புதன், 1 மே, 2019

வரும் 17.07.2019 அன்று  தண்ணிருக்கு அடியில் இருக்கும் அத்தி வரதர் சேவை சாதிக்க உள்ளார்.
 தண்ணிருக்கு அடியில் இருக்கும் அத்தி வரதர்   வரலாறு இதற்கு முன்னர் 1939 ஆண்டு சேவை சாதித்தார், 1979 ஆண்டு சேவை சாதித்தார். அடுத்த வரும் 17.07.2019 அன்று அத்தி வரதர் சேவை சாதிக்க உள்ளார்.
ஓம் நமோ நாராயணாய

கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின்  கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறார் அத்தி வரத பெருமாள்.

இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லை அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார்.  அத்தி வரத பெருமாளின் தாருமயமான திருமேனி  மரத்தினால்  செய்யப்பட்டது. மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம்.

அத்தி வரதரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர். பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர்.

ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள். வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.

அத்தி வரதர் வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்…
நின்ற கோலத்திலும், கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார். பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு தரிசிக்கலாம். மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.

இதற்கு முன்னர் 1939 ஆண்டு சேவை சாதித்தார், 1979 ஆண்டு சேவை சாதித்தார். அடுத்த வரும் 17.07.2019 அன்று அத்தி வரதர் சேவை சாதிக்க உள்ளார்.

ஓம் நமோ நாராயணாய🙏🙏
பெரியவா துறவறம் பூண்டு பீடாதிபதியான சம்பவம்



சொப்பனத்துல ஒரு யானை வந்து எனக்கு மாலை போட்டதை சொன்னேன். பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே யானை மாலை போடும்’னு பெருமையா சொன்னே. என்னைச் சுவாமி அறைல நிக்கவைச்சு சுற்றிப்போட்டே. நான் பெரிய சக்கரவர்த்தியா ஆகப் போறேன்னு சொல்லித் திருஷ்டிக் கழிச்சே மறந்துட்டியாம்மா? (பூர்வாசிரம பெரியவா) ஸ்வாமிநாதன்.

மஹா பெரியவா சுவாமிநாதனாகப் பிறந்து பாலகனாக வளர்ந்து துறவறம் பூண்டு பீடாதிபதியாக வேண்டும் என்ற நிகழ்வு. இறைவன் ஏட்டில் எழுதி வைத்தது வரி மாறாமல் நிகழ்ந்திருக்கிறது!

1907-ம் வருடம் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 66வது பீடாதிபதி வைசூரிகண்டு ஸித்தியடைந்ததும் அதற்கு முன்னால் லட்சுமி காந்தனை 67-வது மடாதிபதியாகப் பீடத்தில் அமர்த்தியதும், பீடம் ஏறிய இளைய சுவாமிகளும் எட்டாம் நாளே தன் பூத உடலைத் துறந்து விட்டதும் விதிக்கப்பட்ட வகையில் நடந்தேறியவை என்றே கருத வேண்டும். அந்த எட்டு பத்து நாள்களும் கலவையில் மடத்தின் சிப்பந்திகளும் பக்தர்களும் சந்தித்திருக்கக்கூடிய உணர்ச்சிமயமான அனுபவங்களையும் நிகழ்வுகளையும் கற்பனை செய்து பார்க்கும்போது நெஞ்சம் கனக்கிறது. இளைய சுவாமிகளின் விருப்பத்தின் படி சுவாமிநாதன் பீடாதிபதி ஆன போது அன்னை மஹாலட்சுமியின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தும் பார்க்க இயலவில்லை.

சுவாமிநாதனைப் பத்து மாதம் சுமந்து பொன்மேனியனாக வளர்த்து உலகுக்காகத் தாரைவார்த்துக் கொடுத்து விட்டு சற்றுத் தொலைவில் நின்றபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு பிறகு விடைபெற்ற கணத்தில் அவளின் கண்கள் கலங்கியிருக்கும். தனியாக பஸ் ஏறி தனது ஊர் நோக்கிப் பயணித்த போது அவளது இதயம் படபடத்திருக்கும்.

முதலில் சுவாமிநாதனால் அம்மாவைச் சமாதானப்படுத்த முடியவில்லை.

“அம்மா… ஏன் கண் கலங்கறே?”

“உன்னைப் பிரிஞ்சு நான் எப்படிடா இருப்பேன்? சதா என் காலைச் சுத்திச் சுத்தி வருவியே… நீ எதுவும் கேட்கமாட்டே... ஆனால் உன் வாய் ருசிக்கு ஏத்த மாதிரி சமைச்சுப் போடுவேனே… இனிமே அதெல்லாம் முடியாதே சுவாமிநாதா...”

“அம்மா… நீ மறந்துட்டியா?”

“எதை?”

“கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு ஒரு சொப்பனம் வந்ததை உன்கிட்டே சொன்னேனே… அந்தச் சொப்பனத்துல ஒரு யானை வந்து எனக்கு மாலை போட்டதையும் சொன்னேன். ‘பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே யானை மாலை போடும்’னு நீ பெருமையா சொன்னே. என்னைச் சுவாமி அறைல நிக்கவைச்சு சுற்றிப்போட்டே. நான் பெரிய சக்கரவர்த்தியா ஆகப் போறேன்னு சொல்லித் திருஷ்டிக் கழிச்சே… மறந்துட்டியாம்மா?” மகனைப் பார்த்தபடியே மெளனமாக நின்றாள் தாய்.

“இப்போ மடத்துக்கு நான் பொறுப்பேற்கறது தான் அந்த ராஜ யோகம்னு நினைச்சுக்கோயேன்…” என்று மகன் சமாதானம் சொன்னவிதமும் மஹா லட்சுமிக்கு ரசிக்கும் படியாகவே இருந்தது! ஆனால் வீடு திரும்பிய பிறகும் மகனை நினைத்துப் புலம்பிய படியே இருந்தாள் மஹா லட்சுமி. எந்த வேலையும் அவளுக்கு ஓடவில்லை. வீட்டில் சுவாமிநாதன் குறுக்கும்நெடுக்குமாக ஓடிக்கொண்டிருப்பது மாதிரியான பிரமை அவளுக்கு. இரவு நித்திரையின்றி தவித்தாள். மஹா லட்சுமியை அமைதிப்படுத்தும் விதமாக ஆதிசங்கரரின் பால்ய நாள்களை நினைவூட்டினார் கணவர் சுப்ரமணிய சாஸ்திரிகள்.

சங்கரருக்கு அப்போது எட்டு வயது. ஒரு முறை யோகிகள் சிலர் அவருடைய வீட்டுக்கு வந்தனர். வந்தவர்கள் தாய் ஆர்யாம்பாவிடம் சங்கரர் அவதரித்துள்ள சூழ்நிலையையும் காலநிலையையும் விளக்கிச் சொன்னார்கள். அம்மா! உண்மையான தெய்வ சங்கல்பத்துக்கேற்ப இந்தக் குழந்தை எட்டு ஆண்டுகள் தான் இந்த மண்ணுலகில் வாழ வேண்டும். இருப்பினும் அந்த வயது இரு மடங்காகப் பெருகும்’ என்று ஆசி கூறிச் சென்றனர். என்ன தான் இறை விருப்பம் என்றாலும் தன் மகனுக்குக் குறுகிய ஆயுள் தான் என்பதை அறிந்த ஆர்யாம்பா மிகவும் துயருற்றாள். அவளுக்குச் சமாதானம் சொன்னார் மகன்.

அம்மா! அறியாமையுடன் கூடிய இந்த வாழ்க்கை வெறும் தோற்றம் தானே தவிர நிஜமானது அல்ல. தாய், தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற பலவகையான உறவுகளுடன் ஆத்மாக்கள் ஒன்று சேர்வது பயணம் செய்கிறவர்கள் உறவு கொள்வதைப் போன்றது தான்… என்று அன்னைக்கு எடுத்துரைத்தார். மகனிடத்தில் ஒரு துறவிக்கான இயல்புகள் தென்படுவதைக் கண்டறிந்தாள் ஆர்யாம்பா. சங்கரரைத் துறவியாகத் திரியவிட அவளுக்கு விருப்பமில்லை. சராசரி தாயாரைப் போல் மகனுக்கு விரைவில் திருமணம் செய்துவைக்கும் ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினாள்.

ஆனால் சங்கரரின் எண்ணமும் விருப்பமும் வேறாக இருந்தன. வாழ்க்கையில் பெரியதாக ஒன்றைச் சாதிக்கும் லட்சியத்துடன் அவதரித்தவர் அவர். தான் பெற்ற பூரணமான அனுபவத்தை உலகம் முழுவதற்கும் வழங்கி ஆனந்தமயமான அருமையான சாந்தி நிறைந்த இன்ப வாழ்வுக்கு மனித குலம் முழுவதையும் அழைத்துச் செல்ல ஆயத்தமானார்.

இளம் பருவத்திலேயே குடும்ப வாழ்க்கையைத் துறக்க விரும்பினார் சங்கரர். தாய்க்கோ மகனை இழக்கச் சம்மதமில்லை. அவளை மனம் மாறவைக்கும் விதமாக ஒரு தெய்விக அற்புதம் நிகழ்ந்தது... கணவர் விவரித்து கொண்டிருப்பது தனக்குத் தெரிந்த வரலாறு தான் என்றாலும் சுப்ரமணிய சாஸ்திரிகள் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் மஹா லட்சுமி. நான் ஒரு தாயாருக்கு மட்டும் குழந்தை இல்லை. இந்த ஒட்டு மொத்த உலகுக்கும் குழந்தை. உலகம் பூராவுக்கும் செய்ய வேண்டியதை ஒரு தாயாரை முன்னிட்டு எத்தனை காலம் ஒத்திப் போட்டுக் கொண்டே போவது? கெட்டுப் போய்விட்ட லோகத்தை சீர்படுத்துவதற்கு வந்துவிட்டு அந்தக் காரியத்தில் ஈடுபடாமல் இருந்தால் எப்படி? என்றெல்லாம் சங்கரர் யோசித்திருக்க வேண்டும்... திருக்கதையைச் சற்று நிறுத்திவிட்டு மஹா லட்சுமி என்று அழைத்தார் சுப்ரமணிய சாஸ்திரி.

“சொல்லுங்கோன்னா...”

ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ… ஈஸ்வர லீலை அவதாரம்னு வரும் போது நம்ம மூளைக்கு எட்டாத பல விஷயங்கள் நடக்கறது சகஜம். இப்ப ராமர் கதையையே எடுத்துக்கோயேன்… தசரதரின் புத்ரகாமேஷ்டி யாகத்தின் பலனாக அவருக்கு மகனாகப் பிறந்தவர் ராமன். கொஞ்ச காலம் அப்பாவுக்குப் பிள்ளையா வளர்ந்தார். அப்புறம் அவதார காரியம் அழைப்பு விடுக்க தந்தை அழுது அழுது உயிரை விட்டாலும் வனவாசத்துக்குப் புறப்பட்டு விட்டார். சங்கரர் விஷயத்துல அதுவே வேற மாதிரி நடந்திருக்கு… என்றபடி சுப்ரமணிய சாஸ்திரி சங்கரரின் திருக்கதையைத் தொடர மஹா லட்சுமி ஆர்வமானாள்…

ஒரு பிள்ளை தாயாரின் அனுமதி இல்லாமல் சந்நியாசியாகக் கூடாது. அதன் படியே சங்கரரும் தாயாரின் அனுமதியுடனேயே துறவு மேற்கொள்வது என்று தீர்மானித்தார். தக்க தருணம் வருமென்று காத்திருந்தார். வீட்டுக்கு மிக அருகில் வந்து விட்ட பூர்ணா நதியில் ஒரு நாள் ஸ்நானம் பண்ண இறங்கினார் சங்கரர். அப்போது அவர் காலை ஒரு முதலை பிடித்துக்கொண்டது. பிடித்து ஆழத்துக்கு இழுக்கவும் தொடங்கியது. அம்மா… அம்மா…’ சங்கரரின் குரல் எட்டு திக்குகளிலும் ஒலித்து எதிரொலித்தது. கன்றின் குரல் கேட்டுப் பதறியடித்து ஓடோடி வந்தது தாய்ப்பசு. கணவரோ காலமாகி விட்டார். இப்போது மகனும் மரணத்தின் காலடியில் செய்வதறியாமல் திகைத்தாள் ஆர்யாம்பா.

ஆனால் சங்கரருக்கோ தான் காத்திருந்த நேரம் இப்போது வந்து விட்டது என்று தோன்றியது. அம்மா! முதலையின் வாயிலிருந்து நான் தப்பிப்பது என்பது நடக்காத காரியம். இது சராசரியான இறப்பில்லை. துர்மரணம். உனக்கும் புத்ர கர்மாவினால் ஏற்படும் நற்கதி கிடைக்காமல் போய் விடும். இந்த ஆபத்திலிருந்து மீண்டு வர எனக்கு ஒரே ஒரு வழிதான் தோன்றுகிறது. உனக்குச் சம்மதம் என்றால் சொல். அதன் படியே செய்கிறேன்’ என்றார் சங்கரர்.

என்னப்பா சொல்றே? குரல் நடுங்கக் கேட்டாள் தாய்.

அம்மா… இப்போது நான் சந்நியாஸாச்ரமம் வாங்கிக் கொண்டால் எனக்கு வேறு ஒரு புது ஜன்மம் வந்து விட்டது போலாகி விடும். அதன் மூலம் முன் ஜன்மத்தின் கர்மவினையால் ஏற்பட்ட மரணமும் விலகி விடலாம். காலை இழுக்கும் முதலையும் என்னை விட்டு விடலாம். ஒருவன் சந்நியாசியானால் அவனுக்கு முந்தைய இருபத்தியொரு தலைமுறையினருக்கு நற்கதி கிடைக்கும். அதனால் உனக்கும் அப்படி ஸித்திக்கும்… பேச்சற்று நின்றாள் ஆர்யாம்பா. அவளுக்கு நெஞ்சம் படபடத்தது.

அம்மா… நீரில் நின்று கொண்டு தான் துறவற தீட்சை மேற்கொள்வதற்கான மந்திரத்தைச் சொல்லி மனதினால் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். தற்செயலாக நான் நீரின் நடுவிலேயே இருக்கிறேன்... அதனால் தான் சந்நியாசம் வாங்கிக்கொள்ள இது தான் தக்க தருணமென்று கருதுகிறேன். இருப்பினும் உன் அனுமதியில்லாமல் சந்நியாசம் வாங்கிக்கொள்ள எனக்கு உரிமையில்லை. அதனால் நீதான் இப்போது ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று சங்கரர் தீர்மானமாகச் சொல்லவும் குழம்பினாள் ஆர்யாம்பா.

தன்னுடன் வாசம் செய்யா விட்டாலும் மகன் எங்கேயாவது துறவியாக இருக்கட்டும். ஆயுசோடு இருந்தால் எப்போதாவது அவனைப் பார்க்கலாம். அப்படிப் பார்க்க முடியா விட்டாலும் குழந்தை எங்கேயாவது சௌக்கியமாக இருந்து கொண்டிருந்தால் போதும் என்று நினைத்தாள். இருப்பினும் சந்நியாசம் வாங்கிக்கோ என்று ஒரு தாயாரால் சர்வ சாதாரணமாக சொல்லி விட முடியாதே!

சங்கரா! உனக்கு எப்படி தோன்றுகிறதோ உனக்கு எது சரியென்று படுகிறதோ அப்படியே செய்துகொள்… என்றாள். இப்படி சங்கரர் துறவியான வரலாற்றைக் கணவர் சொல்லி முடிக்க மஹா லட்சுமியின் மனம் லேசானது. முன்ஜன்ம புண்ணியத்தால் தான் ஈன்றெடுத்த மகன் சுவாமிநாதன் ஒரு புனிதப் பணிக்காக அழைக்கப்பட்டிருப்பதை நினைத்துப் பூரித்துப்போனாள்.

சந்திரசேகரா… என்று உணர்ச்சி மிகுதியால் முணு முணுத்தாள் மஹா லட்சுமி.