வியாழன், 14 நவம்பர், 2019

ஆழ்வார்களும் அவதாரமும்

7. தொண்டரடி பொடியாழ்வார்

பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்
நட்சத்திரம் : மார்கழி கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
பாடிய பாடல் : 55
வேறு பெயர் : விப்பிர நாராயணர்
சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்
பிற பெயர்கள் : பக்தாங்க்ரிரேணு, விப்ரநாராயணர், திருமண்டங்குடியார், பள்ளியுணர்த்தியபிரான்

சோழநாட்டின் திருமண்டங்குடி என்ற கிராமத்தில் வேத விசாரதர் என்பவர் சிறந்த திருமால் தாசராக விளங்கி வந்தார். இவர் எப்பொழுதும் நாராயணனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பூமாலைகள் தொடுத்து பெருமாளுக்கு சாற்றி வந்தார். அந்த உலகளந்த பெருமாளின் கருணையால் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருமாலின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாக ஒரு புதல்வர் பிறந்தார். பெற்றோர்களும் அவருக்கு விப்பிர நாராயணர் என்றுபெயர் சூட்டினார்கள். சகல கலைகளையும் கற்றுணர்ந்த விப்பிரநாராயணருக்காக விண்ணுலகிலிருந்து திருமாலின் சேனைத்தலைவரான சேனை முதலியர் பூமிக்கு வந்து உண்மைப்பொருளை உணர்த்தி சென்றார். இதன் பிறகு விப்பிர நாராயணருக்கு அரங்கனைப்பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. இதனால் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரிய விரதத்தையே உயர்வாக எண்ணி வாழ்ந்து வந்தார்.
ஒரு முறை திருமாலின் திருத்தலங்கள் அனைத்தையும் பார்த்து வர ஆசைப்பட்டு முதலில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்தார். அவர் பெருமையை கேட்டறிந்தார். அரங்கனைப்பார்த்த மகிழ்ச்சியில் திருமால் பெருமைக்கு நிகரில்லை எனவே பெருமானே போதும் வேறெதுவும் வேண்டியதில்லை என்று நினைத்து பச்சை மாமலைபோல் மேனி ! பவள வாய்க் கமலச் செங்கண் அச்சுதா ! அமரா ! ஆயர்தம் கொழுந்தே எனும் இச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே  என்று நெஞ்சுருகி பாடினார்.

ஸ்ரீரங்கத்துப்பெருமாளுக்கு சேவை செய்வதற்காக கோயிலிலேயே தோட்டம் அமைத்து பூக்களை பறித்து பெருமாளுக்கு தினமும் மாலை தொடுத்து கொடுப்பார். அதன் பின் பிற வீடுகளுக்கு  சென்று உணவு வாங்கி அருந்துவார். இவருக்கு ஆண் பெண் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. அனைவரிடமும் சமமாக பழகுவார். இதை சோதிக்க நினைத்தார் பரந்தாமன். திருக்கரம்பனூரில் தேவி, தேவதேவி என இரு தாசிகள் இருந்தனர். இவர்கள் உறையூர் அரசசபையில் ஆடி பாடி பரிசுகள் பல பெற்று திரும்பும் வழியில் விப்பிர நாராயணரின் தோட்டத்தின் அழகில் மயங்கி அதை பராமரிப்பவர் சந்திக்க சென்றார்கள். ஆனால் இவர்கள் வந்ததையோ இவர்களது  பேச்சையோ கவனிக்காமல் பெருமாளுக்கு பூமாலை தொடுப்பதிலேயே கவனமாக இருந்தார். இவரது கவனத்தை திருப்பி தன் மீது எப்போதும் மாறாத அன்புவைக்க சபதம் ஏற்றாள். அதே போல் பெருமாளுக்கு தானும் சேவை செய்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக விப்பிர நாராயணரின் மனதில் இடம் பிடித்தார். தேவதேவி இல்லாமல் தான் இல்லை என்ற நிலைக்கு மாறி விட்டார். தன் குடும்பத்தை பார்க்க சென்ற தேவதேவியுடன் விப்பிரநாராயணனும் சென்றார். அவரிடம் இருந்த செல்வம் எல்லாம் தீர்ந்ததால் தேவ தேவியில் தாயாருக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனவே வெளியே சென்று தோட்டத்தில் அமர்ந்தார். அப்போது பெருமாள் ஒரு பொன் கிண்ணத்தை விப்பிர நாராயணன் கொடுத்ததாக தேவதேவியின் தாயாரிடம் கொடுத்தார். மறுநாள் கோயிலில் தங்ககிண்ணம் காணாமல் தேவதேவியின் தாயாரையும் விப்பிரநாராயணனையும் விசாரித்து விட்டு இவரை மட்டும் சிறையிலடைத்தான் மன்னன். மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி விப்பிரநாராயணனின் பெருமைகளை கூறி அவரை விடுவிக்க கூறினார். அதன்பின் விப்பிரநாராயணன் தொண்டரடிப்பொடியாழ்வாராக நெடுங்காலம் பெருமாளை  பாடி இறைவனுடன் கலந்தார்.  பெருமாளின் 108 திருப்பதிகளில் தொண்டரடி பொடியாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 2 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.