சிகண்டினி
துருபதனின் மகளான சிகண்டினி இப்போது சிகண்டி! இந்த சிகண்டி அழகிய கந்தர்வன் வடிவில் அடுத்து நேராகச் சென்றது புத்புதகம் எனும் இடத்திற்கு தான்..! தன் தோற்றத்தை அளித்த கந்தர்வனே, அந்த இடத்திற்கு செல்ல அவனுக்கு வழி காட்டினான். புத்புதகம் வீரர்களை உருவாக்கும் இடம். குறிப்பாக எல்லாவித அஸ்திரங்களையும் பிரயோகிக்க கற்றுத் தரும் ஒரு இடமாகும். அந்த பயிற்சிகளைப் பெற்ற சிகண்டி, வெகு சிக்கிரத்தில் பெரும் வீரனாகி விட்டான். பெரும் வீரனாக மாறி கந்தர்வனுக்கான எழிலோடு ஒரு ஆண் வாரிசாக அவன் துருபத மன்னனை வந்து சந்தித்த போது துருபதனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு ஒரு அளவே இல்லை.இருந்தாலும் இப்போதும் பீஷ்மரை எண்ணி துருபதன் மனம் அச்சப்படவே செய்தது. ஆனால் அந்த அச்சத்தை சிகண்டி போக்கினான். தந்தையே... கவலையை விடுங்கள். விதிப்பாடு என்னை ஆளாக்கிவிட்டது. அந்த மாலையை நான் விளையாட்டாக அணிந்த வேளை இன்று நானொரு மாவீரன். என் வீரத்துக்கு எந்த நாளிலும் இழுக்கு ஏற்படப் போவதில்லை. தைரியமாக இருங்கள். என்று ஆறுதல் கூறினான்.
மகாபாரதத்தின் பெரும் வியப்பிற்கும் சிந்தனைக்கும் உரிய பாத்திரமே சிகண்டினியாக இருந்து பின் மாறிய சிகண்டி!மகாபாரத பாத்திரங்களில் சிகண்டியை போலவே பழிவாங்கவென்றே உருவான பாத்திரம்தான் திருஷ்டத்துய்மன்! பீஷ்மரால் சிகண்டி வந்தது போல, துரோணரால் வந்தவன் இவன்.அதாவது வில்வித்தையில் தலை சிறந்த அர்ஜுனன், ஏகலைவன் போன்ற பெரும் வில்லாளி களின் குருநாதரான துரோணரை பழி வாங்கவென்றே வேள்வி ஒன்றால் பெறப்பட்டவன். இவன் யாரோ அல்ல! பாஞ்சாலி எனப்படும் திரவுபதியின் சகோதரன். இவன் எப்படி வந்தான் என்று பார்ப்போம். துரோணரும், பாஞ்சால அரசன் துருபதனும் நல்ல நண்பர்கள். ஒன்றாக படித்தவர்கள். அப்போது துருபதன் துரோணரிடம், துரோணா! நாளையே நான் பாஞ்சால நாட்டுக்கு அரசனானாலும், உன்னுடனான நட்பை துளியும் பிரிய மாட்டேன். அதுமட்டுமல்ல! என்னுடையது அனைத்தும் உனக்கும் சொந்தம். நான் எதை அனுபவித்தாலும் அதில் சரிபாதி பங்கு உனக்கும் உண்டு. அந்த வகையில், எனது பாஞ்சால நாட்டை நான் ஆளத் தொடங்கும் போது உனக்கும் அதில் பாதியை அளித்து உன்னை அதற்கு அரசனாக்குவேன், என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தான். துரோணரும் அவனது நட்பின் சிறப்பை எண்ணி சந்தோஷப்பட்டார்.நாட்கள் கடந்தது. துருபதனும் பாஞ்சால நாட்டு மன்னன் ஆனான். அப்போது துரோணர் வறுமையின் பிடியில் இருந்தார். அவருக்கு அஸ்வத்தாமன் என்று ஒரு பிள்ளையும் பிறந்து அவனும் பெரும் வீரனாக வளர்ந்திருந்தான். இந்த நிலையில் தனக்காக இல்லாவிட்டாலும் தன் மகனுக்காக பாஞ்சால நாட்டில் பங்கு கேட்டு, துருபதன் முன் சென்று நின்றார். ஆனால் துருபதன் மிக மாறிவிட்டிருந்தான். அரச போகமும் யோகமும் அவன் கண்களைக் கட்டியிருந்தன. துரோணர் வரவும் முதலில் யார் என்றே தெரியாதவன் போல் நடந்து கொண்டான். பின் துரோணரை தெரிந்து கொண்டவன், அடடே, குருகுலத்து நண்பனா? வேதம் படிக்க வேண்டிய நீ இங்கே எங்கே வந்தாய்? என்று கிண்டலாகக் கேட்டான். துரோணருக்கு அப்போதே துருபதன் பழைய நண்பன் இல்லை என்பது புரிந்து விட்டது. இருந்தும் அவன் குருகுலத்தில் செய்து தந்த சத்தியத்தை நினைவுபடுத்தினார். அது நினைவுக்கு வரவும் துருபதனுக்கு சிரிப்புதான் வந்தது. துரோணா! உன்னை நினைத்தால் எனக்கு பரிதாபமாக உள்ளது. பள்ளிப் பிராயத்தில் ஏதோ விளையாட்டாக சொன்னதை இவ்வளவு உறுதியாகவா எடுத்துக் கொள்வது? பாஞ்சால தேசம் என்ன வெட்டித்துண்டு போட்டுத்தர அது என்ன பட்டுத்துணியா? தேசமப்பா.... தேசம்! இந்த தேசத்தை ஒரு க்ஷத்திரியனான நான் ஆளவே பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது.
நீயோ வேதியன். பரத்வாஜ முனிவரின் புத்திரன். தவம்புரிவதை விட்டுவிட்டு நாடாள ஆசைப்படுகிறாயே...! வேடிக்கையப்பா பெரும் வேடிக்கை....என்று இழுக்காக பேசி சிரித்தான். துரோணருக்கு கூச்சம் எடுத்தது. இருந்தும், துருபதா.... உன் சத்தியத்தை நம்பி நான் மோசம் போய் விட்டேன். சத்தியத்தை மதிக்காத பாவத்துக்கு ஆளாகாதே. வாக்கில் நில். உன்னைவிட என்னால் இந்த தேசத்தை நன்றாக ஆளமுடியும், என்றார். ஆனால் துருபதன் கேட்கவில்லை. மாறாக மேலும் அவரை இழிவுபடுத்தி வேண்டுமானால் உனக்கு பொற்காசுகளை பிச்சையிடுகிறேன். பொறுக்கிக் கொள், என்று கைநிறைய காசுகளை அள்ளி துரோணர் முன்வீசி எறிந்தான். எப்போதும் நாம் தாழ்வாக இருக்கும் பொழுதைக் காட்டிலும், உயர்வாக இருக்கும் பொழுதுதான் மிகவே கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம் செயல்களாலேயே நாம் மோசமான வினையை தேடிக் கொள்ள நேரிடும். துரோணர் வரையில் துருபதன் நடந்துகொண்ட விதம் துரோணரை கோபத்தின் உச்சிக்கே கொண்டுசென்றது. துருபதா! உன்னை நான் சும்மாவிடமாட்டேன். வேதியன் என்றா என்னை இகழ்ந்தாய்...? வேதமும் கல்வியும் எப்படி இரு கண்களோ அப்படித்தான் எல்லாமே! நீ தர மறுத்த நாட்டை மட்டுமல்ல! உன்னையே நான் என் அடிமையாக்கிக் காட்டுகிறேன். அப்போது தெரியும் இந்த துரோணாச்சாரி எப்படிப்பட்டவன் என்று...என சபதம் போட்டுவிட்டு சென்று விட்டார்.அடுத்து அவர் ஒரு வனத்தில் சந்தித்தது பாண்டவர்களையும் கவுரவர்களையும் தான்!இருசாரரும் ஒரு இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தர்மரின் மோதிரம் அங்குள்ள கிணற்றில் விழுந்து விட்டது. அதை எப்படி எடுப்பது என்பது தெரியாமல் அவர்கள் விழித்து நின்றபோது, துரோணர் அந்த பக்கமாய் வந்தார். மோதிரம் விழுந்து விட்டதை அறிந்தவர், அர்ஜுனன் வசமிருந்த வில்லையும் அம்பையும் செலுத்தினார். அம்பின் நுனி மோதிரத்தை தன்னுள் பூட்டிக் கொண்டு துரோணர் முன் வந்து விழுந்தது. அதைக் கண்டு தர்மர் முதல் அவ்வளவு பேரும் ஆனந்தப்பட, அர்ஜுனன் துரோணரை அப்போதே தன் குருவாக வரித்துக் கொண்டான். பின், பீஷ்மரிடம் துரோணரை கொண்டு சென்று நிறுத்த அவர் இருசாரருக்கும் குருவாக துரோணரை நியமித்தார். துரோணரும் தான் அறிந்த அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்தார். ஒருநாள் அனைவருக்கும் அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. அர்ஜுனன் ஒருபுறமும், துரியோதனன் மறுபுறமும் துரோணரிடம் தங்களது குருகாணிக்கை என்ன? என்று கேட்டனர். துரோணரும், நான் கேட்பதை நீங்கள் கட்டாயம் தருவீர்களா? என்று பலத்த பீடிகை போட்டார். அர்ஜுனன் வேகமாக முன் வந்து, குருவே! நான் என் உயிரைக் கூட தர சித்தமாக இருக்கிறேன், என்றான். அதைக் கேட்ட துரியோதனனும், குருநாதா.... நானும் ஒன்றும் அர்ஜுனனுக்கு சளைத்தவனில்லை. எதுவேண்டுமானாலும் கேளுங்கள்! தங்கள் காலடியில் அதை வைக்கிறேன், என்றான். அப்போது துரோணர் இருவரிடமும் கேட்டது ஒன்றைத்தான். அதுதான் துருபதனை ஒரு கைதியாக தன் காலடியில் கிடத்துவது என்பதாகும். ஒரு வினாடி இருவருமே அதிர்ந்தாலும், குருநாதரின் விருப்பத்தை நிறைவேற்றத் தயாராயினர்.
முதலில் துரியோதனன் துருபதன் மீது போர் தொடுத்தான். ஆனால், அதில் துருபதன் தான் வெற்றி பெற்றான். அடுத்து அர்ஜுனன் போர் தொடுத்தான். அவனுக்கு தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் என்று சகலரும் பெரிதும் உறுதுணை!போரில் அர்ஜுனன் வெற்றி பெற்றான். துருபதனைக் கைது செய்து தன் ரதத்திலேயே தூக்கிப் போட்டு இழுத்து வந்து துரோணரின் காலடி நோக்கி தள்ளி விட்டான். பின், குருநாதா! இப்போது உங்கள் காலடியில் கிடப்பது துருபதன் மட்டுமல்ல. இவனது பாஞ்சால தேசமும் தான்... நீங்கள் ஒருபாதியைதான் கேட்டீர்கள். ஆனால், முழு தேசத்தையே நான் இப்போது உங்களுக்கு அர்ப்பணித்து விட்டேன், என்றான்துருபதனுக்கும் தன் தவறு புரிந்தது. இருந்த போதிலும் பாண்டவர்களிடம் பிடிபட நேர்ந்து இப்படி காலில் விழுமளவு வந்தது மனதை ரணப்படுத்திவிட்டது. துரோணருக்கும் மனம் கசிந்தது. துருபதா.... என் பால் உனக்கு நட்பில்லாமல் போனாலும், என்னிடம் அது இப்போதும் உள்ளது. நீ செய்யத்தவறியதை நான் இப்போது செய்கிறேன். நீ தராத பாதி நாட்டை நான் உனக்கு தருகிறேன். பெற்றுக் கொள். இனியாவது அகந்தை கொள்ளாமல் தர்ம நெறிகளோடு வாழக் கற்றுக் கொள், என்று துருபதனுக்கு பாஞ்சால நாட்டின் வட பகுதியை தந்து அதற்கு அரசனாகவும் ஆக்கினார். தன் நாடு தனக்கே தானமாக வந்து சேர்ந்தது துருபதனை கொந்தளிக்க வைத்தது. அதுபெரும் கோபமாக மாறியது. அந்த கோபம் துரோணர் மேல்தான் திரும்பியது. துரோணரை வெற்றி கொண்டு பழிக்குபழிவாங்க துருபதன் மனது துடித்தது. துரோணரிடம் இருப்பதோ பிரம்ம தேஜோபலம்! தன்னிடம் இருப்பதோ க்ஷத்திரியபலம்.
க்ஷத்திரிய பலத்துக்கு, பிரம்ம தேஜோபலம் துளியும் ஈடாகாது என்பது துருபதனுக்கு புரிந்தது. இவ்வேளையில் தான் யாஜர், உபயாஜர் என்று இரண்டு பிரம்மரிஷிகளை துருபதன் பார்த்தான். அவர்களிடம் தன் ஆதங்கத்தைச் சொல்லி, பிரம்ம தேஜோபலத்தை வெல்லும் சக்தியை நான் பெற வழிகாட்டுங்கள், என்று கேட்டான். அவர்கள் சவுத்ராமணி எனும் யாகம் செய்யச் சொன்னார்கள். அப்படி ஒரு யாகத்தை உரிய முறையில் செய்தால் யாக பலனாய் மிகுந்த அழகும் அறிவும் வீரமும் உடைய புத்திரன் மட்டுமல்ல, புத்திரியும் தோன்றுவது நிச்சயம், என்றார் யாஜர். யாகமும் முறைப்படி நிகழ்த்தப்பட்டது. இந்த யாகத்தில் ஆகுதியை தேவர்களுக்கு அரசனும் அரசியும் சேர்ந்தே தர வேண்டும். ஆனால் துருபதனின் மனைவியான ப்ருஷதி, தான் இருக்கவேண்டிய இடத்தில் யாஜரையே தன்சார்பில் இருந்து யாகம்புரியச் சொன்னாள்.துருபதனும் யாஜரும் ஒன்றுபட்டு ஆகுதியை வழங்கவும். அந்த யாக நெருப்பில் இருந்து ஒரு அழகிய வீரன் வெளிப்பட்டான். அவன் வெளிப்பட்ட நொடியில் அசரீரி ஒலித்தது. இவனே துரோணருக்கு எமன். அவருக்கு நண்பனாகவும் திகழ்வான். இவனால் பாஞ்சால தேசம் நற்பெயர் பெறும், என்றது அந்த வாக்கு. இவனே திருஷ்டத்துய்மன்! ஜெயிக்க முடியாதவன் என்பது இதன் பொருள். திருஷ்டத்துய்மனைத் தொடர்ந்து அந்த யாகத்தில் அழகிய பெண்ணொருத்தியும் தோன்றினாள்! அவளே திரவுபதி.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
ஞாயிறு, 6 டிசம்பர், 2020
சிகண்டினி
அம்பை, அம்பிகா, அம்பாலிகா
அம்பை, அம்பிகா, அம்பாலிகா
காசி ராஜனின் சுயம்வர மண்டபத்திலே பீஷ்மர்! அதைக்கண்ட அவ்வளவு அரசர் பெருமக்களிடமும் அதிர்ச்சி! அடுத்த அதிர்ச்சியாக பீஷ்மர் காசிராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூன்று பேரையும் தன் வாள் முனையில் மடக்கி ரதத்தில் ஏற்றி அஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டு விட்டார். அந்த நாளில் அரசர்களிடையே, இப்படி கவர்ந்து மணம் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை ராட்சஷ விவாகம் என்பார்கள். இதைப்போல, இன்னும் ஏழுவகைத் திருமணங்கள் இருந்தன. ஆனால், எந்த விவாகமாக இருந்தாலும்... அதில் அந்த பெண்ணின் விருப்பம் முக்கியம். பீஷ்மர் தன் தம்பியின் பொருட்டு, இம்மூன்று பேரையும் கவர்ந்து செல்வதைப் பொறுக்காமல், சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த அரசர்கள் பீஷ்மரை எதிர்த்துப் போர்புரிய முற்பட்டனர். ஆனால், அவரின் வீரத்தின் முன்னால் அவர்கள் தெறித்து விழுந்தனர். சவுபல தேசத்தின் அரசன் சால்வன், கடத்தப்பட்ட அம்பையின் காதலன். அவன் மட்டும் விடாமல் பீஷ்மரின் ரதத்தை பின்தொடர்ந்தான். பாணங்களால் அவரை வீழத்தவும் முயன்றான். ஆனால், இறுதி வரை அவனால் முடியாமல் போயிற்று.ரதத்தில் இருந்த அம்பையும், சால்வன் தோற்று திரும்பச் செல்வதைக் கண்ணீருடன் பார்த்தாள்.
ஒருவழியாக பீஷ்மர், வருங்கால அஸ்தினாபுர ராணிகளுடன் அரண்மனை புகுந்தார். அந்த மூவரிடத்திலும் அப்போது தான் தன் தம்பி விசித்திர வீரியன் பற்றிக் கூறினார். இளவரசிகளே! உங்களை நான் என்பொருட்டு கவர்ந்து வரவில்லை. என்தம்பியும், அஸ்தினாபுரத்து அரசனுமான விசித்திர வீரியனுக்காகவே கவர்ந்து வந்தேன். உங்களால் எங்கள் வம்சம் விருத்தியடைந்து இந்த நாட்டு மக்கள் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று விரும்புகிறேன், என்றார். அவரின் கருத்தை அம்பிகையும், அம்பாலிகையும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், அம்பை பீஷ்மரைப் பார்த்துக் கண்ணீர் விட்டாள். பீஷ்மரே! நீங்கள் என் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டீர்கள். நான் சவுபல அரசன் சால்வனை விரும்புகிறேன். சுயம்வரத்தில் அவருக்கே மாலை சூட எண்ணியிருந்தேன். இதை அறியாமல் நீங்கள் என்னைக் கவர்ந்து வந்தது பெரும்பிழை. இது நீதியாகாது, என்றாள். பீஷ்மர் ஆடிப்போனார். அவர் துளியும் எதிர்பார்த்திராத நிலைப்பாடு. பெண்களிடம் சினேகம், அவர்களை ரசிப்பது, அவர்கள் தொடர்பான காதல் தொடர்பான உணர்வுகளுக்கெல்லாம் இடமே இல்லாத, சத்திய வாழ்வு வாழ்பவராக இருந்ததால், இப்படி ஒரு காதல் சிக்கல் உருவாகக்கூடும் என்பதை அவரால் யூகிக்க முடியாமல் போய்விட்டது.அம்பையின் கண்ணீரும், கோபமும் பீஷ்மரை சிந்திக்க வைத்தது. ஒரு முடிவுக்கு வந்தவராக, பெண்ணே நீ சால்வனை மணந்து கொள். உன் காதலை நான் கெடுக்கத் தயாரில்லை.
நீ போகலாம், என்றார்.அம்பைக்கு தன் காதல் தப்பி பிழைத்துவிட்ட சந்தோஷம். அதே சமயம் அம்பாலிகையும், அம்பிகையும் விசித்திரவீரியனை மணந்து கொண்டனர். அம்பை தன் காதலன் சால்வனின் நாட்டுக்கு ரதமேறி சென்றாள். ஆனால், பாவம்.....! அவள் வாழ்வில் விதி விபரீதமாக விளையாடத் தொடங்கியது. தன் முன் வந்து நின்ற அம்பையை ஏற்க அவன் மறுத்து விட்டான். உன்னை நான் எதிரியிடம் இருந்து வெல்ல முடியாதவனாகி விட்டேன். தர்மப்படி நீ பீஷ்மரின் உடைமையாகி விட்டாய். உன்னைக் கவர்ந்து சென்றவன் மணப்பது தான் நியாயம். உனக்கும் அது தான் அழகு, என்று சொல்ல அம்பைக்கு தலையில் இடி விழுந்தது போல் ஆனது. வேறு வழியின்றி மீண்டும் அஸ்தினாபுரத்திற்கே திரும்பினாள். பீஷ்மரிடம் நடந்ததைச் சொன்னாள். என்னை நீங்கள் கவர்ந்து வந்தபடியால், எவருமே என்னை மணம்புரிய மறுப்பார்கள் என்பது தான் இப்போது என்நிலை. எனவே, என்னைக் கவர்ந்து வந்த நீங்களே மணந்து கொள்ளுங்கள், என்றாள். பீஷ்மர் அவளிடம், அம்பா! நான் ஜிதேந்திரியன். இப்பிறப்பில் எவரையும் மணக்க மாட்டேன் என்று சத்திய பிரக்ஞை கொண்டிருப்பவன். அதனால், உன்னை மட்டுமல்ல யாரையும் நான் எண்ணத் தயாரில்லை. சால்வனின் கருத்து சரியாக இருக்கலாம். ஆனால், உன்னை நான் கவர்ந்தது நான் மணப்பதற்காக அல்ல. இந்த விஷயத்தை நீ அவனிடம் மீண்டும் சென்று சொன்னால் உனக்கு விமோசனம் பிறக்கும், என்றார்.
அம்பையும் அவர் சொன்னது போல செய்ய சால்வன் ஏற்கனவே சொன்ன பதிலையே திரும்பச் சொன்னான். மண்ணில் கைதவறி விழுந்த பதார்த்தத்தை திரும்ப எடுத்து உண்ண முயல்வது எப்படி இழுக்கான செயலோ.... அப்படித்தான் நான் உன்னை மணப்பதும் ஆகும். எனவே, என்னை மன்னித்து விலகிச் செல் , என்றான். சால்வனின் பதிலால் அம்பை விக்கித்துப் போனாள். நடுத்தெருவில் நிற்பவள் போல் ஆனாள். அம்பைக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அவளுக்குள் பெரும் கோபமாக உருவெடுத்தது. பீஷ்மரிடம் திரும்பிய அவள்,ஒரு பெண்ணாகிய என் பாவத்தை கொட்டிக் கொண்ட விட்ட உங்களைச் சும்மா விடமாட்டேன். நீங்கள் நினைத்தால் மட்டுமே மரணிக்கலாம் என்னும் வரம் பெற்ற உங்களுக்கு, என்னாலேயே மரணம் சம்பவிக்க வேண்டும் என்பதே இனி என் விருப்பம். அது சம்பவித்தே தீரும். அதற்காக நான் தவம் மேற்கொள்வேன், என்று சங்கல்பம் செய்து கொண்டவள் இமயச்சாரலை அடைந்து நெடிய தவத்தைத் தொடங்கினாள். எப்படி தெரியுமா? கால் கட்டை விரலை ஊன்றி, ஆக்ரோஷமும் பெரும் கோபமுமாய் அவள் செய்யத் தொடங்கிய தவம் 12 ஆண்டுகள் தொடர்ந்தது. அது தேவாதி தேவர்களை எல்லாம் கலக்கியது. விண்ணில் இருந்த இந்திரன் அவளின் தவத்தைப் பார்த்து வியந்தான். தனக்கு இணையான வீரரான பீஷ்மரை அழிக்க எண்ணி அவள் தவம் செய்ததால், அவனால் வரம் தர முடியவில்லை. இறுதியில், அம்பையின் தவம் முருகப்பெருமானையே வரவழைத்து விட்டது. முருகப்பெருமானும் அம்பை கோரிய வரமான பீஷ்மரைக கொல்லும் நேரடியாகத் தந்து விடவில்லை. தேவலோகத்து தாமரைப் பூக்களால் ஆன ஒரு மாலையை அவளிடம் தந்த முருகன், இதை எவன் ஒருவன் சூகின்றானோ, அவனே பீஷ்மனுக்கு காலன், என்று கூறி மாலையைத் தந்து விட்டு மறைந்தார்.ஆனால், அந்த மாலைக்குரிய கழுத்து அகப்பட வேண்டுமே? அதிலும், பீஷ்மாச்சாரியாரை எதிரியாகக் கருதி அவரைக் கொல்லும் எண்ணம் கொண்ட ஒரு அரசனும் அப்போது இல்லை. மேலும், அம்பைக்காக அவரை யாரும் பகைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. அம்பை அந்த மாலையுடன் பல அரசர் பெருமக்களைச் சென்று பார்த்தாள். அதைச் சூடிக் கொள்பவருக்கு நான் அடிமை என்றும் சொல்லிப் பார்த்தாள். யாரும் உடன்படவில்லை.
இறுதியாக, பாஞ்சால அரசன் துருபதனை நாடி வந்தாள். இவன் யார் தெரியுமா?மகாபாரதத்தில் பிரதான நாயகியான திரவுபதி எனப்படும் பாஞ்சாலியின் தந்தை. அவன் பாஞ்சால தேசத்திற்கு அரசன் ஆனதே ஒரு ஆச்சரியமூட்டும் செய்தி. அவனது பிறப்பும் மிக விநோதமானது. அதை அறிந்தால் தான் துருபதன் என்னும் பெயர் காரணத்தை நாம் அறிய முடியும். இவன் பிறப்பை மட்டுமல்ல. இவனது மகளான சிகண்டினி பற்றியும் தெரிந்து கொண்டால் தான் அம்பையின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது நமக்கு தெரிய வரும். பாஞ்சால மன்னன் முதலில் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தான். அதற்காக காட்டுக்குச் சென்று தவத்தில் இறங்கினான். அரசர்கள் கடுந்தவம் புரிவது மிகவும் கடினம். அவர்களால் புலன்களை நெடுங்காலத்திற்கு அடக்கியாள முடியாது. துருபதனுக்கும் இதே போன்ற சோதனை இந்திர லோகத்து மேனகை வடிவில் ஏற்பட்டது. அந்த வனத்தில் இருந்த அபூர்வ ஜாதி பூக்களை பறித்துச் செல்ல அவள் வந்திருந்தாள். தவச்சிந்தனை கலைந்த துருபதன் அவளைப் பார்த்து விட்டான். அவள் மீது ஆசை கொண்டான். அந்த ஆசையின் விளைவாக அவனையும் அறியாமல் அவனது இந்திரியம் கீழே விழுந்தது. தன்னை மேனகை இழிவாக கருதி விடுவாளோ என்று எண்ணி அதனைக் காலால் மறைத்து விட்டான். இவை அனைத்தும் துரு என்னும் மரத்தின் கீழ் நிகழ்ந்தது. மேனகை சென்றதும், மன்னன் காலை விலக்கினான். அந்த இடத்தில் கர்ப்பத்தில் உருக்கொண்டது போல ஒரு குழந்தை. இதை கலியுகத்தோடு ஒப்பிடக்கூடாது. துவாபர யுகத்து தர்மத்திற்கேற்ப, இந்த சம்பவம் நிகழ்ந்தது. துரு மரத்தின் கீழ் கால் என்னும் பதம் பட்டு பிறந்த காரணத்தால், அந்த குழந்தை துருபதன் என்று பெயர் வந்தது. இந்த துருபதனைப் பார்க்கத் தான் அம்பை தேவலோகத்து மாலையுடன் வந்தாள்.
