சனி, 24 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 15

யோகப் பயிற்சியில் "பிராணாயாமம்" என்ற ஒரு பயிற்சி சொல்லிக் கொடுப்பார்கள். அது சாதாரணமான மூச்சுப் பயிற்சி. ஆஸ்த்மா வியாதியஸ்தர்களுக்கும் இன்னும் சிலருக்கு மூச்சு ஒழுங்கு செய்யவும் பயன்படும் இது. இதற்கும் குண்டலினி யோகம் என்பதற்கும் ரொம்பவே வேறுபாடு உண்டு. மூச்சுப் பயிற்சியே ஆசான் இல்லாமலோ சரியாகச் செய்யாவிட்டாலோ பக்க விளைவுகள் ஏற்படும். மூச்சைச் சரியாக உள்ளடக்காவிட்டாலோ வெளிவிடும் போது தவறாய் விட்டாலோ வயிற்றில் அல்சர் உள்ளவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. மற்றவருக்கும் ஏற்படும். இது அனுபவபூர்வமான உண்மை. ஆகையால் குண்டலினி யோகம் என்பது நம் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது கண் என்று சொல்லப்படும் ஞானக் கண்ணைத் திறந்து அதன் மூலம் இறைவனும் அவன் சக்தியும் நம்முள்ளேயே உறைவதைக் காண்பது. இதைத் தான் சமாதி நிலை என்றும் சொல்லுகிறார்கள். இனி குண்டலினி யோகத்தைப் பற்றி. இதைப் பற்றி இங்கே எழுதுவது தேவையா எனவும் நினைத்தேன். சிதம்பர ரகசியத்தின் உள் அர்த்தம் புரியத் தேவை எனறே தோன்றியது. நம் உடலில் முதுகெலும்பின் கீழ்ப்பாகத்தில் மூன்று நாடிகள் ஒன்று சேர்கின்றன. தலை உச்சியில் இருந்து கீழ் இறங்கி இருக்கும் சூஷ்மன நாடியானது இட பிங்கள நாடியுடன் அங்கே தான் ஒன்று சேர்கிறது. அது ஒரு பாம்பு போல் சுருட்டிக் கொண்டிருக்கும் எனச் சொல்கிறார்கள். இங்கே இருக்கும் உள்சக்தியை எழுப்பிக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வந்து தலை உச்சிக் கொண்டு வந்து சேர்ப்பது தான் குண்டலினி யோகம். இந்தப் பிரபஞ்சமானது எவ்வாறு பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனதோ அவ்வாறே மனித சரீரமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு சக்தி. அதாவது ஒவ்வொரு பஞ்சபூதங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன. நம் நாட்டுக் கோயில்களும் முக்கியமாய்த் தமிழ் நாட்டுக் கோயில்களும் நம் மனித உடல் அமைப்பைக் கொண்டது. இதை மனதில் இருத்திக் கொண்டு சிதம்பரம் கோயிலின் ரகசியத்தைப் பார்க்கவேண்டும்.

மூன்று நாடிகள் ஒன்று சேரும் இடம் "மூலாதாரம்" எனப்படுகிறது. இது நம் உடலில் முதுகெலும்பின் கீழ் மலத்துவாரத்துக்குச் சற்று மேலே அமைந்துள்ளது. 4 இதழ் கொண்ட அமைப்புடன் கூடிய இதைப் பூமிக்குச் சமமாகச் சொல்கிறார்கள். மஞ்சள் நிறம் கொண்ட 4 இதழ் தாமரைப் பூவுக்குச் சொந்தமானது. இதற்கெனத் தனியான குணங்களும் உண்டு. அவை பின்னால் பார்ப்போம்.
மூலாதாரத்துக்கு 2 விரல் கடை மேலே அமைந்துள்ளது "ஸ்வாதிஷ்டானம்" 6 இதழ் கொண்ட தாமரைப்பூவின் அமைப்புக் கொண்ட இது நீருடன் சம்மந்தம் கொண்டது. உருக்கி வார்த்த சுத்த வெள்ளியின் நிறம் கொண்டது.

மிண்டும் நாளை சந்திக்கலாம்

கருத்துகள் இல்லை: