வெள்ளி, 13 செப்டம்பர், 2013

மனதை ஒருமுகப்படுத்துங்கள்!

மனம் மகிழ்வோடு இருத்தலும், சாந்தமான போக்கும், மவுனமும், மனதை அடக்கி ஆளுதலும், உள்ளத்தூய்மையும் என்ற இவையெல்லாம் மனதால் செய்யும் தவத்தில் அடங்கும். மனம் தன் சஞ்சலத்தை காட்டும் போதெல்லாம் உடனுக்குடன் அடக்கி ஆன்ம வயப்படுத்திக் கொள்ள முற்பட வேண்டும். விரும்பியதை அடைந்து வரம்பின்றி மகிழ்தலும் ஆகாது. துன்பம் வந்தபோது மனம் சிதையவும் கூடாது. மன உறுதியுடன் மயக்கத்திற்கு இடம் கொடாமல் மெய்ப்பொருளை உணர்ந்து பிரம்ம நிலையில் நிற்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்த முடியாதவனுக்கு அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் கிடையாது. ஆழ்ந்த சிந்தனையற்றவன் சாந்தியும் இன்பமும் பெறமுடியாது. மனதை அடக்கி இருந்தாலும் சில சமயங்களில் ஐம்பொறிகள் வழியாக ஆசை புயல்கள் எழுந்து மனிதனுடைய அடக்க சக்தியை வேரோடு பறிக்க முயல்வதுண்டு. அவன் தன்னுடைய மனத்திடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்துவிடாமல் என்னை உறுதியாக பற்றிக்கொள்வானாக. பட்டினி கிடக்கும் மனிதனிடம் பலவித இச்சைகளும் அடங்கிப்போகின்றன. ஆனால் அவற்றை அடையவேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்குவதில்லை. கடவுளை நேரில் தரிசித்தாலன்றி அவற்றில் உள்ள ஆசை நீங்குவதில்லை. கோபத்தால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாறுகையில்  நீங்குவதில்லை. கோபத்தால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாறுகையில் மதிக்குழப்பம் உண்டாகிறது. மதிக்குழப்பத்தால் புத்தி அழிந்துவிடுகிறது. புத்தி அழிந்தவன் செத்தவனுக்கு சமமாகிறான். நுகரும் பொருட்களைப் பற்றி சிந்தித்தால் அவற்றின் மீது பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து அடங்கா மோகம் உண்டாகிறது. மோகத்தால் சிந்தை கெடுகிறது; நினைவு அழிகிறது. நினைவு கெடவே, உயரிய லட்சியம் மறைந்து போகிறது. அப்போது மனிதன் அழிந்து விடுகிறான். புகையால் நெருப்பும், புழுதியால் முகப்பார்வையும் மூடப்பட்டு போகிறது. அதுபோலவே காமம் என்ற பகைவனால் மெய்யறிவும் மூடப்பட்டு விடுகிறது. தானம் அளித்தல் தன் கடமை என்னும் உணர்வோடு இடம், தகுதி, காலம் ஆகியவற்றையும் கவனித்து திரும்பத்தர இயலாதவனுக்கு அளிக்கும் தானம் சாத்வீக தானம் எனப்படும். எதனால் மனதிற்கு வருத்தம் உண்டாகிறதோ, எதில் பிரதிபலன் எதிர்பார்க்கப்படுகிறதோ, எந்த தானம், விளைவில் கருத்துடன் அளிக்கப்படுகிறதோ அது ராஜஸ தானமாகும். மரியாதை இல்லாமலும், அலட்சிய புத்தியுடனும், தகாத இடத்திலும், தானம் பெறுவதற்கு தகுதியில்லாதவனுக்கும் தரப்படுவது தாமஸ தானம் ஆகும். மிகைப்பட உண்பவனுக்கு யோகம் இல்லை. உணவற்றவனுக்கு ஏகாந்த நிலை எய்தாது. மிகுதியாக உறங்குபவனுக்கும் அது கிடைக்காது. மிகுதியாக விழித்திருப்பவனுக்கும் அது இல்லை. இவற்றில் எல்லாம் அளவோடு இருப்பதே ஒருவகை யோகம். பசுவிடம் உள்ள பால், உண்மையில் அதன் சரீரம் முழுவதும் ரத்தத்தில் சத்தோடு சாரமாக கலந்து பரவி உள்ளது. என்றாலும் பால் மடியிலேயே சுரக்கிறது. அதுபோல் ஈஸ்வரன் உலகில் எங்கும் விரவியிருக்கிறான். எனினும் இதயத்தில் தியானத்தால் எழுந்தருளுகிறான். பேசாமல் மவுனமாக இருப்பதே, நல்ல காரியம் செய்வதற்கு சாதகமான சந்தர்ப்பங்களை உண்டு பண்ணக்கூடியது. மரணமும் பிறப்பும் பெரியதொரு விஷயங்கள் எனக்கருதி குழம்பிப் போகவேண்டாம். மரணம் என்பது, உயிரானது வேறு ஒரு தேகத்தை சென்றடையும் நிகழ்வுதான். உயிருக்கு சாவு என்பது இல்லை. தினந்தோறும் கடலுக்குள் ஆறுகள் வந்து பாய்கின்றன. ஆனாலும் கடல்நீர் அதிகரிப்பதும் இல்லை. குறைவதும் இல்லை. அவ்வாறு இருப்பவனே பரிபூரண ஞானி. ஐம்பொறிகள் வழியாக  அவனுடைய ஆன்மாவுக்குள் ஆசை வெள்ளங்கள் வந்து பாய்ந்தவண்ணமே இருக்கும். என்றாலும் அவனுடைய ஆன்மாவோ, வந்துசேரும் அந்த காணிக்கைகளை பெற்றுக் கொண்ட போதிலும், எப்போதும் ஒன்றுபோல அமைதியாகவே இருக்கும். 

  கீதையில் கண்ணன்
நவராத்திரி வழிபாடும் சிறப்பும்!

உயிரைக் காக்கும் நவராத்திரி

நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான். அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக <உள்ளது. அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது  (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் <உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும். இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும், என்றார். இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை  விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை  அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி. கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள்,  சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.  இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும். மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.
தேவியரின் வாகனம்
இந்திராணி - யானை
வைஷ்ணவி - கருடன்
மகேஸ்வரி - ரிஷபம்
கவுமாரி - மயில்
வராகி - எருமை
அபிராமி - அன்னம்
நரசிம்மி - சிங்கம்
சாமுண்டி - பூதம்
அம்பாளை வணங்குவதன் பலன்
அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன. இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்
ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்
ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம்
விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்
ஜெய் ரோகிணி- நோய் தீரும்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.  கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச்  சொல்லவும்.
பெண்கள் பண்டிகையா?
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் <உருவாக்கப்பட்டிருக்கிறது. நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே. ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.
பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா
மகேஸ்வரி- சிவன்
கவுமாரி- குமரன் (முருகன்)
வைஷ்ணவி- விஷ்ணு
வராஹி- ஹரி (வராக அவதாரம்)
நரசிம்மி- நரசிம்மர்
இந்திராணி- இந்திரன்.
இதிலிருந்து, நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.
அம்மையைத் தடுக்க அஷ்டமி படிப்பு
நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி
(நவராத்திரியின் எட்டாம் நாள்) நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது. பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை. நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும். அம்மை நோய் வராது என்பது மிகவும் முக்கியம். நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை நீங்கள் வாசிக்கலாம்.
மூன்று மூன்றாக பிரித்தது ஏன்?
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள்  லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம். இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம். பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி. ஆக, காரண காரியங்க ளுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.
புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.  நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில்  சஞ்சரிப்பார். புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.


திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

* தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.
* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால்  அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.
* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.
* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.
* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.
* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.
* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா? 
ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத்  திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து  விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.
* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. 
* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.
 * பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர்  ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார்.  இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.
* அபிஷேகம் மற்றும் அலங்காரம்  செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.
* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.
* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.  
* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.
* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.
 * சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.
* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள்.  தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.
* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.
[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. தொகுப்பு: டாக்டர். பி. உமேஷ் சந்தர் பால்]






குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்?

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முன்புள்ள கடலை அக்னி தீர்த்தம் என்கிறோம். குளிர்ந்த தண்ணீருடைய கடலுக்கு சுட்டெரிக்கும் அக்னியின் பெயரைச் சூட்ட காரணம் உண்டு. ராமபிரானின் மனைவி சீதாதேவி ராவணனால் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டாள். அவளை மீட்டுக்கொண்டு ராமபிரான் ராமேஸ்வரம் வந்தார். ராவணனிடம் இருந்த அவள் கற்புடன் தான் இருக்கிறாளா என்று மக்கள் சந்தேகம் கொள்ளலாம் அல்லவா! எனவே, தன் மனைவி களங்கமற்றவள் என்பதை நிரூபிக்குமாறு கூறினார். சீதாதேவி இதற்காக சற்றும் தயங்கவில்லை. லட்சுமணனை அழைத்து அக்னி மூட்டச்சொன்னாள். அவன் தயங்கினான்.நாம் அயோத்தியை விட்டு கிளம்பும் போது, உன் தாய் சுமித்திரை சொன்னது நினைவில்லையா! என்னைத் தன்னைப் போல் காக்க வேண்டுமென்று. இப்போது, உன் தாய் ஸ்தானத்தில் இருந்து உத்தரவிடுகிறேன். உம்..தீயை மூட்டு, என்றாள். அவன் வேறு வழியின்றி கட்டைகளை எடுத்து வந்து அடுக்கி தீ மூட்டினான். ஏ அக்னியே! நான் உன்னுள் இறங்குகிறேன். நான் கற்புடையவள் என்பதை இத்தனை பேர் முன்னிலையிலும் நிரூபித்துக் காட்டு, என்றாள். கொழுந்து விட்டு எரிந்த அக்னிக்குள் அவள் இறங்கினாள். அக்னி பகவானுக்கு மகா சந்தோஷம். ஏனெனில், சீதை மகாலட்சுமியின் அவதாரம். அந்த மகாலட்சுமியின் ஸ்பரிசம் தனக்கு கிடைக்கிறதே என்ற  ஆனந்தம். அவன் மனம் குளிர்ந்தான். அந்த ஆனந்தத் தில், அவனது இயற்கை குணமான வெப்பம் குளிராக மாறிவிட்டது. சீதையை அவன் மனிதவடிவெடுத்து கைகளில் தூக்கி வந்து ராமனிடம் கொடுத்து, தர்மபத்தினியான இவளை என்னால் எரிக்க முடியாது, என்றான்.அவன் ராமேஸ்வரம் கடற்கரையில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியதால், அவனது பெயரே கடலுக்கும் அமைந்து விட்டது. சீதை எப்படி அக்னியில் மூழ்கி தன்னைச் சுத்தமானவளாகக் காட்டினாளோ, அதுபோல், இங்கு வரும் பக்தர்களும் அக்னி தீர்த்தக் கடலில் மூழ்கி, தங்களைப் பாவமற்றவர்களாக்கிக் கொள்கிறார்கள்.
திருமாலின் தசாவதாரம்!

வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர். 

மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார். 

கூர்மாவதாரம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர்.

வராக அவதாரம்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.

நரசிம்ம அவதாரம்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். 

வாமன அவதாரம்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார். 

பரசுராம அவதாரம்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.

ராமாவதாரம்: ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

பலராம அவதாரம்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

கிருஷ்ணாவதாரம்: வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார். 

கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்.



மதுரை மீனாட்சி கோயிலில் எப்போது தரிசிக்கலாம்!

தினமும் காலை 5 மணிக்கு அம்மன் சன்னதி வாசலில் சித்தி விநாயகர், முருகனுக்கு பூஜை செய்யப்படும். காலை 5.10 மணிக்கு பள்ளியறையில் உள்ள சுவாமி, அம்மனுக்கு பூஜை செய்தவுடன், காலை 5.15 மணிக்கு, மூலஸ்தானத்தில் தீபாராதனை காட்டி, திரை விலக்கப்படும். காலை 5.30 மணிக்கு பள்ளியறையிலிருந்து சுவாமி, தனது சன்னதிக்கு புறப்படுவார். அங்கு காலை 5.45 மணிக்கு பூஜைகள் செய்து, திரை விலக்கப்படும். பின், பரிவார தெய்வங்களுக்கு பூஜை செய்யப்படும். காலை 6.30 மணிக்கு அம்மன் சன்னதியில் அபிஷேகத்திற்காக திரை போடப்படும். காலை 6.45 மணிக்கு திரை விலக்கப்பட்டு, தீபாராதனை நடக்கும். மீண்டும் திரை போடப்பட்டு காலச்சந்தி பூஜை நடத்தப்படும். பின் காலை 7.15 மணிக்கு திரை விலக்கப்பட்டவுடன், காலை 10.30 மணி வரை அம்மனை தரிசிக்கலாம். சுவாமி சன்னதியிலும் இதேமுறை பின்பற்றப்படுகிறது. மீண்டும் காலை 10.30 மணிக்கு திரை போடப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். காலை 10.45  மணிக்கு திரை விலக்கப்பட்டு, தீபாராதனை காட்டி, மீண்டும் திரை போடப்படும். காலை 11.15 மணிக்கு திரை விலக்கப்பட்டவுடன் அலங்கார கோலத்தில் மதியம் 12.30மணி வரை அம்மனையும், சுவாமியையும் தரிசிக்கலாம். பின் நடை சாத்தப்படும். பக்தர்களின் வசதிக்காக, மாலை 3.45 மணிக்கு பூஜை செய்து, 4 மணிக்கு திரை விலக்கப்படும். இரவு 7.30 மணி வரை தரிசனம் செய்யலாம். இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜைக்காக திரை போடப்பட்டு, இரவு 8 மணிக்கு விலக்கப்படும். அப்போது அம்மனை வெள்ளை பட்டுபுடவை அல்லது காட்டன் புடவையில் இரவு 9.15 மணி வரை தரிசிக்கலாம். பின், பள்ளியரை பூஜை நடக்கும். விசேஷ நாட்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது.
1000 ஆண்டுகண்ட தஞ்சை பெரிய கோயில்.



கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து.
சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது. மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள்
உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ.  இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர்.  இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா. யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு
ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த
சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.
திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான,சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும்,
புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய். குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது.
சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து. வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும்,  அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர்.
தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.  உளிகள்,
நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.
எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக
இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள் என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன.  விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (ஈதஞுடூ). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள்.
தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது. கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும் என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.
விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த
அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள்.  ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால்
அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு! உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.
அமாவாசையில் அன்னாபிஷேகம்!

திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மகாளய அமாவாசை தினத்தன்று, சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, பித்ரு தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். அமாவாசைதோறும் அன்னாபிஷேகம் நடக்கும் விசேஷ தலம் இது.
பொதுவாக சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில்  எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது. பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசை யன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், விளமல் கோயிலில் உள்ள  அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு!

எப்படி வந்தது யானை முகம் ?


விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.
தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.
யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத்தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது. விநாயகருக்கு, சுமுகர் என்ற பெயருண்டு. ச என்றால் மேலான அல்லது ஆனந்தமான என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், ஓம் கணேசாய நம என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.


பெண் உருவ பிள்ளையார்.
பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையார் கணேசினி என்றும், கஜானனி என்றும் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண்ணுருக் கொண்டு இருகரங்களில் அபய, வரத முத்திரைகளைக் கொண்டு நிற்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுவாமி சன்னதி நுழைவு வாயிலின் வலது பக்க தூணில் கணேசினியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் வியாக்ரபாத கணேசினி என அழைக்கப்படுகிறார்.

பிள்ளையார் சுழி தேவதைகள்!

பிள்ளையார் சுழியில் உள்ள அகரத்திற்குப் பிரம்மன், உகரத்திற்குத் திருமால், மகரத்திற்கு ருத்திரன், பிந்துவிற்கு மகேசன், நாதத்திற்குச் சிவன் என்று குறிப்பிடுகின்றனர். எனவே, ஐந்து தெய்வ வணக்கமே பிள்ளையார் சுழி என்பர்.

விநாயகரும், சர்ப்பமும்!

விநாயகர் உதரவந்தம் பாம்பு. அணி பாம்பு, பூணூல் பாம்பு எனத் தம் உடலில் சர்ப்ப அணிகலன் கொண்டுள்ளார். பிள்ளையார்பட்டியில் லிங்கமும் பாம்பும், திருப்பரங்குன்றத்தில் கரும்பும், பவானியில் வீணையும், மானாமதுரையில் சங்கும், சங்கரன்கோவிலில் பாம்பாட்டிச் சித்தர் பீடத்தில் நாகத்தையும் கையில் கொண்டுள்ளார். தேனியில் அமிர்த கலசம் ஏந்தி காட்சியளிக்கிறார்.
பிள்ளையார் பிரார்த்தனை பலன்கள்!

மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும்.உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர்.கல்லால் அமைந்த விநாயகரை வழிபட, சகல பாக்கியங்களும் பெறலாம்.

விநாயகர் - சில தகவல்கள்!

தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரிப் பிள்ளையார். இங்குள்ள தேர், ஏழரை கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது.                                                               

இழந்த பதவிகளை மீண்டும் பெற...

சிலருக்கு தொழிலில் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்; சிலருக்கு பதவி இழப்பு ஏற்பட்டிருக்கலாம்; சிலருக்கு சொத்து இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இவர்கள், நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் நர்த்தன விநாயகரை அணுகி, அவருக்கு அபிஷேகம் செய்து, இனிப்பு நைவேத்யம் செய்து, வழிபட்டு வந்தால், இழந்தவைகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.       
                                           
வியப்பூட்டும் விநாயகர்!
வித்தியாசமான விநாயகர்: கை - தொழில், கும்பம் ஏந்திய கை - ஆக்கும் தொழில், மோதகம் ஏந்திய கை - காக்கும் தொழில், அங்குசம் ஏந்திய கை - அழிக்கும் தொழில், பாசம் ஏந்திய கை -மறைத்தல் தொழில். விநாயகருக்கு விருப்பமான நிவேதனம்: மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், தேன், கல்கண்டு, சர்க்கரை, தினை மாவு, பாகு, அதிரசம் முதலியன. பன்னிரெண்டு விநாயகர்: வக்ரதுண்டர்,  சிந்தாமணி, கணபதி, கஜானை கணபதி, விக்ன கணபதி, மதுரேச கணபதி, துண்டு கணபதி, வல்லப கணபதி, தூப கணபதி, கணேசர், மதோத்கட கணபதி, ஹேரம்ப கணபதி, விநாயகர். விநாயகர் என்ற சொல்லுக்கு சிறந்த தலைவர் என்று பொருள். வி - சிறந்த, நாயகர் - தலைவர். விநாயகரை உருவாக்க: கருங்கல், சலவைக்கல், பளிங்குக்கல், சுத்தி, வெள்ளை எருக்குவேர், பஞ்சலோகம், வெள்ளி, செம்பு, பொன், தந்தம், மஞ்சள், சந்தனம், சர்க்கரை, பசுஞ்சாணம், முத்து, பவளம், மண், விருட்ச மரங்கள் முதலியன.
     
கணபதியின் 16 வடிவங்கள்

விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும்.

1. பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும். 
2. தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால
ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை
வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.

3. பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நன்கு அமையும்.

4. வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

5. சக்தி கணபதி: பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

6. துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.
7. சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.
8. உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.

9. விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற
மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.

10. க்ஷிப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

11. ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விள
ங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.
12. லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.
13. மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

14. புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.

15. நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும்  துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.
16. ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர்.  தேவியைதன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
ஐங்கரன்- பெயர்க்காரணம்

இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு  கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார்.  நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில்  விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது.  விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது  கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும்  வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம்  அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும்  அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

ஊத்துக்குளி நர்த்தன விநாயகர்
விநாயகரது, நர்த்தனக் கோலம் (நடனமாடுவது) மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இப்படி ஒரு அபூர்வ கோலத்தை திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் காணலாம். இக்கோயிலிலுள்ள விநாயகர் தனது வாகனமான மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனால் நர்த்தன விநாயகர் என்றழைக்கப்படுகிறார். விநாயகர் சன்னதி முன் மூஞ்சூறு இருப்பது வழக்கம். ஆனால் ஊத்துக்குளி பெரியநாயகி கைலாசநாதர் கோயிலிலுள்ள விநாயகர் மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது விசேஷமாகும்.
பிள்ளை மனம் கொண்டவர் வெள்ளை குணம் உடையவர்

விநாயகருக்குப் பலவிதமான பெயர்கள் வழங்கப்படுகின்றன. அப்பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு.

கணபதி                                                                   பூதகணங்களுக்கெல்லாம் தலைவன்
விக்னேஸ்வரன்                                                   தடை அனைத்தையும் போக்குபவர்
லம்போதரன்                                                          தொந்தி உடையவர்
ஐங்கரன்                                                                   ஐந்து திருக்கரங்களைக் கொண்டவர்
வக்ரதுண்டன்                                                         வளைந்த துதிக்கை பெற்றவர்
பிள்ளையார்                                                           குழந்தைபோல் வெள்ளைமனம் கொண்டவர்
ஒற்றைக்கொம்பன்                                              ஒரு கொம்பு உடையவர்
ஹேரம்பர்                                                                திக்கற்றவர்களுக்கு உதவுபவர்
விநாயகர்                                                                  மேலான தலைவர்
தந்திமுகன்                                                              தந்தத்தை பெற்றவர்

தந்தையைப்  போல் பிள்ளை
தாயைப் போல பிள்ளை என்பது தான் உலக வழக்கு. ஆனால், தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகப்பெருமான் ஒத்திருப்பார். இருவரும் வேறு வேறு அல்லர். சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப்பெருமான் என்பர்.

1) சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்
2) சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள்
3) இருவருக்கும் மூன்று கண்கள்
4) தலையில் இருவரும் மூன்றாம் பிறையணிந்திருப்பர்
5) இருவரும் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பர்
6) தந்தையைப் போல இவரும் ஐந்தொழில்களைச் செய்வர்
7) இருவரும் நடனக்கோலத்தில் காட்சி தருவர்(நடராஜர், நர்த்தன கணபதி)
8) பார்வதி சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், வல்லபை விநாயகரின் இடப்பக்கம் இருப்பாள்.

எலி மீது யானை அமர்ந்தது எப்படி?
யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.




 

விநாயகர் வழிபாட்டு முறைகள் ...

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத் தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினியிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.

பிள்ளையார் பற்றிய நாட்டுப்புறப்பாடல்
பிள்ளையார் பற்றி அந்தக்காலத்தில் தாத்தாக்களும், பாட்டிகளும் பேரன் பேத்திகளுக்கு பாட்டுகளின் மூலம் அவரது பெருமையை எடுத்து விளக்குவார்கள். கேட்பதற்கு இவை
நாட்டுப்புறப்பாடல்கள் போல இனிமையாக இருக்கும்.

குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழு
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
 தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.

இந்தப்பாடல்களை முதியவர்கள் தங்கள் பொக்கை வாயால் பாடும் போது கேட்பதற்கு இனிமையாக இருக்கும். குழந்தைகளுக்கு பாடல்கள் மூலம் பக்தியை உணர்த்துவது மிகவும் எளிமையானது என்பதால் இந்த பாடல்கள் அந்தகாலத்தில் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்பட்டன.

விநாயகர் அகவல் பற்றி காஞ்சிப் பெரியவர் கருத்து
மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று  பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், உ<லகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.
வாழ்வை வளமாக்கும் விநாயகர் நிவேதனம்

விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப்பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிக் கிடக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும். மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.

கரும்பு:  கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும்  இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்
திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

சதுர்த்தி வழிபாடு
நாயகர் சதுர்த்தியன்று விநாயகர்  அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடைய  காரிய சித்திமாலையின் விளக்கம் தரப்பட்டுள்ளது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த  காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி  உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம். கபிலநாயனார் இத்தகவலை எழுதியுள்ளார்.
* உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும்,
ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள்செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம்.

* கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம்.

* தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும்நீக்குபவரும், தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.

* திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்தவருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழ்ந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம்.
* உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.
* வேதங் களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும், எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.

* நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்லமாகப் புகுகின்றோம்.

* யாராலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், எல்லாவற்றையும் அறியச் செய்யும் இறைவனாகவும், ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியே! உன்னைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.

விநாயகருக்கு உகந்த கிழமை
இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அவர்கள் கணேஷ் சதுர்த்தி என்று சிறப்பான அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவ்விழாவைக் கொண்டாடுவர். பத்து நாட்களுக்கும் மேலாக பக்திப்பரவசத்தில் இம்மாநிலமே மிதக்கும். விநாயகர் இம்மக்களுக்கு குலதெய்வமாகவும், வெற்றிதரும் கடவுளாகவும் போற்றப்படுகிறார். இங்கு திரும்பிய இடமெல்லாம் இவருக்கான கோயிலும் வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். மங்கல்வார் என்னும் செவ்வாய்க்கிழமை உகந்தநாளாக எண்ணி ஆலய தரிசனம் செய்ய திரளாக விநாயகர் கோயிலுக்குச் செல்வார்கள். கொழுக்கட்டை, மோதகம் போன்ற பாரம்பரிய பிரசாத வகைகளோடு, வடநாட்டுக்கே உரிய பர்பி, லட்டு, பால்பேடா போன்றவற்றையும் நிவேதனமாகப் படைப்பர்.  கடைசிநாளில் கணபதி பப்பா மோரியா என்னும் கோஷம் எழுப்பி வழியனுப்புவது உள்ளத்தை உருகச் செய்வதாகும். மங்களம் தரும் விநாயகப்பெருமானே! இன்று சென்று வரும் ஆண்டில் திரும்பி வருக என்பதே இதன் பொருள்.
விநாயகருக்குரிய 11 விரதங்கள்

1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும்.

விநாயகர் துதி மந்திரம்
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
அண்ணனுக்கும் தம்பிக்கும்  ஆறெழுத்து மந்திரம்  முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் போல, விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஹும் என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். முருகப் பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டான ஆயிரங்கண்களை இம்மந்திரத்தை ஜெபித்தே நீங்கப்பெற்றார். 
வழிபாட்டுக்குரிய விநாயகர் வடிவங்கள்

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரின் திருமேனியை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்திநாளில் வழிபாட்டிற்கு மண்ணால் அமைத்த விநாயகரையே வழிபாடு செய்ய வேண்டும். பூஜித்த பின் இவ்விநாயகரை ஆறு, குளம், ஏரிகளில் கரைத்துவிடலாம். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

ஐந்து சுவாமி பூஜை

பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.



பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?

பிரதோஷ வரலாறு: இந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடைய முயன்றார்கள். மந்திரகிரியை மத்தாகவும், சந்திரனைத் தறியாகவும் வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திரகிரியைத் தனது முதுகில் தாங்கினார். அசுரர்கள் தலைப்புறமும் தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார்கள். அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு திருப்பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி பதினோராவது திதி. பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி வருத்தங்தாங்காது பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் ஒன்று சேர்ந்து ஆலாலம் எனப்பேர் பெற்றது. இந்த ஆலாலம் மிக்க பயங்கரமாக , வெப்பமுடன் உலகத்துக்கே முடிவு செய்வது போல் விண்ணவரை விரட்டியது. வலமாகவும், இடமாகவும் மறித்துத் துரத்தியது. திசை தோறும் தேவர்கள் நடுங்கி ஒடுங்கி ஓடினார்கள். வெண்ணிறமாக இருந்த விஷ்ணுமூர்த்தி விஷவேகத்தால் நீலநிறம் ஆனார். வானவர்கள் அஞ்சித்திருக்கயிலாஞ் சென்று சிவனாரிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.
தஞ்சம் புகுந்த வானவர்கள் தேவ தேவ மஹாதேவ அருட்கடலே! கருணைக் குன்றே! தேவரீர் ஆண்டவர்! நாங்கள் அடிமைகள், தேவரீர் உடையவர். நாங்கள் உடைமைகள். நாங்கள் பாற்கடலைக் கடைந்தோம். அந்த விவசாயத்தில் முதலில் விளைந்தது. தேவரீருக்கு உரியது என்று கூறி முறையிட்டார்கள். ஓலமிட்ட வண்ணம் இடமாகவும், வலமாகவும், இடவலமாகவும் அவர் சன்னதி முன்னுற்ற நந்திதேவரது அண்டத்தில் ஒளிந்தனர். அண்ட சராசரங்களும் சகல தேவர்களும் சிவபெருமானை ஏகச்சிந்தனையாகத் தங்களைத் காத்தருளக் கோரித்துதித்த நேரமே பிரதோஷ கால நேரமாகும். கருணையே வடிவான கண்ணுதற் கடவுள் தமது அருகில் நிற்கும் சுந்தரரைப் பார்த்து சுந்தரா அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொணர்வாய் என்று பணித்தருளினார். சுந்தரர் மாலயனாதி வானவர்களால் அணுகமுடியாத அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத்திரட்டி உருட்டிக்கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். கருணாமூர்த்தியான சிவபெருமான் நந்திதேவரின் கொம்பின் நடுவில் தோன்றி அக்கொடிய விடத்தை அடியவர்களாகிய அமரர்கள் உய்ய அமுதம் போல் உண்டு அருளினார். அந்த விடம் உள்ளே சென்றால் உள்முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும். ஆதலால் உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார். அதனால் செம்மேனி எம்மானுடைய கண்டம் கரியதாயிற்று. அதனால் மணிகண்டர் என்று பேர் பெற்றார். இது கார்த்திகை மாதச் சனிப்பிரதோஷ காலமாகும். இக்கதை கடம்பவன புராணமென்னும் மதுரை ஸ்தல புராணத்தில் உள்ளதாகும்.
சிவபெருமானுடைய கருணைக்கு உதாரணம் இது ஒன்று போதாதா? என்று நாலம் வா என்று ஒரு பாடலை ஆதிசங்கரர் சிவானந்தலகரியில் பாடியருளினார். இவ்வாறு எம்பெருமான் நஞ்சுண்டருளிய கருணைத் திறத்தை நால்வர்களும் மற்றைய ஆன்றோர்களும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். இறைவன் ஆலால விஷத்தை உண்ணவில்லையானால் பிரம விஷ்ணு இந்திராதி தேவர்கள் அன்றே மாண்டிருப்பார்கள். எல்லோருடைய கண்டத்தையும் எந்தைபிரான் கண்டந்தீர்த்தது. மாலெங்கே? வேந்தனுயர் வாழ்வெங்கே? இந்திரன் செங்கோலெங்கே? வானோர் குடியெங்கே? கோலஞ் செய் அண்டங்கள் எங்கே? எந்தை பிரான் கண்டமங்கே நீலமுறாக்கால்? என்கிறார் வடலூர் வள்ளலார்.
பரவி வானவர் தானவர் பலரும்
கலங்கிட வந்த விடம்
வெருள உண்டு கந்த
அருள் என் கொல்? விண்ணவனே
கரவின் மாமணி பொன் கொழித்திழி
சந்து காரகில் தந்து பம்பை நீர்
அருவி வந்தலைக்கும்
ஆமாத்தூர் அம்மானே - திருஞானசம்பந்தர்

இந்த விடத்தின் வெம்மையால் திருமால் நீலநிறம் பெற்றார். அதற்கு முன் அவர் வெண்ணிறமுடன் இருந்தார் என்பதைப்பின்வரும் பாடலால் அறிக.

மலை வளர் சிறகு கண்டேன்
வாரிதி நன்னீர் கண்டேன்
சிலை மதன் உருவு கண்டேன்
சிவன் சுத்த களம் கண்டேன்
அலை கடல் கடையக் கண்டேன்
அயன் சிரம் ஐந்துங் கண்டேன்
சிலை எரிஇரு கண் கண்டேன்
கொடுத்ததை வாங்கக்கண்டேன்

இந்தக்கருத்தை வலியுறுத்தும் வடமொழிப் பாடல் ஒன்று காண்க.
இந்த்ரம் த்வயஷம் அமந்த
பூர்வ முதிதம் பஞ்சானனம் பத்மஜம்
வார்திம் சுத்த ஜலம் சிவம் சித களம்
லட்சுமிபதிம் பிங்களம்
சைலான் பகூகதரான ஹயான பிததா
காமஞ்ச சத்விக்ரகம்
சர்வம் த்ருஷ்டம் இதம்மயா ரகுபதே
தத்தா பஹாரம் விநா
இவ்வாறு தேவர்கள் பொருட்டு சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டருளியது ஏகாதசி மாலை நேரமாகும்.

மீண்டும் பாற்கடல் கடைந்தது: சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற் கடலைக் கடையுமாறு பணித்தருளினார். அமரர்களும் அசுரர்களும் மீண்டும் கடலருகில் சென்று நின்று முன்போலவே கடலைக்கடையத் தொடங்கினார்கள். பாற்கடலிருந்து இலக்குமி, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைச்ரவம் முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. இலக்குமியைத் திருமால் ஏற்றுக்கொண்டார். ஏனைய பொருட்களை இந்திராதி தேவர்கள் அடைந்தார்கள். ஏகாதசியாகிய அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை, தேவர்கள் பகிர்ந்து உண்டார்கள். அமிர்தம் உண்ட அவர்கள் அந்த மகிழ்ச்சியினால் துவாதசியன்று ஆடியும் பாடியும் பொழுதைப் போக்கினார்கள்.
பிரதோஷம்: மறுநாள் திரயோதசி பதிமூன்றாம் நாள் தேவர்கள் சிவபெருமானை முன்னாலே வணங்காது பொழுது போக்கிய தங்கள் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானிடம் பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார்கள். பரமகருணாநிதியாகிய சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கயிலையில் அன்று மாலை (4.30 மணி முதல் 6.00 மணி வரை) பிரதோஷ வேளையில் சிவபெருமான் தம் கையில் டமருகம் ஏந்தி, சூலத்தைச் சுழற்றி, நந்தி தேவரின் இரண்டு கொம்புகளிடையே ஒரு யாமம் நடனமாடினார். தருமதேவதையே நந்தியாக உள்ளார். கலைமகள் வீணை வாசிக்க, திருமகள் பாட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரமன் தாளமிட, திருமால் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் தாண்டவமாடினார். ஆலகால நஞ்சை, ஆலால சுந்தரர் கையில் எடுத்து வந்து பிரதோஷ வேளையில் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடை வழியாக ஈசனிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி, உண்டு நடனமாடினார். தேவர்கள் அதனைத்தரிசித்து சிவபெருமானைத் துதி செய்து வணங்கினார்கள்.

அது முதல் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் திரயோதசி திதியில், சூரியன் மறைவதற்கு முன் உள்ள நேரமாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை  உள்ள பிரதோஷ நேரம் பாபத்தைப்போக்கும் நேரமாயிற்று. அமிர்தம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால நஞ்சு தோன்றி அனைவருக்கும் பெருந்தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒருவருக்கும் தீங்கு ஏற்படாது காப்பாற்றிய காலம். சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம். தங்களைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய காலம்.
ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம்.
சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என மிகவும் சிறப்புடையதாகும்.

தோஷம் என்றால் குற்றம்; பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் ஆன்றோர்கள் கூறுவர். இரவும் பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத் காலம் இதன் அதிதேவதை, சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் எனப்பட்டு, பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் ஆனதாகச் சொல்வர்.

பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.

ஐந்து வகைப் பிரதோஷம் : 1. நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர்  உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.

2. பட்சப் பிரதோஷம்:  இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.

3. மாதப் பிரதோஷம்:  இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.

4. மகா பிரதோஷம்:  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)
5. பிரளயப் பிரதோஷம்:  இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?

பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும். வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல்  அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும்  வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். அந்தந்த திசாபுத்திகள் நடைபெறுபவர்கள் அந்தந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர்.
பிரதோஷம் விளக்கும் கோட்பாடு: உலகில் பிரதிகூலமாக இருப்பவைகளை அனுகூலமாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அழிவைத் தரும் ஆலகால நஞ்சையுண்டு நம்மைக்காத்த சிவதாண்டவம் இக்கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரதோஷ காலத்தில், சிவனை வழிபட்டு, இம்மை மறுமை நலன்களை நாமெல்லோரும் பெறுவோமாக !
விரதம் அனுஷ்டிக்கும் முறை: வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும்.

நந்திதேவர் துதி

நந்திஎம் பெருமான்தன்னை  நாள்தோறும் வழிப்பட்டால்
புந்தியில் ஞானம் சேரும்  புகழ்கல்வி தேடிவரும்
இவ்வுலக இன்பம்யாவும்  இவரடி தொழ உண்டு!
அவ்வுலக அருளும்கூட   அவர்துதி பாட உண்டு!
முற்பிறவி வினைகள்யாவும்  தீயிட்ட மெழுகாகும்
நந்தியின் பார்வை பட   நலங்கள்உடன் கிட்டும்!
ஈசனுக்கு எதிர் அமர்ந்து   இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்
நந்தீசர் நற்பாதம்   நாம் தொழுவோமே!
நலந்தரும் நந்தி

கந்தனின் தந்தையைத் தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
அந்தமாய் ஆதியாகி அகிலத்தைக் காக்க வந்தாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்
பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்

சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடிவந்தெம்மைக் காப்பாய்
மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்

சோலையின் வண்ணப்பூவைச் சூடிடும் நந்தி தேவா
நாளும் நான் உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக்காப்பாய்
தஞ்சையில் பெரிய நந்தி தளிருடல் வெண்ணை சாத்தி
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி
குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி
தஞ்சமாம் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்
நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி
கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி

வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி

நாட்டமுள்ள நந்தி

நந்தியிது நந்தியிது நாட்டமுள்ள நந்தியிது
நந்தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிது
செந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிது
சிந்தையில் நினைப்பவர்க்குச்செல்வம்தரும் நந்தியிது  (நந்தி)

தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது
எல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது
ஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிது
வெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது
பச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிது
பார்ப்பவர்க்குப்பலன்கொடுக்கும் பட்சமுள்ள நந்தியிது
சங்கம் முழங்குவரும் சங்கரனின் நந்தியிது
எங்கும் புகழ்மணக்கும் எழிலான நந்தியிது  (நந்தி)

கொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிது
நற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிது
நெய்யிலே குளித்துவரும் நேர்மையுள்ள நந்தியிது
ஈஎறும்பு அணுகாமல் இறைவன்வரும் நந்தியிது  (நந்தி)

வானவரும் தானவரும் வணங்குகின்ற நந்தியிது
காணவரும் அடியவர்க்கும் கருணைகாட்டும் நந்தியிது
உலகத்தார் போற்றுகின்ற உத்தமனின் நந்தியிது
நகரத்தை வளர்த்துவரும் நான் மறையின் நந்தியிது  (நந்தி)

நந்திதேவர் வணக்கம்

(ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என்ற மெட்டு)

வழிவிடு நந்தி வழிவிடுவே
வாழ்வில் நாங்கள் வளர்ந்துயர
வழிவிடு நந்தி ! வழிவிடுவே
வையகம் வளர வழிவிடுவே. (வழிவிடு)
எம்பிரான் சிவனைச் சுமப்பவனே
எல்லா நலனும் தருபவனே
ஏழைகள் வாழ்வில் இருளகல
என்றும் அருளைச் சுரப்பவனே. (வழிவிடு)

நீரில் என்றும் குளிப்பவனே
நெய்யில் என்றும் மகிழ்பவனே
பொய்யில்லாத வாழ்வு தர
பொங்கும் கருணை வாரிதியே. (வழிவிடு)

உந்தன் கொம்பு இரண்டிடையே
உமையாள் பாகன் காட்சிதர
தேவர் எல்லாம் அருள் பெற்றார்
தேனாய் இனிக்கும் செய்தி அப்பா. (வழிவிடு)

தேடிய பலனைத் தந்திடுவாய்
தேவர் போற்றும் நந்திதேவா !
வாழ்வில் வளமே வந்துயர
வழியே காட்டி அமைந்திடுவாய். (வழிவிடு)

நந்தனார் போற்றும் நந்தி தேவா !
நாலுந் தெரிந்த வல்லவனே
எம்பிரான் அருளை எமக்கருள
என்றுந் துணையாய் நிற்பவனே. (வழிவிடு)
பிரதோஷம் என்றால் உன் மகிமை
பெரிதும் வெளியில் தெரிந்திடுமே
தேவர்க்குக் காட்சி உன்மூலம்
தெரியச் செய்த பெரியவனே. (வழிவிடு)

நலம்தரும் நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி.

கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி
குடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி.

ஈஸ்வர தியானம்

நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்
பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.
சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய
சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
ஹர ஹர ஹர ஹர  நமசிவாய - சிவாய நம
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நமசிவாய   - சிவாய நம 

ஓம் சிவாய சங்கரா

ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

கங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

காசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

பார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

ஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

ஆறுமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

ஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

சிவநாமாவளிகள்

கைலாச வாசா கங்காதரா
ஆனந்தத் தாண்டவ சதாசிவா
ஹிமகிரி வாசா சாம்பசிவா
கணபதி சேவித்ஹே பரமேசா
சரவண சேவித்ஹே பரமேசா
சைலகிரீஸ்வர உமா மஹேசா
நீலலோசன நடன நடேசா
ஆனந்தத் தாண்டவ சதாசிவ
ஹிமகிரி வாசா சாம்பசிவா

நாதநாம மகிமை

போலோ நாத உமாபதே
சம்போ சங்கர பசுபதே
நந்தி வாகன நாக பூஷண
சந்திரசேகர ஜடாதரா
கங்காதார கௌரி மனோகர
கிரிஜா ரமணா சதாசிவா  (போலோ)

கைலாசவாசா கனகசபேசா
கௌரி மனோகர விஸ்வேசா
ஸ்மாசன வாஸா சிதம்பரேசா
நீலகண்ட மஹாதேவா  (போலோ)

சூலாதாரா ஜ்யோதிப் பிரகாசா
விபூதி சுந்தர பரமேசா
பம் பம் பம் பம் டமருகநாத
பார்வதி ரமணா சதாசிவா  (போலோ)
நமசிவாய மாலை

ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய

ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே

சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ
சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே

ஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே

கண்ணிலே இருப்பவனே கருங்கடல் கடந்துமால்
விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே
அண்டமேழு முழலவே யனிந்தயோனி யுழலவே
பண்டு மாலயனுடன் பரந்து நின்றுழலவே
எண்டிசை கடந்து நின்றிருண்ட சக்தியுழலவே
அண்டரண்ட மொன்றதாய் ஆதி நடமாடுமே

அகார காரணத்திலே யனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே யுருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்குநின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே

பூவும் நீரும் என்மனம் பொருதுகோயில் என்னுளம்
ஆவியோடு லிங்கமா யகண்ட மெங்குமாகிலும்
மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தியில்லையே

ஒன்று மொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே
அன்று மின்று மொன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்று தெய்வ மும்முள அறிந்ததே சிவாயமே

ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்கனே
செய்ய திங்களங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோவில்கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே
ஆதியுண்டு அந்தமில்லை யன்று நாலு வேதமில்லை
ஜோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்ததேதுமில்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதியன்று தன்னையும் யாரறிவாரண்ணலே

மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பரும் இயங்குகின்ற நாதமும்
தோன்று மண்டலத்திலே சொல்ல வெங்குதில்லையே

கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே
ஊனமுற்ற ஜோதியோடு உணர்வு சேர்த்தடக்கினால்
தேனதத்தினூரல் போல் தெளிந்ததே சிவாயமே

தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவாய் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே

தாய் தந்தை குருவும் நீ சகல தேவகணங்கள் நீ
சிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீ
விந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீ
எந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ
சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சக்தியற்று சம்புவற்று ஜாதி பேதமற்றுநன்
முக்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்
வித்தை யித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே

நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நின்றதொன்றுதான்
நல்லதென்ற போது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகுமாதலால்
நல்லதொன்று நாடிநின்று நாமஞ் சொல்லவேண்டுமே

பார்த்து நின்ற தம்பலம் பரமனாடுந் தம்பலம்
கூத்து நின்ற தம்பலம் கோரமான தம்பலம்
வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலம்
சீற்றமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே

விண்ணினின்று மின்னெழுந்து மின்னோடுங்குவாறு போல்
எண்ணுள் நின்று எண்ணுமீசன் என்னகத்திருக்கையால்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
எண்ணுள்நின்ற என்னையும் நானறிந்ததில்லையே

உருக்கலந்த பின்னலோ வுன்னை நானறிந்ததும்
இருக்கிலென் மறக்கிலென் இணைந்திருந்தபோதெல்லாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே
சிவாய வென்ற வக்ஷரம் சிவனிருக்கு மக்ஷரம்
உபாய மென்று நம்புதற்கு உண்மையான வக்ஷரம்
கபாடமற்ற வாசலைக்கடந்து போன வாயுவை
உபாய மிட்டழைத்துமே சிவாய வஞ்செழுத்துமே

சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து தேவராகலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து வானமாவலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொண்டவான் பொருள்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளுமுண்மையே

திரு அங்க மாலை

தலையே நீ வணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக்
கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறமெப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களோ

மூக்கே நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்.

வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானையுரி போர்த்துப்
பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்துகண்டாய்

நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினைவாய்
கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித் தொழீர்.
ஆக்கையால் பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கை யால் அட்டிப் போற்றியெண்ணாத இவ்
ஆக்கையாற் பயனென்

கால் களாற் பயனென் - கறைக்
கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக்
கால்களாற் பயனென்

உற்றார் ஆருளரோ - உயிர்
கொண்டு போகும்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால்
நமக்குற்றா ராருளரோ.

இறு மாந்திருப்பன் கொலோ - ஈசன்
பல் கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு
இறுமாந்திருப்பன் கொலோ.
தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை
என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
திருச்சிற்றம்பலம்

நமச்சிவாயத் திருப்பதிகம்

சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாம்உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்கு வான்நலன்
குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்
ஓடினேன் ஓடிச் சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங் கடைந்தவர்க் கெல்லாம்
நன்னெறியாவது நமச்சி வாயவே
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயபத்து
ஏத்தவல் லார்தமக்  கிடுக்க ணில்லையே.

திருச்சிற்றம்பலம்

சிவவாக்கியர் பாடல்

ஓம் நம: சிவாய ஓம்                   ஓம் நம: சிவாய
ஓம் நம: சிவாய ஓம்                    ஓம் நம: சிவாய

சரியை விலக்கல்

1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே  (ஓம்)

2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)
இதுவுமது

3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே      (ஓம்)

யோக நிலை

4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.   (ஓம்)

விராட் சொரூபம்

5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே          (ஓம்)

தெய்வ சொரூபம்
6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே           (ஓம்)

தேகநிலை

7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே              (ஓம்)

அட்சர நிலை

8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே          (ஓம்)

இதுவுமது
9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே      (ஓம்)

ஞானநிலை

10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை              (ஓம்)

ஞானம்

11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ
செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே         (ஓம்)

அட்சர நிலை
12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே   (ஓம்)

பிரணவம்

13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே           (ஓம்)    
  
பஞ்சாட்சர மகிமை

14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
 நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை
 நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
நமச்சிவாய  உண்மையை நன்குரை செய்நாதனே         (ஓம்)

கடவுளின் உண்மை கூறல்

15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே  (ஓம்)
இராம நாம மகிமை

16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே            (ஓம்)

அத்துவிதம்

17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே  (ஓம்)

அம்பலம்

18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே      (ஓம்)

பஞ்சாட்சரம்

19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே     (ஓம்)
பஞ்சாட்சர மகிமை

20. ஓம்நம சிவாயமே  உணர்ந்துமெய் உணர்ந்துபின்
ஓம்நம சிவாயமே  உணர்ந்துமெய் தெளிந்துபின்
ஓம்நம சிவாயமே  உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நம சிவாயமே  உட்கலந்து  நிற்குமே      (ஓம்)

நமசிவாய மந்திரம்

நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்

ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்
ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம்
நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட
நன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம்  (நம)

வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே
வைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன்
வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்
பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம்     (நம)

தந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது
சந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது
விந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே
வெற்றிவேலன் துணை இருக்கும் வீரசேகர் மந்திரம்   (நம)
புள்ளிருக்கும் வேளூரெனப் புனிதமிகு பூமியாம்
பூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்
வள்ளி தெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனை
வளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம்  (நம)

திருச்சிற்றம்பலம்

திருமூலர் அருளியது பத்தாம் திருமுறை

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே. 

திருச்சிற்றம்பலம்

பஞ்ச புராணம்
பேராயிரம் பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்தின் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.        
 - தேவாரம்
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ
பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே !             
- திருவாசகம்
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண் குளிர்ந்தனவே.             
-  திருவிசைப்பா 

பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள்
செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.                      
- திருப்பல்லாண்டு
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.   
- பெரியபுராணம்

வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க !
மலிவளம் சுரக்க ! மன்னன்
கோன்முறை அரசுசெய்க !
குறைவிலாது உயிர்கள் வாழ்க !
நான்மறை அறங்கள் ஓங்க !
நல்தவம் வேள்வி மல்க !
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்.               
- கச்சியப்பர்

திருச்சிற்றம்பலம்.

பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம்
1. ஓம் பவாய நம  பகவானே என்னைக்காப்பாற்று
2. ஓம் ருத்ராய நம  என் குற்றங்களைச் சிந்தனையிலிருந்து மறைய வேண்டுகிறேன்
3. ஓம் மிருடாய நம  என் துன்பங்களைப்போக்கி சுகம் தரும்படி கேட்கிறேன்
4. ஓம் ஈசனாய நம  நல்ல வழி, நற்புகழ் அடைவதற்கு வழிகாட்ட வேண்டுகிறேன்
5. ஓம் சம்பவே நம  எனக்கு உயர்வு அடைய வழி காட்டுதல்
6. ஓம் சர்வாய நம  கொடியவர்களைத்தண்டிக்க தாங்கள் முன்வர வேண்டும்
7. ஓம் ஸ்தாணவே நம  பகவான் சிறிதும் அசைவின்றி நிலை பெற்றிருப்பவர்
8. ஓம் உக்ராய நம  ஆசை, பாசம், எதிலும் நிலையான ஆட்சி செய்பவர்
9. ஓம் பார்க்காய நம  பகவானின் சிறப்பான உருவம் தருமாறு கேட்டல்
10. ஓம் பரமேஸ்வராய நம  பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்
11. ஓம் மஹா தேவாய நம  பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்
சிவமூர்த்தி ஸ்தோத்திரம்

1. ஓம் சிவசிவ சிவனே
சிவபெருமானே போற்றி போற்றி
விரைவினில் வந்தருள் விமலா
போற்றி போற்றி

2. ஓம் மஹா, ஈசா மகேசா
போற்றி போற்றி
மனதினில் நிறைந்திடும் பசுபதியே
போற்றி போற்றி

3. ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா
போற்றி போற்றி
மூவா இளமையருளும் முக்கண்ணா
போற்றி போற்றி

4. ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே
போற்றி போற்றி
திரு ஐயாறமர்ந்த குருபரனே
போற்றி போற்றி
5. ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர்
திருமுகமே போற்றி போற்றி
ஓம் உமையொருபங்கா
போற்றி போற்றி

6. அதற்கு மோர்த்திருமுகமே
போற்றி போற்றி

7. ஓம் உலகமே நாயகனே லோக
நாயகா போற்றி போற்றி
அகோரத்திற்கோர் திருமுகமே
போற்றி போற்றி

8. ஓம் உருத்திர பசுபதியே
போற்றி போற்றி

9. ஓம் உருத்திர தாண்டவ சிவனே
போற்றி போற்றி

10. ஓம் ஓம் அகோர மூர்த்தியே
லிங்கமே போற்றி போற்றி
அதற்கு மோர்திருமுகமே
போற்றி போற்றி
11. ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின்
பாகா போற்றி போற்றி
அம்பிகைக்கோர் முகமே அம்பிகா
பதியே போற்றி போற்றி
12. ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட
பரமனே போற்றி போற்றி

13. ஓம் சாம்பசிவ சதா சிவனே
சத்குருவே போற்றி போற்றி

14. ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்பு
நாதா போற்றி போற்றி

15. ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக்
கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி

16. ஓம் கங்காதரனே கங்களா
போற்றி போற்றி

17. ஓம் இடபத்தூர்ந்து செல்லும்
இறைவா போற்றி போற்றி
ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ

பிரதோஷ பூஜை அன்று முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்
1. அபிஷேக வேளையில் பால் கொடுத்தால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்
2. தயிர் கொடுத்தால் - பல வளமும் உண்டாகும்
3. தேன் கொடுத்தால் - இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் கொடுத்தால் - விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் தந்தால் - செல்வச் செழிப்பு ஏற்படும்
6. நெய் கொடுத்தால் - முக்திப் பேறு கிட்டும்
7. இளநீர் தந்தால் - நல்ல மக்கட்பேறு
8. சர்க்கரை கொடுத்தால் - எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் தைலம் கொடுத்தால் - சுகவாழ்வு
10. சந்தனம் கொடுத்தால் - சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் கொடுத்தால் - தெய்வ தரிசனம் கிட்டும்
பிரதோஷ பூஜையின் மகிமைகள்

மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் ஜென்மம் எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறலாம்.

பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்

1. துன்பம் நீங்கி - இன்பம் எய்துவர்.
2. மலடு நீங்கி - மகப்பேறு பெறுவர்
3. கடன் நீங்கி - தனம் பெறுவர்
4. வறுமை ஒழிந்து - செல்வம் சேர்ப்பர்
5. நோய் நீங்கி - நலம் பெறுவர்.
6. அறியாமை நீங்கி - ஞானம் பெறுவர்
7. பாவம் தொலைந்து - புண்ணியம் எய்துவர்
8. பிறவி ஒழித்து - முக்தி அடைவர்
மஹா பிரதோஷம்: ஐந்து வருட பலன் சனிக்கிழமையில் வரும் பிரதோஷ வேளையில் நாள் முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்திற்கு சென்று இறைவழிபாடு செய்தால் 5 வருடம் தினமும் தவறாமல் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் யார் ஒருவர் பஞ்சமா பாதகம் அதாவது மது, மங்கை, கொலை, கொள்ளை, பொய் இவைகள் செய்கின்றார்களோ அவர்களுக்கு மஹாபாதகம் ஏற்படும். இந்த மஹா பாதகத்தை சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ பூஜை அன்று கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் இந்த பஞ்சமா பாதகம் விலகும்.

பலன்கள்: ஒரு வருட பலன் சனிக்கிழமை தவிர மற்ற கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையாகிய மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் அன்று முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய்தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் ஆலயம் சென்று வழிப்பட்ட பலன் கிட்டும்.