சனி, 24 ஆகஸ்ட், 2019

07.கோரக்கர்

பெண்ணே ! இன்னும் என்ன கலக்கம். உனக்குத்தான் ஒரு மகன் பிறந்திருப்பானே ! அவன் உன்னைக் கவனிப்பதில்லையோ என்ன ! எதற்காக அழுது கொண்டிருக்கிறாய் ? என்ணார் மச்சேந்திர சித்தர். மச்சேந்திரன் பிறப்பு அலாதியானது. சிவபெருமான் ஒருமுறை பார்வதிதேவிக்கு ஒரு கடற்கரையில் அமர்ந்து மந்திர உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மீன், ஒரு மந்திரத்தை அப்படியே கிரகித்துக் கொண்டது. அந்த மந்திரம் மனித வடிவாக மீனின் வயிற்றில் உருவாகி வெளிப்பட்டது. மீனுக்கு மச்சம் என்ற பெயரும் உண்டு. அந்தக் குழந்தைக்கு மச்சேந்திரன் எனப் பெயரிட்ட சிவன், நீ சித்தனாகி மக்களுக்கு நலப்பணி செய்வாயாக என அருளினார். சிவனருளால் பிறந்த மச்சேந்திரர், பல இடங்களுக்கும் சென்ற போது, ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். சுவாமி ! நான் குழந்தையின்றி இருக்கிறேன். ஊராரும் என் குடும்பத்தாரும் என்னை மலடி என திட்டுகின்றனர். என் நிலைமைக்கு தீர்வு எப்படி வரப்போகிறதோ என கலங்குகிறேன், என்றாள் கண்ணீர் சிந்தியபடியே. அம்மா ! அழாதே. இதோ! திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய், என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்று விட்டார். திருநீறுடன் தெருவில் சென்று கொண்டிருந்தவனை அவளது தோழி ஒருத்தி பார்த்தாள். சாமியார் திருநீறு தந்த விபரத்தை அந்தப்பெண் தோழியிடம் சொன்னாள். தோழி அவளிடம், அடிபைத்தியக்காரி ! யாராவது திருநீறு கொடுத்தால் அதை வாங்கி விடுவதா ! இதை சாப்பிட்டால் நீ மயங்கி விடுவாய். அந்த சாமியார் உன்னை தன் தவறான இச்சைக்கு ஆட்படுத்தி விடுவார். இதை வீசி எறிந்து விடு, என்றாள். தோழி சொன்னதிலும் உண்மையிருக்குமோ என்று பயந்து போன அந்தப் பெண், திருநீறை வீட்டுக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டு விட்டாள்.

சில ஆண்டுகள் கடந்தன. அந்தப் பெண், இப்போதும் அழுது கொண்டிருக்க, மச்சேந்திரர் வந்தார். அப்போது தான், மேற்கண்ட கேள்வியைக் கேட்டார். சுவாமி ! என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் கொடுத்த திருநீறை என் தோழி சொன்னதால் பயத்தில் அடுப்பில் போட்டு எரித்து விட்டேன். எனக்கு இன்னும் குழந்தையே பிறக்கவில்லை. என்னை மன்னிக்க வேண்டும் என்றாள். அவளது நிலைமையில் யார் இருந்தாலும் அப்படித் தான் செய்திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மச்சேந்திரர் அவளிடம் கோபிக்கவில்லை. சரியம்மா ! உன் வீட்டு அடுப்புச் சாம்பலை எங்கே கொட்டுவீர்கள் ? ஒரு வேளை கொட்டியதை அப்புறப்படுத்தி விட்டீர்களா ? என்றார். இல்லை சுவாமிஜி அடுப்புச்சாம்பலை இதோ அந்த எருக்குழியில் (கழிவுகளை உரமாக்கும் தொட்டி போன்ற அமைப்பு)  போட்டு வைத்திருக்கிறோம், பல ஆண்டுகளுக்கு  ஒருமுறை தான் அதை அப்புறப்படுத்துவார்கள். நான் திருநீறை எரித்து சாம்பலும் இத்துடன் கலந்து தான் கிடக்கிறது, என்றாள். மச்சேந்திரர் மகிழ்ந்தார். உனக்கு யோகமிருக்கிறது, என்றவர், எருக்குழியில் அருகே போய், கோரக்கா ! என குரல் கொடுத்தார். என்ன சித்தரே ! என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. எழுந்து வெளியே வா, என்றார் சித்தர். அப்போது, சாம்பலைக் கொடுத்த நாளில் இருந்து, இதுவரை கடந்த பத்தாண்டுகளைக் கடந்த நிலையில், பத்து வயது சிறுவன் ஒருவன், தெய்வ லட்சணங்களுடன் எழுந்து வந்தான். அவனை தாயிடம் ஒப்படைத்தார் மச்சேந்திரர். சுவாமி ! தாங்கள் தந்த திருநீற்றின் மகிமை அறியாமல், வீசி எறிந்தேன். இவனை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை இழந்தேன். என அழுதவள், மகனை அரவணைத்துக் கொண்டாள். ஆனால், அந்த சிறுவனோ அன்னையின் பிடியில் இருந்து தன்னை உதறிக்கொண்டு வெளிப்பட்டான். தாயே! என்னை சிறு வயதிலேயே வீசி எறிந்துவிட்டாய். நான் இந்த நாற்றம்பிடித்த குழியில் இவ்வளவு நாளும் கிடந்தேன். என்னை ஒதுக்கிய உன்னோடு இணைந்து வாழ நான் விரும்பவில்லை. மேலும், நான் தவ வாழ்வில் ஈடுபடப்போகிறேன். இருப்பினும், நான் இந்த பூமிக்கு வர காரணமாக இருந்ததற்கும், என் தாய் என்ற முறையிலும் உன்னை வணங்குகிறேன். நான் இந்த சித்தருடன் செல்கிறேன். என்னை வழியனுப்பு என்றான்.

கைக்கு கிடைத்தும் வாய்க்கு கிடைக்காமல் போனாலும், மகனின் உறுதியான பேச்சால் ஆடிப்போன அந்தத்தாய், வேறு வழியின்றி கோரக்கருக்கு விடை கொடுத்தாள். அதன்பின் கோரக்கர் நாலா திசைகளிலும் அலைந்தார். அவருக்குள் மனிதனையும் பிற உயிர்களையும் படைக்கும் பிரம்மனின் தொழிலை தானே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: