வியாழன், 12 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 32 ॐ

மேலே நாம் காண்பது சித்சபையின் அற்புதத் தோற்றம். இதுவும் மூலஸ்தானத்துக்கு மேலே இருக்கும் கோபுரம் என்ற அளவில் இருந்தாலும் இதன் தாத்பரியம் பற்றி நாம் முன்னாலேயே பார்த்து விட்டோம். இப்போ முக்குறுணி விநாயகருக்கு அடுத்து நாம் காணப் போவது பாண்டியன் ஜடாவர்மன் சுந்தரனால் திருப்பணி செய்யப்பட்ட மேலக் கோபுரம். இங்கே நாம் காண்பது கற்பக விநாயகர் நடனமாடும் திருக்கோலத்தில். இவரை க்ஷேத்திர பால விநாயகர் எனவும் சொல்கின்றனர். இவர் இங்கே வந்ததுக்குச் சொல்லப்படும் காரணம் புராணக் கதை என்னவென்றால்: தில்லை நகருக்கு அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்னும் காரணப் பெயர் உண்டு. எப்போது வந்தாலும் அன்னபூரணியின் அருள் நிறைந்து உணவு கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது. அந்தப் பழமொழியைச் சோதனை செய்யவோ என்னமோ ஒருமுறை துர்வாச முனிவர் நடு இரவில் தன் சிஷ்யர்களுடன் தில்லைச் சிற்றம்பலம் வந்தடைகிறார். வரும் போதே நல்ல பசி முனிவருக்கு. கோவிலின் அர்த்தஜாம பூஜையும் அப்போது தான் நடந்து முடிந்திருந்தது. ஆகவே துர்வாசரின் பசியைப் போக்க யாருமே முன்வராததால் கோபம் அடைகிறார் முனிவர். அப்போது அன்னை தானே முன் வந்து அவர் பசிப்பிணி தீர்க்க வரவும் துர்வாசர் நடராஜரின் ஆனந்தத் தாண்டவக் கோலத்தைக் கண்ணும் ஆசையைத் தெரிவிக்கிறார். ஆனால் தந்தைக்குப் பதில் அங்கே தனயன் தன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடவே தன்னை மறந்து கோபமும் பசியும் தீர்ந்து சமாதானம் அடைகின்றார் துர்வாசர். உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப் பட்ட கற்பக கணேச பஞ்சரத்ன ஸ்தவம் என்னும் ஸலோகத்தில் இதைப் பற்றியக் குறிப்பு இருப்பதாய்க் கூறுகிறார்கள். இந்தக் கோவிலில் இந்த மூர்த்தங்களைத் தவிர ஒரு நந்தியெம்பருமானும் வில்வ மரமும் மிகப் புராதனமானது என்று சொல்லப்படுகிறது. இந்திரன் வல்காலி என்னும் அசுர வதம் செய்யும் முன்னர் நந்தி ரூபத்தில் இந்த விநாயகரை வழிபாட்டுச் சென்றதாகவும் இங்கே உள்ள வில்வ மரம் சிவனின் ரூபம் என்றும் சொல்கின்றனர்.

அடுத்துக் காண இருப்பது குமரகோட்டம் பாலசுப்ரமணிய சன்னதி ஆகும். நவ வீரர்களுடனும் இங்கே சூர சம்ஹாரத்துக்கு முன் சுப்ரமணியர் இருந்ததாய்க் கூறுகின்றனர். மேலக் கோபுரச் சுவர்களுக்கு உள்பக்கமாய் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த ஆறுமுகன் தன் ஆறுமுகங்களோடும் காணப் படுவதோடு தன் இரு மனைவியருடனும் இருக்கிறான். சிங்கத்தின் மேலே அண்ணனான விநாயகர் காவல் செய்ய அருணகிரிநாதர் தொழ அற்புதக் காட்சி அளிக்கிறான். கந்த சஷ்டியில் "சூர சம்ஹார"ப் பெருவிழா விமரிசையாக இங்கே நடக்கும். அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியும் காணப் படுகிறது. மாணிக்க வாசகர் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி அன்னையை மணந்த திருக்கோலத்திலே இங்கே சொக்கநாதர் வந்ததாய்ச் சொல்லப் படுகின்றது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
பித்ருக்களுக்கு செய்யும் ஸ்ராத்தத்தில் முக்கியமாக இந்த ஏழு பொருட்கள் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

1. உச்சிஷ்டம் நிர்மால்யம் வமனம் ஶ்வேத பர்ப்படம். ஶ்ராத்தே சப்த பவித்ராணி தௌஹித்ர: குதபஸ் திலா: {உச்சிஷ்டம் என்றால் எச்சில் பொருள்.} பசுமாட்டிடம் பால் கறக்கும் போது முதலில் கன்றுக்குட்டியை பால் ஊட்ட செய்து பால் சுரந்த பின் கன்றை விலக்கி விட்டு மடியை அலம்பாமல் கன்றுக்குட்டியின் வாய் எச்சிலுடன் கறக்கப்படும் பசும்பால் தான் உச்சிஷ்டம் என்பது. இது பித்ருக்களுக்கு மிகவும் பிரியமானது. பசும்பால் கட்டாயம் சிராத்தத்தில் சேர்க்கவேண்டும்.

 2 . சிவ நிர்மால்யம்
தபஸ் செய்து பகீரதனால் ஆகாயத்திலிருந்து பூமிக்கு வரவழைக்கப்பட்ட கங்கா நதியை சிவபெருமான் தனது சிரஸ்ஸில் தாங்கி கொண்டார். அதன் பிறகே ஜடை முடியிலிருந்து கங்கா தேவி பூமியில் இறங்கினாள். ஆகவே கங்கையானது சிவனுக்கு அபிஷேகம் செய்த ஜலமாகையால் சிவநிர்மால்யம்.

சிராத்தத்தில் ஆரம்பத்தில் கங்கா ஜலத்தால் வீடு முழுவதும் குறிப்பாக சமையல் செய்யும் இடத்தை ப்ரோக்ஷித்து பின்னர் ச்ராத்த சமையல் செய்ய ஆரம்பிக்கலாம் மற்றும் கங்கா ஜலத்தை சாப்பிடும் முன்னர் ஆபோசனம் போடுவதற்கும் உபயோகிக்கலாம்.

 3 . வமனம் என்றால் வாந்தி பண்ணி துப்பியது என பொருள். அதாவது தேனீக்கள் பல பூக்களிலிருந்து தங்கள் வாயில் தேன் சேகரித்து கூட்டில் உமிழ்கின்றன. தேன் என்பது தேனிக்களால் துப்பப்பட்ட எச்சில் பொருள். தேன் நம் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் ப்ரியமானது. ஆகவே தேன் சேர்த்து கொள்வதால் பித்ருக்கள் மிகவும் ஸந்தோஷமடைகிறார்கள்.

 4 . ஶ்வேத பர்ப்படம்  ஶ்வேதம் என்றால் வெண்மை, பர்ப்படம் என்றால் பட்டுதுணி, பித்ருக்களுக்கு வெண் நிறமுடைய பட்டு துணி மிகவும் ப்ரியம். ஆகவே கர்த்தா ச்ராத்தத்தின் போது வெண்நிற பட்டு வேஷ்டி கட்டிகொள்வதும் ஸ்ராத்தத்தில் சாப்பிடுபவர்க்கு வெண்பட்டு தந்து அதை கட்டிக்கொண்டு சாப்பிடச்செய்வதும் பித்ருக்களுக்கு ஸந்தோஷத்தையும் சிராத்தம் செய்பவருக்கு நீண்ட ஆயுளையும் பெற்றுத்தரும்.

5. தௌஹித்ர என்றால் பேரன், பேத்திகள். யாருக்கு ஸ்ராத்தம் செய்கிறோமோ அவருடைய பெண்ணின் குழந்தைகளான பேரன் பேத்திகள். இறந்த தாத்தா பாட்டிக்கு மிகவும் பிரியமானவர்கள். மேலும் தௌஹித்ர என்பதற்கு வேறு பொருளும் பெரியோர்களால் கூறப்படுகிறது. அதாவது அமாவாசை திதி அன்று பசுமாட்டிற்கு நிறைய புற்கள் போட்டு சாப்பிட செய்து மறுநாள் பிரதமை அன்று அம்மாட்டிலிருந்து கறந்த பாலை தயிராக்கி அதை வெண்ணையாக்கி அதை நெய்யாக காய்ச்சினால் அதுவே தௌஹித்ர எனப்படும் பொருள். அதாவது அப்போது காய்ச்சிய நெய் பித்ருக்களுக்கு மிகவும் ப்ரியமானது.

 6. குதப என்றால் சிராத்தம் செய்யவேண்டிய நேரம். பகல் சுமார் 11:30 மணிக்கு மேல் 12.30 மணி வரையுள்ள காலமே குதப காலம். கூடிய வரை இந்த நேரத்தில் ஸ்ராத்தம் செய்தல் முடித்தல் அதிகமான பலனை தரும்.

 7. திலா என்றால் கருப்பு நிறத்தில் உள்ள எள். இதுவும் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரும். வெள்ளை எள் மஹா கணபதி போன்ற சில தெய்வங்களுக்கு மகிழ்ச்சியை தரும். கருப்பு நிற எள் பித்ருக்களுக்கு மகிழ்ச்சியை தரும். ஆகவே ஸ்ராத்தத்தில் தாராளமாக உபயோகிக்கலாம்.

ஆகவே மேற்கூறிய
1.பசும்பால்
2.கங்கா ஜலம்
3.தேன்
4.வெண்பட்டு
5.புத்துருக்கு நெய்
6.குதப காலம்
7.கருப்பு எள்
இந்த ஏழு பொருட்கள் ஸ்ராத்தத்தில் சிறிதளவாவது சேர்த்து செய்வது நிறைவான பலனை தரும். பித்ருக்களின் ஆசியையும் பெறலாம்.
தமிழகத்திற்கு 37 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வரும் குலசேகரமுடையார் நடராஜர் பஞ்சலோக  விக்கிரகம்
------------------------------------------------------------------------------------------------

சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட சிறப்பு அதிகாரி திரு பொன்மாணிக்கவேல் மற்றும்  திரு ராஜாராம் அவர்கள் மற்றும் அவருடைய குழு இன்று 37 வருடங்களுக்கு முன்பு  தமிழ்நாட்டில் இருந்து களவாடப்பட்ட குலசேகரமுடையார் கோவிலில் இருந்த நடராஜர் பஞ்சலோக விக்ரஹம் ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விக்கிரகம் கண்டுபிடிக்க முடியாது என்று முதல் குற்றப்பத்திரிகையை சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக காவல்துறை முடித்து வைத்து இருந்தது. ஆனால் திரு பொன் மாணிக்கவேல் அவர்கள் தலைமையில் திரு ராஜாராம் அவர்களும் மற்றும் அவர் குழுவும் சிறப்பாக பணியாற்றி விக்கிரகத்தை திரு நாகசாமி அவர்களின் உதவியுடன் அடையாளம் கண்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு ஆவணங்கள் மூலம் இது நம்நாட்டு விக்கிரகம் தான் என்பதை நிரூபித்து அதை திரும்பப் பெற்று என்று சென்னைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள்.

சிறப்பு புலனாய்வுப் பிரிவு செயல்படக் கூடாது என்பதற்காக ஏகப்பட்ட தடைகளை தமிழக அரசு போட்ட போதும் அல்லும் பகலும் அயராது உழைத்து இந்த சிறிய புலனாய்வு குழு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினால் கைவிடப்பட்ட இந்த வழக்கை புலனாய்வு செய்து வெற்றிகரமாக முடித்து வைத்திருக்கின்றது. என்னைப் பொறுத்தமட்டில் ஏகப்பட்ட தடைகளை விதித்த தமிழக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டிய விதத்தில் தங்களின் செயல்களால் இந்த சிறப்புப் புலனாய்வுக்குழு திரு பொன் மாணிக்கவேல் தலைமையில் பணியாற்றியுள்ளது என்று சொல்வேன்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் புது தில்லியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் இந்த குழு 13ஆம் தேதி காலை சென்னை வந்தடையும்.  ஆன்மீக அன்பர்கள் திரளாக வந்து குலசேகரமுடையார் கோவிலில் நடராஜர் விக்கிரகத்தையும் அதை மீட்டுக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவையும் வரவேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .

ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!