தான். இது இரணியனுக்குப் பிடிக்க வில்லை. பெற்ற பிள்ளையைத் தன் வழிக்கு கொண்டு வர செய்த முயற்சிகள் வீணாயின. இறுதியில் நாராயணனை நேரில் வரச்செய்ய முடியுமா எனக் கேட்டபோது நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து தூணிலிருந்து வெளிப்பட்டார். அவருடன் இரணியன் போரிட்டான். போரின் இறுதியில் அவன் மாய்ந்தான். பின்பு பிரகலாதனை நாராயண மூர்த்தி அந்நாட்டின் அரசனாக் கினார்.

பிரகலாதனின் காலத்தில் மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர். அவன் அனுஷ்டிகம், சாத்வீகம் என்ற இருவகையான புண்ணியங்களைச் சேர்த்தான். அனுஷ்டிகம் என்பது தர்மம் செய்வதால் வரக்கூடியது. சாத்வீகம் என்பது ஹிம்சை செய்தவரிடமும் அஹிம்சையைக் காட்டுவதால் கிடைக்கக்கூடியது. முந்தைய புண்ணியத்தால் செல்வம் பெருகும். வாழ் நாள் கூடும். பிந்தைய புண்ணியம் பிறப்பற்ற நிலையை ஏற்படுத்தும் இரக்க மனம் கொண்ட பிரகலாதன் இரண்டு விதமான புண்ணியங்களையும் அளவுக்கதிகமாகச் சேர்த்து விட்டான். அவன் பிரம்மனை வணங்கி தெய்வமே! தாங்கள் எனக்கிட்ட சாபம் தீரும் காலம் வந்து விட்டதா? என மனமுருகிக் கேட்டான். பிரம்மன் அவன் முன்பு தோன்றி சங்குகர்ணா! நீ இப்பிறவியில் அளவுக்கதிகமாக புண்ணியத்தை சேர்த்து விட்டாய். இவ்வாறு புண்ணியம் செய்பவர்கள் அந்த புண்ணியத்திற்குரிய பலன்களை பூமியில் இருந்து அனுபவிக்க வேண்டும். உலகின் சுகமான இன்பங்களை அனுபவித்த பிறகே பிரம்மலோகம் வர முடியும் என்றார். சங்குகர்ணன் அவரிடம் சுவாமி! அப்படியானால் எனது புண்ணியங்களைத் தீர்க்கும் வழி யாது? என்றான். நீ அடுத்த பிறவியிலும் மன்னனாகவே பிறப்பாய். இப்பிறவியில் மகா விஷ்ணுவின் பக்தனாக இருந்த நீ அடுத்த பிறவியில் பாலிகன் என்ற பெயரில் பிறந்து அவருக்கு எதிராக செயல்படும் மக்களுக்கு ஆதரவாக இருப்பாய். எனவே உன் புண்ணியத்தின் பெரும்பகுதி கரையும். அதன் பிறகும் நீ சேர்த்த புண்ணியங்களின் விளைவை கலியுகத்தில் தான் தீர்ப்பாய் என்று அருள் பாலித்து மறைந்தார். பிரகலாதனாய் பிறந்த சங்குகர்ணன் இப்பிறவியில் பாலிகன் என்ற மன்னனாகப் பிறந்தான். கவுரவர்களின் நண்பனாக வேண்டிய சூழல் இவனுக்கு ஏற்பட்டது. குருக்ஷேத்திர யுத்தத்தில் இவன் கவுரவர்களுடன் சேர்ந்து பகவான் கிருஷ்ணரின் நண்பர்களான பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டு அழிந்தான். அடுத்த யுகமான கலியுகத்தில் பாலிகனின் அவதாரம் உலகமே வியக்கக்கூடியதாக இருந்தது.

தொடரும்