ஞாயிறு, 14 ஜனவரி, 2024

சதாசிவ பிர்ம்மேந்திரர்

18ம் நூற்றாண்டின் துவக்கத்தில், அந்தணக் குடும்பத்தில் அவதரித்தவர் சதாசிவ பிர்ம்மேந்திரர். சோமநாதர் - பார்வதி அம்மையார் தம்பதிக்கு அருந்தவப் புதல்வனாக அவதரித்தார் சிவராமகிருஷ்ணன். ஆம்! சதாசிவ பிரம்மேந்திரருக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுதான். கல்வி, கேள்வி, சாஸ்திரம், வேதம், சங்கீதம் முதலானவற்றை முறையாகக் கற்றார். திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், கோவிந்தபுரம் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், அப்பைய தீட்சிதர், சிவயோகி தாயுமான ஸ்வாமி, தியாகராஜர் முதலானோரெல்லாம் சதாசிவ பிரம்மேந்திரரின் சமகாலத்தவர்கள் என்று கூறப்படுகிறது.

துறவு என்றால் காவிதானா? அவதூத நிலையும் (நிர்வாணம்) ஒரு துறவுதான். சதாசிவ பிரம்மேந்திரர் இதைத்தான் கடைப்பிடித்து வாழ்ந்தார். வாழ்க்கையின் பிற்பகுதி முழுவதும் மவுன நிலை. எவரிடமும் எந்த ஒரு பேச்சும் இல்லை. காரணம்? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவரது குரு சும்மா இருக்க மாட்டியா! உன் வாயைக் கொஞ்ச நேரம் மூடு என்று அதிகாரமாகச் சொன்னதை. ஆண்டவன் தனக்கு இட்ட கட்டளையாகக் கருதி, அந்தக் கணம் முதல், பேச்சை நிறுத்தினார்.

மவுனமே நிரந்தரமான பரிவர்த்தனை ஆனது. அவசரமான சந்தர்ப்பங்களில் மட்டும் மணலில் எழுதிக் காண்பித்துக் குறிப்பு சொல்வார். தேசத்தின் பல பாகங்களுக்கும் சதாசிவ பிரம்மேந்திரர் சென்று வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. துருக்கி நாட்டுக்குக்கூட இவர் சென்று வந்ததாக செவி வழிச் செய்தி உண்டு. ஒரு முறை இவர் திகம்பரராக சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, சிற்றரசன் ஒருவனது அந்தப்புரத்தைக் கடக்க நேர்ந்தது. ஆடை இல்லாதவர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து செல்கிறார் என்ற தகவல். அந்த சிற்றரசனைக் கடுங்கோபத்துக்கு உள்ளாக்கியது.

ஆத்திரத்துடன் அரசவையில் இருந்து வெளிவந்த சிற்றரசன் சாலையில் சென்று கொண்டிருந்த சதாசிவரைத் தன் வாளால் சரேலென வெட்டினான். அந்த மகானின் கை வெட்டுப்பட்டு தனித் துண்டாக நிலத்தில் விழுந்தது. கை வெட்டுப்பட்டதையும் அந்த இடத்தில் ரத்தம் ஆறுபோல் வழிந்துகொண்டு இருப்பதையும் பற்றி சற்றும் உணராத சதாசிவர், எதுவுமே நடக்காதது போல், சென்று கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த சிற்றரசன் விதிர்விதிர்த்துப் போனான். கை வெட்டுப்பட்டும் சலனம் இல்லாமல் ஒருவர் நடந்து செல்கிறார் என்றால் இவர் யாராக இருக்கும் என்று குழும்பிப் போய் பயம் மேலிட அவர் பின்னே தொடர்ந்தான்.

மகானின் நிலை தொடர்ந்து அவனை பீதிக்குள்ளாக்க ஓடிப்போய் அவருடைய பாதம் பணிந்து தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டான். அப்போது சதாசிவரிடம் எந்த மாற்றம் இல்லை. எதுவுமே நிகழாதது போல் வெட்டுப்பட்ட இடத்தை மெல்லத் தடவி விட்டார். அடுத்து நடந்ததை அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். ரத்தம் வழிவது சட்டென நின்று, வெட்டுப்பட்டுத் தரையில் கிடந்த அவரது திருக்கரம் தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது!

அதன்பின் சதாசிவரின் அருளுக்கும் ஆசிக்கும் அந்த சிற்றரசன் பாத்திரமாகி விட்டான். இது போல் சதாசிவரின் வாழ்க்கையில் ஏராளமான அதிசயங்கள் நடந்துள்ளன. சிறு வயதிலேயே பரப்பிரம்ம நிலையை எய்தியவர் சதாசிவர். அதாவது கல், கட்டை, மனிதர், புல், பூண்டு அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் நிலை தான் பரப்பிரம்ம நிலை. எதற்கும் பேதம் பார்ப்பதில்லை. தனது வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளைக் காவிரிக் கரை ஓரத்திலேயே கழித்தவர் சதாசிவர். அதனால் தானோ என்னவோ  எங்கெங்கோ சுற்றி இருந்தாலும் இறுதிக் காலத்தில் அருகில் உள்ள நெரூருக்கு வந்து, தான் சமாதி ஆகப்போகும் இடத்தை அவரே தேர்ந்தெடுத்தார்.

ஜீவசமாதி ஆவதற்குச் சில நாட்கள் முன்பிருந்தே சமாதி நிலையில் இருந்தார் சதாசிவர். உணவு, உறக்கம் போன்ற இயல்பான செயல்கள் எதுவும் இல்லாமல். கட்டை போல் இருக்கும் நிலை. அப்போது மட்டுமில்லை. அடிக்கடி சமாதி நிலையில் இருக்கும் சுபாவம் கொண்டவர் சதாசிவர். இப்படித்தான் ஒரு முறை கொடு முடிக்கு அருகில் ஆற்றங்கரையில் சமாதி நிலையில் உட்கார்ந்தார் சதாசிவர். ஓரிரு நாட்கள் கழித்து காவிரி ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அப்போது கரையில், சமாதி நிலையில் இருந்த சதாசிவரையும் வெள்ளம் மூழ்கடித்து விட்டது. கரையில் இருந்தவர்கள் பதறினார்கள். கரையில் உட்கார்ந்து தியானம் செய்த சாமியக் காணோம் என்று ஒருவர் அலற.... அடுத்தவர் சோகத்துடன் ஆத்து வெள்ளம் பாய்ஞ்ச வேகத்தைப் பாத்தீல்ல. அது அவரையும் அடிச்சிட்டுப் போயிருக்கும். வெள்ளத்துக்கு நல்லவாங்க கெட்டவங்க வித்தியாசம் தெரியவா போகுது. பாவம்! அவரோட ஆயுளு இப்படி அற்பமா முடிஞ்சு போச்சே என்று அங்கலாய்த்தார்.

இதன் பிறகு சதாசிவரைப் பற்றிக் கொடுமுடிவாசிகள் மறந்தே போய் விட்டார்கள். ஒரு கோடை காலத்தில் தண்ணீர் வற்றிய நேரத்தில், காவிரியில் வாய்க்கால் வெட்டுவதற்காக ஒரு மணல் கோட்டை மண்வெட்டி மூலம் வெட்ட ஆரம்பித்தார்கள் பணியாளர்கள். ஓர் ஆசாமி மண்வெட்டியால் வெட்டிய போது பதறிப்போனார். உள்ளே விசித்திரமான ஏதோ ஒன்றின் மேல் மண் வெட்டி பட்டதாகத் தெரிகிறது என்று அலறி, மண் வெட்டியை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் விட்டார்!

திகிலான மற்ற பணியாளர்கள் விரைந்து வந்து. அந்த மண் வெட்டியை எடுத்துப் பார்க்க.... அதன் முனையில் ரத்தம்! இதைப் பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். பிறகு அவர்களே சமாதானம் அடைந்து அந்தக் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிலும் இருந்த மண்ணை மெதுவாக விலக்கினார்கள். உள்ளே பள்ளத்தில் உடலெங்கும் மணல் அப்பிய கோலத்தில் சமாதி நிலையில் காட்சி தந்தார் சதாசிவ பிரம்மேந்திரர். காற்றுகூட புக முடியாத அந்த மண் மூடிய இடத்தில் எத்தனை காலமாகத்தான் சமாதி நிலையில் இருந்தாரோ அந்த மகான்? இறைவனுக்குத்தான் தெரியும்.

தன் சமாதி நிலை கலைந்ததால், பள்ளத்தில் இருந்து எழுந்தார் சதாசிவ. அவர் உடலில் இருந்து மண் துகள்கள் உதிர்ந்தன. அவர் உடலில் மண்வெட்டி பட்ட இடத்தில் இருந்து ரத்தம் கசிந்து வழிந்து கொண்டிருந்தது. ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் விறுவிறு வென்று நடந்து சென்றார். பணியாட்கள் இதைக்கண்டு திகைத்துப் போனார்கள். பரப்பிரம்மத்துக்கு ஏது வலி? ரத்தத்தைக் கண்டு ஏது பயம்.? இது போல் தான் சமாதி ஆவதற்குச் சில நாட்கள் முன்பும் சமாதி நிலையில் நெரூரில் இருந்தவர் சதாசிவர். பல நாட்கள் இப்படி ஓடின. திடீரென ஒரு நாள் கண் விழித்தார் பிரம்மேந்திரர். ஏதோ சொல்லப் போகிறார் என்று அவரைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவரை நெருங்கினார்கள். ஊரில் இருந்த முக்கிய பிரமுகர்களை உடனே அங்கே வரச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். அந்தணர்கள் உட்பட அனைவரும் கூடினர்.

ஆனி மாதம் வளர்பிறை தசமி அன்று. பூத உடலை, தான் துறக்க இருப்பதாக அவர்களுக்கு உணர்த்தினர். தான் சமாதி ஆன பின், காசியில் இருந்து அந்தணர் ஒரு பாண லிங்கம் ஒன்றைக் கொண்டு வருவார் என்றும் அதைத் தன் சமாதிக்கு அருகில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று உணர்த்தினார். ஜீவ சமாதியாகும் நாள் நெருங்கியது காவிரி ஆற்றங்கரை ஓரம் சதாசிவர். தான் சமாதி ஆவதற்காகத் தேர்வு செய்ய இடத்தில் இருந்த புல், பூண்டுகளை அகற்றும் பணியில் ஊர்க்காரர்கள் இறங்கினர். நெரூர் பூமி, புண்ணியம் செய்த பூமி, இல்லையென்றால் இத்தனை பெரிய மகான் நம்மூருக்கு வந்து சமாதி ஆவாரா? என்று ஊர்க்காரர்கள் நெகிழ்ந்தனர். சாஸ்திரப்படி குழி வெட்டினார்கள். இன்னும் சற்று நேரத்தில் பரப்பிரம்மம். ஜீவசமாதி ஆவதைக் காண அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் ஜனங்கள் திரண்டிருந்தனர். அனைவரின் முகமும் சோகம் கப்பியதாக இருந்தது.

குறித்தநேரம் வந்ததும். ஜனத்திரளில் நீந்தி. தனக்காகத் தோண்டப்பட்ட குழியை அடைந்தார் சதாசிவர். வேத மந்திர கோஷங்களின் ஒலி. அந்தப் பிராந்தியத்தையே நிறைத்தது. இரு புறமும் கூடி இருந்த மக்களின் வழிபாடுகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு, தனக்கான குழியில் இறங்கினார். ஜனங்கள் அனைவரையும் ஒரு முறை சந்தோஷமாகப் பார்த்தார். பிறகு குழியின் நடுவில் சமாதி நிலையில் உட்கார்ந்தார். மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று அங்கு கூடி இருந்தவர்களுக்கு சமிக்ஞையாகச் சொன்னார். சமாதி மூடப்பட்டு சடங்குகள் நடந்தன. வந்திருந்தோர் அனைவரும் கண்ணீருடன் வழிபட்டுத் திரும்பினர். அந்த பரப்பிரம்மம். இந்த உலகத்துடனான தன் சரீரத் தொடர்பை விலக்கிக் கொண்டது சதாசிவ பிரம்மேந்திரர் சொன்னபடியே, அவர் சமாதியான பின், காசியில் இருந்து அந்தணர் ஒருவர் பாண லிங்கத்தைக் கொண்டு வந்தார். பிரம்மேந்திரருடைய விருப்பப்படி அவரது சமாதி அருகில் அந்த பாண லிங்கம் காசி விஸ்வநாதர் என்கிற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரம்மேந்திரரின் அருளுக்குப் பாத்திரமானவரும் புதுக்கோட்டை சமஸ்தான மன்னருமான விஜயரகுநாதராய தொண்டைமான் தகவல் கேள்விபட்டு நெரூர் வந்தார். காசி விஸ்வநாதருக்கு ஒரு கோயில் கட்டினார். முறைப்படி நடக்க வேண்டிய கோயில் பூஜைகளுக்கும் சமாதி வழிபாடுகளுக்கும் ஏற்பாடுகளைச் செய்தார். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆகம பூஜை. ஜீவ சமாதிக்கு வைதீக பூஜை. கோயில் மற்றும் அதிஷ்டானம் ஆகிய இரண்டும் இணைந்த திருக்கோயிலாக இது காட்சி அளிக்கிறது.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கண்காணிப்பில் கோயில் இன்று இருந்து வருகிறது. காசி விஸ்வநாதர் (சதாசிவ பிரம்மேந்திரர் சொன்னபடி காசியில் இருந்து வந்த பாண லிங்கம் இதுதான்) மற்றும் விசாலாட்சி ஆகிய தெய்வங்கள் கோயிலுக்குள் அருள் புரிகின்றனர். காசி விஸ்வநாதர் சன்னதிக்குப் பின்பக்கம் பிரம்மேந்திரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. சமாதிக்குக் குடை பிடித்தபடி ஒரு பிரமாண்ட வில்வ மரம் காணப்படுகிறது.

சதாசிவர், ஜீவ சமாதி ஆன பத்தாம் நாளில் இந்த வில்வ மரம் தானாக வந்தது. இப்படி ஒரு வில்வ மரம் முளைக்கும் என்கிற செய்தி புதுக்கோட்டை மகாராஜாவின் கனவில் வந்து சொல்லப்பட்டது என்பது ஆச்சரியமான விஷயம். தினமும் காலையில் ஒன்பது மணிக்கு சமாதிக்கு அபிஷேகம் நடக்கும். அப்போது ருத்ரம், சமகம், புருஷசூக்தம் முதலிய பாராயணம் நடக்கும்.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் காலை பத்து மணிக்கு விசேஷ அபிஷேகம் அலங்காரம் உண்டு. அன்று சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்ப அலங்காரம், அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். தவிர, ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது என்றார் நாராயண உபாத்யாயா. இவர்தான், ஜீவ சமாதியின் வழிபாடுகளை தற்போது கவனித்து வருகிறார்.

மகான்களின், மரணம் என்பது உடல் நீக்கம் மட்டுமே! காலங்களைக் கடந்தும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அருளாசிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு. அந்த மகானின் சன்னிதியைத் தரிசித்துச் செல்லும் அன்பர்களே சாட்சி.

ஸ்ரீசதாசிவரின் திருப்பாதம் பணிவோம்.

மகானின் திருக்கரம் பட்ட மந்திர மண்!

சமஸ்தானமாக இருந்தபோது புதுக்கோட்டையின் மன்னராக விளங்கிய விஜயரகுநாதராய தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரருக்கு நெருக்கமானவர்.

திருமணம் சம்பந்தமான ஒரு கொண்டாட்டம் சதாசிவ பிரம்மேந்திரரின் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. அப்போது சதாசிவருக்குப் பசி எடுத்தது. தாயை அணுகி உணவு அளிக்குமாறு கேட்டார். சற்றுப் பொறுத்திருப்பா. உன் திருமணத்துக்காக கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. நீ இப்போது அவசரப்படலாமா? என்று தாயார் கேட்டபோது. துணுக்குற்றார் சதாசிவர்.

திருமணம் சம்பந்தமான ஒரு கொண்டாட்டம் சதாசிவ பிரம்மேந்திரரின் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. அப்போது சதாசிவருக்குப் பசி எடுத்தது. தாயை அணுகி , உணவு அளிக்குமாறு கேட்டார். சற்றுப் பொறுத்திருப்பா. உன் திருமணத்துக்காக கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. நீ இப்போது அவசரப்படலாமா? என்று தாயார் கேட்டபோது. துணுக்குற்றார் சதாசிவர்.

திருமணத்துக்கு முன்னரே பசித்தபோது வயிற்றுக்குச் சோறு போட முடியவில்லை என்றால், மணமானபின் இல்லற வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கும்; எப்படியெல்லாம் சிரமங்கள் நம்மை ஆட்கொள்ளும் என்று சிந்தித்தவர், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுப் புறப்பட்டு விட்டார் நடந்தார்.... நடந்தார்...

தஞ்சாவூர் வழியே சென்றால். 1738 வாக்கில் புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளக் காடுகளில் (இதை திருவரங்கம் என்பாரும் உண்டு) நடந்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதியின் மன்னரான விஜயராகுநாத ராய தொண்டைமான். மகானான சதாசிவரை சந்தித்தார். தன்னந்தனியே இருந்த மன்னரைக் கண்ட மாத்திரத்திலேயே மகானின் மனதும் இளகியது. குருவிடம் உபதேசம் கேட்கும் சீடன் கோலத்தில், சதாசிவம் முன் பணிந்தபடி நின்றார் மன்னர். மவுனத்தையே தான் கடைப்பிடித்து வந்ததால், கீழே அமருமாறு சைகை காண்பித்தார். மன்னரும் அமர்ந்தார். அதன்பின் கீழே இருந்த மணலில் சில மந்திரங்களுடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தையும் எழுதிக் காண்பித்த அவருக்கு உபதேசம் செய்தார்.

அந்த மந்திரம்:

ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஃஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா.

மந்திர உபதேசத்தைப் பெற்றுக்கொண்டபின், எந்த மணலில் சதாசிவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தை எழுதினாரோ அந்த மணலைத் தன் இரு கைகளால் பவ்யமாக அள்ளி, தலைப்பாகையில் எடுத்துக்கொண்டு அரண்மனை திரும்பினார் தொண்டைமான். இந்த மந்திர மண்ணை பூஜையறையில் வைத்து தினமும் வழிபட்டார் மன்னர் என்கிறார். சமஸ்தானத்தின் இன்றைய ராணியான ரமாதேவி ராதாகிருஷ்ண தொண்டைமான்.

சதாசிவர் தன் கைவிரல்களால் மந்திர எழுத்துக்களை எழுதிக் காண்பித்த அந்த மணல் இன்று எங்கே இருக்கிறது?

எங்கள் குடும்பத்தினரின் பராமரிப்பில் இருக்கும் அந்த மந்திர மணல் அடங்கிய பேழை. வீட்டில் இருக்கும் பூஜை அறையில் இருந்து வருகிறது. இங்கு ஸ்ரீராமபிரானால் பூஜிக்கப்பட்ட அபூர்வமான தட்சிணாமூர்த்தி விக்கிரகமும் உள்ளது. என்று ராணியின் புதல்வரான ராஜ்குமார் விஜய்குமார் தொண்டைமான் கூறினார்.

மந்திர மணல் சன்னிதியையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமை அன்று மட்டுமே தரிசிக்க முடியும். வழிபாட்டு நேரம் காலை 08.30 - 11.00; மாலை 05.30 - 08.00 {இதைத் தவிர, நவராத்திரியின் போது பத்து நாட்களிலும் தரிசிக்கலாம்}

தியாகராஜ ஆராதனையும் பற்றி வரலாறு...

தியாகராஜ ஆராதனையும் பற்றி வரலாறு...

தியாகராஜர் 'பிரபவ வருடம் பூசத்திங்கள் கிருஷ்ணபட்சம் ஞாயிற்றுக்கிழமை சமாதியடைந்தார்.அதற்கு ஆறு நாள்களுக்கு முன்னால் குன்றில் அமர்ந்தபடி ராமர் அவருக்குத் தரிசனம் தந்து பூமியில் தியாகராஜரின் காலம் முடியும் நாள் நெருங்கிவிட்டது என்று கூறினார்.சஹானா ராகத்தில் அமைந்த தியாகராஜரின்'கிரிவை'என்ற கிருதி இதைத் தெரிவிக்கிறது.பின்னர் அவர் சன்னியாசம் ஏற்று நாதபிரம்மானந்தர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார்.காவிரிக் கரையில் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்ட அவர் தன் சீடர்களை அழைத்து இருதிகாலத்திற்க்கு பின் தனது உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.சவக் குழியில் எவ்வளவு உப்பு இட வேண்டும் என்பதைக்கூடச் சொன்னாராம்.குறிப்பிட்ட அந்த நாளில் பிராமணர்களுக்குத் தானங்கள் அளித்து, பின்னர் தியாகராஜர் சீடர்கள் அவரது கிருதிகளைப் பாடியபடியிருக்க யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். சட்டென்று அவரது சிரசிலிருந்து ஒரு பெரும்ஜோதி வெளிப்பட்டது தியாகராஜர் சமாதியடைந்தார். ஆங்கில நாள்காட்டியின்படி அன்று 1847ஆம் வருடம் ஜனவரி மாதம் 6ஆம் தேதி.தியாகய்யரின் பேரன் பஞ்சாபகேசய்யா இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

தியாகராஜர் தனது சமாதிக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏற்கனவே பல சன்னியாசிகள் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர்.மராட்டிய மன்னர் பரம்பரையின் தூரத்து உறவுக் குடும்பம் ஒன்றுக்குச் சொந்தமான இந்த இடம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து திருவையாறில் காலமான சாதுக்களை அடக்கம் செய்வதற்காக வழங்கப்பட்டிருந்தது.தியாகராஜரின் சீடர்கள் அவரது சமாதிக்கு மேலே துளசி மாடம் ஒன்றை அமைத்தனர்.தியாகராஜர் முக்தியடைந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பஞ்சாபகேசய்யாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.அவரது சீடர்கள் அனைவரும் அதற்காக அங்குக் கூடினர்.அப்போதெல்லாம் அது ஒரு சிரார்த்தம்போலச் சம்பிரதாயச் சடங்காக எந்த இசை நிகழ்ச்சியும் இல்லாமல் நடந்தது.1855ஆம் ஆண்டு இருபத்திரெண்டு வயதில் பஞ்சாப கேசய்யா மரணமடைய சீடர்களும் திருவையாறுக்கு வருவதை நிறுத்திக்கொண்டனர்.அவரவர் தத்தமது ஊர்களில் திதியை நடத்தினர்.பிருந்தாவனம் மறக்கப்பட்டுப் புதர் மண்டியது.1903 வாக்கில் தியாகராஜரின் சீடர்களில் ஒரு சிலரே எஞ்சியிருந்தனர்.இவர்களில் உமையாள்புரம் கிருஷ்ண பாகவதரும் சுந்தர பாகவதரும் தமது குருவின் சமாதி சிதிலமடைந்திருந்ததை அறிந்து திருவையாறுக்கு வந்து மிகுந்த சிரமத்துக்கிடையில் அந்த இடத்தைக் கண்டுபிடித்துப் புனருத்தாரணம் செய்தனர்.சமாதியின் பின்பக்கத்தில் இதைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்றையும் அவர்கள் பதித்தனர்.

அன்று தியாகராஜரின் சீடர்களில் மூன்று பரம்பரைகள் பிரபலமாக இருந்தன வாலாஜாப்பேட்டை தில்லை ஸ்தானம் உமையாள்புரம்.வாலாஜாப் பேட்டை பரம்பரை வேங்கடரமண பாகவதர் மற்றும் அவரது மகன் கிருஷ்ணசாமி பாகவதரிடமிருந்து வந்தது.தியாகராஜரிடமிருந்து நேரடியாகச் சங்கீதம் பயின்ற இவர்கள் அவரைப் பற்றித் தனித்தனியாக வரலாறு எழுதினார்கள்.தில்லை ஸ்தானம் பரம்பரை ராம ஐயங்காரிடமிருந்து வந்தது.தியாகராஜரின் கிருதிகளை வரிசைப்படுத்தியவர்களில் முன்னோடி இவர்.உமையாள்புரம் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தாம் மேலே குறிப்பிடப்பட்ட கிருஷ்ண சுந்தர பாகவதர்கள்.தில்லை ஸ்தானம் ராம ஐயங்காரின் சீடர்கள் தில்லை ஸ்தானம் சகோதரர்களான நரசிம்ம பாகவதரும் பஞ்சு பாகவதரும் கும்பகோணத்தில் வசித்து வந்த மூத்தவர் ஹரிகதை வித்தகர்.தில்லை ஸ்தானத்தில் வசித்துவந்த இரண்டாமவர் இசைக் கலைஞர்.1908இல் ஒரு முறை சென்னை சென்ற நரசிம்ம பாகவதர் சென்னை தங்க சாலையிலிருந்த தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளியில் பல இசைக் கலைஞர்களைக் கூட்டினார்.சென்னை நகரத்தின் பழைய சபாக்களில் ஒன்றான பக்தி மார்க்க பிரசங்க சபாவின் செயலாளரான முனுசாமி நாயுடுவும் அந்தக் கூட்டத் திற்கு வந்திருந்ததார்.இசைக் கலைஞர்கள் அனைவரும் தியாகராஜரின் இசையினால் வாழ்ந்துகொண்டிருப்பதால் தங்கள் கடப்பாட்டைத் தெரிவிக்கும் முகமாகத் திருவையாற்றில் ஆண்டுதோறும் ஆராதனை விழா எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பாகவதர் சபைமுன் வைத்தார்.ராமநாதபுரம் 'பூச்சி' ஸ்ரீனிவாச ஐயங்கார் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் கும்பகோணம் அழகிய நம்பிப் பிள்ளை போன்றோர் அமர்ந்திருந்த அந்தக் கூட்டம் அதை ஏற்றுக்கொண்டது.

1909இல் இசைக் கலைஞர்கள் பலரும் ஆராதனையில் பங்கெடுக்க முன்வந்ததால் திருவையாற்றில் ஐந்து நாள் இசை விழா நடத்த வேண்டிவந்தது.ஆராதனைக்கு நான்கு நாள்களுக்கு முன்பு துவங்கிய விழா ஆராதனை நாளன்று நிறைவு பெற்றது.இனிவரும் ஆண்டுகளிலும் இதையே பின்பற்ற வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.தில்லை ஸ்தானம் நரசிம்ம பாகவதரும் அவரது சகோதரர் பஞ்சு பாகவதரும் இந்த விழாவிற்கான தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு தியாகராஜரின் இசைப் பரம்பரையின் நேரடிச் சீடர்கள் என்பதால் ஆராதனை நாளன்று சமாதிக்கு அபிஷேகம் செய்யும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.இசைக் கலைஞர்கள் வேறு இரண்டு கட்டுப்பாடுகளை விதித்தனர் ஒன்று பெண்கள் எக்காரணத்தைக்கொண்டும் சமாதியின் முன் பாட அனுமதிக்கப்படமாட்டார்கள் இரண்டு நாதஸ்வரக் கலைஞர்கள் சமாதியிலிருந்து விலகியே இருக்க வேண்டும்.மிகச் சிறந்த வித்வான்களைக்கொண்ட நாதஸ்வரக் கலைஞர்கள் கூட்டம் இந்த ஏற்பாட்டிற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததால் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஆராதனை நாளன்று இரவில் தியாகராஜர் உருவப்படத்தின் பூப்பல்லக்குப் பவனிக்கு ஏற்பாடுசெய்து நாதஸ்வரக் கலைஞர்கள் தங்கள் இசை அஞ்சலியைச் செலுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.1940வரையிலும் இந்த ஏற்பாடே தொடர்ந்தது.

1909 வாக்கில் ஆராதனை விழா மிகவும் பிரபலமடைந்திருந்தது.ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு பல கச்சேரிகளுக்கும் ஹரிகதா காலட்சேபங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் 1910இல் விழாவிற்கான நிதி தொடர்பாக சகோதரர்கள் இருவருக்குமிடையே பிளவு ஏற்பட்டது. நரசிம்ம பாகவதர் ஆராதனை விழாவில் கலந்துகொள்ளாமல் தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் தனியாக நடத்தினார்.திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை புதுச்சேரி ரங்கசாமி ஐயர் கும்பகோணம் அழகிய நம்பிப் பிள்ளை போன்ற பல இசைக் கலைஞர்கள் அவரது அணியில் இருந்தனர்.நரசிம்ம பாகவதர் சகோதரர்களில் மூத்தவர் என்பதால் இவரது அணி'பெரிய கட்சி'என்று அழைக்கப்பட்டது.பஞ்சு பாகவதர் திருவையாறிலேயே ஆராதனை விழாவை நடத்தினார்.சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் நேமம் நடேச பாகவதர் பல்லடம் சஞ்சீவ ராவ் போன்றோர் அவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.இந்த அணி 'சின்னக் கட்சி'என்று அழைக்கப்பட்டது.ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் விழாக்கள் நடத்தப்பட்டன.நரசிம்ம பாகவதர்1911இலோ அதை ஒட்டிய சில ஆண்டுகளிலோ மரணமடைந்த காலம்வரை இந்த நிலை நீடித்தது.அவரது மரணத்திற்குப் பிறகு பெரிய கட்சியும் விழாவைத் திருவையாற்றிலேயே கொண்டாடத் தலைப்பட்டது.இரண்டு கட்சிகளுமே ஆராதனை விழாவைத் திருவையாறிலேயே அதுவும் ஒரே சமயத்தில் நடந்த முடிவுசெய்ததால் அங்குப் பதற்றம் நிலவியது.ஏற்கனவே பண நெருக்கடியிலிருந்த சின்னக் கட்சி முக்கியமான சங்கீத வித்வானும் முசிறி சுப்பிரமணிய ஐயரின் குருவுமான சென்னையைச் சேர்ந்த பிரபலஸ்தர் டி.எஸ்.சபேச ஐயரை வளைத்து அவரிடம் சென்னையில் நிதிதிரட்டித் தரும்படிக் கேட்டுக்கொண்டது.இந்தக் கட்சி பச்சையப்ப முதலியார் சத்திரத்திலும் பெரிய கட்சி கல்யாண மஹால் சத்திரத்திலும் ஆராதனை விழாவை நடத்தின.ஆராதனை நாளின்போது சின்னக் கட்சி முதலில் சமாதிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் பெரியக் கட்சி தனது வழிபாட்டைப் பின்னர் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் எழுதப்படாத ஒரு சட்டம் அமலில் இருந்தது.

இந்தப் பூசலும் கட்சிகட்டலும் பல வித்வான்களை மிகவும் துயரில் ஆழ்த்தின.ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர் அவர்களில் முதன்மையானவர்.1913இல் பெரிய கட்சியின் அழைப்பின் பேரில் அவர் ஆராதனை விழாவில் கலந்துகொண்டார்.ஜனவரி 16ஆம் தேதி இரண்டு கட்சிகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்ததோடு இருவரும் இணைய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் விடுத்தார்.ஆனால் சமாதியில் பூசை செய்வதற்கான உரிமை யாருடையது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.தியாகராஜரின் இசைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த வருக்குத்தான் வழங்கப்பட வேண்டும் என்று சின்னக் கட்சி கூற பெரிய கட்சியோ தியாகராஜரின் தமையனார் சபேசனின் பேரனும் அன்று உயிரோடிருந்த ஒரே வாரிசுமான ராமுடு பாகவதருக்கு அந்த உரிமையை வழங்க வேண்டும் என்று எண்ணியது.இரண்டு கட்சிகளிடையே கருத் தொற்றுமை ஏற்படவில்லை. முத்தையா பாகவதர் இரு கட்சியினரும் ஒன்றுசேரும்வரை ஆராதனை விழாவில் கலந்துகொள்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துச் சென்றுவிட்டார்.1914ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி சின்னக் கட்சி தியாகராஜ பரப்பிரம்ம வைபவ பிரகாச சபை என்று பெயரிட்டுப் பதிவுபெற்ற சபையாகத் தன்னை உருமாற்றிக்கொண்டது.சென்னையிலுள்ள பண்டிட் லஷ்மணாச்சாரின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற முதல் கூட்டத்தில் அவர் தலைவராகவும் ராமநாதபுரம் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் உதவித் தலைவராகவும் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் செயலாளராகவும் டி.எஸ். சபேச ஐயர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்ட பஞ்சு பாகவதர் சமாதியில் பூசைசெய்யும் உரிமையை மட்டும் தனக்குத் தக்கவைத்துக்கொண்டார்.பதிவுபெற்ற சபையானதால் இந்தச் சபாவுக்கு நிறைய ஆதரவு கிடைத்ததோடு ஏகப்பட்ட நிதியும் வசூலானது.இதனால் ஆராதனை விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.மேலும் அந்தச் சபை வரவுசெலவுக் கணக்குகளை மிகுந்த பொறுப்புடன் அச்சிட்டு நன்கொடையாளர்களுக்கு வழங்கியது.பெருகிவரும் கூட்டத்தைச் சமாளிப்பதற்காக1915இல் பாலாயி சத்திரத்திற்கு மாறிய விழா 1917இல் அங்கிருந்து புஷ்ய மண்டபத்திற்கு நகர்ந்தது.பெரிய கட்சியோ மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளையையே தனது நிதி ஆதாரங்களுக்காகப் பெருமளவு சார்ந்திருந்தது.அவரும் மனமுவந்து உதவிவந்தார்.சில ஆண்டுகளில் 2000 ரூபாய்வரை வசூலானது.தியாகராஜ ஆராதனையும் பற்றி வரலாறு{பகுதி-2}

1918இல் பண்டிட் லஷ்மணாச்சார் இறக்கவே பூச்சி ஐயங்கார் சின்னக் கட்சி சபையின் தலைவரானார். 1919இல் அவர் இறக்க மாயவரம் வீணை வைத்தியநாத ஐயரும் அவருக்குப் பின் தஞ்சாவூர் கோவிந்த பாகவதரும் தலைவரானார்கள்.இவ்விருவருமே பதவியேற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே மரணமடைந்துவிட்டனர்.இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக இருந்த சூல மங்கலம் வைத்தியநாத ஐயருக்கு இதனால் பெருங்கிலி உண்டாகி தலைவர் பதவியை ஏற்க மறுத்துச் செயலாளராகவே தொடர்ந்தார்.இதன் பிறகு தலைவர் பதவி காலியாகவே இருந்தது.பஞ்சு பாகவதர் இறந்த பிறகு அவரது விருப்பத்திற்கிணங்க அவரது சீடரான ராஜகோபால பாகவதர் சின்னக் கட்சியின் சார்பில் சமாதியில் பூசைசெய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டார்.பெரிய கட்சியின் சார்பால் ராமுடு பாகவதரே பூசையைச் செய்துவந்தார்.

1920களில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதரும் மலைக்கோட்டைக் கோவிந்தசாமிப் பிள்ளையும் தத்தமது கட்சிகளின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்தார்கள்.இருவருமே பிறரை மதிக்காத சுபாவம் கொண்டவர்கள்.இதனால் அவர்கள் பலரைப் பகைத்துக்கொண்டனர்.என்றாலும் இருவரும் பிரசித்தி பெற்றவர்களாக இருந்ததால் நிதி குவிந்துகொண்டேயிருந்தது.விழா நிகழ்ச்சிகள் மிக விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடத்தப்பட்டன.1923இல் வைத்தியநாத ஐயர் வரவுசெலவுக் கணக்குகளைச் சரியாகக் காட்டாததால் கோபமுற்ற சூலமங்கலம் சௌந்திரராஜ பாகவதர் டி.எஸ்.சபேச ஐயர் கல்யாணபுரம் விஸ்வநாத சாஸ்திரிகள் ஆகிய மூவரும் ஸ்ரீதியாகராஜ பரப்பிரம்ம பக்த கான சபா என்ற பெயரில் மூன்றாவது அணி ஒன்றை ஆரம்பித்துப் புஷ்ய மண்டபத்தில் தனியாக விழா எடுத்தனர்.இந்த முயற்சி நீடிக்கவில்லை அடுத்த வருடமே அது நின்றுபோயிற்று.இதனால் சூலமங்கலம் வைத்தியநாத ஐயரின் கை ஓங்கியது.மறு வசத்தில் காஞ்சிபுரம் நாயனா பிள்ளை நாதஸ்வரக் கலைஞர்களான திருவிடை மருதூர் வீராசாமிப் பிள்ளை திருவீழிமிழலைச் சகோதரர்கள் ஆகியோர் கோவிந்தசாமிப் பிள்ளைக்குப் பக்கபலமாக இருந்து அவரது கரத்தை வலுப்படுத்தினர்.இந்தச் சந்தர்ப்பத்தில்தான் பெங்களூர் நாகரத்தினம் மாளின் வரவும் நிகழ்ந்தது.'வித்யா சுந்தரி' 'கானகலா விஷாரத்' பெங்களூர் நாகரத்தினம்மாள்

பெங்களூர் நாகரத்தினம்மாள்1878ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி மைசூரைச் சேர்ந்த வக்கீல் சுப்பராவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த தேவதாசி குலத்தவரான புட்டுலக்ஷ்மிக்கும் பிறந்தார்.நாகரத்தினம் பிறந்த சில நாள்களிலேயே பெற்றோர்கள் பிரிந்துவிட்டனர்.தாயும் குழந்தையும் வறுமையில் வாடினர். மைசூர் அரசவையைச் சேர்ந்த சமஸ்கிருதப் பண்டிதரான கிரிபட்ட திம்மய்ய சாஸ்திரி என்பவர் பின்னர் புட்டுலக்ஷ்மிக்கு அடைக்கலம் அளித்தார்.அவர் நாகரத்தினத்திற்குச் சமஸ்கிருதம் கற்பித்தார். நாகரத்தினம் மிக விரைவிலேயே அந்த மொழியைத் திறம்படக் கற்றுத் தேர்ந்தார்.இதைப் பொறுக்க மாட்டாமல் கிரிபட்டர் நாகரத்தினத்திற்கு9வயது இருக்கும்போது தாயையும் மகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார்.துன்பத்திலும் மனம் தளராத புட்டுலக்ஷ்மி தன் மகளை மகாராஜாவே அழைக்கும்படி பிரபலமாக்கிவிட்டுத்தான் மைசூர் மண்ணை மிதிப்பேன் என்று சூளுரைத்து மைசூரை விட்டு வெளியேறினார்.தன் மகளுக்கு நல்ல சங்கீத ஆசிரியரைத் தேடி அலைந்த அவர் காஞ்சிபுரம் நாயனா பிள்ளையின் உறவினரான தனகோடி அம்மாளைச் சந்திப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். ஆனால் தனகோடி அம்மாளோ வயதாகி மரணப் படுக்கையில் இருந்தார்.ஸ்ரீரங்கத்துக்குச் செல்லும்படியாக இருவருக்கும் சொன்னார்கள்.கையில் பணமில்லாத தால் தாயும் மகளும் பெங்களூர் சென்று புட்டுலக்ஷ்மியின் சகோதரர் வேங்கடஸ்வாமி அப்பாவிடம் தஞ்சம் புகுந்தனர். நாகரத்தினத்திற்குச் சங்கீதம் கற்றுத் தருவதற்காகப் பிரபல வயலின் வித்வான் முனிசாமியப்பா ஏற்பாடு செய்யப்பட்டார்.அவளுக்கு நாட்டியமும் கற்பிக்கப்பட்டது.ஆங்கிலம் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி சமஸ்கிருதம் ஆகிய ஆறு மொழிகளும் கற்பிக்கப்பட்டன.ஆண்டுக் கட்டணமான நாற்பது ரூபாயைப் புட்டுலக்ஷ்மி பெரும்பாடுபட்டுத் தேற்றிக் கொடுத்துவந்தார்.பின்னர் நாகரத்தினம் மைசூரின் பெரிய வித்துவானான பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள அனுப்பப்பட்டார்.கிருஷ்ணப்பா வீணை சேஷண்ணாவிடம் சங்கீதம் பயின்றவர்.சேஷண்ணா மைசூர் சதாசிவராவின் சீடர்.சதாசிவராவ் வாலாஜாப் பேட்டை வேங்கடரமண பாகவதரிடம் சங்கீதம் கற்றவர்.இப்படியாக நாகரத்தினமும் தியாகராஜரின் இசைப் பரம்பரையில் ஒருவரானார்.நாகரத்தினத்திற்குப் பதினான்கு வயதிருந்தபோது புட்டுலக்ஷ்மி இறந்தார்.

1893இல் வீணை சேஷண்ணாவின் இல்லத்தில் கச்சேரி நடத்துவதற்காக நாகரத்தினம் அழைக்கப்பட்டார்.வெற்றிகரமாக நடந்த அந்தக் கச்சேரியைப் பற்றிக் கேள்விப்பட்ட மைசூர் மகாராஜா சாமராஜேந்திர உடையார் தன் மகள் ஜெயலக்ஷ்மி மணி ருதுவானபோது இசை நிகழ்ச்சி நடத்த நாகரத்தினத்திற்கு அழைப்புவிடுத்தார்.தன் தாயாரின் சூளுரைக்கு ஏற்ப நாகரத்தினம் அரசின் அழைப்பிற்கிணங்கி மைசூர் மண்ணில் முதல் முறையாகக் காலடி எடுத்துவைத்தார்.கிரிபட்ட திம்மய்ய சாஸ்திரியும் அதில் கலந்துகொள்ள வேண்டிவந்தது. இந்தக் கச்சேரிக்குப் பிறகு நாகரத்தினம் அரசவைக் கலைஞரானார்.இத்தருணத்தில் மைசூர் நீதிபதியான டி.நரஹரி ராவ் அவருக்கு ஆதரவாளரானார்.
1903இல் நாகரத்தினம்மாள் இசைத் தட்டு உலகிலும் பரபரப்பாகப் பேசப்பட்டார்.கல்கத்தா கௌஹர் ஜானைப் போல அவரும் கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியாவின் இசைத் தட்டுகளுக்காகப் பாடத் தொடங்கினார்.அது தென்னிந்தியா முழுவதும் அவருக்குப் பெயர்பெற்றுத் தந்தது.1905இல் சி.எஸ். ராஜரத்தின முதலியாரின் ஆதரவோடு சென்னைக்குக் குடிபெயர்ந்த அவர் ஜார்ஜ் டவுன் சீனிவாச அய்யர் தெருவில் பத்தாம் இலக்க வீட்டை அமர்த்திக்கொண்டார்.கிரகப் பிரவேசத்தன்று பிடாரம் கிருஷ்ணப்பா கன்னடக் கிருதிகள் அமைந்த கச்சேரி ஒன்றை நிகழ்த்தினார்.இதற்குப் பரிசாக அவருக்கு வைர மோதிரம் அளிக்கப்பட்டது.சென்னையில் பூச்சி ஐயங்காரின் ஆதரவும் கிடைத்தது.சம்பாதித்த பணத்தை நாகரத்தினம்மாள் நல்ல முறையில் முதலீடு செய்ததால் அவருக்கு வருமானம் பெருகியது.வருமான வரி செலுத்திய முதல் பெண் கலைஞர் அவர்தான்.மாறிவரும் சமூகச் சூழலை உன்னிப்பாக அவதானித்து வந்த அவர் சதிர்க் கச்சேரியின் காலம் முடிவுக்கு வருவதை உணர்ந்து அதை நிகழ்த்துவதை விட்டுவிட்டார்.ஹரிகதையும் கர்நாடக சங்கீதமும் நிகழ்த்துபவரானார்.

அவரது புகழ் எங்கும் பரவியது.சமஸ்கிருதத்தில் அவருக்கிருந்த திறமை கலைஞர்களிடமிருந்தும் வித்வான்களிடமிருந்தும் அவருக்குப் பெருமை பெற்றுத் தந்தது.1929இல் சென்னையில் நடைபெற்ற சனாதன தர்ம மாநாட்டை அவர் தனது சமஸ்கிருத உரையோடு தொடக்கிவைத்தார்.1905க்கும்1934க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்116நகரங்களில்1235நிகழ்ச்சிகள் நிகழ்த்தினார்.1934இல் வெளியான சனாதன தர்ம பிரசார சபா விழா மலரில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் யு.பி.கிருஷ்ணமாச்சார் என்ற அறிஞர் பட்டியலிட்டுள்ளார்.ராஜமுந்திரியில் நடந்த கண்ட பேர விழாவில் அவரைப் பாராட்டி இரட்டைக் கவிஞர்களான திருப்பதி வேங்கடேசக் கவிகள் சமஸ்கிருதக் கவிதை வாசித்தனர்.மேலும் அவருக்குச் சந்தன மாலையுடன் வரவேற்பும் அளிக்கப்பட்டது.அதில் நடந்த விவாதம் ஒன்றின்போது திருப்பாவையைத் தெலுங்கில் மொழிபெயர்த்த முத்துப் பழனி என்பவர்19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமஸ்கிருத பண்டிதர் என்று சபையிலிருந்த அறிஞர்கள் குறிப்பிட்டனர்.அவர்களின் அறியாமையைக் கண்டு நாகரத்தினம் பெரும் வியப்படைந்தார்.அந்த மொழிபெயர்ப்பைச் செய்தவர் 18ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மனின் ஆசைக்கிழத்தியான முத்துப் பழனி என்பவர்தான் என்ற விவரம் அவருக்குத் தெரியும்.அவர் தனது மறுப்பைத் தெரிவித்தபோது அங்கிருந்தவர்கள் அவ்வளவாக விரும்பவில்லை.சென்னை திரும்பியதும் அவர் முத்துப் பழனியின் இன்னொரு நூலான காமரசம் நிரம்பிய'ராதிகா சாந்தவனமு'என்ற நூலை வெளியிட்டு தன்னைப் போன்ற தேவதாசிகள் பலரும் பெரிய சமஸ்கிருத வித்வான்கள் என்பதை நிரூபிக்க முயன்றார்.1911இல் வாவில்லா ராமசாமி சாஸ்திரிலு அண்ட் ஸன்ஸ் வெளியிட்ட அந்த நூல் சீர்தருத்தவாதியான கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலுவின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளானது. அன்று போலீஸ் கமிஷனராக இருந்த கன்னிங்காம் புத்தகத்தின் பிரதிகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.இதனால் அந்தப் புத்தகத்தின் புகழ் அதிகரித்தது. அது தடை செய்யப்பட்டது.1947இல்தான் அந்தத் தடை நீங்கியது.

நாகரத்தினம்மாளுக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்துகொண்டேவந்தது.பல விருதுகளும் பதக்கங்களும் அவருக்குக் கிடைத்தன.என்றாலும் தனக்கு ஒரு குழந்தையில்லாதது அவருக்குப் பெரும் துயரத்தை அளித்துவந்தது.இதனால் ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்தார்.ஆனால் அந்தப் பெண்1921இல் அவளது பெற்றோர்களின் தூண்டுதலின் பேரில் நாகரத்தினம்மாளுக்கு விஷம் கொடுக்க முயன்றதாகச் சந்தேகம் ஏற்பட்டது.நல்ல காலமாக நாகரத்தினம் அந்த விஷமிடப்பட்ட பாலை அருந்தவில்லை.அந்தப் பெண்ணுடனான உறவை அவர் அத்துடன் முறித்துக்கொண்டார்.அந்த ஆண்டு அவருக்குத் தியாகராஜரின் உருவப்படம் ஒன்று கிடைத்தது.அதை வழிபட ஆரம்பித்தார்.தியாகராஜர் ஒரு நாள் அவர் கனவிலும் தோன்றினார்.நாகரத்தினம்மாளுக்கு அவர்தான் தன்னை விஷத்திற்குப் பலியாவதிலிருந்து காப்பாற்றியிருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.இந்தச் சமயத்தில்தான் அவரது குரு பிடாரம் கிருஷ்ணப்பாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.அதில் தியாகராஜர் சமாதியின் பரிதாப நிலை பற்றி எழுதப்பட்டிருந்தது.நாரத்தினம்மாள் உடனடியாகத் திருவையாறு புறப்பட்டுச் சென்றார்.நாகரத்தினம்மாளும் தியாகராஜ ஆராதனையும் & வரலாறும்{பகுதி-3}

பெரிய கட்சியில் அவரது நண்பர்கள் பலர் இருந்த தால் நாகரத்தினம்மாள் அந்தக் கட்சியின் ஆதரவை முதலிலேயே வென்றுவிட்டார்.சமாதி இருந்த இடம் ராஜா ராமண்ணாஜி சூர்வே என்பவரது வசமிருப்பதாக அவர்கள் மூலமாகத் தெரியவரவே நாகரத்தினம் அவருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்.பொது நன்மைக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை விற்பதில் சட்டரீதியான வில்லங்கங்கள் இருந்தாலும் நாகரத்தினம் தனது வசமுள்ள சில சொத்துகளை மாற்றாகவைத்து ஒருவழியாக ஏற்பாடு செய்துவிட்டார்.இரண்டு கட்சிகளும் நடப்பவற்றை அவநம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தன.நாகரத்தினம்மாள் சற்றும் தாமதியாமல் தனது சொந்தச் செலவிலேயே தியாகராஜரின் கற்சிலை ஒன்றைச் செய்வித்துப் பிருந்தாவனத்தின் முன் பிரதிஷ்டை செய்தார்.சின்னக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதை விரும்பவில்லை.சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் இந்தச் சிலையைப் பற்றி மோசமாகப் பேசிவந்தார்.பிருந்தாவனத்தை விக்கிரகம் மறைப்பதாக ஒரு சர்ச்சை இன்றுவரை தொடர்கிறது.நாகரத்தினம்மாள் அந்த இடத்தை வாங்கிவிட்டதால் எவராலும் எதுவும் பேச முடியவில்லை.சமாதியின் மீது கோவில் எழுப்புவதற்கான அடிக்கல்1921ஆண்டு அக்டோபர்27இல் இடப்பட்டுப் பணியும் தொடங்கியது.இடைப்பட்ட ஆண்டுகளில் இரண்டு கட்சிகளின் ஆராதனை விழாக்களும் நடந்துவந்தன ஒரே ஒரு வித்தியாசத்துடன்.பெரிய கட்சி ஆராதனை நாளன்று தனது விழாவைத் தொடங்கி ஐந்து நாள்கள் நடத்தியது.சின்னக் கட்சி ஆராதனைக்கு நான்கு நாள்கள் முன்பாகத் தனது விழாவைத் தொடங்கி ஆராதனையன்று முடித்துக்கொண்டது.எப்படியோ திருவையாறு மக்களுக்கு ஒன்பது நாள்கள் தொடர்ச்சியாக நல்ல விருந்து கிடைத்தது வயிற்றுக்கும் செவிக்கும்.

கோயில் பணி 1925இல் முடிந்து கும்பாபிஷேகம் ஜனவரி 7இல் நடந்தது.ராமுடு பாகவதர் தினசரிப் பூசைக்கான பூசாரியாக நாகரத்தினம்மாளால் நியமிக்கப்பட்டார்.அந்த ஆண்டு சின்னக் கட்சியின் விழா மூன்றாம் நாள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளையும் நாகரத்தினம்மாளும் திருவையாறு சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி ஐயரிடம் சென்று இரண்டு கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து விழாவை நடத்தவில்லை என்றால் அங்குச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எழக்கூடும் என்பதை எடுத்துக் கூறினர்.அவர் சின்னக் கட்சியினரைச் சென்று பார்த்து பெரிய கட்சியினரோடும் நாகரத்தினம்மாளோடும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.சந்திப்புக்கு ஏற்பாடாகிக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே கோவிந்தசாமிப் பிள்ளைக்கும் வைத்தியநாத ஐயருக்கும் தகராறு மூண்டதால் இரு கட்சியினரும் பரஸ்பரம் விழாக் கொண்டாட்டங்களை நடக்க விடுகிறேனா பார் என்று மிரட்டிக்கொண்டார்கள்.அன்று மாலை சின்னக் கட்சியினர் வைத்தியநாத ஐயர் அரியக்குடி(அவர் அப்போது அந்தக் கட்சிக்கு வழிநடத்துபவராக மாறியிருந்தார்)இருவரின் தலைமையில் திருவையாறு மாஜிஸ்திரேட் ஏ.வி.சுப்பையாவைச் சந்தித்து ஆராதனை விழா நடக்கும் மறுநாள்'பந்தோபஸ்து' தரும்படி கேட்டுக்கொண்டனர்.மாஜிஸ்திரேட் இரண்டு கட்சியிரையும் அழைத்து ஆராதனையன்று காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் பெரிய கட்சி தனது பூசைகளை முடித்துக்கொள்ள வேண்டும் சின்னக் கட்சியினர் ஒன்பது மணியிலிருந்து பன்னிரண்டு மணிவரை பூசைசெய்வதற்குச் சமாதியை அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் உத்தரவு இட்டார்.எல்லாம் சுமுகமாக நடப்பதற்காகப் போலீஸ் காவலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மறுநாள் நாகரத்தினம்மாளும் கோவிந்தசாமிப் பிள்ளையும் ராமுடு பாகவதரைப் பெரிய கட்சியின் பூசையை ஒன்பது மணிக்குள் முடிக்கச் சொல்லி சமாதிக் கோவில் கதவைப் பூட்டிச் சாவியை அவரிடம் கொடுத்து அனுப்பிவிட்டனர்.பூஜைக்காக வந்த சின்னக் கட்சியினர் போலீஸை அழைத்தனர்.போலீஸ் பூட்டை உடைக்க உத்தரவிட்டது.ஆனால் ராமுடு பாகவதர் சமயத்துக்கு வந்து அவரே கதவைத் திறந்துவிட்டார்.மேலும் தான் சின்னக் கட்சியின் பூஜைக்கு இடைஞ்சலாக இருக்கமாட்டேன் என்று எழுத்து மூலமாக மாஜிஸ்திரேட்டுக்கு உறுதிமொழியும் அளித்தார்.போலீஸ் சமாதி இருந்த இடத்தில் நுழைந்து பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தது.1926இல் சின்னக் கட்சி தனது ஆராதனை விழாவைப் புஷ்ய கல்யாண மண்டபத்திலிருந்து சென்ட்ரல் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றியது.அந்த ஆண்டு நாகரத்தினம்மாள் சமாதி தனக்குப் பாத்தியப்பட்டது என்றும் தன்னால் நியமிக்கப்பட்டவரைத் தவிர யாரும் பூசை செய்யக் கூடாது என்றும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இரு கட்சியினரின் ஆராதனை விழாக்களும் முன்புபோலத் தொடர்ந்தன.

நாகரத்தினம்மாள் சின்னக் கட்சியோடு மோதிக் கொண்டதுபோல் பெரிய கட்சியோடும் உறவை முறித்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.1927இல் பெரிய கட்சி நடத்திய ஓர் இசை அஞ்சலி விழாவில் கலந்துகொள்ள வந்த நாகரத்தினம்மாள் பாடுவதற்காக மேடையேறினார்.ஆனால் பக்கவாத்தியக்காரர்கள் பெண்களுக்கு சமாதிக்கு முன்பு பாட அனுமதியில்லை என்று கூறி வாத்தியங்களைக் கீழே வைத்துவிட்டனர்.கோப முற்று வெளியேறிய நாகரத்தினம்மாள் சொந்தமாகவே விழா எடுக்கத் தீர்மானித்தார்.இப்படியாக பெங்களூர் நாகரத்தினம்மாள் கட்சி ஒரு மூன்றாம் அணியாக உருவெடுத்து பெரிய கட்சி விழா எடுத்த அதே நாள்களில் சமாதியின் பின்னால் விழா நடத்தத் தொடங்கியது.பெண்களும் இளம் இசைக் கலைஞர்களும் ஊக்குவிக்கப்பட்டனர்.மற்ற இரு கட்சிகளின் விழாக்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு இந்தக் கட்சியின் விழாகளைகட்டியது.தனது கட்சியின் விழாக்களுக்கெல்லாம் நாகரத்தினம்மாள் தன் கைப்பணத்தைச் செலவழித்து வந்தார்.இறுதியாகத் தன் சென்னை வீட்டை விற்றுவிட்டு1930இல் நிரந்தரமாகத் திருவையாறுக்குக் குடிவந்துவிட்டார்.மேலும் ஒவ்வோர் ஆண்டும் நன்கொடை வசூல் செய்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்றார்.தனது பருத்த உடலையும் தூக்கிக்கொண்டு தொலை தூரங்களுக்குக்கூட ஆராதனை விழா நிதி திரட்டு வதற்காகத் தளராமல் சென்றுவந்தார்.

1930இல் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளைக்கு மாரடைப்பு வந்து அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக நலியத் தொடங்கியது.1931இல் அவர் இறப்பதற்கு முன்னால் பெரிய கட்சியின் ஆராதனை விழாவை ஏற்று நடத்தும் பொறுப்பைத் திருவீழிமிழலைச் சகோதரர்கள் வசம் ஒப்படைத்தார். நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற வித்வான்கள் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். காஞ்சிபுரம் நாயனா பிள்ளையும்1934இல் அவர் மரணமடையும் வரையிலும் முக்கியப் பங்கு வகித்துவந்தார்.நாடகக் கம்பெனிகளான தஞ்சாவூர் சுதர்ஸன சபா நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகக் குழு போன்றவை பெரிய கட்சி ஆராதனை விழாவில் பங்கேற்றன.எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விழா நல்ல முறையில் நடந்துவந்தது.ஆனால் நாகரத் தினம்மாள் நடத்திய விழாதான் வெகு விமரிசையாக நடந்தது.1938இல் நாகரத்தினம்மாள் சமாதியைச் சுற்றியுள்ள இடங்களையும் விலை கொடுத்து வாங்கித் தியாகராஜ ஆசிரமம் என்று அதற்குப் பெயர் கொடுத்தார்.திருவையாறு வக்கீல் சி.வி. ராஜகோபாலாச்சாரி போன்ற பிரமுகர்களும் அவரது விழாக்களில் பங்கேற்றனர்.இந்தச் சூழ்நிலையில் பெரிய கட்சி சிறிய கட்சியோடு இணைவது பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது.

சின்னக் கட்சியிலும் இதே உணர்வுதான் இருந்தது.அக்கட்சியில் நிதி திரட்டுவதிலும் ஆராதனை விழாவிலும் முக்கியப் பங்காற்றிவந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் முசிறி சுப்பிரமணிய ஐயர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் போன்ற இளம் கலைஞர்கள் ஆராதனை விழாவை இணைந்து நடத்தும்படி வலியுறுத்தினர்.மூத்த கலைஞர்களான மகாராஜபுரம் விஸ்நாத ஐயரும் பல்லடம் சஞ்சீவராவும்கூட இதே போன்ற எண்ணம் கொண்டிருந்தனர்.சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் இதில் ஈடுபாடு காட்டவில்லை என்றாலும் வயதாகிக் கொண்டுவந்ததால் அவருக்கும் விழாவை நடத்துவது சிரமமாக இருந்தது.1939இல் காவேரி டெல்டா பகுதியின் தனி அலுவலராகப் பொறுப்பேற்ற எஸ்.ஒய்.கிருஷ்ண சாமி ஐ.சி.எஸ்.ஒன்றுபட்ட ஆராதனை விழா நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரமான ஆர்வம் காட்டினார்.அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்1940ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.நாகரத்தினம்மாள் அணி சார்பில் நாகரத்தினம்மாளும் சி.வி. ராஜகோபாலாச்சாரியும் பெரிய கட்சி சார்பில் திருவீழிமிழலைச் சகோதரர்களும் சின்னக் கட்சி சார்பில் முசிறியும் செம்மாங்குடியும் கலந்துகொண்டனர்.ஆராதனை விழாவை நடத்துவதற்காகப் புதியதோர் அமைப்பை ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.சூலமங்கலம் வைத்தியநாத பாகவதருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.அவர் கீழ்க்காணும் நிபந்தனைகள் விதித்து இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டார்.அ.சின்னக் கட்சியினரின் பூசை செய்யும் உரிமையை நீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் ஆராதனை நாளன்று ராஜகோபால பாகவதர் சமாதியில் பூசை செய்ய அனுமதிக்க வேண்டும்.ஆ. நாதஸ்வரக் கலைஞர்களை மேடையில் கச்சேரி நடத்த அனுமதிக்கக் கூடாது.
இ. பிராமணர்களுக்கான போஜனம் சின்னக் கட்சியின் வழிமுறைப்படி நடத்தப்பட வேண்டும்.

தியாகப் பிரம்ம மஹோத்சவ சபா 1940 ஜனவரியில் தொடங்கப்பட்டது.அந்த ஆண்டு ஆராதனையையும் அது நடத்தியது.இரு அணிகளும் இணைந்ததைக் கேள்விப்பட்ட ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதரும் ஆராதனையில் கலந்துகொண்டார்.சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் ஹரிகதை நடத்திக்கொண்டிருந்தபோது நாகரத்தினம்மாள் மேடையில் ஏறி அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தார். கூட்டம் கரகோஷம் செய்து வரவேற்றது.அந்த ஆண்டு ஆராதனை விழா மிகவும் வெற்றிகரமாக நடந்தது.பெண்கள் மேடையேற அனுமதிக்கப்பட்டனர்.நாதஸ்வர வித்வான்களை மேடையேற்ற அனுமதிக்காததைக் கண்டித்து டி.என்.ராஜரத்தினம் பிள்ளை தனது எதிர்ப்பைக் காட்டியதால் அந்த நிபந்தனையும் தளர்த்தப்பட்டது.சூலமங்கலம் வைத்தியநாத ஐயர் வைதீகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்துகொண்டார்.அதைத் தொடர்ந்த வருடங்களில் நடந்த ஆராதனை விழாக்களில் அவர் கலந்துகொள்ளவில்லை முசிறி போன்ற பெரிய வித்வான்கள் பங்கெடுத்துக்கொண்டபோதும் 1934இல் தியாகராஜரைப் போல அவரும் சன்னியாசம் வாங்கிக்கொண்டார் அவரைப் போலவே மூன்று நாள்கள் கழித்துக் காலமானார்.அவரது உடல் சொந்த ஊரான சூலமங்கலத்தில் அடக்கம்செய்யப்பட்டது.1941இல்தான் பஞ்சரத்ன கீர்த்தனைகளை அனைவருமாகப் பாடும் முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தபட்டது.அதற்கு முன்பெல்லாம் பல்லடம் சஞ்சீவராவ் பைரவி ராகத்தில் அமைந்த 'சேதுலரா'வை மட்டும் வாசிப்பார்.இந்த மரபு இன்றும் தொடர்கிறது.இன்றும் கூடப் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடத் தொடங்குவதற்கு முன் புல்லாங்குழல் கலைஞர்கள் அந்தக் கிருதியை இசைப்பார்கள்.

திருவையாற்றைத் தனது இருப்பிடமாக மாற்றிக்கொண்ட நாகரத்தினம்மாள் தனது நாள்களை அவரது குருவான தியாகராஜரைத் தியானிப்பதிலேயே கழித்தார்.உள்ளூர் மக்கள் அவரை ஒரு ரிஷியைப் போலப் பாவித்தார்கள்.1946இல் சித்தூர் வி.நாகையா தியாகராஜரின் வாழ்க்கையை அடிப்படையாகவைத்துத் தியாகையா என்ற படத்தை எடுத்தார்.படம் நல்ல வசூல் கண்டது.நாகரத்தினம்மாளின் விருப்பத்திற்கிணங்க நாகையா திருவையாறுக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அந்தப் படத்திலிருந்து கிடைத்த வருமானத்தில்'தியாகராஜ நிலையம்'என்ற சத்திரத்தைக் கட்டினார்.1948 ஜனவரி3ஆம் தேதி நாகரத்தினம்மாள் தனது உயிலை எழுதி வைத்தார்.தனது எல்லாச் சொத்துகளையும் நகைகள் உட்பட தியாகராஜர் சமாதியின் பரிபாலனத்திற்காக அளித்திருந்தார்.வித்யா சுந்தரி பெங்களூர் நாகரத்தினம்மாள் டிரஸ்ட் அந்தச் சமாதிக்கும் அதைச் சுற்றியிருந்த நிலங்களுக்கும் உரிமை பெற்றது.அவர் தனது உயிலில் பெண் கலைஞர்களோ பாடகர்களோ தேவதாசிகள் உட்பட சமாதியில் நிகழ்ச்சிகள் நடத்துவதை எவரும் தடை செய்ய முயலக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.1949இல் விஜயநகரம் மகாராணி வித்தியாவதிதேவி அவருக்குத்தியாகராஜ சேவா சந்தா என்ற பட்டத்தை அளித்தார்.

1952ஆம் ஆண்டு மே மாதம்19ஆம் தேதி நாகரத்தினம்மாள் தனக்கு நெஞ்சு வலிப்பதுபோல் இருப்பதாகக் கூறினார்.அப்படியே அவர் மூச்சும் ஒடுங்கியது.அவரது உடல் ஊர்வலமாகத் தியாகராஜர் சமாதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதன் அருகிலேயே அடக்கம்செய்யப்பட்டது.அந்த இடத்தில் அவரது சிலை ஒன்று நிறுவப்பட்டு மண்டபமும் கட்டப்பட்டது.அந்தச் சிலை தியாகராஜர் சமாதியைப் பார்த்தபடி அமைக்கப்பட்டது.இந்த மண்டபத்தின் எதிரில்தான் இன்று வித்வான்கள் ஆராதனையின்போது இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.கர்நாடகத்தைச் சேர்ந்த கோலார் ராஜம்மாள் என்ற தேவதாசி தியாகராஜரின் சமாதிக்கு மின் வசதியை அமைத்துக் கொடுத்தார்.தியாகராஜ ஆராதனை விழா இன்று உலகம் முழுவதையும் கவரும் விழா.இதற்கெல்லாம் காரணம் சில இசைக் கலைஞர்களும் ஒரு பெண்ணும்.அந்தப் பெண் நாகரத்தினம்மாள்.ஆராதனை விழாக் கொண்டாட்டங்கள் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டாலும் பூசைகள் தனித்தனியாகத்தான் செய்யப்படுகின்றன.ஆகையால் இன்றும்கூட ஆராதனை நாளன்று தியாகராஜருக்கு மூன்று அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.முதலாவது பழைய சின்னக் கட்சியில் இன்று இருப்பவர்களும் ராஜகோபால பாகவதரின் வழித் தோன்றல்களுமாகச் செய்வது இரண்டாவது பெங்களூர் நாகரத்தினம்மாள் டிரஸ்டின் சார்பாக நடைபெறுவது.இறுதியாக தியாகப் பிரம்ம மஹோத்சவ சபாவினால் செய்யப்படுவது. பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்படுவது இந்த அபிஷேகத்தின் போதுதான். நாம் ஒவ்வொரு ஆண்டும் தொலைக்காட்சியில் காண்பதும் இதைத்தான்.

சாது ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மா!

சாது  ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மா!
--------------------------------------------------------------
இறைவன் கருணைக் கடல் - அனைவருக்கும் பொதுவானவர்.  அவரை உள்ளுணர்ந்து அனுபவிப்பவர்களுக்கே சாகரத்தின் தன்மை புலப்படும். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இறை அனுபவம் ஒரு பிரமிப்பான விஷயம் மட்டுமே. இறை நிலையை ஒரு சிலருக்கு சிறு வயதிலேயே அடையும் பாக்கியம் ஏற்படுகிறது. சிலருக்கோ மத்திம வயதை தாண்டி அடைய முடிகிறது.

இங்கு நாம் சாது ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாளைப் பற்றி தெரிந்து கொள்வோம். கருணை பொங்கும் முகத்தோடு தன்னை நாடி வரும் அன்பர்களின் தேவையை அறிந்து அருள் செய்தவர். கடலூர் முது நகரை சேர்ந்த லட்சுமி அம்மாள், அரங்கசுவாமி என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் கிருஷ்ணவேணி. சிறுவயதிலேயே உறவினருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். கணவரின் வேலை நிமித்தமாக வட இந்தியாவிற்கு பயணமான கிருஷ்ணவேணி அம்மாள் பாட்னா, ஹரித்வார் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார். அதுவே அவரின் ஆன்மீக தேடலுக்கு ஆரம்ப புள்ளி. வாழ்க்கைப் பயணம் சுமூகமாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவரின் கணவர் இறந்து விட, அவரின் துறவற வாழ்க்கை ஆரம்பமானது. அவரின் பழக்கவழக்கங்கள் மற்றவர்களுக்கு பித்தர் போல் இருக்கவே அவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். திருச்செந்தூர் சென்ற  கிருஷ்ணவேணி அம்மாள் ஒரு சித்தர் தன் பின்னே தொடர்ந்து வரும் படி ஆணையிட அவரைத் தொடர்ந்து பாபநாசம் - பொதிகை மலைக்கு சென்றார். சித்தர் அங்கிருக்கும் ஒரு குகையை சுட்டிக்காட்டி அங்கு இருக்கும் படி கூறினார். அங்கு ஒரு சிவலிங்கமும் இருக்கின்றது. அதுவே கிருஷ்ணவேணி அம்மாளின் இருப்பிடமாக மாறியது. அக்குகையில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேல தவம் செய்திருக்கிறார். இந்த குகை புலஸ்தியர் தவம் செய்த இடம் என நம்பப்படுகிறது.

துறவரம் பூண்ட ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாள் பொதிகை மலையில் 75 வருடங்களுக்கு மேலாக தன்னந்தனியாக வசித்து வந்தார். பல முறை ஸ்ரீ அகத்திய முனிவர் உள்ளிட்ட சித்தர்கள்  கிருஷ்ணவேணி அம்மாளுக்கு காட்சி கொடுத்துள்ளனர். ஸ்ரீ துர்க்கை அடிக்கடி காட்சி கொடுத்து வழி நடத்தியதாக  கிருஷ்ணவேணி அம்மாள் கூறியிருக்கிறார்.

பொதிகை மலையில் அகத்தியர் அருவிக்கு மேலே கல்யாண தீர்த்தத்திற்கு மிக அருகில் கிருஷ்ணவேணி அம்மாள் வசித்த இடம் இருக்கிறது. சிவன் - பார்வதி திருமண கோலத்தை காண உலகமே திரண்டிருந்த கால கட்டத்தில் வடதிசை மக்களின் சுமை தாங்காமல் தாழ்ந்த விட அதை சமன் செய்வதற்காக அகத்தியர் தென்திசைக்கு அனுப்பப்பட்டார். தென்னிந்தியாவில்  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொதிகை மலைக்கு வந்த ஸ்ரீ அகத்திய முனி மலையில் தவம் மேற்கொண்டதற்கு புராண சான்று இருக்கின்றன. இங்கு அகத்தியருக்கு சிவன் - பார்வதி திருமண கோலத்தில் காட்சி கொடுத்த இடமே கல்யாண தீர்த்தம்.

தனி பெண்மணியாக யாருமே அதிகம் நடமாடாத இடத்தில்  வசித்த கிருஷ்ணவேணி அம்மாளுக்கு பல நேரங்களில் குகைக்கு வெளியே கரடியும் உள்ளே பாம்பும் காவல் காத்து வந்தன. வன தேவதை போல் வாழ்ந்த கிருஷ்ணதேவி அம்மாளை சில சமயம் பார்க்க வரும் அன்பர்கள் பழம் உணவு கொடுத்துள்ளார்கள் . அவ்வாறு கொடுத்தவர்களின் வாழ்வில் ஏற்றங்கள் வர ஆரம்பித்தது. அதிலிருந்து சாது கிருஷ்ணவேணி அம்மாள் புகழ் பரவ ஆரம்பித்தது. அவரைக் காண மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. பக்தர்களின் நலன் பொருட்டு கிருஷ்ணவேணி அம்மாள் கீழிருந்து மேல் கல்யாண தீர்த்தம் வரை படிக்கட்டுகள் தானே அமைத்து வசதி செய்து கொடுத்தார். அங்கே ஒரு மடமும் அமைத்தார்.

கிருஷ்ணவேணி அம்மாளின் தவ ஆற்றல் அளப்பரியது. மிகவும் வறட்சியான காலத்தில் வருண ஜெபம் செய்து மழையை பொழியச் செய்துள்ளார். ஒரு சமயம் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. வெள்ளக்காடாக காட்சி அமைத்த கல்யாண தீர்த்தம், அகத்தியர் அருவி எங்கேயும் கிருஷ்ணவேணி அம்மாவின் நடமாட்டம் தெரியவில்லை. என்ன ஆனாரோ அனைவரும் பயந்தனர். நான்கு நாட்கள் கழித்து குகையிலிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல், மிகவும் மலர்ச்சியாக வெளியே வந்தார் சாது கிருஷ்ணவேணி அம்மாள் .

அவர் காலத்தில் இருந்த சித்தர்களான மாயம்மா, பூண்டிசித்தர் போன்ற மகான்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் கிருஷ்ணவேணி அம்மாள். 2011 ஆம் ஆண்டு, தன்னுடைய 120 ஆவது வயதில் சித்ரா பௌர்ணமி அன்று இந்த ஸ்தூல தேகத்தை துறந்தார். இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இன்றும் அவரின் அஸ்தி அவர் கட்டிய மடத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறது. அவரை எண்ணி வேண்டிய செயல்கள் யாவும் இன்றும் அவர்கள் பக்தர்களுக்கு நடந்தேறுகிறது.  

சித்திரை, அவிட்டம், மிருகசீரிஷம் அன்பர்கள் சாது கிருஷ்ண வேணி அம்மாளை வணங்கி வர அவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும். மேலும் ஜாதகத்தில் குரு/சந்திரன்/ சனிக்கு 1, 2, 5, 9ல் கேது இருக்க பெற்றவர்களுக்கு எளிதாக சித்தர்களின் தரிசனமும், அருளும், ஆசியும் கிடைக்கும். இவர்கள் கிருஷ்ணவேணி அம்மாளை தியானித்து வர நன்மை பயக்கும். இந்த அமைப்பு இல்லாமல் இருந்தாலும் மேற்கூறிய கிரகங்களுக்கு 1, 2, 5, 9ல் கோட்சார கேது வரும் காலங்களிலும் சித்தர்களின் தரிசனம் கிடைக்கப் பெறும்.

சாது ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாள் மடம்:

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அகத்தியர் அருவிக்கு மேலே சாது கிருஷ்ணவேணி அம்மாள் மடம் உள்ளது.

தியாகராஜ சுவாமிகள்...

தியாகராஜ சுவாமிகள்.. அவர்களின்  ஆராதனை விழா... பொதிகை டீவியில்..

காமிரா சுவாமிகளின் பிரதிமை, நடக்கும் அபிஷேக ஆராதனைகளையும் காட்டின. கூடவே இரு வரிசையில் அமர்ந்து உற்சாகமாக "எந்தரோ" என தலை ஆட்டியபடி  தாளம் போட்டு பாடிக் கொண்டு இருந்த ஆண்/ பெண் பாடகர் /பாடகியரையும். பெண்கள் பட்டுப்புடவை, பெரிய பெரிய நெக்லஸ், வடங்கள் . வைர மூக்குத்தி, கம்மல்கள் டாலடிக்க... அவர்களைப் பார்த்த உடன்  என் மனதில் இவர்கள் எல்லோரும் குறிப்பாக பெண்கள்... இன்று இங்கு வந்து உட்கார்ந்து பாட வழி வகுத்த அந்த மாது சிரோண்மணியின் நினைவு வந்தது. கண்களில் கண்ணீர் கசிந்தது.

அவர் "வித்தியாசுந்தரி.. பெங்களூர். புட்டலஷ்மி நாகரத்னம்மா" அவர்கள். அவர் 1878 இல், மைசூர் நஞ்சன் கூட்டில் பிறந்தவர்.
பெற்றோர்  புட்டலஷ்மி, வழக்கறிஞர் சுப்பாராவ்... புட்டலஷ்யின் மூதாதையர்கள். மைசூர் அரசவையில் பாடகர்களாகவும் இசைக்கலைஞர்களாகவும், விதூஷிகளாகவும் பணியாற்றியவர்கள். தேவரடியார் மரபு...

நாகரத்னம்மாவிற்க்கு ஸமிஸ்கிரதம், இசை, கன்னடம், ஆங்கிலம், தமிழ் தெலுங்கு, நடனம், ஹரிகதை ஆகியவை இயற்க்கை யாகவே கை வந்தது கலை. தனது 15 வது வயதில் வயலின் கலைஞராகவும் நடனக் கலைஞராகவும் தனது முதல் மேடை நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.

 மைசூர், விஜயநகரம், திருவிதாங்கூர், பொப்பிலீ அரசவைகளில் ஆஸ்தான விதூஷி பதவி, பெயர், புகழ். பெரும் பொருள் அவர் வீட்டுக் கதவைத் தட்டியது... செல்வம் கொழித்தது. ஆனால் அவர் மனம் தாமரை இலை தண்ணீர் போல் அவற்றில் ஒட்டவில்லை. சென்னையில் இருந்த போது நாகரத்னம்மா தனது குருவான 'பிதாரம் கிருட்டிணப்பா' மூலம் அப்போதைய தியாகராஜரின் சமாதியின் பாழடைந்த நிலையை கேல்விப்பட்டார்... அவர் மனம் துடித்தது. எப்பேர்பட்ட இசை பிதாமகரின் சமாதிக்கு இந்த நிலையா? தியாகப்பிரம்மத்தின் கிருதிகளை பாடி பல வித்வான்கள் பெரும் பொருள் ஈட்டுகிறார்கள், மேடைக்கு மேடை பலர் வாய் கிழிய பேசுகிறார்கள்... ஆயிரக்கணக்கான சங்கீத ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.. ஆனால் அவர் சமாதியை பராமரிக்க நாதி இல்லையா? அங்கும் நீயா/நானா போட்டி பெறாமைகள் அதன் பலன் சாமாதி சீர் குலைந்து கிடந்தது .

நாகரத்னம்மா செயலில் இறங்கினார். தன் சொந்தப் பணத்தில் சமாதி நிலத்தை மீட்டெடுத்து... திருத்திக் கட்டி... ஸ்ரீ தியாகராஜரின் பிரதிமையை 1921 இல் ஸ்தாபித்தார்... கும்பாபிஷேகம்... தினமும் பூஜை பிரார்த்தனை  ஏற்பாடு செய்தவர் இந்த மாது சிரோண்மணி தான். தியாகராஜரின் நினைவாக வருடாந்திர இசை ஆராதனையை முதன் முதலாக சிறப்பாக, கிரமமாக நடத்த  பிள்ளையார் சுழி போட்டவரும் இவரே. அங்கும் காழ்ப்புணர்ச்சி பெண்கள் ஆண்களுடன் சமமாகப் உட்கார்ந்து பாடுவதா? என்று குறிப்பாக இவர் 'நீ அந்த மரபு' என. கட்டிடம் எழும்பியது, நிலம் மீட்டது, கும்பாபிஷேகம் எல்லாம் இவர் பணத்தில் ஆனால் இவர் அங்கு பாட அனுமதி இல்லை. "நான் பாடவில்லை ஹரிகதை செய்யவாவது அனுமதியுங்கள்" என்று கெஞ்சினார். ஊகும்... சனாதன தர்மம் என்ன ஆவது? என ஆங்கார மறுப்பு. இவரா அஞ்சுபவர்? ஆராதனை நாளில் கட்டிடத்தின் பின் பெண்களைக் கூட்டி பாட ஆரம்பித்தார். அதை "பொண்டுகள் கட்சி" என பரிகசித்தது. ஆண்களின் "பெரிய கட்சி.." பிறகு நாகரத்னம்மா முயற்ச்சியால் இரண்டும் இணைந்ததாம்... பல இலக்கிய இசை நூல்களை மீட்டெடுத்து தன் சொந்த செலவில் பதிப்பித்தவர்.

முக்கியமாக திருவையாற்று "முத்துப்பழனி" (1730 - 1790) தஞ்சை நாயக்க அரசரான பிரதாபசிம்மன் (1739-1763) அரசவையில் இருந்த இளம் தெலுங்குப் பெண் கவிஞர். தேவரடியார் மரபில் வந்தவர்... இவரது புகழ்பெற்ற படைப்பு "ராதிகா சாந்தவனம்" இந்தநூல் ராதை யின் பார்வையில் பெண்களின் விரக தாபத்தை நாயகன் நாயகி பாவத்தை வெளிப்படையாகப் பேசும் ஒரு  அற்ப்புத இலக்கியம் நாட்டியத்திற்க்கு மிகவும் தோது. அப்போதைய அரசர் அவையினரால்  பாராட்டி ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாடி அபினயிக்கப் பட்டை புகழ் பெற்றது.

இது 1910ல் பெங்களூர் நாகரத்தினம்மாவால் திருத்தப்பட்டு  மறுபதிப்பு கண்ட போது சில வக்கிர புத்திக் காரர்களால் ஆபாசப் பிரதியாக சித்தரிக்கப்பட்டு தடை. "ஒரு தேவரடியாள் எழுதினாள்.. மற்றொரு தேவரடியார் பதிப்பிதாள்"  என கேவலமாக பேசினார்கள். இவர் அசரவில்லை..  அதன் அற்ப்புதமான இலக்கியச் சுவயைப் பாருங்கள் என தொடர் போராட்டம் இத்தடை 1947ல் இல் விலகியது. புத்தகம் வெளி வந்து புகழ் பெற்றது.

இவர் வெளிட்ட மற்ற நூல்கள்: “மத்யா பானம்”
“தியாகராஜ அஷ்டோத்திர நாமாவளி”  “பஞ்சகீரண பௌதீகம்”  போன்றவை. ஒரு துறவி போல் வாழ்ந்தார். பெண் உரிமைகளுக்கு போராடினார். குறிப்பாக தேவரடியார் பெண்கள் நல்வாழ்விற்க்கு.

நாகரத்னம்மா அவர்கள் மே மாதம் 19 ஆம் தேதி 1952 இல் தனது 74 வயதில் மறைந்தார். தியாகராஜரின் சமாதிக்கு அடுத்ததாக இவரது நினைவாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. அவர் மட்டும் அன்று சமாதி நிலத்தை மீட்டெடுத்து, சிலை அமைத்து வழிபாடு, ஆராதனை ஆரம்பித்து இருக்காவிட்டால்? அந்த முயற்ச்சி எடுத்திருக்க விட்டால்? "ஆத்மீக பூமியாம்"!! செந்தமிழ் நாட்டில் எத்தனையோ கோவில்கள் பாழடைந்து,, மண்ணோடு மண்ணாகி கிடப்பது போல் சமாதியின் கதியும்  ஆகி இருக்கும். அது பற்றி ஆவேச பட்டி மன்றங்கள் நடந்தபடி இருந்து  இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பெங்களூர் நாகரத்னம்மா அவர்களின்  மலர் பாதம் பணிந்து  நமஸ்காரம்  

வாழ்க அவர் புகழ்...