நாகரத்தினம்மாளும் தியாகராஜ ஆராதனையும் & வரலாறும் {பகுதி - மூன்று}
பெரிய கட்சியில் அவரது நண்பர்கள் பலர் இருந்ததால் நாகரத்தினம்மாள் அந்தக் கட்சியின் ஆதரவை முதலிலேயே வென்று விட்டார். சமாதி இருந்த இடம் ராஜா ராமண்ணாஜி சூர்வே என்பவரது வசமிருப்பதாக அவர்கள் மூலமாகத் தெரியவரவே நாகரத்தினம் அவருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். பொது நன்மைக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை விற்பதில் சட்டரீதியான வில்லங்கங்கள் இருந்தாலும் நாகரத்தினம் தனது வசமுள்ள சில சொத்துகளை மாற்றாக வைத்து ஒருவழியாக ஏற்பாடு செய்து விட்டார். இரண்டு கட்சிகளும் நடப்பவற்றை அவநம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தன. நாகரத்தினம்மாள் சற்றும் தாமதியாமல் தனது சொந்தச் செலவிலேயே தியாகராஜரின் கற்சிலை ஒன்றைச் செய்வித்துப் பிருந்தாவனத்தின் முன் பிரதிஷ்டை செய்தார். சின்னக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதை விரும்பவில்லை. சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் இந்தச் சிலையைப் பற்றி மோசமாகப் பேசி வந்தார். பிருந்தாவனத்தை விக்கிரகம் மறைப்பதாக ஒரு சர்ச்சை இன்று வரை தொடர்கிறது. நாகரத்தினம்மாள் அந்த இடத்தை வாங்கி விட்டதால் எவராலும் எதுவும் பேச முடியவில்லை. சமாதியின் மீது கோவில் எழுப்புவதற்கான அடிக்கல் 1921 ஆண்டு அக்டோபர் 27 இல் இடப்பட்டுப் பணியும் தொடங்கியது. இடைப்பட்ட ஆண்டுகளில் இரண்டு கட்சிகளின் ஆராதனை விழாக்களும் நடந்து வந்தன, ஒரே ஒரு வித்தியாசத்துடன். பெரிய கட்சி ஆராதனை நாளன்று தனது விழாவைத் தொடங்கி ஐந்து நாள்கள் நடத்தியது. சின்னக் கட்சி ஆராதனைக்கு நான்கு நாள்கள் முன்பாகத் தனது விழாவைத் தொடங்கி ஆராதனையன்று முடித்துக் கொண்டது. எப்படியோ திருவையாறு மக்களுக்கு ஒன்பது நாள்கள் தொடர்ச்சியாக நல்ல விருந்து கிடைத்தது வயிற்றுக்கும் செவிக்கும்.
கோயில் பணி 1925 இல் முடிந்து கும்பாபிஷேகம் ஜனவரி 7 இல் நடந்தது. ராமுடு பாகவதர் தினசரிப் பூசைக்கான பூசாரியாக நாகரத்தினம்மாளால் நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு சின்னக் கட்சியின் விழா மூன்றாம் நாள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளையும், நாகரத்தினம்மாளும் திருவையாறு சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி ஐயரிடம் சென்று இரண்டு கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து விழாவை நடத்த வில்லை என்றால் அங்குச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எழக்கூடும் என்பதை எடுத்துக் கூறினர். அவர் சின்னக் கட்சியினரைச் சென்று பார்த்து பெரிய கட்சியினரோடும் நாகரத்தினம்மாளோடும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சந்திப்புக்கு ஏற்பாடாகிக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே கோவிந்தசாமிப் பிள்ளைக்கும், வைத்தியநாத ஐயருக்கும் தகராறு மூண்டதால் இரு கட்சியினரும் பரஸ்பரம் விழாக் கொண்டாட்டங்களை நடக்க விடுகிறேனா பார் என்று மிரட்டிக் கொண்டார்கள். அன்று மாலை சின்னக் கட்சியினர் வைத்தியநாத ஐயர் அரியக்குடி [அவர் அப்போது அந்தக் கட்சிக்கு வழி நடத்துபவராக மாறியிருந்தார்] இருவரின் தலைமையில் திருவையாறு மாஜிஸ்திரேட் ஏ.வி. சுப்பையாவைச் சந்தித்து ஆராதனை விழா நடக்கும் மறுநாள் 'பந்தோபஸ்து' தரும்படி கேட்டுக் கொண்டனர். மாஜிஸ்திரேட் இரண்டு கட்சியிரையும் அழைத்து ஆராதனையன்று காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் பெரிய கட்சி தனது பூஜைகளை முடித்துக் கொள்ள வேண்டும். சின்னக் கட்சியினர் ஒன்பது மணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை பூஜை செய்வதற்குச் சமாதியை அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் உத்தரவு இட்டார். எல்லாம் சுமுகமாக நடப்பதற்காகப் போலீஸ் காவலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மறுநாள் நாகரத்தினம்மாளும் கோவிந்தசாமிப் பிள்ளையும் ராமுடு பாகவதரைப் பெரிய கட்சியின் பூஜையை ஒன்பது மணிக்குள் முடிக்கச் சொல்லி சமாதிக் கோவில் கதவைப் பூட்டிச் சாவியை அவரிடம் கொடுத்து அனுப்பி விட்டனர். பூஜைக்காக வந்த சின்னக் கட்சியினர் போலீஸை அழைத்தனர். போலீஸ் பூட்டை உடைக்க உத்தர விட்டது. ஆனால் ராமுடு பாகவதர் சமயத்துக்கு வந்து அவரே கதவைத் திறந்து விட்டார். மேலும் தான் சின்னக் கட்சியின் பூஜைக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டேன் என்று எழுத்து மூலமாக மாஜிஸ்திரேட்டுக்கு உறுதி மொழியும் அளித்தார். போலீஸ் சமாதி இருந்த இடத்தில் நுழைந்து பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தது. 1926 இல் சின்னக் கட்சி தனது ஆராதனை விழாவைப் புஷ்ய கல்யாண மண்டபத்திலிருந்து சென்ட்ரல் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றியது. அந்த ஆண்டு நாகரத்தினம்மாள் சமாதி தனக்குப் பாத்தியப்பட்டது என்றும் தன்னால் நியமிக்கப் பட்டவரைத் தவிர யாரும் பூஜை செய்யக் கூடாது என்றும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இரு கட்சியினரின் ஆராதனை விழாக்களும் முன்பு போலத் தொடர்ந்தன.
நாகரத்தினம்மாள் சின்னக் கட்சியோடு மோதிக் கொண்டது போல் பெரிய கட்சியோடும் உறவை முறித்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. 1927இல் பெரிய கட்சி நடத்திய ஒர் இசை அஞ்சலி விழாவில் கலந்து கொள்ள வந்த நாகரத்தினம்மாள் பாடுவதற்காக மேடையேறினார். ஆனால் பக்கவாத்தியக்காரர்கள் பெண்களுக்கு சமாதிக்கு முன்பு பாட அனுமதியில்லை என்று கூறி வாத்தியங்களைக் கீழே வைத்து விட்டனர். கோப முற்று வெளியேறிய நாகரத்தினம்மாள் சொந்தமாகவே விழா எடுக்கத் தீர்மானித்தார். இப்படியாக பெங்களூர் நாகரத்தினம்மாள் கட்சி ஒரு மூன்றாம் அணியாக உருவெடுத்து பெரிய கட்சி விழா எடுத்த அதே நாள்களில் சமாதியின் பின்னால் விழா நடத்தத் தொடங்கியது. பெண்களும் இளம் இசைக் கலைஞர்களும் ஊக்குவிக்கப்பட்டனர். மற்ற இரு கட்சிகளின் விழாக்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டு இந்தக் கட்சியின் விழாகளைகட்டியது. தனது கட்சியின் விழாக்களுக்கெல்லாம் நாகரத்தினம்மாள் தன் கைப்பணத்தைச் செலவழித்து வந்தார். இறுதியாகத் தன் சென்னை வீட்டை விற்று விட்டு 1930 இல் நிரந்தரமாகத் திருவையாறுக்குக் குடிவந்து விட்டார். மேலும் ஒவ்வோர் ஆண்டும் நன்கொடை வசூல் செய்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்றார். தனது பருத்த உடலையும் தூக்கிக்கொண்டு தொலை தூரங்களுக்குக்கூட ஆராதனை விழா நிதி திரட்டு வதற்காகத் தளராமல் சென்று வந்தார்.
1930 இல் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளைக்கு மாரடைப்பு வந்து அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக நலியத் தொடங்கியது. 1931இல் அவர் இறப்பதற்கு முன்னால் பெரிய கட்சியின் ஆராதனை விழாவை ஏற்று நடத்தும் பொறுப்பைத் திருவீழிமிழலைச் சகோதரர்கள் வசம் ஒப்படைத்தார். நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற வித்வான்கள் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். காஞ்சிபுரம் நாயனா பிள்ளையும் 1934 இல் அவர் மரணமடையும் வரையிலும் முக்கியப் பங்கு வகித்துவந்தார். நாடகக் கம்பெனிகளான தஞ்சாவூர் சுதர்ஸன சபா நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகக் குழு போன்றவை பெரிய கட்சி ஆராதனை விழாவில் பங்கேற்றன. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விழா நல்ல முறையில் நடந்து வந்தது. ஆனால் நாகரத் தினம்மாள் நடத்திய விழா தான் வெகு விமரிசையாக நடந்தது. 1938 இல் நாகரத்தினம்மாள் சமாதியைச் சுற்றியுள்ள இடங்களையும் விலை கொடுத்து வாங்கித் தியாகராஜ ஆசிரமம் என்று அதற்குப் பெயர் கொடுத்தார். திருவையாறு வக்கீல் சி.வி. ராஜகோபாலாச்சாரி போன்ற பிரமுகர்களும் அவரது விழாக்களில் பங்கேற்றனர். இந்தச் சூழ்நிலையில் பெரிய கட்சி, சிறிய கட்சியோடு இணைவது பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது.
சின்னக் கட்சியிலும் இதே உணர்வு தான் இருந்தது. அக்கட்சியில் நிதி திரட்டுவதிலும் ஆராதனை விழாவிலும் முக்கியப் பங்காற்றிவந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் போன்ற இளம் கலைஞர்கள் ஆராதனை விழாவை இணைந்து நடத்தும் படி வலியுறுத்தினர். மூத்த கலைஞர்களான மகாராஜபுரம் விஸ்நாத ஐயரும், பல்லடம் சஞ்சீவராவும் கூட இதே போன்ற எண்ணம் கொண்டிருந்தனர். சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் இதில் ஈடுபாடு காட்டவில்லை என்றாலும் வயதாகிக் கொண்டு வந்ததால் அவருக்கும் விழாவை நடத்துவது சிரமமாக இருந்தது. 1939 இல் காவேரி டெல்டா பகுதியின் தனி அலுவலராகப் பொறுப்பேற்ற எஸ்.ஒய். கிருஷ்ண சாமி, ஐ.சி.எஸ். ஒன்று பட்ட ஆராதனை விழா நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரமான ஆர்வம் காட்டினார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் 1940 ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். நாகரத்தினம்மாள் அணி சார்பில் நாகரத்தினம்மாளும் சி.வி. ராஜகோபாலாச்சாரியும், பெரிய கட்சி சார்பில் திருவீழிமிழலைச் சகோதரர்களும், சின்னக் கட்சி சார்பில் முசிறியும் செம்மாங்குடியும் கலந்து கொண்டனர். ஆராதனை விழாவை நடத்துவதற்காகப் புதியதோர் அமைப்பை ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. சூலமங்கலம் வைத்தியநாத பாகவதருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அவர் கீழ்க்காணும் நிபந்தனைகள் விதித்து இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொண்டார். அ.சின்னக் கட்சியினரின் பூஜை செய்யும் உரிமையை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் ஆராதனை நாளன்று ராஜகோபால பாகவதர் சமாதியில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். ஆ. நாதஸ்வரக் கலைஞர்களை மேடையில் கச்சேரி நடத்த அனுமதிக்கக் கூடாது. இ. பிராமணர்களுக்கான போஜனம் சின்னக் கட்சியின் வழிமுறைப்படி நடத்தப்பட வேண்டும்.
தியாகப் பிரம்ம மஹோத்சவ சபா 1940 ஜனவரியில் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு ஆராதனையையும் அது நடத்தியது. இரு அணிகளும் இணைந்ததைக் கேள்விப்பட்ட ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதரும் ஆராதனையில் கலந்து கொண்டார். சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் ஹரிகதை நடத்திக்கொண்டிருந்த போது நாகரத்தினம்மாள் மேடையில் ஏறி அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தார். கூட்டம் கரகோஷம் செய்து வரவேற்றது. அந்த ஆண்டு ஆராதனை விழா மிகவும் வெற்றிகரமாக நடந்தது. பெண்கள் மேடையேற அனுமதிக்கப்பட்டனர். நாதஸ்வர வித்வான்களை மேடையேற்ற அனுமதிக்காததைக் கண்டித்து டி.என். ராஜரத்தினம் பிள்ளை தனது எதிர்ப்பைக் காட்டியதால் அந்த நிபந்தனையும் தளர்த்தப்பட்டது. சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் வைதீகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்த வருடங்களில் நடந்த ஆராதனை விழாக்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. முசிறி போன்ற பெரிய வித்வான்கள் பங்கெடுத்துக் கொண்ட போதும் 1934 இல் தியாகராஜரைப் போல அவரும் சன்னியாசம் வாங்கிக் கொண்டார். அவரைப் போலவே மூன்று நாள்கள் கழித்துக் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான சூலமங்கலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 1941 இல் தான் பஞ்சரத்ன கீர்த்தனைகளை அனைவருமாகப் பாடும் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தபட்டது. அதற்கு முன்பெல்லாம் பல்லடம் சஞ்சீவராவ் பைரவி ராகத்தில் அமைந்த 'சேதுலரா'வை மட்டும் வாசிப்பார். இந்த மரபு இன்றும் தொடர்கிறது. இன்றும் கூடப் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடத் தொடங்குவதற்கு முன் புல்லாங்குழல் கலைஞர்கள் அந்தக் கிருதியை இசைப்பார்கள்.
திருவையாற்றைத் தனது இருப்பிடமாக மாற்றிக்கொண்ட நாகரத்தினம்மாள் தனது நாள்களை அவரது குருவான தியாகராஜரைத் தியானிப்பதிலேயே கழித்தார். உள்ளூர் மக்கள் அவரை ஒரு ரிஷியைப் போலப் பாவித்தார்கள். 1946 இல் சித்தூர் வி. நாகையா தியாகராஜரின் வாழ்க்கையை அடிப்படையாகவைத்துத் தியாகையா என்ற படத்தை எடுத்தார். படம் நல்ல வசூல் கண்டது. நாகரத்தினம்மாளின் விருப்பத்திற்கிணங்க நாகையா திருவையாறுக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அந்தப் படத்திலிருந்து கிடைத்த வருமானத்தில் 'தியாகராஜ நிலையம்' என்ற சத்திரத்தைக் கட்டினார். 1948 ஜனவரி மூன்றாம் ஆம் தேதி நாகரத்தினம்மாள் தனது உயிலை எழுதி வைத்தார். தனது எல்லாச் சொத்துகளையும் நகைகள் உட்பட தியாகராஜர் சமாதியின் பரிபாலனத்திற்காக அளித்திருந்தார். வித்யா சுந்தரி பெங்களூர் நாகரத்தினம்மாள் டிரஸ்ட் அந்தச் சமாதிக்கும் அதைச் சுற்றியிருந்த நிலங்களுக்கும் உரிமை பெற்றது. அவர் தனது உயிலில் பெண் கலைஞர்களோ பாடகர்களோ தேவதாசிகள் உட்பட சமாதியில் நிகழ்ச்சிகள் நடத்துவதை எவரும் தடை செய்ய முயலக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். 1949 இல் விஜய நகரம் மகாராணி வித்தியாவதி தேவி அவருக்குத்தியாகராஜ சேவா சந்தா என்ற பட்டத்தை அளித்தார்.
1952ஆம் ஆண்டு மே மாதம்19ஆம் தேதி நாகரத்தினம்மாள் தனக்கு நெஞ்சு வலிப்பது போல் இருப்பதாகக் கூறினார். அப்படியே அவர் மூச்சும் ஒடுங்கியது. அவரது உடல் ஊர்வலமாகத் தியாகராஜர் சமாதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதன் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவரது சிலை ஒன்று நிறுவப்பட்டு மண்டபமும் கட்டப்பட்டது. அந்தச் சிலை தியாகராஜர் சமாதியைப் பார்த்த படி அமைக்கப்பட்டது. இந்த மண்டபத்தின் எதிரில் தான் இன்று வித்வான்கள் ஆராதனையின் போது இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். கர்நாடகத்தைச் சேர்ந்த கோலார் ராஜம்மாள் என்ற தேவதாசி தியாகராஜரின் சமாதிக்கு மின் வசதியை அமைத்துக் கொடுத்தார். தியாகராஜ ஆராதனை விழா இன்று உலகம் முழுவதையும் கவரும் விழா. இதற்கெல்லாம் காரணம் சில இசைக் கலைஞர்களும் ஒரு பெண்ணும். அந்தப் பெண் நாகரத்தினம்மாள்.
ஆராதனை விழாக் கொண்டாட்டங்கள் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டாலும் பூஜைகள் தனித்தனியாக தான் செய்யப்படுகின்றன. ஆகையால் இன்றும் கூட ஆராதனை நாளன்று தியாகராஜருக்கு மூன்று அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. முதலாவது பழைய சின்னக் கட்சியில் இன்று இருப்பவர்களும் ராஜகோபால பாகவதரின் வழித் தோன்றல்களுமாகச் செய்வது இரண்டாவது பெங்களூர் நாகரத்தினம்மாள் டிரஸ்டின் சார்பாக நடைபெறுவது. இறுதியாக தியாகப் பிரம்ம மஹோத்சவ சபாவினால் செய்யப்படுவது. பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்படுவது இந்த அபிஷேகத்தின் போது தான். நாம் ஒவ்வொரு ஆண்டும் தொலைக்காட்சியில் காண்பதும் இதைத்தான்.
🌺சுபம்🌺