செவ்வாய், 22 அக்டோபர், 2024

ஸ்ரீகுருவாயூரப்பனின் மகிமை

ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண பட்டதிரியை நாம் அறிவோம். 

நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது.

தம் முன் தோன்றிய ஸ்ரீ குருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம் என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார்.
நெய்ப் பாயசம்” என்றார் குருவாயூரப்பன்.

ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது?

‘‘அவலும் வெல்லமும் போதுமே!”
‘‘சரி பகவானே… அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால்?”

‘‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு. ஏற்றுக் கொள்கிறேன்.”

‘‘மன்னிக்க வேண்டும் பகவானே… தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?”

‘‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்!”

‘‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்?” – பட்டதிரியின் குரல் தழைந்து போகிறது.

‘‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா… அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும்” என்று பகவான் சொன்னதும், ‘ஓ’வென்று கதறி அழுதே விட்டார் பட்டதிரி.
தெய்வங்கள், தன் பக்தர்களிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை. எதிர்பார்ப்பது எல்லாம் உண்மையான பக்தி ஒன்றைத்தான்!பக்தி செய்வோம்...

பவுர்ணமி கிரிவலம் தோன்றியது எப்படி?

பவுர்ணமி கிரிவலம் தோன்றியது எப்படி?

பக்தர்களை தன்னை நோக்கி ஈர்த்து, அவர்களுக்கு ஞானமும் முக்தியும், அருளும் திருவண்ணாமலை தலத்தில், கைமேல் பலன் தரும் வழிபாடாக கிரிவல வழிபாடு திகழ்கிறது.

திருவண்ணாமலையில் வருடத்தின் அனைத்து நாட்களும் கிரிவலம் சென்று வழிபடலாம் என்றாலும், பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்து வணங்குவதையே பெரும்பாலான பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடும் வழக்கம் எப்படி ஏற்பட்டடு, முதன் முதலில் கிரிவலம் சென்றது யார், எதற்காக கிரிவலம் சென்றார் என்ற புராண கதையை திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

○ *திருவண்ணாமலை* *கிரிவலம் :*

திருவண்ணாமலை என்றதுமே நினைவிற்கு வருவது கிரிவல வழிபாடு தான். எத்தனையோ கோவில்களில் மலையை வலம் வந்து வழிபடும் முறை இருந்தாலும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் மட்டுமே மகத்தான பலன்களும், முக்தியும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இங்கு மட்டுமே சிவனே மலையாக அமர்ந்து காட்சி தருவதால், மலையை வலம் வந்து வணங்குவது, சிவனை வலம் வந்து வணங்குவதற்கு இணையானதாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் எப்படி உருவானது என்பதற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. கிரிவலம் மேற்கொள்ளும் அனைத்து பக்தர்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

○ *மலையாக அமர்ந்த* *சிவன் :*

ஜோதி வடிவமாக தோன்றி விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் காட்சி அளித்த பின் மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார் என புராணங்கள் சொல்கின்றன. அவர் நடத்திய ஒரு திருவிளையாடல் தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது.

☆அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்றது பார்வதி தேவி ஆவார்.☆

லிங்க வழிபாடு, லிங்கோத்பவர் வழிபாடு தோன்றிதும் திருவண்ணாமலையில் தான் என்பதால் இது சிவனுக்கு விருப்பமான தலமாகவும் சொல்லப்படுகிறது.

○ *பார்வதிக்கு சிவன்* *அளித்த* *வரம் :*

ஒரு முறை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் துன்பப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்ட து. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார். அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவ பெருமான், அவருக்கு காட்சி கொடுத்தார். வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பார்வதி தேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.

○முதலில் கிரிவலம் வந்தவர் :

உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறினார் அதை ஏற்றுக் கொண்ட பார்வதி தேவி திருவண்ணாமலையில் ஈசனே மலையாக வீற்றிருப்பதால் அந்த மலையை சுற்ற தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.

அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்திலும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர் வதித்தார். பின்பு தனது உடலின் இட பாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.

○பார்வதி சிவனிடம் வைத்த கோரிக்கை :

அப்போது பார்வதிதேவி, 'நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவல வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்மதித்தார்.

இந்த முறையில் தான் திருவண்ணாமலையில் கிரிவலம் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவு ள்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணாமலையாரின் அருளை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

பட்டீஸ்வரம் துர்கை...

பட்டீஸ்வரம் துர்கை...

கும்பகோணத்தை கோயில் நகரம் என்பார்கள். கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தாராசுரம். இதையடுத்து உள்ளது பட்டீஸ்வரம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அற்புதத் திருத்தலம்.

காமதேனுவின் மகள் பசு பட்டி. உமையவள், சாப விமோசனம் பெறுவதற்காக, இங்கே தவமிருந்தாள். சிவபூஜை செய்தாள். பார்வதி தேவிக்கு உதவுவதற்காக பட்டியும் வந்து பணிவிடைகள் செய்தாள். பால் சுரந்து தந்தாள். மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத் திருமேனிக்கு  பாலபிஷேகம் செய்து, பூஜித்து வந்தாள் பார்வதி. பட்டி வழிபட்ட தலம் என்பதால், இந்த ஊருக்கு பட்டீஸ்வரம் எனப்பெயர் அமைந்தது.

காமதேனு உள்ளிட்ட பசுக்கள் வழிபட்டதால், சிவபெருமானுக்கு தேனுபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. பிரமாண்டமான சிவாலயம் என்றாலும் இங்கே துர்கையின் ராஜ்ஜியம்தான். பொதுவாகவே, எல்லா சிவாலயங்களிலும்  கோஷ்டத்தில்தான் தரிசனம் தருவாள் துர்கை. மகாவிஷ்ணு ஆலயங்களிலும் கோஷ்டத்தில்தான் இருப்பாள். அங்கே அவளுக்கு விஷ்ணு துர்கை என திருநாமம் உண்டு.

ஆனால் இங்கே, தனிச்சந்நிதியில், அற்புதமாகக் காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலத்தில் ஒய்யாரமாக அழகு ததும்பக் காட்சி தருகிறாள். மூன்று கண்களைக் கொண்டிருக்கிறாள் துர்கை. எட்டு திருக்கரங்களுடன், எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்தபடி காட்சி தருகிறாள். நிமிர்ந்த கோலம், நின்றகோலம்.

எட்டு திருக்கரங்களின் ஒன்றில் அபயஹஸ்தம் காட்டுகிறாள். மற்றொரு கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்திருக்கிறாள். ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருக்கிறாள். ஆனால், சாந்தமாக காட்சி தருகிறாள். அவளின் இதழோரம் ததும்பும் புன்னகையே அவளை சாந்த சொரூபினி எனச் சொல்கிறது.

மிகுந்த வரப்பிரசாதி இந்த பட்டீஸ்வரம் துர்கை. ஆதித்த கரிகாலனுக்கு இஷ்ட தெய்வமாகவும் சோழர்களின் குலதெய்வமாகவும் திகழ்ந்தாள் என்றும் வரலாறு விவரிக்கிறது. தேனுபுரீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்ட போது, துர்கைக்கு இப்படியான சந்நிதி இல்லை என்றும் சொல்வார்கள். பின்னர் அடுத்தடுத்து வந்த காலகட்டங்களில், துர்கையை இங்கே ஸ்தாபித்து, தனிக்கோயிலாகவே எழுப்பி வழிபடத் தொடங்கினார்கள்.

பட்டீஸ்வரமும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் காய்ந்த பூமியாகிவிட்டதாம். மழை தப்பியதால் இந்த நிலையாம். எல்லோரும் வறுமையில் தவித்து மருகினார்கள். ஊரே கூடிப் பேசியது. பின்னர், பட்டீஸ்வரம் துர்கையின் சந்நிதிக்கு ஓடிவந்து, அவளிடம் முறையிட்டது அன்றிரவே, நல்ல மழை பெய்தது. காடுகரையெல்லாம் நிறைந்தது. மக்கள் மகிழ்ந்து போனார்கள். அன்று முதல், துர்கையின் சாந்நித்தியத்தை, சோழ தேசம் முழுவதும் தெரிந்து தரிசிக்க வந்தது. கேட்டதைத் தரும் அன்னை பட்டீஸ்வரம் துர்கை என்று இன்றைக்கும் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.
பட்டீஸ்வரம் துர்கைக்கு, தாமரை ரொம்பவே இஷ்டம். தாமரை மலர்கள் அல்லது அரளி மாலை கொண்டு துர்கைக்கு சார்த்துவது மிகச் சிறந்தது. வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் என்றிருந்தால், உடனே பட்டீஸ்வரம் துர்கையை மனதார நினைத்து தீபமேற்றினால் போதும். நெய் தீபம் அல்லது எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அந்த தீபத்தையே துர்கையாக நினைத்து வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.

குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். பிரிந்த கணவனும் மனைவியும் ஒன்று சேருவார்கள். இதுவரை இருந்த அமைதியற்ற சூழல் மாறி, அமைதியும் ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும். தனம், தானியம் பெருக்கித் தருவாள் துர்க்கை.

மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நடக்க வேண்டும் என்றோ வீடு வாசல் வாங்கவேண்டும் என்றோ குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றோ உங்கள்  பிரார்த்தனை இருந்தால் வீட்டில், ராகுகால வேளையில், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில் தீபமேற்றுங்கள்.

மஞ்சள் துணியில் ஒருரூபாய் முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதை பூஜையறையில் வைத்து, தினமும் குங்கும அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருமணம் இனிதே நடந்தேறும். வீடு வாசல் வாங்கும் நிலை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள்.

பின்னர், பட்டீஸ்வரம் செல்லும்போது, துர்கைக்கு அந்தக் காணிக்கையை, மஞ்சள் துணியை அப்படியே உண்டியலில் செலுத்திவிடுங்கள். சாந்த மனசுக்காரி துர்கையை வழிபடுங்கள்; சந்தோஷ வாழ்வைத் தந்திடுவாள் பட்டீஸ்வரம் நாயகி.

*dg*

காஞ்சி வரதர்...

காஞ்சி வரதர்...

முன்னொரு காலத்தில் மும்மூர்த்திகள் உலக நன்மைக்காக செய்த  யாகத்தில், பங்கு கொண்ட தேவர்களுக்குக் கேட்ட வரம் எல்லாம் கொடுத்ததால், மகா விஷ்ணுவுக்கு வரதராஜர் எனப் பெயராயிற்று.  

யாகத்தில் அளித்த அவர் பாகத்தை ஒரு  சித்திரை மாத திருவோண நன்னாளில் நாராயணன் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கர,கதையுடன் தோன்றி ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீ மந் நாராயணன் புண்ணியக்கோடி விமானத்துடன் இங்கு எழுந்தருளிய நன்னாளே சித்திரை மாதத்து திருவோண நாளாக உள்ளது.


அந்நாளில் தேவர்கள்  ஒன்று சேர்ந்து இத்தலத்தில் நித்திய  வாசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாராயணன்  சம்மதித்தார். உடன் ஐராவதம்  என்ற யானையே மலை வடிவு கொண்டு நாராயணனைத் தாங்கி  நின்றது.  
இதனால் இக்கோயிலுக்கு அத்திகிரி என்று மற்றொரு பெயரும் உண்டு. பிரம்மா செய்த யாகத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜர் என அழைக்கப்படுகிறார்.

அதன்படி, அத்திகிரி என வழங்கப்படும் பெருமாள் சந்நிதிக்குச் செல்லும்போது 24 படிகளை கடந்துதான் செல்ல வேண்டும். இவை காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகிறது.

வாசுகி நாகத்தை காப்பாற்ற விஷம் அருந்திய நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்...

வாசுகி நாகத்தை காப்பாற்ற விஷம் அருந்திய நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்...

எந்தக் காலத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பழைமையான சில கோயில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்.

இந்தத் திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நஞ்சுண்டேஸ்வரர் எனவும் தாயார் லோகநாயகி என்ற திருநாமத்தோடும் பக்தர்களால் அழைக்கப்படுகின்றனர். இந்தக் கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் விளங்கி வருகிறது. குறிப்பாக, இந்தத் திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவலிங்கம் மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல் சற்று பட்டையாக இருக்கும். குறிப்பாக, இந்த சிவலிங்கம் செந்நிறமாகக் காட்சி அளிக்கிறது. இது மிகவும் சிறப்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மூலவர் சிவலிங்கத்தின் பிரதான ஆவுடையார் மட்டுமல்லாமல், சிவலிங்கத்தை சுற்றி தரைப்பகுதியில் ஆவுடையார் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் இரண்டு ஆவுடையார்கள் மீது காட்சி கொடுத்து வருகிறார்.

குறிப்பாக, இந்தத் திருக்கோயிலில் சிவபெருமான் சன்னிதியை சுற்றி எட்டு யானைகள் கோஷ்டத்தில் சிவபெருமானை தாங்கிப் பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அமைப்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் காணப்படும்.

அமுதம் பெறுவதற்காக தேவர்கள் மற்றும் அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது  வாசுகி நாகம் மத்தாகப் பயன்படுத்தப்பட்டது. அதிக உழைப்பின் காரணமாக வேதனையுற்ற வாசுகி நாகம் தனது விஷத்தை உமிழ்ந்தது. அந்த விஷம் பாற்கடலில் பரவிய காரணத்தினால் தேவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

தேவர்களைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமான் வாசுகி நாகம் கக்கிய விஷத்தை விழுங்கினார். அப்போது அவரது உடல் நீல நிறமாக மாறத் தொடங்கியது. இதைக் கண்ட பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்தைப் பிடித்து விஷம் உடலுக்கு செல்லாமல் நிறுத்திவிட்டார்.

வாசுகி நாகத்தின் விஷமானது சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி விட்டது. இந்த நிகழ்வை குறிப்பிடுவதற்காகவே சிவபெருமானுக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. தேவர்களின் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் விஷத்தை உண்ட காரணத்தினால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நஞ்சுண்டேஸ்வரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார். அதேபோல் இவருக்கு திருநீலகண்டன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

தினமும் வரும் பிரதோஷ வேளையிலும் (4.30 - 6) பிரதோஷ தினத்தன்றும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயில் நீலகண்ட பெருமானை தரிசித்து தீர்வு பெறுகின்றனர். இக்கோயில் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் காரமடையில் உள்ளது.