நாச்சிமுத்து!
திருக்கழுக்குன்றத்தில் நெடுங்காலத்துக்கு முன்னர் நாச்சிமுத்து என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவள் உருத்திரக் கணிகையர் வகுப்பைச் சேர்ந்தவள். இறைவன் மீது எல்லையில்லா அன்பு கொண்டவள். திருக்கழுக்குன்றத்துக் கோயிலில் இறைவனின் முன்பு நாட்டியமாடுதல் இவள் பணியாக இருந்தது. இவளிடம் ஒரு வைணவர் பேரன்பு கொண்டவராக விளங்கினார். இவளுடைய அன்பினால் அவருக்கும் சிவபக்தி உண்டாயிற்று. தமிழ் புலவரான இவர் திருக்கழுக்குன்றத்து இறைவன் மீது திருக்கழுக்குன்ற பாமாலை என்னும் நூலைப் பாடினார். அப்பாடல் பொருட்சுவையும் சொற்சுவையும் நிரம்பியது. உருத்திரக் கணிகையான நாச்சிமுத்துவும் அம்மாலையின் பாடல் ஒன்றைத் தினமும் கோயிலில் இறைவன் முன்பு பாடி, அபிநயம் செய்வது வழக்கம்.ஒரு நாள் மாலையில் கடுங்காற்று வீசி, கனமழை பெய்தது. அதனால் அவளால் கோயிலுக்குச் சென்று இறைவன் முன்பு தனது நாட்டியச் சேவையைச் செய்ய முடியவில்லை. இதனால் அவள் மிகவும் வருத்தமடைந்தாள். இந்த வீட்டு முற்றத்தில் இறைவன் எழுந்தருளியிருந்தால் எனது நாட்டியச் சேவையை செய்திருப்பேனே என்று எண்ணினாள். பின்பு, அங்கு சிவபெருமான் எழுந்தருளி இருப்பதாக பாவனை செய்துகொண்டு, அன்று பாட வேண்டிய பாடலைப் பாடி, அபிநயம் செய்யத் தொடங்கினாள். அவள் அன்பில் மகிழ்ந்தார் இறைவன். ஆடல்வல்ல பெருமானான சிவன், அவளுடைய ஆடலையும் பாடலையும் கண்டு குளிர்ந்து போனார். அவளுக்குக் காட்சி அளித்து, முக்தியும் அருளினார்.நாச்சிமுத்து நாச்சியார், பெருமானின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு கயிலைக்குச் செல்லத் தொடங்கினாள். அவள் இறைவனுடன் செல்வதைக் கண்ட அவளுடைய அன்பான வைணவரும் ஓடி அவளுடைய திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டே விண்ணுலகம் சென்றார். இச்சம்பவத்தை க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ், கழுகாசல சதகம் ஆகிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. லிங்கப்பதிகம் என்னும் நூல் இந்த நிகழ்ச்சியை முற்றத்திலே வந்து தாதி தமிழைக் கேட்டு மோட்சம் கொடுத்த லிங்கம் என்று குறிக்கின்றது.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
திங்கள், 23 செப்டம்பர், 2024
நாச்சிமுத்து....
நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?
நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?
நவராத்திரி மூன்றாம் நாளில் அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன்கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.
இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.
நாளைய நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.
பாட வேண்டிய பாடல்:
என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.
நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!
நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!
அம்பிகையை நாளை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி என்றும், "குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள். சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறுதீப்பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறுகுழந்தைகளாக மாறியது. கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி "கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். "வேல் என்றால் "வெற்றி . அந்த சக்திவேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன் னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்.
நாளைய நைவேத்யம்: தயிர்சாதம்
தூவவேண்டிய மலர்: முல்லை
பாட வேண்டிய பாடல்:
இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
பராசரர்...
பராசரர்!
இருமாமுனிவர்கள் வசிஷ்டரும், கோசிகரும். இவர்கள் இருவருக்கிடையில் ஒற்றுமை இருந்ததே இல்லை. பகையுணர்வின் காரணமாக கோசிகன், வசிஷ்டரை பழி வாங்க முயன்று தவவலிமை இழந்து மீண்டும் தபோதனராகப் பலமுறை முயன்று தன் தவ வலிமை பெற்று வந்தார். உதிரன் என்ற அரக்கன் மூலம் தனது தவ வலிமைகளைத் தந்து வசிட்டரின் புதல்வர்களை அழிக்க ஏற்பாடு செய்தார் கோசிகன். வசிட்டரும் அருந்ததியும் இல்லாத சமயம் அவர்களது பிள்ளைகளை மாய்த்து விட்டான். வசிட்டரும், அருந்ததியும் மனமுடைந்து இருந்தனர். வசிட்டரின் மகன் சக்தி என்பவனின் மனைவி திரிசந்தி கருவுற்றிருந்த காரணத்தால் அவளது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள். தகவலறிந்து வந்து தானும் உயிர் துறக்க முற்பட்டாள். வசிட்டரும், அருந்ததியும் தங்களது வாரிசு அவளது வயிற்றில் வளர்வதனால் சாந்தப்படுத்தி கண்ணும் கருத்துமாக திரிசந்தியைப் பாதுகாத்தனர். தக்கதோர் நன்னாளில் திரிசந்தி ஆண் மகவொன்று ஈன்றெடுத்தாள்.
பேரனுக்கு பராசரன் என்று பெயரிட்டு கல்வியறிவூட்டினர். நற்குணம் நற்செயல்களோடு வேத நூல்யாவும் அறிந்தான். அவனது மனத்தில் இருந்த குறையை தாயிடம் கேட்டான். பாட்டி சுமங்கலியாக, தாய் அமங்கலியாக இருப்பதன் காரணம் பற்றி கேள்விகளாகக் கேட்டு துளைத்தெடுக்கும் நிலையில் உண்மையில் நடந்தவற்றை திரிசந்தி உரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தாத்தா, பாட்டி, தாயின் மனமுவந்த ஆசிகள் பெற்று மனத்தை ஒருநிலைப்படுத்தி சிவபெருமானை நோக்கிக் கடுமையாக தவமேற் கொண்டான். நேரில் காட்சி தரும் நிலையும் ஏற்பட்டது. தன் தந்தையைக் காணவும், அரக்கர்களை அழிக்க ஆற்றலும் வேண்டிக் கோரினான். அவனது பக்தியின் வலிமையால் பராசரரின் தந்தையான சக்தி அங்கு தோன்றுமாறு ஈசன் கருணை புரிந்தான். தந்தையைக் கண்டு வணங்கி ஆசிகள் பெற்றான். அரக்கர்களை அழிப்பது எளிதல்ல என்பதால் வேள்வி செய்யுமாறு ஈசன் பணித்தார். ஈசன் உபதேசித்தப்படி சிறந்ததொரு யாகம் மேற்கொண்டான். யாகத்தில் ஏற்படும் புகை முழுவதும் அரக்கர்கள் இருக்குமிடத்தில் பரவி அரக்கர் கூட்டம் அழிந்து விட்டது.
யாரோ செய்த தவறுக்குப் பலர் அழிவதை உணர்ந்த வசிட்டர் தனது பேரன் பராசரரிடம் பலர் அழியக் காரணமாகி பலரைக் கொன்ற பாபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நாம் இறைவனை வேண்டி வழிபடுவதே தக்க செயலாகும் என்று கூறி வேள்வியை நிறுத்துமாறு உபதேசித்தார். அச்சமயம் அங்கு வந்த புலஸ்திய முனிவரும் பராசரரிடம் பிற உயிர்கள் அழியாத நிலையில் தவமேற் கொண்டோர் வாழ்வதே சிறப்பு என விளக்கினார். பாட்டனாரும், புலஸ்தியரும் கூறிய வார்த்தைகட்கு இணங்கி பராசரர் இறைவழிபாட்டில் தன் வாழ்க்கைப் பணி ஏற்றார். மூத்தோர் சொல் அமுதமாகும் என்பதை உணர்ந்த காரணத்தால் பராசரர் தனது அறிவை ஞானத்தின் பால் மாற்றி மெய் ஞானம் உணர்ந்திட்ட மஹானாக விளங்கினார் என்றும், அழியாப்புகழுடன் சிறந்த நூல்களை எழுதி வரும் சந்ததிகட்கு வழிகாட்டிய மஹானாகத் திகழ்ந்தார்.
நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!
நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!
நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.
மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்து விட்டு சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்து விட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால் தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி போர்க்கோலம் பூண்டு சும்ப நிசும்பர்களையும் அவர்களது படைத்தளபதிகளான மது கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலை நாட்டினாள்.
அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும் மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
நவராத்திரி முதல் நாள்
நவராத்திரி முதல் நாள் வழிபாடு
நவராத்திரியின் முதல் நாளில் (அக். 02 ல்) அம்பாளுக்கு “மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். “அண்டம் என்றால் “உலகம். “சரம் என்றால் “அசைகின்ற பொருட்கள். “அசரம் என்றால் “அசையாத பொருட்கள். ஆம்…அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்
சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி