அருள் மிகு உலகநாயகி அம்மன் திருக்கோவில்
மூலவர்:உலக நாயகி, மகிஷாசுரமர்த்தினி
தீர்த்தம்:சர்க்கரை தீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:தேவிபுரம், தேவிப்பூர்
ஊர் :தேவிபட்டினம்
மாவட்டம்:ராமநாதபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
திருவிழா:நவராத்திரி, பவுர்ணமி
தல சிறப்பு:அம்மன் இங்கு சுயம்பு வடிவில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வீர சக்தி பீடமாகும்.
திறக்கும் நேரம்:காலை 6 மணி இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு உலகநாயகி அம்மன் திருக்கோயில், தேவிபட்டினம்-623 514. ராமநாதபுரம் மாவட்டம்.போன்:+91 4567 - 221 213, 264 010, 94444 57971, 94444 57978
பொது தகவல்:கடற்கரை ஓரத்தில் மிக அமைதியான சூழலில் கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. கோயில் நுழைவு வாயிலில் 5 நிலை 7 கலசத்துடன் கூடிய பிரமாண்டமான கோபுரம் அமைந்துள்ளது. மூலவருக்கு மேல் ஏகதள விமானம் அமைந்துள்து. கோயில் எதிரில் சர்க்கரை தீர்த்தம் அமைந்துள்ளது. கோயில் உள்புறம் பலிபீடம், கொடிமரம், சிம்ம வாகனம் உள்ளது. கொடிமரம் அடுத்து பதினாறு கால் மண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல்புறம் இருபுறமும் சிங்கம் வீற்றிருக்க அம்மன் அமர்ந்த கோலத்தில் சுதை சிற்பம் உள்ளது. அடுத்துள்ள பதினாறு கால் மகாமண்டபம் முழுவதும் கருங்கல் திருப்பணி. அதற்கடுத்து அர்த்தமண்டபம் தாண்டி , கர்ப்பக்கிரகத்தில் அம்மன் அருள்பாலிக்கிறாள். சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை:எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள், மன தைரியம் இல்லாதவர்கள், எதிரி தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வீரசக்தி பீடமான இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:சுயம்பு மூர்த்தியான இத்தல அம்மனுக்கு பலவகையான அபிஷேகம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:தேவி பட்டினம் என்றாலே அனைவருக்கும் ராமர் தோஷ நிவர்த்திக்காக கடலுக்குள் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் ராமர் ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் முன் இங்குள்ள உலகநாயகி அம்மனை வழிபட்டுள்ளார். இந்த உலகை காப்பதற்காக மகிஷாசுரனுடன் 9 நாள் போராடி 10ம்நாள் வெற்றி பெற்று இங்கு ஓய்வு எடுக்க சயன கோலத்தில் சுயம்புவாக உலகநாயகி என்ற திருநாமத்துடன் தங்கியதாகவும், அந்த தேவியால் இந்த பட்டினம் தேவிபட்டினம் ஆனதாகவும் கூறப்படுகிறது. நவராத்திரி நாயகியான இந்த தேவியை வழிபடுவதால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இத்தல அம்மனுக்கு உருவம் ஏதும் கிடையாது.அம்மனின் 51 சக்தி பீடங்களில் மதுரை மீனாட்சி ராஜமாதங்கி சியாமள பீடம், காஞ்சி காமாட்சி காமகோடி பீடம், காசி விசாலாட்சி மணிகர்ணிகாக பீடம் என்பது போல், தேவி பட்டினம் அம்மனின் வீரத்தை பறை சாற்றும் வகையில் வீரசக்தி பீடமாகும். ராவண வதத்திற்கு முன் ராமர், லட்சுமணன், அனுமன் ஆகியோர் ராமநாதபுரம் அருகிலிலுள்ள உப்பூர் விநாயகரை தரிசித்துவிட்டு, வீரசக்தி பீடமான இத்தலத்தில் தங்கி அம்மனை வணங்கி ஆசி பெற்று சென்று வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
தல வரலாறு:பராசக்தி, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே, துர்க்கை அல்லது காளி. மகிஷாசுரன் என்ற அரக்கன் சிறந்த சிவ பக்தன். எருமை போல உருமாறும் சக்தி கொண்ட இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அளவில்லா துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை அழிப்பதற்காக பராசக்தி, திரிகுணா என்ற பெயரில் தோன்றினாள். இவளுக்கு சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், அக்னியும், வருணனும் சக்தியையும், வாயு வில்லையும், ஐராவதம் மணியையும், எமன் தண்டத்தையும், நிருதி பாசத்தையும் கொடுத்தார்கள். தவிர, காலன் கத்தி, கேடயத்தையும், சமுத்திரம் தாமரை மலரையும், குபேரன் பாண பாத்திரத்தையும், சூரியன் ஒளிக்கதிர்களையும், ஆதிசேஷன் நாகபரணத்தையும் அளித்தார்கள். ஹிமவான் சிம்ம வாகனமானான். சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி சிம்ம வாகனத்தில் சென்று மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். மகிஷனை அழித்த அவள் கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்பு வடிவில் இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வியாழன், 31 டிசம்பர், 2020
அருள் மிகு உலகநாயகி அம்மன் திருக்கோவில்
அருள் மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்
அருள் மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்
மூலவர்:சுவேதாரண்யேஸ்வரர்
அம்மன்:பிரமவித்யாம்பிகை
தல விருட்சம்:வடவால், கொன்றை, வில்வம்
தீர்த்தம்:முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:ஆதிசிதம்பரம், திருவெண்காடு
ஊர்:திருவெண்காடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்
தேவாரப்பதிகம்
வாரப்பதிகம் கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11வது தலம்.
திருவிழா:மாசி மாதம் - இந்திரப் பெருவிழா - 13 நாட்கள் திருவிழா - பிரம்மோற்சவம் - இந்திரனால் நடத்தப்படும் விழா என்ற ஐதீகம் பெற்ற சிறப்புடையது இந்த திருவிழா. காவிரிப்பூம்பட்டினத்தில்இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் இத்திருவிழா மிகவும் சிறப்புற நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர். சித்திரை திருவோணத்தில் நடராஜர் அபிசேகமும், வைகாசியில் வெள்ளை யானைக்கு சாப விமோசனம் அளித்தலும், ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிசேகமும், ஆடியில் பட்டினத்தாருக்குச் சிவதீட்சை அளித்தலும், அம்பாளுக்கு ஆடிபூரம் பத்து நாள் உற்சமும், ஆவணியில் நடராஜருக்கு அபிசேகமும், கோகுலாஷ்டமி , விநாயகர் சதுர்த்தி விழாவும், புரட்டாசியில் தேவேந்திர பூஜையும், நவராத்தி விழாவும், ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவும், கார்த்திகையில் மூன்றாவது ஞாயிறு அன்று அகோர மூர்த்திக்கு மகாருத்ரா அபிசேகமும், கார்த்திகை தீப விழாவும், மார்கழி திருவாதிரையில் நடராஜர் தரிசனமும், தை மாதத்தில் சங்கராந்தி விழாவும் இத்தலத்தில் சிறப்புற நடைபெறுகின்றன. பங்குனி தோறும் அகோர மூர்த்திக்கு லட்சார்ச்சானை வைபவம் சிறக்க நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 11 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும்.
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு - 609 114, நாகப்பட்டினம் மாவட்டம்.போன்:+91-4364-256 424
பொது தகவல்:ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கிழக்கு வாயிலில் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலையுள்ளது. உள் இடம் பரந்த இடப்பரப்பு. உள்நுழைந்ததும் இடப்பால் முக்குளத்துள் ஒன்றான அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சன்னதிகள் உள்ளன. பிராகாரத்தில் பக்கத்தில் அடுத்த திருக்குளமாகிய சூரியதீர்த்தமுள்ளது.
கரையில் சூரியதீர்த்தலிங்க சன்னதி உள்ளது. சுப்பிரமணியர் மண்டபம் ஆறுமுகர் சன்னதி ஆகியவற்றை அடுத்து அம்பாள் சன்னதி தனிக் கோயிலாகவுள்ளது. இத்தல விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை:இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.
பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.
இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்:நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலம் ஆகும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி,பாசிப்பருப்புப் பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் புதன் பகவானை வழிபட வேண்டும்.திருமண தோசம், புத்திர தோசம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு முறை வலம் வந்து வழிபடுகிறார்கள். சுவாமிக்கு மா , மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
தலபெருமை:காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.
இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.
சுவேதாரண்யர் (திருவெண்காடர்) :திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
நடராஜர் : இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
அகோர மூர்த்தி : ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.
சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.
பிரம்ம வித்யாம்பாள் : இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.
நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.
காளிதேவி : சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.
துர்க்கை தேவி : துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.
புதன் பகவான் : வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.
பிள்ளையிடுக்கி அம்மன்: திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.
புதனுக்கு தனி சன்னதி: நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது. இத்தலத்தில் மூர்த்திகள் (திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது. சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது.
பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.
ஸ்தல வரலாறு:பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான்.சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத் திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.
சனீஸ்வர பகவான் திருக்கோயில் சோழவந்தான்
அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் சோழவந்தான்
மூலவர்:சனீஸ்வர பகவான்
உற்சவர்:அம்மன்
நடைதிறப்பு:காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இடம்:சோழவந்தான்
முகவரி:அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், சோழவந்தான்-625 214, மதுரை மாவட்டம்.
தகவல்:சனி பகவானுக்காக அமைந்துள்ள தனிக்கோயில்களில் இதுவும் ஒன்று. பிரார்த்தனை விருச்சிக ராசிக்காரர்களின் பரிகார ÷க்ஷத்திரமாக இது விளங்குகிறது. சுயம்பு சனீஸ்வரரை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்: சனிக்கிழமைகளில் நெய்,எள் விளக்கேற்றுதல், எள்சாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம். தலபெருமை: மாவலிங்மரத் தடியில் சுயம்புவாக தோன்றியதால் இதுவே ஸ்தல விருட்சமாயிற்று. விருச்சிக ராசிக்காரர்களின் பரிகார ÷க்ஷத்திரமாக இது விளங்குகிறது. சுயம்பு சனீஸ்வரரை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் நெய்,எள் விளக்கேற்றுதல், எள்சாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம்.
தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தானிலுள்ள ஆஞ்சநேயர் மற்றும் சித்திவிநாயகர் கோயிலுக்கு புத்தம்புது மலர்கள் பறிப்பதற்காக அமைக்க ஒரு நந்தவனம் அமைக்கப்பட்டது. இந்த தோட்டத்தில் பாரிஜாதம், நாகலிங்கம், மாவலிங்க பூ மரங்களும், மூலிகை குணம் கொண்ட செடிகளும் வளர்க்கப்பட்டன. அக்ரஹார மக்கள் இந்த நந்தவனத்தை பராமரித்து வந்தனர். காலப்போக்கில் இந்த நந்தவனம் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் அடர்ந்து விஷஜந்துக்கள் வசிக்கும் இடமாக மாறி விட்டது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பயத்தில் ஆழ்ந்தனர். 40 ஆண்டுகளுக்க முன்பு, இந்த இடத்தை பக்தர்கள் மீண்டும் சுத்தப்படுத்தினர். மாவலிங்க மரத்தடியில் இளைஞர் ஒருவர் புற்களை அகற்ற மண்வெட்டியால் தோண்டிய போது ஏதோ தென்பட்டது. மூன்றடி ஆழத்திற்கு தோண்டியதும், காக வாகனத்துடன், நின்ற கோலத்தில் சனீஸ்வரபகவான் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இவரை தரிசிக்க வந்தனர். சிருங்கேரி மற்றும் காஞ்சி சுவாமிகளின் அருளாசியுடன் சுயம்பு சிலையை நிறுத்தி பீடம் அமைத்து கோயில் கட்டடம் கட்ட அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மக்கள் விரும்பினர். 1975ல் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை,மாலையில் சனீஸ்வரபகவானுக்கு பூஜைகள் நடந்து வருகிறது.
திருவிழா:சனிப்பெயர்ச்சி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
போக்குவரத்து:மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ள சோழவந்தானுக்கு அடிக்கடி பஸ்கள் உள்ளன.
வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி தோன்றியது எப்படி!
நார அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, அயனம்-இடம் உயிரிங்களுக்கு இடமானவன் நாராயணன். உயிரினங்களைக் காப்பதற்கு இறைவன் சில தலங்களைத் தேர்ந்தெடுப்பது போல சில காலங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவை
புண்ணிய காலங்கள் எனப்படும். தலங்களில் திருவரங்கம் போல புண்ணிய காலங்களில் ஏகாதசி உயர்ந்தது; ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு. ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம். எட்டு வயதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர் சிவனை அணுகி அபயம் கேட்டனர். நாரணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன். சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாரணன். முரன் கிளர்ந்தெழுந்தான், அமரர் சிதறினர் இறைவனும் ஆற்றலிற் குறையுடையவன் போல் பயந்தோடி வதரி மலையிலுள்ள சிம்ஹவதி என்னும் குகையில் போய் களைப்புதீர கண்ணுறங்கினான். முரன் பின் தொடர்ந்து வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான். அவ்வமயம் இறைவன் திருமேனியினின்று கன்னி ஒருத்தி வெளிப்பட்டுப் போரிட முரனுக்கு முன்னின்றாள். முரன் முடிந்தான். கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பட்ட சக்தி அவ் இறைவனுக்கே வியப்பளிக்கிறது.
என் பகைவனை முடித்தது யார்? என்று பரமன் கேட்கிறான். அக்கன்னி உலகை அச்சுறுத்தும் அசுரனைத் தானே கொன்றதாக கூறினாள். பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன். ஏகாதசி என்று பெயர் கொண்ட அவ்வனிதை நின் அன்புக்கு உரியவளாக நான் ஆகவேண்டும் , திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்நாளில் உபவாசம் இருப்போர் சித்திகள் அனைத்தும் பெற வேண்டும் என்னும் வரங்களை வேண்டிக்கொண்டாள். இப்படிதான் ஏகாதசி தோன்றியது, மார்கழி மாதம் கிருஷ்ணபட்சத்தில் ! ஆகையால், மார்கழி மாதத்து கிருஷ்ணபட்ச ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்று வழங்கப்பட்டது. மார்கழி மாதத்து சுக்லபட்ச ஏகாதசி மோட்ச ஏகாதசி என்று வழங்கப் பெறும். இதுவே விமோசனம் தரவல்லது இந்த ஏகாதசி விரதத்தைக் கைக்கொண்ட அளவிலே ஒருவன் இன்னல்களிலிருந்து விடுதலை பெறுவதோடு தன் தொடர்புடையவர்களையும் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் பெறுகிறான் என்கிறது சாஸ்திரம்.
சந்திராஷ்டமம் என்றால் என்ன?
சந்திராஷ்டமம் என்றால் என்ன
; அது என்ன செய்யும்?
ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம் எந்த காலகட்டங் களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன.அந்த வகையில் காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை சந்திராஷ்டமம்.
சந்திரனின் முக்கியத்துவம்
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியா கும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும்.சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.அதே நேரத்தில் புதன் இருக்கும் இடத்தையோ குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை.இதில் இருந்து சந்திரனின் முக்கி யத்துவத்தை நாம் தெரிந்துகொள்ளலாம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.
சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை வழிபாடுகள் செய்கிறோம்.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள் அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன.அந்த வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.
சந்திராஷ்டமம்
நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால் அதையே சந்திராஷ்டமம் என்கிறோம்.சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ் சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள் மனச்சங்கடங்கள் இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம் குடும்பம் வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.
ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள்.மணமகன் மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல் கிரகப் பிரவேசம் வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள்.புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள் புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள்.குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள்.ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.
எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன் மனதை ஆள்பவன்.ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம்,ஆட்சி,நீச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும்.
வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும்.இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே நேரத்தில் லாப-நஷ்டங்கள்,நிறை-குறைகள் ஏற்படுகின்றன.நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும்?
சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது:மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும்.ஞாபக மறதி உண்டாகலாம்.இரண்டாம் இடத்தில் இருக்கும்போது:பணவரவுக்கு வாய்ப்புண்டு.பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வ ளம் மிகும்.
மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல் சகோதர ஆதரவு அவசிய செலவுகள்.நான்காம் இடத்தில் இருக்கும்போது பயணங்கள், மனமகிழ்ச்சி,உற்சாகம்,தாய்வழி ஆதரவு.
ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள்,தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள்,தெளிந்த மனம். தாய் மாமன் ஆதரவு.
ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள்,எரிச்சல்,டென்ஷன். வீண் விரயங்கள்.மறதி,நஷ்டங்கள்.
ஏழாம் இடத்தில் இருக்கும்போது:காதல் நளினங்கள்,பயணங்கள், சுற்றுலாக்கள்,குதூகலம்.பெண்களால் லாபம்,மகிழ்ச்சி.
எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம்.இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது.தியானம் மேற்கொள்ளலாம்.கோயிலுக்குச் சென்று வரலாம்.
ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி,சுபசெய்தி,ஆலய தரிசனம்.
பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள்,நிறை குறைகள்,பண வரவு,அலைச்சல்,உடல் உபாதைகள்.
பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை,மூத்த சகோதரரால் உதவி,மன அமைதி,தரும சிந்தனை.
பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள் டென்ஷன் மறதி கைப்பொருள் இழப்பு உடல் உபாதைகள்.
17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்
உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.உங்கள் நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே சந்திராஷ்டம தினமாகும்.உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது.அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.
பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்வினி அனுஷம்
பரணி கேட்டை
கிருத்திகை மூலம்
ரோகிணி பூராடம்
மிருகசீரிஷம் உத்திராடம்
திருவாதிரை திருவோணம்
புனர்பூசம் அவிட்டம்
பூசம் சதயம்
ஆயில்யம் பூரட்டாதி
மகம் உத்திரட்டாதி
பூரம் ரேவதி
உத்திரம் அஸ்வினி
அஸ்தம் பரணி
சித்திரை கிருத்திகை
சுவாதி ரோகிணி
விசாகம் மிருகசீரிஷம்
அனுஷம் திருவாதிரை
கேட்டை புனர்பூசம்
மூலம் பூசம்
பூராடம் ஆயில்யம்
உத்திராடம் மகம்
திருவோணம் பூரம்
அவிட்டம் உத்திரம்
சதயம் அஸ்தம்
பூரட்டாதி சித்திரை
உத்திரட்டாதி சுவாதி
ரேவதி விசாகம்
அருள்மிகு மரகதாம்பிகை உடனாய இருதயாலீசுவரர் திருக்கோவில்
அருள்மிகு மரகதாம்பிகை உடனாய இருதயாலீசுவரர் திருக்கோவில்
திருநின்றவூர்
அடியவரின் அகத்தில் தோன்றிய ஆண்டவர் ஆலயம் கொண்டு அருளும் அற்புதத் திருத்தலம்."பூசலார் நாயனார்" திருஅவதார திருத்தலம். "சுந்தரமூர்த்தி நாயனார்"நினைத்து பாடிய வைப்புத் தலம்.சுமார் 1300 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருத்தலம்.பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அழகிய திருத்தலம். இவ்வாறு ஏராளமான பெருமைகளை உள்ளடக்கிய புண்ணிய திருத்தலம் இதுவாகும்.
ஆண்டவரின் திருத்தொண்டர்களான 63 நாயன்மார்களில் ஒருவரான "பூசலார் நாயனார்"திருஅவதாரம் செய்த திருத்தலம் திருநின்றவூர் ஆகும்.திருத்தொண்டர் புராணம் என்கிற பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார், பூசலார் நாயனார் வரலாற்றை மிக அழகாக பதிவு செய்துள்ளார்.கி.பி.7ம் நூற்றாண்டில் திருநின்றவூரில் மறையவர் குலத்தில் உதித்த பூசலார் சிறந்த சிவபக்தர். சிவபெருமானுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென்று ஆவல் எழுந்தது. குடும்ப சூழ்நிலை வறுமையில் இருந்த காரணத்தால் அவரால் இயலவில்லை. உதவி செய்யவும் யாரும் முன் வரவில்லை.எனவே ஆலயத்தை மனதிலேயே கட்ட முடிவெடுத்தார்.
மனத்தினால் கருதி எங்கும்
மாநிதி வருந்தித் தேடி
எனைத்தும் ஓர் பொருள் பேரு இன்றி
என்செய்வேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து
நிகழ் உறு நிதியம் எல்லாம்
தினைத்துணை முதலாத்தேடி சிந்தையால்
திரட்டிக் கொண்டார்.
-சேக்கிழார்
ஒரு இலுப்பை மரத்தடியில் நல்ல சுபமுகூர்த்த நாளில் தியான நிலையில் அமர்ந்து தனது வேலையைத் தொடங்கி இயல்பாக கோவிலை எவ்வாறு அமைக்க வேண்டுமோ!அதே போல் மனத்தால் நினைத்து தான் கோயிலைக் கட்டி முடித்தார்.பிறகு, குடமுழுக்கு நன்நாளையும் கணித்து விட்டார்.இச்சம்பவத்தை சேக்கிழார் பெரியபுராணத்தில் மிக அழகாக பாடியுள்ளார்.
இதே நேரத்தில் காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னன்“காடவர்கோன்” காஞ்சியில் கயிலாசநாதர் ஆலயத்தை மிகுந்த பொருட்செலவில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டிமுடித்தான்.
குடமுழுக்கு நாளை வேத விற்பன்னர்களைக் கொண்டு தீர்மானித்தான்.பூசலார் கட்டிய ஆலயமானது பக்தி மயத்தோடு அமைக்கப்பட்டது.ஆனால் பல்லவன் கட்டிய ஆலயமானது நிறைந்த பொருட்களோடும் ஆணவத்தோடும் கட்டப்பட்டது.ஆனால் இரு ஆலயங்களுக்கும் ஒரே நாளில் குடமுழுக்கு விழா நடைபெற இருந்தது.
தங்க ஏற்பாடுகள் நடைபெற்ற தருணத்தில் அரசனின் கனவில் இறைவன் தோன்றி"அன்பனே! நீ குடமுழுக்கு விழா நடத்தப் போகும் கோயிலுக்கு நாளை நான் வருவதாக இல்லை.திருநின்றவூரில் வாழும் நம் அன்பன் ஒருவன் நெடிது நாட்களாக நினைத்துக் கட்டி முடித்த கோயிலில் நாளை விடியலில் ககுடமுழுக்கு விழா. நான் அங்கு எழுந்தருளப் போகிறோம். ஆதலால் நீ வைத்திருக்கும் குடமுழுக்கு விழாவை பின்னொருநாள் வைத்துக் கொள்க"என்று கூறினார். இச்சம்பவத்தை சேக்கிழார் பெரியபுராணத்தில் மிக அழகாக பாடியுள்ளார்.
நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடு நாள் நினைத்து செய்த
நன்று நீடுஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருளப் போந்தார்
-சேக்கிழார்
உடனே பல்லவ மன்னன் தன் பரிவாரங்களுடன் திருநின்றவூர் வந்தடைந்தான்.பணக்கோயில் எழுப்பிய வேந்தனும் மனக்கோயில் எழுப்பிய வேதியரும் ஒருவரையொருவர் கண்டனர்.பூசலார் கட்டிய கோயிலின் குடமுழுக்கு விழாவை அரசன் காண விழைந்தபோது பூசலார் என் இதயத்தைப் பாருங்கள் என்று கூறி தியானித்தார்.
அரசனும் அரசியும் உட்பட அங்குள்ள அனைவரும் பூசலாரின் இதயத்தில் இறைவனைக் கண்டனர். அனைவரும் பணிந்து பூசலாரின் பூரண ஆசியைப் பெற்றனர்.பிறகு மனத்தால் எழுப்பிய ஆலயத்தில் குடமுழுக்கு விழாவை நடத்தி சில காலம் மனத்தால் அர்ச்சனை செய்து பிறகு பூசலார் முக்தி அடைந்தார் என்பது வரலாறு.பூசலார் வாழ்ந்த காலத்திலேயே இக்கோவில் காட்டப்பட்டதாக சேக்கிழார் பதிவு செய்யவில்லை.
அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார் தம்மை
நன் பெரும் பொழுது சார தாபித்து நலத்தின் ஓடும்
பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணிப்
பொன் புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார்.
கல்வெட்டுச் செய்தியை வைத்து ஆராய்ந்து பார்க்கும் பொது பிற்காலத்தில் அதாவது பூசலார் முக்தியடைந்து சில ஆண்டுகளில் பல்லவ மன்னனால் இக்கோவில் கட்டப்பட்டது தெரிகிறது.இத்தலத்தில் அவதரித்த பூசலார் இருதயத்தில் உதித்த இறைவன் என்பதால் "இருதயாலீசுவரர்"என்ற திருநாமம் பெற்றார். இத்தல இறைவிக்கு "மரகதாம்பிகை"என்பது திருநாமம்.
"ஆடம்பரத்தோடு வழிபடுபவர்களை ஆண்டவர் ஏற்பதில்லை. அகம் நிறைந்த உண்மையான பக்தியை மட்டுமே இறைவன் ஏற்கிறார்.மேலும் இறைவனை வழிபடுவதற்கு எந்த வரைமுறையும் கிடையாது.எப்படியும் வழிபடலாம்"என்பதற்கு இவ்வரலாறு தக்க சான்றாகும்.
நீண்ட செஞ்சடையனார்க்கு
நினைப்பினால் கோயிலாக்கி
பூண்ட அன்பு இடையறாத
பூசலார் பொற்றாள் போற்றி! போற்றி!
வைப்புத்தலம்:"தம்பிரான் தோழர்""வன்தொண்டர்" என பல பெயர்களால் போற்றப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் நினைத்து பாடிய வைப்புத்தலம் ஆகும்.63 நாயன்மார்களை உள்ளடக்கி பாடிய "திருத்தொண்டர் தொகை"யில் இத்தலத்தை பாடியுள்ளார்.
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையான் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்! (சுந்தரர்)
கோவில் அமைப்பு:மூலவர் அருள்மிகு இருதயாலீசுவரர் கிழக்கு நோக்கியும் அம்மன் அருள்மிகு மரகதாம்பிகை தெற்கு நோக்கியும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்."கசபிருட்டம்" என்ற அமைப்பில் தூங்கானை மாடவடிவில் சுவாமியின் விமானம் அமைந்துள்ளது.சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர்,வள்ளி,தெய்வானையுடன் சுப்பிரமணியர்,நந்திதேவர்,சண்டிகேசுவரர்,நடராசப்பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை:பூசலார் நாயனார் இறைவனை தன் இதயத்தில் நினைத்து கோயில் கட்டியதால் இதயம் தொடர்பான நோய்களுக்கு இங்கு வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.இதயநோய் குணமாக இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிசேகம் செய்தும் பட்டுவேட்டி பட்டுபுடவை ஆகியவை அணிவித்தும் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் உள்ள பக்தி மிக்க இதயநோய் மருத்துவர்கள் கூட தங்களது நோயாளிகள் விரைவில் குணமாக வேண்டும் என இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
தலசிறப்பு:மூலவர் சன்னதியின் மேற்புறம் இருதய வடிவத்தில் அமைத்துள்ளது பல்லவர் கால சிற்பக் கலைக்கு தகுந்த சான்றாகும்.மூலவர் சன்னதியிலையே பூசலார் நாயனாரின் திருவுருவம் அமைத்திருப்பது தனி சிறப்பாகும்.
தல விருட்சம் இலுப்பை மரம்
அருள்மிகு மரகதாம்பிகை
திருவடி மலரடி போற்றி! போற்றி!
அருள்மிகு இருதயாலீசுவரர்
திருவடி மலரடி போற்றி! போற்றி!
போக்குவரத்து வசதி:சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் அணைத்து இரயில்களும் திருநின்றவூரில் நின்று செல்லும். திருநின்றவூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் திருத்தலம் அமைந்துள்ளது.இரயில் நிலையத்திலிருந்து ஏராளமாக ஆட்டோ வசதி உள்ளது.
இருப்பிடம்:திருநின்றவூர்
தரிசன நேரம்:காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை
முகவரி:அருள்மிகு இருதயாலீசுவரர் திருக்கோயில்,திருநின்றவூர்,திருவள்ளூர்:602 024
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)