அருள் மிகு கற்கடேஸ்வரர் திருக் கோவில்
மூலவர் :கற்கடேஸ்வரர்
உற்சவர் :சோமாஸ்கந்தர்
அம்மன் :அபூர்வநாயகி, அருமருந்துநாயகி
தல விருட்சம் :நங்கை மரம்
தீர்த்தம் :நவபாஷாண தீர்த்தம்
ஆகமம் பூஜை :சிவாகமம்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :கற்கடேஸ்வரம்
ஊர் :திருந்துதேவன்குடி
மாவட்டம் :தஞ்சாவூர்
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:சம்பந்தர்
தேவாரப்பதிகம்:மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய அருந்தவத் தோர்தொழும் அடிகள் வேடங்களே.திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 42வது தலம்.
திருவிழா:சிவராத்திரி, திருக்கார்த்திகை
தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது.
திறக்கும் நேரம்:காலை 9 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி - 612 105. வேப்பத்தூர் போஸ்ட், திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:+91 435 - 2000 240, 99940 15871
பொது தகவல்:ஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கோபமும் வேகமும் கொண்ட இவர்கள் செல்வந்தர்களாக இருப்பர். சிவந்த மேனி, அகலமான கண்களைப் பெற்றிருப்பர். நியாய தர்மங்களை மற்றவர்களுக்குப் போதிப்பர். மந்த குணமும் இருக்கும். நகை அணிதல், பணம் சம்பாதிப்பதில் அலாதிப் பிரியம் இருக்கும். செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாகத் திகழ்வர். இத்தலவிநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், சுதை வடிவில் நடராஜர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது. சிவனை வணங்கிய இந்திரன் தவறை உணர்ந்து திருந்தியதால் இத்தலம், திருந்துதேவன்குடி என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை. நண்டு கோயில் என்றுதான் இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
பிரார்த்தனை:ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கிரக தோஷங்கள் நிவர்த்தியாக கற்டேஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இந்த எண்ணெயை உண்டகொண்டால் நோய் நீங்குவதாகவும் நம்பிக்கை இருக்கிறது.
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வஸ்திரம் சாத்தி, விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
தலபெருமை:ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது, வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது. பிணி நீக்கும் சிவன்: காலவெள்ளத்தில் இவ்விடத்தில் சுயம்புலிங்கம் மண்ணிற்குள் மறைந்தது. ஒருசமயம் இப்பகுதியை சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். ஒருசமயம் அவனுக்கு வாதநோய் உண்டானது. பல வைத்தியங்கள் பார்த்தும் நோய் குணமாகவில்லை. சிவபக்தனான அம்மன்னன், நோய் தீர அருளும்படி சிவனிடம் வேண்டினான். ஒருசமயம் வயதான மருத்துவ தம்பதியர் அவனது அரசவைக்கு வந்தனர். மன்னனிடம் சென்ற அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த விபூதியை, தீர்த்தத்தில் கரைத்து கொடுத்தனர். அந்த மருந்தை சாப்பிட்ட உடனே மன்னன் நோய் நீங்கி எழுந்தான். மருத்துவ தம்பதியரை தனது அரசவையில் ராஜ வைத்தியராக தங்கும்படி வேண்டினான். அவர்கள் கேட்காமல் கிளம்புவதாக கூறினர். எனவே மன்னன் அவர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக கொடுக்க எடுத்து வந்தான். அதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வியந்த மன்னன் அவர்களிடம், தாங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை! என்றான். பின்னர் அவர்கள் இவ்விடத்திற்கு அழைத்து வந்து சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பும்படி கூறினர். மன்னனும் ஒப்புக்கொண்டான். அப்போது லிங்கத்தின் அருகில் சென்ற இருவரும், அதனுள் ஐக்கியமாயினர். அதன்பின்பு வந்தது சிவ, பார்வதி என உணர்ந்த மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான். இவரிடம் வேண்டிக்கொள்ள பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சம்பந்தர் இவரை பிணி நீங்கும் சிவன் என்று பதிகம் பாடியுள்ளார்.
இரட்டை அம்பிகையர் தலம்: பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர். மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பியபோது, ஏற்கனவே இங்கிருந்த அம்பிகையை காணவில்லை. எனவே புதிதாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். மருத்துவர் வடிவில் வந்து அருளியவள் என்பதால், அருமருந்து நாயகி என்று பெயர் சூட்டினான். ஆனால் சிறிது நாட்களிலேயே தொலைந்த அம்பிகை சிலை கிடைத்தது. அதனையும் இங்கு பிரதிஷ்டை செய்தான் மன்னன். இவள் அபூர்வநாயகி என்று அழைக்கப்பட்டாள். இவளே இங்கு பிரதான அம்பிகையாக கருதப்படுகிறாள்.
யோக சந்திரன்: புனர்பூசம், பூசம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பரிகார தலம் இது. சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது. கோயில் நுழைவுவாயில் சந்திரன் சன்னதி உள்ளது. இவர் யோக நிலையில், யோக சந்திரனாக காட்சி தருகிறார். ஜாதகத்தில் சந்திர திசை உள்ளவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
சிறப்பம்சம்: கடக ராசிக்கு உட்பட்ட ஆயில்ய நட்சத்திரத்திற்கு சிறந்த மருத்துவ குணங்கள் உண்டு. மேலும், தெய்வ பக்தியுடன் எதையும் செய்து சாதிக்க முடியும் என்ற ஆன்மிக ரீதியான மனத்தை இது தரும். மனக்குழப்பத்தையும், நோய்களையும் தீர்க்கவல்லது. ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர நாள் மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இத்தல இறைவனுக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும், உடலும் உள்ளமும் நலம் பெறும். அமாவாசை, செவ்வாய், சனிக்கிழமைகளிலும் இங்கு வழிபாடு செய்யலாம். நீண்டகாலமாக நோயுள்ள பிற நட்சத்திரக்காரர்களும் இந்த நாட்களில் கற்கடேஸ்வரரையும், அருமருந்து நாயகியையும் வழிபட்டு, மருந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:ஒரு சமயம் துர்வாசமகரிஷி, சிவபூஜை செய்து விட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் நடையைப் பார்த்து, நீர் நண்டு ஊர்ந்து செல்வதைப் போல நடக்கிறீர், என்று கேலி செய்ததுடன், அவரைப் போல நடந்தும் காட்டி அவமானப்படுத்தினான். கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாக பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். துர்வாசரின் அறிவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றான். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை இப்போதும் காணலாம். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர் கற்கடேஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்திரன் தன் ஆணவம் நீங்க, குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து வழிபாடு செய்து திருந்தினான்.இதனால் இத்தலம், திருந்து தேவன்குடி என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை. நண்டுகோயில் என்று சொன்னால் தான் புரியும்.
சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர்.சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது.