திங்கள், 30 டிசம்பர், 2019

சுமங்கலி பிரார்த்தனை பெண்கள் கட்டாயம் படியுங்கள்... நல்ல தகவல்

காஸ்யபதி சாஸ்திரிகள் தான் பண்ணி வெச்சார்... அப்படியே இதை பத்தி சொல்லவும் ஆரம்பிச்சார்...

“ஸுமங்கலீரியம் வதூரிமாம் ஸமேத பச்யத |
ஸௌபாக்யமஸ்யை தத்வா யா தாஸ்தம் விபரேதன ||”

என்கிற வேத மந்த்ர ஆசீர்வாதத்தில் க்ருஹிணீயான கல்யாணமான பெண்ணிற்கு ஸுமங்கலி எனும் அந்தஸ்தையும் அனைத்து ஸௌபாக்யங்களை {மங்கலங்களையும்} கொடுக்குமாறு தேவர்களைப் ப்ரார்த்திக்கிறது.

நம் ஸனாதன வைதிக தர்மத்தின் ஆதாரமான வேதங்களும், சாஸ்த்ரங்களும் ஆண்களுக்குப் பல்வேறு கர்மாக்களையும், பெண்களுக்கு பற்பல வ்ரதங்களையும் அனுஷ்டிக்கும் படி வற்புறுத்துகின்றன.

அநேக விதமான க்ரஹ்ய ஸூத்ரங்களும், ப்ரயோக க்ரந்தங்களும் வ்ரத சூடாமணி, வ்ரத கல்ப மஞ்ஜரீ, வ்ரத பூஜா விதானம் முதலிய நூல்களும் கர்மாக்களின் வ்ரதங்களின் செய்யும் முறைகளை விரிவாக விளக்குகின்றன. இவை தவிர நாம் பல பண்டிகைகளையும் கொண்டாடுகிறோம்.

“ஸுமங்கலி ப்ரார்த்தனை” வைதிக கர்மா இல்லை. வ்ரதமுமன்று; பண்டிகையுமில்லை. பின் எவ்வாறு அழைக்கலாம்? நீங்களே ஒரு பெயர் சூட்டலாமே! பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் பெண்களின் ஸமாராதனை {ஒரு விசேஷமான விசேஷம்} அவ்வளவே.

வருடம் தோறும் நடத்த வேண்டுமென்பதில்லை. நம் வீடுகளில் கல்யாணம் போன்ற ஸுப கார்யங்கள் நடக்கும் போது அந்தந்த விசேஷங்களை ஒட்டி முன்னரோ பின்னரோ இந்த ஸுமங்கலிப் ப்ரார்த்தனையைச் செய்ய வேண்டும். வீட்டில் பெரியவர்களைக் கலந்து ஆலோசித்து அவர்கள் சொற்படி ச்ரத்தையுடனும் ஆசாரத்துடனும் நல்ல முறையில் செய்ய வேண்டும். தேசத்துக்குத் தேசம், மாவட்டத்திற்கு மாவட்டம், ஊருக்கு ஊர், வீட்டுக்கு வீடு, குலத்துக்குக் குலம் ஸம்ப்ரதாயங்கள், நடைமுறைகள் மாறுபடும்.

நம்மில் உட்பிரிவுகளுக்கிடையேயும் {வடமா, பிரஹசரணம், அஷ்டஸஹஸ்ரர், ஸங்கேதி முதலியன} பழக்க வழக்கங்கள் வேறுபடும். ஸுமங்கலிப் ப்ரார்த்தனையை நல்ல நாள் பார்த்துச் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையில் செய்வது விசேஷம். திங்கள் அல்லது புதன்கிழமைகளிலும் செய்யலாம்.

கரிநாள், கிரஹணம், அமாவாசை மற்றும் தர்ப்பண தினங்களில் கூடாது. க்ருஹ வாத்யாரிடம் கேட்டு நாள் குறிக்கவும்.

ஒரு வருஷத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு முறை தான் செய்ய வேண்டும். விவாஹத்திற்கு முன் செய்ய நாள் வாய்க்காவிடில் திருமணத்திற்குப் பின் நாட்டுப் பெண் வந்ததும் நாள் பார்த்துச் செய்யலாம். அதே போல் பெண் வீட்டில் புக்ககத்திலிருந்து பெண்ணை அழைத்து வந்தும் செய்யலாம்.

ஸுமங்கலிப் ப்ரார்த்தனை செய்ய நாள் பார்த்துத் தீர்மானித்தவுடன், அதற்கு ஓரிரு நாள் முன்பே ஒன்பது கஜம் புடவையும், ரவிக்கைத் துணியும், சித்தாடையும் {மூன்று கஜம்} புதிதாக வாங்க வேண்டும். புடவை கறுப்பு, கருநீலம், கரும்பச்சை நிறங்களில் இருக்கக் கூடாது. நூல் புடவை {உறையூர், தேவேந்த்ரா, சுங்கடி} சாலச் சிறந்தது. சித்தாடையும் கருநிறமின்றி சீட்டித் துணியில் எடுக்கலாம்.

{நீண்ட நாட்கள் முன்பு வேறு ஏதாவது விசேஷத்திற்கு வாங்கிய புடவையோ, யாராவது வெற்றிலை பாக்கில் வைத்துக் கொடுத்த புடவையோ கூடாது}

ஸுமங்கலி ப்ரார்த்தனையில் போஜனத்திற்கு உட்காரும் ஸுமங்கலிப் பெண்கள் மாமிகள் ஆகியோருக்குக் கொடுக்க வேண்டிய ரவிக்கைத் துணிகளையும் கறுப்பு நூல் கலக்காததாக வாங்க வேண்டும்.

மேலும் வெற்றிலைப் பாக்குடன் கொடுப்பதற்கு பழம், தேங்காய், குங்குமம், மஞ்சள், சீப்பு, கண்ணாடி, மல்லிச்சரம் போன்றவற்றையும் வாங்கித் தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஸுமங்கலிப் ப்ரார்த்தனையில் போஜனம் செய்ய முறைப்படி அழைக்கப்படும் ஸுமங்கலிப் பெண்கள் {”பொண்டுகள்” எனப்படுவர்} ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். கன்யாப் பெண் இருவரையும் சேர்த்து எண்ணி ஒற்றைப்படையில் வருமாறு இலைகளைப் போட வேண்டும். கன்யாப் பெண் என்பவள் மூன்று வயதுக்கு மேற்பட்ட ருதுவாகாத இலையில் தானாகவே சாப்பிடக்கூடிய பக்குவம் உள்ள பெண்ணாக இருக்க வேண்டும்.

ருதுவான பெண் கன்யாப் பெண் இல்லாவிடினும் நம் வீட்டுப் பெண்ணிற்குத் திருமணம் என்றால் அந்தப் பெண்ணைக் கன்யாப் பெண்ணாக பாவிக்கலாம். நாட்டுப் பெண்கள், ஓரகத்திகள் பொண்டுகளாக உட்காருவதில்லை. மூன்று மாதத்திற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பொண்டுகளாக இருக்கக் கூடாது. ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்திருந்தால் இறந்தவருடைய நெருங்கிய உறவினர்களை ஒரு வருடத்திற்கு பொண்டுகளாக இருக்கும் வழக்கமில்லை.

குடும்ப வழக்கப்படி முதல் நாள் மாலை ஸுமங்கலிப் பொண்டுகளை அவர்கள் வீட்டிற்குச் சென்று குங்குமம், எண்ணெய், சீயக்காய், மஞ்சள் கொடுத்து விட்டு மறு நாள் போஜனத்துக்கு வரச் சொல்லி அழைக்கவும். சில இடங்களில் விசேஷ தினத்தன்று காலை எண்ணெய் நைவேத்யம் செய்து பின் மங்கலப் பொருள்களைக் கொடுத்து அழைக்கும் பழக்கமும் உள்ளது. அன்று நேரம் உள்ளவர்கள் அவ்வாறு செய்யலாம்.

ஸுமங்கலி ப்ரார்த்தனை நடக்கும் நாள் காலை வீட்டை மெழுகி வாசல் தெளித்துக் கோலம் போட வேண்டும்.
புதிய புடவையை மட்டும் நனைத்து கிழக்கு மேற்காக உலர்த்திக் காய்ந்த பின் கொசுவமாகச் சுற்றி ரவிக்கைத் துணியுடன் கோலமிட்ட பலகையில் வைத்து அதன் மீது முகம் பார்க்கும் கண்ணாடி, புஷ்பம், மங்கலப் பொருள்கள் ஆகியவற்றை வைக்கவும்.

சில வீடுகளில் பூவாடாப் பானை {பூவாடாப் பானை, பூவோடுபானையில்} புடவை வைக்கும் வழக்கம் உண்டு. இது ஒரு மூடியுடன் கூடிய வெங்கலப் பானை, புடவைக் கலம் கிழக்கு நோக்கி அமரும் படி இருக்க வேண்டும். மற்ற பொண்டுகளின் இலைகள் வடக்கு அல்லது மேற்குப் பார்த்து அமரும் படி இருக்க வேண்டும். ஒரே அறையில் தான் எல்லா இலைகளும் இருக்க வேண்டும். இலைகளின் நுனி உட்காருபவரின் இடது கைப்பக்கம் இருக்க வேண்டும்.

சமையல் விவரம்: குடும்பத்தில் பரம்பரையாக நிலவும் வழக்கப்படி சமையல் செய்யலாம். சில வீடுகளில் மிளகு சமையல் வழக்கமாக உள்ளது. சிலர் ஸமாராதனை சமையல் செய்வர். மிளகாய்ப்பழம், மல்லிவிதை, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு சேர்க்கலாம். பெருங்காயம் சேர்க்கக் கூடாது. மோர்க் குழம்பும், மிளகு ரஸமும் வைக்க வேண்டும். வெல்லப் பாயஸம், இஞ்சி கறிவேப்பிலைத் துவையல் செய்ய வேண்டும். பக்ஷணமாக வடை, அப்பம், எள்ளுருண்டை செய்யலாம். ஸுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு சமையல் நம் க்ருஹத்தில் தான் செய்ய வேண்டும். வெளியிலிருந்து எடுப்பு சாப்பாடு வாங்கவே கூடாது.

ஸுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு வரித்திருக்கும் பெண்டுகள் யாவரும் தலைக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து ஒன்பது கஜம் புடவையை அணிந்து மடிசார் மாமிகளாக வர வேண்டும். ஏற்கெனவே பார்த்து வைத்த நல்ல நேரத்தில் வந்திருக்கும் பொண்டுகளை கிழக்கு முகமாக நிற்கச் சொல்லி மஞ்சள் தண்ணீரில் கால் அலம்பி, சந்தனம் குங்குமம் கொடுத்து, போஜனம் செய்ய வாருங்கள் என அழைத்து வரவேற்க வேண்டும். அப்படி அழைக்கும் பொழுது ஸுமங்கலிகளாய் இறந்தவர்களின் பெயர்கள் தெரிந்திருந்தால் அவர்களின் பெயர்களைச் சொல்லக் கையைத் தட்டி அழைக்க வேண்டும். அப்படித் தெரியாவிடில் ‘லக்ஷ்மி வா’ என்று பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும்.

மருதாணி, நலுங்கு, மஞ்சள் கொடுப்பது முக்கியம். திருமணமாகிச் சென்ற நமது பெண்கள் புடவைக் கலத்திற்கு பக்கத்திலும் பிற பொண்டுகள் மற்ற இலைகளுக்கு முன்பும் அமர வேண்டும்.
எல்லாரும் அமர்ந்ததும் புடவை இலையில் ஆரம்பித்து பிரதக்ஷிணமாகப் பதார்த்தங்களைப் பரிமாற வேண்டும். தெற்கு திசையில் முடியுமாறு பரிமாமறக்கூடாது. மற்றபடி சாதாரணமாகப் பந்தியில் பரிமாறுவது போலவே பாயஸம், பச்சடி என்ற வரிசைப்படி பரிமாறவும். புடவைக்கலத்துக்கு எல்லாம் பரிமாறிய பின் குழம்பு, ரஸம், தயிர், பானகம், நீர்மோர் ஆகியவற்றைத் தனித்தனி பாத்ரங்களில் அந்தந்த இலைக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும்.

எல்லா கலத்துக்கும் பரிமாறிய பின், வீட்டு மருமகள் அல்லது அவரவர் வழக்கப்படி ஒருவர் நைவேத்யம் செய்ய வேண்டும். {சிலர் புடவைக்கலத்தில் தொடங்கி ப்ரதக்ஷிணமாக தூபம், கற்பூரம் இவற்றை எல்லாப் பெண்டுகளுக்கும் காட்ட வேண்டும்}

நம் ஆத்து  புருஷர்கள் {கணவன், பிள்ளைகள்} அனைவரும் புடவையை ஸுமங்கலிகளாக இறந்து போன நம் முன்னோர்களாகப் பாவித்து புஷ்பம், அக்ஷதை ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்து ப்ரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் உத்தரணியில் ஜலம் எடுத்துக் கொண்டு புடவைக்கலத்திலிருந்து தொடங்கி எல்லாருக்கும் தீர்த்தம் வார்த்த பின் கடைசியில் புடவைக்கலத்தில் முடிக்க வேண்டும். ஆபோசனம் ஆனபின் அனைவரையும் நிதானமாகச் சாப்பிடச் சொல்லி வயிராறப் பரிமாற வேண்டும்.

சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் உத்தராபோசனம் செய்யக் கையில் ஜலம் விட வேண்டும். கை அலம்பிய பின்னர், பொண்டுளை கிழக்கு முகமாக உட்காரச் சொல்லி, பானகம், நீர்மோர், சுக்கு – சர்க்கரை கொடுத்து விட்டு, வெற்றிலைப் பாக்கு, தேங்காய், மஞ்சள், ரவிக்கைத் துணி ஆகியவற்றை ஸுமங்கலிப் ப்ரார்த்தனை நடத்துபவர் தன் சக்திக்கேற்ப அளிக்க வேண்டும். மேலும், புஷ்பம், தக்ஷிணை ஆகியவையும் கொடுக்க வேண்டும். புடவைக்கலத்தில் பரிமாறிய உணவை வீட்டில் உள்ள உறவினர் சாப்பிடலாம். பொண்டுகள் சாப்பிட்ட பின்னரே மற்றவர்கள் ஆண் பெண் எல்லாரும் உணவருந்த வேண்டும். பூஜையில் வைத்திருந்த புடவையை அவரவர் வழக்கப்படி வீட்டுப் பெண்களுக்கோ அல்லது ஏழைப் பெண்கள் யாருக்காவது கொடுக்க வேண்டும்.

அரிசியும் சிறிது பாசிப் பருப்பும் போட்டு விட்டு, வெல்லம், ஏலக்காய், நெய்யாவும் எடுத்துக் கொண்டு, கிராமத்து அம்மன் கோயிலில் கொண்டு போய்க் கொடுத்து சர்க்கரைப் பொங்கல் வைத்து அம்மபாளுக்கு நைவேத்யம் செய்து விநியோகிக்கச் சொல்லவும். வீட்டுக்காரர்கள் வாங்கிக் கொள்ள வேண்டாம். அபிஷேகத்திற்கு பழம், பூ, வெற்றிலைப் பாக்கு கொடுக்கவும்.

இவ்வாறு அவரவர் குல, க்ருஹ ஸம்ப்ரதாயப்படி உரிய காலங்களில் ஸுமங்கலி ப்ரார்த்தனையைச் சிறப்பாகச் செய்து அனைத்து மங்கலங்களையும், பாக்யங்களையும் பெற இறைவன் அருள்வானாக!
மேற்கண்ட ஸுமங்கலீ ப்ரார்த்தனை என்ற வைபவம் நம் கிரஹத்தில் நடைபெறும் பொழுது மிகவும் பக்தி சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் நம் வீட்டில் இறந்த ஸுமங்கலீகளை நினைத்து நடத்த வேண்டும். அப்படி நடத்தும் பொழுது ஸுமங்கலீகளாய் மதித்த நம் மூதாதையர்கள் நம்மை மிகவும் ஆசீர்வதித்து நம் வீட்டில் நடக்கும் சுப விசேஷங்களை நிர்விக்னமாக நடத்தி நமக்கும் ஆசி வழங்குவார்கள். நம் குடும்பத்தில் சூக்ஷ்ம ரூபமாகி இருந்து நம்மை வழி நடத்துவார்கள்.