வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

அப்பா சொல்லை தட்ட முடியவில்லை

அப்பா சொல்லைத் தட்டமுடியாமல் ஓரிக்கைக்கு வந்தார் கணபதி. அங்கே பெரியவா இருந்த சின்ன அறையில் வெளிச்சம் கூட இல்லை. அவரும் ஏதோ காஷாயம் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கணபதிக்கு அங்கே எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்ன இவர்... கோயில் வாசலில் இருக்கும் ஆண்டியைவிட சாதாரணமா இருக்காரே என்ற எண்ணம்!

அறைக்குள் நுழைந்தது முதல், வைத்த கண் எடுக் காமல் கணபதியைப் பார்த்துக் கொண்டிருந்த மஹா பெரியவா சிறிது நேரம் கழித்துப் 'போகலாம்’ என்று உத்தரவு கொடுத் ததும்தான் 'அப்பாடா’ என்றிருந்தது கணபதிக்கு.

இருந்தாலும் வீடு திரும்பிய பின்னரும் கணபதியின் மனசு பூராவும் பெரியவா நினைப்பே சுழன்று சுழன்று வந்தது. எங்கே திரும்பினாலும் பெரியவா இருக்கிற மாதிரி ஒரு பிரமை! 'பெரியவா என்னைத் தடுத்தாட்கொண்டு இருக்கார்னு புரிஞ்சுது. அதன் பிறகு என் வாழ்க்கையே திசை திரும்பிடுச்சு!’ என்று கூறியிருக்கிறார் கணபதி. அதன் பிறகு, 'கல்கி’ பத்திரிகையுடன் தொடர்பு ஏற்பட்டு, சதாசிவம், எம்.எஸ் தம்பதியின் கருணை வட்டத்தில் வந்து விட்டார். சில காலம் கழித்து, மடத்துக்கு மீண்டும் அறிமுகமாகி, பெரியவா சொல்வதைக் குறிப்பு எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பெரியவா ஓரிடத்தில் சொன்ன சமாசாரத்தை இன்னோர் இடத்தில் தொடர்வார். பெரியவா பேச்சில் சயின்ஸ் இருக்கும்; வேதம் இருக்கும். கணபதி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக்கொள்வார். வேத வியாசருக்கு விநாயகர் அமைந்த மாதிரி, மஹா பெரியவாளுக்கு ரா.கணபதி கிடைத்தார் னுதான் சொல்லணும். ஆசார நியம நிஷ்டை, தபஸ் எல்லாமே கணபதிக்குப் பழகிப் போச்சு. நைஷ்டிக பிரம்மசாரி. ராமகிருஷ்ண மடத்து 'அண்ணா’தான் அவருக்கு மந்திர குரு; உபதேசம் செய்து வைத்தவர்.

கணபதி அம்பத்தூரில் தங்கியிருந்த காலத்தில் அவர் அம்பாள் பூஜை செய்வதை பார்க்கணுமே... அவ்வளவு சிலிர்ப்பா இருக்கும். கேரள நம்பூதிரி ஒருவர் இந்த அம்பாள் விக்கிரகத்தைத் தலையிலேயே சுமந்துகொண்டு வந்து, சிதம்பரத்தில் இருந்த இவரது வீட்டில் சேர்ப்பித்தாராம். கேட்டதற்கு, 'இங்கேதான் கொடுக்கணும்னு அம்பாள் சொல்லிட்டா’ என்றாராம்.

கொஞ்ச காலம் புட்டபர்த்தியில் தங்கலாம் என்று அங்கே போனார் கணபதி. ஆனால், ஸ்ரீசாயிபாபா இவரைக் கூப்பிட்டு, 'தெய்வத்தின் குரலை’ எழுதுவதே உங்களின் பிறவிப் பணி. நீங்கள் தொகுக்கும் 'தெய்வத்தின் குரல்’ இந்து மதத்துக்கும் சனாதன தர்மத்துக்கும் பலமாக - உபநிஷத்துக்குச் சமானமாக இருக்கப் போகிறது’ என்று அருளினாராம்.
மஹா பெரியவாளை ஸ்ரீராமர் என்றுதான் கணபதி சொல்வார். பெரியவாளுடைய நூற்றாண்டு விழாவின் போது, கணபதியை கௌரவம் பண்ணி சன்மானம் கொடுக்க... அதை அப்படியே ஓரிக்கை கோயிலுக்குக் கொடுத்துவிட்டார் கணபதி.

ஒரு சந்தர்ப்பத்தில், பெரியவா சரிதத்தைக் 'கல்கி’யில் எழுதத் தொடங்கினார். இரண்டு வாரம்தான் வந்திருக்கும். பெரியவா கணபதியைக் கூப்பிட்டனுப்பி, 'போறும் நிறுத்திடு’ன்னு சொல்லிட்டார். 'அதுக்குப் பதிலா, மடத்திலே எனக்காக எத்தனையோ பேர் இரவும் பகலும் உழைக்கறவா இருக்கா. அவாளைப் பத்தி எழுது!’ன்னார். 'அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே’ என கணபதி தயங்கவும், 'தெரிஞ்சதை எழுது; தெரியாததை நான் சொல்றேன். 1907-ல் பைங்காநாடு கணபதி சாஸ்திரி எனக்கு வித்யா குருவா இருந்திருக்கார். அவரைப் பற்றி எழுது. பெரிய புராணம் மாதிரி, இதைத் திருத்தொண்டர் புராணம்னு எழுது’ என்று சொன்னாராம் பெரியவா. ஆனால், கடைசியில், மடத்தைச் சேர்ந்த ஏ.குப்புசாமி ஐயர் என்பவர்தான் அதை எழுதினார்.
'தெய்வத்தின் குரலை’ நான் உபன்யாசம் செய்வது இருக்கட்டும்... அதைப் படித்தவர்கள் யாரேனும் வாழ்க்கையில் சிறிதேனும் தங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார்களா என்பதை அறிய, நானும் நண்பர் சிவராமனும் போகிற இடங்களில் எல்லாம் கவனித்துப் பதிவு செய்வது வழக்கம். அப்படியான சம்பவங்கள் நிறைய! 'தெய்வத்தின் குரல்’ ஏழு பாகங்கள் வெளியாகி இருக்கு. ஏழாவது வால்யூமை பெரியவா பார்க்கலை. கணபதி, இன்னும் இரண்டு வால்யூம்களுக்கு விஷயம் வைத்திருந்தார். 'அதையெல்லாம் எப்போது எழுதப் போகிறீர்கள்?’ என்று கேட்டபோது, கணபதி என்ன சொன்னார் தெரியுமா? 'என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. இனிமே என்னால எழுத முடியாது!’ என்றார் தமாஷாக. மகா பெரியவா மாதிரியே கணபதிக்கும் அசாத்திய ஞாபக சக்தி. பத்து வருஷத்துக்கு முந்தி சந்தித்தவரைக்கூட, நினைவில் வைத்து விசாரிப்பார்.

ரா.கணபதி போதேந்திராள் சரிதத்தையும் 'காம கோடி ராம கோடி’ எனும் தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கார். போதேந்திராள் 59-வது ஆசார்ய பீடம்; அவர் கோபி சந்தனம் இட்டுக் கொண்டிப்பார் எனப் புத்தகத்தில் எழுதியிருந்தார் கணபதி. 'அது தப்பு; திருத்தணும்!’ என்றாராம் பெரியவா. அத்துடன், 'விபூதி, ருத்ராட்சம் தவிர வேறெதுவும் அணிவதில்லை என்ற மடத்து சம்பிரதாயத்தை அவர்கள் (போதேந்திராள்) ரட்சித்துக் கொடுத்தார்கள். அதை ஜனங்க தெரிஞ்சுக் கணும்’ என்றும் அறிவுறுத்தினாராம்.

ஆதிசங்கரர் குறித்த 'ஜெயஜெய சங்கர’, ஸ்ரீரமணரைப் பற்றிய 'ரமணாயனம்’, மீராபாயின் வரலாற்றைச் சொல்லும் 'காற்றினிலே வரும் கீதம்’, பாபாவின் சரிதம் சொல்லும் 'ஸ்வாமி’, ராமகிருஷ்ண பரமஹம்சர்- விவேகானந்தர்- சாரதாமணி அம்மையார் பற்றி 'அறிவுக்கனலே, அருட் புனலே’ ஆகிய அற்புதமான நூல்களும் ரா.கணபதியின் படைப்புகளே! எனினும், 'தெய்வத்தின் குரல்’ ஒன்றுக்காகவே தமிழுலகமும் ஆத்திக உலகும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது'' - நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் கணேச சர்மா.
'ஒருமுறை நானும் பால்யூவும் ரா.கணபதி சாரும் பாபாவை தரிசிச்சுட்டு, புட்டபர்த்தியில் இருந்து ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். மாலை நேரம் ஆனதும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் கணபதி சார். நெற்றி நிறைய விபூதியுடன் அவரைப் பார்த்தபோது ஆதிசங்கரர் மாதிரி இருந்தது.

வழியில் ஓரிடத்தில் பயங்கரச் சத்தம். அசம்பாவிதம் எதுவும் இல்லை என்றாலும், எல்லோரும் பயந்துபோனோம். ஆனால், கணபதி சார் கொஞ்சம்கூட அசையவில்லையே! அப்படியரு யோக நிஷ்டையில் இருந்தார். இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் ஆச்சரியம் அது!'' என்று நெகிழ்கிறார் ஓவியர் மணியம் செல்வன். அறிஞர் அண்ணாவின் அன்னையார் மறைந்த தருணம்... மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாராம் பேரறிஞர். அந்த வாரம் கல்கி இதழில் 'ஜய ஜய சங்கர’ தொடரில்... ஆதிசங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் மரணம் அடைவது பற்றி உருகி எழுதியிருந்தார் கணபதி. 'அதில் தாயை இழந்த சோகத்தை சங்கரர் அனுபவித்த விதம் குறித்து கணபதி எழுதியிருந்த விதத்தைப் படித்து நானும் நெகிழ்ந்துவிட்டேன்’ என அறிஞர் அண்ணா, பாரதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'தன் வரலாறு’ நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆம்... அனைத்துத் தரப்பினரையும் அசைத்துப் பார்க்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர் ரா.கணபதி.

வேண்டாம் இந்த சூதாட்டம்

வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற போது கிடைத்த பதில். அதிரவைக்கும் பதில்

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா!

நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின் படி முன்னதாகவே சென்று தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும் தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும் படி செய்து வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான் நாட்டை இழந்தான் தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது உனது தெய்வீக சக்தியால் அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக திரௌபதியின் துகிலை உரித்து அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போது தான் சென்று துகில்தந்தேன் திரௌபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன் குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து சூதர்சபையில் பலர் முன்னிலையில் அவள் ஆடையில் கை வைத்த பிறகு எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்து விட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால் தான் தருமன் தோற்றான் என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க கண்ணன் தொடர்ந்தான். துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால் பணயம் வைக்க அவனிடம் பணமும் ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி பகடையை உருட்டிச் சூதாடுவார் என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு நானும் பணயம் வைக்கிறேன். ஆனால் என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால் யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்து விட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால் அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். ஐயோ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே! ஆனால் இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன். பீமனையும் அர்ஜுனனையும் நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும் தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று திரௌபதியின் சிகையைப் பிடித்த போது அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி சபையில் வந்து வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல் ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா! அபயம் எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு? என்று பதிலளித்தான் கண்ணன்.

அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால் ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?" என்றார் உத்தவர்.

"கேள்" என்றான் கண்ணன்.

அப்படியானால் கூப்பிட்டால் தான் நீ வருவாயா? நீயாக நீதியை நிலை நாட்ட ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா? புன்னகைத்தான் கண்ணன்.

உத்தவா மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்" என்றார்.

நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால் நீ அருகில் நின்று நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர். உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும் போது தான் எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போது தான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே அது தான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும் எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால் இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா? என்றான் ஸ்ரீகிருஷ்ணன். உத்தவர் வாயடைத்து பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும் அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும் போது அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?

இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை அது தான் பகவானின் மேன்மை!