புதன், 10 ஜனவரி, 2024

கூடலி சிங்கேரித் மடம்

கூடலி சிங்கேரித் திருமடம்



(துங்கபத்ரா சிங்கேரி)

கர்நாடக மாநிலத்தில் ஷிமோகாவிற்கு அருகில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் கூடலி எனும் நகரமும், துங்கைக் கரையில் சிங்கேரியும்  இருக்கின்றன. இந்த இரு இடங்களிலும் புகழ் பெற்ற சங்கர மடங்கள் இருக்கின்றன.

கூடலி...  வித்யாநகரம், தட்சிண வாரணாசி, ஹரிஹர க்ஷேத்ரம், தட்சிண ப்ரயாகை, ராமக்ஷேத்ரம் எனும் பல  சிறப்புப் பெயர்களுடன் கூடிய புகழ் மிக்க இடமாகும். மேலும், பீடத்தின் அதிதேவதையான சாரதாப் பிராட்டியே கூடலியில் இருப்பதாகவும், நவராத்திரியின்போது  சிங்கேரிக்கு வருவதாகவும் செவிவழிச் செய்தி ஒன்று உண்டு.  இந்தக் கதை மெய்யோ பொய்யோ.. இதன் உண்மைத் தன்மையை  பிராட்டியே அறிவாள்.  இது பழைய நூல்களிலும் பதிவாகி உள்ளது என்பதை மட்டும் சொல்லி இதை இத்துடன் விடுத்து மேற்கொண்டு தொடருவோம்.

கூடலி  உண்மையான சிங்கேரியே
என்பதை உறுதிபடுத்த வேண்டி கூடலி மடத்தினர் பல ப்ராசீன சாசனங்கள், உடன்படிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளிட்ட ஆவணங்களைச் சேர்த்து அனேக நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்.

ஆயினும், நம்மைப் பொருத்தவரை, போற்றுதற்குரிய இவ்விரண்டு மடங்களுக்குள் எவ்வித ஏற்றத்தாழ்வும் கிடையாது,
இதுவரை கிடைத்துள்ள பழைய சரித்திர ஆவணங்களின்  அடிப்படையில் இவ்விரு அத்வைத பீடங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே நாம் ஆராய்வோம்.. அத்துடன் அமைவோம்.

கூடலியும், சிங்கேரியும் ஒரே கொடியில் பூத்த இரு மலர்கள் எனக் கொள்வர் பெரியோர்.

இந்த இரண்டு பீடங்களும் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து மாறுபாடுகளாலும், காலச் சூழலாலும் அப்போதிருந்த  அரசர்களையும்,  நீதிமன்றங்களையும் அணுகியிருப்பினும்,  இருவரது  குரு பரம்பரைப் பட்டியல்களும் ஸ்ரீ நரசிம்ம பாரதி என்னும் ஆசார்யர் வரைக்கும்  ஒன்றாகவே இருக்கின்றன என்பதை நவீனரும்  ஒப்புக் கொள்கின்றனர்.

பழைய கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்டவற்றில் இருவருக்குமே சிங்கேரி என்னும் முன்னொட்டு தரப்பட்டுள்ளதையும், கூடலி மடத்தின் பலமான சரித்திரப் பின்னணி பற்றியும் மைஸூர் தொல்லியல் துறை ஆண்டறிக்கைகள் வாயிலாக நாம் அறியலாம்.

பி.கு: தற்கால வெகுஜன ஊடகங்களின் வாயிலாக மட்டுமே கர்நாடக மாநிலத்தில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு அத்வைத மடம் அல்லது மற்ற  மடங்களையும்  பற்றி இதுவரை மேலோட்டமாக அறிந்து வந்திருப்போர்,  இந்தப் பதிவுகளை நிதானமாக ஒரு தடவைக்கு இருமுறையாக வாசிக்க நன்கு தெளிவாகும். அனைத்து அத்வைத மடங்கள் மற்றும் ஆசார்யர்கள் மீது மதிப்பும் உண்டாகும்.
படங்கள்: ஸ்ரீகூடலீ ச்ருங்கேரி பீடம் ஜகத்குரு மஹாஸம்ஸ்தான ஸிம்ஹாஸனம்..

கருத்துகள் இல்லை: