படலம் 80: புஷ்யாபிஷேக விதி
80வது படலத்தில் புஷ்யாபிஷேக விதி கூறப்படுகிறது. கிரஹணம் முதலிய எல்லா அபசகுனத்தை போக்குவதற்கும் பாபத்தைப் போக்கக்கூடிய பரிசுத்தமான புஷ்யாபிஷேகம் பற்றி கூறுகிறேன் என்று பிரதிக்ஞையாகும். பிறகு அரசனின் அபிஷேகத்திற்காக புண்யமான தேசத்தில் பந்தல் அமைக்கும் விதி கூறப்படுகிறது. இங்கே 12 கால்களை உடையதாக, நடுக்கால் இன்றி நடுவில் வேதிகை அழகாக அமைத்து, பந்தல் அமைக்கவும் பந்தலின் மேற்கு பாகம், தெற்கு பாகத்திலும் இரண்டு வேதிகை அமைத்து பக்கத்தில் படி உள்ளதாகவும் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தைமாசத்தில் பூச நக்ஷத்திரத்தில் புண்யமான தீர்த்தங்களில் பரிசுத்தமான இடத்திலும் நந்தவனங்களிலும் சிவாலயத்திலும் கிழக்கு, வடக்கு, வடகிழக்கு பிரதேசங்களிலோ, ஆசார்யன் ஜ்யோதிஷனுடன் கூடி அபிஷேக ஆரம்பத்திற்கு முன் தினம் சந்தனம் புஷ்பம், இவைகளுடன் தயிர், பொறி அக்ஷதையுடன் கூடின பலியை தேவாதிகளுக்கு கொடுத்து பலிதான விஷயத்தில் கூறப்படுகிற தேவதைகளின் ஆஹ்வான மந்திரம் கூறப்படுகிறது. பலிதானத்திற்கு பிறகு ராத்திரியில் அரசனுடைய கனவை பரீக்ஷித்து சுபமான கனவாக இருப்பின் கர்மாரம்பத்தை ஆரம்பம் செய்யுவும். கெட்ட கனவாக இருப்பின் பரிஹாரம் செய்து அதற்கு பிறகு அபிஷேக கார்யாரம்பம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. முன்பு ஏற்படுத்தப்பட்ட பந்தலையோ, மண்டபத்தையோ தோரணங்கள் கூடியதாக அழகு படுத்தவும் பிறகு முன்பு கூறியபடி மங்களாங்குரார்ப்பண கார்யம் செய்யவேண்டுமென்று அங்குரார்ப்பணம் செய்வது நிரூபிக்கப்படுகிறது. பத்திராசனத்தை அதன் தெற்கு பாகத்தில் படியுடன் கூடிய பாதத்தை உடையதான ஆசனமும் செய்யவும் என்று கூறி பத்திராசனம், ஆசனம் இவைகளின் செய்யும் முறை விரிவாக கூறப்படுகிறது. அதில் பத்திராசனத்தில் முன்னும் பின்னுமாக இரண்டு படி அமைத்துச் செய்யவும் எனக் கூறப்படுகிறது. பின்பு அபிஷேக தினத்தின் முன்தினம் அபிவிருத்திக்காகச் செய்ய வேண்டிய சிரார்த்தம் முறைப்படி வேண்டும் என கூறப்படுகிறது. அந்த நாளில் இரவில் ரக்ஷபந்தனமும் செய்ய வேண்டும் என அறிவிக்கிறார். மறுதினம் காலையில் ஹோமம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு மண்டலம் அமைக்கும் முறை விளக்கப்படுகிறது. அங்கே ஆறு கை அளவு மண்டல அளவு செய்து, அதை நூறு பாகமாக பிரித்து, அந்த நூறு பாகங்களில் ஜம்பூத்வீபத்தை எழுதும் முறை வர்ணிக்கப்படுகிறது.
பாரதவருஷம், இமயமலை, கிம்புருஹ வருஷம், ஹேமகூடமலை, ஹரிவருஷம் நிஷத மலை, குரு வருஷம் சிருங்கமலை, ஹிரண்ய வருஷம் வெண்மையான மலை, ரம்யவர்ஷம் நீலவர்ண மலை, பத்ர வருஷம், மால்யவான் மலை, கேதுமாலவருஷம் கந்தமாதன மலை, இலாவிருத விருஷம், மேருபர்வதம் இவைகளின் கல்பனத்தை வலமாக விளக்குகிறார். இவ்வாறு நூறு பாகம் உடைய ஜம்பூத்தீபத்திற்கு வெளியில் லவண சமுத்திரம் வர்ணிக்கப்படுகிறது. த்வீபங்களுக்கு பிறகு தயிர் சமுத்திரம், அதற்கு பிறகு தீபம், விஷயமாக உப்பு, பால், நெய், கருப்புஞ்சாறு, நல்ல தீர்த்தமாகிய ஆறு சமுத்திரங்களும் சாக, குச, கிரவுஞ்ச, சால்மலி, கோமேத புஷ்கலம், ஆகிய ஆறு த்வீபங்களும் இருக்கின்றன என்றும் ஏழு த்வீபம், ஏழு சமுத்திரங்களின் இருப்பிடம் வர்ணிக்கப்படுகிறது. சுத்த ஜப சமுத்ரத்திற்கு பிறகு தேவர்களின் விளையாட்டிற்காக பத்து கோடி அளவுள்ள லோகாலோக பர்வதம் பிரகாசிக்கிறது என்று வர்ணிக்கப்படுகிறது. பிறகு இமயமலையில் நாற்பத்தி மூன்று எண்ணிக்கையுள்ள பிசாசர்கள் இருக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு பூஜை செய்வித்து ரக்ஷõ சூத்ரங்களுடன், மாம்சான்னம், கள் இவைகளால் பலி கொடுக்கவேண்டும் என கூறப்படுகிறது. ரக்ஷõசூத்ரம், வஸ்திரம், கொடி, ஆபரணம் பூணூல் என்று ரக்ஷõபந்தனம் முதலான பொருள்களின் விபரம் இந்த படலத்தில் 103வது ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. பிறகு ச்வேதாசலத்தில் அறுபத்தி நான்கு எண்ணிக்கை உள்ள திதியின் புத்ரர்களான அசுரர்கள் இருக்கிறார்கள் எனக் கூறி அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு முன்பு கூறியபடி பூஜை முதலாக பலியைக் கொடுக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. பிறகு ச்ருங்கவான் என்ற மலையில் 31 பித்ருக்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு ரக்ஷõபந்தனம் முதலியவைகளால் நல்லெண்ணெய், மாம்சங்களாலும், அன்னங்களாலும், பூஜை முன்னிட்டதாக பலி கொடுக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இங்கு ஆதித என்ற பித்ருக்கள் முதற்கொண்டு பெயர்களைக் குறிப்பிட்டு இவர்கள் தனித்தனியாக மூன்று பெயர்களை உடையவரான கனங்களாக இருக்கிறார்கள்.
ஆகையால் இவர்கள் இருபத்தி ஒன்று பெயர்கள் எனக் கூறப்படுகிறது. பிறகு பத்து பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக மொத்தம் முப்பத்து ஒரு எண்ணிக்கை உள்ள பித்ருக்கள் கூறப்படுகிறார்கள். பிறகு நீலாசலத்தில் நாற்பத்து ஒன்று எண்ணிக்கையுள்ள முனிவர்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு சந்தனங்களாலும் ரக்ஷõபந்தனங்களாலும், அவர்அவர்களின் பெயர்களால் ரிக், யஜுர், ஸாம வேத மந்த்ரங்களாலோ, பூஜை செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. பிறகு நிஷதபர்வதத்தில் அனந்தன் முதலான எட்டு நாகர்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு ரக்ஷõபந்தனம் கொடுத்து சர்க்கரை, தேன், நெய், நைவேத்யம் இவைகளைக் கொடுப்பதன்மூலம் பலவிதமான சந்தன, புஷ்பங்களால் பூஜிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. மஹாமேரு பர்வதத்தில், எட்டு வசுக்கள், பதினொரு ருத்ரர்கள். பனிரண்டு சூரியர்கள், பிரஜாபதி, வஷட்காரம் என்று முப்பத்தி மூன்று தேவர்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு ரக்ஷõபந்தனம் கொடுத்து, தூபம், நமஸ்காரம் இவைகளால் பூஜித்து, அவர்களைக் குறித்து, அக்னியில் நெய்யால் ஹோமம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஹேமகூடம் வரையில் கந்தர்வர்கள், அப்சரஸ்திரீகள் பூஜிக்கப்படுபவர் என்று கூறி சித்ரசேனன் முதலிய இருபத்தி ஏழு பெயர்களைக் குறிப்பிடப்படுகின்றன. அப்சர ஸ்திரீகளின் விஷயத்தில் அக்ருத்தியர்கள் 14பேர், மேனகை முதலானோர் 24 பெயர் என கூறப்படுகின்றன. பிறகு மறுபடியும் நீலாசலத்தில் இருக்கின்ற சித்தர்கள் 8 நபர்களை பலவர்ண பலிதானத்தினால் பூஜித்து அவர்களுக்கு ரக்ஷõபந்தனம் முதலிய கொடுக்கவும் என கூறப்படுகிறது. திரும்பவும் மேரு பர்வதத்தில் இருக்கின்ற சூரியன் முதலிய நவகிரஹங்கள் அபிஜித் நக்ஷத்திரத்தோடு கூடிய 27 நக்ஷத்ரங்கள் சப்த மாத்ருக்களோடு, வீரபத்ரன், கணபதி, இந்திரன் முதலான எட்டு திக் பாலகர்களோடு, பிரம்மா, விஷ்ணு, மஹாதேவன், ஸ்கந்தன் இவர்களையும் பதினான்கு தேவ ஸ்திரீகளுடன் கூடிய தச்சர் இருவர்களையும் பெயரோடு குறிப்பிட்டு அவர்களுக்கு முறையாக ரக்ஷõபந்தனம் கொடுத்து ஐந்துவித வர்ண அன்னங்களைப் பலி கொடுக்கவேண்டும் எனக் கூறப்படுகிறது.
இங்கு மண்டல கர்மத்தில் கூறப்பட்டுள்ள மால்யவான். கந்தமாதனபர்வதம் இன்றி மற்ற ஹிமாலயம் முதலிய ஏழுமலைகள் பூஜையில் உபயோகிக்கப்படுகின்றன. நீலாசல மேரு பர்வதம் இரண்டு முறை கூறப்பட்டுள்ளன. இந்த விஷயம் ஆராய்ச்சிக்கு தகுந்தது அல்ல. பிறகு முன்பு ஏற்படுத்தப்பட்ட கூடத்தில் மேற்கில் உள்ள கூடத்தில் மேற்கில் உள்ள வேதிகையில் நூல் வஸ்திரம், தேங்காய், மாவிலை இவைகள் கூடிய நெய் நிரப்பப்பட்ட எட்டு அல்லது இருபத்தெட்டு, நூற்று எட்டு கடங்களை ஸ்தாபித்து மூளைகளில் நூல், வஸ்திரம் முதலியவைகளோடு கூடிய பதினாரு கடங்களை ஸ்தாபித்து அதில் திரவ்யங்களை அர்பணிக்கவும் என்று கூறி அங்கு அர்பணிக்க வேண்டிய முக்கியமான மருந்துவகைகள் கூறப்பட்டு இருக்கின்றன. பிறகு அந்த வேதிகையில் விருஷபத்தின் தோல், சிங்கத்தின் தோல், புலித்தோல், யானைத்தோல் ஆகிய நான்கு தோல்களை விரிக்கவும் எனக் கூறியுள்ளார். அதற்கு மேல் பத்திரபீடத்தில் சிம்மாசனம்வரை ஆசனம் பூஜித்து மிருத்ஞ்ஜிய மந்திரம் கூறி கந்த புஷ்பங்களால் பூஜிக்கவும் என கூறி பிறகு சார்வபவும மண்டல விஷயத்தில் ஆசனம் பூஜிப்பது உயர்ந்தது, மத்யமமானது என பேதமாக கூறப்பட்டு உள்ளது. ஆசனத்தில் மேல் மத்தியில் ஸ்வர்ண புஷ்பம் வைத்து அங்கு புரோஹிதர் முதலான ஜோஸ்யர்களால் சைன்யங்களுடன் கூடிய அரசர்களாலும், அமைச்சர்களாலும் சூழப்பட்ட அரசனை அமர்த்தவும். பிறகு அரசரின் அபிஷேக முறை கூறப்படுகிறது. ஆசார்யன் ஐந்து அணிகலன்கள் அணிந்து வெட்டப்படாத வெண்பட்டை தரித்து வேத புண்யாக மந்திர சப்தங்களாலும் நாட்ய, வாத்ய, பாட்டு முதலிய மங்களமான சப்தங்களாலும் கூறி வடக்கு முகமாக கம்பளத்தினால் ராஜாவை போர்த்தி நெய்யின் மந்திரத்தைக் கூறி நெய் குடங்களை அபிஷேகம் செய்யவும். கம்பளத்தை எடுத்து பூஜிக்கப்பட்ட கும்ப தீர்த்தத்தினாலும் பலவித மெதுவான பழங்களாலும், வாசனையுள்ள புஷ்பங்களாலும் அபிஷேகம் செய்யவேண்டும் என கூறி அபிஷேகம் செய்யும் சமயத்தில் சொல்லவேண்டிய மந்திரங்களும் கூறப்பட்டுள்ளன. இங்கு முடிவில் இந்த மந்திரங்களாலும் மற்ற அதர்வண வேத மந்திரங்களாலும் ருத்திரபாராயணத்திலோ மற்றவர்கள் செய்யவும் என பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.
ஜல சமுத்திரத்திற்கு பிறகு யக்ஷரர்களை பலநிறம் உடைய தானத்தினால் பூஜித்து ரக்ஷõபந்தனம் அவர்களுக்கு கூறி யக்ஷர்களின் பெயர் விளக்கப்படுகின்றன. பிறகு நீலாசலம் என்ற மலையில் இருக்கும் 8 சித்தர்களை பலநிறம் உடைய பலிதானத்தால் ரக்ஷõபந்தனம் முதலியவைகள் கொடுத்து அவர்களை பூஜிக்கவும் என கூறப்படுகிறது. மறுபடியும் மேருமலையில் ஆதித்யாதி நவக்கிரஹங்கள் அபிசித் நக்ஷத்திரத்துடன் கூடிய 27 நக்ஷத்திரங்கள் ஸப்த மாதாக்களுடன் கூடின வீர, விக்னேசர் திக்பாலகர்களுடன் கூடின பிரம்மா, விஷ்ணு, மஹாதேவன் இவர்கள் 14 தேவ ஸ்திரீகளுடன் கூடிய இரண்டு வைத்யர்கள் ஆகிய இவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு முறையாக ரக்ஷõபந்தனம் முதலியவை கொடுத்து 5 நிறம் உடைய ஹவிஸ் பலி கொடுத்து பூஜை செய்யவும் என கூறப்படுகிறது. இங்கு மண்டலம் அமைக்கும் முறையில் மால்யவான், கந்தமாதன பர்வதம் இன்றி மற்ற இமயமலை முதலிய ஏழுமலைகள் பூஜை விஷயத்தில் விளக்கப்படுகின்ற நீலாசலமும், மேரு பர்வதமும் இவை இரண்டும் இருமுறை கூறப்படுகிறது. இந்த விஷயமானது விமர்சிப்பதற்கு பிறகு முன்பு தயாரிக்கப்பட்ட பந்தலில் மேற்கு வேதிகை வஸ்திரம் தேங்காய், மாவிலை, இவைகளால் அலங்கரிக்கப்பட்ட நெய்யால் நிரப்பப்பட்ட 8,28,108, என்ற எண்ணிக்கையாலோ ஸ்தாபித்து அங்கு ஆக்னேயாதி கோணங்களில் நூல் வஸ்திரம் முதலியவையுடன் கூடிய 16 கும்பங்களை ஸ்தாபித்து அதில் திரவ்யங்களை நிரப்பவும் எனக் கூறிஹோமவிதி முதலிய விசேஷமான திரவ்யங்களை கூறப்படுகிறது. பிறகு அந்த வேதிகையில் விருஷபத்தின், சிங்கத்தின் தோல், புலித்தோல், யானைத்தோல், ஆகிய நான்கு தோல்களை விரிக்கவும் எனக்கூறியுள்ளார். அதற்கு மேல் பத்திரபீடத்தில் சிம்மாசனம் வரை. ஆசனம் பூஜித்து மிருத்ஞ்ஜிய மந்திரம் கூறி கந்த புஷ்பங்களால் பூஜிக்கவும் என கூறி பிறகு சார்வபவும மண்டல விஷயத்தில் ஆசனம் பூஜிப்பது உயர்ந்தது, மத்யமமானது என பேதமாக கூறப்பட்டுள்ளது.
ஆசனத்தின் மேல் மத்தியில் ஸ்வர்ண புஷ்பம் வைத்து அங்கு புரோஹிதர் முதலான ஜோஸ்யர்களால் சைன்யங்களுடன் கூடிய அரசர்களாளும் அமைச்சர்களாலும் சூழப்பட்ட அரசனை அமர்த்தவும். பிறகு அரசரின் அபிஷேக முறை கூறப்படுகிறது. ஆசார்யன் ஐந்து அணிகலன்களை அணிந்து வெட்டப்படாத வெண்பட்டை தரித்து வேத, புண்யாக மந்திர சப்தங்களாலும் நாட்ய, வாத்ய, பாட்டு முதலிய மங்களமான சப்தங்களாலும் கூறி வடக்கு முகமாக கம்பளத்தினால் ராஜாவை போர்த்தி நெய்யின் மந்திரத்தை கூறி நெய் குடங்களை அபிஷேகம் செய்யவும். கம்ளபத்தை எடுத்து பூஜிக்கப்பட்ட கும்ப தீர்த்தத்தினாலும் பலவித மெதுவான பழங்களாலும் வாசனையுள்ள புஷ்பங்களாலும் அபிஷேகம் செய்யவேண்டும் என கூறி அபிஷேகம் செய்யும் சமயத்தில் சொல்லவேண்டிய மந்திரங்களும் கூறப்படுகின்றன. இங்குமுடிவில் இந்த மந்திரங்களாலும் மற்ற அதர்வண வேத மந்திரங்களாலும் உருத்திராத்யயத்தினாலோ மற்றவர்கள் செய்யவும் என பல மந்திரங்கள் கூறப்படுகின்றன. அபிஷேகத்திற்கு பிறகு லோகாலோகமலையில் தேவர்கள் விளையாடுவதற்கு பத்து கோடி தண்டம் அளவுள்ள இடம் பிராசிக்கிறதாக வர்ணிக்கப்படுகிறது. இமாலயத்தில் 34 எண்ணிக்கையுள்ள பிசாசர்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெயரும் குறிக்கப்பட்டு அவைகளின் பூஜை முறைப்படி வர்ணிக்கப்பட்டு மாம்சான்னம், கள் இவைகளால் பலிகொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. ரக்ஷõபந்தனம், வஸ்திரம் பூஷணம் பூணல், என்றும் ரக்ஷõபந்தனம் முதலிய விவரணங்கள் இந்த படலத்திலே நூற்றி மூன்றாவது ஸ்லோகத்தில் காணப்படுகிறது. பிறகு ஸ்வேதாசலத்தில் அறுபத்தி நான்கு அசுரர்கள், தானவர்கள் இருக்கிறார்கள் எனக் கூறி அவர்களின் பெயர் குறிப்பிட்டு அவர்களுக்கு முன்பு போல் பூஜை செய்யும் விதியும் பலியும் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு சிருங்கவத்யசலம் என்ற மலையில் 31 எண்ணிக்கை உள்ள பிதுர்க்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயரையும் கூறி அவர்களுக்கு ரக்ஷõபந்தனம் முதலியவைகளாலும் நல்லஎண்ணை, அன்னம், மாம்சம், இவைகளாலும் பூஜைமுறைப்படி பலிகொடுக்கவும் என கூறப்படுகிறது. இங்கு ஆதிதர் என்ற பிதுர் தேவர்கள் முதல் கொண்டு ஏழு பேர்களையும் குறிப்பிட்டு இவர்கள் தனித்தனியாக மூன்று எண்ணிக்கை உடைய கணங்களாக ஆகிறார்கள்.
ஆகையால் இவர்கள் 21 எண்ணிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. பிறகு 10 பெயர்கள் கூறப்படுகின்றன. பிறகு 10 பெயர்கள் கூறப்படுகின்றன. ஆக மொத்தம் 21 எண்ணிக்கை உள்ளன. பிதுர்க்கள் சித்திக்கிறார்கள். பிறகு நீலாசலம் என்ற மலையில் உள்ள முனிவர்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களை சந்தனம், ரக்ஷõபந்தனம் இவைகளாலும் அவரவர் பெயர்களாலும் ரூக், யஜூஸ், ஸாம, மந்திரங்களாலுமோ, பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். பிறகு நிஷத பர்வதத்தில் அனந்தாதி எட்டு நாகர்கள் வசிப்பதாக கூறி அவர்களின் பெயர்களையும் கூறி அவர்களுக்கு ரக்ஷõ பந்தனம் முதலியவை கொடுத்து சர்க்கரை, தேன், நெய் இவைகளின் நைவேத்ய அர்பண பிரகாரம், கலப்படம் இல்லாத கந்த புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு மஹாமேரு பர்வதத்தில் அஷ்டவசுக்கள், பதினோருத்திரர்கள், பன்னிரண்டு ஆதித்யர்கள், பிராஜாபதி, வஷட்காரம் என முற்பத்திமூன்று தேவர்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களுக்கு ரக்ஷõ பந்தனம் முதலியவை சமர்பித்து நமஸ்காரங்களாலும் தூபங்களாலும் பூஜித்து அவர்களை குறித்து அக்னியில் நெய்யால் ஹோமம் செய்யவும் என கூறப்படுகிறது. பின்பு ஹேமகூடமலையில் கந்தர்வர் அப்ஸரஸ்திரீகள் பூஜிக்கப் படுபவர்களாக கூறி சித்ரசேனம் முதலிய 27 பெயரை உடைய கந்தர்வர்கள் கூறப்படுகின்றன. அப்ஸர ஸ்திரீகளின் விஷயத்தில் அகிருத்யம் முதலியவர்கள் 14 பேரும் மேனகை முதலியவர்களுமான 24பேரும் கூறப்படுகின்றன. முன்பு கூறப்பட்ட கந்தர்வர்கள் அப்ஸரஸ்திரீகள் இவர்களுக்கு ரக்ஷõபந்தம் கொடுத்து நல்ல வாசனை உடைய சந்தனங்களாலும், புஷ்பங்களாலும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு மறுபடியும் ஹேமபர்வ அல்லது ஹேம கூடபர்வதத்திலோ இருக்கும். அபிஷேகத்திற்குப் பிறகு சத்திரியர்களின் அரசன் பருத்தி ஆடை அணிந்து புண்யாக மந்திரங்கள் சங்கத்வணி பெரியதாக சப்தத்துடன்கூடி ஆசமனம் செய்து தேவர்களை ஆசார்யன் பிராம்மணர்களையும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. கொடி, ஆயுதம், வெண் கொடை இவைகளையும் முன்பு கூறிய மந்திரங்களால் பூஜிக்கவும் என கூறப்படுகிறது.
முன்பு துர்கா பூஜா படலத்தில் கொடி முதலியவைகளின் மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. பிறகு ஹோம வேதிகையை அடைந்து அங்கு விருஷபம் , கலைமான், கருப்பு கலைமான், சிம்மம், புலி, இவைகளின் தோல்களை உரித்து அமர்ந்து அங்கு குண்டத்திலோ, ஸ்தண்டிலத்திலோ நாபிஸ்தானத்தில் அமர்ந்து உத்தம ஆசார்யன் சமித்நெய், இவைகளால் நூறு எண்ணிக்கையாக ஹோமம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. இங்கு ஹோம விஷயத்தில் மிருத்யுஞ்சய மந்திரமே உயர்ந்ததானது அறிவிக்கப்படுகிறது. பிறகு ஹோம முடிவில் உத்தம ஆசார்யன் அஞ்சலிகையுடன் கூட எல்லா தேவகணங்களும் இந்த பூஜையை கொண்டு பூமியிலிருந்து செய்யட்டும். அதிகமான சித்தியை கொடுத்து விட்டு மறுபடியும் வரவேண்டும், என கூறவும் என்று அந்த பூஜாகாலத்தில் ஆசார்யனுக்கு தட்சிணை கொடுக்கவும் என கூறுகிறார். விசேஷமாக பிராமணர்களுக்கு தானம் செய்யவும். எல்லா ஜனங்களையும் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கவும். ஸ்வாமியை வணங்கி அவருக்கு கிராமம், ஸ்வர்ணம் முதலியவைகளை சமர்பிக்கவும். பிறகு சந்தோஷமனதை உடையவனும் கிரீடம் முதலிய ஆபரணங்கள் அணிந்தவனுமாக யானையின் மேல் ஏறி மாளிகையை அடையவும் என்பதான கார்ய தொகுப்பு புஷ்யாபிஷேக விதியின் முடிவில் எல்லா அபசகுனம் நீங்குவதற்கும் எல்லா வியாதி நீங்குவதற்கும், ஸார்வபவும பிரசித்தத்திற்கும் ஆயுள், ஆரோக்ய சித்திக்கும், எதிரிகளை ஜயிப்பதற்கும், அந்த இடத்தில் அரசனுக்கு புஷ்பாபிஷேகம் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கவும் என்று பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறாக 80வது படல கருத்து சுருக்கமாகும்.
1. பரிசுத்தமானதும் பாபத்தை போக்கக் கூடியதும், உத்பாதம் முதலிய அபசகுணங்களை அழிக்க வல்லதுமான புஷ்யாபிஷேகம் பற்றி கூறுகிறேன். ஹே பிராம்மண உத்தமர்களே கேளுங்கள்.
2. அழகான புண்ய தேசத்தில் பன்னிரண்டு (12) முழம் அளவுள்ளதாக பக்தியுடன் சுபமான கொட்டகை அமைக்கவும். மத்ய ஸ்தம்பமும் அமைக்க வேண்டும்.
3. மத்தியில் வேதிகை அமைத்து பன்னிரண்டு ஸ்தம்பம் அமைக்கவும். கண்ணாடி போல் அழகாக அலங்கரிக்கப்பட்டதாக அமைக்க வேண்டும்.
4. அதன் மேற்கு பாகத்திலும் தெற்கிலும் மண்டபத்திற்கு வெளியாக இரண்டு வேதிகை ஐந்து, ஆறு முழ அளவுள்ளதாக அமைக்க வேண்டும்.
5. ஒரே அளவான நாற்கோணமாகவும் இரண்டு முழம் உயரம் உள்ளதாகவும் இரண்டு பக்கமும் இரண்டு படிக்கட்டுள்ளதாகவும்
6. இவ்வாறாக எல்லாவற்றையும் அமைத்து ராஜாபிஷேகம் செய்யவும், புஷ்ப மாதமான தை மாதத்தில் பூச நக்ஷத்திரத்தில் நீண்டதான தீர்த்த நதிக்கரைகளிலும், கோயில்களிலும்
7. நந்தவனங்களிலும், புண்ய÷க்ஷத்திரங்களிலும், சிவஸ்தானங்களிலும், விசேஷமாக ஆசார்யன் மந்திரத்துடன் கூடியவனாக வடக்கு, கிழக்கு வட கிழக்கு திசைகளில்
8. அபிஷேக ஆரம்ப முதல் நாளில் தைவக்ஞனால் பலி கொடுக்க சொல்ல வேண்டும். நல்ல புத்திமானாவான் தயிர், பொறி அக்ஷதையுடன் சந்தன, புஷ்பம் இவைகளுடன் பலி கொடுக்க வேண்டும்.
9. இங்கு பூஜையில் விருப்பமுள்ளவர்களான எல்லா தேவர்கள் திசையிலுள்ள நாகர்கள் யானைகள், மற்ற எல்லா அம்சத்தை உடையவர்களும் வாருங்கள் (வரவேண்டும்)
10. என்று ஒரே மனதை உடையவனாக எல்லா தேவாதிகளையும் ஆவாஹனம் செய்யவும். முதலில் தன்னுடைய பூஜையை முடித்து, அரசனுடைய சாந்தியை செய்ய வேண்டும்.
11. இவ்வாறாக மேற்கூறியவாறு பலி கொடுத்து ராத்திரியில் ஸ்வப்னத்தின் பயனை அறியவும். சுபமாயிருத்தால் காலையில் ஆரம்பம் செய்யவும். அசுபமாயிருப்பில் பரிஹாரத்துடன் ஆரம்பிக்க வேண்டும்.
12. திவாரம், தோரணம், இவைகளுடன் கூடிய மண்டபத்தை அலங்கரிக்கவும். முன்பு கூறப்பட்ட முறைப்படி அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும்.
13. ஹே அந்தணர்களே! யக்ஞவ்ருக்ஷத்திலிருந்து, தயார் செய்ததான பத்ராஸநம் அமைக்கவும். ஐந்து ஆறு, மாத்ராங்குலம் முதல் இருபத்தைந்து கை அளவுள்ளதாக
14. பத்ராஸநத்தில் அளவு கூறப்பட்டது அதை பத்திரத்துடன் கூடியதாகவோ பத்ர அமைப்பின்றியோ அமைக்கலாம். விசேஷமாக முன்பக்கமோ பின் பக்கமோ படியுள்ளதாக அமைக்க வேண்டும்.
15. அதன் வடக்கு பாகத்தில் காலுடன் கூடியதாக ஆஸனம் அமைக்கவும். விருப்பப்பட்ட அளவுடன் கூடியதாக படி அமைக்க வேண்டும்.
16. வ்ருத்தி சிராத்தம் என்ற நாந்தி சிராத்தம் செய்வதெனில் முறைப்படி முன்தினமே செய்ய வேண்டும். எல்லா அலங்காரத்துடன் கூடியதாக அங்குரார்ப்பணம் செய்யவேண்டும்.
17. அதிகாலை நவக்ரஹ ஹோமம் முறைப்படி செய்யவும், நான்கு முழம் முதல் ஆறு அங்குலம் வரை அதிகரித்ததாக
18. ஆறு கை அளவு வரையிலாக உள்ளது. மண்டலத்தின் அளவாகும். தெற்கு திசை முதலானதாக நூறு பாகம் செய்யவேண்டும்.
19. தெற்கு திசை முதலாக ஒன்பது அம்சத்தில் தங்கக் கலரில் பாரதவர்ஷம் அமைக்கவேண்டும். வெள்ளை வர்ணமாக இரண்டு பாகத்தில் ஹிமயமலை அமைக்கவும்.
20. ஒன்பதம்சத்தினால் கிம்புருஷவர்ஷம் செய்யவும் அது தங்க கலராகும். இரண்டு பாக அளவில் ஹேம கூடம் என்ற மலை அமைப்பு ஆகும்.
21. ஹேமகூடம் கூறப்பட்டு வடக்கில் ஹரிவர்ஷம் அமைக்கவும். அது தங்ககலர் என கூறப்பட்டு இரண்டு பாகமென்றும், நான்கு பாகத்தால் நிஷதம் அமைக்கவேண்டும்.
22. மேற்கிலிருந்து கிழக்காக இவைகளின் அமைப்பு ஆகும். வடக்கிலுள்ள பாகத்திலிருந்து ஒன்பதம்சம் குருவர்ஷம்.
23. தங்கக் கலராகவும், இரண்டு பாகத்தால் ச்ருங்கவான் என்ற மலையும் மயில் நிறமாக அமைத்து தங்கமயமாக அமைக்க வேண்டும்.
24. ஒன்பது அம்சம் உடைய ஹிரண்யமோ தங்க மயமாகவோ கூறப்பட்டுள்ளது. இரண்டு பாகத்தினால் தங்கநிறமும் வெள்ளையும் கூடியதாக ஸ்வேதாசலம் என்ற மலை அமைப்பை அமைக்க வேண்டும்.
25. ஒன்பது பாகத்தினால் தங்க நிறமுள்ளதாக ரம்யவர்ஷம் அமைக்கவும், இரண்டு பாகத்தினால் வைடூர்யம் போல் நீலாசல மலையும் அமைத்து
26. மீதியுள்ள முற்பத்தி நான்கு பாகத்தில் மத்யமமாக அமைக்கவும், கிழக்கு திசை முதல் முப்பத்தி இரண்டு பாகத்துடன் கூடியதாக
27. வெள்ளை நிறமுள்ள பத்ரவர்ஷம் அமைக்கவும், மேற்கு பாகத்தில் கருப்பு வர்ணமுடையதாக மால்யவான் என்ற மலையை அமைக்க வேண்டும்.
28. மேற்கு திசையிலிருந்து ஆரம்பித்து கேது மாலவர்ஷத்தை அமைக்கவும். முற்பத்திரண்டு பத அளவினால் க்ருஷ்ணவர்ணமாக கந்தமாதன பர்வதம் அமைக்க வேண்டும்.
29. ஸமமாக ஒரு பாகத்தினால் இளாவ்ருத வர்ஷம் அமைக்கவும். ஒரு பாகத்தினால் வெள்ளை வர்ணம் அமைக்கவும், நடுவில் சதுரமான பாகத்தினால்
30. முப்பத்திரண்டு பாகாம்சத்தில் மேருபர்வதம் அமைக்கவும். வடமேற்கு திசையிலிருந்து தென்கிழக்கு திசை வரை வட்டமாக சூத்ரமிட வேண்டும்.
31. அவ்வாறே தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசை வரை மூலை திசைகளின் சூத்ரம் அமைக்கவும். கிழக்கில் வெள்ளை வர்ணமும் தெற்கில் தங்க நிறமும்
32. மேற்கில் கருப்பு வர்ணமும், வடக்கில் சிவப்பு வர்ணமும் மீதமுள்ள எல்லா தேவர்களும் மஞ்சள் நிறமாக சொல்லப்பட்டுள்ளது.
33. நூறு பாக அளவில் ஜம்பூத்வீபமானது கூறப்பட்டுள்ளது. ஜம்பூத்வீப ஸம அளவினாலே லவண சமுத்ரமாகும்.
34. ஜம்பூத்வீப ஸமமாக சாகத்வீபமாகும், அதனிரண்டு மடங்கு அளவினால் ஏழு எண்ணிக்கையுள்ள ஸமுத்ரமும், தீபமும் ஆகும்.
35. லக்ஷம் யோஜனை பரப்பளவுடைய ஜம்பூத்வீபம் கூறப்படுகிறது. அதற்கு வெளியில் அந்த அளவினால் லவண சமுத்ரமும் கூறப்படுகிறது.
36. லவண ஸமுத்திரத்திலிருந்து இரண்டு மடங்கு பாற்கடலும், பாற்கடலைப் போல் இரண்டு மடங்கு தயிர் கடலும், தயிர் கடலிலிருந்து இரண்டு மடங்கு நெய்யும், நெய்யைப் போல் இரண்டு மடங்கு கரும்புச்சாறு கடலும்,
37. கரும்புசாறு கடலிலிருந்து இரண்டு மடங்கு தேன்மயமான கடலும், தேன்மயமான கடலிலிருந்து நல்ல நீர் கடலும் ஜம்பூ த்வீபத்திலிருந்து சாகத்வீபமும் சாகத்வீபத்திலிருந்து குசத்வீபமும்
38. குசத்வீபத்திலிருந்து, கிரௌஞ்சத்வீபமும் கூறப்பட்டு க்ரௌஞ்சத்திலிருந்து சால்மலித்வீபமும் சால்மலியிலிருந்து கோமேதகமும், கோமேதகத்திலிருந்து புஷ்பராகமும் உள்ளதாக அறிய வேண்டும்.
39. சுத்த ஜல ஸமுத்ரத்திற்கு வெளியில் லோகா லோகம் என்ற மலை என்று அறியவும். நடுவில் சிவப்பு வர்ணமும் வெளியில் கருப்பு வர்ணமும்
40. பத்து கோடி யோஜனை அளவு பிரதேசமானது தேவர்களின் விளையாட்டிற்கு ஏற்றதாகும். அதிலிருந்து அத்திரிகிரியும், லோக லோகமும் ஆகும்.
41. பத்தாயிரம் யோஜனை விஸ்தீர்ணம் உடைய தேசம் தேவர்களின் ஆச்ரமமாக ஆகும். இமாலயத்தில் பிசாசுகள் இருக்கின்றன. அவர்களின் பெயர்கள் பின் வருமாறு ஆகும்.
42. த்வஜன், சண்டன், கம்லாஸன், கதலீ, பகன் என்பவனும் படபாமுகன், த்விபாதன், விபாதன், காரகன், என்றும் (விபாதன் என்றும்)
43. ஜ்வாலா, கும்பபாத்ரன், கும்பீ, ப்ரதுந்திகன், ப்ரதுந்திகோபன், உபவீரன், ப்ரவீரன், உலூகலன் என்றும்
44. உலூகலீ, மார்கடீ, மார்கடன், சக்ரஷண்டகன், சக்ரஷண்டீ, பாணிபத்ரன், பாணிபத்ரி, வாஸுகன்
45. வாஸுகி, பாம்சுமன், பாம்சுமதினீ, நிபுணன், நிபுனி, (பலிபுக்) உச்சேஷணா,
46. ப்ரஸ்கந்த: ஸ்கந்திகா என்ற முற்பத்தி நான்கு பெயர் உதாரணமாக்கப்பட்டுள்ளது. இவர்களை மாம்ஸான்னங்களால் கவுரவித்து கள் முதலியவை அளித்து ரக்ஷõபந்தன கயிறுகளால் பூஜிக்க வேண்டும்.
47. ச்வேதாசலத்தில் அசுரர்களும் ராக்ஷஸர்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளன. ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன்
48. இந்த இரண்டு பேரும் திதியின் பிள்ளையாக அறியவும், அசுரர்கள் விப்ரசித்தன் த்வீமூர்த்தா, சம்பரன் சங்குசிரன்,
49. யமன், சங்கு கர்ணன், த்விபாதன், கவேஷ்டி, மேஷ வக்த்ரன், மகவான், கபிலன்,
50. வாமனன், மரீசி, இக்ஷீபன், பாகன், அபாகன், சாவாக்ரஹன் என்று அறிய வேண்டும்.
51. தி÷க்ஷõபன், சுகேசன், கேதுவீர்யன், சதஹ்ரதன், மந்திரஜிது, அச்வஜிது, ராஜி,
52. தேவசித், ஏகவக்தரன், ஸுபாஹு, வாரகன், வைச்வாநரன், சுலோமா, த்ரவினன், மஹாசிரன்,
53. ஸ்வர்பானு, பூஷபூர்வன், த்விபுஜன், த்ருதராஷ்டகன், சந்திரதாபனன், சூக்ஷமன், நிச்சந்திரன்
54. ஸ்வர்ண நாபண், மஹாகிரி, ஆபிலோகன், சுகேசன், மலையன், மலகன்,
55. நயன், நகமூர்தா, மஹோதரன், ப்ரமோதன், குமுதன், அச்வக்ரீவன், வைச்ரவன்,
56. விரூபாக்ஷன், சருபதன், ஹரன், ராஜா, ஹிரண்யயுக், சதமகன், சம்பரன், சரபன், மயன்,
57. சரபன், சூர்யன், சந்திரன் ஆகிய நான்கு பேருக்கும் முன்பு போல் பூஜிக்க வேண்டும்.
58. ச்ருங்கவதி மலையில் பித்ருக்களை பூஜிக்கவும். சுபாஸ்வரர்களை, அமிருதர்கள் அக்னி ஷ்வாத்தர்கள், உபஹூதர்கள்,
59. ஸோமபர்கள், சுகாலிகர்கள், க்ரவ்யாதர்கள், ஆஜ்யபர்கன், தனித்தனியாக மூன்று விதமாக கூறப்பட்டுள்ளன.
60. ஏழு கணங்களால் இருபத்தி ஓர் எண்ணிக்கையாக சொல்லப்பட்டுள்ளன. அக்னி ஸ்வாத்தர்கள் பர்ஹிஷதர்கள், ஸோமபர்கள்,
61. ஹவிஸ்மந்தர்கள், ஆஜ்யபர்கள், சுகாலிகர்கள், அக்னி, அனக்னி, ஹவ்யவாஹனர்கள், ஹவிஸ், ஸளம்யர்கள் பத்து நபர்களாகும்.
62. நல்லெண்ணை, அன்னம், மாம்சம், ரக்ஷõ பந்தன, சூத்திரம் இவைகளால் மேற்கூறியவர்களை பூஜிக்க வேண்டும். நீலாசலத்தில் காச்யபர் முதலான ரிஷிகள் பூஜிக்கப்படவேண்டும்.
63. காச்யபர், அத்ரி, வசிட்டர், பாரத்வாஜர் கவுதமர், விச்வாமித்ரர் ஜமதக்னி, மரீசி,
64. புலஸ்த்யர், புலகர், க்ரது, ஆங்கிரஸ், சனத்குமாரர், சனகர், சனந்தனர், ஸனாதனர்,
65. தக்ஷன், ஜைகீஷவ்யன், தஹனன், ஏகதன், தீவிதர்த்ரிதர், ஜாபாலீ, துர்வாஸர், துர்வனீதகன்,
66. கண்வர், காத்யாயனர், மார்கண்டேயர், தீர்க்கதமர், சுனர், சேபர், விதுரர், சாத்வர், ஸம்வர்தர் என்றும்
67. ச்யவனர், பராசரர், த்வைபாயனர், யவக்ரீதர், தேவராதி, தேவராதா, ஜயன்
68. ஆகிய நாற்பது முனிவர்களை, சந்தனம் ரக்ஷõசூத்திரம் இவைகளாலும் அவரவர் பெயர்களாலும் ரிக், யஜுர், சாம, வேத மந்திரங்களாலோ பூஜிக்க வேண்டும்.
69. நிஷத பர்வதத்தில் அனந்தன் முதலான நாகர்கள் கூறப்பட்டுள்ளன. அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன்
70. பத்மன், மஹாபத்மன், சங்கபாலன், குளிகன் ஆகிய எட்டு நாகர்களை கலப்படமான சந்தன, புஷ்பங்களால்
71. சர்க்கரை, தேன், நெய், இவைகளை ரக்ஷõ சூத்ரத்துடன் கொடுக்கவும், மஹாமேரு, பர்வதத்தில் முற்பத்தி மூன்று தேவர்களை பூஜிக்க வேண்டும்.
72. தரன், த்ருவன், ஸோமன், ஆபன், அனிலன், அணலன், ப்ரத்யூஷன், ப்ரபாசன், ஆகிய எட்டு வசுக்களும்
73. அஜைகபாதன், அஹிர்புத்னி, விருபாக்ஷன், ரைவதன், ஹரன், பஹிரூபன், த்ரயம்பகன், ருத்ரன்.
74. ஜயந்தன், சாவித்ரன், பினாகி, அபராஜிதன், ருத்ரன் ஆகிய ஏகாதச ருத்ரர்களும், இந்திரன் தாதா, பகன்
75. த்வஷ்டா, மித்ரன், வருணன், விவஸ்வாந், ஸவிதா, பூஷா அம்சுமான், விஷ்ணு: ஆகிய பன்னிரண்டு சூர்யன்களும்
76. ப்ரஜாபதி, வஷட்காரன், ஆகிய முற்பத்தி மூன்று தேவர்களும் யஷ்டி நமஸ்கார தூபங்களாலும் ஆஜ்யாஹுதிகளாலும்
77. அர்க்யமும், ரக்ஷõசூத்ரமும், கொடுக்க வேண்டும், ஹேம கூட பர்வதத்தில் கந்தர்வர்களும் அப்ஸரஸ்திரீகளும் பூஜிக்க தக்கவர்கள் ஆவார். சித்ரசேனன், அக்னிசேனகன்
78. சுவர்ணன், கணபன், த்ருதராஷ்டரன், சூர்யவர்ச்சஸன், யுகபுத்திரன், சுசிராமன், அமரநந்தினன்.
79. த்வேதாமதி, சித்ரரதன், பர்ஜன்யன், உர்வீசன், கலி, பர்வதன், நாரதர்
80. சாதனன், சந்தி, குஹரன், கராளன், க்ருதவீர்யன், ப்ரம்மசாரீ, சுபர்ணன், மீனன்
81. ஹிரண்யன், சுசந்திரன், என்று இருபத்தேழு கந்தர்வர்கள் அக்ருதயன், உதயன், கந்தவத்யன்
82. ஊர்ஜன், யுவதயர்கள், ஹேதுகார்யன், ஸ்தவர்கள், அம்ருதர்கள், மோதகர்கள், சுசிவர்கள்
83. ரூபர்கன், பீரவர்கள், சவுர்யர்கள், ஸத்யர்கள், ஆகிய பதினான்கு பேர்களும் மேனகா, சகஜன்யா சகஜஸ்தலா புஞ்சிகஸ்தலா
84. க்ருதஸ்தலா, க்ருதாசீ, விச்வாசீ, பூர்வ சித்திகா, ப்ரம்லோசந்தி, அனும்லோசந்தி, மோசயந்தீ, அனுகா
85. ருத்ரா, அருணா, ப்ரியா, அத்ரஸா, சுபகாதாஸ்யரிஷ்டா, மநோவர்த்தி, சுகேசா திலோத்தமா
86. அக்னிபர்த்தீ, ஹேமா, மேனகா, ஊர்வசீ, இவர்களுக்கு சந்தனம் மாலைகளாலும் இருபத்தினான்கு, அப்சரஸ்திரீகளை வாசனை உள்ள புஷ்பம் சந்தனங்களாலும்
87. ரக்ஷõபந்தனம் முதலியவைகளால் ஹேம கூடமலையில் பூஜிக்கவும். யக்ஷர்களை பூஜிக்கவும். அவர்கள் மஹா வைச்ரவணன்
88. மானிபத்ரன், சுசிரன், ஐவர்களான, பண்டகன், வித்ருதன், பூர்ணபத்ரன், விரூபாக்ஷன், (அஷ்டயக்ஷராட்) என்ற யக்ஷர்களை
89. எல்லா நிறங்களும், உள்ளதான அன்னபலி நீலாசலத்தில் சித்தர்களை பூஜிக்க வேண்டும். மந்த்ரக்ஞன், மந்த்ரவித்தமன்
90. ப்ராக்ஞன், ஹம்ஸராஜன், சித்தபூஜிதன், சித்தவான், பரமசித்தன், கேசரபத்ரகன்
91. ஆகிய எட்டு சித்தர்களை பல வர்ணமுடைய பலிகளால் பூஜிக்கவும். ரக்ஷõசூத்ரம் முதலியவை கொடுக்கவும். மேருமலையில் நவக்கிரஹத்துடன் கூடியதும்
92. நக்ஷத்ரங்கள் சிரேஷ்டமான வினாயகர் இவைகளுடனும், ப்ரும்மா விஷ்ணு மாத்ருதேவர்கள் மஹாதேவன் விசாகன் லோகபாலகர்கள்
93. தேவஸ்தீரிகள் இவர்களை (ஹ்ரஸ்வ மந்திரங்களாலும்) ஏழ்மையினின்றும் காப்பாற்றுபவர்களாலும் பலவர்ண பலிகளாலும் முறைப்படி
94. ரக்ஷõபந்தனம், முதலியவைகளையும், கொடுக்கவும். அந்த தேவர்களின் பெயர் கீழ் உள்ள படியாகும். ஆதித்யன், ஸோமன், அங்காரகன், புதன்,
95. ப்ருஹஸ்பதி, சுக்ரன், சுனைச்சரன், ராஹு, கேது இவர்கள் நவக்ரஹங்கள் ஆவார். க்ருத்திகை (அதன்பிறகு ரோஹினி முதல் மூலம் வரை புஸ்தகத்தில் விடுபட்டுள்ளது)
96. பூராடம், உத்ராடம், அபிஜித், திருவோணம் இவைகளும் அவிட்டம், சதயம், பூரட்டாதி,
97. உத்ரட்டாதி, ரேவதி, அச்வனி, பரணி, இவைகளை நான்கு திக்கிலுமாகும். ப்ராம்ஹி, மாஹேஸ்வரி,
98. வாராஹி, வைஷ்ணவி, கவுமாரி, மாஹேந்திரி, சாமுண்டி, வீரபத்ரன், விநாயகர்,
99. ஸ்கந்தர், மஹாவிஷ்ணு, மஹாதேவன், பிரம்மா, விசாகன், இந்திரன் அக்னி, யமன், நிருருதி, வருணன்,
100. வாயு, குபேரன், ஈசானன், ஆகிய எட்டு லோக பாலர்களையும், (சசி) இந்தராணி, பாஜி, வனஸ்கந்தா, தூம்ரா, மண்டலவர்த்தனி,
101. பூர்ணா, சினிவாலீ, குஹு, ராகாநுமதி, ஆயதா, வ்யயநீ, ப்ரக்ஞா, மேநா, பலா,
102. இந்த தேவஸ்த்ரீகள், பதினான்கு எண்ணிக்கையாக கூறப்பட்டுள்ளன. நாஸத்யௌ அச்விநௌ, தஸ்ரௌ, இவர்களை முறையாக
103. ரக்ஷõ சூத்திரம், வஸ்திரம், கொடி, அணிகலன்களால் பூஜிக்கவும். உயர்ந்த ஆசிரியன் எல்லோர்க்கும் பூணூலை கொடுக்க வேண்டும்.
104. ஐந்து வர்ணங்களால் ஆன ஹவிஸ்ஸும் கொடுக்கவும், பிறகு மேற்குபக்க வேதிகையில் நெய் நிரம்பிய குடங்களை
105. நூல் சுற்றி வஸ்திரம், சாற்றி மாவிலை, தேங்காய் இவைகளை உடையதாக, இருபத்தி எட்டு, எட்டு, நூற்றிஎட்டு என்ற எண்ணிகை உடையதாகவோ
106. ஸ்தாபித்து அதன் நான்கு கோணங்களிலும் பதினாறு எண்ணிக்கை உள்ள நூல் வஸ்திரம், இவைகளுடன் கூடிதான கடங்களை ஸ்தாபித்து அதில் திரவ்யங்களை சேர்க்க வேண்டும்.
107. மூன்று ஜ்யோதிஷ்டோமத்தையும் அபயா, அபராஜிதாவையும், ஜீவா, விச்வேச்வரி, வாரா, சமாங்கா, விஜயா
108. சகா, சகதேவா, பூர்ணா, கோசசதாவரி, அதிஷ்டா, சிவா, பத்ரா ஆகிய இவைகளை கும்பங்களில் ஸ்தாபிக்க வேண்டும்.
109. ப்ராம்மீ க்ஷமா (பூமி) யையும், ஸர்வபீஜங்களையும், தங்கத்தையும், கிடைக்கக் கூடிய மங்களப் பொருட்களையும் எல்லா ஓஷதிரஸங்களையும்,
110. எல்லா செஞ்சந்தனங்களையும், பில்வம் விகங்கதம் இவைகளை ஸமீபமாக வைக்க வேண்டும்.. பெயரைக் கூறிக் கொண்டதாக ஹிரண்யம் மங்கள பொருட்களையும்,
111. ஆயுளுள்ள மூப்புள்ள காளைக்கன்றுக்குட்டியின் தோலை நன்கு லக்ஷணம் உடையதாக கிழக்கில் தலை வைத்ததாகவும் அமைக்கவேண்டும்.
112. பிறகு, அரசனுக்காக புதியதும் பட்டாலானதும் நாற்புறமும் சிவந்தும் மூன்றாவதாக ஸிம்மத்தோலையும், புலித்தோலையும்,
113. இவ்வாறாக நான்கு தோல்களை அந்த வேதிகையின் மேல் விரிக்கவும். ம்ருத்யுஞ்சய மந்திரத்தை கூறிக் கொண்டு சந்தன புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.
114. அதற்கு மேல் ஸிம்மாஸனத்திலிருக்கும் பத்ரபீடத்தை ஸ்தாபிக்கவும் தங்கம், வெள்ளி, தாம்பரம், இவைகளாலும் பாலுள்ள மந்திரத்தினாலும்
115. ஒன்னேகால் ஒன்றரை முழ அளவிலோ ஓர்முழ அளவிலோ உயரம் அமைக்கவும். சார்வபவும மண்டலம் உத்தமம்.
116. சாமான்ய மண்டலம் அதமமாகும். அனந்த ரசிதமண்டலம் மத்யமம் என அறிந்து அமைக்கவும். உத்தமம், மத்யமம், என்ற பேதத்தினால் எல்லாவற்றையும் அமைக்கலாம்.
117. அதற்கு மேல் புஷ்பம் வைத்து அதன் மத்தியில் தங்கத்தை வைக்கவும். ஸ்னானம் சந்தனாதி அலங்காரத்துடன் உள்ள
118. அரசனை கிழக்கு முகமாக அமர்த்தவும். ஜ்யோதிஷர்கள், மந்திரி, அமைச்சர்கள், ப்ரோஹிதர்களிவர்களுடன் கூடி
119. புண்யாஹ வேத மந்திர கோஷங்களால் நாட்யம், வாத்யத்துடன் கூடியதாகவும் பாட்டு முதலிய மங்கள சப்தங்களால் சிவஸ்தாபன முறைகளாலும்
120. புதியதான வெண்பட்டும், பஞ்சாங்க பூஷணத்துடன் உள்ள ஆசார்யன் கம்பளத்தினால் ராஜாவை போர்த்தி வடக்கு முகமாக நின்று அபிஷேகம் செய்ய வேண்டும்.
121. நெய், தேஜஸ்ஸாக கூறப்பட்டு மேலான பாபத்தை போக்கக் கூடியதாகவும், நெய் தேவர்களுக்கு உணவாகவும், நெய் உலகத்தில் பிரஸித்தியாகிறது.
122. பூமி அந்தரிக்ஷம், ஆகாயம் இவைகளில் எந்த பாபங்கள் உண்டோ அவைகள் நெய் ஸ்பர்சம் ஏற்படுவதால் நாசத்தை அடையட்டும்.
123. கம்பளத்தை எடுத்து விட்டு முன்பு ஸ்தாபிக்கப்பட்ட கும்ப தீர்த்தங்களாலும் பலவித பழம் புஷ்பமிவைகளால் மிருதுவானதும் வாசனையுள்ளதுமாக அபிஷேகம் செய்ய வேண்டும்.
124. இந்த மந்திரத்தினால் ஆசார்யன் ராஜாவை அபிஷேகம் செய்யவும், தேவர்கள் புராதன மாக ஸித்தர்கள் எவர்களுள்ளனரோ அவர்கள் அபிஷேகம் செய்ய வேண்டும்.
125. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஸாத்யன், மருத்கணர்கள், ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்ரர்கள், அச்வினீ தேவர்கள் உத்தமமான வைத்யர்கள்,
126. அததி, தேவமாதா, ஸ்வாஹா, ஸந்தி, ஸரஸ்வதி, கீர்த்தி, லக்ஷ்மி த்ருதி ஸ்ரீ, ஸிநிவாலீ, குஹு,
127. நக்ஷத்ரங்கள், முஹூர்த்தங்கள், பக்ஷம், அஹோராத்ரம், ஸந்தி, ஸம்வத்ஸரம் தினேசர்கள் (கிழமை தேவதைகள்) கலை, காஷ்டா, க்ஷணம், லவம்,
128. ஆகிய இவைகள் எல்லாம் உன்னை அபிஷேகம் செய்விக்கட்டும். காலத்தின் சுபமான அவயங்களும், அதிதி, ஸுரஸா, விநதா, கத்ரு,
129. தேவபத்னிகள், தேவமாத்ருக்கள், ஆகிய இவர்கள் உம்மை அபிஷேகம் செய்விக்கட்டும் சுபமாந அப்சரகணங்களும்,
130. வைமாநிகர்கள் ஸுகணங்கள், மனுக்கள், ஸாகரர்கள், ஸரித்துகள், மஹாபாகர்கள், கின்னரர்கள், புருஷர்கள்,
131. மஹாபாகர்களான, வைகானஸர்கள், பிராம்ணர்கள், ஹாயஸர்கள், ஸப்த ரிஷிக்கள், ரிஷி பத்தினிகள், த்ருவஸ்தானர்கள்,
132. மரிசீ, அத்ரி, புலகர், புலஸ்த்யர், க்ரது, அங்கிரஸ், குரு, ஸநத்குமாரர் ஸநகர், ஸநந்தகர்,
133. ஸநாதனர், தக்ஷர், ஜைகிஷவ்யர், ஜலம், ஏகதன் த்ரிதன், ஜாபாலி, காச்யபர்,
134. துர்வாஸர், துர்விநீதா, கண்வர், காத்யாயனர், மார்கண்டேயர், தீர்கதமர், சுனர், சேபர், விதுரன்,
135. அவுர்வர், ஸம்வர்த்தகர், ச்யவநர், அத்ரி, பராசரர், த்வைபாயநர், யவக்ரீதர், தேவராதர் ஸஹாநுஜர்
136. இந்த மற்ற எல்லா தேவர்களும் புண்ய பயனை கூறுபவர்களாக தீர்த்தங்களால் உன்னை அபிஷேகம் செய்விக்கட்டும். எல்லா உத்பாதங்களை நீக்கவல்ல
137. அந்த அதர்வண வேத மந்திரங்களால், ருத்ராத்யாய, மந்திரத்தினாலும், கோசூத்த (பசு) மந்திரத்தினாலும் கூஷ்மாண்ட மந்திரத்தினாலும் குபேர ஹ்ருதய மந்திரங்களாலும்
138. ஹிரண்யவர்ணா, என்றும் ஆபோஹிஷ்டா என்ற மந்திரங்களாலும், ஜபித்து, சிவமந்திரம், அகோர மந்திரம் மிருத்யுஞ்சய மந்திரமோ ஜபித்து
139. ராஜாவை அபிஷேகம் செய்வித்து நிரீக்ஷணம் செய்து, ஸ்னானம் செய்விக்க ராஜா பருத்தி வஸ்திரம், இரண்டை அணிந்து
140. புண்யாஹ சப்தங்கள், சங்கநாத கோஷங்களுடன் கூடி ஆசமனம் செய்து தேவர்களையும் ஆசார்யன் பிராம்ணர்களையும் பூஜித்து
141. பிறகு கொடி, ஆயுதம், வெண்கொற்றக் குடை, இவைகளையும் மற்ற தன்னுடைய உபகரணங்களையும் முன்பு கூறிய மந்திரங்களால் பூஜிக்கவும்.
142. இரண்டு வஸ்திரங்களை உடுத்தி எல்லா ஆபரணங்களையும் அணிந்து எல்லா அலங்காரத்துடனும் ஹோம வேதிகையை அடைந்து,
143. வ்ருஷபம் (பூனை) கலைமான், கவரிமான் சிங்கம், புலி, இவைகளில் தோலை பரப்பி அதில் அரசனை அமர்த்தி
144. கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஆசார்யன் குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ ஸமித், நெய், இவைகளால் நூறு ஆஹுதி ஹோமம் செய்ய வேண்டும்.
145. உயர்ந்ததான மிருத்யுஞ்சய மந்திரத்தால் புரசு சமித்தை ஹோமம் செய்யவேண்டும், ஹோம முடிவில் அஞ்சலி ஹஸ்தமாக இருந்து கீழ்கண்டபடி ஆசார்யன் கூற வேண்டும்.
146. எல்லா தேவ கனங்களும் பூஜையை ஏற்றுக் கொண்டு பூமியிலிருந்து செல்லட்டும். ஏராளமான சித்திகளைக் கொடுத்து சென்று மறுபடியும் திரும்ப வரட்டும்.
147. ஹோம காலத்தில் குரு திருப்தியடைவதற்காக அவர்க்கு தட்சிணையை கொடுக்கவும். அரசன் பிராம்ணர்களுக்கு விசேஷமாக தானம் கொடுக்க வேண்டும்.
148. எல்லா ஜனங்களையும் விடுவிக்கவும். ஈஸ்வரனை வணங்கி அவனுக்கு கிராமம், தங்கம் முதலியவைகளை
149. கொடுத்து, மகிழ்ச்சி அடைந்த மனதை உடையவனாக கிரீடம் முதலானவைகளால் அலங்கரித்துக் கொண்டு யானைமேல் அமர்ந்து அரண்மனையை நோக்கி செல்ல வேண்டும்.
150. எல்லா துன்பங்கள் அழிவதற்கும் எல்லா நோயும் நீங்குவதற்கும் பிரசித்தமான சக்ரவர்த்தி ஆகும் தன்மைக்கும் ஆயுள், ஆரோக்ய சித்திக்கும்,
151. எல்லா சத்ருக்கள் அழிவதற்கும் ராஜாவின் வெற்றிக்காகவும் புண்ய ஸ்தலத்தில் ஒவ்வொரு வருடமும் புஷ்யாபிஷேகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் புஷ்யாபிஷேக முறையாகிற எண்பதாவது படலமாகும்.