ஞாயிறு, 27 அக்டோபர், 2024

கட உபநிஷதம்

கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்) ஒரு கண்ணோட்டம்!

வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது பாரதத் திருநாடு ஆன்மஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை. ( வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் தமேவ விதித்வா திம்ருத்யுமேதி நான்ய: பந்தா வித்யதேயனாய- சுவேதாஸ்வதர உபநிஷதம், 3.8) அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள் (ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5) என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறை கூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோகூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகை புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.........ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன் முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது. மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்........அவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்  என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர், ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்

அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்) பிராம்மணம் (யாக விவரங்கள்) ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சி.)

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.

வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கவுசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார், 14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.

வேதம்-உபநிஷதம்

ரிக்- ஐதரேய, கவுசீதகி

யஜுர்- ஈச, கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண

சாம-கேன, சாந்தோக்கிய

அதர்வண- ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய

யஜுர் வேதத்தில் சுக்ல யஜுர் தேவம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. கிருஷ்ண யஜுர் வேதத்தில் தைத்திரீய ஆரண்யகம் என்ற பகுதியில் கட உபநிஷதம் உள்ளது. கடர் என்ற முனிவர் இதை அருளியதால் கட உபநிஷதம் என்று வழங்கப்படுகிறது.

கட உபநிஷதத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதியில் மூன்று அத்தியாயங்கள், இரண்டாம் பகுதியில் மூன்று அத்தியாயங்கள். இந்த ஆறு அத்தியாயங்களிலுமாக 119 மந்திரங்கள் ( இன்றைய வழக்கில் மீண்டும் மீண்டும் சொல்லி, அதாவது ஜபித்து உய்வு பெறுவதற்கான ஒன்றே மந்திரம்(மனனாத் த்ராயதே இதி மந்த்ர) என்று கொள்ளப்படுகிறது. ஆனால் வேதப் பாடல்கள் அனைத்துமே மந்திரங்கள் என்றுதான் வழங்கப்படுகின்றன) உள்ளன.

பாரதத்தின் பண்டைய ஆச்சாரியர்களும் சரி, இன்றைய ஆச்சாரியர்களும் சரி கதைகள்மூலம் உயர் உண்மைகளைப் போதிப்பதில் நிகரற்று விளங்குகிறார்கள். அதற்கு முன்னோடியாகத் திகழ்பவை உபநிஷதங்கள். கட உபநிஷதத்திலும், உலகையே வெல்வதற்காக வாஜசிரவஸ் என்ற பணக்காரர் செய்த யாகம் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளின்மூலம் உண்மை புகட்டப்படுகின்றன.

நசிகேதன் ஒரு சிறுவன், வாஜசிரவஸின் மகன். தந்தை, யாக நியதிகளைச் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதைக் கண்ட அவன் தந்தையின் தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டான். அதை வாஜசிரவஸ் விரும்பாததால் அவன் எமதர்மனிடம் செல்ல நேர்ந்தது. எமதர்மனிடம் மூன்று வரங்கள் பெற்றான் அவன். மூன்று வரங்களின்மூலம் இந்த உபநிஷதத்தில் உயர் உண்மைகள் போதிக்கப்படுகின்றன.

பிறப்பும் மரணமும் வாழ்க்கையின் இரண்டு மாபெரும் புதிர்கள். பிறப்பு நம் வாழ்வில் நடந்துவிட்ட ஒன்று; அதைப்பற்றி நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. மற்றொரு புதிர் மரணம். மரணம் என்றால் என்ன, அப்போது மனிதனுக்கு என்ன நடக்கிறது, அதன்பிறகு அவன் என்ன ஆகிறான் போன்ற கேள்விகளுக்கு விடை காண அன்றிலிருந்து இன்று வரை மனிதன் முயன்று கொண்டிருக்கிறான். சாஸ்திரங்களும் அதனைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விளக்கத்தான் செய்துள்ளன. ஆனாலும் மரணம் என்பது இன்றுவரை ஒரு புதிராகவே உள்ளது.

கட உபநிஷதம் தனக்கென்று ஒரு கோணத்தை எடுத்துக்கொண்டு மரணத்தை ஆராய்கிறது. மரணத்தின் போது என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த உபநிஷம் கூறுகிறது(2.2). ஆனால் மரணத்தைப்பற்றி ஆராய்வதைவிட அதை வென்று அறுதி உண்மையை அடைவதே முக்கியம்; நம்மிடம் தரப்பட்டுள்ள வாழ்க்கையை உரிய முறையில் வாழ்வதே அதற்கு வழி என்று சுட்டிக் காட்டுகிறது இந்த உபநிஷதம்(உதாரணமாக 1.1.18)

வித்யைகள்: மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிக்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்று அடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிஷதங்களும் தங்களுக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகின்றன. இவை வித்யை எனப்படுகின்றன. வித்யைகள் எண்ணற்றவை. ஆனால் தற்போது சுமார் 35 வித்யைகள். இந்த 14 முக்கிய உபநிஷதங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்து விட்டதாலும், வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறையோ சரியான பொருளோ நமக்கு தெரியாமல் போய் விட்டது.

கட உபநிஷதத்தில் இரண்டு வித்யைகள் கூறப்பட்டுள்ளன 1. நசிகேத வித்யை(1.1.14 மற்றும் 1.3.2) 2. அங்குஷ்ட்ட மாத்ர வித்யை(2.1.12 மற்றும் 2.3.17). இந்த இரண்டு வித்யைகளும் இரண்டு படிகள் போல் அமைந்து, இறைவனை உணர்வதற்கான, மரணத்தை வெல்வதற்கான ஒரு பாதையாக விளங்கியிருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

மொழிபெயர்ப்பு: 1935-இல் கடலங்குடி ஸ்ரீநடேச சாஸ்திரிகள் ஸ்ரீசங்கரரின் விளக்கவுரையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தற்போது வெளிவருகின்ற இந்த மொழிபெயர்ப்பு, கடஉபநதிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன.

1. தத்துவச் சிக்கல்கள் எதையும் கருத்தில் கொள்ளவில்லை. உதாரணமாக, ஈசுவரன், பிரம்மம் போன்ற வார்த்தைகள் தத்துவரீதியாக பரம்பொருளின் வெவ்வேறு நிலைகளைக் குறிப்பிடுபவை. இருப்பினும் தமிழில் இறைவன் போன்ற பொதுப்பதங்களையே பயன்படுத்தியுள்ளோம். இறைவன் என்ற மாபெரும் சக்தியுடன் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
2. அதுபோலவே காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.

அமைப்பு: ஒவ்வொர் அத்தியாயத்திலும் முதலில் அந்த அத்தியாயத்தின் கரு கூறப்படுகிறது. பிறகு சம்ஸ்கிருத மூலம், தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், திரண்ட பொருள் விளக்கம் என்று ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொர் அத்தியாயத்தின் கடைசியிலும் தரப்பட்டுள்ள சுருக்கம் என்ற பகுதி, விரிவாகப் படித்ததை எளிதாக மனத்தில் வைத்துக்கொள்ள உதவுகிறது. அதே வேளையில் பொருள் குறிப்பு அகராதியாகவும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வார்த்தை: உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள். வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருள் அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல. உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மைபெற்று நாம் இறைவனை நோக்கி முன்னேற முன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும் மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும். பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காக சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளின் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.

சாந்தி மந்திரம்: எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிரகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும் போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல் அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.

கட உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம் இது.

ஓம் ஸஹ நாவவது
ஸஹ நௌ புனக்து
ஸஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஸஹ நௌ-நம் இருவரையும்; அவது-காப்பாராக; ஸஹ நௌ-நம் இருவரையும்; புனக்து-அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக; ஸஹ-சேர்ந்து; வீர்யம்-ஈடுபாடுமிக்க ஆற்றலுடன்; கரவாவஹை-உழைப்போமாக; அதீதம்-கற்றது; நௌ-நமக்கு; தேஜஸ்வி-பயனுள்ளதாக; அஸ்து-விளங்கட்டும்; மா வித்விஷாவஹை-வெறுக்காமல் இருப்போமாக!

ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக!
அறிவன் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாரக!
நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக!
கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்!
எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!

குறைகளும் தடைகளும் இல்லாமல் உபநிஷதக் கல்வி நிறைவேற இந்த மந்திரம் பிரார்த்திக்கிறது.

வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுறுவதைக் காணலாம். சாந்தி: என்றால் அமைதி. மூன்றுவிதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்றுவகைக் தடைகள் வருமாறு.

1. ஆத்யாத்மிகம் : நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சனைகள் போன்றவை.
2. ஆதி பவுதிகம் : பிற உயிர்களால் வரும் தடை
3. ஆதி தைவிகம் : இயற்கை சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்றுமுறை சொல்வதன்மூலம் இந்த மூவகை தடைகளிலிருந்து விடுபட்டு, இந்த உபநிஷதத்தைப் படிப்பதற்கான நமது முயற்சி வெற்றி பெறுவதற்காக பிரார்த்திகிறோம்.

பிரம்ம புராணம் பகுதி-1

பிரம்ம புராணம் பகுதி-1

1. தோற்றுவாய்

புராணங்கள் என்பவை பண்டைய இலக்கியங்கள் ஆகும். அவை மகா புராணங்கள் 18, உப புராணங்கள் 18. மகா புராணங்கள் பதினெட்டின் வரிசையில் சிலர் நான்காவது வாயு புராணம் என்றும், சிலர் சிவபுராணம் என்றும் கூறுவர். மகா புராணங்களில் முதலில் தோன்றியது பிரம்ம புராணம் என்பதில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை. எனவே இதனை ஆதிபுராணம் என்றும் கூறுவர். இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது.

புராண லக்ஷணங்கள் ஐந்து. 1. இந்தப் பேரண்டப் படைப்பு, 2. பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும் 3. வெவ்வேறு மன்வந்தரங்கள் 4. சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு 5. அரச பரம்பரைகள் சரிதம். இந்த ஐந்தும் பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக எல்லாப் புராணங்களும் அரி, அரன், அயன் என்ற மும்மூர்த்திகளைப் பற்றி கூறினும் சிவபுராணங்களில் சிவனை உயர்த்தியும், சிலவற்றில் விஷ்ணுவை உயர்த்தியும் பேசப்பட்டுள்ளன. பிரம்ம புராணம் ஒரு ராஜசிக புராணம். புராணங்களை வேதவியாசர் எழுதினார் எனப்படுகிறது. இவருக்குக் கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரும் உண்டு. தவிர கருப்பு நிறத்துடன் தீயில் தோன்றியவர் என்று அந்த சொல்லுக்குப் பொருள். வேதவியாசர் என்பது தனி ஒருவர் பெயரா? அல்லது ஒரு பீடத்தின் பெயரா என்பது தெரியவில்லை. ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு வியாசர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மகாபாரதத்தை இயற்றிய பின்னும் மன அமைதி ஏற்படாததால் வியாசர் புராணங்களை எழுத முற்பட்டார் என அறியலாகிறது. பிரம்ம புராணத்தின் முதல் நூல் கிடைக்கப் பெறவில்லை என்றும், எனவே மகாபாரதம், ஹரிவம்சம், வாயுபுராணம், மார்க்கண்டேய புராணம், விஷ்ணு புராணம் ஆகியவற்றிலிருந்து செய்திகளைத் தொகுத்து தற்போது கிடைத்துள்ள பிரம்ம புராணம் உருவாக்கப்பட்டது என்பர். இது மிகப்பெரியதோ மிகச் சிறியதோ இன்றி நடுத்தரமாக உள்ளது.

2. உலக சிருஷ்டி

நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்களுக்கு சூதமுனிவர் பிரம்ம புராணத்தைப் பற்றிக் கூறலானார். (வியாசரின் சீடன் ரோமஹர்ஷணர் கூறியதாகவும் சொல்லப்படும்)

எங்கும் நீர் சூழ்ந்திருக்க, பிரம்மனாகிய பகவான் விஷ்ணு யோகதுயில் கொண்டிருந்தார். நீருக்கு நர என்றும், அயன என்றால் படுக்கை என்றும் பொருள். எனவே விஷ்ணுமூர்த்தி நாராயணன் என்று பெயர் பெற்றார். நீரிலிருந்து ஓர் அண்டம் (முட்டை) வெளித்தோன்றியது. அதனுள் பிரம்மா இருந்தார். அவர் சுயம்பு ஆவார். அவர் முட்டையின் இருபகுதியிலிருந்து சுவர்க்கத்தையும், பூமியையும் ஆக்கினார். அவ்விரண்டிலும் ஆகாயம், திக்குகள், காலம், மொழி, உணர்வுகள் உற்பத்தி செய்யப்பட்டன. பிரம்மாவின் மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் என்ற சப்தரிஷிகளைத் தோற்றுவித்தார். பின்னர் ருத்திரனையும், சனத் குமாரரையும் தோற்றுவித்தார்.

மேலும் சில படைப்புகள்: பிரம்மா ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் படைத்து அவர்கள் மூலம் மக்கள் பெருக்கத்துக்கு வித்திட்டார். ஆணின் பெயர் சுவயம்புமனு; பெண்ணின் பெயர் சதரூபை. இவர்களின் புத்திரன் மனு. மனுவிலிருந்து வளர்ந்த மக்கள் மானிடர்(அ) மானவர் எனப்பட்டனர். அத்தம்பதியருக்கு வீரன், பிரியவிரதன், உத்தானபாதன் என்று மூவர் பிறந்தனர். உத்தானபாதனின் மகன் துருவன், துருவ நக்ஷத்திரமாக விளங்குகிறார். துருவன் பரம்பரையில் தோன்றிய பிராசீனபர்ஹிக்கு பிரசேதனர்கள் எனப்படும் பதின்மர் பிறந்தனர். அவர்களுக்கு உலக வாழ்க்கையில் விருப்பமின்றித் தவம் செய்யப் புறப்பட்டனர். உலகைப் பராமரிக்க ஆள் இல்லாததால் எங்கும் காடுகள் பெருகி விட்டன. பிரசேதனர்கள் கோபம் கொண்டு வாயுவையும், அக்கினியையும் தோற்றுவித்துக் காடுகளை அழித்தனர். அப்போது சோமன், ஓர் அழகிய பெண் மரீஷையுடன் பிரசேதனர்களை அணுகி, அவர்கள் கோபத்தை சாந்தமாக்கி மரீஷையை மனம் செய்வித்தார். அவர்களுடைய மகனே தக்ஷபிரஜாபதி.

3. தக்ஷன் சந்ததியினர்

தக்ஷனுடைய ஆயிரம் புத்திரர்களை நாரதர் அறவுரை கூறி தவம் செய்ய அனுப்பிவிட்டார். மறுபடியும் தோன்றிய ஆயிரம் பேர்களையும் அவ்வாறே அனுப்பி விட்டார். இவர்கள் ஹர்யக்ஷ்வர்கள், ஷவலஷ்வர்கள் என்பவர்கள் ஆவர். தக்ஷனுக்குப் பிறந்த அறுபது பெண்களில் பத்த பேரைத் தருமனுக்கும், பதின்மூன்று பேரை காசியப முனிவருக்கும், இருபத்தேழு பெண்களை சோமன் எனும் சந்திரனுக்கும், மீதிப் பெண்களை அரிஷ்டநேமி, வாஹுபுத்திரர், ஆங்கீஸர், கிரிஷஷ்வர் ஆகியோருக்கும் மணம் செய்வித்தான். தர்மனுக்கு மணம் செய்வித்த பத்து புத்திரிகளில் அருந்ததியின் மக்கள் உலகிற்கு விஷயமானவர்கள். வாசுவின் மக்கள் வசுக்கள் என்பர். அவர்களில் அனலனின் மகன் குமரன். கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குமரன் கார்த்திகேயன் எனப்பட்டான். பிரபசாவின் மகன் விசுவகர்மா; தேவலோக சிற்பி. சாத்யாவின் மக்கள் சாத்திய தேவர்கள். விஸ்வாவின் மக்கள் விச்வதேவர்கள். சந்திரன் மனைவிகள் 27 பெண்கள், நக்ஷத்திரங்கள். காசியபரின் மனைவியரில் அதிதியின் மக்கள் ஆதித்தியர்கள் ஆவர். திதி மக்கள் தைத்தியர்கள். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு அவள் புத்திரர்கள். தனுவின் புத்திரர்கள் தானவர்கள். அவர்கள் வம்சத்தில் பௌலமர்கள், காலகேயர்கள் தோன்றினர். அரிஷ்டாவின் புத்திரர்கள் கந்தர்வர்கள். காசாவின் மக்கள் யக்ஷர்கள். சுரபிக்கு பசுக்கள், எருமைகள் தோன்றின. வினிதாவுக்கு அருணன், கருடன் மக்கள். தாம்ராவின் ஆறு பெண்களுக்கு ஆந்தைகள், கழுகுகள், ராஜாளிகள், காக்கைகள், நீர்ப்பறவைகள் குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள் தோன்றின. குரோதவஷையின் ஆயிரக்கணக்கான மக்கள் நாகர்கள். இளைக்கு மரம், கொடி, புதர் போன்றவை தோன்றின. கத்ருவின் மக்களாகிய நாகர்களில் அனந்தன், வாசுகி, தக்ஷகன், நஹுஷன் ஆகியோர் முக்கியமானவர். முனிக்கு அப்ரஸுகள் தோன்றினர்.

திதி, காசியபரிடம் இந்திரனை வெல்லக்கூடிய ஒரு மகனை அருள வேண்டினாள். குழந்தை கருவுற்ற நாளிலிருந்து நியம நிஷ்டைகளுடன் இருக்க வேண்டும் என்று காசியபர் கூறினார். அதற்குப் பங்கம் ஏற்பட்டால் நினைத்தது நிறைவேறாது என்றார். கருவுற்ற திதி ஒருநாள் கால்களைக் கழுவாமல் தூங்கச் செல்ல, இந்திரன் அணு அளவில் அவளது கருவறையுள் நுழைந்து கருவை வஜ்ராயுதத்தால் ஏழு பகுதிகளாக்கிட, மறுபடியும் அந்த ஒவ்வொன்றும் ஏழாக மொத்தம் நாற்பத்தொன்பது துண்டுகளாயின. கரு அழ, இந்திரன், மா ருத (அழாதே) என்று கூற அவை மருத்துக்கள் எனப்பட்டன. திதிக்கு விரத பங்கம் ஏற்பட அவள் எண்ணம் ஈடேறவில்லை. மாறாக, அக்குழந்தைகள் அதாவது மருத்துக்கள் இந்திரனுக்கு உதவியாளராயினர். (சிருஷ்டியைப் பற்றி எல்லாப் புராணங்களும் கூறும் செய்திகள் ஒன்றே போல் காணப்படுகின்றன.)

4. பிருதுவும், பிருத்வியும்

துருவன் குலத் தோன்றல்களில் அங்கன் தரும நெறியில் நின்று வாழ்ந்தான். அவன் மனைவி மிருதியுவின் மகள் சுனிதை. மிருதியுவி தீய வழி செல்பவள். அவள் மூலம் அங்கனின் மகன் வேனன் தீயநெறிகளைப் பெற்றான். அவன் அதர்மசாலி.  அவன் தொல்லைகள் அதிகமாக, முனிவர்கள் அவனை அழைத்து முறையிட அவன் திருந்தவில்லை. மமதையுடன் நடந்து கொண்டான். எனவே, அவனைப்பற்றி அவனுடைய வலது தொடையைக் கடைய ஓர் அசிங்கமான குள்ள உருவம் தோன்றிற்று. அதைக் கண்ட அத்திரி முனிவர் அதனை நிஷித (உட்கார்) என்றார். அவன் பெயர் நிஷாதன் என்று ஆயிற்று. அவன் வம்சத்தினர் நிஷாதர்கள் எனப்பட்டனர். அந்தப் பரம்பரையிலேயே துஷாரர்கள், துண்டுரர்கள் தோன்றினர். வேனனின் வலது கரத்தைக் கடைய பிருது தோன்றினான். பின்னர் வேனன் இறந்தான். பிருதுவைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் காணப்பட்டது. அவன் கைகளில் ஒரு வில்லும், கேடயமும் இருந்தன. தேவர்களும், முனிவர்களும் அவன் முடிசூட்டு விழாவுக்கு வந்தனர். சோமன், கிரகங்கன், வருணன், குபேரன், அக்னி, தக்ஷன், இந்திரன், பிரகலாதன், யமன், சித்திராதன், வாசுகி, தக்ஷகன், கருடன், ஐராவதம், உச்சச்சிரவம் போன்றோர் அவன் ஆட்சியில் அவனுக்கு உதவினர். பிருது நீதி, நெறிமுறை வழியில் தருமம் தவறாமல் ஆண்டு வர அவன் ஆட்சியில் அனைவரும் மகிழ்ந்தனர். பிருதுவைப் பெருமைப்படுத்த முனிவர்கள் யாகம் செய்ய, அதிலிருந்து இரண்டு இனங்கள் தோன்றின. அவை சூதர்கள், மகதர்கள் எனப்பட்டனர். அவர்கள் பிருதுவின் புகழ்பாடி அவன் சிறப்பைப் பரப்பினர். அதைக் கேட்ட மக்கள் அவனிடம் வந்து இருக்க இடமும், உண்ண உணவும் கிடைக்க வழி செய்யுமாறு வேண்டினர். பிருது கையில் வில்லும், அம்பும் ஏந்தி பூமியைக் கொல்ல எண்ண, பூமி பசு வடிவம் கொண்டு அனைத்துலகிலும் ஓட, அவனும் பின் தொடர்ந்தான். அது கண்ட நிலமாது (பசு வடிவ) தான் ஒரு பெண் என்றும், தன்னைக் கொல்வதால் பாவமே மிஞ்சும் என்றும் வேறு வழியில் மக்கள் நன்கு வாழச் செய்யலாம் என்றும் கூறியது. பின்னர் நிலமாது அதற்கான வழிமுறைகளைக் கூற பிருது அதன்படி செய்யலானான். வில்லினால் நிலத்தைச் சமன்படுத்த அதில் மக்கள் வாழும் இடமும், உண்ண உணவுப் பொருள்கள் பயிர் செய்யவும், அதற்கு உதவியாக மாடுகளும் வளர்ந்து மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இவ்வாறு பிருது செய்த நற்காரியங்களால் நிலம் பிருதிவி எனப்பட்டது.

5. மன்வந்தரங்கள்

மன்வந்தரம் என்பது ஒரு கால வரையறை. யுகங்கள் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு. இவை நான்கும் முடிவது ஒரு மகாயுகம். சுமார் எழுபத்தொன்று மஹாயுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம். பதினான்கு மன்வந்தரங்கள் கொண்டது ஒரு கல்பம். பிரம்மனின் நாட்களில் ஒன்று கல்பம். ஒரு கல்பம் முடிந்ததும் உலகம் அழியும். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு மனு ஆண்டு வந்தான். தற்போதைய கல்பத்தில், ஏழாவது மன்வந்தரத்தில் வைவஸ்வதன் மனு ஆவான். ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வெவ்வேறு சப்தரிஷிகள், இந்திரன்கள் இருந்தனர். தற்போது நடைபெறுவது வைவஸ்வத மன்வந்தரம். இதில் வசிஷ்டர், காசியபர், கௌதமர், பரத்துவாசர், விசுவாமித்திரர், ஜமதக்கினி ஆகியோர் சப்தரிஷிகள் ஆவர். சரித்யர்கள், ருத்திரர்கள், வாசுதேவர்கள், வசுக்கள், மருத்துக்கள், ஆதித்தியர்கள், இரு அசுவினி தேவர்கள் கடவுளர் ஆவர். அடுத்து ஏழு மனுக்கள் இருப்பர். அதன்பின் உலகம் அழிந்து விடும். இவர்களில் ஐவர் சவர்ணி மனுக்கள் என்றும், மற்ற இருவர் பௌத்தியர், ரௌச்சியர் எனவும் பெயர் கூறுவர்.

6. சூரியனும், சூரிய வம்சமும்

காசியபர், அதிதிகளுக்குப் புத்திரன் விசுவாச்வனன். இவனுக்கு சூரியன், மார்த்தாண்டன் ஆகிய பெயர்களும் உண்டு. இவனே சூரிய பகவான். அவனுக்கு சஞ்ஜனா, சாயா என இரு மனைவியர். சஞ்சனாவுக்கு விசுவஸ்வதமனு, யமன் என்ற புத்திரர்களும் யமுனை என்ற பெண்ணும் உண்டு. சாயாவுக்குப் பிறந்தவர்கள் சவர்ணி மனு.

7. வைவஸ்வத மனுவின் மக்கள்

புத்திரன் இல்லாத வைவஸ்வத மனு ஒரு யாகம் செய்தான். அதன் பயனாக அவனுக்கு இக்ஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், கரூஷன், விருஷத்திரன் ஆகிய ஒன்பது புதல்வர்கள் தோன்றினர். மேலும் மனுமித்ரன், வருணன் என்னும் கடவுளர்களை வேண்டி இள என்றும் பெண்ணைப் பெற்றான். இள, சந்திரனின் மகனான புதனை மணந்து புரூரவனைப் பெற்றாள். இளை, சுத்யும்னன் என்ற ஆணாக மாறிவிட, அவனுக்கு உத்கலன், கயா, வினதஷ்வா ஆகிய புத்திரர்கள் பிறந்தனர். உத்கலன் ஒரிஸ்ஸாவை ஆண்டான். கயா, கயாவையும், வினதஷ்வா மேற்குப் பகுதியையும் ஆண்டனர். சுத்யும்னன், இளை என்ற பெண்ணாக இருந்ததால் ஆட்சி செய்ய இயலாததால், அவனது பிரதிஷ்டான நகரை அவருக்குப் பின் புரூரவன் பெற்றான். வைவசுவத மனு இறந்த பிறகு அவனுடைய பத்து புத்திரர்களும் உலகைப் பகிர்ந்து கொண்டனர். இக்ஷ்வாகு மையப் பகுதியை ஆண்டு வந்தான். இக்ஷ்வாகு தான் செய்யப் போகும் யாகத்திற்குப் புதிதாக இறைச்சி கொண்டு வர அவன் மகன் விகுக்ஷியை அனுப்பினான். ஆனால், விகுக்ஷி பசியின் காரணமாக இறைச்சியை அவனே உண்டுவிட வசிஷ்ட முனிவர், மன்னன் இக்ஷ்வாகுவிடம், விகுக்ஷியை தேசப் பிரக்ஷ்டம் செய்யுமாறு கூறினான். விகுக்ஷி உண்டது ஒரு முயலின் இறைச்சி (சசக). எனவே அவன் சசதன் என்று பெயர் பெற்றான். இக்ஷ்வாகு மரணத்திற்குப் பின் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்ட விகுக்ஷி திரும்பி வந்து நாட்டை ஆண்டான். அதுவே அயோத்தி நாடாகும்.

8. குபலஷ்வன்

விகுக்ஷியின் மகன் காகுஸ்தன். இந்த வம்சத்தின் விரிஹதஷ்யன் மகன், குபலஷ்வன். அவனுக்கு முடி சூட்ட விரும்பினான் தந்தை. அவ்வமயம் அங்கு வந்த உதங்க முனிவர் மன்னனைத் தடுத்த, ஒரு செய்தியைக் கூறினார். துந்து என்றோர் அரக்கன் கடற்கரையில் வசிக்கிறான். அவனது மூச்சுக்காற்றினால் எங்கும் மணல் மேடு குவிந்துள்ளத. அவனைத் தேவர்களாலும் வெல்ல முடியவில்லை. எனவே, நான் என்னுடைய தவ வலிமையை உனக்குத் தருகிறேன். நீ அந்த அரக்கனைக் கொல்ல வேண்டும் என்று கூறினார். அதற்கு மன்னன் தன் மகன் குபலஷ்வன் அரக்கனைக் கொல்வான் என்று கூறி வனம் சென்று விட்டார். குபலஷ்வன், தனது நூறு புத்திரர்களுடன் உதங்கனை அழைத்துக் கொண்டு துந்துவை அழிக்கச் சென்றான். துந்துபியின் திரிதஷ்வன், சந்திரஷ்வன், கபிலக்ஷ்வன் என்ற மூன்று மகன்களைத் தவிர மற்றவரைக் கொன்றான். துந்து அரக்கனும் கொல்லப்பட்டான். இதனால் குபலஷ்வன் துந்து மாறன் எனப்பட்டான். முனிவனின் ஆசியால் இறந்த மக்கள் மோட்சம் அடைந்தனர்.

9. திரிசங்கு

திரிதஷ்வனுக்குப் பின் ஆண்ட திரியருனி என்ற மன்னன் நீதி நெறி வழுவாமல் தர்மவானாக நாட்டை ஆண்டு வந்தான். ஆனால், அவனது புத்திரன் சத்திய விரதன் அவனுக்கு நேர்மாறாக அதர்மவானாய் இருக்க வசிஷ்டர் அவனைத் தேசப்பிரஷ்டம் செய்யச் செய்தார். சத்தியவிரதன் காட்டில் சண்டாளர்களுடன் வாழ்ந்து வந்தான். சில நாட்கள் கழித்து மன்னன் திரியருனி தவம் செய்ய காடு செல்ல, நாட்டை ஆள அரசன் இல்லாததால் நாட்டில் அராஜகம், பஞ்சம் பன்னிரண்டு ஆண்டுகள் தாண்டவமாடின. அந்நாட்டில் வசித்து வந்த விசுவாமித்திர முனிவர் காட்டில் தவம் செய்து கொண்டிருந்ததால் அவருடைய மனைவி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவள் தன் மகனை விற்று தனக்கான உணவைப் பெற அவன் கழுத்தில் கயிறு கட்டி அழைத்துச் சென்று அவனை ஆயிரம் பசுக்களுக்கு விற்று விட்டாள். அவன் கழுத்தில் (கால) கயிறு கட்டப்பட்டதால் அவன் காலவன் எனப்பட்டான். இதையறிந்த சத்தியவிரதன், விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்து காலவனை விடுவித்து அவர்களை ஆதரித்து வந்தான். தன்னைத் தேசப்பிரஷ்டம் செய்யக் காரணமான வசிஷ்டர் மீது கோபம் கொண்ட அவன், அம்முனிவருடைய பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை, விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்குக் கொடுத்து தானும் உண்டான். இதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் சத்தியவிரதனைச் சபித்தார். அவன் செய்த மூன்று தவறுகனைச் சுட்டிக் காட்டினார். 1) உன் தகப்பனார் கோபத்துக்கு ஆளானாய், 2) பசுவைக் கொன்றாய், 3) பசு இறைச்சியை உண்டாய் என்று கூறி இனி அவன் திரிசங்கு என்ற பெயர் பெறுவான் என்று சபித்தார். தவம் முடிந்து திரும்பிய விஸ்வாமித்திரர், சத்தியவிரதன் தன் குடும்பத்துக்குச் செய்த உதவிக்காக மகிழ்ந்து அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, திரிசங்கு மானிட உடலுடனேயே சுவர்க்கம் போக விரும்ப, அவ்வாறே விஸ்வாமித்திரர் அருளினார். திரிசங்கு மன்னனாக விஸ்வாமித்திரர் அவருக்கு முக்கிய குருவானார்.

10. சகரன்

திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திரன். இவர்கள் வம்சத் தோன்றல் பாகு. அவன் இல்லற சுகத்தில் ஈடுபட்டு மகிழ்ந்திருக்க பகைவர்கள் படை எடுத்து வர, அவன் மனைவி யாதவியுடன் காட்டிற்குச் சென்று வசிக்கலானான். பாகுவை விரட்டியவர்கள் ஹதயர்களும், தலஜங்கா மன்னர்களும். அவர்களுக்கு சகர்கள், யவனர்கள், பரதர்கள், காம்போஜர்கள், பஹ்லவர்கள் உதவினர். காட்டில் மன்னன் பாகு மரிக்க, அவன் மனைவி யாதவி உடன்கட்டை ஏற விரும்பினாள். அவள் கருவுற்றிருந்ததால் அவளை அவுர முனிவர் தடுத்து நிறுத்தி தன் குடிலுக்கு அழைத்துச் சென்று ரக்ஷித்து வந்தார். பாகுவின் மற்றொரு மனைவி யாதவிக்கு விஷமூட்டிக் கொல்ல முயன்றாள். ஆனால், விஷம் அவளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. எனினும் குழந்தை நச்சுடனே பிறக்க அது சகரன் எனப்பட்டது. அவுர முனிவர் சகரனுக்கு சகல கல்விகளையும், வித்தைகளையும் கற்பித்தார். புனித ஆக்னேய அஸ்திரத்தை உபயோகிக்கும் முறையையும் அவன் கற்றான். சகரன் பெரியவனானவுடன் தன் தந்தையை விரட்டிய பகைவர்களை ஆக்கினேய அஸ்திரத்தின் உதவியால் வென்று அவர்களைக் கொல்ல யத்தனிக்கையில், வசிஷ்டர் அவர்களை முடி நீக்கிடுதுல் போன்றவை செய்து அவமானப்படுத்துமாறும், கொல்ல வேண்டாம் என்றும், அவர்கள் வேதங்களைப் பின்பற்றக்கூடாது என்றும் கூறினார். சகரன் தோற்கடித்த மன்னர்கள் கோனசர்ப்பர்கள், மஹிஷகர்கள், தார்வர்கள், சோழர்கள், கேரளர்கள் ஆகியோர்.

சசுர மன்னனுக்கு கேசினி, சுமதி என்று இரண்டு மனைவியர். அவுர முனிவர் அருளால் கேசினிக்கு ஒரு மகனும், சுமதிக்கு அறுபதினாயிரம் புத்திரர்களும் பிறந்தனர். கேசினியின் மகனின் பெயர் பஞ்சஜனன். சுமதிக்கு ஒரு பூசணிக்காய் தோன்ற அதனுள் ஒரு மாமிச பிண்டம் இருந்தது. அதை ஒரு பெரிய நெய் பானையில் வைத்தனர். அதில் நெய் நிரம்பி இருந்தது. அந்த பிண்டத்திலிருந்து அறுபதாயிரம் மக்கள் பிறந்தனர். சகரன் உலகை ஒரு குடைக்கீழ் ஆள திக் விஜய யாத்திரை தொடங்கினான். அதற்காக ஓர் அசுவமேத யாகம் செய்ய யாகக் குதிரையை உலகெங்கும் திரியவிட, அறுபதினாயிரம் மக்களும் அதனைப் பின் தொடர்ந்திட, குதிரை தென்கிழக்குக் கடற்கரையை அடைந்தது. சகர புத்திரர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது குதிரை களவாடப்பட்டது. குதிரையைத் தேடிச் சென்ற அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த முனிவரைக் கண்டனர். அவர்கள் வருகையால் தவம் கலைந்த முனிவர் அவர்களைக் கோபத்துடன் உற்று நோக்க, அவர்கள் எரிந்து சாம்பலாயினர். அவர்களில் வர்ஹிகேது, சுகேது, தர்மகேது, பஞ்சஜனன் நால்வர் மட்டும் தப்பிப் பிழைத்தனர். சாகரத்திலிருந்து யாகக்குதிரை சகரனால் பெறப்பட்டதால் அது சாகரம் எனப்பட்டது. பஞ்சஜனனின் மகன் அமஷுமனன். அவன் மகன் திலீபன். திலீபன் மகன் பகீரதன் தவம் செய்து கங்கையை உலகுக்குக் கொண்டுவர, வரும் வழியில் சாம்பலான சகர புத்திரர்களைக் காத்து மோக்ஷம் கிடைக்கச் செய்தான். பகீரதனால் புவிக்குக் கொண்டு வரப்பட்ட கங்கை பாகீரதி என்று பெயர் பெற்றது. பகீரதனின் பின் வந்தோர்களில் ரகு, ரகுவின் மகன் அஜன். அவன் மகன் தசரதன். தசரத குமாரன் ஸ்ரீராமச்சந்திரன் அனைவரும் சூரிய வம்சத்தினரே.

