வெள்ளி, 18 அக்டோபர், 2013

இறைவனின் கல்கி அவதாரம் எப்போது?

கிருஷ்ணர் தன் அவதார நோக்கம் முடிந்து சங்கு சக்கரத்துடன் காட்சி தந்தார். தேவலோகத்தில் தேவர்கள் அனைவரும் மலர் மாறி பொழிந்து மங்கலவாத்தியம் முழங்க பகவானை வரவேற்க காத்திருந்தனர். பூமியில் இருந்து புறப்பட்டு வைகுண்டம் சென்றடைந்தார் விஷ்ணு பகவான். கிருஷ்ணாவதாரம் முடிந்த உடனே கலியுகமும் பிறந்தது. ராம அவதாரத்தில் ராமரின் அன்பினால் கொல்லப்பட்ட வாலிதான் கிருஷ்ணா அவதாரத்தில் வேடனாக வந்து கண்ணன் மீது தவறுதலாய் அம்பு எய்தினான். அதனால் கிருஷ்ணர் உயிர் பிரிந்தது. அவர் வைகுந்தம் சென்றதால் உடன் துவாரகையும் கடலில் மூழ்கியது. கண்ணன் உடல் சந்தனக் கட்டையாகி மிதந்து குருவாயூர் சென்று அடைந்தது. அவ்விடம் தான் குருவாயூர் ஆகும். தசாவதாரங்களில் 9 அவதாரங்களில் ராமாவதாரமும்,கிருஷ்ணாவதாரமும் தான் பூரண அவதாரங்கள் இவை இரண்டும் தான் இதிகாசங்களாக மலர்ந்தன. அவைதான் ராமாயணம், மகாபாரதம். இந்த 9 அவதாரங்களுடன் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் ஓர் அவதாரம் உள்ளது. அது தான் கல்கி அவதாரம். பகவான் குதிரை முகத்துடன் யாஸஸ் என்பவருக்கு மகனாக அவதாரம் செய்ய போகிறார். தீமைகளை அழித்து நன்மை செய்யவே பகவான் அவதாரம் செய்வார். கலியுக முடிவில் மக்கள் தீமையே உருவாக உள்ளனர். அவர்களை அழித்து அமைதியும் அன்பும் நிலைநாட்ட கல்கி அவதாரம் நிகழும்.

கலியுகம் முடிவில் வருணங்கள் ஒன்றுக்கொன்று கலந்து பலவிதமாக இருக்கும். துர்க்குணம் உடையவர்கள் அதிகமாவார்கள். சாஸ்திரம் பயின்றாலும் அவற்றை அனாச்சாரங்களாகத்தான் பரப்புவார்கள். மிலேச்சர்கள் தலைமை பொறுப்பேற்று மக்களைத் துன்புறுத்துவார்கள். கலியுகத்தில் மனிதர்களிடையே பொய், வஞ்சனை, தூக்கம், சோம்பல், மனவருத்தம், ஹிம்சை செய்தல், பலவீனம், பயம், அறியாமை, அழுகை அதிகமாக இருக்கும் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற வெறி ஏற்படும். துறவிகள் பணத்தாசையால் அலைவர். இல்லறத்தார் எங்கே எது கிடைக்கும் என்று திரிவர். தாய் வழி உறவினர்களை தவிர்த்து மனைவி வழி உறவினர்களை மட்டுமே மதிப்பார்கள். மனைவிக்கு மட்டுமே கட்டுப்படுவர். சிறிதளவு சொத்துக்கும் உறவினர்களை கொல்வார்கள். பெற்றோர்களைக் காப்பாற்ற மாட்டார்கள். திருமணத்தில் முறை இருக்காது. இவ்வளவு கெடுதல் இருந்தாலும் கடுமையான தியானத்தால் கிருதயுகத்திலும், யாகங்களில் திரேதா யுகத்திலும் பூக்கள் கொண்டு செய்த விரிவான பூஜைகளால் துவாபர யுகத்திலும் கிடைத்த அதே பலனை கலியுகத்தில் கண்ணனின் திருநாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே கிடைத்துவிடும். பாவங்களும் விலகிவிடும். கலியுகத்திலும் இதுவே யுகதர்மமாக மாறும்.

கலியுகத்தில் 3000 ஆண்டுகள் கடந்துவிட்டன என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். கலியுகத்தின் 2000 ஆண்டு கழிந்ததுமே அன்னிய ஆதிக்கம் பரவிவிட்டது. கலியுகத்தின் கேசவனுடைய ஹரி நாமத்தை பாராயணம் செய்வதாலேயே 3 யுகங்களுக்கான புண்ணியம் பெற்று விடலாம். இப்படி மகனீயர்களும் தபஸ்விகளும் தாம் அதர்மத்தை சீர்தூக்கிப் பார்த்து உணர்ந்தாலும் உலகில் தர்மம் சிதைந்து நீதி நேர்மை நசிந்து அராஜகம் தலை விரித்தாடும் போது நல்லவர்களையும் தர்மத்தையும் காக்க கல்கி அவதாரம் நிகழும்.
கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவதன் தத்துவம் என்ன?

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துகின்றனர். இதற்கு ஒரு கர்ண பரம்பரை கதை கூறப்படுகிறது. வருஷபன் என்ற அசுரன் பரமபதம் வேண்டி மலையப்ப சுவாமியை தரிசிப்பதற்கு முன்பு தினந்தோறும் யாகம் செய்வான். அப்படி ஒருநாள் யாகம் செய்யும்போது பக்தி மிகுதியால் தன் தலையையே புஷ்பமாக கருதி கிள்ளி எடுத்து நெருப்பில் போட்டு விட்டான். இதை நினைவு கூறும் விதத்தில் பக்தர்கள் தலைமுடியை புஷ்பமாக சமர்ப்பித்து தான் என்ற அகங்காரத்தை அகற்றி இறைவனை வழிபடுகின்றனர்.
உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?

நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.

கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்

கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.
பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம் உண்டு தெரியுமா?

கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக !
6. மோதிரம் - எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
ஓற்றுமையாய் வாழ என்ன வழி?

சிலநேரங்களில் நன்றாக இருக்கும் குடும்பங்களில் கூட சூறாவளியாக புயல் வீசி விடுவதுண்டு. பல்வேறு பிரச்னைகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமலோ, அனுசரணை இல்லாததாலோ குடும்ப அமைதிக்கு பங்கம் வந்து விடுகிறது. கணவன்- மனைவி, பெற்றோர்- பிள்ளைகள் உறவு கூட பாதிக்கப்படுகிறது. இவர்கள்

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

என்ற தேவாரப்பாடலை 12 முறை பாராயணம் செய்து வரவேண்டும். விநாயகர், முருகன், சிவன்,பார்வதி ஆகிய நால்வரும் சேர்ந்திருக்கும் சிவகுடும்ப படம் வைத்து இப்பாடலைப் பாடுவது சிறந்த பரிகாரம். செவ்வாய், வெள்ளியில் இவ்வழிபாட்டை  செய்யலாம். கோயில்களில் சுவாமி, அம்மன் சந்நிதிகளில் விளக்கேற்றுவதும் குடும்ப ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.
மாவிலைத் தோரணம் கட்டுவதன் தத்துவம் என்ன?

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.
புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?

மஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை. இதுமட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம் ! எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம். புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்துவித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது.
பஸ் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது ஏன்?

பாதயாத்திரையாக சென்று இறைவனை வணங்கும் முறை சமீபத்தில் அதிகரித்துள்ளது. முற்காலத்தில் வாகனங்கள் இல்லாத சூழ்நிலையில் அடியவர்கள் தெற்கிலிருந்து இமயமலை வரையும், இமயத்திலிருந்து பொதிகை வரையும் உள்ள தலங்களை நடந்துசென்றே தரிசித்தனர். இதே வழக்கம் இப்போதும் ஏற்பட்டுள்ளது. காலச்சூழ்நிலை கருதி குறுகிய இடத்திற்குள் பாதயாத்திரை செல்கின்றனர்.  பழநி, திருப்பதி ஆகிய தலங்களுக்கு பாதயாத்திரை செல்வோர் அதிகம். ஒருவன் தன்னைத்தானே வருத்திக் கொள்வதன் மூலமே தான் என்ற அகங்காரத்தைக் குறைக்க முடியும் என்பதின் அடிப்படையிலேயே பாதயாத்திரை நடத்தப்படுகிறது.
கோயிலில் காப்புக் கட்டினால் வெளியூர் செல்லக்கூடாதா?

திருவிழா காலத்திலாவது ஊர் சுற்றாமல் உள்ளூரிலேயே இருக்கலாமே என்று இதைக் கூறியிருப்பார்கள். நம் ஊர் திருவிழாவை நாம் எல்லோரும் இருந்து தானே நடத்த வேண்டும்? காப்புக் கட்டிக் கொள்பவருக்குத்தான் இந்த சட்டம் சாஸ்திர ரீதியானது. மற்றவர்களுக்கு வெளியூர் செல்லக்கூடாது போன்ற தடைகள் சாஸ்திரங்களில் இல்லை.
தவம் என்றால் என்ன?

தவம் என்றால் உடனே யாரும் அஞ்சி விடக்கூடாது. காட்டுக்குச் செல்வதும் பட்டினி கிடப்பதும் கனல் நடுவே நிற்பதும் தவம் என்று கருதி விடக்கூடாது. அவையாவும் தவத்திற்கு அங்கங்களே அன்றி தவமாகாது. தனக்கு வருகின்ற துன்பங்களைச் சித்சமாதானத்துடன் தாங்கிகொள்ளுதல், இன்னொரு உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரு பண்புகளும் சேர்ந்குணமே தவமாகும்.
மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளா! பொருளா?!

ஒரு மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவை அருளும் பொருளும். இவை இரண்டும் இருந்து விட்டால், எதற்கும் கவலை இல்லை. அருள் அதிகம் இருக்க வேண்டும். பொருள் போதுமான அளவில் இருக்க வேண்டும்.  பொருள் அதிகம் இருந்தால், அருளைப் பெறுவதில் சிரமம் இருக்கும். அதாவது, அருளைப் பெறுவதில் மனம் நாட்டம் கொள்ளாது. அருளும் பொருளும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. அருளை வைத்துக் கொண்டு பொருள் பெற முடியாது; பொருளை வைத்துக் கொண்டு அருளைப் பெற முடியாது. இரண்டையுமே தேடித்தான் பெற வேண்டும். நல்ல ராசிக்காரர்கள் சிலரை இவை இரண்டுமே தேடி வருவதும் உண்டு. அருள் என்றால், இறை இன்பம். இறை அருள். இறைவனின் ஆசி என்றெல்லாம் சொல்லலாம். என்றென்றைக்கும் எப்போதும் நல்ல நிலையில் ஒருவரை வைத்திருக்க உதவுவது அருள். இத்தகையோரைப் பார்த்தாலே, கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். பொருள் என்றால், நாம் தேடிச் சேகரித்த செல்வம். பொருள் தேடும் ஆசை குறையக் குறையத்தான் அருள் வந்து சேரும். ஒருவர் வைத்துக் கொண்டிருக்கும் செல்வத்தால், படிப்பால், பதவியினால், ஞானத்தால் அருளை வாங்க முடியாது. அருள் கடைச் சரக்கு அல்ல.

மனத்தூய்மையே அருளைப் பெற முயற்சிப்பதன் முதல் படி. ஸ்ரீராமபிரானின் மனத் தூய்மையை ராவணனே வியந்து போற்றி இருக்கிறான். எதிரியே என்றாலும், ராமனின் இந்தக் குணத்தை தன் மனைவியான மண்டோதரியிடம் வியந்து சொன்னதாக, பரமஹம்சர் சொல்வார். சீதையைத் தங்கள் நாயகி ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஏன் இவ்வளவு அவஸ்தைப்படுகிறீர்கள்? ராமனைப் போன்ற மாய வடிவம் எடுத்து, சீதையிடம் சென்று அவளை ஏன் ஏமாற்றி அடையக் கூடாது. என்று கேட்டாளாம் மண்டோதரி. கணவனின் இந்த இச்சையைப் பூர்த்தி செய்ய விரும்பிய மண்டோதரியே இப்படி ஒரு வழியைச் சொன்னாள். அதற்கு ராவணன், சேச்சே... அப்படி இல்லை மண்டோதரி. ராமனை நினைத்த மாத்திரத்திலேயே வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமும் இன்பமும் மனதில் உண்டாகின்றன. பரமபதமான சொர்க்கமும்கூட வெறுப்பாகி விடும் போலிருக்கிறது. அப்படி இருக்கும்போது, அவனுடைய திவ்ய சொரூபத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு எப்படி சிற்றின்பத்தில் நாட்டம் செல்லும்? மனம் இச்சையில் லயிக்காது என்று மண்டோதரியிடம் சொன்னானாம். பொருளாசை மற்றும் இன்ன பிற ஆசைகளில் மனம் சென்று கொண்டிருந்தால், அருள் கிடைக்காது. இறைவனை தரிசிக்க முடியாது. பணம், பதவி, பட்டம், ஆற்றல் இவற்றைச் சேர்க்க முயலும் ஆசை அறவே அடங்கினால்தான் இறை தரிசனம் கிடைக்கும். அந்த இன்பத்தை உணர முடியும்.

அருளில் கிடைக்கும் ஆனந்தத்தை ஒருமுறை ருசித்துப் பார்த்து விட்டால், அதன் பின் வேறு எந்த ஆசையும் ஒரு மனிதனுக்கு எழாது. சான்றோர்கள் அனுபவித்துப் பெற்ற அந்த அருள் அமுதத்தைப் பெற முயற்சிக்கலாமே! அருளைப் பெறுவதற்கு மனதை முதலில் பக்குவப்படுத்துங்கள். பக்குவப்பட்ட மனதில்தான் அருள் ஆனந்த தாண்டவம் ஆடும்.
எலுமிச்சையின் மகிமை தெரியுமா?

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.
கலியுகம் எப்போது முடியும்?

கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது. மொத்தம் 4,32,000 ஆண்டுகள். இப்போதே கலியுகத்தின் கொடுமை எல்லை மீறி போய் விட்டது. இனி காட்டுவாசிகள் போல நாகரீகமற்று போய் விடும் அந்த பழைய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த யுகத்தின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட திருமால் கல்கி அவதாரம் எடுப்பாரென்று புராணங்கள் கூறுகின்றன. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.