செவ்வாய், 25 ஜூன், 2019

கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் ஸ்தல வரலாறு.

உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். தேவலோகத்து கற்பக மரம், கேட்டதை கொடுப்பதைப்போல, இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் "கற்பகாம்பிகை' எனப்பட்டாள். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரரால் தேவாரப்பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம். சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய இந்த சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

இத்தலத்து முருகப்பெருமான் (சிங்கார வேலர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

கபாலீசுவரம் :  பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் கபாலம் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது கபாலீசுவரம் எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.

திருமயிலையைப் பற்றியும் கபாலீசுவரரை பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய "மட்டிட்ட புன்னையங் கானல்...' எனத் தொடங்கும் பதிகமேயாகும். இப்பாடல்கள் மூலம் திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை, ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். இந்நேரத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிர் இழந்தாள். அவளை தகனம் செய்த சிவநேசர், அஸ்தியையும், எலும்பையும் ஒரு குடத்தில் போட்டு வைத்துவிட்டார். சம்பந்தர் இங்கு வந்ததும் நடந்ததை அறிந்து, சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக் கூறினார்.

அப்போது சம்பந்தர் சிவனை வேண்டி,

"மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்''

என்று பதிகம் பாடினார்.

""மண்ணில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தைப்பூசம் என்னும் நல்விழாவை காண்பதே பிறவிப்பயனாகும். அவ்விழாவைக் காணாமல் நீ சென்றுவிட்டது உனக்குத்தானே நஷ்டம்,'' என்ற ரீதியில் இந்தப்பாடல் அமைந்தது. அவர் பாடியதும், பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். அவளை திருமணம் செய்து கொள்ளும்படி சிவநேசர் சம்பந்தரிடம் வேண்டினார். உயிர் இழந்தவளுக்கு மீண்டும் உயிர் அளித்ததால், அவள் எனக்கு மகளாகிறாள் எனச்சொல்லி சம்பந்தர் மறுத்து விட்டார். பூம்பாவையும் இறுதிவரை சிவப்பணியே செய்து சிவனடி சேர்ந்தாள். இவர் பாடிய 11 பாடல்களில் முதல் 10 பாடல்கள் பூம்பாவையை அழைக்கும் முறையில் உள்ளன. இப்பதிகத்தில் இத்தலத்து ஈசனையும் கோயில் பற்றியும் மயிலாப்பூர் பற்றியும் அழகுறக் கூறுகிறார்.

யானையில் தேவியர்: சூரனை வதம் செய்யும் முன்பு, முருகப்பெருமான் இக்கோயிலில் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து வேலாயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன், சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இவர் சிங்காரவேலராக அசுர மயிலுடன், ஒரு சன்னதியில் இருக்கிறார். அசுரனை வென்றதால் இந்திரன் தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அப்போது அவரது வாகனமான ஐராவதம், தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. வள்ளியும், தெய்வானையும் யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.

தல வரலாறு: உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் "நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்' என சாபமிட்டார். "சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்' எனக் கூறினார். அவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து தேவியார் வழிபட்டார். அவர்தம் அரும் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி, "மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காகுக' என வரம் அருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி "மயிலை' என பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பரமனும் அவ்வாறே அருளியதாக வரலாறு கூறுகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இக்கோயிலுக்கு அருகில் உள்ள கோயில்கள்:-

1. புரசைவாக்கம் (சென்னை) - கங்காதரேசுவரர் திருக்கோயில் 
   
2. சிந்தாதிரிப்பேட்டை - ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில் புரசைவாக்கத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது.

3. திருவல்லிக்கேணி - திருவேட்டீஸ்வரர் திருக்கோயில் சிந்தாதிரி பேட்டையிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது.

4.  திருவல்லிக்கேணி - பார்த்தசாரதி திருக்கோயில் (திவ்ய தேசம்) திரு வேட்டீஸ்வரர் கோயிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது.

5. மயிலாப்பூர் - கபாலீஸ்வரர் திருக்கோயில் (பதிவில் காணும் கோயில்) (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருவல்லிக்கேணியிலிருந்து நான்கு  கி.மீ தொலைவில் உள்ளது.

6. மயிலாப்பூர் - வெள்ளீஸ்வரர் திருக்கோயில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது.

7. திருவான்மியூர் - மருந்தீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) மயிலாப்பூரிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ளது.
* * * * *
திருக்கோயில்களின் குளங்களை சீரமைப்பதால், மழைநீர் சேகரிப்புக்கு குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும். இந்த குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன.

நம் தமிழ் நாட்டின் பழமையான திருக்கோயில்களை பாதுகாப்போம்.
கோயில் குளங்களை தூர்வாரி சீரமைப்போம். 
பகவதாஷ்டமி 25.06.2019 ஆனி தேய்பிறை பிறை வாழ்க்கையில் பிரச்சனைகளை தீர்க்கும் அஷ்டமி விரதம்.


அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

* மார்கழி தேய்பிறை அஷ்டமி - சங்கராஷ்டமி

* தை தேய்பிறை அஷ்டமி - தேவ தேவாஷ்டமி

* மாசி தேய்பிறை அஷ்டமி - மகேஸ்வராஷ்டமி

* பங்குனி தேய்பிறை அஷ்டமி - திரியம் பகாஷ்டமி

* சித்திரை தேய்பிறை அஷ்டமி - ஸ்நாதனாஷ்டமி

* வைகாசி தேய்பிறை அஷ்டமி - சதாசிவாஷ்டமி

* ஆனி தேய்பிறை அஷ்டமி -  பகவதாஷ்டமி

* ஆடி தேய்பிறை அஷ்டமி - நீலகண்டாஷ்டமி

* ஆவணி தேய்பிறை அஷ்டமி - ஸ்தானுஷ்டாமி

* புரட்டாசி தேய்பிறை அஷ்டமி - ஜம்புகாஷ்டமி

* ஐப்பசி தேய்பிறை  அஷ்டமி -  ஈசான சிவாஷ்டமி

* கார்த்திகை தேய்பிறை அஷ்டமி - ருத்ராஷ்டமி

அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும். அஷ்டமி விரதமிருப்பவர்கள் அழகிய உருவத்தைப் பெறுவார்கள். உடல் ஊனமில்லாமலும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றெல்லாம் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வரலாம்.

சிவபெருமானின்  அவதாரங்களில் ஸ்ரீபைரவர் அவதாரமும் ஒன்று. சனிபகவானின் குரு பைரவர் மூர்த்தியாகும். ஸ்ரீபைரவர் அவதாரம் 64 வகைகள் உண்டு .

பைரவரின் திருவுருத்தில் பண்ணிரண்டு இராசிகளும் அடக்கம்.

தலையில் மேஷஇராசியும், வாய் ரிஷப இராசியும், கைகளில் மிதுன இராசியும், மார்பில் கடக இராசியும், வயிற்றில் சிம்மம் இராசியும், இடையில் கன்னி இராசியும், புட்டத்தில் துலாம் இராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக இராசியும், தொடையில் தனுசு இராசியும், முழந்தாளில் மகர இராசியும், காலில் கீழ்பகுதி கும்ப இராசியும், காலின் அடியில் மீன இராசியும் அமைந்துள்ளன.

அந்தகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் தேவர்களையெல்லாம் துன்புறுத்தி இன்பம் கண்டான். தேவர்களை மட்டுமல்லாமல் முப்போதும் சிவ சிந்தனையில் திளைத்திருக்கும் முனிவர்களையும் விட்டு வைக்கவில்லை. தேவர்களையும், எப்போதும் தன்னையே நினைத்திருக்கும் முனிவர்களையும் துன்புறுத்தும் அந்தகாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். அவரே அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார். மேலும் கர்வம் கொண்ட பிரம்மதேவரின் தலையைக் கொய்தவரும் பைரவர்தான்.

அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும். 

அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி யாவும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை. பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது. பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது.

அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு  ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும். எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். கெட்ட அதிர்வுகள் விலகும் என்று சொல்லப்படுகிறது. மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. துக்கங்கள் யாவையும் மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை  மேற்கொள்வோம்.
தினந்தோறும் காக்காய்க்கு அன்னம் {சாதம்} போட ஏதாவது மந்திரம் உண்டா?

ஒவ்வொருவரும் தினந்தோரும் தான் சாப்பிடுவதற்கு முன்பாக அந்த உணவை தெய்வத்துக்கு நிவேதனம் செய்து, வீட்டில் இருக்கும்பசு மாடு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கும் வைக்கோல் முதலிய தேவையான உணவளித்து, பகலில் காக்கைக்கும் இரவில் நாய்க்கும் கொஞ்சம் சாதம் போட்டு விட்டுஅதாவது காக பலி ஸ்வான பலி, யாராவது தன் வீட்டிற்கு அதிதி {விருந்தாளி} வருகிறார்களா? என்று சிறிது நேரம் வாசல் பக்கம் பார்த்து விட்டு, பிறகு தனது குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட வேண்டும், அதில் மதியம் சாப்பிடும் முன்பாக காக்கைக்கு உணவளிக்கும் போது கீழ் கண்ட மந்திரம் சொல்ல வேண்டும்...

ஸ்லோகம் –ஓம் ஐந்த்ர வாருண வாய்வ்யா:, ஸௌம்யா யாம்யாஸ்ச நைர்ருதா:
வாயஸா: ப்ரதிக்ருஹ்ணந்து பூமாவன்னம்  மயார்ப்பிதம்.

{இந்திரன், வருணன், வாயு, ஸோமன், யமன், நிர்ருதி மற்றும் இவர்களைச் சேர்ந்த வாயஸங்கள் அனைவரும் என்னால் தரையில் வைக்கப்பட்ட இந்த உணவை பெற்றுக் கொள்ளட்டும்.} என்னும் இந்த மந்திரம் சொல்லி காக்கைக்கு அன்னம் போடவேண்டும். வாயஸம் என்றால் காகம் என்று பொருள் அதனால் தான் சிராத்த பிண்டத்திற்கு வாயஸ பிண்டம் என்று பெயர் இவ்வாறே ஒவ்வொரு நாளும் இரவில் சாப்பிடும் முன்பாக

ஓம் ஸ்வாநௌ ஹி ஸ்யாம சப, லௌ வைவஸ்வத குலோத்பவௌ
தாப்யாமன்னம் ப்ரதாஸ்யாமி ஸ்யாதா மேதாஹிம்ஸதௌ

{கருப்பு நிறத்துடனும் பல நிறங்களுடனும் இருக்கும் வைவஸ்வத மஹாராஜாவின் குலத்தில் பிறந்த இரண்டு நாய்கள் {அரசர்} என்னை துன்புறுத்தாமல் இருக்கட்டும். இவர்களுக்கு நான் உணவளிக்கிறேன்} என்னும் மந்திரம் சொல்லி நாய்க்கு உணவளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நாய் மற்றும் அதன் ஜாதியைச் சேர்ந்த எந்த ப்ராணியாலும் நமக்கு ஆபத்து நேராது. மேலும் காக்கைக்கு உணவளிப்பதால் நம் முன்னோரும், நாய்க்கு உணவளிப்பதால் பைரவரும் திருப்தி அடைகிறார்கள் என்கிறது சாஸ்த்திரம்.
திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.