வியாழன், 24 ஏப்ரல், 2014

ஸ்ரீவள்ளி - தெய்வயானை அவதாரம்: பாற்கடல் வாசனுக்கும் முருகப் பெருமானுக்கும் உள்ள உறவு (கந்த புராணம் விளக்கும் சுவையான நிகழ்வுகள்)

பாற்கடலில் உறையும் ஸ்ரீமன் நாராயணரின் திருக்கண்களில் வெளிப்பட்ட ஆனந்தக் கண்ணீரில் இருந்து அமிர்தவல்லி - சுந்தரவல்லி என்ற இரு கன்னிகைகள் தோன்றினர். பரந்தாமனின் ஆசி பெற்ற இருவரும், முருகப் பெருமானை மணம் புரிய விருப்பம் கொண்டு, இமயமலைச் சாரலில் பனிரெண்டு ஆண்டுகள் கடும் தவம் புரிந்தனர்.

கன்னியர் இருவரின் தவத்திற்கு உகந்த ஷண்முகப் பெருமான் தரிசனம் அளித்து அருளினார். அருள் சக்திகளான தேவியர் உடனிருப்பது சம்ஹாரத்திற்கு தடையென உணர்த்தி, சூர சம்ஹாரத்துக்குப் பின்னர் இருவரையும் மணம் புரிந்து அருள்வதாக வாக்களித்தார்.

மேலும் சம்ஹாரக் காலம் வரையில் அமிர்தவல்லி இந்திரனின் வளர்ப்பு மகளாகவும், சுந்தரவல்லி வள்ளி மலையிலும் வளர்ந்து வருமாறும் ஆணையிட்டு அருளினார். அதன் படி, குழந்தை வடிவம் தாங்கிய அமிர்தவல்லியை இந்திரனின் வாகனமான ஐராவதம் வளர்த்து வந்தது. ஆதலால் அக்குழந்தை 'தெய்வ யானை' என்ற திருப்பெயரால் அழைக்கப் பெற்றது.

இது ஒரு புறம் இருக்க, வள்ளி மலையில் மற்றொரு தெய்வ நாடகம் அரங்கேறியது. சிவமுனி என்னும் முனி வேடம் தாங்கி ஸ்ரீமகாவிஷ்ணு தவநிலையில் இருந்து வந்தார். அத்தருணம் ஸ்ரீமகாலக்ஷ்மி பெண் மான் வடிவம் தாங்கி முனிவரை கடந்து செல்ல, பரந்தாமனின் திருப்பார்வை கடாட்சத்தால் அம்மான் ஒரு பெண் மகவை அக்கணமே ஈன்று அருளிப் பின் மறைந்தது.

வேடர் தலைவர் நம்பிராஜன், வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் கண்டெடுத்த தெய்வக் குழந்தைக்கு 'வள்ளி' என்னும் திருநாமம் சூட்டி இனிது வளர்த்து வந்தான். செந்தில் வேலவன் சூர சம்ஹார நிகழ்வுக்குப் பின்னர், தெய்வயானைத் தாயாரை திருப்பரங்குன்றத்திலும், ஸ்ரீவள்ளி அம்மையாரை வள்ளி மலையிலும் மணம் புரிந்து அருளினார்.

ஸ்ரீவள்ளி அம்மையும், தெய்வயானைத் தாயாரும் இச்சா சக்தி - கிரியா சக்தியின் திருவடிவங்கள். இவர்களோடு ஆறுமுகப் பெருமான் ஞான சக்தியாய் வீற்றிருப்பார். இந்நிகழ்வுகளால் குமரவேள் 'மால் - மருகன் (திருமாலின் மருமகன்)' என்னும் திருநாமம் பெற்றார்.

கருத்துகள் இல்லை: