வெள்ளி, 25 அக்டோபர், 2019

சிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா?

பஞ்சபூதங்களாக விளங்குபவன் இறைவன். அதில் ஆகாய ரூபமாக திகழ்கிற தலம் தான் சிதம்பரம். இங்கே உருவம், அருவம், அருவுருவம்  என்று மூன்று நிலைகளில் சிவப்பரம்பொருள் காட்சி கொடுப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. அதாவது ஆனந்தத் தாண்டவக் கோலத்தில், ஆனந்த நடராஜராகவும், சிவகாமி அம்மையாகவும் காட்சி தருவது உருவநிலை. சிவலிங்க ரூபத்தில் திருமூலராகவும், ஸ்ரீசக்ரமாக உமையபார்வதியும் காட்சி தருவது அருவுருவ நிலை. அடுத்து அருவமாக தரிசனம் தருவது தான் சிதம்பர ரகசிய ஸ்தானம். பொற்சபையில் ஆடல்வல்லாரின் வலப்பக்க சுவற்றில் சக்கரம் இருக்கும் இடம் தான் இது. இதை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறலாம். சுதர்சன சக்கரத்தில் செல்வம் கொழிக்கும் தலமாக திருப்பதி விளங்குவது போல் அன்னாகர்ஷண சக்கரத்தால் அன்னத்தில் செழிக்கிறது சிதம்பரம். அந்தக் காலத்தில் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று போற்றப்பட்ட தலம் இது.

நான்கு வேதங்களோட விழுப்பொருள், அண்ட சராசரங்களோட முழுமுதற்பொருள் ஆகியவற்றைக் குறிக்கிறது தான் அருவ நிலை. அதனால் தான் இந்தத் தலத்துக்கு சிதம்பரம் என்ற பெயர் அமைந்தது. (சித்-அறிவு; அம்பரம்-வெட்டவெளி) அதனால் தான் பரந்து விரிந்த ஆகாய தலமாகப் போற்றப்படுகிறது. இங்கே நம் கண்ணுக்குப் புலப்படும் நிலையில் தங்க வில்வ மாலைகள் சார்த்தப்பட்டிருக்கும். சர்வம் சிவமயமாகத் திகழும் இறைவனை, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனை, கருவறைச் சன்னதியின் திரையை விலக்கியதும், தங்க வில்வ மாலையை தரிசிக்கலாம். உலகப் பற்று, அறியாமை ஆகியவற்றுடன் வாழ்கிறவன், அவற்றிலிருந்து விலகி மெய்ப்பொருளை உணரும் நிலையைப் பெற, மூடிய திரையினுள்ளே இருக்கிற சிவப்பரம்பொருள் அருள்பாலிப்பதாக ஐதீகம்! இதனை ஆழ்ந்த பக்தியால் உணரமுடியுமே தவிர, எவருக்கும் உணர்த்த முடியாது. இங்கே தினமும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் உண்டு. இந்த பூஜையில் கலந்து கொண்டால் உடலுக்கும், மனதுக்கும் புது சக்தியையும், முக்தியையும் கொடுக்கும். சிதம்பரத்தில் இந்த அருவ நிலைதான் மூலஸ்தானம். அதுதான் ரகசிய ஸ்தானமும். திரையை விலக்கியதும், நம் அறியாமை என்கிற இருளை விலக்கி அருள்கிறார் இறைவன்; அஞ்ஞானத்தில் இருக்கிற நமக்கு மெய்ஞ்ஞானத்தை உணர்த்துகிறார். உலகத்தால் அனைவருமே, ஒரு திரையைப் போட்டபடியே பேசுகிறோம், பழகுகிறோம், வாழ்கிறோம். சகஉயிர்களைப் பார்ப்பதையும் இறைவனை அடைவதையும் உணர்த்துவதே சிதம்பர ரகசியத்தின் நோக்கம்.
நாராயணபட்டத்ரி பகுதி-2

பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை.அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது.பட்டத்ரிக்கோ வாத ரோகம் இருந்ததால் தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு ஏ கண்ணா!கிருஷ்ணா!பரந்தாமா!என்று கதறுகிறார்.உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால்  எப்படி நாராயணியம் எழுத முடியும்.அதனால் நீ எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத்  தா என்று அழுது கண்ணீர் மல்குகிறார்.அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை.வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம் நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்.என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய்.உன்னைப் பார்க்க அனுகிரகம் செய்.நான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன்.இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது.என் காதால் மட்டுமே உன் புகழைக் கேட்டிருக்கிறேன் உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல் உன் மேனி அழகைக் காணாமல் நீ சூடி இருக்கும் ஆடை,ஆபரணங்களைக் காணாமல் உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல் கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி உன் பெருமையைப் பாட முடியும்?உன் புராணமாகிய நாராயணியம் எழுத முடியும்?அதனால் நீ தரிசனத்தைத் தா என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்கிறார்.

அப்போதுதான் குருவாயூரப்பன் முதன் முதலில் பட்டத்ரியிடம் பேச ஆரம்பிக்கிறார்.எண்ணால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது.என்று நீ வந்த காரியம் முடிவடைகிறதோ அன்றுதான் உன் வியாதி நீங்கும் என்று கூறுகிறார்.அப்பொழுது பட்டத்ரி எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்?இதைக் கேட்ட குருவாயூரப்பன் கருணையோடு சொல்லலானார்.பட்டத்ரி நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு கழுத்தை சாய்த்துதான்  என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.எனக்குக் கழுத்தின் இரு பக்கமும் நன்றாகத்தான் இருக்கிறது.அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்.நான் என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன்.என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் ஆரம்பித்துக் கொள் என்று கூறி அனுகிரகம் செய்கிறார். இப்பொழுதும் நாராயண பட்டத்ரி மண்டபத்தில் உட்கார்ந்து பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான்.ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.

1970-களில் குருவாயூரில் அவ்வளவு கூட்டம் கிடையாது.நாராயணியம் ஸ்ரீமத் பாகவதம் படிக்கத் தெரிந்தவர்கள் அந்தத் திண்ணையில் அமர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.இப்பொழுது கூட்டம் அதிகமாகிவிட்டதால் அங்கு யாரையும் அமர அனுமதிப்பதில்லை.அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப்  பட்டயம் வைத்து நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம் என்று எழுதி வைத்திருக்கின்றனர்.சாட்சாத் அந்த குருவாயூரப்பனே பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன் இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம்.ஆனால் இன்று முதல் இந்த இடம் மட்டும் உனக்கு சொந்தம்.இது இனிமேல் பட்டத்ரி மண்டபம் என்று அழைக்கப்படும் என்று கூறினார்.

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு.என்ன வென்றால் இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது.இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாக்ஷணை போல் அமைந்திருக்கிறது.நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா?என்று பட்டத்ரி கேட்க,ம்.எழுது.நான் கேட்க ஆவலாக  இருக்கிறேன் என்று குருவாயூரப்பன் கூறுகிறான்.அப்போது பட்டத்ரி நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன.அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும்.இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன் என்கிறார்.(இங்கே குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் இதுபோல் பகவானும் பக்தனும் சம்பாக்ஷணை செய்த நிகழ்வுகள் நம் நாட்டில் நிறைய உள்ளன)

திருப்பதியில் குலசேகர ஆழ்வாரும் ஸ்ரீநிவாசப் பெருமாளும் பேசுவர். ஸ்ரீரங்கத்தில் இரவில் நடக்கும் அரையர் சேவையில் நாட்டியம் ஆடிக் கொண்டே  ரங்கநாதருடன் பேசுவர்.சிதம்பரத்தில் அப்பய்ய தீக்ஷிதரும் நடராஜரும் பேசுவர்.மதுரையில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் மீனாக்ஷியடன் பேசுவார் இன்னும் இப்படிப்பட்ட அற்புத மகோன்னத நிகழ்வுகளைச் சொல்ல வேண்டுமானால்,காஞ்சியில் வரதராஜ பெருமாளும், திருக்கச்சி நம்பிகளும்,கந்தவேள் முருகனும்,கச்சியப்ப சிவாச்சார்யாரும்,திருக்கடையூரில் அம்பாளும்,அபிராமி பட்டரும், பிள்ளையாரும்,முருகனும்,அவ்வையாரும்,காளியும்,கவி காளிதாசனும்,திருத்தணி முருகனும்,முத்துசுவாமி தீட்சிதரும், காளியும்,ஸ்ரீஇராம கிருஷ்ண பரமஹம்சரும்,மூல ராமரும், ஸ்ரீஇராகவேந்திரரும்

இன்னும்... இன்னும்...என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படிபரம பக்தர்களும் பரமனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட புண்ய பூமி இந்த பாரதம்.இந்த அற்புதத்திற்கெல்லாம் அற்புதமாக நிகழ்ந்ததுதான் நம் பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசிக் கொண்டது. ஏனென்றால் மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள்.ஆனால் இங்கு குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக,தந்தையாக,குழந்தையாக பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார்.
நாராயணபட்டத்ரி பகுதி-1

நாம் குருவாயூரப்பனை தரிசனம் செய்ய பக்தியுடன் செல்லும்போது இடது பக்கம் உள்ள திண்ணையில் ஒரு செப்புப் பட்டயம் இருக்கிறது. அதில் மலையாளத்திலும்,தமிழிலும் நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம் என்று எழுதப்பட்டுள்ளது.அந்த இடத்தில் தான் பட்டத்ரி நூறு நாட்கள் அமர்ந்து நாராயணிய நாயகனான குருவாயூரப்பனின் பெருமையை ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமான நாராயணியம் என்பதாக எழுதினார்.உடனே நம் மனது குருவாயூரப்பனில் இருந்து அந்த பட்டத்ரி மண்டபத்தை நோக்கி நகர்கிறது.நம் மனதில் பல கேள்விகள் எழுப்புகின்றன...பட்டத்ரி யார்?எதற்காக இதனை எழுதினார்?நாராயண பட்டத்ரி 1560 ஆம் ஆண்டு பாரதப் புழா ஆற்றின் வடகரையில் திருநாவா என்ற விஷ்ணு க்ஷத்திரத்திற்கு சமீபத்தில் மேல்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது தகப்பனார் மாத்ருதத்தர் இவருக்கு சிறு வயதில் கல்வி கற்றுக் கொடுத்தார் பிறகு இவர் ரிக் வேதத்தை மாதவாச்சாரியார் என்பவரிடமும் தர்க்க சாஸ்திரத்தை தாமோதராச்சாரியாரிடமும் கற்றுத் தேர்ந்தார்.இவர் வ்யாகரணம் என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருத இலக்கணத்தை அச்யுதபிஷாரடி என்பவரிடம் பயின்றார்.

இவர் தன் இளமையிலேயே கல்வியைக் கசடற கற்று முடித்தார். ஒரு நாள் இவரது குருவான அச்யுதபிஷாரடி இவரை அழைத்து இன்றோடு உன் குருகுல வாசம் முடிகிறது.உனக்கு சமஸ்கிருதத்தில் எல்லாம் கற்றுக் கொடுத்து விட்டேன்.இனி நீ உன் இல்லத்திற்குச் சென்று திருமணம் செய்து கொண்டு கிரகஸ்தாஸரமத்தை ஏற்றுக் கொள். தேவர்களுக்குப் பண்ண வேண்டிய யாகங்கள்,ஹோமங்கள் எல்லாம் செய் என்று கூறி ஆசிர்வதித்தார்.இதைக் கேட்ட பட்டத்ரி அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து.குருவே இத்தனை காலமும் சமஸ்கிருதத்திலேயே மிகவும் கடினமான வ்யாகரணத்தை நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்.உங்களுக்கு நான் குருதக்ஷணையாக என்ன தரட்டும்?என்று பணிந்து கேட்டார்.

அப்பொழுது அச்யுதபிஷாரடி எனக்கு எந்த குருதக்ஷணையும் வேண்டாம். குருவுக்கு யாரும் தக்ஷணை கொடுக்க முடியாது.ஒரு குருவுக்கு அவர் சீடன் கொடுக்கும் சிறந்த தக்ஷணை அவன் கற்ற பாடத்தை மற்றவருக்கும் குற்றம் இல்லாமல் கற்றுக் கொடுப்பதுதான்.அப்படியும் நீ குருதக்ஷணை கொடுக்க நினைத்தால் நீ கற்ற சமஸ்கிருதத்தை தக்ஷணை வாங்காமல் எல்லோருக்கும் கற்றுக் கொடு அதுவே எனக்குப் போதும் என்று கூறினார்.

பட்டத்ரி குருவிடம் குருவே நீங்கள் சொன்னது போலவே நான் செய்கிறேன்.ஆயினும் நான் தங்களுக்கு ஏதாவது குரு தக்ஷணை தர விரும்புகிறேன் என்று கேட்டார்.இதைக் கேட்ட குரு உன்னால் எனக்கு என்ன தர முடியும் என்று சொல் அதை வாங்கிக் கொள்ள முடியுமா முடியாதா என்று நான் சொல்லுகிறேன் என்று கூறினார்.பட்டத்ரியின் விடாப்பிடியான வேண்டுகோளுக்கு ஒரு காரணம் இருந்தது.அவரது குருவான அச்யுதபிஷாரடிக்கு வாதரோகம் இருந்தது.அவரால் தன் கை கால்களை நகர்த்தக் கூட முடியாது.அப்படிப்பட்ட நிலையிலும் அவர் தன் சீடர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார்.தினமும் அவரை 15 20 சீடர்கள் குளிப்பாட்டி அவரைக் கொண்டு வந்து ஒரு நாற்காலியில் உட்கார வைப்பார்கள்.அந்த நிலையிலேயே அவர் தன் சீடர்களுக்குப் பாடம் நடத்துவார்.இதனை தினமும் கண்ணுற்ற பட்டத்ரிக்கு இவரது நோயை நாம் ஏன் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது.இவர் குருகுலம் சேர்ந்த முதல் நாளிலிருந்தே நம் குரு இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்குப் பாடம் நடத்துகிறாரே!நாம் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது.இப்பொழுது அதைக் கேட்டே விட்டார்.

குருவே நீங்கள் உங்கள் வாத நோயை எனக்கு ஆவாகனம் செய்து கொடுங்கள் வாத ரோக நிவர்த்தி என்ற குருதக்ஷணையை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன்.அந்த சந்தோஷத்துடன் நான் இந்த குருகுலத்தை விட்டுச் செல்வேன்.உங்களால் அந்த மாதிரி தத்தம் செய்ய முடியும்.ஏனென்றால் நீங்கள் சித்த புருஷர்.நீங்கள் உங்கள் கர்மபலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.அதனால் உங்கள் கைகளில் ஜலத்தை எடுத்து ஆவாகனம் செய்து எனக்கு தத்தம் செய்து கொடுத்தால் உங்கள் வாத நோய் சரியாகி விடும்.அது உங்களால் முடியும் என்று கூறினார்.இதைக் கேட்ட குரு சிரித்துக் கொண்டு சொல்லலானார் ஒரு குருவானவன் தன் சிஷ்யனுக்கு ஆத்ம ஞானத்தையும் கல்வி கேள்விகளையும் சாஸ்திரங்களையும்,சகல வித்தைகளையும் கடவுள் பக்தியையும் புராணங்களையும் போதிக்க வேண்டுமே தவிர நீ கேட்டாய் என்பதற்காக நான் என் நேர்யைத் தரக் கூடாது. அவ்வாறு நான் செய்தால் இந்த ஊர் மக்கள் என்னை பழிப்பார்கள்.

குருவானவர் தன் சீடனை சொந்த மகனாக பாவிக்க வேண்டும்.எந்த தந்தையாவது தன் குழந்தைக்கு ரோகத்தைத் தருவாரா?என்னுடைய கர்ம பலனால் வந்த இந்த ரோகம் என்னுடனே போகட்டும்.இதை வாங்கிக் கொண்டு நீ அவஸ்தைப் பட வேண்டாம்.அது மட்டுமில்லை. நான் உனக்கு என் ரோகத்தைக் கொடுத்தால் இந்த ஊர் மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?இந்த ஊரில் எனக்கு உள்ள நல்ல பெயர் உன்னால் கெட்டு விடும்.அவர்கள் என்னைப் பார்த்து ஏளனமாகப் பேசுவார்கள்.அதனால் நீ இங்கிருந்து புறப்படு என்றார்.ஆனால் பட்டத்ரி அதெல்லாம் இல்லை.நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று அவரை வற்புறுத்தினார்.அதற்கு குரு நீ வியாதியால் கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.நீ என்னை விடச் சிறியவன்.உன் ஆச்சார்ய பக்தியைக் கண்டு என் மனம் மகிழ்கிறது. உன்னைப் போல் ஒரு சிஷ்யன் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன்.இருந்தாலும் இது தர்மம் கிடையாது.ஆகையால் நீ கிளம்பு என்று கூறுகிறார்.

அதற்கு பட்டத்ரி குருவே எனக்கும் உங்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.நான் உங்களை விட வயதில் சிறியவன்.அதனால் இந்த ரோகத்தைத் தாங்கும் சக்தி உங்களை விட எனக்கு அதிகம் இருக்கும். அது மட்டுமில்லை நீங்கள் இந்த வியாதியை எனக்குக் கொடுத்தாலும் கூட நான் இதனால் கஷ்டப்பட மாட்டேன் ஏனென்றால் நீங்கள் ஆச்சார ஸ்ரேஷ்டராக இருக்கிறீர்கள்.நீங்கள் வைத்தியரிடம் செல்வது கிடையாது.இதற்கு எந்த மருந்து மாத்திரையும் எடுத்துக் கொள்வது கிடையாது.ஆனால் நான் அப்படி இல்லை.நான் கேரள மாநிலத்தில் உள்ள சிறந்த வைத்தியரிடம் காட்டி என் நோயை குணப்படுத்திக் கொள்வேன்.அதனால் உங்கள் நோய் என்னிடம் வெகு நாட்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.நான் இன்னும் ஒரு வாரத்தில் நன்கு குணமாகி உங்களை வந்து நமஸ்கரிப்பேன்.அதற்கு எனக்கு ஆசிர்வதியுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறார்.

பட்டத்ரியின் பிடிவாதமான வார்த்தைகளைக் கேட்ட அச்யுதபிஷாரடி தன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்தார் தன்னுடைய ஆத்ம பலத்தால் வருங்காலத்தை நினைத்துப் பார்த்தார்.சிருஷ்டியின் சூட்சுமம் புரிந்துவிட்டது அவருக்கு.இவையெல்லாம் அந்த இறைவனின் திருவிளையாடலே.... இவனின் பிடிவாதத்திற்குக் காரணம் அந்த குருவாயூரப்பனே.இவன் தன் வாயால் நாராயணியம் கேட்க வேண்டும் என்று அந்த கிருஷ்ணன் முடிவு செய்து விட்டான் என்று அவர் நினைக்கையில் அவர் மனக்கண் முன் கிருஷ்ணன் வந்தான். தலையில் மயில் பீலி அணிந்து பட்டுப் பீதாம்பரம் உடுத்தி புல்லாங்குழலுடன் நின்று புன்முறுவல் புரிந்தான்.தான் கண்ட காட்சியைக் கண்டு அச்யுத பிஷாரடி மெய் சிலிர்த்துப் போனார்.பக்தியின் ஆழத்தை நினைத்து வியந்து போனார்.தன் பக்தனுக்காக அந்த மாயக் கண்ணன் என்ன லீலை வேண்டுமானாலும் செய்வான் என்று நினைத்தார்.அதனால் இதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது.இது தெய்வ சங்கல்பம் என்று புரிந்து கொண்டார்.எனவே தன் கையில் ஜலத்தை எடுத்து அவருக்கு தன் ரோகத்தை தத்தம் செய்து கொடுத்து விட்டார்.

அடுத்த நிமிஷம் குரு எப்படி இருந்தாரோ அப்படி பட்டத்ரியும் பட்டத்ரி எப்படி இருந்தாரோ அப்படி குருவும் ஆகி விட்டனர்.உடனே குரு தன் மற்ற சீடர்களிடம் இவனைக் கொண்டு போய் இவனது வீட்டில் சொல்லி விட்டுவிட்டு வாருங்கள்.ஏனென்றால் படிக்கச் சென்ற குழந்தை ரோகத்துடன் வந்தால் அந்த பெற்றோர் மனம் எவ்வளவு பாடுபடும்?குரு எவ்வளவு சொல்லியும் கேளாமல் குருவே நிர்பந்தப்படுத்தி அவரின் ரோகத்தை இவன்தான் வாங்கிக் கொண்டு விட்டான் என்று கூறுங்கள். அவர்கள் என்னை தப்பாக நினைக்கக் கூடாது என்றார்.பட்டத்ரியை ஒரு பல்லக்கில் வைத்து தூக்கிக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டனர் சிஷ்யர்கள்.வீட்டுக்கு வந்த பட்டத்ரியைப் பார்த்த குடும்பத்தினருக்கு குரு மீது மிகுந்த கோபம்.இவன்தான் கேட்டான் என்றால் அந்த குரு எப்படி ரோகத்தைத் தன் சீடனுக்குக் கொடுக்கலாம்.மற்ற சீடர்களுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு ஏன்?படிக்கச் சென்ற பிள்ளை இப்படி ரோகத்துடன் வந்து விட்டானே!இவனை எப்படி குணமாக்குவது.எந்த வைத்தியரைப் பார்ப்பது என்று மனச் சஞ்சலம் அடைந்தனர்.

இவரை அழைத்துக் கொண்டு பிரபல வைத்தியர்களிடம் சென்றனர். ஆனால் எங்கு சென்றாலும் அவரது நோயின் வலிமை கூடியதே அன்றி ஒரு துளியும் குறையவில்லை.அவர் சாப்பிட்ட மருந்து,மாத்திரைகள், சூர்ணத்தினால் எல்லாம் எந்த ஒரு பலனும் இல்லை.மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள வியாதியின் வலி குறையும் ஆனால் இவருக்கு நாளுக்கு நாள் வலி கூடியது.கை,கால்களை துளிக் கூட அசைக்க முடியவில்லை.வைத்தியத்தினால் அவர் உடலில் ஒரு முன்னேற்றமும் இல்லை.அவர் குருவிடம் இருந்து எப்படி அந்த ரோகத்தை வாங்கினாரோ அப்படியே இருந்தது.எல்லா வைத்தியர்களிடமும் காட்டி விட்டு இனி செல்ல கேரளாவில் வைத்தியரே இல்லை என்ற நிலைமைக்கு வந்தாகிவிட்டது.ஆனாலும் அவர் ரோகம் குணமாகவில்லை...

கேரளாவிலுள்ள எல்லா வைத்தியர்களிடமும் சென்று அவர்கள் சொன்னபடி எல்லா வைத்தியம் செய்தும் எல்லா மருந்துகளும் எடுத்துக் கொண்டும் பட்டத்ரிக்கு ரோகம் குணமாகவில்லை.இப்பொழுது பட்டத்ரி சிந்திக்க ஆரம்பித்தார்.நாம் நல்ல சிந்தனையோடுதானே நம் குருவிடம் இருந்து இந்த வியாதியை வாங்கிக் கொண்டோம்.ஆனாலும் ஏன் குணமாகவில்லை?அதற்கு ஒரே காரணம் நாம் குருவிடம் கர்வமாகப் பேசி விட்டோம்.வியாதி போகாததற்கு உங்கள் ஆசாரம் தான் காரணம்.ஆனால் எனக்கு அப்படி இல்லை.வைத்தியரிடம் சென்றால் தீர்ந்து விடும்.ஒரு வாரத்தில் வந்து உங்களை நமஸ்கரிக்கின்றேன் என்று கூறி விட்டேன்.பகவானிடம் கூட கர்வமாகப் பேசலாம்.ஆனால் குருவிடம் கர்வமாகப் பேசக் கூடாது.நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது.நான் மாபெரும் அபச்சாரம் அல்லவா செய்திருக்கிறேன்? அதனால்தான் என்ரோகம் இன்னும் தீரவில்லை.ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பவர்களில் குருவே முதலிடம் பெறுகிறார்.குரு சொன்னதைக் கேட்காத சீடர்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்கள்.மகாபலி சக்கரவர்த்தி யாகம் செய்தபோது அவரது குரு சுக்ராச்சாரியார் எவ்வளவு சொல்லியும் கேளாமல் வாமனனுக்கு மூன்றடி நிலத்தை தத்தம் செய்து கொடுத்தான் மகாபலி.விளைவு?அவன் தன் குடும்பத்துடன் அதள பாதாளத்திற்குச் சென்றான்...

இப்படியாகத் தான் தன் குருவை அபசாரமாகப் பேசியதற்காக பட்டத்ரி மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டார்.இனி நாம் என்ன செய்வது?இந்த நோயை எப்படிப் போக்குவது?என்று தன் மனதினுள் சிந்தித்துக் கொண்டிருந்தார்.எப்பொழுதுமே வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுபவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது தான் தன் ஜாதகத்தை நினைப்பார்கள்.எந்த ஜோசியரிடம் போவது என்ன பரிகாரம் செய்வது என்று சிந்திக்கத் தொடங்குவார்கள். அதுபோலத்தான் இவரும் நினைத்தார்.எந்த ஜோதிடரிடமாவது தன் ஜாதகத்தைக் காட்டி ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்கலாம் என்று நினைத்தார்.அப்போது அவர்கள் ஊரில் எழுத்தச்சன் என்று ஒரு பிரபல ஜோசியர் இருந்தார்.அவர் யார் வீட்டுக்கும் போய் ஜோதிடம் பார்க்க மாட்டார்.அவர் வீட்டிற்கு நாம் சென்றால் மட்டுமே ஜோதிடம் பார்ப்பார். அவர் அஷ்ட மங்கல ப்ரஸனம் என்று எட்டு விதமான மங்கலப் பொருட்களை வைத்துக் கொண்டு சோழி உருட்டி அவர்கள் வந்த நேரத்தையும் கணக்கில் வைத்து அவர்கள் கஷ்டத்தையும் மனதில் நினைத்து அது தீர ஜோதிடம் பார்த்துச் சொல்வார்.பட்டத்திரியும் நோயின் காரணமாக அவர் வீட்டுக்குச் செல்ல முடியாது.அவரும் வர மாட்டார்.என்ன செய்வது என்று யோசித்தார்.

அவர் தம் குடும்பத்தினரிடம் தன்னை அழைத்துக் கொண்டு செல்லும்படி கேட்டதற்கு வைத்தியருக்கு செலவு செய்ததே போதும்.இன்னும் ஜோதிடருக்கு வேறு செலவா?நீங்கள் இப்படியே இருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டனர்.ஆனால் நாளுக்கு நாள் அவரது ரோகத்தின் வீரியம் அதிகரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன்.சிறு வயது முதலே அந்த வீட்டில் வேலை செய்வதாலும் பரம்பரை பரம்பரையாக அவர்களைத் தெரியும் என்பதாலும் அவனுக்கு பட்டத்ரி மீது மிகுந்த பாசம் உண்டு. பட்டத்ரி அவன் மனம் நம் எஜமானர் இப்படி கஷ்டப்படுகிறாரே! அவருக்காக நாம் சென்று அவரது ஜாதகத்தைக் காட்டி பார்த்துக் கொண்டு வரலாம்.என்று நினைத்தான்.அதை மெதுவாக அவரிடமும் கூறினான். ஐயா நான் வேண்டுமானால் உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜோசியர்கிட்ட காட்டி கேட்டுக் கொண்டு வருகிறேன் என்றான். இதைக் கேட்ட பட்டத்ரி மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டு என் குடும்பத்தாரும் உறவினர்களும் கூட முடியாது என்று சொல்லி விட்டபோது நீ எனக்காக செல்கிறேன் என்று சொல்கிறாயே!எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது என்று கூறி தன் ஜாதகத்தை அவனிடம் கொடுத்து அனுப்பினார்.

அவன் சென்று அந்த ஜோதிடரின் காலில் விழுந்து நமஸ்கரித்து பட்டத்ரியைப் பற்றி முழுமையாகக் கூறி அவருடைய ஜாதகத்தைக் காட்டி இது என் எஜமானரின் ஜாதகம்.அவர் வாத நோயால் வாடுகிறார். அவரால் வர இயலாது.அவர் குடும்பத்தாரும் வர மறுக்கின்றனர். அதனால்தான் நான் வந்தேன்.இவர் நோய் தீருமா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று கேட்டான்.அவனுடைய எஜமான விஸ்வாசத்தைப் பார்த்த ஜோதிடர்.உனக்காக நான் பார்த்துச் சொல்கிறேன் என்று கூறி பட்டத்ரியின் ஜாதகத்தைப் பார்த்தவர் பிரமித்துப் போனார்.பின் அவர் சோழியைப் போட்டுப் பார்த்து அஷ்ட மங்கல ப்ரஸனம் பார்த்து.அவன் வந்த நேரத்தையும் பார்த்து அவனது உள்ளக் கிடக்கையும் அறிந்து சொல்லலானார்.எஜமானனுக்குக் கண்டிப்பாக இந்த வியாதி நீங்கும். இதற்குப் பரிகாரம் இருக்கிறது.ஆனால் ஏழு எட்டு கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டாம்.ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றார்.உடனே அந்த வேலைக்காரன் ஆவலோடு அப்படியா?என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா நான் உடனே செய்கிறேன் என்றார்.

அதற்கு எழுத்தச்சர் இந்த பரிகாரத்தை நீ செய்ய வேண்டாம் உன் எஜமானார் தான் செய்ய வேண்டும். திருச்சூர் அருகில் குருவாயூர் என்றொரு பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது.கிருஷ்ணன் பிரத்யக்ஷ பேசும் தெய்வமாக விளங்குகின்ற க்ஷத்ரம்.குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்த தெய்வம் பெரும் அதிசயங்கள் நிகழ்ந்த க்ஷத்ரம். கிருஷ்ணரே ஸ்நானம் செய்த புண்ணியக் குளமான நாராயண சரஸ் உள்ள ÷க்ஷத்ரம்.அப்பேர்ப்பட்ட குருவாயூருக்கு இவரை நேரே அழைத்துச் செல்.அங்கு கோயிலுக்கு அருகில் உள்ள நாராயண சரஸ் என்னும் தீர்த்தத்தில் நீராட வைத்து பின் புது வஸ்திரம் அணிவித்து கொடிக்கம்பமாகிய ஜ்வஜஸ்தம்பம் தாண்டி உள்ளே நுழையும் இடத்தில் பகவானுக்கு வலது பக்கம் நமக்கு இடது பக்கம் உள்ள திண்ணையில் அவரை உட்கார வைத்து மத்ஸ்யம் தொட்டுப் பாட சொல் என்று கூறினார்.

இதைக் கேட்ட அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து விட்டான்.அவனைக் கண்ட பட்டத்ரி என்னப்பா ஆயிற்று?எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று சொன்னாரா?என்று மிகவும் ஆவலுடன் கேட்டார்.அதற்கு அவன் ஐயா அவர் உங்களுக்கு வியாதி குணமாகும்.கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது என்று கூறினார்.அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார்.ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது என்றான்.அதற்கு பட்டத்ரி அப்படி என்ன சொல்லி விட்டார்? என்று ஆர்வமாகக் கேட்க அவன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி புனிதமான க்ஷத்ரமான குருவாயூரில் தங்களை மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடச் சொல்கிறார்.அந்தக் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம் என்ற சுத்தி செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள்.

அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில் உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார்.அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம்.நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்.இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன்.நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ என்று வருத்தப்படுகிறேன் என்றான்.ஜோசியர் கூறியதன் உட்பொருளைப் புரிந்து கொண்டார் பட்டத்ரி.அவர் மிகவும் சந்தோஷப்பட்டுக் கூறலானார்.நாம் இன்றே குருவாயூர் செல்ல வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார்.இதைக்கேட்ட வேலைக்காரன் நான் கூட வர முடியாது.குருவாயூர் போன்ற புண்ணிய க்ஷத்ரத்தை நீங்கள் அசுத்தம் செய்வதை நான் விரும்பவில்லை.நீங்கள் உங்கள் வியாதி குணமாக வேண்டும் என்பதற்காக இதைச் செய்யலாம். ஆனால் இதற்கு உடன்பட என்னால் முடியாது என்று மிகவும் கோபமாகக் கூறினான்.

அவனை சாந்தப்படுத்திய பட்டத்ரி அப்பா அதற்கு அர்த்தம் அதுவல்ல. மத்ஸ்யம் தொட்டுப் பாடணும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைத்துக் கொள்கிறாய்?பகவான் குருவாயூரப்பனின் அவதாரங்களில் முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம்.அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான்.மத்ஸ்யம் தொட்டு என்றால் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரம் முழுவதையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார்.அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவ தாரங்களைப் பற்றி குருவாயூரில் பாட வேண்டும்.அதனால் இப்பொழுதே என்னை குருவாயூருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.தன் வியாதிக்குப் பரிகாரம் கிடைத்த சந்தோஷம் அவருக்கு. அதுமட்டுமில்லாமல் தம் குரு தமக்குக் கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று நினைத்து அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன.

அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததும் அவர் மனம் ஆனந்தக் கூத்தாடியது.பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது.ஆனால் இவருடைய வியாதியால் ஏற்கெனவே நொந்து போயிருந்த உறவினர்கள் இது வேறா என்ற வெறுப்புடன் வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு குருவாயூர் சென்றனர்.பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. அந்த குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக அவர் மனம் ஏங்கியது. அவர் மனத்தில் இருந்த பயம் விலகியது.இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது.அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான்.நாளை காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம் என்று எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை அழைத்து வந்தவர்கள் அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர்.பகவானே ஸ்நானம் செய்த குளமா?இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று அவர் மனம் துடித்தது.புது வஸ்த்ரம் உடுத்தினர்.அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக(கண்ணுக்குத் தெரியாமல்)வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள், பாகவதோத்தமர்களான வியாஸர்,பிரகலாதன்,நாரதர்,குரு,வாயு, துருவன்,அம்பரீஷன்,அஷ்டதிக் பக்தர்கள் அனைவரும் அவனைத் தொழ வந்திருந்தனர்.அவர்களில் ஒருவராக இவரும் உள்ளே நுழைந்தார்.இவரைக் கண்ட தேவர்கள் இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே இவரும் உள்ளே நுழைந்தார்.அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார்.அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை.ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது.சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்?இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே?எத்தனை அழகு?எவ்வளவு தேஜஸ்?இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா?அதற்கு நான் தகுதி உடையவனா?அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா?அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா?இப்படி பட்டத்ரி தன் மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார்.அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு அவரது தேஜோமய திவ்ய ஸ்வரூபத்தை தியானித்து கண்ணா என பக்தியுடன் கதறினார்.அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன.குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 77 ॐ

{இது தான் சிதம்பர ரகசியம்}

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருளாமாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

இங்கு மாணிக்கவாசகர் ஆண்கள் தங்கள் காதுகளில் அணிந்திருக்கும் குழைகளும் பெண்களின் கூந்தலும் அந்தக் கூந்தலின் மணத்துக்காக நுகர வந்த வண்டினங்களும் அனைத்துமே இந்த மார்கழிச் சில்லென்ற மெல்லிய குளிரில் நீராடி திருச்சிற்றம்பல நாதனின் புகழை பாட வேண்டும் என்று சொல்லுகின்றார். அதுவும் எவ்வாறு சிற்றம்பல நாதனே வேதங்களுக்கெல்லாம் பொருளானவன் என்றும் அப்பொருளைப் பற்றிப் பாடவேண்டும் என்றும் அடிமுடி காணா சோதி வடிவாய் ஈசனின் பெருமைத் திறத்தைப் பாட வேண்டும் எனவும் அவன் சூடிக் கொள்ளும் கொன்றை மலரின் சிறப்பைப் பாடவேண்டும் எனவும் சொல்லுகின்றார். ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான இறைவனின் புகழைப் பாடுவதின் மூலம் நம்மைப் பந்த பாசங்களில் இருந்து பிரித்துத் தாய் போல் விளங்கும் ஈசனின் கங்கணங்கள் அணிந்த அந்த அபய ஹஸ்தங்களையும் எந்நேரமும் நடனமாடிக் கொண்டிருக்கும் நடனத் திறன் பற்றியுமே பேசவேண்டும் என்கின்றார் மாணிக்கவாசகர். ஈசனே முத்தமிழ் முத்தமிழே ஈசன் இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் இந்த மேற்கண்ட பாடலுக்கு உரை கூறிய பெண்மணி ஒரு முக்கியமான அதே சமயம் அதிசயமான விஷயத்தைக் கூறினார். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் இந்தப் பிரபஞ்சம் பற்றிய ஆய்வின் போது இதன் மையப் புள்ளி எங்கே இருக்கின்றது எனத் தேடிக் கொண்டே வந்தாராம். கடைசியில் இந்தியாவில் தான் அந்த மையப் புள்ளி இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து இந்தியாவுக்கு வந்தாராம். இந்தியாவிலும் தமிழ்நாட்டில் இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தவர் அது சிதம்பரத்தில் இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தாராம். சிதம்பரம் கோயிலுக்குள் ஈசன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் கோலத்தில் நின்று கொண்டிருக்கின்றார் அல்லவா?? அந்த ஊன்றிய காலின் கீழே தான் அந்த மையப் புள்ளி இருக்கின்றது என்றும் அது தான் உண்மையான சிதம்பர ரகசியம் எனவும் கூறினார் அந்தப் பெண்மணி. சிதம்பரத்தில் மூலவரும் ஒருவரே உற்சவரும் ஒருவரே. மூலஸ்தானத்தில் சதா ஓயாமல் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் ஈசனே உற்சவ காலங்களில் வெளியே வருகின்றார். அதற்குக் காரணமாய் அவர் கூறியதும் இந்த மையப் புள்ளி விஷயமே. மையப் புள்ளியில் நடனம் ஆடிக் கொண்டு ஒரு ஈசனும் உற்சவத்துக்கு எனத் தனியாக ஒரு திருமேனியும் இருக்க முடியாது என்பதாலேயே ஈசன் தன் ஜீவசக்தியோடு அங்கே உறைந்திருப்பதாயும் கூறினார். மேலும் தற்காலத்தில் இயல், இசை, நடனம் என்று நாம் சொல்லுவது போல் முன்காலத்தில் அமையவில்லை என்றும் சொன்னார். நமக்கு இசையும் நாடகம் என்னும் நடனமும் கஷ்டமாய் இருப்பதால் பின்னுக்குத் தள்ளி விட்டதாயும் ஆதியில் முதல் முதல் மனிதன் சைகைகள் மூலமும் உடல் மொழி மூலமுமே பேசிக் கொண்டிருந்தான் பின்னரே ஒவ்வொரு வார்த்தைகளும் வந்தன. அதை நீட்டி முழக்கி இசை உருவில் கொண்டு வந்தான் பின்னரே பேச்சு வந்தது என்றும் கூறினார். ஆனால் இப்போது பெரும்பாலும் பேச்சு மட்டுமே முதன்மை நிலையில் இருப்பதால் பேச்சுத் தமிழான இயல் முதலிடத்தில் வந்துள்ளது எனவும் கஷ்டப்பட்டு கற்கவேண்டிய இசை இரண்டாமிடத்திலும் அதைவிடக் கஷ்டமான நாடகமும் நடனமும் கடைசியாகவும் போய் விட்டது என்றும் கூறினார். இதையே சுருக்கமாய் மாணிக்க வாசகர் இந்தப் பாடலில் “ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடி” என்று சொல்லி இருப்பதாயும் கூறினார்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியத்தில் பகுதி : 76 ॐ

{அறிவியல் விஞ்ஞானம்}

அக்னி ஏந்திய மேல் இடக்கை சற்றே வளைந்து பிறை வடிவில் காணப்படும் இது அழித்தலைக்குறிக்கின்றது. பிரபஞ்சம் தோன்றிய போதே பல நுண் துகள்களும் தோன்றி நிர்மூலமாகுதலை இது உணர்த்துவதாய்க் கூறுகின்றனர். வலது கரங்களில் ஒன்று அபய ஹஸ்தம் காட்டுகின்றதல்லவா? இது நான் உன்னைக் காக்கின்றேன் என்னும் காத்தல் தொழிலைக் குரிப்பிடுவதோடல்லாமல் பெரு வெடிப்பு மூலம் தோன்றிய நுண்துகள்கள் உடனே அழிந்து விடாமல் காக்கப்பட்டுப் பின்னர் அவை ஒன்றோடொன்ரு சேர்ந்து பெரும் துகள்களாய் மாறி பின்னர் அவையே கோள்களாயும் உருமாறியதாய்க் கூறுகின்றனர். இப்படித் துகள்கள் அழிந்திடாமல் காப்பதையும் இந்தக் காக்கும் கரம் கூறுவதாய்ச் சொல்லுகின்றனர். இடக்கை யானையின் தும்பிக்கையைப் போல் காணப்படும் இது கஜஹஸ்த முத்திரை காட்டுகின்றது. இறைவனின் இந்த நான்கு திருக்கைகளும் நான்கு திசைகளையும் சுட்டுகின்றன. தீ ஜுவாலைக்கு நடுவே நின்று ஆடுகின்றாரல்லவா நடராஜர்? அந்தப் பேரொளியைத் தானே திருவாசியாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. இந்தத் திருவாசி பிரகிருதியைக் குறிக்கின்றது. தீ ஜுவாலை நம்மைச் சுற்றிச் சுற்றி வரும்  பிறப்பையும் இறப்பையும் அதிலேயே நாம் உழலும் சம்சார சாகரம் என்னும் பெரும் சக்கரத்தையும் குறிக்கின்றது. நமது சராசரம் சுழன்று கொண்டே இருக்கும் ஒரு சக்கரம் என்ற இயற்பியல் தத்துவம் இதைக் குறிப்பதாய்ச் சொல்லுகின்றனர். நடராஜத் திருமேனியின் ஆனந்தத் தாண்டவத்தின் வேகம் மிக அதிகம் என்றாலும் அந்த அசைவின் வேகம் காட்டாமாலேயே திருமுகம் மிக மிக அமைதியாக புன்முறுவலோடு காணப் படுகின்றது. இறைவனின் பல்வேறுவிதமான கோட்பாடுகளையும் இது காட்டுவதாய்ச் சொல்லப் படுகின்றது. வலச் செவியில் ஆண் அணியும் தோடும் இடச் செவியில் பெண்கள் அணியும் தோடும் காணப்படுவதால் உலகியல் தத்துவத்தில் உள்ள ஆண், பெண் கோட்பாடுகளை வலியுறுத்துவதாய்ச் சொல்லப் படுகின்றது. மூன்றாவது நெற்றிக் கண்ணானது ஞானத்தையும் வளர்பிறை மற்றும் தேய்பிறையைக் குறிக்கும் சந்திரன் மூலம் காலச் சக்கரத்தையும் நடராஜர் ஆடி ஆடிச் சுழன்று வருவது ஆக்கலையும் அழித்தலையும் குறிக்கின்றது. சிரசில் உள்ள மண்டையோடு உயிர்கள் மரணத்தை வென்று மரணமிலாப் பெருவாழ்வைப் பெறவேண்டும் என்பதையும் காட்டுகின்றது. இந்து சாஸ்திரங்களின்படி இந்த அண்ட சராசரமும் பஞ்சபூதங்களால் ஆனது. நீர், நிலம், காற்று, அக்னி, மற்றும் ஆகாசம் ஆகியவற்றின் வடிவமாகவே நடராஜத் திருமேனியின் அங்கங்கள் குறிக்கப்படுகின்றன. ஊன்றிய வலப்பாதம் பூமியையும் மேலிருக்கும் இடக்கை அக்னியையும் மெய்ம்மறந்த ஆனந்த நடனத்தால் பரந்து விரிந்த ஜடாமுடியின் மூலம் காற்றையும் சிரத்தில் உள்ள கங்கை நீரையும் கையிலுள்ள டமரு ஆகாயத்தையும் குறிக்கின்றது. பஞ்சபூதங்களும் நடராஜத் திருமேனிக்குள் அடக்கம். இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழ்ந்த கருத்தை உள்ளடக்கியதே சிவ தாண்டவம் ஆகும். இத்தாண்டவ நிலையில் மிகச் சிறிய அணுத்துகள்கள் முதல் மிகப் பெரிய கோள்கள் வரை அனைத்துப் பொருட்களின் இயக்கங்களும் அடங்கியுள்ளன. கல வரலாற்று அறிஞர் ஆன ஆனந்த குமாரசாமி எந்த ஒரு கலையும் மதமும் பெருமைப்படும் வகையில் அமைந்த இறைவனின் செயலை உணர்த்தும் தத்துவமே நடராஜத் திருமேனி என்கின்றார். "Tao of Physics"என்னும் நில்லாசிரியர் ஆன இயற்பியல் வல்லுனர் ஆன பிரிட்ஜாப் காப்ரா என்பவர் நவீன இயற்பியலுக்கும் கிழக்கத்திய ஆன்மீகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாய் கூறுகின்றார். 1975ம் ஆண்டு வெளியான இந்த நூல் 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பதிப்பிக்கப் பட்டு விற்பனையாவதோடு அல்லாமல் 25 மொழிகளில் மொழி பெயர்க்கவும் பட்டுள்ளது. காப்ரா அவர்கள்" நவீன இயற்பியலின் படி ஆக்கல் அழித்தலின் தாளம் Rhythm என்பது காலங்களில் ஏற்படும் மாற்றம் பிறப்பு, இறப்பு ஆகிய மாற்றங்கள் மற்றும் எல்லாவிதமான உயிர்பொருள் சார்பில்லாத மூலக் கூறுகளின் உட்பொருளாகும். ஒவ்வொரு நுண் அணுவும் சக்தித் தாண்டவத்தின் ஆக்கல் மற்றும் அழித்தலில் முடிவில்லா ஒரு பயணமாகச் செயல்படுகிறது. நவீன இயற்பியல் அறிஞர்கலுக்கு சிவ தாண்டவன் என்பது ஒரு நுண் அணுவின் தாண்டவமே. இந்து புராணங்களிலோ இந்தத் தாண்டவமானது அண்டசராசரமே அடங்கும் ஒரு பகுதியாகக் கருதப்படும் ஆக்கல் மற்றும் அழித்தலின் ஓர் அங்கமாகும். இதுவே எல்லாவித உயிரினங்கலுக்கும் அடிப்படையான ஓர் இயற்கையான சம்பவம். பண்டைய இந்தியக் கலைஞர்கள் இந்தத் தாண்டவத்தை வெண்கலச்சிலைகளாய் உருவாக்கினர். இக்கால விஞ்ஞானிகளோ அதி நவீன சாதனங்களைக் கொண்டு இந்தத் தாண்டவத்தை நடத்துகின்றனர். இவ்வாறு நடராஜ வடிவம் பண்டைய புராணம் மதம் போற்றும் கலையையும் மற்றும் நவீன கால இயற்பியலையும் ஒன்றிணைக்கிறது. அமெரிக்க விண்வெளி ஆராய்சியாளர் காரல் சேகன் பண்டைய கால இந்துக்கள் இந்த ஆக்கல் காத்தல் அழித்தல் அடங்கிய தாண்டவத்தை ஓர் இறைவடிவாகவே கண்டு அதையே அவர்கள் சிலையாக வடித்தனர் என்கின்றார். Quantum physics and the Dance of Nataraja என்ற கட்டுரையில் ஜார்ஜ் காலமரஸ் என்பவர் இந்தத் தத்துவத்தைப் பாராட்டி எழுதி இருக்கின்றார். சுவாமி விவேகானந்தர் எண்ணற்ற பெருமைகளையும் வானம் போல் தெளிவையும் அனைத்திற்கும் தலைவனான தன்னையே கடந்தவனான சிவபெருமானிடம் மாறாத பக்தி ஏற்படட்டும் என்று பிரார்த்திக்கின்றார்.

பிரம்மா படைப்பார் விஷ்ணுவோ காத்தலோடு படைக்கவும் செய்வார். ருத்ரரோ அழித்தலுக்கான கடவுளாய் இருந்தாலும் படைத்தலும், காத்தலும் செய்வார். மகேஸ்வரரோ மாயையை விலக்குகின்றார் ஆனலும் அவரும் படைத்தல் காத்தல் அழித்தலையும் மேற்கொள்கின்றார். சதாசிவர் மட்டுமே உலக பந்தங்களிலிருந்து நம்மை விடுவிப்பவர். சதாசிவர் நடராஜ வடிவத்தில் பஞ்சகிருதி எனப்படும் ஐந்தொழில்களையும் செய்கின்றார். இந்த ஐந்தொழில்களுமே நடராஜர் வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றது நாம் உணருகின்றோம் என ஸ்வாமி விபுலானந்தர் "நடராஜ வடிவம்" என்ற நூலில் எழுதி இருக்கின்றார். நடராஜப் பெருமான் நமக்கும் அப்படியே அருள் புரிய அனைவரும் பிரார்த்திப்போம். நடராஜ தத்துவதை விட மர்மமாக இன்று நடராஜர் படம் போட முடியாமல் ரொம்பவே சிரமமாகப் போய்விட்டது. பல நடராஜ வடிவங்களையும் ப்ளாகர் ஏத்துக்காமல் இந்த வடிவத்தையும் அரை மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளது.

நடராஜர் திருவடிகளே போற்றி!

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
நரஸிம்ஹ பாரதி சுவாமிகள்!

ஸ்ரீ சாரதா பீடத்தை தமக்குப் பின் சிறப்புடன் நிர்வகிக்க தக்கதொரு சீடர் தேடியும் கிடைக்காத நிலையில் அம்பிகையைச் சரணடைந்த நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் ஸ்தலத்தை விட்டுச் செல் என்ற அம்பிகையின் மொழியைக் கேட்டு அதன் பொருள் என்னவாக இருக்கும் எனச் சிந்தித்தார். மகான்களைப் பொறுத்தவரை ஸ்தலம் என்பது அவர்களுடைய தூல சரீரத்தையும் குறிப்பதாகும். எனில் தம்முடைய தூல சரீரத்தை விட்டுவிடச் சொல்லுகிறாளா அம்பிகை? அப்படி நினைத்த பொழுதில் சரீரத்தை உடனே துறந்து விடுவது என்பது சாத்தியம் இல்லையே! அப்படியே தம் யோக பலத்தால் அது சாத்தியப்பட்டாலும் கூட சாந்நித்தியம் நிரம்பப் பெற்ற பீடமாம் சாரதா பீடத்தை நிர்வகிக்கத் தக்கதொரு சீடர் கிடைக்க வேண்டுமல்லவா? அதற்குத்தானே இத்தனை பிராயத்தனமும் பிரார்த்தனையும்! இப்படி அவர் மிகுந்த பிரயத்தனம் செய்வதற்கும் அம்பிகையைப் பிரார்த்தனை செய்வதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் தமது 21 வது வயதிலேயே சாரதா பீடத்தின் பீடாதிபதி ஆனபடியாலும் தொடர்ந்து வந்த ஆறாவது நாளிலேயே அவருடை குரு அபிநவ ஸச்சிதானந்த பாரதி சுவாமிகள் ஸித்தி அடைந்து விட்டபடியாலும் பீடத்திற்குரிய சம்பிரதாயங்களை நன்கு தெரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாமலே போய் விட்டது. இருந்தாலும் விவரம் தெரிந்தவர்களிடம் இருந்து அனைத்துச் சம்பிரதாயங்களையும் தெரிந்து தெளிவு பெற்றார். தமக்குப் பின் பீடாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்பவருக்கு அப்படி ஒரு சிரமமான நிலை இருக்கக் கூடாது என்று நினைத்தார். அதனால் தான் தாம் தேக ஆரோக்கியத்துடன் இருக்கும் போதே தக்கதொரு சீடரைத் தேர்வு செய்யத் தொடங்கினார். ஆனால் அம்பிகையோ அவரை ஸ்தலத்தை விட்டுச் செல் என்கிறாளே! மேலும் சிந்தித்தவருக்கு ஸ்தலத்தை விட்டுச் செல் என்பதற்கு மற்றுமொரு பொருளும் விளங்கியது. சாரதா பீடத்தை விட்டுச் சிறிது காலம் வெளியே செல்ல வேண்டும் என்பது அம்பிகையின் விருப்பம் போலும் என்று பொருள் விளங்கிக்கொண்டவர். தாம் சிறிது காலம் மைசூர் சமஸ்தானத்தில் தங்கி வரலாம் என்று முடிவு செய்தார்.

அப்போது மைசூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்து வந்தவர் மும்முடி கிருஷ்ணராஜ உடையார். சிருங்கேரி சாரதா பீட ஆச்சார்யர்களை ராஜ குருவாகப் போற்றி வழிபட்ட வம்சம் மைசூர் அரச வம்சம். வம்ச வழி மாறாமல் கிருஷ்ணராஜ உடையாரும் நம் நரஸிம்ஹ பாரதி சுவாமிகளிடம் அளவற்ற பக்தியும் விசுவாசமும் கொண்டிருந்தார். சுவாமிகள் சாரதா மடத்துக்கு தக்கதொரு சீடரைத் தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிந்து கொண்டவர் ஜோதிடர்களின் ஆலோசனையுடன் பல ஜாதகங்களைப் பெற்று சுவாமிகளுக்கு அனுப்பி வைத்தார். ஒன்றும் சரிவரப் பொருந்தி வராததால் தான் இத்தனை பிரயத்தனம்! நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் மைசூர் சமஸ்தானத்துக்கு விஜயம் செய்ய இருப்பதாக ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது. ஆசார்ய சுவாமிகளின் வருகை பற்றித் தெரிய வந்ததும் சர்வ சக்தியும் யோக ஸித்தியும் பெற்றிருந்த மகானை சாஸ்த்ரோக்தமாக பூரண கும்ப மரியாதைகளுடன் வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டார் மைசூர் மன்னர். நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் ராமேஸ்வரத்தில் சர்வதீர்த்தத்துக்கு மகிமை சேர்த்தவர் அல்லவா! அவரை வரவேற்க மந்திர புஷ்ப மந்திரத்தால் புனிதம் பெற்ற தீர்த்தம் நிரம்பிய பூரண கும்ப மரியாதை பொருத்தம் தானே! அது என்ன சர்வதீர்த்தத்துக்கு மகிமை சேர்த்த சம்பவம்? நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் சாரதா பீடத்தின் பீடாதிபதியானதும் தேசத்தின் பல இடங்களுக்கும் யாத்திரை சென்றார். அந்த வகையில் ஒரு முறை சிருங்கேரியில் இருந்து விஜய யாத்திரை மேற்கொண்டவர் காளஹஸ்தி, திருப்பதி, காஞ்சி, சிதம்பரம், கும்பகோணம், ஸ்ரீரங்கம் போன்ற திவ்விய க்ஷத்திரங்களைத் தரிசித்தபடி 1838 ம் ஆண்டு ராமேஸ்வரத்துக்கு விஜயம் செய்தார். ராமேஸ்வர கோயிலின் வடக்குப் பக்கத்தில் கோடி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. ராமேஸ்வர யாத்திரை மேற்கொள்பவர்கள் கோயிலில் உள்ள அனைத்து தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து நிறைவாக இந்த கோடி தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்வதுடன் அந்தத் தீர்த்த நீரை சிறிது எடுத்துக்கொண்டு தங்கள் ஊருக்குச் சென்று கோடி தீர்த்த சமாராதனை என்று செய்வது மரபு!

இந்த கோடி தீர்த்தம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் இருந்தது.கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வருபவர்களிடம் காலணா பெற்றுக்கொண்டு அவர்களாகவே ஒரு குடம் நீரை எடுத்து யாத்ரீகர்களிடம் கொடுப்பார்கள். ராமேஸ்வர விஜயத்தின் போது நம்முடைய மகான் நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் கோடி தீர்த்தத்துக்குச் சென்ற போது அவரிடமும் அதே போல் காலணா கொடுக்க வேண்டும். என்றும் தாங்கள் தான் நீரை எடுத்து கொடுப்போம் என்றும் கூறினார்கள். சுவாமிகளுடன் வந்தவர்கள் சுவாமிகளைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட  அவர்கள் கேட்பதாயில்லை. சுவாமிகள் எதையும் பொருட்படுத்தவில்லை. அவருடைய பார்வையில் சற்றுத் தொலைவில் இருந்த சர்வ தீர்த்தம் தென்பட்டது. அதுவும் சாரதையின் திருவுள்ளம் தான் போலும்! உடனே தம்முடன் வந்த பரிவாரங்களைப் பார்த்து ஏன் வீணாக வீவாதம் செய்ய வேண்டும்? அதோ பாருங்கள் சர்வ தீர்த்தம்! கோடி தீர்த்தம் என்பது கோடி என்ற எண்ணிக்கைக்குள் அடங்கி விட்டது ஆனால் சர்வ தீர்த்தமோ எல்லைகள் அற்றது அல்லவா! கோடி தீர்த்தமும் அதனுள் அடக்கதான். எனவே வாருங்கள் நாம் எல்லோரும் சர்வ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யலாம். என்று கூறவே சுவாமிகளும் அவருடன் வந்தவர்களும் மட்டுமல்லாது மற்றவர்களும் சர்வ தீர்த்தத்துக்கே சென்று ஸ்நானம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சி எங்கும் பரவி விட்டது. அதன் பின் ராமேஸ்வர யாத்திரை மேற் கொள்பவர்கள் எல்லோரும் சர்வ தீர்த்தத்தில் நீராடுவதையே வழக்கமாகக் கொண்டதால் கோடி தீர்த்தம் தன்னுடைய முக்கியவத்துவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கியது. கோடித் தீர்த்தத்தின் மூலம் தங்கள் ஜீவனத்தை நடத்தி வந்த அந்தக் குறிப்பிட்ட பிரிவினர் மிகுந்த சிரம நிலைக்கு ஆட்பட்டார்கள். அத்துடன் கோடி தீர்த்தத்திலும் புதர்கள் மண்டி மூடத் தொடங்கி விட்டது. ஆனால் இந்த நிலை வெகு காலம் நீடிக்கவில்லை. காரணம் கோடி தீர்த்தமும் ஒரு புண்ணிய தீர்த்தம் அல்லவா? யாரோ சிலரின் அறியாமை காரணமாக அது தன் மகிமையை முக்கியத்துவத்தை இழக்கலாமா? நம் சுவாமிகள் மூலமாக சர்வ தீர்த்தத்துக்குப் பெருமை சேர்த்த சாரதாம்பிகை மீண்டும் நம் சுவாமிகளைக் கொண்டே கோடி தீர்த்தமும் மங்கிய தன் மகிமையையும் பொலிவையும் திரும்பப் பெறும்படியாகச் செய்தாள்.

நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் சர்வதீர்த்தத்துக்கு ஒரு மகிமை சேர்த்துச் சென்றதில் இருந்து சுமார் 35 வருடங்கள் கோடி தீர்த்தமானது தன் மகிமையையும் பொலிவையும் இழந்தே காணப்பட்டது. இந்த நிலையில் தான் 1873 ம் வருடம் மதுரைக்கு விஜயம் செய்தார் நரஸிம்ஹ பாரதி சுவாமிகள். கோடி தீர்த்தத்துக்கு உரிமை கொண்டாடிய அந்தக் குறிப்பிட்ட பிரிவினர் தங்கள் சிரம நிலை தீரவேண்டுமானால் உடனே மதுரைக்குச் சென்று சுவாமிகளைத் தரிசித்து தங்கள் வழி என்று முடிவு செய்து மதுரைக்குச் சென்றார்கள். சுவாமிகளை நேரில் தரிசித்ததும் அவருடைய திருவடிகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்கள். நடப்பது எல்லாமே சாரதாம்பிகையின் லீலை தான் என்பது சுவாமிகளுக்குத் தெரியாதா என்ன? தாம் விரைவிலேயே ராமேஸ்வரம் வருவதாகக் கூறியவர். அதேபோல் ராமேஸ்வரத்துக்கு வருகை புரிந்தார். நேராக சர்வ தீர்த்தத்துக்குச் சென்று ஸ்நானம் செய்து விட்டு தம் கமண்டலத்தில் சிறிது சர்வ தீர்த்தத்தையும் எடுத்து கொண்டு தமது பரிவாரங்களுடன் கோடி தீர்த்தத்துக்கு வந்தார். அதற்குள் கோடி தீர்த்தத்தில் மண்டிக்கிடந்த புதர்களெல்லாம் களையப்பட்டு சீர்செய்யப்பட்டிருந்தன.

கோடி தீர்த்தத்தின் அருகில் சென்ற சுவாமிகள் அம்பிகை சாரதையை தியானித்தபடி தம் கமண்டலத்தில் இருந்த சர்வ தீர்த்த நீரை கோடி தீர்த்தத்தில் ப்ரோக்ஷணம் செய்தார். பின்னர் தாம் அருகில் ஸ்நானம் செய்வதுடன் தம்முடைய பரிவாரங்களையும் ஸ்நானம் செய்ய வைத்தார். இவ்விதமாக கோடி தீர்த்தமானது இழந்த தன் பொலிவையும் மகிமையையும் முன்னிலும் அதிகமாகப் பெற்றது. சர்வ தீர்த்தத்துக்கு மகிமை சேர்த்தவரும் கோடி தீர்த்தம் தன் இழந்த பெருமையை மீண்டும் பெறச் செய்தவருமான சுவாமிகளை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை மைசூர் மன்னர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். அந்த மைசூரில் தான் சுவாமிகள் எதிர்பார்த்துக் காத்திருந்த சாரதா பீடத்துக்கான வாரிசைச் சந்திக்க நேர்ந்தது?