திங்கள், 22 ஏப்ரல், 2019


#யாக_பூஜையும்_யாக_மண்டபமும்

யாகசாலை அல்லது யாகமண்டபம் என்பது ஒரு திருவோலக்கம் போன்றது. அதாவது, ஒரு பெரும் சக்கரவர்த்தி தனது பரிவாரங்களோடு, அத்தாணி மண்டபத்தில் எழுந்தருளியிருப்பது போல நாமும் நமது இறைவனை ஆவரண தேவ தேவியர்களோடு, சகல பரிவாரங்கள் சகிதம் யாகமண்டபத்தில் வீற்றிருக்கச் செய்கின்றோம்.

இவ்வாறு திருவோலக்கத்தில் எழுந்தருளியிருக்கிற பேரரசனுக்கு சகல வித உபசாரங்கள் வழங்குவது போல, இவ்வாறு மஹா யாக மண்டபத்தில் வீற்றருளும் இறைவனுக்கு, நாம் சகல உபசாரங்கள் வாழ்த்தி வழங்கிப் போற்றுகின்றோம்.

இவ்வாறு இந்த யாக உருவாக்கத்திலும், யாக பூஜையிலும், மந்திர பூர்வமாகவும், பாவனை மூலமும், கைலாசம், வைகுண்டம், ஸ்ரீபுரம் போன்ற தோற்றம் நம் பூமியில் உருவாகின்றது. இந்த வழிபாடுகள் நிறைவு பெற்றதும், தேவ தேவியர்களை அவரவர் இருப்பிடத்திற்கு (யதாஸ்தானம்) அனுப்பி வைப்பார்கள். பிரதான மூர்த்தியும், அஷ்ட வித்யேஸ்வரர், பீடசக்தி என்கின்ற ஸ்நபன திருமஞ்சன கும்பங்கள் அபிஷேகம் மூலம் திருவுருவத்துடன் சேர்க்கப்பெறும்.

ஆலயங்களில் நடக்கிற யாக பூஜையினில், இரண்டு மிகச்சிறப்பானது. ஓன்று வருடம் தோறும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கிற மஹோத்ஸவ யாகம், மற்றையது மஹா கும்பாபிஷேக யாகம்.

இதனை விட சங்காபிஷேகம், பவித்திரோத்ஸவம், பிராயச்சித்தம், விசேஷ அபிஷேகம், போன்றவற்றிலும் யாகபூஜைகள் நடைபெறுகின்றன.

இவற்றுள் மஹோத்ஸவம் என்கிற வருடாந்த பெருந்திருவிழாவுக்கான யாகசாலை நமது தென்னகத் திருக்கோயில்களில் தனியே ஆகம விதிப்படி அமைக்கப்பெற்றிருக்கக் காணலாம். (அநேகமாக திரு கோயில்களில் ஈசான பாகத்தில் மேற்கு நோக்கியதாக இந்த யாகசாலை அமைந்திருக்கும்) மற்றைய விசேட யாகங்களுக்காக யாகசாலை தற்காலிகமாக, அழகாக அமைக்கப்பெறக் காணலாம்.

மஹோத்ஸவம், கும்பாபிஷேகம் இந்த நிகழ்வுகளில் எல்லாம் தினமும் இரண்டு வேளையாக பூஜை நடக்கக் காணலாம். சாதாரணமாக யாகசாலை நாற்புறமும் வாயில்களை உடையதாகவும், 16 தூண்களுடையதாகவும், நடுவில் சதுர வேதிகை (மேடை) உடையதாகவும், இருக்கும்.
தெரிந்த கதை தான்... தெரியாத சில விஷயங்களும் எழுதப்பட்டு உள்ளது... படிப்போம்.. அறிவோம்..

கண்ணப்பநாயனாரின் பக்தியை போற்றும் ஆதி சங்கரர்"

சிவானந்த லஹரியின் சுலோகத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் பக்தியைக் கண்டு, 'இதுவல்லவோ பக்தி' என்று புகழ்கிறார் ஆதிசங்கரர்.

கண்ணப்ப நாயனாருக்கு ஆதியில் அமைந்த பெயர் திண்ணன். நாகரீகத்தின் பக்குவமோ, படிப்பின் பாதிப்போ சிறிதும் இல்லாத ஓர் எளிய முரட்டு வேடன்.

திருக்காளத்தியில் காட்டுக்கு நடுவேயுள்ள சிவலிங்கத்தை 'இவர்தான் இறைவன்' என்று எப்படியோ உணர்ந்து கொண்டான்.

அவன் பூஜை முறைகள் எதுவும் தெரியாதவன். ஒரு கையில் கொடிய வில்; மறு கையில் கடித்துத் தின்று ருசி பார்த்து இறைவனுக்குப் படைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு துண்டு பன்றி மாமிசம்; வாய் நிறைய ஸ்வர்ணமுகி என்னும் பொன்முகலி ஆற்றின் நீர்; தலையில் பலவிதமான காட்டுப்பூக்கள்; காலில் பழஞ்செருப்பு; தோளில் அம்புறாத்தூணி என இந்தக் கோலத்தில் அங்கு ஒவ்வொரு நாளும் வந்து, அங்கு ஏற்கெனவே சிவகோசாரியர் என்ற முனிவரால் பூஜிக்கப்பட்டிருக்கும் மலர்களை தன் செருப்புக் காலால் ஒதுக்கிவிட்டு, வாயிலிருந்து ஆற்றின் நீரை லிங்கத்தின்மேல் உமிழ்ந்து, பன்றி மாமிசத்தைப் படைத்து காட்டுப்பூக்களை இறைவனுக்குச் சூட்டி, தெரிந்த மட்டும் வாயாற வாழ்த்தி மனதார வணங்கி அகமகிழ்ந்து போகிறான் திண்ணன்.

ஐந்து நாள்களாக தொடர்ந்து பார்த்து அருவறுப்பும் பயமும் கலந்த உணர்வுடன் இறைவனிடம் மனமுறுகி வேண்டுகிறார் சிவாகோசாரியர்.

அவர் கனவில் தோன்றிய இறைவன், "மறைந்திருந்து பார், உன்னதமான அவனது பக்தியை அறிவாய்!'' என்றருளினார்.

மறுநாள் வழக்கம் போல அதே கோலத்தில் வருகிறான் வேடன். இறைவனைக் கண்டதும் அதிர்ந்து போகிறான்.

இறைவனின் வலது கண்ணிலிருந்து ரத்தம் அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது. "ஐயோ! நான் என்ன செய்வேன்?'

ஓடோடிச்சென்று சிவலிங்கத் திருமேனியைக் கட்டிக்கொண்டு கதறி அழுகிறான் திண்ணன். பின்னர் பச்சிலைகளைக் கொண்டு வந்து இறைவனுடைய கண்ணில் பிழிகிறான்.

 ஆனால் ரத்தம் நின்றபாடில்லை. "ஊனுக்கு ஊன், கண்ணுக்கு கண்' என்று சொல்கிறது அவன் மனம். உடனே கூரிய அம்பினால் வலது கண்ணில் குத்தி கண்ணைப் பிடுங்கி எடுத்து குருதி வடியும் இறைவனின் கண்ணில் அப்புகிறான்.

என்ன ஆச்சரியம்!

 இறைவனுடைய கண்ணில் ரத்தப்பெருக்கு நிற்கிறது. ஆனந்தக் கூத்தாடுகிறான் திண்ணன்.

சில நொடிப்பொழுதில் அவனது மகிழ்ச்சி மறைந்தது. இப்போது இறைவனின் இடது கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது.

திண்ணன் தயங்கவில்லை. "இன்னொரு கண்ணையும் கொடுப்பேன்' என்று தனது இடது கண்ணை எடுத்துவிட எண்ணினான். "அப்படியானால் இறைவனின் இடது கண்ணை எப்படி அடையாளம் காண்பது?' என தனது செருப்புடன் கூடிய காலை இறைவனின் இடது கண்ணில் மேல் வைத்தபடி தனது கண்ணைப் பிடுங்க முனைந்தபோது, "கண்ணப்பா, நில்!'' என்றபடி அவனது கரத்தைப் பிடித்து தடுத்து திருக்காட்சி அளித்து அழைத்துச் செல்கிறார் இறைவன்.

மெய்சிலிர்த்துப் போகிறான் திண்ணன். இறைவனின் அற்புதமான லீலையை மறைந்திருந்து பார்த்த சிவகோசாரியர் கண்ணீர் மல்க இறைவனையும் கண்ணப்பனையும் துதிபாடி மகிழ்கின்றார்.

இந்த கதையை நினைவு கூர்கிறார் ஆதிசங்கரர். கண்ணப்பன் ஒரு கண்ணை இறைவனுக்கும் கொடுத்துவிட்டு மறுகண்ணும் கொடுக்கத் தயாராகும் பொழுது, இறைவனே அவன் செயலைத் தடுத்து, "நில்லு கண்ணப்ப' என்று கூறி அருள்புரிந்தார்.

பக்தியில் கண்ணப்பனுக்கு நிகர் யாரும் இல்லை. அவனே பக்தர்களில் முதன்மையானவன் என்கிறார் சங்கரர்.

 ஆதிசங்கரர், கண்ணப்பனின் இறைபக்தியை தமது சிவானந்த லஹரியில் 63 ஆவது சுலோகமாக பதிவு செய்கிறார். அந்த சுலோகம்:

"மார்க்காவர்த்தித பாதுகா பசுபதே
ரங்கஸ்ய கூர்ச் சாயதே
கண்டூஷாம்பு நிஷேசனம் புர ரிபோர்
திவ்யாபி ஷேகாயதே!
கிஞ்சித்பக்ஷித மாம்ஸ சேஷ கபலம்
நவ் யோபஹா ராயதே
பக்தி: கிந் நகரோத்ய ஹோ
வநசரோ பக்தாவதம் ஸôயதே''
அஷயம்_என்றால்
வளர்தல்_என்று_பொருள்

எதை வழங்குகிறோமோ அதுதான் வளருமே தவிர எதை வாங்குகிறோமோ அது வளராது.

ஓருவருக்கு வழங்குவதற்காக வாங்கலாம். எதை பிறருக்கு கொடுக்கிறோமோ அது வளரும்.
தண்ணீர் பஞ்சம் வராமலிருக்க இன்று பிறருக்கு குடிநீர் வழங்கலாம்.

வஸ்திரம் அன்னம் அதுவும் தயிர்சாதம் தங்கம் வெள்ளி இதுபோல் எதை பிறருக்கு கொடுத்தாலும் அது வளரும்.
தானம் செய்ய செய்ய தான் தனம் வரும்.

தானம் என்கிற சொல்லிலேயே தனம் இருக்கிறது பாருங்கள்.

இது ஓரு புண்யகாலம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களுடைய ஆசீர்வாதம் அனுக்ரஹம் நமக்கு அனைத்தையும் அஷயமாக அள்ளித்தரும்.

இதில் துளிகூட சந்தேகமில்லை.


கோவில் மணி ஓசையும், அதன் பின்னணி அறிவியலும் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. சில கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அது அல்ல உண்மை. பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பதை கடந்து, இதன் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது.
ஆகம சாஸ்திரங்களின் படி கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஒழி எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது. இது, உங்களுள் நல்ல ஆற்றல் பெருக செய்கிறது.
கோவில் மணி ஒலியின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமும் இருக்கிறது. ஆம், கோவில் மணி மனிதனின் மூளை செயற்திறன் மேலோங்க செய்யும் ஒரு அறிவியல் பின்னணி இருக்கிறது.
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கிறது. கோவில் மணிகள் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களால் ஆனவை ஆகும். இதில் இருந்து வெளிவரும் ஒலி மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றன.
கோவில் மணியை அடித்தவுடன், அதிலிருந்து ஒரு கூர்மையான சப்தம் உற்பத்தியாகிறது, இந்த எதிரொலி குறைந்தபட்சம் 10 - 15 நொடி வரை நீடிக்கும். இந்த எதிரொலியின் காலம், உங்கள் உடலில் உள்ள ஏழு குணப்படுத்தும் மைய்ய புள்ளிகளை செயல்பட வைக்க போதுமானதாக இருக்கிறது.
மேலும், இந்த ஒலி உங்களுள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றியும், உங்கள் கவன குவியல் சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
கோவில் மணி ஒலி, கவன குவியலை மேம்படுத்தி உங்களை விழிப்புடன் இருக்க செய்கிறது. மேலும், மூளையின் செயற்திறனை இதன் மூலம் அதிகரித்து, உங்கள் வேலையில் நேர்மறையாக செயல்பட செய்கிறது. இதன் மூலம் மனம் அமைதி அடையும், நிம்மதி பெறும்.