புதன், 9 நவம்பர், 2016

4. திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)
பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : தை மகம் (தேய்பிறை பிரதமை திதி)
கிழமை : ஞாயிறு
தந்தை : பார்க்கவ முனிவர்
தாய் : கனகாங்கி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத விருத்தம்
பாடல்கள் : 216
சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்,
பிற பெயர்கள் : மழிசைப்பிரான், மஹீஸாபுரீஸ்வரர், பக்திஸாரர், பார்க்கவர்.


சக்கரத்தாழ்வாரின் அம்சமான திருமழிசை ஆழ்வார் பார்க்கவ மகரிஷியின் மகனாக திருமழிசை என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர். பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை எடுத்துச்சென்று வளர்த்தார். ஆனால் ஆழ்வார் பிறந்தது முதல் பால் கூட குடிக்கவில்லை. இதைக்கேள்விப்பட்ட வேளாளர் ஒருவர் தன் மனைவியுடன் பசும்பாலை காய்ச்சி எடுத்து வந்து இவருக்கு கொடுத்து அருந்தக் கூறினார். இப்படியே தினமும் வேளாளர் கொடுத்த பாலை குடித்து வந்த ஆழ்வார். ஒரு நாள் சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அவர்களிடமே அருந்தக் கூறினார். மனைவியுடன் அந்த பாலை அருந்திய வேளாளர் தன் முதுமை நீங்கி இளமை பெற்றார். பாலின் மகிமையால் இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கனிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். களிக்கண்ணனும் திருமழிசை சீடர் ஆனார். பல சமயங்களில் உள்ள குறைபாடுகளை அறிந்த ஆழ்வார் கடைசியில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார். ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், திருமழிசை ஆழ்வாரை வைணவ சமயத்தை ஏற்கச் செய்ததுடன் திருமந்திர உபதேசம் செய்தார். ஒருமுறை காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார் அங்குள்ள திருவெங்குடி திருத்தல பெருமாளுக்கு பல ஆண்டுகள் தொண்டாற்றி வந்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டியின் விருப்பப்படி அவளுக்கு இளமை வரம் கொடுத்தார். இவளின் அழகில் மயங்கிய பல்லவ மன்னன் இவளை தன் மனைவியாக்கினான். தனக்கும் இளமை வரம் வேண்டும் என்று விருப்பப்பட்ட மன்னன். ஆழ்வாரின் சீடனான களிகண்ணனிடம் தனக்கும் இளமை வரம் கேட்டான். ஆனால் எல்லோருக்கும் ஆழ்வார் வரம் தர மாட்டார் என களிக்கண்ணன் கூறியதால் அவனை நாடு கடத்த மன்னன் உத்தரவிட்டார். இதையறிந்த ஆழ்வார் சீடனுடன் தானும் வெளிறே முடிவு செய்து காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை எனவே நீயும் எங்களுடன் வந்து விடு என அழைத்தார். பெருமாளும் தன் பாம்பணையை சுருட்டிகொண்டு ஆழ்வாருடன் சென்றார். இதனால் இந்த பெருமாளுக்கு சொல் வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அதன் பின் கும்பகோணம் வந்த ஆழ்வார் நீண்ட காலம் அங்கிருந்து பெருமாளுக்கு சேவை செய்து திருவடியை அடைந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் தனியாக சென்று 2 கோயில்களையும் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 13 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஆழ்வார்களும் அவதாரமும்
2. பூதத்தாழ்வார்

பிறந்த ஊர் : மகாபலிபுரம்
பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)
கிழமை : புதன்
எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.



மகாபலிபுரத்தில் மல்லிகைப்புதரின் நடுவில் நீலோத்பவ மலரின் பெருமாளின் கவுமாதிதி என்னும் கதையில் அம்சமாக பிறந்தார் பூதத்தாழ்வார். இந்த உலக வாழ்வை சிறிதும் விரும்பாமல் பரமனிடம் ஆழ்ந்த பக்தியோடு திகழ்ந்தார். இவர் 13 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். முதல் ஆழ்வார் மூவருள் இரண்டாவது ஆழ்வார் இவர். பொய்கையாழ்வார், பேயாழ்வார் இருவரையும் திருக்கோவிலூரில் சந்தித்து மகிழ்கிறார். பொய்கையாழ்வார் வையம் தகளியாய் என ஆரம்பித்து நூறு பாடல்களை பாட பூதத்தாழ்வாரோ அன்பே தகளியாய் என நூறு பாடல்களை பாடினார். மகிழ்வில் உருகிய மனமாகிய திரியை பக்தி என்று எண்ணெயில் இட்டு ஞானச்சுடர் ஏற்றி என பாடி திருமாலை பாடும் பெருமையை தனக்கு கிடைத்ததை நினைத்து அடிக்கடி மகிழ்கிறார். பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளின் புகழைப் பரப்பினார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பூதத்தாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 14 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

3. பேயாழ்வார்

பிறந்த ஊர் : மயிலாப்பூர்
பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)
பிற பெயர்கள் : கைரவமுநி, மஹதாஹ்வயர்.



 இவர் சென்னையிலுள்ள ஆதிகேசவப்பெருமாள் கோயில் அருகிலுள்ள குளத்தில் அதிசயமாக மலர்ந்த செவ்வரளிப்பூவில் பிறந்தவர். சிறுவயது முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அவர் மனம் எப்போதும் பரமனின் திருவடியையே நாடி நின்றது. திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி நாள்தோறும் தொடுப்பார் இவர். அப்பொழுது இவர் கண்களில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டோடும். திருமாலின் திருப்பாதம் பணியுங்கள். உங்கள் வினைகள் ஓடிப்போகும். அத்துடன் மீண்டும் உங்களை தொடாது. இதையே
அகநன்று, இது தீது என்று ஐயப்படாதே
மது நன்று தண் துழாய் மார்வன்-பொது நின்ற
பொன்அம் கழலே தொழுமின் ! முழு வினைகள்
முன்னம் கழலும் முடிந்து என்ற பாடலால் உணர்த்தியுள்ளார். இவர் நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதியை அருளினார். முதலாழ்வார்கள் எனப்பட்ட பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரில் இவர் தான் அதிகமான ஸ்தலங்களைப்பாடியுள்ளார். அத்துடன் பதினைந்து திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கோவிலூரில் உள்ள ஒரு வைணவரின் வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் நாராயணன் நிற்பது முதலில் பேயாழ்வாருக்கு தான் தெரிந்தது. இப்படி பரமனைக் கண்ட பரவசத்தில் திருக்கண்டேன். பொன்மேனி கண்டேன் என்று துவங்கி நூறு பாடல்களை பாடினார். மேலும் திருவேங்கடம் சென்ற இவர் பெருமானை சிவனும், விஷ்ணுவும் கலந்த உருவாக கண்டார். பெருமாள் மேல் ஆராக்காதல் கொண்டு வேறு எதையும் நினைக்காமல் வாழ்ந்தார். பேயனாயொழிந்தே ஏனம்பிரானுக்கே என்று பாடியருளினார். பக்தி பரவசத்தில் அதுவே ஒரு வெறிபோல் தோன்றும்படி அவர் அழுவார். தொழுவார். ஆடிக் காண்பார் இறை பக்தியில் தன்னை முழுதும் மறந்து போனதால் இவர் பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தார். இதனாலேயே இவர் பேயாழ்வார் என் அழைக்கப்பட்டார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பேயாழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 12 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
பன்னிரெண்டு ஆழ்வார்கள் பற்றிய விபரம் பகுதி : 1
ஆழ்வார்களும் அவதாரமும்
பொய்கையாழ்வார்
பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்
பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை : செவ்வாய்


எழுதிய நூல் : முதல் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : திருமாலின் சங்கின் அம்சம் (பாஞ்சஜந்யாம்சம்).
பிற பெயர்கள் : பொய்கைப்பிரான் கவிஞர் போரேறு, பத்மமுநி ஸரோயோகி காஸாரயோகி

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று !

இவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார்.

வைணவத்தினர் இவரை கவிஞர் தலைவன் என்று போற்றுகின்றனர். இவர் காஞ்சி நகர் திருவெக்கா பொய்கையில் அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர் பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார். திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார். கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார். அத்துடன் தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார். மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தவர். சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார். தன்னையே மறந்து பகவானை பாடி மகிழ்வார். ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவைசெய்தும் வாழ்ந்து வந்தார். இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார். ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்து சேர்ந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார். இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார்.