ஞாயிறு, 5 ஜனவரி, 2020

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்,திருவல்லிக்கேணி
பகுதி – 2

பக்தியோடு திருவல்லிக்கேணி திருத்தல வரலாற்றை படித்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஓம் தமிழ் நாள்காட்டி அன்பர்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள். அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி தோன்றிய அற்புதங்களை சென்ற பகுதியில் நாம் அறிந்து கொண்டோம். இனி இத்தலத்தில் உள்ள சன்னதிகளில் காலத்தால் முற்பட்ட அருள்மிகு மனநாதன் சுவாமி (அரங்கநாதர்) தோன்றிய வரலாற்றை இனி காண்போம்.

திருவல்லிக்கேணி திருத்தலத்தில் பரந்தாமனான திருமால் ஐந்து வடிவங்களில் ஐந்து சன்னதிகளில் தனித்தனியாக சேவை சாதிக்கிறார். அருள்மிகு வேங்கடகிருஷ்ணன் (பார்த்தசாரதி)அருள்மிகு மனநாதர் (அரங்கநாதர்),அருள்மிகு இராமபிரான்,அருள்மிகு கஜேந்திர வரதர், அருள்மிகு தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்).அதில் மனநாதராகிய அரங்கநாதர் சன்னதி மட்டுமே மிகப் தொன்மையானது.

தலைக்குறிப்பு

மூலவர் :மனநாதன் சுவாமி
உற்சவர் :மனநாதன் சுவாமி
தாயார் :வேதவல்லி தாயார்
ஆகமம் :வைகானசம்
தீர்த்தம் :கைரவணீ புஷ்கரணி
புராணப்பெயர் :விருந்தாரன்ய செத்திரம்
ஊர் :திருவல்லிக்கேணி

ஒரு சமயம் திருப்பாற்கடலில் பரந்தாமனுக்கும் திருமகளுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டது.இதன் காரணமாக திருமகள் பரந்தாமனைப் பிரிந்து பூலோகம் வந்தாள். அப்பொழுது விருந்தாரண்யத்தில் தவம் செய்து கொண்டிருந்த பிருகு,அத்திரி, மரீசி,மார்க்கண்டேயன்,சுமதி, சப்தரோமா,சாலி ஆகிய முனிவர்களுக்கு எதிரே ஒரு சந்தன மரத்தின் அடியில் குழந்தை வடிவில் தோன்றினாள்.அந்த தெய்வீக குழந்தையைக் கண்ட பிருகு முனிவர் திருமகளே குழந்தை வடிவில் வந்துற்றாள் என்பதை அறிந்து, அக்குழந்தையை தனது குடிலுக்கு எடுத்துச்சென்று பரிவுடன் வளர்த்து வந்தார்.வேதவல்லி என்று முனிவரால் பெயர் சூட்டப்பெற்ற அக்குழந்தை வளர்ந்து கன்னிப் பருவத்தை அடைந்தாள்.வேதவல்லியாகிய திருமகள் தன்னை வந்தடையும் காலம் நெருங்கியதை உணர்ந்த பரந்தாமன் பேரழகோடு ஒரு அரசகுமாரனின் வடிவில் பூமியில் அவதரித்தார்.பிருகு முனிவரின் குடிலுக்குச் சென்று பெண் கேட்கவே வந்திருப்பவர் பரந்தாமனான நாராயணனே என்பதை பிருகு முனிவர் ஞானத்தால் உணர்ந்தார்.அவரும் இதை மனமார ஏற்றுக்கொள்ள ஒரு மாசிமாதம் சுக்லபட்ச துவாதசியன்று திருமாலுக்கும் வேதவல்லித் தாயாருக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்போது பிருகு முனிவர் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருக்கோலத்தில் வேதவல்லித் தாயாரோடு இத்தலத்திலேயே நிரந்தரமாக காட்சி தரும்படி வேண்டினார்.திருமாலும் அவ்வாறே செய்ய திருவுள்ளம் கொண்டார்.இதைக்கண்டு மனம் மகிழ்ந்த அன்னை வேதவல்லித் தாயார் திருமாலை மனநாதன் என்று அழைத்ததால் இத்தல இறைவனுக்கு மனநாதன் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.மனநாதன் என்பதற்கு வடமொழியில் என் நாயகன் என்று பொருள்.மனநாதன் என்ற பெயர் மருவி மந்நாதர் என்று ஆனது.

இவ்வாலயத்தில் அருள்மிகு மனநாதன் சுவாமியின் பிராட்டியான அருள்மிகு வேதவல்லித் தாயார் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்.கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்ற கோயில்களில் தாயாருக்கென்று தனி சன்னதி அமைக்கும் வழக்கம் இல்லை.மேலும் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் ஐந்து மூர்த்திகளின் சன்னதிகளையும் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் தாயாரைப் பற்றி பாடாமல் விடுகிறார்.ஆகையால் தாயார் சன்னதி கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு பின்னரே அமைக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

வரலாற்றுத்தொன்மை:இத்திருக்கொவிலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.இக்காலத்தில் உள்ள கோயில் அமைப்புக்கும் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் கோயில் அமைப்புக்கும் வேறுபாடு இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.பேயாழ்வாரின் பாசுரங்கள் மற்றும் கல்வெட்டுச் சான்று ஆகியவற்றைக் கொண்டு ஆராய்ந்ததில் மந்நாதராகிய அரங்கநாதர் சன்னதி மட்டுமே பழமையானது என்பது அறிய முடிகிறது.மேலும் பேயாழ்வாரின் சீடரான திருமழிசை ஆழ்வாரும் அருள்மிகு மந்நாதர் சுவாமியை மட்டுமே மங்களாசாசனம் செய்துள்ளார்.கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஐந்து சன்னதிகளும் இடம் பெற்று சிறந்திருந்துள்ளன.அக்காலத்தில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் ஐந்து சன்னதிகளையும் மங்களாசாசனம் செய்துள்ளார்.மேலும் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் தொண்டை நாட்டை ஆண்ட தந்திவர்மப் பல்லவன் இக்கோவிலுக்கு பலதிருப்பனிகள் செய்துள்ளான் என்பதும் கல்வெட்டுச் செய்தி மூலமாக அறிய முடிகிறது.

திருவல்லிக்கேணி தலத்தைப் பற்றி பேயாழ்வார் திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரும் பாசுரம் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்.அவர்களில் காலத்தால் முற்பட்ட பேயாழ்வார், மூன்றாம் திருவந்தாதியில் 16ம் பாசுரத்தில் பாடியுள்ளார்.

வந்துதைத்த வெண்திரைகள் செம்பவளம் வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்
திருவல்லிக்கேணியான் சென்று.
(பேயாழ்வார்)

இப்பாசுரத்தில் தாமரை மலரில் உறையும் திருமகளை மார்பில் தரித்துள்ளார் என்று மட்டும் குறிப்பிடுகிறாரே தவிர ஐந்து மூர்த்திகளில் யாருடைய திருநாமத்தையும் சொல்லாமல் விடுகிறார்.ஆனால் தலத்தின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.எனவே பேயாழ்வார் ஐவரில் யாரைப் பற்றி பாடியுள்ளார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பேயாழ்வாருக்குப் பின் வந்த திருமழிசையாழ்வார் இத்தலத்தை நான்முகன் திருவந்தாதியில் 35ம் பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

தாளால் உலகம் அளந்த அசைவேகொல்
வாளாகிடந்துருளும் வாய்திறவான்
நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்
ஐந்தலைவாய் நாகத்தணை?
(திருமழிசையாழ்வார்)

இப்பாசுரத்தில் ஐந்து வாய்களை உடைய நாகத்தில் கிடந்து அருள்கின்றான் என்று குறிப்பிட்டுள்ளத்தால் அருள்மிகு அரங்கநாதர் கோலத்தில் சயனித்துள்ள மனநாதர் என்று பாடியுள்ளதால் அருள்மிகு மனநாதன் சுவாமி சன்னதியே காலத்தால் முற்பட்டது என்பதை அறிய முடிகிறது.திருமழிசையாழ்வார் சயனத் திருக்கோலத்தை மட்டும் பாடியுள்ளதால் அவர் இவ்வாலயத்திற்கு தரிசிக்க வந்தபோது மற்ற நான்கு சன்னதிகள் இல்லாமல் இருந்திருக்கலாம்.பின்னாளில் வந்த திருமங்கையாழ்வார் அனைவரையும் பாடியுள்ளதால் மற்ற சன்னதிகள் பின்னாளில் தான் தோன்றி யிருக்கக்கூடும் என்பது உறுதியாகிறது.

திருமால் கோவில் கொண்டுள்ள அணைத்து திருத்தலங்களிலும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று பரந்தாமனான நாராயணன் பரமபதவாசல் செவை தந்தருள்வது வழக்கம்.அவ்விழாவில் உற்சவமூர்த்தி பரமபதவாசல் வழியாக எழுந்தருளி நம்மாழ்வாருக்கு எதிர் சேவை தந்தருள்வார்.இவ்வைபவம் இவ்வாலயத்திலும் ஆண்டுதோறும் மிகச்சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.

பரமபதவாசல் சேவை என்பது வாசல் திருக்கும் போது சேவிப்போம்.பிறகு மூலவரை சேவித்து பின் பரமபதவாசல் வழியாக வந்து உற்சவரை சேவிப்போம்.ஆனால் இவ்வாலயத்தில் மற்றொரு சிறப்பும் உண்டு. பரமபதவாசல் திறந்திருக்கும் போதெல்லாம் அருள்மிகு மணநாதர் சுவாமியை செவிக்கும் வண்ணம் ஆலயம் அமைந்துள்ளது.

பரமபதவாசலுக்கு நேர் எதிரில் பலகணி எனப்படும் கல் ஜன்னல் வழியாக ஆதிசேசன் மீது பள்ளி கொண்டிருக்கும் அருள்மிகு மனநாதன் சுவாமியை செவிக்கும் வண்ணம் ஆலயம் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.இவ்வாறு பல பெருமைகளை உள்ளடக்கிய பார்த்தசாரதி திருக்கோயில் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமெனில் சற்று காத்திருக்கத்தான் வேண்டும்
சப்த கந்த கோட்பாடுகள்

ஏழு கந்த கோட்பாடுகள்:

நாதகந்தம்

பிரவேஷகந்தம்

பூரிதகந்தம்

அந்தர் சுஷூம்னா கந்தம்

அபிலாட்ச சங்கம கந்தம்

கிரகபதார்த்த கந்தம்

அனலேஷூ கந்தம்

மேற்சொன்ன இந்த சப்தகந்தங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் உன்னதமானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றன. மனிதனின் ஆற்றல், சக்தி போன்றவைகளை இவை குறிப்பதோடு அவற்றால் பல சமயங்களில் மனிதனுக்கு ஏற்படும் பலமாறுதல் நிலைகளையும் சுட்டிக்காட்டுகிறது. அவைகள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்வோம்.

நாதகந்தம் : இது மனிதனை மனிதனாக்கக் கூடியது. அவன் பெற வேண்டிய பரிபூரண, பக்குவ உயர்ந்த நிலைகளுக்கு இறைப் பகுத்தறிவு ஒன்றே மூல காரணம்.

பிரவேஷ கந்தம்: இது ஜீவன்களின் அறிவை ஐந்தறிவு நிலைவரை மேம்படுத்தி நுண்புல உணர்வுகளை நிலைபெறச் செய்வதாகும். மனித சக்தியால் செய்ய முடியாத காரியங்களை எல்லாம் மிக அற்புதமாக செய்து முடிக்கும் ஆற்றல் உடையது இது.

பூரித கந்தம்: நியாயமான, முறையான மனித விருப்பங்களை இந்தச் சக்தியின் மூலம் பெறலாம்.

அந்தர்ஷூம்னா கந்தம்: இது மனித உள்ளத்தில் எழும் ஆசைகளை முறைப்படுத்தி, நிலைப்படுத்தி, தயாராக்கித் தரக்கூடியதாகும்.

அபிலாட்ச சங்கம கந்தம்:  இது மனிதனின் அபிலாக்ஷைகளை (விருப்பங்களை) முறையாகப் பரிணமிக்கச் செய்து அதனைக் காரியசித்தியாக்க உதவுகிறது.

கிரகபதார்த்த கந்தம்: ஊழ்வினை காரணமாக மனிதன் செயலற்றிருப்பதைத் தக்க பரிகாரம், பிராயச்சித்தம் மூலம் சீர்ப்படுத்திக் காரிய சித்திக்குத் துணை புரிகிறது இது.

அனலேக்ஷூ கந்த கந்தம்:  பகைமை, விரோதம், குரோதம், பொறாமை காரணமாக வாழ்வின் லட்சியம் சீர்குலையாமல் பாதுகாத்து சமய சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மனிதனைச் செயல்பட வைக்கிறது இது.