ராமகிருஷ்ணர் பகுதி ஐந்து
ராமகிருஷ்ணர் பகுதி ஐந்து
கதாதரனுக்கு அவரது தந்தை சுதிராம் தம் முன்னோர்களின் பெயரை வரிசையாக சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்வதை கதாதரன் அக்கறையுடன் கவனிப்பான். எத்தனை நாள் கழித்து திரும்ப கேட்டாலும் அப்படியே சொல்வான். ஆனால், அவருக்கு பள்ளிப்பாடத்தில் மட்டும் அதிக நாட்டம் இல்லை. குறிப்பாக கணக்கு என்றால் அவருக்கு வேப்பங்காய். யாராவது வாய்ப்பாடு சொன்னால் அவரை வெறுப்போடு பார்ப்பார். சிறிது காலத்தில் கதாதரன் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.பள்ளியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. படிப்பில் புத்திசாலியில்லாவிட்டாலும், மற்றவகைகளில் அவரை ஏனோ அத்தனைபேருக்கும் பிடித்திருந்தது. கடைசி வரை கணக்குப்பாடத்தை மட்டும் அவர் விரும்பவேயில்லை. இதை சுதிராம் பெரிதுப்படுத்தவில்லை. இறைவனின் ஆணைப்படி எப்படியாவது தன் மகன் முன்னேறிவிடுவான் என்றே அவர் நினைத்தார். வீட்டில் குறும்பு செய்தால்கூட அவர் கண்டிப்பதில்லை. அதேநேரம் கதாதரனும் குறும்பு செய்துவிட்டு எதையும் மறைப்பதில்லை. நான்தான் அதை செய்தேன் என தைரியமாக ஒப்புக் கொள்வார். இந்தப் போக்கு சுதிராமுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் கதாதரனுக்கு புத்திமதிகள் சொல்வார். குறும்பு செய்யவேண்டாம் என கேட்டுக் கொள்வார். அதை அப்படியே ஏற்றுக் கொள்வார் கதாதரன். ஆனால் வேறுமாதிரியான குறும்புகளை செய்வார். அந்த குறும்பினால் நிச்சயமாக மற்றவர்களுக்கு பாதிப்பு இருக்காது. இப்படியாக அவரது இளமைக்காலம் கழிந்து கொண்டிருந்தது. சிறிது காலம் கழித்து கணிதம் நீங்கலாக மற்ற பாடங்களில் கதாதரன் ஆர்வம் செலுத்தினார். நன்றாக எழுதினார். ஆன்மிக பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொண்டார். அவற்றை படிக்கும் நேரத்தில் இந்த உலகையே மறந்துவிடுவார். தியானம் செய்பவரை போல தோன்றும்.
அவரது காலத்தில் ராமாயணமும், மகாபாரதமும் மிகவும் பிரசித்தம். ஊர் ஊராக நாடகம் மூலம் ராமாயணம், மகாபாரதம் கதை மக்களிடம் சொல்லப்படும். ஆனால் நாடகக் குழுவினரிடம் பணம் இருக்காது. எனவே அவர்கள் மேடைப்போட்டு நாடகம் நடத்தமாட்டார்கள். தெருவோரங்களில் மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நாடகத்தை நடத்திக் காட்டுவார்கள். இதைப்பார்ப்பதற்கென்று தவறாமல் கூட்டம் வரும். அந்த கூட்டத்தில் ஒருவராக கதாதரனும் இருப்பான். அந்த நாடகத்தில் வரும் வசனங்களையும், பாடல்களையும் கதாதரன் வரிவிடாமல் கேட்பார். வீட்டிற்கு வந்து ஒன்றுவிடாமல் திரும்ப சொல்லிப்பார்ப்பார். கற்றலில் கேட்டலே நன்று என்ற பழமொழிக்கு ஏற்ப, கதாதரனின் மனதில் ராமாயணம், மற்றும் மகாபாரத கதைகள் இலகுவாக பதிந்தன. இதைத்தவிர தான் வாழ்ந்த கிராமத்தில் உள்ள குயவர்களின் வீட்டிற்கு சென்றுசுவாமி பொம்மைகளை வாங்கி வருவார். அவர்கள் பொம்மை செய்யும் விதத்தை பார்த்துக் கொண்டேயிருப்பார். அவர்களோடு இணைந்து பொம்மை செய்யவும் கற்றுக் கொண்டார். நண்பர்கள் வீட்டிற்கு சென்று பொம்மைகள் செய்து கொடுப்பார். யாரேனும் ஓவியரைக் கண்டால் விடமாட்டார். அவர்களோடு சேர்ந்த ஓவியம் வரைவார். பொம்மை செய்வதிலும், ஓவியம் வரைவதிலும் தேர்ச்சி பெற்றார். பள்ளிப்படிப்பை விட இதுபோன்ற காரியங்களில் அவருக்கு அதீத அக்கறை இருந்தது. ஓய்வு நேரங்களில் புராண இதிகாசங்களை படிப்பார். வளர வளர தெய்வீக எண்ணங்கள் மனதில் பதிந்தன. சில நேரங்களில் பக்தி பரவசத்தால் மயங்கி விழுந்துவிடுவார். நாட்டுப்புற பாடல்களையும் அவர் கற்றுக் கொண்டார். அந்தக் காலத்தில் பேய், பிசாசு பயம் மக்களிடம் மிகவும் அதிகம். அங்கே பேய் இருக்கிறது, இங்கே பிசாசு இருக்கிறது என்றெல்லாம் மக்கள் பேசிக் கொள்வார்கள். அந்த இடங்களுக்கு தைரியமாக சென்று வருவார் கதாதரன்.
சுதிராமுக்கு ஆதரவு அளித்த சட்டர்ஜி குடும்பத்தினருக்கு தெய்வ அருள் வந்து ஆடுவார்கள். அவர்கள் அருகில் செல்லவே கிராமமக்கள் தயங்குவார்கள். ஆனால் கதாதரன் தைரியமாக அவர்களது அருகில் சென்று அவர்கள் செய்வதையெல்லாம் கவனிப்பார்.இந்த மாமா, அத்தை ஆகியோர் சுவாமி ஆடுவதைப் போல எனக்கும் ஆடத் தோன்றுகிறது. என்மேலும் தெய்வம் வந்து அமராதா? என்று வேடிக்கையாக சொல்வார். கதாதரனிடம் ஒரு வசீகர சக்தி இருந்தது. தன்னோடு பழகும் சிறுவர்களை விரைவில் தன்வசப்படுத்திவிடுவார். அவரது நண்பர்கள் சாப்பிடச் செல்லும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவரோடு இருப்பார்கள். அதுமிட்டுமின்றி அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்களும், உறவுக்காரர்களும் ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டு கதாதரனைக் காண வருவார்கள். அவர்கள் கையில் மிட்டாய் அல்லது பழங்கள் இருக்கும். கமார்புகூரில் சுதிராமனுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் மாணிக்ராம். அவர் கதாதரனைப் பார்க்காமல் ஒருநாள் கூட இருக்கமாட்டார். கதாதரனின் உடலில் உள்ள அங்க அடையாளங்களைக் கொண்டு இவன் பிற்காலத்தில் பெரிய மகானாக வருவான் என்று சொல்வார். கதாதரனுக்கு பல பரிசுகளை கொடுப்பார். இதிகாசங்களை படித்த கதாதரன் அதிலுள்ள பாத்திரங்களைப் போல நடித்துக் காட்டுவார். சில நேரங்க்ளில் அந்த பாத்திரத்தோடு ஒன்றி அப்படியே மயக்கநிலையில் ஆழ்ந்துவிடுவார். ஊராரில் சிலர் வேறுமாதிரியாக பேச ஆரம்பித்தனர்.அந்த சிறுவனுக்கு வலிப்பு வருகிறது. அதனால்தான் அவன் அடிக்கடி மயக்கம் அடைந்துவிடுகிறான், என்று கேலிபேசினர். கதாதரனின் பெற்றோர் இந்த கேலிபேச்சு கண்டு பயந்தார்கள். இப்படியே சொல்லிச் சொல்லி மற்றவர்களையும், நம்பவைத்து விடுவார்களோ என பயந்தனர்.