சனி, 24 ஆகஸ்ட், 2019

மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் உள்ள எலந்தங்குடிக்கு கிழக்கில் உள்ளது அறிவாளூர்.
முழுவதும் சிதிலமடைந்துவிட்டது,

இறைவன் சுயம்புநாதர் கருவறை மட்டும் மீதம் உள்ளது, இருந்த கதவின் அருகிலும் யாரோ சூடம் ஏற்றி கதவினை அக்னிக்கு இறையாக்கிவிட்டனர்

 கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்,
ஆலயம் தொழுவது சாலவும் நன்று,  இப்படி பழமொழிகள் பலவிருக்க கோயில்கள் சிதிலமடைவது ஏன்? பல நூறு ஆண்டுகளாக இருந்த கோயில்கள் நவீன வசதிகள் நிறைந்த இக்காலத்தில் பராமரிக்க இயலாமல் விடுவது ஏன்? சிந்திப்பீர்களா?

காரணங்கள் பல உண்டு அவற்றில் சில காரணங்கள் பட்டியலில் முதன்மையானது

கிராம சிவாலயங்கள் முன்பு உயர் வகுப்பினரால் வழிபடபெற்று, பராமரிக்கப்பெற்றன, அவர்கள் தற்போது கிராமத்தில் இருந்து பல்வேறு காரணங்களால் நகரத்திற்கு இடம் பெயர்ந்து விட்டனர். 

 அடித்தட்டு மக்கள் தமக்கென்று தனி தெய்வங்களை கொண்டுள்ளனர் அவர்கள் சிவாலய வழிபாடோ, அல்லது அதன் முறைகளை அறிந்திலர். அதனால் அவர்கள் இகோயிலை விரும்பி வருவதில்லை.

 நகரத்து மக்கள் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று பரிகார கோயில்களில் மட்டும் வரிசை கட்டி நிற்கின்றனர். பணக்கார கோயில்களுக்கு மட்டும் திரும்ப திரும்ப செல்வது , வேண்டுதல் என்ற பெயரில் அங்குள்ள உண்டியல் நிறைப்பது , இப்படி பலர்.

சிலர் கட்டுக்கடங்காத கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு கசக்கி பிழியப்பட்டு இறைவனை ஒரு செகண்டு நேரம் மட்டும் பார்த்து வெளிவரும் அவலத்தினை காண்கிறோம்.

உருவம், அருவுருவம், உருவமில்லா நிலை இப்படி பல படிகள் கடந்து செல்ல வேண்டிய நாம் இன்னும்  பக்தி என்ற பெயரில் கூண்டுக்குள்ளும், இரும்பு குழாய் பாதைகளிலும் நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறோம்
அதனால் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் , ஜோதிடர்களும், போலி சாமியார்களும், யாகம், அபிஷேகம், பரிகாரம் என பக்தியை வியாபாரமாக்கிவிட்டனர்.

அன்பர்களே ஓடும் நீங்கள் சற்றே நில்லுங்கள் யோசியுங்கள் கிராம கோயில், ,  நகரகோயில்,பெரியகோயில், சிறிய கோயில் என்று பாராமல்

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
 எனும் திருமூலர் வரிகளை மனதில் கொண்டு  அனைத்து சிவாலயங்களிலும் உங்கள் பொருளை செலவிடுங்கள்

உங்கள் பெயர் எழுதப்பட்ட கடைசி அரிசி உங்களை தேடிவரும். உங்களுக்கு கொடுக்கப்படவேண்டியதும், கொடுக்கப்படாமல் இருக்கப்படவேண்டியதும் உங்களுக்காக காத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: