செவ்வாய், 3 டிசம்பர், 2019

பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா

ஹரே ராமா.... ஹரே கிருஷ்ணா !

ஜலதூதா எனும் பெயர் கொண்ட கப்பல், 1965 - ஆம் வருடம், இந்திய தேசத்திலிருந்து அமெரிக்கக் கரையை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. அதில், 69 வயது பெரியவர் ஒருவர், பயணம் மேற்கொண்டு இருந்தார். குடை, கைப்பை, சாப்பிடுவதற்குக் கொஞ்சம் தானிய வகை உணவுகள் மற்றும் பெட்டிகள் சிலவற்றில் புத்தகங்கள்; தவிர, 300 ரூபாய் மதிப்புள்ள ஏழு அமெரிக்க டாலர்கள்; இவையே அவருடைய உடைமைகள் !

அமெரிக்கக் கரையை நெருங்கிக்கொண்டிருந்தது கப்பல். தான் எதிர்கொள்ளவேண்டிய புதியதொரு சூழல் அவருக்குள் கவலையையும் மலைப்பையும் தந்தது ! கொண்டு வந்திருந்த பெட்டிகளில் ஒன்றினைத் திறந்து, நாட்குறிப்பேட்டை எடுத்தார். அன்றைய தினத்தின் பக்கத்தில், இன்று, என்னருமைத் துணைவன் கிருஷ்ணனிடம் உள்ளத்தில் இருப்பதைக் கொட்டித் தீர்த்தேன் என்று குறிப்பு எழுதினார். பிறகு, மண்டியிட்டுக் கண்கள் மூடி, கிருஷ்ணா, உனக்கு இங்கே ஆற்றவேண்டிய செயல்கள் ஏராளமாக இருக்கவேண்டும். இல்லையெனில் முற்றிலும் புதிதான இந்த பூமிக்கு என்னை ஏன் அழைத்துவந்தாய் ? நான் எளியவன்; சக்தியேதும் இல்லாதவன்; உனது பணியை நிறைவேற்ற எனக்குக் கருணை காட்டுவாயாக  என்று மனமுருகிப் பிரார்த்தித்தார். அவருக்குள் கண்ணனின் கருணை, வெள்ளமெனப் பாய்ந்தது. கிருஷ்ண பக்தி எனம் அமுதூற்று உலகளாவிய கிருஷ்ண விழிப்பு உணர்வு சங்கம் (இண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா காண்சியஸ்நெஸ்) எனும் பெயரில் (இஸ்கான்), சிறு வித்தாய்த் தோன்றியது; பிறகு அதுவே பேரியக்கமாகப் பல்கிப் பெருகி, நாடுகளையும் கண்டங்களையும் தாண்டி, அனைவரையும் அரவணைத்தது ! இவை அனைத்துக்கும் அடிகோலிய அந்த முதியவர்... பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா ! 1896 ஆம் வருடம், கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு மறுநாள், செப்டம்பர் 1-ஆம் தேதியன்று, கொல்கத்தாவில்... கௌர் மோஹன் டே - ரஜனி டே ஆகிய வைணவத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அபய் சரண் எனப் பெயரிட்டு, அன்புடன் வளர்த்தனர். தெய்வ பக்தியும், தேச பக்தியுமாக வளர்ந்தான், அபய் சரண். பள்ளிக் கல்வி முடித்ததும், கொல்கத்தாவில் ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் ஆங்கிலம், தத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்பை முடித்தான். ஆங்கிலத்தில் புலமை, தலைமையேற்று நடத்தும் திறமை, சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யம் என சிறந்து விளங்கினான் அபய் சரண். ஆனாலும் காந்திய வழியில், கதராடைகளையே உடுத்தி வந்தான். அது மட்டுமா ?! ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும்விதமாக, தன் படிப்புக்கு உரிய பட்டத்தையும் ஏற்க மறுத்தான் ! உரிய வயது வந்ததும், தந்தை சொல்படி, ராதா ராணி தத்தா என்பவளை மணந்தான்; அடுத்து ஆண் குழந்தைக்கும் தந்தையானான். ஆனாலும், ஆன்மிகத்தில் திளைப்பதிலும், ஸ்ரீ கிருஷ்ணரை நினைப்பதிலுமாக வாழ்ந்தான் அபய் சரண் ! 1922 - ஆம் வருடம் சுவாமி பக்தி சித்தாந்த சரஸ்வதி எனும் மகானைச் சந்தித்தான் அபய் சரண். அவரைத் தரிசித்த மாத்திரத்திலேயே வெகுவாகக் கவரப்பட்டு, அவரை தனது குருவாக ஏற்றான். அதுவே, அவனது வாழ்வின் மிகப் பெரிய திருப்புமுனை ! வேதங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் உள்ள கருத்துக்களையும், சைதன்ய மகாபிரபுவின் ஸ்ரீகிருஷ்ண பக்தி சாரத்தையும், ஆங்கிலப் புலமையால், உலக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். என விரும்பினார் குருநாதர். அதன்படி, தனது வாழ்க்கையை அதற்காகவே அர்பணிக்க முடிவு செய்தார் அபய் சரண். அடுத்த சில வருடங்களில், பகவத்கீதைக்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். அப்போது முதல், அபய் சரணின் ஆன்மிகப் பயணம், கிருஷ்ண பக்தி எனும் பாதையில் சீராகச் செல்லத் துவங்கியது. பரத கண்டத்தின் கலாசாரப் பொக்கிஷங்கள் அனைத்தும், அபய் சரணின் ஆங்கிலப் புலமையால், புத்தகங்களாக வெளிவந்தன; உலகெங்கும் பரவத் துவங்கின !

இவருடைய புலமை, மனித குலத்துக்கு ஆற்றி வரும் சேவை ஆகியவற்றின் காரணமாக, பக்தி வேதாந்த... பிரபுபாதா ஆகிய பட்டங்கள் இவரது பெயருடன் இணைந்தன. ஒரு கட்டத்தில், பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா என அனைவராலும் அழைக்கப்பட்டார். மனம் ஏற்காத சம்சார வாழ்வைத் துறந்தார். ஸ்ரீகண்ணன் லீலைகள் செய்த பிருந்தாவனத்தை, 1950-ஆம் வருடத்தில் தனது இருப்பிடமாக்கிக் கொண்டார் சுவாமிஜி. 59 - ஆம் வருடத்தில் தீட்சை பெற்று, காவியுடை அணிந்து, துறவறம் பூண்டார் பிரபுபாதா. ராதா தாமோதர் கோயிலும், கௌடியா மடத்திலும் வாழ்ந்துகொண்டே, உன்னிடம் எப்போது பணம் சேர்ந்தாலும், புத்தகத்தை வெளியிடு என்ற குருநாதரின் கட்டளைப்படி, தனது பக்தி இலக்கிய சேவையை முனைப்புடன் தொடர்ந்தார். சம்ஸ்கிருதம், ஹிந்துஸ்தானி போன்ற மொழிகளில் இருந்த பாகவத புராணம் முதலான அற்புதமான வைணவ கிரந்தங்கள், இவரது மொழிபெயர்ப்பில் விரிவான உரையுடன், ஆங்கில நூல்களாக வெளியாகின. கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கில், 1965-ஆம் வருடம் கொல்கத்தாவில் கப்பலேறினார் பிரபுபாதா. கையில் அதிகம் பணமில்லை; வெளிநாட்டில் வரவேற்பாரும் இல்லை; உதவுபவர்களும் கிடையாது. நியூயார்க்கை அடைந்தவர், ஏழைகள் குடியிருக்கும் பகுதியில் பொது இடத்தில் ஓரு மரத்தடியில் காவியுடையும் நெற்றியில் சந்தனக் கீற்றுமாக அமர்ந்தார்; கையில் தாளத்தைத் தட்டிக்கொண்டே... ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே எனும் கிருஷ்ண நாமத்தைப் பாடத் தொடங்கினார். பாடலைக் கேட்டவர்கள் நின்றனர்; அருகில் வந்தனர்; அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளின் லீலைகளையும் கீதையையும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில் தெளிவாக எடுத்துரைத்தார். இதில் கிறங்கிப்போன பலரும், அவருடன் இணைந்து கிருஷ்ண நாமாவளியைப் பாடத் துவங்கினர். இப்படி எளிமையாய்த் துவங்கியதுதான் பிரபுபாதாவின் அமைப்பு ! தன்னை மதித்து அழைப்பவர் வீட்டில் தங்குவது, கொடுப்பதை உண்பது, பொது இடங்களில் கிருஷ்ணனின் நாமத்தைச் சொல்லி சொற்பொழிவு ஆற்றுவது என அவரது வாழ்க்கை முறை மாறியது.

அதுமட்டுமா ?! மது, போதை மருந்துகள், பாலியல் வன்முறைகள் எனச் சீரழிந்துகொண்டு இருந்த அமெரிக்க இளைஞர்களிடமும், யுவதிகளிடமும் பேசினார்; கிருஷ்ண பக்தி, நல்லொழுக்கம் மற்றும் நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றால் அவர்களைத் திருத்தி வெற்றி கண்டார். இதனால் பிரபுபாதாவின் புகழ் பரவியது. இவரது பக்தி இலக்கியங்களும் சொற்பொழிவுகளும் அனைவரையும் வசீகரித்தன. இதையடுத்து, 1966 - ஆம் வருடம், ஜூலை மாதம், நியூயார்க் நகரில், இஸ்கான் எனும் அமைப்பு உதயமானது. அடுத்து, சான்பிரான்சிஸ்கோ மற்றும் அமெரிக்காவின் பல நகரங்களிலும் இஸ்கான் கிளைகள் துவக்கப்பட்டன. ஸ்ரீகிருஷ்ணருக்கு ஆலயங்கள், பிரார்த்தனைக் கூடங்கள், கல்விச் சாலைகள், தொழில் மற்ணும் விவசாய மையங்கள் என கிளை பரப்பியது இஸ்கான் அமைப்பு. இங்கிலாந்தில் இந்த இயக்கத்தில், பீட்டில்ஸ் எனும் புகழ்பெற்ற பாப் இசைக் குழுவினர் இணைந்ததால், லண்டன் போன்ற முக்கிய நகரங்களிலும் இந்த இயக்கம் வேரூன்றியது. 1971-ஆம் வருடம் இந்தியா திரும்பிய பிரபுபாதா, இங்கேயும் பல நகரங்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அற்புதமான ஆலயங்களை அமைத்தார். நூற்றுக்கணக்கான ஆன்மிகப் புத்தகங்களை மொழிபெயர்த்தும் உரை எழுதியும் சேவையாற்றிய சுவாமியின் நூல்கள், இதுவரை 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. இந்திய பக்தி இலக்கி யங்களைப்பிரசுரித்த வகையில், இன்றைக்கும் முன்னிலையில் நிற்கிறது இஸ்கான் அமைப்பு. உலகெங்கும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மையங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களையும் கொண்டு விளங்கும் ஹரே கிருஷ்ண இயக்கத்தைத் துவக்கி வழி நடத்திய சுவாமி பிரபுபாதா, 77-ஆம் வருடம் நவம்பர் 14-ஆம் நாள், பிருந்தாவன மண்ணில், தனது வாழ்வை நிறைவு செய்துகொண்டார். எளிமையாக வாழ்ந்து, அரிதான செயல்களை நிகழ்த்தி, ஸ்ரீ கிருஷ்ண பக்தி சாம்ராஜ்ஜியத்தை உலகெங்கும் நிறுவிய சுவாமி பிரபுபாதாவை உலகமே போற்றுகிறது; கிருஷ்ண பக்தி இருக்கும்வரை, பிரபுபாதாவின் புகழும் இருக்கும்!
சித்திர புத்திர நாயனார்

அண்ட புவனங்களெங்கும் பாவபுண்ணியம் பலன் தெரியவேண்டிப் பரமசிவன் உமையம்மையார் மூலம் திருவிளையாடல் புரிய நினைத்தார்.

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான் பார்வதியிடம் “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.”என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த ஒவியத்தின் மேல் பதித்தார். ஈசனின் மூச்சி காற்று காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டஉடன் அந்த ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று சிரிக்க ஆரம்பித்து ஒரு அழகான குழந்தையாக வெளிவந்தது..இந்த அற்புதத்தை கண்ட பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்து“நான் வரைந்த குழந்தை ஒவியம் ஒரு நிஜ குழந்தையாக மாறியதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.நான் வரைந்த சித்திரம் குழந்தையாக மாறியதால் இந்த குழந்தைக்கு சித்திர குப்தன் என்றும் சித்திரபுத்திரன் என்றும் அழைக்கபடட்டும்” என்று ஆசி வழங்கினார்.சித்திரகுப்தன் தோன்றிய ஒவ்வொரு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா எடுத்து சித்திரகுப்தரை வணங்குவது சிறப்பு.

சித்திர குப்தனுக்கு பதவி:ஒருநாள் யமதர்ம ராஜன் சிவபெருமானிடம்“இறக்கும் ஜீவராசிகளை அழைத்துவரும் போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும் தண்டனைகளையும் தர வேண்டும் என்பது நீங்களும் விஷ்ணுபகவானும் எமக்கு கட்டளையிட்டீர்கள்.ஆனால் யார் எவ்வளவு பாவ புண்ணியங்கள் செய்தார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது?என்று தன் மன கவலையை தெரிவித்தார் யமதர்மராஜன்.அதற்கு சிவன் இதற்கான தீர்வை பிரம்மனிடம் சென்று கேள் என்றார்.உடனே பிரம்மா சக்திதேவியின் திருக்கரங்களால் வரையபட்ட ஒரு சித்திரம், சிவபெருமானின் அருளால் உயிர் பெற்று ஒரு ஆண் குழந்தையாக வளர்கிறது. அவன் பெயர் சித்திர குப்தன். சித்திர குப்தனை உன் யமலோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன்.அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ பண்ணியங்கள் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனகவலையை ஒழித்து உன் தர்மபடி பணி செய்.”என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மன் தேவர்.அதன்படி சித்திர குப்தனை உடனே அழைத்து, யமதர்மராஜனிடம் அறிமுகப்படுத்தினார் பிரம்ம தேவன்.பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன் தன்னுடைய ஒரு கையில் எழுதுபோலும் மறுகையில் எழுதுகோலுக்கு தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார்.அன்றிலிருந்து இன்றுவரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்யும் ஒவ்வொரு பாவ புண்ணிய கணக்கை சித்திரகுப்தர் எழுதி வருகிறார்.

நமது பாவ-புண்ணியங்களை பொறுத்து சித்திர குப்தன் எழுதும் கணக்கின் அடிபடையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் நிகழ்கிறது.அதனால் பாவம் செய்வதை கனவில் நினைக்காமல் இந்த பிறவியில் மட்டுமல்லாமல் எந்த பிறவியிலும் புண்ணியங்களை மட்டுமே செய்து“இது புண்ணிய ஆத்மா”என்று சித்திர குப்தன் அவரின் கணக்கு புத்தகத்தில் நம்மை பற்றி குறிப்பு எழுதிவிட்டால் அடுத்த பிறவி இல்லை அல்லது எந்த பிறவியிலும் துன்ப நிலை இல்லாமல் இறைவன் துணை இருப்பார்.சித்ரா பவுர்ணமி அன்று சிவலிங்கத்தை வில்வஇலைகளை அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரண்டு இரட்டிப்பாகும்.சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை ஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள் அவருடைய படத்தை இல்லத்தில் வைத்து சர்க்கரை பொங்கல் படைத்து வணங்கி அத்துடன் அவருடைய கதைளை படித்து, அன்னதானம், விசிறி, குடை, செருப்பு போன்ற உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்தால் சித்திரகுப்தர் உங்கள் கணக்கில் நீங்கள் செய்த பாவங்களை குறைத்து, புண்ணியங்களை அதிகப்படுத்துவார். தர்மதேவதையின் அருட்பார்வையை உங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைப்பார். தர்மதேவைதை நம்மை பார்த்தாலே நாம் செய்யும் தான தர்மங்கள் பலமடங்கு பெருகும். நோய்நொடி இல்லாமல் எந்த பிறவியும் வளமாகும்.வாழ்வே இனிதாகும்.
வைணவத்தை வாழவைத்த ராமானுஜர்!

ராமானுஜர், 1017ம் ஆண்டு பிறந்து 1137 வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். உறங்காவில்லிதாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டவர். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி. தாய் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். ராமானுஜர் தனது வீட்டிலேயே தங்கியிருந்து தன் தந்தையிடமே வேதங்களை எல்லாம் கற்று வந்தார். 16ம் வயதில் தனது தந்தையை இழந்தார். 17வது வயதில் தஞ்சம்மாளை தன் பார்யாளாக ஏற்றார். பின்பு யாதவப்பிரகாசர் என்பவரிடம் பாடங்களை கற்றார். பாடம் நடத்த பல்வேறு சமயங்களில், ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குருவுக்கு கோபம் வந்து, கொன்றுவிடவும் திட்டமிட்டார். இப்படித்தான் விசிஷ்டாத்வைதத்தின் விதை முளைத்தது. அதன்பிறகு திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து விட்டார். இதையடுத்து ராமானுஜரின் பெயரும் புகழும் எல்லா இடங்களிலும் பரவியது. பிற்காலத்தில் தன் சொல் வன்மையாலும், இறைவனின் கருணையாலும் ஆயிரக்கணக்கானோரை வைணவ சம்பிரதாயத்தின் பால் ஈர்த்தார் ராமானுஜர். பின் விஷ்ணுதாசர்கள் இன்றும் போற்றி மகிழும் வேதாந்த சங்ரஹம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், கீதா பாஷ்யம், கட்யத்ரயம் ஆகியவற்றை உலகுக்கு அளித்தார். கோயில்களில் பின்பற்றப்படும் திருவாராதனத்தை ஒழுங்குபடுத்தும் நித்யம் என்ற கிரந்தத்தையும் வகுத்தார்.

அப்போது ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் காஞ்சிபுரம் சென்று ராமானுஜரை சந்தித்தார். வைஷ்ணவத்தை வளர்க்க ஒரு மகான் கிடைத்துவிட்டார் என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்திற்கு வரும்படி ராமானுஜரிடம் ஆளவந்தார் கேட்டுக்கொண்டார். ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஆளவந்தாரின் உடல்நிலை மோசமானது. அவர் தனது சீடர் பெரியநம்பியை அனுப்பி ராமானுஜரை உடனடியாக ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துவரும்படி செய்தார். பெரியநம்பி காஞ்சி சென்று ராமானுஜருடன் ஸ்ரீரங்கம் திரும்பினார். அதேநாளில் ஆளவந்தார் பரமபதம் அடைந்தார். ஒருமுறை திருக்கச்சி நம்பியிடம் பெருமாள் தோன்றி, சன்னியாசம் பெற்ற ராமானுஜரை நல்ல ஒரு மடத்தில் வைத்து வேதம் கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படியே ராமானுஜருக்கு பல்வேறு வேதங்கள் கற்றுத்தரப்பட்டன. அங்கு வந்த ராமானுஜரின் பழைய குருவான யாதவபிரகாசர், மாணவன் என்றும் பாராமல் ராமானுஜரின் கால்களில் விழுந்தார். தன்னைக் கொல்ல முயன்றவர் என்றும் பாராமல் அவருக்கு  கோவிந்தஜீயர் பட்டத்தை வழங்கினார் ராமானுஜர். எதிரியையும் நட்புடன் நடத்திய பெருமைக்குரியவர் ராமானுஜர். சிறிது காலம் கழித்து அவர் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் அவ்வூர் பிராமணர்கள் மிகுந்த ஆசாரசீலராக தங்களை காட்டிக்கொண்டதை ராமானுஜர் கண்டித்தார். நீங்கள் அத்தனை உயர்ந்தவர்களாக இருந்தால் ஸ்ரீ ரங்கநாதனை நீங்கள் சேவிக்கக்கூடாது. அவருக்கு நிவேதனம் செய்யபடும் பிரசாதத்தையும் ஏற்கக்கூடாது. தீண்டப்படாதவரான திருப்பாணாழ்வாரை அவர் தம்முடன் இணைத்துக்கொண்டதால் உங்கள் நோக்கப்படி ரங்கநாதனும் தீட்டு உள்ளவர்தான். அவர் அருகே செல்லாதீர்கள் என்று கண்டித்தார்.

இந்த அளவுக்கு ஜாதி வித்தியாசம் பாராமல் திட சித்தமுள்ளவராக இருந்து உலகில் இணையற்ற ஒரு மதத்தை ஸ்தாபித்து அருளிய ராமானுஜரின் புகழ் எங்கும் பரவியது. வைஷ்ணவம் எங்கும் பரவியது. இவ்வளவும் இருந்தது போக, அவருக்கு ஒரு குறையும் இருந்தது. அது தான் நாராயண மந்திரத்தின் பொருள் அறிவது. இதற்காக ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சரண் புகுந்தார். ஆனால் நம்பியோ, ராமானுஜரை நம்பி மந்திரத்தின் பொருள் கூற மறுத்தார். ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை. 17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார். அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. ராமானுஜர் மீது இரக்கப்பட்டு திருமந்திரத்திற்கு விளக்கம் சொன்னார். அத்துடன் இதை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். குருவின் கருத்தை புறக்கணித்த ராமானுஜர் நேராக திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும் படி உறக்க கத்தினார். இதனால் ஆத்திரமடைந்து நம்பி ராமானுஜரிடம் விளக்கம் கேட்டார். இந்த மந்திரத்தை அறிந்து கொள்வதால் ஆயிரக்கணக்கானோருக்கு வைகுண்டம் செல்ல வாய்ப்பு கிடைக்குமானால் நான் நரகம் செல்வதில் கவலையில்லை என்றார். ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களை வடமொழி வேதங்களுக்கு இணையாக கருதும்படி செய்தார். பிறகு தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே திருநாடு (பெருமாள் திருவடி) எய்தினார். இப்போதும் உடையவரின் திருஉடல் ஸ்ரீரங்கம் கோயிலில் அப்படியே உள்ளது.
மக்கள் சேவையே மகேசன் சேவை: சுவாமி சிவானந்தர்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம் ! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால், மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல ! மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில், அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை. வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி ! எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே, தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை, மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர்தான் சிவானந்த சரஸ்வதி. திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு, 1877-ஆம் வருடம், செப்டம்பர் 8-ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்புஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தார், வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர்நிலைப்பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி, கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.

1903-ஆம் வருடம், மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினான். பிறகு, திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, 1905-ஆம் வருடம், தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில், அவரின் தந்தை இறந்துபோனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே, 1913-ஆம் வருடம், மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி. வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும், எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார் அவர். ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து, மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு, மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார். 1923-ஆம் வருடம், இந்தியா திரும்பி, காசி, நாசிக், பண்டரிபுரம், ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது, கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர், ரிஷிகேஷ் தலத்தில், சுவாமி விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று, 1924-ஆம் வருடம் ஜூன் 1-ஆம் தேதி, சுவாமி சிவானந்த சரஸ்வதி எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.

அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய, அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, 1927-ஆம் வருடம், கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி, ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு, தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு, மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர், 1934- ஆம் வருடம், மார்ச் மாதம், உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில், ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு, மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புனித வாழ்க்கை சங்கம் எனும் மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது. சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை, மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி, பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார். சுவாமிகள், தன்னை அறிந்துகொண்டு, விடுதலை பெறு, நல்லதைச் செய், அதை உடனே செய் எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சுவாமி சிவானந்த சரஸ்வதி, 1963-ஆம் வருடம், ஜூலை 14-ஆம் தேதி, கங்கைக் கரையில், இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.