11. சந்திரனும் சந்திர வம்சமும்

அத்திரி முனிவரின் மகன் சோமன் என்ற சந்திரன் ஆவான். பிரம்மன் சந்திரனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு உலகை இருபத்தொன்று முறை சுற்றி வந்தார். பிறகு மீதியிருந்த சக்தியிலிருந்து மூலிகைகள் உற்பத்தி ஆயின. சந்திரன் ஒரு பத்ம ஆண்டு (பல மினியன் ஆண்டுகள்) தவம் செய்ய பிரம்மன் தோன்றி அவனை விதைகள், மூலிகைகள், சமுத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினான். அதனால் சந்திரன் ஒரு ராஜசூய யாகம் செய்தான். இது அவனுக்குப் புகழ், கீர்த்தி, செல்வம், மரியாதை ஆகியவற்றைக் கொடுத்தது. இதனால் மமதை கொண்ட சந்திரன், பிரகஸ்பதியின் மனைவியைக் கடத்திட, மற்ற தேவர்கள், அவளை விட்டு விடுமாறு கூற, தேவர்களுக்கும் சந்திரனுக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. பிரகஸ்பதி பக்கம் தேவர்களும், சிவனும் சேர்ந்திட, சந்திரன் பக்கம் அசுரர்களும், சுக்கிராச்சாரியாரும் சேர்ந்திட நடந்த இந்தப் போருக்கு தாரகாமய சங்கிராமம் என்று பெயர். இறுதியில் பிரம்மன் இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். இந்நிலையில் சந்திரனுக்கும், தாராவுக்கும் புதன் பிறந்தான். இந்த புதன் இளையை மணந்தான் என்று முன்பே கூறப்பட்டது.

12. சந்திர வம்ச மன்னர்கள்

யயாதி: சந்திர குலத்தில் தோன்றிய வலிமை மிக்க மன்னன் நகுஷன். அவன் விரஜா என்பவளை மணந்து யதி, யயாதி, சம்யாதி, ஆயாதி, வியாதி, கிருதி என்ற ஆறு புத்திரர்களைப் பெற்றான். நகுஷனுக்குப் பிறகு யயாதி அரசனானான். யயாதி சுக்கிராச்சாரியார் மகளான தேவயானையையும், தானவ மன்னன் மகளான சர்மிஷ்டையையும் மணந்தான். தேவயானிக்கு யது, துர்வசு என்று இரண்டு மகன்களும், சர்மிஷ்டைக்கு துருஹ்யு, அனு, பூரு என்ற மூன்று மகன்களும் பிறந்தனர். யயாதி பேரும், புகழுடனும் வாழ்ந்து, முதுமை வர தன் ராஜ்யத்தை தன் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். அவன் உலகம் முழுவதும் யாத்திரை செய்ய விரும்பினான். எனவே, அவன் யதுவை அழைத்து தன் முதுமையை ஏற்று அவனது இளமையைத் தரவும் வேண்டினான். அவன் மறுத்துவிட கோபம் கொண்ட யயாதி அவனும், அவன் மக்களும் அரசாள மாட்டார்கள் என்று சாபம் தந்தான். அவன் மற்ற புத்திரர்களையும் அவ்வாறே வேண்டிட அனைவரும் மறுக்க அனைவரையும் அவ்விதமே சபித்தான். ஆனால் பூரு மட்டும் தந்தை வேண்டுகோளை ஏற்று, தனது இளமையை யயாதிக்கு கொடுக்க, தந்தை மகனை வாழ்த்தினான். பல ஆண்டுகள் கழித்து யயாதி உலக இச்சையை வெறுத்து தன் இளமையை மறுபடியும் பூருவுக்குக் கொடுத்து முதுமையைப் பெற்றுக் கொண்டான். பின்னர் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றான். பூருவுக்குப் பின் பரதன் என்பவன் நாட்டை ஆண்டதால் நாடு பாரத வர்ஷம் எனப் பெயர் பெற்றது. இந்தக் குலத்தில் தோன்றிய மன்னன் குருவுக்குப் பின் வந்தவர்கள் கௌரவர்கள் எனப்பட்டனர். குருவின் பெயராலேயே குரு÷க்ஷத்திரம் அப்பெயரைக் கொண்டது. துர்வசுவின் சந்ததியில் பாண்டியர், கேரளர், கோலர், சோழர்கள் தோன்றினர். துருஹ்யனின் குலத்தில் காந்தார மன்னர்கள் தோன்றினர். யதுவுக்கு சகஸ்ரதன், பயோதன், குரோஷ்டு, நீலன், அஞ்சிகன் என்று ஐந்து புத்திரர்கள். சகஸ்ரதனின் குலத்தோர் ஹதயர்கள் எனப்பட்டனர். இவர்களில் சிறந்த மன்னன் கார்த்தவீர்யாச்சுனன். குரோஷ்குக்குப் பின் வந்தவர்கள் விருஷ்ணி, அந்தகர் முதலியோர். இதில் விருஷ்ணி குலத் தோன்றலே ஸ்ரீகிருஷ்ணன் ஆகும்.

13. பூ மண்டலப் பிரிவுகள்

பூமண்டலம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சுற்றி ஏழு வகையான சமுத்திரங்கள் உள்ளன. ஏழு வகையான பர்வதங்கள் உள்ளன. பாரத வர்ஷம் எனப்படும் நம் நாடு எட்டுப் பிரிவாக உள்ளது. இந்திரத் தீவு, சுசேருமனத்தீவு, தாம்ரபரணத்தீவு, கபஸ்தி மானத்தீவு, நாகத்தீவு, சௌம்யத்தீவு, காந்தர்வத்தீவு, வாருணத்தீவு என்பவை பாரதம். ஒன்பதாவது பகுதி கடலில் மூழ்கிவிட்டது. பாரத வர்ஷத்தின் கிழக்கில் கிராதர்களும், மேற்கில் யவனர்களும் உள்ளனர். பூமிக்கடியில் அதலம், விதலம், நிதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், பாதாளம் என்று ஏழு உலகங்கள் உள்ளன. இவற்றில் தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியோர் வசிக்கின்றனர். இந்தப் பாதாள லோகங்கள் மிகவும் அழகியவை, இங்கு பொன்னும் பொருளும் குவிந்து கிடக்கின்றன. இங்கேயும் காடு, பறவைகள் போன்ற ஜீவராசிகளும் நிறைந்துள்ளன என்று நாரதர் கூறினார். பூமண்டலப் பகுதியாக பல நகரங்கள் அமைந்துள்ளன. இதற்கெல்லாம் தலைவன் யமதர்மராஜன். அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப இங்கு ஜீவன் தண்டிக்கப்படுகிறது. பாவப் பிராயச்சித்தம் செய்தவர்களும் புனிதர்களும் நரகங்களுக்குச் செல்லார். ஸ்ரீகிருஷ்ணனைத் தியானிப்பதே சிறந்த தவமாகும். மண்ணிலிருந்து விண் வரை பரவியிருப்பது இப்பூமி. புவர் லோகம் இதில் ஒரு பகுதி. மற்றும் வரிசையாக சூரிய மண்டலம், சந்திர லோகம், புதன், சுக்கிரன், அங்காரகன், குரு, சனி, சப்தரிஷி மண்டலம், துருவ லோகம் என்று பல பிரிவுகள் உள்ளன. கல்ப முடிவில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டும் அழியும்.

14. கோனார்க் (உத்கல நாடு)

ஒரிஸ்ஸா (அ) உத்கலப் பகுதியில் வேத சாஸ்திர புராணங்கள் அறிந்த பிராமணர்கள் உள்ளனர். யஜ்ஞ, யாகாதிகள் நடத்தும் திறம்மிக்க பண்டிதர்கள். இங்கு கோனாதித்தியன் எனப்படும் சூரியன் வடிவம் உள்ளது. அர்க்க, ஆதித்யா என்பவை சூரியனுடைய பெயர்கள். கோனாதித்தியன் என்றாலும் கோனார்க் என்றாலும் ஒன்றையே குறிக்கும். கோனாதித்தியன் (அ) சூரியனின் விக்கிரகத்தைப் பார்த்தாலே, தரிசனம் செய்தாலே பாவம் பொடிபடும். இதைச் சுற்றியுள்ள மணற்பகுதியில் மரங்கள் செழிப்பாக வளர்கின்றன. சூரியோதயத்தில் இக்கடவுளைத் தரிசிப்பது மிகவும் சிறப்புடையது. கிழக்கு நோக்கி நின்று, எட்டு இதழ்கள் கொண்ட தாமரை மலர், சிவப்பு சந்தனம், தாமரை இதழ்கள் ஆகியவற்றைப் பரப்பி, அதன்மீது ஒரு தாமரைச் சொம்பில் நெல், எள், நீர், சிவப்புச் சந்தனம், சிவப்பு மலர்கள், தர்ப்பை கொண்டு நிரப்ப வேண்டும். இத்தகைய அமைப்பில் தாமரை இதழ்கள் மீது சூரிய பகவானை எழுந்தருளுமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு இக்கோயிலிலுள்ள சூரிய தேவனைப் பூஜை செய்தால், ஏழு பிறப்பு வினைகளும், பாவங்களும் நீங்கும். இந்திரன், தத்தன், பர்ஜன்யன், த்வஷ்டன், புஷன், ஆர்யமன், பகன், விவஸ்வனன், விஷ்ணு, அம்ஷுனன், வருணன், மித்திரன் என்ற பன்னிரண்டும் சூரியனின் வெவ்வேறு உருவங்களே. சூரியன், இந்திரனாக தேவர்களின் பகைவர்களை அழிக்கிறான். தத்தனாகப் படைக்கிறான். பர்ஜன்னியனாக மழையைப் பொழிவிக்கிறான். த்வஷ்டனாகத் தாவரங்களில் வாழ்கிறான். புஷனாகத் தான்யங்களை உற்பத்தி செய்து வளர்க்கிறான். ஆர்யமனாக காற்றை வீசுகிறான். பகலனாக எல்லா ஜீவராசிகளிலும் குடிகொண்டுள்ளான். விவஸ்வனனே தீயாகி உணவாக்க உதவுகிறான். விஷ்ணுவாக துஷ்ட நிக்கிரகம் செய்கிறான். அம்ஷுமனாகக் காற்றில் உள்ளான். வருணனாக நீரிலும், மித்திரனாக சந்திரனிலும் சமுத்திரத்திலும் உள்ளான். மேற்கூறிய பன்னிரண்டு பெயர்களில் பன்னிரண்டு மாதங்களில் பிரகாசிக்கிறான். இந்தப் பன்னிரண்டிலும் கதிர்கள் வெவ்வேறு அணுவில் ஒளிர்கின்றன. இவையே அன்றி சூரியனுக்கு மேலும் பன்னிரண்டு பெயர்கள் உள்ளன. அவை முறையே ஆதித்தியன், சவிதன், சூரியன், மித்திரன், அர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, சித்திரபானு, திவாகரன், ரவி என்பவை. இந்த பிரமம புராணத்தில் சூரியனுடைய அஷ்டோத்திர நாமங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

15. இந்திரத்யும்னனும் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரமும்

சத்திய யுகத்தில் இந்திரத்யும்னன் என்ற புகழ்பெற்ற மன்னன் இருந்தான். அவன் சத்தியம், நீதி, நெறிமுறையை தவறாது ஆண்டு வந்தான். அவன் ஒரு நல்ல ÷க்ஷத்திரத்தில் ஸ்ரீவிஷ்ணுவைத் தரிசிக்க நினைத்தான். ஆனால், எந்தத் தலமும் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அந்த மன்னனின் தலைநகரம் அவந்தி மாளவ நாட்டில் இருந்தது. எல்லா வகையிலும் அந்த நகரம் சிறப்பு வாய்ந்து விளங்கியது. அழகு, இயற்கை, எழில், கோட்டை, யாவும் பெற்றிருந்தது. அந்நகரில் மகாகாலன் என்ற சிவன் கோயில் கீர்த்தி வாய்ந்தது. மகாகாலனைத் தரிசித்தால் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். அவந்தி நகரில் ஷிர்பா நதி ஓடுகிறது. அதன் கரைகளில் விஷ்ணுவுக்கு கோவிந்தசாமி ஆலயம், விக்கிரம ஸ்வாமி ஆலயம் என இரண்டு ஆலயங்கள் இருந்தன. இவ்வளவு இருந்தும் அவை மன்னனுக்கு மனத் திருப்தி தரவில்லை. எனவே, அவன் ஸ்ரீ விஷ்ணுக்குப் புதியதாக ஓர் ஆலய நிர்மாணம் செய்யத்தக்க இடத்தைத் தேடினான். இவ்வாறு தேடிய அவன் இறுதியில் தெற்கிலுள்ள லவண சமுத்திரக் கரையை அடைந்தான். ஆங்கோர் இடத்தில் பூக்களும், பழக்களும் நிறைந்து, பலவிதப் பறவைகளும் நிறைந்த ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தான். அதுதான் தற்போது பூரி என்று புகழ்பெற்ற புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரம். இந்தத் தலம் ஒரு முக்கிய தீர்த்தமாகும். ஆனால் அதைப் பற்றிய விவரங்கள் மறைந்து கிடந்தன. இந்த இடத்தில் முன்பொரு விஷ்ணு கோயில் புகழ்பெற்று விளங்கியது. அந்த விஷ்ணுமூர்த்தியைத் தரிசித்தவர் எல்லாப் பாவங்களும் நீங்கிப் புனிதராயினர். இதனால் அங்கு எந்தப் பாவியையும் தண்டிக்க முடியாத யமதர்மன் பகவானிடம் முறையிட விக்கிரகம் மணலில் புதையுண்டு போயிற்று. இந்த இடம் இந்திரத்யும்னனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதன் அருகில் மகாநதி ஓடிக் கொண்டிருந்தது. ஒரு முகூர்த்த நாளில் ஆலய நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இச்செய்தியைப் பற்றி கலிங்க, உத்கல, கோசல நாட்டு மக்களுக்கும் தெரிவித்து ஆலயத்துக்கான கற்களை வேண்டினான். விந்திய மலைகளிலிருந்து கற்கள் படகுகளிலும், தேர்களிலும் வந்து சேர்ந்தன. மற்ற நாட்டு மன்னர்களும் ஆலய நிர்மாணச் செய்தியை அறிந்து ஒன்று கூடினர். அவர்களிடம் மன்னன் தான் மிகக் கடினமான இரண்டு பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும், அவர்களது உதவியால் அவை நிறைவு பெறும் என்ற நம்பிக்கையையும் விண்ணப்பித்தான்.

ஜம்புத்வீபத்திலிருந்து வேதசாஸ்திர விற்பன்னர்கள் வந்தனர். சிறப்பாக யாகசாலை நிர்மாணம் செய்யப்பட்டு யாகம் நல்ல முறையில் நடந்தேறியது. இனி விக்கிரக உருவாக்கம் பற்றித் தன் கவனத்தைச் செலுத்திய மன்னன் ஒரு கனவு கண்டான். அதில் மகாவிஷ்ணு தோன்றி கவலை வேண்டாம். சூரியோதயத்தில் சமுத்திரக்கரைக்குச் செல். அங்கு நன்கு வளர்ந்த ஒரு மரம் பாதி நீரிலும், பாதி மணலிலுமாக ஓங்கி வளர்ந்திருக்கும். அதை வெட்டி எடுத்து அதைக் கொண்டு பிரதிமைகளை உருவாக்கு என்றார். மரம் இரண்டு துண்டாக வெட்டப்படும் போது அங்கே விஷ்ணுவும், விச்வகர்மாவும் இரண்டு அந்தணர் வடிவில் தோன்றினர். அவர்கள் மரத்தை ஏன் வெட்டினாய் என்று கேட்க, மன்னன் கனவில் விஷ்ணு இட்ட ஆணையைப் பற்றி விளக்கினான். அப்போது அந்தணர் வடிவில் இருந்த விஷ்ணு அது நல்ல காரியம் என்று சிலாகித்து, மேலும் தன் அருகிலுள்ள அந்தணச் சிறந்த சிற்பி விக்கிரகம் அமைத்துக் கொடுப்பார் என்று கூறினார். அந்த அந்தணச் சிற்பி உதவியால் மூன்று பிரதிமைகள் உருவாகின. ஒன்று, வெள்ளை நிறத்தில் உருவான பலதேவர் எனப்படும் பலராமர் விக்ரகம். கண்கள் மட்டும் சிவப்பாக அமைந்தன. நீலவர்ண உடை, தலை மீது பாம்புப் படம், கையில் கதைகளுடன் ஏற்பட்டது. இரண்டாவது ஸ்ரீகிருஷ்ணனின் பிரதிமை. நீல நிறம். தாமரைக் கண்கள், மஞ்சள் உடை, கையில் சக்கராயுதத்துடன் உருவாயிற்று. மூன்றாவது, கிருஷ்ணனின் சகோதரி சுபத்திரையின் பிரதிமை. பொன்னாலான பட்டாடையுடன் தோன்றியது. கண நேரத்தில் பிரதிமைகள் உருவானது கண்ட மன்னன் பிரத்யும்னன் அந்தணர்களின் கால்களில் வணங்கி நீங்கள் உண்மையில் அந்தணர்கள் அல்லர், நீங்கள் யார்? என்று வினவினான். உடனே இருவரும் விஷ்ணு, விசுவகர்மாவாகத் தோன்ற மன்னன் மெய்மறந்து நின்றான். மகாவிஷ்ணு இந்திரத்யும்னனை ஆசிர்வதித்தார். நெடுங்காலம் நாட்டை ஆண்டு பரமபதத்தை அடைவாய் என்று கூறி மறைந்தார். ஒரு நன்முகூர்த்த நாளில் மூன்று விக்கிரகங்களும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

16. மார்க்கண்டேயரும் புவனேசுவரர் ஆலயமும்

முன்காலத்தில் மார்க்கண்டேயர் என்ற முனிவர் கடும் தவம் செய்து வந்தார். எங்கும் நீரும் அந்தகாரமும் சூழ்ந்தன. உலகெங்கும் தீ பரவியது. மார்க்கண்டேயரையும் தீ பாதிக்க அவர் ஓர் ஆலமரத்தைக் கண்டார். அதன் அடியில் அமர்ந்து தொடர்ந்து விஷ்ணுவை நோக்கித் தவம் செய்யலானார். ஜலத்தின் மீது பள்ளி கொண்டிருந்த விஷ்ணு பகவான் மார்க்கண்டேயனிடம், அச்சம் வேண்டாம். என்னுடைய பக்தனாகிய உன்னைக் காப்பாற்றுவேன் என்றார். தன்னுடன் பேசியது யார்? என்ற வியப்பில் ஆழ்ந்திருந்த போது ஆலமரம் நீரில் மிதக்க அதனடியில் கிளைகளின் மீது ஒரு தங்கப் படுக்கையில் ஒரு சிறுவன் படுத்திருப்பதைக் கண்டார். அச்சிறுவன் விஷ்ணு என்பதை அவர் அறியவில்லை. அப்போது அச்சிறுவன், நீ களைப்படைந்திருக்கிறாய். என்னுடைய உடலில் சேர்ந்து ஓய்வு கொள் என்றான். அந்தச் சிறுவன் உடலில் பிரவேசித்த மார்க்கண்டேயர் அங்கு இந்தப் பேரண்டத்தின் சகல பகுதிகளையும் கண்டார். என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்து அச்சிறுவனிலிருந்து வெளிப்போந்து விஷ்ணுவைப் பிரார்த்திக்க அவர் முன் மகாவிஷ்ணு தோன்றி வேண்டிய வரத்தைக் கேள் என்றார். அப்போது முனிவர் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரத்தில் அரியும், சிவனும் ஒன்றே என்று காட்ட ஒரு சிவாலயம் எழுப்ப விரும்புகிறேன். அதற்கு அருள் புரிய வேண்டும் என வேண்டினான். பகவான் விஷ்ணு, கோரிய வரத்தை அருள, மார்க்கண்டேயர் புவனேச்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார்.

17. பலிச்சக்கரவர்த்தியும் உலகளந்தானும்

இது வாமன அவதாரம் பற்றிய பகுதி. பல  புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதில், ஓங்கி உலகளந்தான் மூன்றாவது அடியை பலியின் சிரசில் அல்ல, முதுகில் வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஓங்கி உலகளந்தான் பாதம் விண்ணை அளந்த போது பிரம்மன் கமண்டலத்திலிருந்த புனித நீரால் பாதத்தை நீராட்ட அந்நீர் மலைகள் மீது தெளிக்கப்பட்டு நாலாபுறமும் பாய மேற்கில் சிந்திய நீர் பிரம்மன் கமண்டலத்தையே திரும்பி வந்து அடைந்தது. கிழக்கில் சென்ற நீரைத் தேவர்களும், முனிவர்களும் சேகரித்தனர். தெற்கில் பாய்ந்த நீர் சிவனின் ஜடாமுடியில் இறங்கியது. அதுவே கங்கை நதி ஆகும்.